முதல் பக்கம் தொடர்புக்கு



கன்று பராமரிப்பு


    கன்று பராமரிப்பு
 
கன்று ஈனும் போது மாடுகள் மற்றும் கன்றுகள் பராமரிப்பு  
  • கன்று ஈனுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக மாடுகளை கன்று ஈனும் கொட்டகையில் தனியாகப் பராமரிக்கவேண்டும்.
  • கன்று ஈனும் உத்தேச காலத்திற்கு 1-2 வாரங்களுக்கு முன்பாக சினை மாடுகளை கன்று ஈனும் கொட்டகைக்கு மாற்றிவிட வேண்டும்.
  • பண்ணையில் தேவைப்படும் கன்று ஈனும் கொட்டகைகளின் எண்ணிக்கை, பண்ணையிலுள்ள இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் மாடுகள் மற்றும் கிடேரிகளின் எண்ணிக்கையைப் பொருத்தது. அதாவது மாடுகள் மற்றும் கிடேரிகளின் எண்ணிக்கையில் 5 % இருக்கவேண்டும்.
  • கன்று ஈனும் கால கட்டத்தில் மாடுகளுக்குப் போதுமான அளவு தண்ணீர், மலமிளக்கும்தன்மை கொண்ட தீவனம், போதுமான படுக்கும் வசதிகள் போன்றவை இருக்கவேண்டும்.
  • கிருமி நாசினிக் கரைசல்களான டிங்சர் ஐயோடின், போவிடோன் அயோடின் மற்றும் நூல், கத்தரிக்கோல், உராய்வுத் தன்மையுடைய பாரபின் எண்ணெய்,தாவர எண்ணெய்கள், கன்று ஈனும் போது கன்றினை வெளியே இழுக்கப் பயன்படும் கொக்கிகள்,கயிறு, ரம்பம் , அவசரத் தேவைக்கு உபயோகப்படுத்தப்படும் மருந்துகள், லைட், துண்டு,சோப்பு, வாளிகள், கோட் போன்றவை கன்று ஈனும் கொட்டகையில் எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
  • கிராமங்களில் ஒன்று அல்லது இரண்டு மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகள் கன்று ஈனுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே சினை மாடுகளைத் தனிக் கொட்டகையில்  பார்வையில் இருக்குமாறு கட்டி வைத்துப் பராமரிக்கவேண்டும்.
  • சினை மாடுகள் அவற்றைக் கடிக்கும் விலங்குகளிடமிருந்து தனியாக கட்டி வைத்துப் பராமரிக்கப்படவேண்டும். கன்று ஈனும் கொட்டகையின் தரை சுத்தமாகவும், உலர்வாகவும்,  சுத்தமான புல் பரப்பியும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • சினை மாடுகள் அவை நன்றாக படுக்கவும், நடப்பதற்கும் ஏற்ற வகையில் அவை கட்டப்படும் கயிற்றினை நீளமாக விட்டுக் கட்டவேண்டும். மேலும் அவை இரவு நேரத்தில் கன்று ஈன்ற பிறகு கன்றுகளைக் கவனிப்பதற்கும் இது வசதியாக இருக்கும்.
  • மாடுகளில் கன்று வீச்சு ஏற்பட்டால் கன்றுகளை நன்றாக ஆராய்ந்து, அவற்றின் வயது, அவற்றின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றைக் கவனித்து கன்று வீச்சு ஏற்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும்.
  • கன்று வீச்சு மாடுகளில் ஏற்பட்டால் கன்று ஈனும் கொட்டகையினை 4 % காஸ்டிக் சோடாக் கரைசல் கொண்டு சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யலாம்.

  கன்று ஈனும் கொட்டகை
  • இது கன்று ஈனுவதற்கென தனியாக வடிவமைக்கப்பட்ட கொட்டகையாகும். இது 3 மீ x 4 மீ (12 சதுர மீட்டர்) அளவில் நல்ல காற்றோட்டம் இருக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இக் கொட்டகையில் போதுமான அளவு வெளிச்சமும் இருக்கவேண்டும்.
  • இக்கொட்டகை கன்று மற்றும் தாய் மாட்டிற்கு தனிமையான பாதுகாப்பான சூழ்நிலையினை அளிப்பதுடன் மற்ற மாடுகளால் ஏற்படுத்தப்படும் தொந்தரவுகளிலிருந்தும் கன்றுக்கும் தாய் மாட்டிற்கும் பாதுகாப்பு அளிக்கிறது.
  • கன்று ஈனும் கொட்டகைக்கு அருகிலேயே பணியாளர்களின் வீடுகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • கன்று ஈனுவது இரவு நேரத்தில் ஏற்பட்டால் மாடுகளைக் கவனிக்க பணியாளர்களின் வீடுகள் கன்று ஈனும் கொட்டகைக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.

