அறுவடை

அறுவடைப் பின்சார் தொழில்நுட்பங்கள்

அறுவடை


  • குட்டை இரகங்கள் 11 முதல் 14 மாதங்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். அதுவே நெட்டை வாழை இரகங்களில் கன்றுகள் அறுவடைக்கு வர 14-16 மாதங்கள் ஆகும்.

  • பொதுவாக குலை தள்ளியதிலிருந்து அவை முதிர்ச்சியடைய 90 -120 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

  • உச்சி இலைகள் வாடுதல், காய்களின் நிறம் அடர் பச்சையிலிருந்து வெளிர்பச்சை நிறமாக மாறுதல், கையில் தொட்டவுடன் காய்களின் நுனியில் ஒட்டிக் கொண்டிருக்கும் பூக்கள் விழுந்துவிடுவதை வைத்து வாழைக்குலை முதிர்ச்சியடைந்ததை அறியலாம்.

  • காய்கள் சற்று பருத்து, அதன் அனைத்து பகுதிகள் முழுதும் நிரம்பியிருக்கும். காயினைத் தட்டிப்பார்த்தால் நல்ல ஒலி எழுப்பும்.

அறுவடை செய்யும் முறைகள்


  • மெதுவாக வளரும் இரகங்களில் மேற்புற சீப்பிலிருந்து 30-35 செ.மீ கொண்ணை விட்டும் நீளமாக அறுவடை செய்யப்படுகிறது.

  • அதிக உயரம் கொண்ட இரகங்களில் தண்டினை இலேசாக வெட்டிவிட்டு, குலை அறுவடை செய்பவருக்கு எட்டும் உயரம் வந்தபின் அறுவடை செய்யப்படுகின்றது.

இரகங்கள்

மகசூல் (டன்கள்/எக்டர்)

ரஸ்தாளி

40 -50

கிரான்ட் நைன்

65

சபெட் வேல்சி, செவ்வாழை

45

பூவன்

45 -50

மொந்தன்

30-40

குட்டை கேவன்டிஷ், ரொபஸ்டா

50-60

நேந்திரன்

30 -35

மேலே செல்க

அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள்


சீப்புகளை பிரித்தல்

  • குலையினை மரத்திலிருந்து வெட்டி எடுத்த பின்பு, கூரிய, சுத்தமான வாழைக்காய் வெட்டும் கத்தி கொண்டு தண்டினை ஒட்டி சீப்புகளை நறுக்கி எடுக்க வேண்டும்.

  • சீப்புகளை வெட்டியவுடன் அவற்றின் நீர் (பால்) வடிவதற்காக இலைகளைப் பரப்பி சீப்பின் உச்சி கீழே பார்த்த வண்ணம் வைக்க வேண்டும்.

  • வாழை முடிக்கொத்து நோய் தாக்காமல் இருக்க, சீப்புகளை 0.1% பென்லேட் அல்லது தயபென்டஸோல் கரைசலில் நனைத்து எடுக்க வேண்டும்.

இலைகளின் மீது அடுக்கி வைத்தல்


  • அறுவடை செய்த குலைகளை வெட்டிய கொண்னை அடிப்பகுதியில் இருக்குமாறு வரிசையாக அமைப்பது.

  • இது இரண்டு நிலைகளில் தேவைப்படுகிறது.

  • அறுவடை செய்யும்போது வயலிலேயே குலைகள் இம்முறையில் இலை அடுக்குகளின் மீது வரிசையாக வைக்கப்படுகின்றன.

  • குலை எடுத்துச் செல்லும் வண்டி வருமுன் குலைகளை இவ்வாறு தொடர்ந்து அடுக்கி வைத்தால் நோய்க் காரணி ஒன்றிலிருந்து மற்றொரு குலைக்குப் பரவ வாய்ப்புள்ளது.   

  • மேலும் வண்டிகளில் எடுத்துச் செல்லும் போதும், விற்கப்பட்ட உடன் வியாபாரி பழுக்க வைக்கும் அறைக்குக் கொண்டு செல்லும் முன்பும் இம்முறையில் தான் குலைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

  • இவ்வாறு அமைப்பதால் காய்களில் பூச்சியினாலோ, கையாளும் முறையினாலோ காயங்கள் ஏற்பட்டோ அதன் வழியே நோய் பரப்பம் கிருமிகள் வயலிலிருந்து அல்லது அப்பகுதிகளிலிருந்து தொற்றிக் கொள்ளும் ஆபத்து உள்ளது.

