கால்நடைகள் :: வெள்ளாடு வளர்ப்பு :: இனங்கள் முதல் பக்கம்

வெள்ளாடு இனங்கள்

தமிழ்நாட்டில் மூன்று வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன.

  1. கன்னி ஆடுகள்
  2. கொடி ஆடுகள் மற்றும்
  3. சேலம் கருப்பு

கன்னி ஆடுகள்

இவை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும். உயரமான ஆடுகள், கருமை நிறம் கொண்டது. முகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளை கோடுகள் இருக்கும். அடி வயிற்றுப் பகுதி மற்றும் கால்களின் உட்புறத்தில் வெள்ளைநிறம் காணப்படும். இத்தகைய நிறம் அமையப்பெற்ற ஆடுகளை ‘பால்கன்னி’ என்றும், வெண்மை நிறத்திற்குப் பதிலாக செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செங்கன்னி’ என்றும் அழைக்கப்பர்.

Goat_breed_Kanni

கொடி ஆடுகள்

இவை தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, எட்டயபுரம் மற்றும் விளாத்திக்குளம் வட்டங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது. மிக உயரமான இவ்வகை ஆடுகள் நீண்ட கழுத்தும், உடலும் கொண்டவை. வெள்ளையில் கருமை நிறம் சிதறியது போன்ற நிறம் கொண்ட ஆடுகளை ‘கரும்போரை’ என்றும், வெள்ளையில் செம்பழுப்பு நிறம் கொண்டவைகளை ‘செம்போரை’ என்றும் அழைப்பர்.

Goat_breed_Kodi

சேலம் கருப்பு

இந்த வகையான ஆடுகள் சேலம் மாவட்டத்தில் குறிப்பாக ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. மேலும் தர்மபுரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பெயருக்கேற்றபடி முற்றிலும் கருமை நிறம் கொண்டவை. உயரமானவை மற்றும் மெலிந்த உடலமைப்பு கொண்டவை.

Goat_Breed_Selam Karuppu

இம்மூன்று இனங்களும் இறைச்சி மற்றும் தோலுக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது.

இந்திய வெள்ளாட்டு இனங்கள்

இந்தியாவில் மட்டும் 19 அறியப்பட்ட இனங்கள் நாடு முழுவதும் பரவிக் காண்ப்படுகின்றன. இவை காணப்படும் இடங்களைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன.

ஹிமாலயன் இனங்கள் (மலைப்பிரதேசங்களில காணப்படுபவை)

இந்த இன ஆடுகள், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசத்தின் சில இடங்களில் காணப்படுகின்றன.

ஹிமாலயன் இனம்

இவ்வின ஆடுகள் வெள்ளை நிற முடியுடன் மிக வலிமையானவை. இவை காடி, ஜம்பா, காஷ்மீரி என்று வளரும் இடங்களைப் பொறுத்து பல பெயர்களில் வழங்கப்படுகின்றன. இவை காங்ரா, குளுவாலி, சம்பா, சிர்மூர், சிம்லா, ஹிமாச்சலப்பகுதி மற்றும் ஜம்முவின் சில பகுதிகளில் பரவியுள்ளது. ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஆடுகள் மலைகளில் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன.

பாஸ்மினா

இவை சிறிய சுறுசுறுப்பான ஆடுகள் 3400 மீ ஹிமாலய மலை உயரங்களில் லக்சத் தீவுகள் மற்றும் ஸ்பிட்டி பள்ளதாக்குகளில் பரவுயுள்ளன. அதிகத் தரமுள்ள மென்மையான வெதுவெதுப்பான துணி தயாரிக்கத் தேவையான ரோமங்களைக் கொண்டுள்ளன. பாஸ்மினாவின்  உற்பத்தி 75-150 கி வரை இருக்கும்.

செகு

செகு இன ஆடுகள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, காஷ்மீர் யாக்சர் போன்ற இடங்களில் காணப்படுகிறது. இது நல்ல இறைச்சியையும் சிறிதளவு பாலும் கொடுக்கக்கூடியது.

