வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை - 2014
[ 2011 வெற்றிக் கதைகள் காண.. ] [ 2012 வெற்றிக் கதைகள் காண.. ] [ 2013வெற்றிக் கதைகள் காண.. ] நன்றி பசுமை விகடன் ...
காடு வளர்த்தால் காசு… வியக்க வைக்கும் விழுப்புரம் ஜீரோ பட்ஜெட் பண்ணை!
2014 [மேலும் தகவலுக்கு...]

சளைக்காமல் பணி ஆற்றிய விவசாயத் தொழிலாளர்கள் பலரும், வெவ்வேறு வேலைகளின் பக்கம் ஒதுங்கி வருவதால், விவசாயம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு 100 நாள் வேலைத்திட்டம் வேறு, தொழிலளர்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, அதளபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது, நிலத்தடி நீர், இவ்வளவையும் தாண்டி விவசாயத்தில் ஜெயிக்க வேண்டும் என்பவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பது ‘மரம் வளர்ப்பு’தான்! அந்த நம்பிக்கையில், பழ மரங்கள், தடி மரங்கள் என வளர்த்து, கலக்கலாக வருமானம் பார்த்து வருகிறார், புதுச்சேரியைச் சேர்ந்த சுந்தரம். விழுப்புரம் – செஞ்சி சாலையில் பதினான்காவது கிலோ மீட்டரில் இருக்கும் கஞ்சனூர் கிராமத்திலிருந்து வலதுபக்கமாகப் பிரிந்து செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, தென்பேர் கிராமம். இங்கேதான் இருக்கிறது, சுந்தரத்தின் சோலைக் காடு. சொந்த ஊர் பாண்டிச்சேரி பக்கத்தில் இருக்கும் தவளக்குப்பம். அப்பா பாண்டிச்சேரி முதல்வருக்கு பி.ஏ.வாக இருந்தார். சின்னக் குழந்தையிலிருந்தே விவசாயம் பிடிக்கும். காலேஜ் முடித்துவிட்டு சொந்த ஊரில் இருந்த 30 ஏக்கரில் விவசாயம் பார்த்துக் கொண்டே, தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். 92-ம் வருடம் அப்பா ‘ரிட்டையர்டு’ ஆன பிறகு, அவரும் விவசாயத்திற்கு வந்து, நெல், கடலை, தென்னை, மரவள்ளி என்று சாகுபடி செய்தார். எங்க ஊரில் வேலை ஆட்கள் பிரச்னையால் சரியாக விவசாயம் பார்க்க முடியவில்லை. அதனால், 18 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டோம். அதன்பிறகு, நான் வேலையை உதறிவிட்டு, வேலையாள் பிரச்னை இல்லாத இடமாக தேடி அலைய ஆரம்பித்து… இந்த ஊரில் 33 ஏக்கர் நிலம் வாங்கி, கடலை, காராமணி, மரவள்ளி என்று சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். இங்கும் கொஞ்ச நாட்களிலேயே, தண்ணீர் பிரச்னை வந்தது. அந்த சமயத்தில, பெரியகுளம், தோட்டக்கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்த, சம்பந்தமூர்த்தியிடம் பேசிய போது.. ‘நெல்லி, சப்போட்டா, மா மாதிரியான பழ மரங்களை வைத்தால், வேலை ஆட்களுடைய தேவையும் குறையும். குறைந்த தண்ணீரை வைத்தும் சமாளித்துவிடலாம் என்று சொன்னார். அதற்குப் பிறகு, 12 ஏக்கரில் நெல்லி, 6 ஏக்கரில் சப்போட்டா, வேலி ஓரத்தில் 1,500 தேக்கு என்று நடவு செய்து கொண்டு, மீதி நிலத்தில் வழக்கமான சாகுபடி செய்துகொண்டிருந்தேன். ஓரளவிற்கு வேலையாட்கள் தேவையும், தண்ணீர் தட்டுப்பாடும் கட்டுகுள் வந்தது. நான்கு வருடத்தில் நெல்லியும், ஐந்து வருடத்தில் சப்போட்டாவும் காய்க்க அரம்பித்த பிறகு, மீதம் இருந்த நிலத்தில் எல்லாம், மா, எலுமிச்சை, தென்னை என்று நட்டுவிட்டேன் என்றார். வழிகாட்டிய பாலேக்கர் ! பழ மரங்கள் வருமானம் கொடுப்பதைப் பார்த்ததும், இந்த மண்ணில் மர வகைகள் நன்றாக வளரும் என்று எனக்குப்பட்டது. என்ன மரங்களை வைக்கலாம் என்று தேடி கொண்டிருந்தபோதுதான், ‘பசுமைவிகடன்’ அறிமுகமானது. அதில் பாலேக்கருடைய ஜீரோட பட்ஜெட் தொழில்நுட்பங்கள், என்னை ஈர்த்தது. அவருடைய பயிற்சியிலும் கலந்துகொண்டேன். மர சாகுபடி செய்யும் பண்ணைகள் பலதுக்கும் சென்று, அந்த விவசாயிகளுடைய அனுபவங்கள் வாங்கிக் கொண்டேன். கோயம்புத்தூர், வன மரபியல் ஆராயச்சி நிறுவன பயிற்சியில் மர வகைகள், பலன் கொடுக்கும் காலம், சந்தை எல்லாவற்றையும் தெரிந்துகொண்டேன். அதற்குப்பிறகுதான், பழ மரங்களுக்கு இடையில் குமிழ், மலைவேம்பு மரங்களை நட்டேன். சில இடங்களில் அடியில் பாறை இருந்ததால் இந்த மரங்கள் சரியாக வரவில்லை. அதனால், வேங்கை. மகோகனி, சிகப்பு சந்தனம், ரோஸ்வுட், பூவரசு, காட்டுவாகை, சிலவாகை, இலவம்பஞ்ச மாதிரியான மரங்களை நட்டிருக்கிறேன். எல்லா மரங்களுக்கும் மேட்டுப்பாத்தி அமைத்து, சுற்றிக் கிடக்கும் இலைதழைகளை மரத்துக்கிட்ட தள்ளி விட்டுவிடுவேன். அந்த இலைகள் மட்கி, நிறைய மண்புழு உருவாகிவிட்டதால்… இப்ப உழவே ஓட்டுவதில்லை. எல்லாவற்றையும் மண்புழுக்களே பார்த்துக் கொள்கிறது. 57 ஏக்கர்.. 16 ஆயிரம் மரங்கள் ! கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்தில் கிடைத்த நிலங்களை வாங்கியதில் இப்போது மொத்தம் 57 எக்கர் இருக்கு. 15 ஏக்கரில் 900 மா, 12 ஏக்கரில் 2 ஆயிரம் நெல்லி, 12 ஏக்கரில் 1,300 சப்போட்டா, 6 ஏக்கரில் 700 தென்னை, 2 ஏக்கரில் 400 எலுமிச்சை, 200 சாத்துக்குடி, 4 ஏக்கரில் 450 கொய்யா, 6 ஏக்கரில் பல வகையான தடி மரங்கள் என்று வைத்திருக்கிறேன். பழமரங்களுக்கு இடையிலும், தனியாகவும் 1,900 தேக்கு மரங்கள் இருக்கு. இதில் 1,500 மரங்கள் வேலிப்பயிர். இதற்கு 9 வயதாகிறது. ஊடுபயிராக 1,100 மகோகனி, 400 மலைவேம்பு, 3 ஆயிரம் வேங்கை, 700 குமிழ், 150 தீக்குச்சி, 150 பூவரசு, 60 காட்டுவாகை, 250 இலவம், 600 சிகப்பு சந்தனம், 300 ரோஸ்வுட், 150 சிலவாகை மரங்கள் என்று கிட்டத்தட்ட 16 ஆயிரம் மரங்கள் இருக்கிறது. இதுபோக, 1,200 செடிமுருங்கை, 500 அகத்தியும் இருக்கு என்றார். செலவை ஈடுசெய்யும் பழ மரங்கள் ! இப்போதைக்கு நெல்லி, சப்போட்டா, மா மட்டும்தான் காய்ப்பில் இருக்கிறது. நெல்லி மூலமாக வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய், மாங்காய் மூலமாக வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய், சப்போட்டா மூலமாக வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய் என்று வருடத்திற்கு 10 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இந்த வருமானம்.. நிர்வாகச் செலவிற்கு சரியாகிவிடுகிறது. இன்னும் மூன்று, நான்கு வருடத்திற்கு எல்லா பழ மரங்களும் காய்க்க ஆரம்பித்து.. எலுமிச்சை, சாத்துக்குடி, கொய்யா, இளநீர் மூலமாகவும் வருமானம் வர ஆரம்பிக்கும். அப்போது, எல்லா செலவும் போக, பழங்கள் மூலமாக ஒரு ஏக்கரிலிருந்து மாதத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும். தடிமரங்களைப் பொறுத்தவரை. எல்லா ரகங்களிலும் சேர்த்து, மொத்தம் 7 ஆயிரத்து 260 மரங்கள் இருக்கு இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலைக்குப் போகும். 10 வருடம் கழித்து, கொஞ்ச மரங்களையும் 20 வருடம் கழித்து கொஞ்ச மரங்களையும் விற்கும்போது கோடிக்கணக்கில் வருமானம் வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். பழ மரங்களுக்கு இடையில் பயன்தரும் மரங்கள் ! மர வகைகளை சாகுபடி செய்வது பற்றி, சுந்தரம் சொல்லும் தொழில்நுட்பங்கள் “மரக்கன்றுகளை நடவு செய்யும் நிலத்தில் களை இல்லாத அளவுக்கு உழவு செய்து கொள்ள வேண்டும். மேட்டுப்பகுதி நிலத்தில் ஆடி மாதத்திலும், பள்ளமான பகுதிகளில், தை மாதத்திலும் நடவு செய்ய வேண்டும். 18 அடிக்கு 18 அடி இடைவெளியில் நெல்லி, 30 அடிக்கு 30 அடி இடைவெளியில் மா, 22 அடிக்கு 22 அடி இடைவெளியில் சப்போட்டா, 14 அடிக்கு 14 அடி இடைவெளியில் கொய்யா, 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி, 22 அடிக்கு 22 அடி இடைவெளியில், தென்னை என ஒவ்வொரு பயிருக்கும் இடைவெளி வித்தியாசப்படும். இரண்டரை அடி சதுரம், இரண்டரை அடி ஆழத்திற்க்குக் குழி எடுத்து ஒரு மாதம் ஆறப்போட்டு… அதில் ஒரு கூடை எரு இட்டு செடிகளை நடவு செய்ய வேண்டும். இரண்டு பழ மர வரிசைகளுக்கு இடையில், தேக்கு, மகோகனி, சிகப்பு சந்தனம், மலைவேம்பு ஆகியவற்றை 8 அடி இடைவெளியிலும், வேங்கை, பெருமரம், ரோஸ்வுட் ஆகியவற்றை 10 அடி இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும். இந்த மரங்களுக்கு இடையில் இரண்டு ஆண்டுகள் வரை பயறு வகைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இதன் மூலம் மரத்திற்க்கு தேவையான தழைச்சத்துக்கள் கிடைப்பதோடு, வருமானமும் கிடைக்கும். பழ மரங்களுக்கு கவாத்து தேவையில்லை. தடி மரவகைகளை 10 ஆண்டுகள் வரை கவாத்து செய்ய வேண்டும். இதை மட்டும் செய்து வந்தாலே… உங்கள் நிலம் ‘காடு’ போல் மாறி, பறவைகள், விலங்குகள் எனத் தோட்டம் முழுக்க உயிர்ச் சூழல் பண்ணையாகி விடும். தொடர்புக்கு, சுந்தரம், செல்போன் : 84891 91774 ஆதாரம் பசுமை விகடன் 25.12.2014 வெளியீடு www.vikatan.com