பெட்டிகளில் அடுக்குதல்


  • பெட்டிகளில் வாழைச் சீப்புகளை அடுக்கும் போது, இரு கிடைமட்ட வரிசைகளில் காய்களின் காம்பு நுனி பெட்டியின் ஓரத்திலும், காய்நுனி மத்தியப் பகுதியிலும் இருக்குமாறு அமைக்க வேண்டும். 

  • ஒரு வரிசையாக வைக்கும்போது, சீப்பின் காம்பு நுனி அடியிலும், காய்கள் மேற்புறம் அமையுமாறு செங்குத்தாக அமைக்கவும்.

  • மெத்தை விரிப்பு அல்லது கிராப்ட் பேப்பர் போன்றவை அடிபடாமல் இருக்க பெட்டியின் (காய்களின்) அடிப்பகுதியில் வைக்க வேண்டும். காய்களின் மீது 100 காஜ் தடிமன் கொண்ட அல்லது குறைந்த அடர்வு கொண்ட பாலி எத்திலீன் காகிதம் கொண்டு மூடுவதால் மிதமான தட்பவெப்பநிலை கிடைக்க ஏதுவாகும்.

காய்களை குளிர்வித்தல்


  • அதிக தூரம் எடுத்துச் செல்லக் கூடிய மற்றும் ஏற்றுமதித்தர வாழைக்காய்களை அதன் சேமிப்புக்காலத்தை அதிகரிக்க குளிர்விக்க வேண்டும்.

  • குலையினை அறுவடை செய்த 10 -12 மணி நேரத்தில் குளிர்விக்க வேண்டும்.

  • பெட்டிகளில் அடைக்கப்பட்ட காய்களை 13º செல்சியஸ் வெப்பநிலையும் 85 -90% ஈரப்பதம் கொண்ட காற்றை வேகமாகச் செலுத்துவதன் மூலம் குளிர்விக்கலாம்.

  • வயல் வெப்பநிலையான 30º முதல் 35º செ வெப்பநிலையிலிருந்து 13º செ குளிர்விக்கும் வெப்பநிலைக்கு வாழைக் காய்களைக் கொண்டுவர குறைந்தது 6-8 மணி நேரம் ஆகும்.

  • சீப்புகள் அடுக்கப்பட்டட பெட்டிகளை உடனே சேமித்து வைக்க குளிர்விக்கும் அறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

சேமித்து வைத்தல்


  • அறுவடைக்குரிய அனைத்து வழிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டால் அவ்வாழைக் காய்களை கப்பல் வழியே ஏற்றுமதி செய்யலாம்.

  • அதற்கு சேமிப்பு அறையில் 13º செ வெப்பநிலை மற்றும் 85 -95% ஈரப்பதமும் வேண்டும்.

  • வெப்பநிலை, 13º செ.க்குக் குறைந்தால் மேற்புறத் தோலில் நிறமாற்றம், நிறம் குறைதல், பழுக்காமல் போதல், சதைப்பகுதி பழுப்பு நிறமாதல் போன்ற குளிர்விப்புக் காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

  • சேமிப்பு வெப்பநிலையான 13º செ என்பது இரகத்திற்கேற்ப 3 முதல் 4 வாரங்களாக மாறுபடும்.

  • குறைந்த வெப்பநிலையுடன் கூடிய கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் சேமித்து வைப்பதன் மூலம் வாழையின் சேமிப்புக் காலத்தை மேலும் அதிகரிக்கலாம்.

  • ரொபஸ்டா இரக வாழையானது 5% ஆக்ஸிஜன் + 5% கார்பன்டை ஆக்ஸைடு @ 12º செ முதல் 13º செ வெப்பநிலையில் அறுவடை செய்தபின் 4 முதல் 6 நாட்கள் வைத்திருப்பதால் அதன் சேமிப்புக் காலம் 8 வாரங்கள் வரை நீட்டிக்கப்படுகின்றது.

