முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

இயற்கைப் பீர்க்கன்… 1 ஏக்கர்… 130 நாள்ரூ.1,60,000 வருமானம்!
பந்தல் விவசாயத்தில் பலே லாபம்!

எ. செல்வராஜ்

தொடர்புக்கு: 96263-81331

“ நாலு ஏக்கர் இருந்தாலும் இருக்கிற தண்ணியை வெச்சு இவ்வளவுதான் வெள்ளாமை செய்ய முடியும்னு, ஒரு ஏக்கர்ல மட்டும்தான்  வெள்ளாமை பாத்தோம். ஆனா முறையான வழிகாட்டுதல் கிடைச்ச பிறகு, சொட்டுநீர்ப்பாசனம் அமைச்சு, இயற்கை விவசாயம் செய்யும் போது அதே தண்ணியை வெச்சு இப்ப நாலு ஏக்கர்லயும் வெள்ளாமை வெளுத்து வாங்குது. வெவசாயத்துல ஜெயிக்கிறதும் தோற்கிறதும் நாம கடைபிடிக்கிற வழிமுறைகள்தான். இதை எங்க அனுபவம் மூலமா உணர்ந்திருக்கோம்” என்று நெகிழ்கிறார்கள், கரூர் மாவட்டம் ஈசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்-ரேணுகா தம்பதி.

பாதை காட்டிய பசுமை விகடன்!

“இது கடுமையான வறட்சிப்பகுதி. ஆறு, குளம், வாய்க்கால்னு பாசன வசதி எதுவும் இல்லாத ஊரு. முழுக்க கிணத்துப்பாசனத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை. இது எங்க தங்கச்சி தோட்டம். அவங்க வெளியூர்ல இருக்கிறதால நாங்கதான் பராமரிச்சுக்கிட்டு இருக்கோம். தினமும் கிடைக்கிற ரெண்டு மணி நேரப் பாசனத்தண்ணீரை வெச்சு ஒரு ஏக்கர்லதான் வெள்ளாமை வெச்சிக்கிட்டு வந்தோம். நேரடி வாய்க்கால் பாசனத்துல அந்த அளவுலதான் செய்ய முடியும். செடி முருங்கை மட்டும்தான் எங்க பகுதியில் பிரதான வெள்ளாமை. நாங்களும் போன அஞ்சு வருஷம் வரைக்கும் செடி முருங்கையை மட்டும்தான் ஒரு ஏக்கர்ல சாகுபடி செய்தோம்.

‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் மாற்றுப்பயிர் சாகுபடி மீது ஆர்வம் ஏற்பட்டுச்சு. பந்தல் விவசாயத்துல பட்டையைக் கிளப்புற ‘கேத்தனூர் அய்யா பழனிச்சாமி’ அய்யா பத்தி ஒரு கட்டுரை வந்துச்சு. அதைப்படிச்சதும், அவர்கிட்ட பேசினோம். அவரு சில ஆலோசனைகள் சொன்னார். அதுக்கப்பறம்தான் இயற்கை முறையில பந்தல் விவசாயத்துக்கு மாறினோம். அதே மாதிரி ‘பசுமை விகடன்’ மூலமாத்தான் சொட்டுநீர், தெளிப்பு நீர்ப்பாசனமுறைகளைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு அமைச்சோம். இன்னிக்கு நாலு ஏக்கர்ல ஊடுபயிர் வெள்ளாமை செய்யறோம்னா அதுக்கு பசுமை விகடன்தான் காரணம்” என்ற செல்வராஜைத் தொடர்ந்தார், ரேணுகா.