கன்று ஈன்றவுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலாண்மை முறைகள்  
  • மாடுகளின் மடி மற்றும் பின்னங்கால் பகுதிகளை பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த வெதுவெதுப்பான நீரைக் கொண்டு சுத்தம் செய்து பிறகு சுத்தமான துணியால் துடைக்கவேண்டும்.
  • மடியில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க கன்று ஈன்ற மாட்டில் பாலைக் கறந்து விட வேண்டும்.
  • கன்று ஈன்ற நாளிலேயே கன்றினை மாடுகளிடமிருந்து பிரிக்காவிடில், கன்றினை மாடுகளுடன் கன்று ஈன்று 7-10 நாட்களுக்கு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • இல்லையேல் கன்றுகளை உடனடியாக கன்று ஈனும் கொட்டகையிலிருந்து வெளியேற்றி தனியாகப் பராமரிக்கவேண்டும்.
  • கன்றின் மீது தாய் மாடு அதிகமாக பாசத்துடன் காணப்பட்டால் மாட்டின் கண்களைக் கட்டி விட்டு கன்றினை பிரித்து வெளியேற்றி விட வேண்டும்.
  • கன்று ஈன்ற 12 மணி நேரத்திற்குள் மாட்டின் கர்ப்பப்பையிலிருந்து நஞ்சுகொடி வெளியேற்றப்பட வேண்டும். இல்லையேல் நஞ்சுகொடியினை கையால் தகுந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு எடுத்து விட வேண்டும்.
  • நஞ்சு கொடியினை கையால் எடுப்பதற்கு முன்பாக மாடுகளுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும்.
  • காய்ச்சல் இருந்தால் மாடுகளுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளித்து காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் மாடுகளுக்கு மற்ற இதர நோய்த் தொற்றுகள் ஏற்படலாம்.
  • மாடுகள் வளர்சிதை மாற்றக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டு ஏதேனும் உற்பத்திக் குறைவு நோய்களான பால் காய்ச்சல், மெக்னீசியக் குறைபாடு, கீட்டோசிஸ், அசிடோசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனவா என்று பரிசோதித்து அதற்கென தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும்.
top

     கன்றுகளுக்கு சீம்பால் அளித்தல்
  • கன்று ஈன்றவுடன் மாட்டின் மடியிலிருந்து சுரக்கும் முதல் பால் சீம்பாலாகும்.
  • சீம்பாலில் காமாகுளோபுலின்கள் எனப்படும் நோய் எதிர்ப்பு புரதங்கள் அதிக அளவு உள்ளன. இவை மாட்டினை ஏற்கெனவே பாதித்த நோய்க்கிருமிகளுக்கு எதிராக மாட்டின் உடலில் உருவாகி பால் வழியாக கன்றுகளுக்கு சென்று கன்றுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கின்றன.
  • சீம்பாலிலுள்ள நோய் எதிர்ப்பு புரதங்களை சீம்பால் வழியாக கன்றுகள் எடுத்துக்கொள்ளும்போது,  கன்றுகள் அவைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினை பெறுகின்றன.
  • சீம்பால் ஒரு மலமிளக்கியாக செயல்பட்டு முதன் முதலில் கன்றுவின் குடலிலிருந்து சாணத்தினை வெளியேற்றவும் உதவுகிறது.
  • கன்று பிறந்து 15-30 நிமிடங்களுக்குள்ளாக கன்றுகளுக்கு முதல் தவணை சீம்பாலை அளித்து விடுவது மிகவும் நல்லது.  இரண்டாம் தவணையாக கன்று பிறந்த 10-12 மணி நேரத்திற்குள் சீம்பாலை அளிக்கவேண்டும்.
  • கன்று பிறந்து அரை மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் கன்றின் உடல் எடையில் 5-8% சீம்பாலை அளிக்கவேண்டும். பிறகு 2, 3ம் நாள் வயதில் அதன் உடல் எடையில் 10% சீம்பாலைக் கொடுக்கவேண்டும்.