ஜமுனா பூரி

உத்திரப்பிரதேசத்தின் “எட்டாவா” மாவட்டத்தைச் சேர்ந்த இவ்வினம் மிகப்பெரிய தொங்கும் காதுகளையும், நல்ல உயரமும் உடையவை. இது ரோமன் மூக்குடன் நீளமான அடர்ந்த முடியை உடையது. கொம்புகள் சிறியவையாக தட்டையாக இருக்கும். கிடா ஆடுகள் 65-86 கிலோ எடையும் பெட்டை ஆடுகள் 45-61 கிலோ எடையும் கொண்டிருக்கும். தினமும் 2.25 - 2.7 கி.கி பால் தரக்கூடியது. இதன் பால் உற்பத்தி 250 நாட்களில் 250-300 கி.கி வரை 3.5 சதவிகிதம் கொழுப்புச் சத்துடன் இருக்கும். இந்த இனங்கள் இங்கிலாந்தின் ‘ஆங்கிலோ நுபியன்’ என்னும் இனத்தை உருவாக்க கலப்பின ஆடாகப் பயன்படுத்தப்படுகிறது.

Goat_Breed_jamunaPuri

பீட்டல்

இது முக்கியமாக பஞ்சாபில் காணப்படுகிறது. ஜமுனாபுரியிலிருந்தே இவ்வினம் உருவாக்கப்படுகிறது. சிவப்பு நிறத்தில் வெள்ளை பொட்டுக்களுடன் கூடியது. கிடாக்கள் 65-85 கிலோவும், பெட்டை ஆடுகள் 45-61 கி.கி எடையும், பால் அளவு நாளொன்றுக்கு 1 கி.கி அளவும் இருக்கும். கிடாக்கள் தாடியுடன் இருக்கும்.

பார்பரி

இவ்வினம் உத்திரப் பிரதேசத்தின் எட்டாவா, எட்டா, ஆக்ரா, மதுரா மாவட்டங்களிலும் கமல், பானிபட், சோடக் பகுதிகளிலும் (ஹரியானா) காணப்படுகிறது. இது சிவப்பு, வெண்மை நிறங்களில் உள்ளது. கொம்புகள் நீண்டும், உரோமங்கள் குட்டையாகவும் உள்ள இவ்வாடுகள் அளவில் சிறியவை. கிடா ஆடுகள் 36-45 கிலோவும், பெட்டை ஆடுகள் 27-36 கிலோ எடையும் கொண்டவை. இவைக் கொட்டில் முறையில் பொதுவாக வளர்க்கப்படும். பால் உற்பத்தி 0.90 -1.25 கி.கிமும் கொழுப்புச்சத்து 50 சதவிகிதம் அளவும் பால் தரும் காலம் 108 நாட்களாகவும் இருக்கும். இவை 12-15 மாதங்களுக்கு இரு முறை மட்டுமே குட்டி போடுபவை.

மத்தியப்பகுதிகளில் காணப்படுபவை

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம். குஜராத், மஹாராஷ்டிரா, மார்வாரி, மெஹ்சேனா மற்றும் ஷால்வாடி போன்ற இடங்களில் இருக்கும் ஆடுகள் இவ்வகையைச் சார்ந்தவை. இவ்வாடுகள் ஜமுனாபுரியிலிருந்து உருவானவை. இதன் பால் உற்பத்தி நாளொன்றுக்கு 0.75 - 1 கி.கி.

பெராரி

நாக்பூர், மகாராஷ்டிராவின் வார்டா மாவட்டம், மத்தியப் பிரதேசத்தின் நினார் மாவட்டங்களில் பரவியுள்ளன. இவை உயரமான, கருப்பு நிறமுடையவை. பெட்டை ஆடுகள் நாளொன்றுக்கு 0.6 கிகி பால் தரக்கூடியவை.

கத்தை வாரி

இது கட்ச், வடக்கு குஜராத், ராஜஸ்தான் பகுதிகளை தாயகமாகக் கொண்டது. இவ்வகை ஆடுகள் கறுப்பு நிறத்தில் கழுத்தில் சிவப்பு நிறமுடன் காணப்படுகிறது. பெட்டை ஆடுகளின் பால் அளவு நாளொன்றுக்கு 1.25 கி.கி

தென் மாநிலங்களில் காணப்படுபவை

மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் காணப்படும் இனங்கள் இவ்வகையாகும்.