“ஒரு ஏக்கர்ல பாகல், ஒரு ஏக்கர்ல பீர்க்கன், ஒரு ஏக்கர்ல புடலை இருக்கு. ஒரு ஏக்கர்ல செடி முருங்கை நிக்குது. பீர்க்கனும் செடி முருங்கையும்தான் இப்போ காய்ச்சுக்கிட்டு இருக்கு. புடலை இப்போதான் பிஞ்சு விட ஆரம்பிச்சிருக்கு. பீர்க்கனுக்கு இடையில ஊடுபயிரா கொத்தமல்லி போட்டோம். விதையில ஏதோ கோளாறால அது முளைக்கவே இல்லை. அதனால அதை அழிச்சிட்டு உளுந்து போட்டுட்டோம். அது இப்போ அறுவடைக்குத் தயாராகிட்டு இருக்கு. புடலைக்கு இடையில இருந்த கொத்தமல்லித்தழையை அறுவடை பண்ணியாச்சு. சாணம், மூத்திரம் தேவைக்காக ஒரு நாட்டு மாடும் ரெண்டு மாச வயசுல ஒரு கன்னுக்குட்டி வெச்சிருக்கோம்” என்று ரேணுகா இடைவெளி கொடுக்க, தொடர்ந்தார் செல்வராஜ்.

“பயிர்களுக்குப் பெரிசா எந்த ஊட்டமும் கொடுக்கிறதில்லை. தொழுவுரமும் பிண்ணாக்குகரைசலும் தான் கொடுக்கிறோம். இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா பீஜாமிர்தம் எல்லாம் தயாரிச்சு பயன்படுத்த தொடங்கியிருக்கோம்.முழுக்க இயற்கை விவசாயங்கிறதால பூச்சிகள் பெரும்பாலும் வர்ரதே இல்லை. குளவிகள்தான் வருது. அதைப்பிடிக்க பொறி வெச்சுடுறோம்” என்ற செல்வராஜ், நிறைவாக வருமானம் குறித்துச்சொன்னார்.
“ இப்போதைக்கு பீர்க்கன் தான் வருமானம் கொடுத்திட்டு இருக்கு. பீர்க்கனுக்கு 6 ரூபாயில் இருந்து 10 ரூபாய் விலை கிடைக்குது.

 ஊட்டம்கொடுக்கும்பிண்ணாக்குக்கரைசல்!    

       கடலை,ஆமணக்கு, வேம்பு ஆகிய மூன்று பிண்ணாக்குகளிலும் தலா 25 கிலோ எடுத்து ஒன்றாகச் சேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீரில் 2 நாள் முழுதும் ஊற வைக்க வேண்டும். பிறகு, அதைக்கலக்கி விட்டு அந்தக்கலவையை செடிக்கு ஒரு லிட்டர் வீதம் செடியின் வேர்ப்பகுதியைச் சுற்றிலும் ஊற்ற வேண்டும். 40 மற்றும் 80-ஆம் நாட்களில் இந்தப் பிண்ணாக்கு கரைசலை பீர்க்கனுக்குக் கொடுக்கும் போது செடிகளுக்கு நல்ல ஊட்டம் கிடைக்கிறது.

பூக்கள் பிடிக்க அரப்பு மோர்க் கரைசல்!

ஒரு லிட்டர் புளித்த மோரில், 500 கிராம் அரப்பை இடித்துப்போட்டு, இரண்டு நாட்கள் ஊற வைத்தால், அரப்பு மோர்க்கரைசல் தயார். இதைப்பிழிந்து வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்கிற அளவில் கலந்து, பூக்கள் பிடிக்கும் பருவத்தில் தெளித்தால், அதிகளவில் பூக்கள் பூத்து மகசூல் அதிகரிக்கும்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

பீர்க்கன் சாகுபடி குறித்து செல்வராஜ் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…
‘பீர்க்கனின் வயது 130 நாட்கள். செம்மண் நிலத்தில் நன்கு வளரும். தேர்வு செய்த நிலத்தை நன்றாக உழுது12 அடி இடைவெளியில் ஒன்றரை அடி அகலத்தில் தெற்கு வடக்காக வாய்க்கால் களை அமைக்க வேண்டும்.