  சீம்பால் மற்றும் பாலில் உள்ள சத்துகள்
  • சீம்பாலில் சாதாரண பாலை விட 7 மடங்கு புரதச்சத்து அதிகமாகவும், மொத்த திட சத்துகள் இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது. எனவே    சீம்பால் கன்றின் தொடக்க கால வயதில் புரதச்சத்து மற்றும் இதர சத்துகளையும் அளிக்கிறது.
  •  நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் முக்கிய காரணிகளான தாது உப்புகளும், வைட்டமின் ‘ஏ’  சத்தும் சீம்பாலில் அதிக அளவு உள்ளது. இவற்றை சீம்பால் மூலமாக கன்று உட்கொள்ளும் போது கன்றின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது.
  • சீம்பால் ஒரு மலமிளக்கியாகச் செயல்பட்டு கன்றுகளின் முதல் மலத்தினை வெளியேற்றுவதற்கு உதவி புரிகிறது.
  • மாடுகளைப் பொதுவாகத் தாக்கும் தொற்று நோய்கள் மற்றும் நுண்ணுயிரி நோய்களுக்கு எதிராக மாடுகளுக்கு தடுப்பூசி அளிப்பதால் அவற்றுக்கு எதிராக மாடுகளின் உடலில் நோய் எதிர்ப்புப் புரதங்கள் உருவாக்கப்பட்டு அது சீம்பால் மூலம் கன்றுகளுக்கு கிடைப்பதற்கு வழி வகை செய்யலாம்.
  • வயது முதிர்ந்த மாடுகள் நிறைய நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால் சீம்பாலில் அதிகமான காமா குளோபுலின்கள் இருக்கும்.
  • காமா குளோபுலின்கள் எனும் நோய் எதிர்ப்புப் புரதங்கள் உடையாமல் கன்றுகளின் குடல் வழியாக அவற்றின் உடலில் உறிஞ்சப்படவேண்டும்.
  • ஆனால் இந்த காமா குளோபுலின்கள் இதர புரதங்களாக உடைக்கப்பட்டு விட்டால் அவை மற்ற சாதாரணப் புரதங்களைப் போலத்தான் செயல்படும்.
  • புதிதாகப் பிறந்த கன்றுகளின் குடல் இந்த காமா குளோபுலின்களை முழுவதும் உறிஞ்சுவதற்கு சிறிது நேரம் மட்டுமே அனுமதிக்கும். இவ்வாறு அவற்றின் குடல் காமா குளோபுலின்களை உறிஞ்சும் திறன் அவை பிறந்து 1-2 மணி நேரத்தில் மிகவும் அதிகமாக இருக்கும்.
  • இதைக் கருத்தில் கொண்டு கன்று பிறந்த 15-30 நிமிடங்களில் முதல் தவணையான சீம்பாலையும், இரண்டாம் தவணை சீம்பாலை கன்று பிறந்த 10-12 மணி நேரத்திலும் அளிக்கவேண்டும்.
  • கன்றுகள் பிறக்கும் போது அவற்றின் சிறு குடலிலுள்ள சத்துகளை உறிஞ்சும் செல்கள் முதிர்ச்சி அடையாமல் இருக்கும். எனவே இந்நிலையில் அவை பெரிய அளவுள்ள காமா குளோபுலின்களை எளிதில் உறிஞ்சிக்கொள்ளும்.
  • கன்றின் வயது மணிக்கணக்கில் அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் சிறு குடலிலுள்ள உறிஞ்சும் செல்கள் முதிர்ச்சியடையாத நிலையிலிருந்து முதிர்ச்சி அடையத் தொடங்கும். இதன் பிறகு பெரிய அளவிலான புரத மூலக்கூறுகளை அது உறிஞ்சாது.
  • இவ்வாறு கன்றுகளின் சிறு குடலிலுள்ள செல்கள் முதிர்ச்சி அடைய அடைய அவற்றின் உறிஞ்சும் திறன் குறைந்துகொண்டே வந்து முழுவதுமாக நின்று விடும்.
  • இதற்கு குடல் மூடுதல் என்று பெயர். இவ்வாறு குடல் மூடும் சமயத்தில் கன்றுகளின் இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்புப் புரதங்களின் அளவும் கன்றின் நோய் எதிர்ப்புத் திறனும் நேர்மாறாக இருக்கும்.
  • குடல் மூடும் போது கன்றுகளின் குடலில் சிறிதளவு காமா குளோபுலின்களை மட்டுமே உறிஞ்சப்பட்டிருந்தால் அவற்றின் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருக்கும்.
  • இதனால் கன்றுகளின் இறப்பு விகிதம் அதிகரிப்பதுடன் அவற்றின் நோயினால் பாதிக்கப்படும் விகிதமும் அதிகரிக்கும்.
  • கன்றுகளின் உடல் எடைக்கேற்ப சீம்பாலை அவற்றின் உடல் எடையில் 1 பங்கு அளித்தல்.
  • கன்று பிறந்த முதல் 15-30 நிமிடங்கள் – கன்றின் உடல் எடையில் 5-8%
  • முதல் 10-12 மணி நேரங்கள் - கன்றின் உடல் எடையில் 5-8%
  • இரண்டாம் நாள் - கன்றின் உடல் எடையில் 10 %
  • மூன்றாம் நாள் - கன்றின் உடல் எடையில் 10 %
  • கன்று ஈன்ற மாடுகளில் சுரக்கும் அதிகப்படியான சீம்பாலை கறந்து விட வேண்டும். இல்லையேல் அதிகப்படியான சீம்பாலை கன்றுகள் குடித்துவிட்டால் கன்றுகளில் கழிச்சல் ஏற்படும்.
  • மாடுகளிலிருந்து சுரக்கும் அதிகப்படியான சீம்பாலை குளிர்பதனப் பெட்டியில் சேமித்து தாயற்ற மற்ற கன்றுகளுக்குக் கொடுக்கலாம்.
  • சீம்பாலை உறைய வைத்து நீண்ட நாட்களுக்கும் சேமிக்கலாம். இயற்கையாக சீம்பாலை நொதிக்க வைத்தும் 5-7 நாட்களுக்கு சேமித்தும் பயன்படுத்தலாம்.