பழுக்க வைத்தல்


  • பெட்டி அல்லது பிளாஸ்டிக் கிரேட்களில் வைக்கப்பட்டிருக்கும் வாழைக் காய்கள் பின்பு பழுக்கும் அறைக்கு மாற்றப்படுகின்றன. குறைந்த வெப்பநிலை அதன் பழுக்கும் திறனை அதிகரிக்கும்.

  • ஒளி மற்றும் காற்றுபுகா வண்ணம் இறுக்கமாக மூடப்பட்ட அறையில் 160 முதல் 180º செ வெப்பநிலையும் 85 - 90% ஈரப்பதமும் இருக்குமாறு பராமரிக்கப்பட வேண்டும்.

  • 100 பி.பி. எம் (0.01%) எத்திலீனை அந்த அறைக்குள் செலுத்தவும்.

  • காயினைப் பழுக்க வைப்பதில் எத்திலீன் ஒரு வினையூக்கியாகச் செயல்படுகின்றது.

  • 24 மணி நேரம் இவ்வாறு மூடி வைக்கப்பட்ட பின் அறையினைத் திறந்து விடவும். இதனால் பழுக்கும் முதல் நிலையில் வெளி வரும் எத்திலீன் வாயுவும், கார்பன் – டை – ஆக்ஸைடு வாயுவையும் அறையை விட்டு வெளியேற்றவேண்டும். பின்பு அடுத்த 3-4 நாட்களுக்கு அறையின் வெப்பநிலை 8º செ லிருந்து 15º செ க்கு குறைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.  

விற்பனைக்கு எடுத்துச் செல்லுதல்


  • அறுவடை செய்யப்பட்ட குலைகள் மனிதர்களின் மூலமோ, குதிரை/ மாட்டு வண்டிகள் மூலமோ அல்லது லாரி போன்ற கனரக வாகனங்களின் மூலமோ எடுத்துச் செல்லப்படுகிறது. பொதுவாக மாநிலங்களுக்குள் விற்பனை செய்வதாயின் லாரி அல்லது இரயில் வேகன்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

  • மொத்த விற்பனையாளர்களால் வேகன்களைச் சரியான நேரத்தில் ஏற்பாடு செய்ய முடியாததால் இந்தியாவில் பெரும்பாலும் லாரி வழி எடுத்துச் செல்லும் முறையே பின்பற்றப்படுகின்றது.

மேலே செல்க

வாழையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள்


முன்னுரை

  • பெரும்பாலும் வாழைப்பழ அத்தி செய்ய பழுத்த பழங்களைப் பயன்படுத்தினாலும், பழுக்காத காய்களிலிருந்தும் அதன் தோலினை நீக்கிவிட்டு அதனைத் துண்டுகளாக்கி உலரவைத்து வாழைப்பழ அத்தி தயாரிக்கலாம்.

  • நல்ல சூரிய ஒளி உள்ள பகுதிகளில் சூரிய ஒளியில் உலர வைக்கலாம் எனினும் தீயின் மீதும், ஓவன்களின் மீதும் வைத்து துண்டுகள் உலர்த்தபடுகின்றது.

  • வாழையைப் பதப்படுத்தி அதிலிருந்து அத்தி பொடி தயாரிக்கும் பழங்கால தொழில்நுட்பங்கள் தற்போது பெரிய தொழிற்சாலைகளில் பின்பற்றப்படுகின்றது.

  • பொதுவாக நல்ல தரமான பொருட்களைத் தயாரிக்க வாழைக் குலைகள் பச்சையாக இருக்கும் போதே அறுவடை செய்யப்பட்டு, பதப்படுத்தும் தொழிற்சாலையில் பழுக்க வைக்கப்படுகிறது. பழுத்த குலைகளிலிருந்து சீப்புகள் வெட்டியவுடன் கழுவப்பட்டு அதன் அழுக்கு, படிவுகள் நீக்கப்பட்ட பின் தோல் உரிக்கப்படுகிறது.

  • பழுத்த பழங்கள் எளிதில் சேதமடைந்து விடுவதால் உள்ளூர் விற்பனைக்கு பச்சை வாழைக் காய்களே அதிகம் உபயோகப்படுத்தப்படுகின்றன. பழுத்த பழங்கள் குறைந்த தூரம் எடுத்துச் சென்றாலும் அதிகளவில் சேதம் அடைந்து வீணாகின்றன.