மாதம் ரூ.15 ஆயிரம் … குறைந்த செலவில்.. நிறையும் வருமானம்.. பட்டையைக் கிளப்பும் பட்டுரோஜா !
2014 [மேலும் தகவலுக்கு...]

உணவுப் பயிர்களை மட்டும் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கலாம் உணவாக உட்கொள்ளாத மலர்களுக்கு, எதற்காக இயற்கை உரம்? இப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள், இத்துடன் மலர் சாகுபடிக்கு ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தவில்லையென்றால், மகசூல் கிடைக்காது, என்கிற நம்பிக்கையும் விவசாயிகள் பலருடைய மனங்களில் அடர்த்தியாக முளைத்துக் கிடக்கிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலும் ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகளின் தயவில்தான் மலர் சாகுபடியே நடக்கிறது. இதற்கு நடுவே, அத்தனைப் பேரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக… பட்டு ரோஜாவை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்திக் கொண்டிருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி.
சொந்தமாக ஏழரை ஏக்கர் நிலம் இருக்கு. ஐந்து ஏக்கரில் கரும்பு, ஒன்றரை ஏக்கரில் முந்திரி, ஒரு ஏக்கரில் பட்டு ரோஜா என்று சாகுபடி செய்து கொண்டிருக்கிறேன். மூன்று வருடத்திற்கு முன்புவரைக்கும் ரசாயன உரம்தான் பயன்படுத்திட்டிருந்தேன். விளைச்சல் அதிகமாக கிடைத்தாலும், செலவும் அதிகமாகவே இருந்தது. இயற்கை விவசாயத்தைப் பற்றிப் தெரிந்து கொண்ட பிறகு, எங்களிடம் இருக்கும் மூன்று மாடுகள் மூலமாக கிடைக்கும் சாணம், மூத்திரத்தை வைத்தே இடபொருட்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டன். இப்போதைக்கு, கரும்புக்கு மட்டும்தான் ரசாயன உரம் போடுகிறேன். முந்திரி, பட்டுரோஜா இரண்டையும் இயற்கை முறையில்தான் சாகுபடி செய்கிறேன். விரைவில் கரும்பையும் இயற்கைக்கு மாற்றிவிடுவேன்.
இயற்கைக்கு மாறியதுக்கு பிறகு, தண்ணீர் தேவை குறைந்துவிட்டது. ரசாயனம் போடும்போது தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டியிருக்கும். இப்போது, வாரம் ஒரு தண்ணீர் கொடுத்தால் போதுமானதாக இருக்கிறது. அதில்லாமல் பூச்சித் தாக்குதலும் குறைந்துவிட்டது. பூக்களும் நன்றாக நிறமாக, பார்ப்பதற்கு பளிச் என்று இருக்கு. அதிக நேரம் வாடாமல் தாக்குப் பிடிக்கிறது. இதழ்களும் உதிர்வதில்லை. இதையெல்லாம் ரசாயன விவசாயத்தில் எதிர்பார்க்கவே முடியாது என்று தன் அனுபவத்திலிருந்து முன்னுரை தந்த ராமசாமி, தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றார்.
இந்த பட்டுரோஜா செடிகளுக்கு இப்ப மூன்று வயது முடியப்போகிறது. இப்பவும் பூ பூத்து வருமானம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. ரசாயனத்தில் சாகுபடி செய்திருந்தால், இரண்டரை வருடத்திலேயே செடி காய்ந்து போயிருக்கும். மாட்டு எரு, கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, அமுத கரைசல் என்று தாராளமாக இயற்கை இடுபொருட்களைக் கொடுப்பதால்,  செடிகள் இப்பவும் பசுமை குறையாமல் இருக்கு. ரசாயன உரத்திற்கான செலவைக்  கணக்கு பார்க்கும் போது, கடலைப்பிண்ணாக்கு,  வேப்பம்பிண்ணாக்கு, அமுதக்கரைசலுக்கான நாட்டுச் சர்க்கரை… இதற்கெல்லாம் ஆகும் செலவு குறைவுதான். இப்போததைக்கு ரசாயனம் பயன்படுத்தும்போது  கிடைத்த மகசூலைவிட குறைவாகத்தான் கிடைக்கிறது. ஆனால், இடுபொருள் செலவுகளை கணக்குப் பார்த்தால் … ரசாயன விவசாயத்தில் கிடைத்ததை விட அதிக லாபம்தான். அதில்லாமல் வேலையும் குறைவாகிவிட்டது. சீக்கிரமே… அதிக மகசூல் கிடைக்க ஆரம்பித்துவிடும் நம்பிக்கை இருக்கிறது என்றார் ராமசாமி.
தெளிப்பு நீரில் கூடுதல் மகசூல் !
அனைத்து வகையான மண்ணிலும் பட்டுரோஜா சாகுபடி செய்யலாம். என்றாலும், செம்மண் நிலம் மிகவும்ஏற்றது. தண்ணீர் தேங்காத மேட்டுபாங்கான நிலமாக இருக்க வேண்டும். ஆடி அல்லது தை மாதங்களில் கன்று நடவு செய்ய வேண்டும். மழை, பனிக் காலங்களில் அதிக எண்ணிக்கையில் பூக்கள் கிடைக்கும். தெளிப்பு நீா்ப் பாசனம் அமைத்து, மழை போல் தண்ணீர் பொழியச் செய்தால், கூடுதல் மகசூல் கிடைக்கும்.
குறைந்த செலவில், கன்று உற்பத்தி!
இதற்கு கன்று நடவுதான் ஏற்றது. ஒரு கன்று 5 ரூபாய் விலையில் நர்சரிகளில் கிடைக்கிறது. நம்மிடம் ஏற்கனவே ரோஜா இருந்தால், குறைவான செலவில் நாமே கன்றுகளை உற்பத்தி செய்து கொள்ளலாம். ஒரு சதுர மீட்டர் அளவுக்கு பாத்திகள் எடுத்து, அதில்தான் கன்று உற்பத்தி செய்ய வேண்டும். எத்தனைப் பாத்திகள் அமைக்கப் போகிறோம் என்று கணக்கிட்டுக் கொண்டு ஒரு பாத்திக்கு 50 கிலோ மாட்டு எரு, 2 கிலோ வேப்பம் பிண்ணாக்கு என்ற கணக்கில் தேர்வு செய்த நிலத்தில் இட்டு உழுது… ஒரு  சதுர மீட்டர் கொண்ட பாத்திகளாக அமைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றரை ஆணடு வயதுடைய செடியிலிருந்து, ஒரு சாண் உயரத்திற்கு குச்சிகளை வெட்டி எடுத்து, பாத்தியில் 4 அங்குல இடைவெளியில் ஊன்ற வேண்டும் (ஒரு பாத்திக்கு 100 குச்சிகள் ஊன்றலாம்.). 2 நாட்களுக்கு ஒரு முறை பூவாளியால் தண்ணீர் தெளித்து வந்தால், 10,15 நாட்களில் துளிர் வரும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, பாத்தியில் களை எடுக்க வேண்டும். இப்படி 6 மாதங்கள் பராமரித்து வந்தால், ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை வளர்ந்து, நடவுக்கு ஏற்ற வகையில் கன்று தயாராகி விடும்.ஏக்கருக்கு 2,500 கன்றுகள் !
ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் 3 சால் உழவு ஓட்டி, ஒன்றரையடி அகலம், முக்கால் அடி ஆழம் கொண்ட வாய்க்கால் எடுக்க வேண்டும். ஒவ்வொரு வாய்க்காலுக்கும் 8 அடி இடைவெளி இருக்க வேண்டும். வாய்க்காலின் மையத்தில், 2 அடி இடைவெளியில், அரையடி ஆழத்திற்கு குழி எடுத்து கன்றுகளை நடவு செய்ய வேண்டும். பெரும்பாலான விவசாயிகள் பாத்தி எடுத்து நடவு செய்வார்கள். அந்த முறையில், தண்ணீர், இடுபொருட்கள் அதிகமாக விரயமாவதுடன்.. களைகளும் அதிகமாக மண்டும். வாய்க்காலில் நடவு செய்தால், வாய்க்கால் நனையும் அளவுக்கு மட்டும் தண்ணீர் பாய்ச்சினாலே போதும். இந்த முறையில், ஒரு ஏக்கருக்கு 2 ஆயிரத்து 500 கன்றுகளை நடவு செய்யலாம். மாலை நேரத்தில் கன்று நடவு செய்த, உடனே தண்ணீர் விட வேண்டும். அதன் பிறகு மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப, தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
மாதம் ஒரு முறை அமுதக்கரைசல் !
(நடவு செய்த 20 நாட்களிலேயே அங்கொன்றும், இங்கொன்றுமாக பூக்கள் பூக்கத் தொடங்கும். நடவிலிருந்து ஐந்து மாதங்கள் கழித்து, ஒரு ஏக்கரில் தினமும் 500 பூக்கள் கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமாக மகசூல் அதிகரித்து, ஓர் ஆண்டிற்குப் பிறகு தினமும் 2 ஆயிரம் பூக்களிலிருந்து 3ஆயிரம் பூக்கள் வரை கிடைக்கும்)
நடவு செய்த 20-ம் நாளில்,  25 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 10 கிலோ கடலைப் பிண்ணாக்கு இரண்டையும் நன்கு தூளாக்கி, ஒவ்வொரு செடியைச் சுற்றியும் போட வேண்டும். 4 மாதங்களுக்கு ஒரு முறை பிண்ணாக்கு கலவையைத் தொடர்ந்து இட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை 4 லிட்டர் அமுதக் கரைசலை, 40 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளின் மீது தெளிக்க வேண்டும். இது தழை உரமாகவும், பூச்சிவிரட்டியாகவும் செயல்படும். நடவிலிருந்து ஒரு மாதத்திற்கு பிறகு, வாரம் ஒரு முறை 10 லிட்டர் அமுதக்கரைசலை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பாசன நீரோடு விட வேண்டும். நடவிலிருந்து 60-ம் நாள் களை எடுத்து, ஒவ்வொரு செடிக்கும் அரை கிலோ வீதம் மாட்டு எரு இட வேண்டும். தொடா்ந்து, 4 மாதங்களுக்கு ஒரு முறை இதே அளவில் மாட்டு எரு தர வேண்டும்.
தினமும் 2,500 பூக்கள் !
இரண்டாண்டிற்கு பிறகு, செடிகளை கவாத்து செய்ய வேண்டும். ஒன்றரையடி முதல் 2 அடி உயரத்திற்கு அடிக்கட்டையை விட்டுவிட்டு, மேல் பகுதியை மட்டும் வெட்டி, அகற்றி, வாய்க்காலை சரி செய்து எரு போட வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் மீணடும் பூக்கள் பூத்து விற்பனைக்குத் தயாராகும்.
தினமும் சராசரியாக 2 ஆயிரத்து 500 பூக்களுக்குக் குறையாமல் கிடைத்திட்டிருக்கு. காலையில் 6 மணிக்கெல்லாம் தஞ்சாவூர் பூ சந்தைக்கு கொண்டு போய் விற்பனை செய்துவிடுவேன். 100 பூக்களுக்கு பத்து ரூபாயிலிருந்து நாற்பது ரூபாய் வரைக்கும் விலை போகும். எப்படியும் சராசரியாக இருபது ரூபாய் விலை கிடைத்துவிடும். மாதம் 75 ஆயிரம் பூக்கள் என்ற கணக்கில் மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆரம்பகட்ட செலவுகளைத் தவிர்த்துவிட்டு, மாதாந்திரச் செலவை மட்டும் வைத்து கணக்குப் பார்த்தால் செலவு போக.. பதிமூன்றாயிரம் ரூபாய் லாபமாக கையில் கிடைக்கும் என்றார்.
ஒரு ஏக்கரில் பட்டுரோஜா சாகுபடி செய்ய ராமசாமி சொல்லும் செலவு – வரவு கணக்கு (மதிப்பு ரூபாயில்)