சுர்தி

இவ்வின ஆடுகள் பெராரி போன்று குட்டையான கால்களையும் வெள்ளை நிறத்தையும் உடையவை. இவை பாம்பே நாசிக், சூரத்தில் அதிகமாக உள்ளன. பால் உற்பத்தி நாளொன்றுக்கு 2.25 கி.கி.

மலபார் (அ) தலச்சேரி

வெள்ளை மற்றும் பழுப்பு, கறுப்பு நிறங்களில் காணப்படும். 2-3 குட்டிகள் போடவல்லது கிடாக்கள் 40 / 50 கிலோ எடையும், பெட்டை ஆடுகள் 30 கிலோ எடையும் கொண்டவை. நன்றாகப் பால் கொடுக்கக்கூடிய இனம்.

Goat_Breed_Tellicherry

டெக்கானியா

இவைகளை ஒஸ்மனாபாத் என்றும் அழைப்பர். சமவெளிகளில் காணப்படும் ஆடுகளின் கலவை இது. இவை கருப்பு, கருப்பு வெள்ளை கலந்தோ, சிவப்பு நிறத்திலோ காணப்படும். பால் அளவு 0.9 - 2.8 கிகி.

ஜிபிஆர்ஐ

இது இரு இனங்களின் கலவை ஆகும். இதன் நிறம் கருப்பிலிருந்து வெள்ளை நிறம் வரை வேறுபடும். பால் அளவு 0.9 - 2.8 கி.கி நாளொன்றுக்கு.

கிழக்குப் பகுதிகளில் காணப்படும் இனங்கள்

மேற்கு வங்காளம், அஸ்ஸாம், திரிபுரா, ஒரிசா மற்றும் பீகாரின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.

பெங்கால்

இவ்வினங்கள், கருப்பு, பழுப்பு (அ) வெள்ளை என மூன்று நிறங்களில் காணப்படுகின்றன. இவை சிறிய குட்டையான இனங்கள், இதன் இறைச்சி மிகவும் உயர்தரமானது. இது வருடத்திற்கு இருமுறை இரு குட்டிகள் ஈனும். கிடாக்கள் 14-16 கிலோவும், பெட்டை ஆடுகள் 9-14 கிலோ எடையும் கொண்டிருக்கும். பெங்கால் இன ஆடுகளின் தோல் ரோமங்களுக்கு மதிப்பு அதிகம். இதிலிருந்த காலனிகள் தயார் செய்யப்படுகின்றன.

அஸ்ஸாம்

குட்டையான உருவம் கொண்ட இவ்வாடுகள் அஸ்ஸாம் மலைப்பகுதிகளிலும், கிழக்கு மாநிலங்களிலும் காணப்படுகின்றன.

அயல்நாட்டு இனங்கள்

பல்வேறு அயல்நாட்டு இனங்கள் பால் உற்பத்தியை அதிகரிக்க நம் நாட்டிற்குத் தருவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இவ்வின ஆடுகளின் பால் உற்பத்தி மிக அதிகம்.

டோகன் ஸ்பெர்க்

வடக்கு ஸ்விட்சர்லாந்தின் டோகன்ஸ்பெர்க்கை தாயமாகக் கொண்ட இவ்வினம் மென்மையான நன்கு வளையும் தன்மையுடைய தோலை உடையது. பொதுவாக கொம்புகள் காணப்படுவதில்லை. கிடாக்கள் 80 கிலோவிற்கு மேலும் பெட்டை ஆடுகள் 65 கிலோ வரையிலும் எடை கிடைக்கும்.

சராசரி பால் அளவு நாளொன்றுக்கு 5.5 கி.கி பாலில் உள்ள கொழுப்புச் சத்து 3-4 சதவிகிதம் கிடா ஆடுகள் பெட்டை ஆடுகளை விட நீண்ட உரோமங்களைக் கொண்டிருக்கும்.