நிலத்தின் அமைப்பைப் பொறுத்து வாய்க்கால்களின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம். பிறகு, சொட்டு நீர்க்குழாய்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.வாய்க்காலின் நடுவில் 3 அடி இடைவெளியில் ஒரு செடி வருமாறு… ஓரடி ஆழத்துக்குக் குழி எடுத்து, ஒவ்வொரு குழிக்கும் தலா அரை கிலோ தொழுவுரத்தை இட்டு, தலா ஒரு விதையை ஊன்றி, மேல் மண்ணைக்கொண்டு மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஏக்கருக்கு 300 கிராம் விதை தேவைப்படும். நடவு செய்த 5-ம் நாளில் விதைகள் முளைவிடத்தொடங்கும். நிலத்தின் ஈரத்தைப் பொறுத்துப் பாசனம் செய்ய வேண்டும்.15-ம் நாளில் கொடிகள் கொம்பில் படரத்தொடங்கும்.

அந்தச் சமயத்தில் செடிகளின் வேர்ப்பகுதியில் ஒரு அடி நீளக்குச்சிகளை மண்ணுக்குள் ஊன்றி அதில் சணல் கயிற்றைகட்டி, மறுமுனையை பந்தல் கம்பியில் இழுத்துக்கட்ட வேண்டும். இப்படி ஒவ்வொரு கொடிக்கும் ஒரு சணல் கயிற்றைக்கட்டி கொடிகளை அதில் படர விட வேண்டும். இந்த சமயத்தில் தேவைப்பட்டால் களையெடுக்க வேண்டும். 30 நாட்களில் கொடிகள் பந்தலில் படர ஆரம்பிக்கும். 40 மற்றும் 80-ஆம் நாட்களில் பிண்ணாக்குக்கரைசலை வேர்ப்பகுதியில் கொடுக்க வேண்டும். 40-ம் நாளுக்கு மேல் கொடிகளில் பூ எடுக்கத்தொடங்கும். இந்தச் சமயத்தில் அரப்பு மோர்க்கரைசல் தெளிக்க வேண்டும். 45-ஆம் நாளுக்கு மேல் பிஞ்சுகள் பிடிக்கும். தொடர்ந்து, ஒரு வாரத்தில் அறுவடையை ஆரம்பிக்கலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என சுழற்சி முறையில் பீர்க்கன் காய்களைப்பறிக்கலாம்.’

மானியமும் உண்டு!

கல்தூண் பந்தல் அமைத்து காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, மானியம் வழங்குகிறது, தோட்டக்கலைத்துறை. இது தொடர்பாகப் பேசிய கரூர் மாவட்ட தோட்டக்கலைத்துறைத் துணை இயக்குநர் வளர்மதி, “பந்தல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில்… சாகுபடி நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடம், இருப்பிடச்சான்று, பாஸ்போர்ட் புகைப்படம் 3, பந்தல் அமைத்தற்கான செலவுத்தொகைக்கான பில் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு ஏக்கரில் பந்தல் சாகுபடி செய்ய 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் 80 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் விவசாயிகள் தங்கள் செலவில் பந்தல் அமைத்துக்கொள்ள வேண்டும். பந்தல் அமைத்து சாகுபடியைத்தொடங்கிய பிறகு, எங்களுக்குத்தகவல் தெரிவித்தால் கள ஆய்வு செய்த பிறகு மானியம் வழங்கப்படும்.” என்றார்.

ஒரு ஏக்கர் பந்தலுக்கு 140 கல்தூண்!

ஒரு ஏக்கர் நிலத்தில் பந்தல் அமைக்க, 8 அடி உயரம் உள்ள 140 கல்தூண்கள் தேவைப்படும். இதில் 10 அடிக்கு ஒன்று வீதமாக 80 கல்தூண்களை சுற்றுக்காலில்2 அடி ஆழ குழி எடுத்து ஊன்ற வேண்டும்.பந்தலுக்குள் 20 அடி இடைவெளி இருக்குமாறு வரிசை வரிசையாக கல்தூண்களை ஊன்ற வேண்டும். ஒவ்வொரு கல்தூணுக்கும் இடையில் 10 அடிக்கு ஒரு மூங்கிலை நட வேண்டும். தொடர்ந்து 16 கேஜ் கம்பிகளை மேற்புறத்தில் இழுத்துக்கட்ட வேண்டும். சுற்றிலும் பந்தலை இழுத்துப்பிடித்து தாங்குவதற்காக 6 கேஜ் தடிமன் உள்ள கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும்.இதற்கு மொத்தம் 850 கிலோ கம்பி தேவைப்படும். மீத கல்தூண்களை முட்டுக்கொடுக்க பயன்படுத்த வேண்டும். ஒரு முறை அமைக்கும் கல்தூண் பந்தல் 30 ஆண்டுகள் வரை பலன் தரும்.