விவரம்

செலவு

வரவு

ஆரம்பகட்டச் செலவு

கன்று உற்பத்தி

6,250

 

உழவு, வாய்க்கால், குழி, கன்று நடவு

7,000

 

4 மாதங்களுக்கான இடுபொருள் செலவு

1,600

 

மாதாந்திரச் செலவுவரவு பட்டியல்

இடுபொருட்கள் தெளிப்பு

1,000

 

போக்குவரத்து

1,000

 

பூக்கள் மூலம் வரவு

 

15,000

மொத்தம்

2,000

15,000

நிகரலாபம்

 

13,000

ரசாயன முறையில் பட்டுரோஜா சாகுபடி செய்த போது ராமசாமியின் ஒரு மாதத்திற்கான செலவு – வரவுக் கணக்கு


விவரம்

செலவு

வரவு

உரம், பூச்சிக்கொல்லி தெளிப்பு

11,700

 

போக்குவரத்து

1,000

 

பூக்கள் மூலம் வரவு

 

21,000

மொத்தம்

12,700

21,000

நிகரலாபம்

 

8,300

தொடர்புக்கு
ராமசாமி
செல்போன் :99424 03641
ஆதாரம் : பசுமைவிகடன் வெளியீடு 25.12.13 www.vikatan.com

ஆண்டு முழுவதும் வருமானம்… அதிக பாடு இல்லாத அரளி…!
10.01.2014 [மேலும் தகவலுக்கு...]