சேனன்

சுவிட்சர்லாந்தின் சேனன் பள்ளத்தாக்கில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் அதிக உற்பத்திக்கும், மிருதுவான ரோமத்திற்கும் புகழ் பெற்றது. வெள்ளை அல்லது பாலேடு நிறத்தில் இருக்கும். இவ்வாட்டின் முகம் சிறிது தட்டையாகவும், காதுகள் முன்னோக்கி சற்று மேலே தூக்கியவாறு இருக்கும். ஆண், பெண் இரு வகை ஆடுகளும் கொம்புகள் அற்றுக் காணப்படும். சில நேரங்களில் கொம்புகள் மேலோங்கிக் காணப்படும். பெட்டை 65 கிலோ எடையுடனும் கிடா 95 கிலோ எடையும் கொண்டவை. 8-10 மாதங்கள் வரை சராசரியாக 2-5 கிகி நாளொன்றுக்கு பால் தரக்கூடியது.கொழுப்பு சதவீதம் 3-5 சதவிகிதம்.

ஆல்பைன்

ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் தோன்றிய இனம் இது. இவ்வினமானது. பிரெஞ்ச், சுவிஸ், ராக் அல்பைன் போன்ற இனங்களிலிருந்து கலப்பினச் சேர்க்கையில உருவாக்கப்பட்டது. பல நிறங்களில் காணப்படும் இது அதிக அளவு பால் தரக்கூடியது 2-3 கி.கி பாலின் கொழுப்புச் சத்து 3-4 சதவிகிதம்.

நுபியன்

வடகிழக்கு ஆப்பிரிக்காவின் நுபியின் பகுதியில் இவ்வினம் அதிகமாகக் காணப்படுகிறது. இது நீண்ட கால்களை உடைய ஆடு. இந்த நுபியன் இனத்தை இந்தியாவின் ஜமுனாபுரியுடன் கலப்பு செய்து ஆங்கிலோ நுபியன் என்ற இனம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.

ஆங்கிலோ நுபியன்

இது வளைந்து தொங்கும் காதுகளுடன் ரோமன் மூக்குடன் கூடிய மிருதுவான தோல் கொண்ட இனம். இவ்வின ஆடுகளின் ஜெர்ஸி இனம் என்று அழைக்கப்படுகிறது. மடி மிகப் பெரியதாக காம்புகள் பெரியதாக தொங்கிக் கொண்டு இருக்கும். கிடாக்கள் 65-80 கி.கிராமும், பெட்டை ஆடுகள் 50-60 கி.கிராமும் எடை கொண்டவை. சராசரி பால் எடை 3-4 கி.கி நாளொன்றுக்கு அதிகபட்சமாக 6.5 கி.கி வரை பால் தரக்கூடியது.

அங்கோரா

துருக்கு (அ) ஏசியாவைத் தாயகமாகக் கொண்டது. இது ‘மொஹெப்பர்’ என்னும் உயர்வகை உரோமங்களைக் கொண்டது. வெள்ளை நிற உடல் முழுவதும் மிருதுவான ரோமங்கள் நிறைந்து காணப்படும். இதன் உரோமங்களைச் சேகரிக்காமல் விட்டால் கோடைக் காலங்களில் தானாகவே கீழே, உதிர்ந்து விடும். சராசரியாக 1.2 கி.கி உரோமம் இதிலிருந்து கிடைக்கும். இவ்வினங்கள் குட்டையான கால்களுடன் சிறிய அளவுள்ளவை. கொம்புகள் சாம்பல் நிறத்தில், சுருண்டு முன்னும் பின்னும் வளைந்திருக்கும். சிறிய வாலைக் கொண்டுள்ளது.

நல்ல பால் தரக்கூடிய ஆடுகள்

நல்ல பால் உற்பத்தி உடைய ஆடுகள் கீழ்க்காணும் பண்புகளுடன் இருக்கவேண்டும்.

தலை

சற்று பெரியதாக, அகலமான மூக்கும், வாயும் கொண்டதாக இருக்கவேண்டும். ஆட்டின் முகத்தில் பெண்மைத் தோற்றம் நன்கு தெரியவேண்டும்.

கண்கள்

கண்கள் பெரிதாக அகன்று பளிச்சென்று இருக்கவேண்டும்.