வாழைப் பொருட்கள்


பழச்சீவல்கள்

  • பழச்சீவல்களைப் பதப்படுத்த பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன.

  • பழுக்க ஆரம்பிக்கும் நிலையிலேயே நல்ல தரமான வாழைப்பழச் சீவல்கள் எடுக்கப்படுகின்றன.

  • 25º பிரிக்ஸ் மற்றும் 4.2 அமிலகாரத் தன்மை (அ.கா) கொண்ட திரவத்துடன் மற்றும் வாழைப் பழத்தின் கெட்டித்தன்மையை அதிகப்படுத்தும் காரணிகளான கால்சியம் குளோரைடு (0.2%) அல்லது கால்சியம் லாக்டேட் (0.5%) போன்ற வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுகின்றது.

  • ஓரளவு ஈரப்பதமுள்ள வாழைப் பொருட்களை பாலித்தீன் பைகளில் வைத்து அடைத்து விற்பதற்கேற்ற எளிய முறை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

  • வாழைப்பழச் சீவல்களை கொதிநீரில் நனைத்து எடுத்து, கிளிசரால் (42.5%), சுக்ரோஸ் (14.85 %), பொட்டாசியம் சார்பேட் (0.45%) மற்றம் பொட்டாசியம் மெட்டாசல்பைடு (0.2%) கலவையில் 90º செ வெப்பநிலையில் 3 நிமிடம் வைத்திருப்பதால் 30.2% ஈரப்பதம் கிடைக்கிறது.


வாழைப்பழ பவுடர்


  • நன்கு பழுத்த வாழைப்பழத்தின் சதைப்பகுதியை ஒரு வெட்டும் கருவி வழியே அனுப்பிப் பின் கூழ்ம மில் வழியே செலுத்தப்பட்டு வெளிவரும்போது கூழ்மப் பசைபோல் கிடைக்கின்றது.

  • கடைசியாக வெளிவரும் பொருளில் 1 (அ) 2% சோடியம் மெட்டாசல்பைட் கரைசல் சேர்க்கப்பட்டு பொருளின் நிறத்தை அதிகரிக்கலாம்.

  • தெளிப்பான் அல்லது உலர்த்தும் உருளை பயன்படுத்தப்பட்டு, சரியான பதம் வந்தவுடன் இறக்கப்படுகிறது.

  • தெளிப்பான் ஆனது மணிக்கு 8 - 11% பழங்களிலிருந்து 70 கிலோ வாழைப்பழ பவுடரை உற்பத்தி செய்கிறது. இதுவே உலர்த்தும் உருளையானது 13% வரை உற்பத்தி செய்து தருகின்றது.

  • இரண்டாவது முறையில் ஈரப்பதமானது 8 -12 சதமாகக் குறைக்கப்பட்டு பின் சுரங்கம் அல்லது கேபினட் உலர்த்தியில் 60ºசெ வெப்பநிலையில் வைத்து உலர்த்தி 2 சதமாகக் குறைக்கப்படுகின்றது.

வாழைக்காய் சிப்ஸ்


  • தோல் உரிக்காத வாழைக் காய்களை மிக மெல்லிய சீவல்களாக்கி, உடனே 1% சோடியம் (அ) பொட்டாசியம் பை சல்பைட்டு கரைசலில் நனைத்து, பின் எண்ணெயில் 180 முதல் 200ºசெ வெப்பநிலையில் பொரித்து எடுக்கவும்.

  • தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்ப் பொடி சேர்த்து கலந்து விடவும்.