சீம்பாலிலுள்ள சத்துகள்

      உட்பொருட்கள்

      பசு மாடுகளின் சீம்பால்

     எருமை மாடுகளின் சீம்பால்

     பால்

    மொத்த திடச்சத்துகள்

    28.30

    31.0

    12.86

    சாம்பல்

    1.58

    0.9

    0.72

    கொழுப்புச்சத்து

    0.15-1.2

    4.0

    4.0

    லேக்டோஸ்

    2.5

    2.2

    4.8

    கேசின்

    4.76

    7.7

    2.8

     ஆல்புமின்

    1.5

    3.6

    0.54

    குளோபுலின்

    15.06

    12.5

    -

     மொத்த புரதம்

    21.32

    23.8

    3.34


    top

   கன்றுகளைத் தாயிடமிருந்து பிரித்தல்
  • கன்றுகளைத் தாயிடமிருந்து பிரித்து  கன்றுகளைத் தனியாக வளர்ப்பது கன்றுகளை தாயிடமிருந்து பிரித்து வளர்த்தலாகும்.
  • இந்த மேலாண்மை முறையில் கன்றுகள் சீம்பாலை குடித்தவுடன்,  மீண்டும் தாயிடம் பால் குடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
  • ஆனால் மாட்டிடமிருந்து பாலை முழுவதும் கறந்து,  போதுமான அளவு பால் கன்றுகளுக்கு தனியாக அளிக்கப்படுகிறது.
  தீமைகள்
  • அதிகமான தாய்மைப் பண்பு உள்ள உள்நாட்டின மாட்டினங்களிலும் எருமை மாடுகளிலும்  கன்றுகளைத் தாயிடமிருந்து பிரிப்பது கடினமாகும்.
  •  சில மாடுகளில் கன்று ஈன்ற அன்றே கன்றுகளைத் தாயிடமிருந்து பிரிப்பதால் பால் உற்பத்திக் குறைவு ஏற்படுவதுடன், அவற்றில் சீக்கிரம் பால் வற்றி விடுகிறது.