கழுத்து மற்றும் தோள்பட்டை

கழுத்து மெலிந்து நீளமாகவும், சமமாகவும் இருக்கவேண்டும். தோள்பட்டை, பின்கழுத்துப் பகுதிகள், கழுத்துடன் நன்கு இணைந்திருக்கவேண்டும்.

மார்பு

நன்கு அகன்று மென்மையான தோற்றத்துடன் இருக்கவேண்டும்.

முன்னங்கால்

நல்ல தோற்றத்துடனும், வலுவுடனும் இருக்கவேண்டும்.

பாதம்

பாதத்தை ஊனி நேராக நிற்கவேண்டும். காலைச்சாய்த்தவாறோ அல்லது நொண்டியபடி நடப்பதாகவோ இருக்கக்கூடாது.

உடல்

உடல் சற்று வளைந்து குழியுடன் இருக்கவேண்டும். பின்பகுதி தோள்பட்டையிலிருந்த இடுப்பு வரை நேராகவும் வால் பகுதியில் சற்று இறங்கியும் காணப்படலாம். பின்பகுதியில் அதிகக் குழுி இருத்தல் கூடாது. கழுத்திலிருந்து வால் வரை நீளம் அதிகமாக இருத்தல் நலம்.

விலா எலும்புகள்

இவை நன்கு புடைத்து, ஆடுகள் தாவும் போது கால்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கவேண்டும். வயிறு விலா எலும்பினைத் தாண்டி பெருத்து இருக்கக்கூடாது.

பின் பாகங்கள்

தொடை, பின்னங்கால் இணையுமிடம், இடுப்பு போன்ற பாகங்களுக்கிடையே போதுமான இடைவெளி இருக்கவேண்டும். பின்னங்கால்கள் முன்னே பார்த்து இருக்கவேண்டும்.

பின்னங்கால்கள்

பின்புறக் கால்களின் வளைவுகள் நன்கு இணைந்து எந்த ஒரு தொங்கலுமின்றி வலுவுடன் இருக்கவேண்டும்.

மடி மற்றும் காம்புகள்

மடியானது உடலின் அடியில் கீழே தொங்கியவாறு ஆட்டின் உடல் எடைக்கு ஏற்ற விகிதத்தில் அமைந்திருக்க வேண்டும். பக்கங்களில் இருந்து பார்க்கும் பொது பின்னங்கால்களுக்குச் சற்று முன்புறம் அமைந்திருக்கவேண்டும். பால் கறந்த பின்பு தளர்ந்து விடுவதாக, மென்மையானதாக இருக்கவேண்டும். காம்பு, நாளங்கள் எந்த சுருக்கமுமின்றி இருக்கவேண்டும். சராசரி நீளமுள்ள காம்பும் வயிற்றிலிருந்து நன்கு படர்ந்த நரம்புகளுடன் மடி நன்கு இருக்கவேண்டும்.

தோல் மற்றும் உரோமங்கள்

தோல் மென்மையானதாக வளையக்கூடியதாக தளர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.ஆடுகள் பழங்காலத்திலிருந்தே மலைகள், சமவெளிப் பகுதிகள் பள்ளதாக்குகள், குளிர் மற்றும் பனிப்பிரதேசங்கள் வெப்ப மித, வெப்ப நாடுகள் என அனைத்து வகையான இடங்களிலும் மனிதர்களுக்கு சிறந்த இறைச்சி, பால் மற்றும் உரோமங்களை வழங்கி வருகின்றன. பொதுவாக உலகின் எல்லா இடங்களிலும் வெள்ளாடுகள் பால் தேவைக்காகவும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் வெப்ப மித வெப்பப் பகுதகளில் இறைச்சி, பால் உற்பத்திக்காகவும் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகள் ‘பொவிடே’ என்னும் குடும்பத்தைச் சார்ந்தவை. இவை ‘கேப்ரா’ என்னும் ஜீன்ஸ் வகையைச் சார்ந்தவை. வெள்ளாடுகள் பெரிசியன் நாடுகளில் கிழக்குப் பகுதியைச் சார்ந்தவை.  இவை அறிவியல் பெயர் படி கேப்ரா ஹிர்கஸ், கேப்ரா ஏகாக்ரஸ் என்று அழைக்கப்படுகின்றன.

(ஆதாரம்: டாக்டர். பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை)

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15