எந்த விசேஷமாக இருந்தாலும் மலர்கள் பயன்படுத்தப்படுவதால், அவற்றின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக விற்பனை வாய்ப்பு உள்ள பயிர்களில், மலர்களும் முக்கிய இடத்திலிருக்கின்றன. இதனால், மலர் விவசாயிகளுக்கும் குறிப்பிடத் தகுந்த வருமானம் கிடைத்து வருவதால், சமீப காலமாக மலர் சாகுபடி அதிகரித்து வருகிறது.
            பொதுவாக, மலர் சாகுபடிக்கு நல்ல தண்ணீர் வளம் இருக்க வேண்டும். என்றாலும், குறைவான தண்ணீர் வசதி உள்ள விவசாயிகளுக்கும் ஏற்ற மலர்கள் உள்ளன. அவற்றில் முதலிடத்தில் இருப்பது அரளி. தண்ணீர், பராமரிப்பு என அனைத்துமே அதிகளவில் தேவையில்லாததால் பலரும் அரளியை விரும்பி சாகுபடி செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக, இயற்கை முறையில் அரளி சாகுபடி செய்து வருகிறார், தருமபுரி மாவட்டம், கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த  மாயவன்.
            பொம்மிடி –அரூர் சாலையில் எட்டாவது கிலோமீட்டரில் அமைந்திருக்கிறது, கதிரிபுரம். ஊருக்குப் போகும் சாலையில் பருத்தி, கரும்புத் தோட்டங்கள் அணிவகுக்கின்றன. அருகே உள்ள வயல்களில் கனகாம்பரம், ரோஜா என மலர்ந்து கிடந்த காட்சி, மாயவனின் அரளித்தோட்டத்துக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கிறது.
சொல்லிக் கொடுத்த சொந்தம்
            குடும்பத்துல பாகம் பிரிச்சப்போ… அண்ணணுக்கும் எனக்கும் முக்கால் முக்கால் ஏக்கர் நிலம் கிடைச்சுது. ஒரே கிணத்துல தான் ரெண்டு பேருக்கும் பாசனம். எனக்குச் சொந்தமான முக்கால் ஏக்கர்ல, 10 சென்ட்ல சிவப்பு அரளி, 15 சென்ட்ல  வெள்ளை அரளி போட்டிருக்கேன். மீதி நிலத்துல தென்னை மரங்களும், மாட்டுக்கு சோளமும், கொஞ்சம் மல்பெரியும் போட்டுருக்கேன். இது பூ சாகுபடிக்குப் பேர் போன பகுதி. நிறைய பேர் பூ மூலமாவே பெரிய அளவுக்கு வளர்ந்திருக்காங்க. ஊரைச்சுத்தி கல்வராயன், ஏற்காடு மலைகள் இருக்கிறதால எப்போதும் குளிர்காத்து வீசிட்டே இருக்கும். அப்பப்போ மழையும் பெஞ்சிடும்.
            வழக்கமா சம்பங்கி, கனகாம்பரம், காக்னா(காட்டுமல்லி அல்லது காக்கரட்டான்), மல்லி, சாமந்தினு போடுவாங்க. நானும் காக்னா, கனகாம்பரம் போட்டிருந்தேன். ஆனால் அதையெல்லாம் பறிக்கறதுக்கு அதிக ஆளுங்க தேவைப்படுவாங்க. அவங்களை வெச்சு பறிச்சு முடிக்கிறதுக்குள்ள போதும்   போதும்னு ஆயிடும். பராமரிப்பும் அதிகம். தண்ணி இல்லேனா செடிகள் தாங்காது. நாலு வருஷத்துக்கு முன்ன நத்தம் மேடுங்குற ஊர்ல இருக்கிற சொந்தக்காரங்க ‘அரளிப்பூவை பயிர் செய்யுற வேலையும் குறைவு, விலையும் நல்லா இருக்குனு சொன்னாங்க. அவங்ககிட்டயே நாத்துகள் வாங்கிட்டு வந்து நட்டேன். அதையே ஒட்டுப் போட்டு(பதியம்) செடிகள வளர்த்துட்டுருக்கேன். நூறு சதவிகித அரசு மானியத்துல சொட்டுநீர் போட்டிருக்கேன்.
செலவைக் குறைத்த அமுதக் கரைசல்
          ஒட்டுப் போட்ட செடி மூணு மாசத்துல வளர்ந்திடும். அதுக்குப் பிறகு, செடியிலிருந்து பூ பறிக்க ஆரம்பிச்சுடுவேன். நிறைய பூ பறிச்சதும் தாய்செடியை வெட்டிவிடுவேன். செடி நல்லா வளந்துடுச்சுனா, ஒரு மாசம் வரைக்கும் தண்ணி இல்லேனா கூட தாங்கிடும். எந்த வேலைக்கும் ஆளுங்கள வைக்காம, எங்க குடும்பமே வேலை செஞ்சுடுவோம்.” என்ற மாயவன், அடுத்து சொன்ன விஷயம் அனைவரும் மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான பாடம். அது-
            “ஆரம்பத்துல  நானும் ரசாயன விவசாயம் தான் பண்ணிட்டிருந்தேன். பொம்மிடி பக்கத்துல இருக்கிற அருண், இயற்கை விவசாயம், இடுபொருள் தயாரிக்கிறது பத்தியெல்லாம் சொல்லிக் கொடுத்தார். இப்போ நானே அமுதக் கரைசல் தயார் செஞ்சு உபயோகப்படுத்திட்டிருக்கேன். மகசூல் நல்லா இருக்குது. இத்தனை நாளா தேவையில்லாம உரத்துக்கு செலவு பண்ணிட்டோமேன்னு வருத்தமா இருக்கு.
            இதைத் தொடர்ந்து, அரளி சாகுபடி செய்யும் முறைகளைச் சொன்னார் மாயவன். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
சீஸன் சமயத்தில் கிலோ 150 ரூபாய்!