  • மற்றொரு முறையில், சீவல்களை எண்ணெயிலிடும் முன் காய வைத்து, உப்பினை எண்ணெய்யுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

வாழைப்பழ பானங்கள்


  • வாழைப்பழங்களின் தோலை உரித்துவிட்டு, 2 நிமிடங்கள் ஆவயில் வேகவைத்துப் பின் கூழ்மமாக்கி, அதில் 1 கிலோ கூழ்மத்திற்கு 2 கி பெக்டோலைட்டிக் என்ஸைம் என்ற அளவில் கலந்து வைக்கவும். இக்கலவையை 60 முதல் 65º செ வெப்பநிலையில் 2.7 முதல் 5.5 அமிலகாரத் தன்மையில் 30 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

  • மற்றோர் எளிய முறையில் பெக்டினை நீக்க எலுமிச்சை உபயோகிக்கப்படுகிறது. கால்சியம் ஆக்ஸைடினை (2.5%) கூழ்மத்துடன் கலந்து 15 நிமிடம் வைத்திருந்து பின்பு சமநிலைப்படுத்தினால் 88% தூய பானம் கிடைக்கும். 

  • மற்றுமொரு முறையில் வாழைப்பழ சதைப்பகுதியை அமிலத்தன்மையுடன் ஆவியில் வேகவைத்து, அதன் என்ஸைம்களைச் செயலிழக்கச் செய்ய மெர்குரியுடன் வெற்றிடத்தில் வைக்கப்படுகிறது. பின்ப இப்பசை போன்ற கலவை எடுத்துச் செல்லப்பட்டு 1: 3 என்ற விகிதத்தில் நீர் கலந்து அமில காரத் தன்மை, 4.2 முதல் 4.3 அளவு இருக்குமாறு பராமரிக்கப்படுகிறது. அதன்பின்பு இக்கலவை சிட்ரிக் அமிலம் கலந்து மையவிலக்கு முறையில் பிரிக்கப்பட்டு, சுவையூட்டப்படுகிறது.

வாழைப்பழ ஜாம்


  • வாழைப்பழங்களின் தோலை எடுத்துவிட்டு நன்கு மசித்துக் கூழாக்க வேண்டும். இக்கூழில் சமஅளவு சர்ககரை மற்றும் தேவையான அளவு பெக்டின் சேர்த்து, பழக்கூழ் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, வாணலியில் ஒட்டாத பதம் வரும் வரை கிளறவும்.

  • தொடர்ந்து கிளறிக் கொண்டே, சிட்ரிக் அமிலத்தை சிறது சிறிதாக சேர்க்க வேண்டும். பின் பழக்கூட்ட எசன்ஸ் சேர்த்து, சூடு ஆறியவுடன், ஈரம் இல்லாத, அதேசமயம் கொதிநீரில் சுத்தம் செய்யப்பட்ட பாட்டில்களில் அடைத்து சேமித்து வைக்கலாம். 

  • பூவன் கற்பூரவல்லி இரகங்கள் ஜாம் தயாரிக்க மிகவும் ஏற்றது.

  • மற்றொரு முறையில், பழக்கூழுடன் அமிலமாக்கி, வெற்றிடத்தில் நீராவி கொண்டு நேர்த்தி செய்து நொதிகளை செயலிழக்கச் செய்யவேண்டும். பின் இந்த பழக்கூழ் திருகு அழுத்திக்கு கொண்டு செல்லப்பட்டு, 1:3 அளவு நீருடன் சேர்த்து நீர்க்க செய்யவேண்டும். கார அமிலத் தன்மையை சரி செய்ய சிட்ரிக் அமிலத்தை சேர்த்து 4.2 லிருந்து 4.3 ஆக மாற்றவேண்டும். இவ்வாறு கிடைத்த கரைசலை மைய விலக்கிக்கு கொண்டு சென்று, பின் இனிப்பு சுவை தரப்படுகிறது.

வாழைப்பழ பாகு (ஜெல்லி)


  • சுத்தம் செய்யப்பட்ட வாழைப் பழத்தினை சிறு துண்டுகளாக நறுக்கி 200 கி எடையுள்ள துண்டுகளை எடுத்து அவை மூழ்குமாறு நீரில் சேர்த்து, மிதமான சூட்டில் 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கப்படுகின்றது.

  • இதை ஒரு மல்லின் துணி கொண்டு சுத்தமான கலவை கிடைக்குமாறு வடிக்கப்படுகிறது.

  • கிடைத்த கலவையுடன் அளவுக்கேற்றவாறு 450 கி சர்க்கரை மற்றும் 1% சிட்ரிக் அமிலம் சேர்த்து கொதிக்க வைக்கப்படுகின்றது."