தெளிப்பு நீர்பாசனத்தில் செழிக்கும் வெங்காயம்!

படரும் பருவத்தில் இருக்கும் ஒரு ஏக்கர் பாகல் பந்தலில், சின்ன வெங்காயத்தை நடவு செய்து பட்டாம் பூச்சி பாசனக்கருவிகளையும் பொருத்தியுள்ளார், செல்வராஜ். அதுகுறித்துப்பேசியவர், “பாகல் காய்ப்புக்கு வர இன்னும் ஒரு மாசத்துக்கு மேலாகும். அதனால ஊடுபயிரா சின்ன வெங்காயத்தை நட்டிருக்கேன். பசுமை விகடன் மூலமா தெரிஞ்சிக்கிட்டு வெங்காயத்துக்கு பட்டாம் பூச்சி பாசன முறை அமைச்சிருக்கேன். ஒரு ஏக்கர்ல 15 அடி இடைவெளியில 170 தெளிப்பான் போட்டிருக்கேன். 5 ஹெச்.பி. பம்ப்செட் மூலமா 50 நிமிஷம், நீர் இரைக்கும் போது, ஒரு ஏக்கர் முழுக்க பாசனம் முடிஞ்சிடும். வாயக்கால் பாசனம்னா 2 மணி நேரம் மோட்டார் ஓட வேண்டியிருக்கும்” என்கிறார்.

ஒரு ஏக்கரில் பீர்க்கன் சாகுபடி செய்ய செல்வராஜ் சொல்லும் உத்தேச செலவு-வரவு கணக்கு(ரூபாய் மதிப்பில்)

விவரம்
செலவு
வரவு
நிலையான செலவுகள்:
பந்தல் அமைக்க
1,30,000
சொட்டு நீர் அமைக்க
20,000
மொத்தம்
1,52,000
நடைமுறைச் செலவுகள்:
உழவு
2,000
விதை
1,500
தொழுவுரம், இரைக்க
10,000
பிண்ணாக்குக் கரைசல்
3,000
நடவு, சணல், களை எடுக்க
4,500
கொடி எடுத்து விட
2,500
அறுவடை
6,000
பீர்க்கன் மூலம் வரவு
1,60,000
மொத்தம்
29,500
1,60,000
நிகர லாபம்
1,30,500

குறிப்பு: பந்தல், சொட்டு நீர் அமைக்கும் செலவு நிலையானது என்பதால், அதை செலவுக்கணக்கில் சேர்க்கவில்லை. தவிர, பந்தலுக்கும் சொட்டுநீருக்கும் அரசு மானியமும் உள்ளது.

சராசரியா எட்டு ரூபாய்னு வெச்சுக்கலாம். காய் எடுக்க ஆரம்பிச்சு 45 நாள் ஆச்சு. இதுவரைக்கும் இரண்டரை டன் காய் எடுத்திருக்கோம். இன்னும் 60 நாள் மகசூல் இருக்கு. இனிமேல்தான் மகசூல் அதிகரிக்கும். எப்படியும் இன்னும் 20 டன்னுக்கு மகசூல் நிச்சயம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். மொத்தமா 25 டன் கிடைக்கணும். மொத்த மகசூல் 20 டன்னு வெச்சுக்கிட்டு, சராசரியா கிலோ எட்டு ரூபாய்னு வெச்சுக்கிட்டா…

1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவெல்லாம் போக ஒண்ணே கால் லட்ச ரூபாய்க்கு மேல லாபமா நிக்கும். 130 நாள்ல இதை விட வேறென்ன லாபம் வேணுமுங்கோ” என்று சிரித்தபடியே கேட்டார் செல்வராஜ்.

Updated on , Feb 2016

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016

Untitled Document