அரளிக்கு இருக்கும் வரவேற்பு குறித்துப் பேசிய சேலம், வ.உ.சி. மலர் சந்தையில் வியாபாரம் செய்து வரும் நாகராஜ், “ சந்தையில மல்லிக்கு அடுத்த இடம் அரளிக்கு தான். இங்க 200 கடைகளுக்கும் மேல இருக்கு. எந்த கடையில வேணும்னாலும் விவசாயிகள் கொண்டு வந்து போடலாம். அன்னிக்கு விலையில 10 % கமிஷன் எடுத்திட்டு, ரொக்கமா கொடுத்திடுவோம். இப்போ ஒரு நாளைக்கு 10 டன் அரளி வருது. குறிப்பா பனைமரத்துப் பட்டியிலிருந்து அதிகமாக வருது. அதுக்கடுத்து பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பக்கமிருந்து வரும். இங்கயிருந்த சென்னை பெங்களூருக்கு அதிகமா போகுது. வருஷம் முழுக்க வரத்து இருக்கும். சீஸன்ல கிலோ 150 ரூபாய் வரைக்கும் கூட விலை போகும். விடியற்காலை 3 மணிக்குத் தொடங்கி, சாயங்காலம் 5 மணி வரைக்கும் சந்தை இருக்கும்” என்றார்.
திண்டுப் பாத்தி
            ‘சாகுபடி நிலத்தில் செழுமையாகத் தொழுவுரத்தைக் கொட்டி உழுது… திண்டுப் பாத்தி முறையில் பார்களை அமைத்து, வாய்க்கால் அமைத்துக் கொள்ள வேண்டும். செடிக்குச் செடி 3 அடி, வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளி இருக்குமாறு லேசாக மண்ணைப் பறித்து செடிகளை நடவு செய்ய வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு, வாரம் ஒரு பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதும். 15 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீருடன் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற கணக்கில் அமுதக் கரைசலை (10 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 10 கிலோ மாட்டுச் சாணம்(பச்சையானது), ஒரு கிலோ நிலத்து மண், 10 பனம்பழம் அல்லது அரை கிலோ வெல்லம் ஆகியவற்றை 200 லிட்டர்  தண்ணீரில் நன்றாகக் கலக்கி விட வேண்டும். 15 நாட்கள்   தினமும் கலக்கி வந்தால் அமுதக் கரைசல் தயார்) பாசன நீருடன் கலந்து விட வேண்டும். களைகள் மண்டினால், அவற்றை அகற்ற வேண்டும். சொட்டுநீர்ப் பாசனத்தில்  களைகள் வளராது.
மூன்று மாதங்களில் அறுவடை!
            நடவு செய்த மூன்று மாதங்களில் பூக்கத் தொடங்கும். செடியின் அடிப்பகுதியில் இருக்கிற வளர்ந்த கிளைகளை ஒடித்து, நிலத்தில் பதியம் போட்டு புதிய செடிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தாய் செடியில் பறிப்பு முடியும் போது,  பதியம் போட்ட செடிகள் வளர்ந்து விடும். தாய் செடியை வெட்டி அப்புறப் படுத்தி விட்டு, புதிதாக வளர்ந்த செடியிலிருந்து பூக்களைப் பறிக்கலாம். மற்ற பூக்களைப் போலவே மொட்டாக இருக்கும் போதே பறித்து விட வேண்டும். செடி நம்மை விட உயரமாக இருப்பதால், நின்று கொண்டே பறிக்கலாம். பனிக்காலம் (டிசம்பர் மாதத்தில்) தவிர்த்து, மற்ற அனைத்து மாதங்களிலும் பூ பறிக்கலாம்.
கூட்டணி அமைத்தால் கூடுதல் லாபம்!
          சென்னை, கோயம்பேடு மொத்த பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கச் செயலாளர் மூக்கையா என்கிற ரொண்டியன், திண்டுக்கல் சேலம் பகுதியிலிருந்து கோயம்பேட்டுக்கு அரளி வருது. ரெகுலரா வாங்கறதுக்கு ஆட்கள் இருக்காங்க. ஆனா விவசாயிங்க யாரும் நேரடியா கொண்டு வந்து விக்க மாட்டேங்கறாங்க. ஏஜென்ட் மூலமாத்தான் வருது. கோயம்பேடுல என்ன விலை இருந்தாலும், விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட விலையைத்தான் ஏஜென்டுங்க கொடுப்பாங்க. விவசாயிகள் பலரும் ஒண்ணா சேர்ந்து, பூக்களை சேகரிச்சு, ஒருத்தா மூலமா கொண்டு வந்து வித்தா… கூடுதல் லாபம் பார்க்க முடியும்” என்று  கூட்டணி ஆலோசனை சொன்னார்.
மாதம் 6 ஆயிரம் ரூபாய்!
சாகுபடிப் பாடம் முடித்த மாயவன், “அரளி போட்டு மூணு வருஷம் ஆச்சு. சொந்தக் காரங்க கிட்ட இருந்து சும்மாவே நாத்து வாங்கிட்டு வந்துட்டேன். அதனால, அதுக்கு செலவு ஏதும் இல்ல. இதுக்குப் பெருசா பராமரிப்புச் செலவும் ஏதும் கிடையாது. 25 சென்ட்ல தினமும் 3 கிலோவுல இருந்து 4 கிலோ வரைக்கும் பூ கிடைக்குது. ஒரு மாசத்துக்கு சராசரியா  100 கிலோ பூ கிடைச்சிடும். தினமும் சேலம் பூ மார்க்கெட்டுக்கு இங்கயிருந்து வண்டி போகுது. அதுல போட்டு அனுப்பிடுவேன். சீஸனைப் பொருத்து, ஒரு கிலோ அரளி… 40 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை விலை போகும். வெள்ளை அரளிய விட,  சிவப்பு அரளிக்கு  கிலோவுக்கு 10 ரூபா அதிகமா கிடைக்கும். சராசரியா  கிலோ 60 ரூபாய்னு வெச்சுக்கிட்டா, 100 கிலோ பூவுக்கு மாசம் 6 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. 25 சென்ட் நிலத்தல இது நல்ல வருமானம் தானே!” என்றபடியே அடுத்த வேலைகளில் மூழ்கினார்.

இயற்கை முறையில் இனிப்பான லாபம்… கலக்குது கற்பூரவல்லி…!
10.01.2014 [மேலும் தகவலுக்கு...]