வாழைப்பழப் பிழிசாறு


  • வாழைப்பழ சதையுடன், பெக்டினேஸ் (1கி /1 மி.கி) சேர்த்து, 5 மணி நேரம் ஊறவைக்கப்படுகிறது

  • 1 கிலோ பழத்துடன் 2 மி.கி சர்க்கரை மற்றும் 1 லிட்டர் நீர், 10 கி சிட்ரிக் அமிலம் சேர்த்து கொதிக்க வைக்கப்படுகிறது. பின்பு இக்கலவை வடிக்கப்படுகிறது.

  • கிடைத்த தெளிந்த கரைசலுடன், 7 மி.கி பொட்டாசியம் மெட்டாசல்பைட் சேர்த்து 1:3 என்ற விகிதத்தில் கரைசல் மற்றும் நீர் கலந்து பாட்டிலில் அடைக்கப்படுகிறது.

வாழைப்பழச் சாறு


  • வாழைப் பழத்தினை தோலுரித்து மெல்லியதாக சீவிக் கொள்ளலாம்.

  • ஒவ்வொரு துண்டிற்கும் ஒன்றரை பங்கு நீரை அளந்து ஊற்றவும்.

  • பழத்தின் அளவைப் பொறுத்து 30 நிமிடங்களோ அல்லது அதற்கும் மேலாகவோ கொதிக்க வைக்கப்படுகின்றது.

  • வடிகட்டவும்.

  • சர்க்கரை சேர்க்கவும் ( 1 பங்கு சர்க்கரையுடன் 3 பங்கு கரைசல்)    

  • நன்கு கலக்கி கொதிக்க வைக்கவும், சர்க்கரை அளவு 22 -24 பிரிக்ஸ் அளவுக்குள் இருக்க வேண்டும்.

  • குளிர வைக்கவும்.

  • சுத்தமான கண்ணாடி ஜாடியினுள் இடவும்.

  • ஈஸ்ட் கலந்து வைக்கவும் (40 லி கொதிக்க வைத்து ஆறிய சாறுடன், 1டேபிள்ஸ்பூன் சிவப்பு நட்சத்திர ஈஸ்ட் கலந்து கொள்ளவும்).

வாழைத்தண்டு மிட்டாய்


  • அறுவடை செய்யப்பட்ட பின் உள்ள வாழை மரத்தின் நடுத்தண்டினை தேர்ந்தெடுக்கவும்.  

  • மேல்தண்டை நீக்கிவிட்டு வட்ட வடிவ மெல்லிய தடிமன் கொண்ட தண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  • 1 டீஸ்பூன் சிட்ரிக் அமிலம் + ½ டீஸ்பூன் பொட்டாசியம் மெட்டாசல்பைடு கலந்த 2 லி நீரில் இத்துண்டுகளை நனைத்து வைப்பதால் அதன் நிறம் மாறாமல் பாதுகாக்கப்படுகிறது.

  • இத்துண்டுகளை வேகவிட்டு, ஆறவைத்து முள் கரண்டி கொண்டு இலேசாக ஆங்காங்கு துளையிடவும்.

  • 3 கிலோ சர்க்கரையை எடுத்து கொண்டு, ஒரு அடுக்கில் துண்டுகளையும் அதன்மேல் ஒரு வரிசை சர்க்கரை என்றவாறு வரிசையாக வைத்து ஒரு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். அடுத்த நாள் அதில் பானம் வடிந்திருக்கும் பின்பு மேலும் 1கி.கி சர்க்கரை சேர்த்து ஒற்றை நூல் பதம் வரும் வரை சூடு செய்யவும்.

  • மீண்டும் ஒரு இரவு அதே போல் வைத்து அடுத்த நாள் சரியான பதம் வரும் வரை காய்ச்சவும். பின்பு கரைசலை வடிகட்டவும். இப்போது மிட்டாய் தயார்.

வாழைப்பழ வடிசாறு


  • தோலுரிக்கப்பட்ட பழுத்த பழங்களின் சதைப்பகுதியை பதப்படுத்த கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு முறை பயன்படுத்தப்படுகிறது.
    1. வேக வைத்து சுத்தப்படுத்துதல்
    2. அமிலமாக்கல் மற்றும் வேகவைத்தல்
    3. விரைவில் உறையவைத்தல்

  • பெரும்பாலான வாழைப்பழ வடிசாறு தயாரிக்க வேகவைத்து சுத்தப்படுத்தும் முறையே பின்ப்பற்றப்படுகின்றது. தோலுரிக்கப்பட்ட பழுத்த பழங்கள் ஒரு தட்டின் வழியே அதிக விசையுடன் பம்பில் செல்லத்தப்படுகின்றன. தட்டில் ¼ அங்குல அளவு துளைகள் இடப்பட்டிருக்கும். பின்பு இவை ஒரு தன்மையாக்கி மற்றும் மையவிலக்கு விசையை பற்றிச் சுழலும் உலர்த்தி ஆகியவற்றினைக் கடந்து 29 அங்குல வெற்றிடப் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. இங்கு காற்று நீக்கப்படுவதால் ஆக்ஸிஜனால் நிறம் மாறுவது தடுக்கப்படுகிறது.

  • இந்த வடிசாறு வரிசையாக அமைக்கப்பட்ட மேற்புற சூடுபடுத்தும் கலன்கள் வழியே நீராவியினால் சுத்தப்படுத்தப்பட்டு, பின்பு பகுதி குளிர்விக்கப்பட்டு இறுதியாக வெப்பநிலை நிரப்பும் இடத்திற்கு எடுத்துவரப் பயன்படுகின்றது.

  • சுத்தம் செய்யப்பட்ட வடிசாறு, பின்பு நீராவி வெப்பநிலை அளவு சூடு கொண்ட கலன்களில் அடைக்கப்படுகின்றன.

வாழைநார்


  • தென்னிந்தியாவில் காலங்காலமாக வாழைப் பயிரானது நன்கு பயிரிடப்பட்டு வருகின்றது. குலையுடன் இலைகளும் அறுவடை செய்யப்பட்ட பின் தண்டானது வீணாக பயன்படாமல் போனது. இத்தண்டிலிருந்து நார் பிரித்தெடுக்கப்படுகிறது. அடிப்பகுதியை தோலுரித்துவிட்டு அதன் பழுப்பு – பச்சை நிற தோலினை விட்டு விட வேண்டும். மீதமுள்ள சுத்தமான, வெள்ளை நிறப்பகுதி பதப்படுத்தப்பட்டு நார் பெறப்படுகிறது.

  • வாழை நார் 62% செல்லுலோஸ், 29% லிக்னின், 3% ஹெமிசெல்லுலோஸ், 2% ரெக்டின், 4% பிற பொருட்கள் ஆகியவற்றால் ஆனது. வாழை நாரிலிருந்து துணிகள், பைகள், பல்வேறு வகையான விரிப்புகள், அறை அலங்காரம், ஜன்னல் திரைகள், படுதாக்கள், மேஜை விளக்குகள் போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

  • செயற்கை நார்கள் அதிக விலையானாலும், உடல் ஒவ்வாமை விளைவிப்பதாலும் தற்போது வாழை நார் போன்ற இயற்கை நார்களின் தேவை அதிகரித்துள்ளது.

  • வாழை நாரில் இரசாயனங்கள் இல்லை. சுற்றுச் சூழலுக்கு உகந்தது. இது கிரீஸ் புகாவண்ணம், நீர் மற்றும் நெருப்பை எதிர்த்து நிறகக் கூடியது. மேலும் நுண்ணியிரிகளால் சிதைக்கப்படக் கூடியது.

  • மேலும் நுண்ணியிரிகளால் சிதைக்கப்படக் கூடியது.

  • கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கதவு மற்றும் மேஜை விரிப்புகள், பூஜை தியானம் செய்யும் விரிப்புகள் தயாரிக்க வாழை நார் மிகவும் ஏற்றது. வாழை நாரினால் தயாரிக்கப்படும் காகிதங்களுக்கு ஐரோப்பா உட்பட 25 நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

  • 100 சதம் இரசாயனமற்ற திசு பேப்பர், வடிகாகிதம், காகிதப்பை, வாழ்த்து அட்டைகள், திருமண அழைப்பிதழ்கள், பைகள், நாற்றங்கால் பைகள், வரை படத் தாள்கள், அலங்கார தாள்கள், பத்திர தாள்கள், பேப்பரினால் செய்யப்பட்ட பேனா வைக்கும் தாங்கிகள், மேஜை அலங்காரப் பொருட்கள் போன்ற பல்வேறு வாழை நாரினால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு நல்ல ச்நதை வாய்ப்புகள் உள்ளன.