வலுத்தவனுக்கு வாழை… இளைத்தவனுக்கு எள்ளு’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதாவது வாழைக்கு அதிக பண்டுதம் பார்க்க வேண்டும். அதனால் பணவசதி இருப்பவர்கள் மட்டும் தான் வாழை சாகுபடி செய்ய முடியும். ஆனால் எள்ளுக்குப் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை என்பதால் யார் வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம்’ என்பதுதான்’ இதன் பொருள். ஆனால் இக்கருத்தைப் பொய்யாக்கும் விதமாக, இளைத்தவனுக்கு ஏற்றதாக இருக்கிறது… கற்பூரவல்லி வாழை!” என்று குஷியோடு சொல்கிறார், விழுப்புரம் மாவட்டம், சின்னக்கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன். உள்ளே வருபவர்களை தலை வணங்கி வரவேற்பு கொடுப்பது போல் வாழைத்தார்கள் தொங்கிக் கொண்டிருக்க… பசுமையான அந்த வாழைத்தோட்டத்தில் சுப்ரமணியனைச் சந்தித்தோம். கைவிட்ட விவசாயம்! “ எங்க குடும்பத்தொழில் விவசாயம்தான். வீட்டுக்கு ஒரே பிள்ளை நான். எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சதுமே, அப்பா கூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். 35 வருஷமா விவசாயம் செஞ்சுட்டிருக்கேன். நெல், கேழ்வரகு, கத்தரி, வெண்டை, கரும்பு, வாழைனு பலவிதமான பயிர்களை சாகுபடி செய்வேன். சமயங்கள்ல விவசாயத்துல செலவு கட்டுப்படியாகாமப் போய்… நகை, நட்டையெல்லாம் அடகு வைக்க வேண்டியதாகிடும். இப்படி கஷ்டப்பட்டு செய்தாலும் வர்ற வருமானம் அடகுல இருக்கிற நகையை மீட்கறதுக்குக் கூட உதவாதுங்கறதுதான் நெஜம். அடுத்தடுத்து இப்படியே இருந்ததால… நிரந்தர வருமானத்துக்காக ‘பால் உற்பத்தி பண்ணலாம்கற யோசனையோட… வீட்டுல இருந்த நாட்டு மாடுகளை எல்லாம் வித்துட்டு, கலப்பின மாடுகளை வாங்கினேன். ஆனா பால்ல கிடைச்ச வருமானம்… மாடுகளுக்கு தீவனம் வாங்கறதுக்கே போதல. வழிகாட்டிய பசுமை விகடன்! பிறகு விவசாயத்துல நல்ல லாபம் தர்ற பயிர்களா தேட ஆரம்பிச்சேன். அதுல தெரிஞ்சுகிட்ட தொழில்நுட்பங்களை சோதனை செஞ்சு பார்த்தப்போ… நல்ல பலன் கிடைச்சிது. அதுக்கப்புறம்தான் இயற்கை விவசாயத்துல சின்ன நம்பிக்கை வந்துச்சு” என்று முன்னுரை கொடுத்த சுப்ரமணியன் தொடர்ந்தார். நம்பிக்கை கொடுத்த ஜீரோ பட்ஜெட்! “ பாலேக்கரோட ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துக்கிட்டேன். பாலேக்கர் சொல்லிக் கொடுத்த விஷயங்கள் தான் எனக்கு விவசாயத்து மேல இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்துச்சு. உடனே ரசாயன உரங்களை நிறுத்திட்டு, முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். முதல் போகத்துல ஒரு ஏக்கர்ல பொன்னி நெல் சாகுபடி செஞ்சேன். 12 மூட்டைதான் (75 கிலோ மூட்டை) மகசூல் கிடைச்சிது. தரமில்லாத விதை நெல்லை ஏமாந்து வாங்கிட்டதால அறுவடை செஞ்ச நெல்லோட நிறம் மங்கலா இருந்துச்சு. அதனால மார்க்கெட் கமிட்டியில நெல்லை கொள்முதல் செய்யமாட்டேனுட்டாங்க. அப்படியே அரிசியாக்கி விலைக்குக் கொடுத்திட்டேன். நல்ல சுவையாவும் மணமாவும் இருந்ததால… சீக்கிரமே வித்துப் போச்சு. அப்பறம் தரமான விதைகளை தேடினப்போ… மாப்பிள்ளை சம்பா, பூங்கார் மாதிரியான பாரம்பரிய ரக விதை நெல் கிடைச்சுது. பல தானிய விதைப்பு செய்து, ஜீவாமிர்தம் , பழக்கரைசல் மாதிரியான இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி… இந்த ரகங்களை சாகுபடி செஞ்சப்போ, ஏக்கருக்கு 25 மூட்டைக்குக் குறையாம கிடைச்சிது. புயலுக்குப் பிறகும் மகசூல்! கிட்டத்தட்ட இதே சமயத்துல… ஜீரோ பட்ஜெட் முறையில ஒரு ஏக்கர்ல கற்பூரவல்லி வாழை போட்டேன். அதுல போட்ட ஊடுபயிர் மூலமா கிடைச்ச வருமானத்துலயே சாகுபடி செலவை முடிச்சுட்டேன். ஜீரோ பட்ஜெட்ங்கிறதால… செலவும் குறைவுதான். வாழை நட்டு நாலு வருஷமாச்சு… மறு தழைவு மூலமாவே பலன் எடுத்திட்டு இருக்கேன். மரங்கள் நல்ல திடமாவே வர்றதால… முட்டுக்கொடுக்கிறதுக்குக் கூட மரம் வெக்கிறதில்லே. ’தானே புயல்’ல எல்லா மரமும் பாதியில முறிஞ்சு போச்சு. அதையெல்லாம் வெட்டிட்டேன். வழக்கமா வாழைத்தோப்புல ஒரே சமயத்துல தான் தார் கிடைக்கும். ஆனா மரங்களை வெட்டி விட்டதால… ஒரே மாதிரி இல்லாம வேற வேற சமயங்கள்ல தார் விடுது. அதனால 15 நாளைக்கு ஒருமுறை பத்து, பதினைஞ்சு தார், அளவுக்குக் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. இதன் மூலமா வருஷம் முழுக்க வருமானம் கிடைக்குது. என்கிட்ட மொத்தம் நாலு ஏக்கர் நிலமிருக்கு. ஒரு ஏக்கர் வாழை போக… 70 சென்ட்ல மாப்பிள்ளை சம்பா, 70 சென்ட்ல இலுப்பைப் பூ சம்பா, 70 சென்ட்ல சீரகச் சம்பா, 20 சென்ட்ல பசுந்தீவனம்னு இருக்கு. 70 சென்ட்ல சிறு தானியம் விதைக்கலாம்னு இருக்கேன்” என்ற சுப்ரமணியன், கற்பூரவல்லி வாழை சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார். அது அப்படியே பாடமாக இங்கே… ஏக்கருக்கு 1000 வாழை! கற்பூரவல்லி வாழையின் ஆயுள் காலம் 12 மாதங்கள். நல்ல வடிகால் வசதியோடு கூடிய அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடவு செய்யலாம். ஏக்கருக்கு எட்டு மாட்டு வண்டி என்ற கணக்கில் , எருவைக் கொட்டி களைத்து, மண் பொலபொலப்பாக மாறும் வரை நன்கு உழுது நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு மாட்டு ஏர் மூலமாக, இரண்டு அடி இடைவெளியில் பார் ஓட்ட வேண்டும். 8 அடி இடைவெளியில் செடிக்குச் செடி 5 அடி இடைவெளி என்ற அளவில் பார்களில் அரை அடி ஆழத்துக்கு குழிகள் எடுக்க வேண்டும்( இடையில் உள்ள பார்களில் ஊடுபயிர் செய்யலாம்). குழியை நான்கு நாட்கள் ஆறப்போட்டு, ஒரு மாத வயதுடைய வாழைக் கன்றை பீஜாமிர்தத்தில் விதை நோத்தி செய்து நட வேண்டும். ஏக்கருக்கு சுமார் 1000 வாழைக் கன்றுகள் வரை நடவு செய்யலாம். வாழைக்கு இடையில் உளுந்து, கத்தரி, தக்காளி, வெண்டை, மிளகாய் போன்றவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஒவ்வொரு பாரிலும் ஒவ்வொரு வகை ஊடுபயிரை நடவு செய்வது நல்லது. பூச்சி நோய் தாக்காது! தாராளமாக தண்ணீர் விட்டு நடவு செய்ய வேண்டும். அடுத்து நடவு செய்த மூன்றாம் நாளில் உயிர் தண்ணீர் விட வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொருத்து தண்ணீர் கட்டினால் போதுமானது. 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். ஊடுபயிர்களை வளர்ந்த பிறகு, களை எடுக்க வேண்டியிருக்காது. அறுவடை வரை 15 நாளைக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை, பாசன நீரோடு கலந்து விட வேண்டும். இதேபோல… நடவு செய்த 25-ம் நாளில் இருந்து, 15 நாளைக்கு ஒருமுறை ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா என்று மாற்றி மாற்றி தெளிக்க வேண்டும்.( ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா என்று கலந்து தெளிக்க வேண்டும்). 3,6 மற்றும் 9-ம் மாதங்களில் ஒவ்வொரு மரத்துக்கும் அரை கிலோ அளவுக்கு மண்புழு உரம் வைத்து, மண்ணை அணைத்து விட வேண்டும். இயற்கை முறையில் பூச்சி நோய் தாக்குதல் குறைவுதான். அப்படியே இருந்தாலும், மூலிகைப் பூச்சி விரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். பக்கக் கன்றுகள் ஜாக்கிரதை! 2-ம் மாதத்தில் இருந்து 3-ம் மாதத்துக்குள் ஊடுபயிர்களை அறுவடை செய்து விடலாம். அறுவடை முடிந்த செடிகளை அப்படியே, உழவு ஓட்டி மடித்து விட்டால், அவை உரமாகி விடும். 6-ம் மாதத்தில் வாழையில் பக்கக் கன்றுகள் தோன்றும். அவற்றில் வாளிப்பான ஒரு கன்றை மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றைத் தோண்டி எடுத்து, நிலத்தில் ஆங்காங்கே மூடாக்காகப் போட்டு விட வேண்டும். 9-ம் மாதத்தில் குலை தள்ள ஆரம்பிக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை… தேவையில்லாத பக்கக் கன்றுகளையும் காய்ந்த சருகுகளையும் கழித்து அவற்றை மூடாக்காகப் போட்டு வர வேண்டும். குலை தள்ளிய 3 மாதத்தில்… அதாவது 12-ம் மாதத்துக்குப் பிறகு தார்கள் அறுவடைக்குத் தயாராகிவிடும். அதிகபட்சம் ஒரு மாதத்தில் அறுவடை செய்து விடலாம். தாரை மட்டும் வெட்டிவிட்டு, தாய் மரத்தை அப்படியே விட்டு விட வேண்டும். அதிலுள்ள சத்துகளை எடுத்துக் கொண்டு பக்கக் கன்றுகள் நன்றாக வளரும். தொடர்ந்து இடுபொருட்களைக் கொடுத்து பாசனம் செய்து வந்தால், அடுத்த 9 மாதங்களில் மீண்டும் பலன் எடுக்கலாம். ஏக்கருக்கு 90 ஆயிரம்! சாகுபடிப் பாடம் முடித்த சுப்ரமணியன், ஒரு தார்ல ஏழுல இருந்து பதிமூணு சீப்பு வரை இருக்குது. ஒரு சீப்புல பதினஞ்சுல இருந்து இருபத்திரண்டு காய் வரை இருக்குது. ஒரு ஏக்கர்ல 1000 வாழை மரம் நட்டா… சேதாரம் போக, குறைஞ்சது 900 தார் வரை கிடைக்கும். ஒரு கற்பூரவல்லி தார், குறைந்த பட்சமா 80 ரூபாய்க்கும், அதிகபட்சமா 150 ரூபாய் வரைக்கும் விக்குது. சராசரியா 100 ரூபாய்னு வச்சுக்கிட்டாலே… 900 வாழைத் தாருக்கும் சேர்த்து 90 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 20 ஆயிரம் ரூபாய் செலவு போக, 70 ஆயிரம் ரூபாய் லாபம்”.