நெசவு பொருட்கள்


  • நெசவு பொருட்கள் உற்பத்திக்கு ஏற்ற தரமான நார்களை வாழை மரத்திலிருந்து பெறலாம்.

  • ஜப்பானில் 13ம் நூற்றாண்டிலிருந்தே துணி நெய்வதற்கும், வீட்டு உபயோகத்திற்கும் என்று வாழை பயிரிட்டு வந்தனர். ஜப்பானிய முறையில் இலைகள், தண்டுகள் போன்றவை நாரின் மென்தன்மை பெற வேண்டி வெட்டிப்பட்டன.

  • அறுவடை செய்யப்பட்ட தண்டினை முதலில் நீரில் கொதிக்க வைத்து நூலிழை பின்னுவதற்கான சாயத்தில் நனைக்கப்படுகின்றது.

  • நேபாளிய முறையில் மென்மையான மேற்தண்டுக்குப் பதில் அடித் தண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறப் பூச்சு, உயர்த்துதல் மற்றும் நார் பிரித்தல் போன்றவை இயந்திர உதவியுடன் செயல்படுகின்றன. அதன் பிறகு நார்கள் பட்டு போன்ற தன்மையைப் பெற காட்மாண்டு பள்ளத்திற்கு அனுப்பப்படுகின்றன. இவை கம்பளிகளின் தயாரிப்பில் யோகப்படுத்தப்படுகின்றன. இக்கம்பளி நெய்யவும் நார்கள், நேபாளிய கைகளால் நார் பிரிக்கும் முறைகளில் பிரித்தெடுக்கப்பட்டு அக்மார்க் என சான்றளிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

வாழை நார்க் காகிதம்          


  • வாழை நாரானது காகிதத் தயாரிப்பில் பயன்படுகின்றது.

  • வாழை நார்க் காகிதம் இரண்டு விதங்களில் உபயோகிக்கப்படுகின்றது. வாழைத் தண்டிலிருந்து பெறப்பட்ட நாரின் காகிதம் பெரும்பாலும் கலைப் பயன்பாட்டிற்கு பன்படுகிறது. நார்கள் கைகளினாலோ அல்லது இயந்திர முறையிலோ பிரித்தெடுக்கப்படலாம்.

வாழைப்பழ அத்தி


  • நன்கு பழுத்த கேவன்டிஷ் இரக வாழையைத் தெரிவு செய்து தோலுரித்துக் கொள்ளவும்.

  • 30 நிமிடங்கள் நீருடன் ¾ பங்கு சர்க்கரை சேர்த்து (நாட்டுச் சர்க்கரை சிறந்தது) கொதிக்கவிடவும்.

  • ஒரு நிமிடம் வேக வைக்கவும்.

  • அடுப்பிலிருந்து இறக்கிய சாறில் பழத்தினை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

  • பழங்களை எடுத்து உலர்த்தவும்.

  • மீண்டும் ¼ பங்கு சர்க்கரையை அச்சாறில் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

  • வாழையைச் சேர்த்து 1 நிமிடம் வேகவைக்கவும்.

  • 3 நாட்கள் தொடர்ந்து செறிவூட்டப்பட்ட சாறு (பாகு)டன் 5 முதல் 7 நிமிடம் வரை காய்ச்சவும்.

  • பழத்தினை நனைக்கவும். பாகு நல்ல செறிவினை அடைந்தபின் அதில் பழத்தினை 1 வாரத்திற்கு போட்டு ஊறவைப்பதன் மூலம் அவை நன்கு நனைந்து கொழுத்து விடுகின்றன.

  • சாறினை வடித்து விட்டுப் பின் பழங்களை உலர்த்தவும். இதுவே வாழைப்பழ அத்தியாகும்.

  • அத்தி விரலில் ஒட்டாத அளவு பதம் வந்தவுடன் அதனை எடுத்து உண்ணலாம்.

மேலே செல்க