நடமாடும் தக்காளித் தொழிற்கூடம்…
10.01.2014 [மேலும் தகவலுக்கு...]

காளானை குறுகிய காலத்துக்கு சேமித்து வைக்கும் முறைகள் பற்றிப் பார்த்தோம். அதிக நாட்கள் அவற்றைத் தரம் குறையாமல் பதப்படுத்தும் வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம். காளானில் இருக்கக்கூடிய நொதிப் பொருட்களும் சத்துப் பொருட்களும் சீக்கிரத்தில் அழிந்து விடுவதால்தான், காளான்கள் தரம் இழந்து, பழுப்பு நிறத்துக்கு மாறுகின்றன. நுண்கிருமிகளின் செயல்பாட்டினால், காளான்கள் கெட்டு விடுகின்றன. காளானை ஒரு சில மணித்துளிகள் வெந்நீரில் வைத்து எடுப்பதன் மூலம் நொதிகளின் செயலையும், நுண்கிருமிகளின் செயல்பாட்டையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். இதனை ஆங்கிலத்தில் ‘பிளான்ஞ்சிங்’ என்பர். நன்கு வளர்ச்சி அடைந்த காளானை அறுவடை செய்து, ஒரு துணியால் துடைத்து சுத்தம் செய்து, வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டி, 4 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் வரை கொதிநீரில் வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் அமிழ்த்தி எடுக்க வேண்டும். இவ்வாறு ‘பிளான்ஞ்சிங்’ செய்யப்பட்ட காளானை உலர வைத்து பதப்படுத்தி நீண்ட காலத்துக்கு கெடாமல் பாதுகாக்கலாம். சூரிய ஒளியில் உலர வைத்தல் இது மிகவும் எளிமையான, முதலீடு குறைவான பதப்படுத்தும் முறை. வெப்பம் அதிகமாகவும், காற்றின் ஈரப்பதம் குறைவாகவும் இருக்கும் போது காளானை உலர்த்த வேண்டும். அது காற்று வீசக்கூடிய தருணமாகவும் இருக்க வேண்டும். கம்பி வலையுடன் கூடிய தட்டுகளில் காளானின் செதில் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு பரப்ப வேண்டும். காளானின் ஈரப்பதம் 12 முதல் 15 சதவிகிதத்துக்கு குறையும் வரை ஓரிரு நாட்களுக்கு வெயிலில் உலர்த்த வேண்டும். உலர்த்திய காளானை பாலித்தீன் பைகளிலிட்டு, காற்றுப்புகாத அளவுக்கு அடைத்துப் பாதுகாக்கலாம். இம்முறையில் ஒரு கிலோ காளானை உலர்த்தி பதப்படுத்தினால்… சுமார் 120 கிராம் முதல் 150 கிராம் வரை உலர் காளான் கிடைக்கும். வலைத்தட்டுகளுக்கு பதிலாக மெல்லிய கம்பி அல்லது நூலில் பூக்களைக் கோப்பது போல் காளானைக் கோத்து, கொடி போல் தொங்க விட்டோ, வரிசையாகக் கட்டியோ வெயிலில் உலர்த்தலாம். இம்முறையில் உலர்த்தினால், காளான்கள் நன்கு உலர்வதுடன், தூசு படியாமலும் இருக்கும். உலர் வெப்பமூட்டிகளில் உலர்த்துதல் காளானை சிறுசிறு துண்டுகளாக்கி, 2 நிமிடங்கள் முதல் 4 நிமிடங்கள் வரை கொதிநீரில் வைக்க வேண்டும். இதனால், நுண்ணுயிர்கள் அளிக்கப் படுவதோடு… வினையியல் மற்றும் இரசாயன மாற்றங்களும் தடுக்கப் படுகின்றன. காளானைக் குளிர்வித்து 0.25% சிட்ரிக் அமிலம்(எலுமிச்சைச் சாறு ) கலந்த கரைசலில் முன் நேர்த்தி செய்ய வேண்டும். 3% சாதாரண உப்ப, 6% சர்க்கரை கலந்த கரைசலிலும் முன் நேர்த்தி செய்யலாம். பிறகு அவற்றைக் கம்பி வலையின் மீது பரப்பி, உலர் வெப்பமூட்டி மூலமாக, 50 டிகிரி முதல் 60 டிகிரி சென்டி கிரேடு கொண்ட வெப்பக் காற்றைச் செலுத்தி, 5 % ஈரப்பத்த்துக்கு உலர வைத்து காற்று புகாத புட்டிகளில் நிரப்பி, இறுக மூடி வைக்கலாம். இம்முறையில் ஒரு வருட காலம் வரை கெடாது. உறை உலர் முறை இது அதிக குளிர் நிலையில் காளானின் ஈரப்பதத்தை ஆவியாக்கி உலர்த்தும் முறை. இவ்வகையில் பதப்படுத்தும் போது சில வகைக் காளான்கள் பழுப்பு நிறமாக மாறக்கூடும். இதைத் தவிர்க்க 12 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலைக்குக் கீழ் குளிர்ந்த நிலையில் உறைய வைத்து, பின்னர் கொதிநீக்கம் செய்து, வெற்றிடச் சூழலில் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை காய வைத்தால், நிறம் மற்றும் சுவை குறையாமல் நீண்ட காலத்துக்குப் பாதுகாக்கலாம். நொதித்தல் முறையில் பதப்படுத்துதல், டப்பாக்களில் பதப்படுத்துதல், பதனக் கரைசலில் பதப்படுத்துதல் என இன்னும் பல்வேறு முறைகளில் காளானை நீண்ட காலத்துக்குத் தரம் குறையாமல் பாதுகாக்கலாம். அடுத்துத் தக்காளி பற்றிப் பார்க்கலாம். உலக அளவில் மிக அதிகமாக விளையக் கூடிய காய்கனிகளில் தக்காளி முதல் இடம் வகிக்கிறது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 1.8 கோடி டன் தக்காளி உற்பத்தி செய்யப் படுகிறது. தமிழ்நாட்டில் 4 லட்சம் டன் தக்காளி விளைவிக்கப்படுகிறது. இது மிக எளிதில் சேதமடையக் கூடியதாக இருப்பதால் ஓர் ஆண்டுக்கு இந்தியாவில் 5 ஆயிரம் கோடி ரூபாய் விலை மதிப்புள்ள தக்காளி குப்பையில் வீசப்படுகிறது. தமிழ்நாட்டில் வீணாகும் தக்காளியின் விலை மதிப்பு ஆண்டுக்கு 150 கோடி ரூபாய். அறுவடைக் காலங்களில் கடுமையான விலை வீழ்ச்சியை சந்திக்கும் தக்காளி, மற்ற காலங்களில் பல மடங்கு விலை உயர்ந்து காணப்படுகிறது. அதுவரை தரம் குறையாமல் பாதுகாத்தால்… விவசாயிகள் தங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பலனை முழுமையாக அடையலாம். குளிர்பதனக் கிடங்குகளில் 12 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் 90% முதல் 95% வரையிலான ஈரப்பதத்தில் தக்காளியை இரண்டு மாதங்கள் வரை பாதுகாக்க முடியும். டின்கள், பாட்டில்களில் அடைத்தல் நன்கு பழுத்த, சிவந்த தக்காளி பழங்களின் தோலை நீக்கி, சுமார் 2% உப்புக் கரைசலிலோ, அல்லது 2% உப்பு சேர்ந்த தக்காளிப் பழச் சாறிலோ ஊறவைத்து, டின்கள் அல்லது பாட்டில்களில் அடைத்து வைப்பதன் மூலம், அதிக நாட்களுக்குத் தரம் மாறாமல் பாதுகாக்க முடியும். வெளிநாடுகளில் இதற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. உலர் தக்காளித் துண்டுகள் பழுத்து சிவந்த தக்காளிப் பழங்களை சீரான வடிவில் துண்டுகளாக நறுக்கி, அதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உலர்த்திகளில் உலர்த்தி, அவற்றின் ஈரப்பதத்தை 3% முதல் 5% வரை குறைத்தால், அவற்றை சுமார் 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை சேதமடையாமல் பாதுகாக்கலாம். ஒரு கிலோ தக்காளிப் பழத்தை இவ்வாறு உலர்த்தினால்… 400 கிராம் உலர் தக்காளிப் பழத்துண்டுகள் கிடைக்கும். இதை சமையலுக்குப் பயன்படுத்தும்போது மிதமான சுடுநீரில் சுமார் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தக்காளி பவுடர்! தக்காளியைப் பிழிந்தெடுத்து, விதை, தோலை நீக்கி சுத்தமான சாறினை எடுத்துக் கொள்ள வேண்டும். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தின் உதவியோடு இதனைக் காய்ச்சி, சுமார் 40 முதல் 45 டி.பிரிக்ஸ் அடர்த்திக்குக் கொண்டு வந்து, ஸ்பிரேடிரையர் அல்லது டிரம் டிரையர் மூலமாக உலர்த்தி, தக்காளி பவுடர் தயாரிக்கலாம். இது ஓராண்டு வரை கெடாமல் இருக்கும். தக்காளிக் கூழ் தயார் செய்து சிறிய பாக்கெட்டுகள், பாட்டில்கள், டின்களில் நிரப்பி விற்பனை செய்யலாம். இதற்கான பயிற்சியை அளிப்பதற்காகவும், இப்படி பதப்படுத்தி தருவதற்காகவும் ’நடமாடும் தக்காளி பதப்படுத்தும் தொழிற்கூடத்தை எங்களது இந்திய பயிர்பதன தொழில்நுட்பக் கழகம் உருவாக்கியுள்ளது. இந்தத் தொழிற்கூடம் மிக விரைவில் தமிழக கிராமங்களுக்குள் உலா வர இருக்கிறது. தக்காளி மூலம்… தக்காளி சாஸ், தக்காளி பேஸ்ட், தக்காளி பழரச பானம், கெட்சப், காக்டெய்ல், கன்சர்வ், தக்காளி ஜாம் என ஏராளமான மதிப்புக் கூட்டும் பொருட்கள் தயார் செய்ய முடியும். இளமையை நீட்டிக்கும் தக்காளி! பொதுவாக கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் தக்காளி அறுவடை செய்யப்படு கிறது. குளிர் காலத்தில் கிடைக்கும் தக்காளி தரத்தில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. மனித உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, பி, சி, கே போன்றவையும்… கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுப் பொருட்களும் தக்காளியில் அடங்கியுள்ளன. தக்காளி, சீரான கண் பார்வையைத் தரக்கூடியது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தக் கூடியது. குடலுக்குச் சீரான இரத்த ஓட்டத்தைத் தரக் கூடியது. தக்காளியில் ஆன்டி- ஆக்ஸிடெண்ட் அதிகளவில் இருப்பதால், நம்முடைய தோலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013