இளங் கன்றுகள் வளர்ப்பதிலும், கன்றுகளுக்கு பாலை அளிப்பதிலும் பின்பற்றப்பட வேண்டிய முக்கிய செயல் முறைகள்  
  • தீவிர முறையில் கன்றுகளை வளர்க்கும்போது கன்று ஈன்ற நாளிலேயே கன்றுகளைத் தாயிடமிருந்து பிரிக்கும்போது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • ஒவ்வொரு கன்றினையும் தனியாகப் பராமரிக்கவேண்டும். கன்றுகளின் உடல் எடையினை வாரம் ஒரு முறை சரி பார்த்து அதற்கேற்றவாறு கன்றுகளுக்குத் தீவனம் அளிக்கவேண்டும்.
  • நிறைய கன்றுகளுக்கு ஒரே இடத்தில் தீவனமிடக்கூடாது. இவ்வாறு தீவனமிடுவதால் கன்றுகளுக்கு அதிகப்படியான தீவனமோ அல்லது தேவைக்கு குறைவான தீவனமோ கிடைக்கும்.
  • கன்றுகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறையோ அல்லது அதற்கு மேலோ தீவனமளிக்கவேண்டும். ஒரு முறை மட்டுமே தீவனமளித்தால் அவற்றுக்கு செரிமானக் கோளாறுகளோ அல்லது கழிச்சலோ ஏற்பட்டு அவற்றின் உடலில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும்.
  • கறவை மாட்டுப் பண்ணையில் உபயோகப்படுத்தப்படும் பால் கறக்கப் பயன்படும் பாத்திரங்கள், பாலை சேமிக்கப் பயன்படும் பாத்திரங்கள் மற்றும் இதர உபகரணங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • கன்றுகளுக்கு பாலை அளிப்பதற்கு முன்பாக பாலை காய்ச்சி ஆற வைத்து அளிக்கவேண்டும்.
  • கன்றின் முதல் வார வயதில் ஒரு நாளைக்கு 3-4 முறைகளும், அவற்றின் 90 வார வயது வரை அவற்றுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறைகளும் பாலை அளிக்கவேண்டும்.
  • கன்றுகளின் உடல் எடைக்கேற்றவாறு அவற்றுக்கு பாலை அளிக்கவேண்டும். முதல் மாத வயதில் அதிகப்படியாக பாலை கன்றுகளுக்கு அளிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
  • கன்றுகள் பாலைக் குடிக்கவில்லை எனில், அடுத்த தவணைப் பாலைக் கொடுக்கக்கூடாது. அடுத்த தவணைப் பாலுடன் 30-50 மிலி விளக்கெண்ணெய் கலந்து கன்றுகளின் வாயில் ஊற்றவேண்டும்.
  • பால் அல்லது பாலுக்கு பதிலாக உபயோகப்படுத்தப்படும் பொருட்களில் அதிகப்படியாக நுரை இருப்பின் அதனை சுத்தமான துணியால் வடி கட்டிப் பிறகு கன்றுகளுக்கு கொடுக்கவேண்டும்.
  • பாலில் உள்ள அதிகப்படியான நுரையின் காரணமாக கன்றுகளில் வயிறு உப்புசம் ஏற்பட வாய்ப்புண்டு.
  • கன்றுகளுக்கு சுத்தமான குடிநீர் எப்போதும் கிடைக்குமாறு செய்யவேண்டும். கன்றுக் கொட்டகையின் தரை போதுமான அளவு சரிவாக இருக்குமாறு அமைக்கப்படுவதன் மூலம் கன்றுக்கொட்டகை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கலாம்.
  • கன்றுகளின் அசையூண் வயிறு சீக்கிரம் செயல்படத் தொடங்க  தரமான பயறு வகைகளின் வைக்கோலை கன்றுகளுக்கு அவற்றின் முதல் வார வயதிலிருந்து அளிப்பதுடன், தீவனத்தொட்டியில் எப்போதும் வைக்கோல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • கன்றுகளின் முதல் வார வயதில் அஸ்காரிஸ் புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்த அவற்றிற்கு குடற்புழு நீக்க மருந்தினைக் கொடுக்கவேண்டும்.
  • கன்றுகளின் வளர்ச்சியை அதிகரிக்க எதிர் உயிரி மருந்துகளையும், வளர்ச்சி ஊக்கிகளையும் பாலுடனோ அல்லது அடர் தீவனத்துடனோ கலந்து அளிக்கவேண்டும்.
  கன்றுகளை பாத்திரத்திலிருந்து பால் குடிக்கப் பழக்குதல்
  • தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட கன்றுகளை பாத்திரத்தில் பால் அருந்தப் பழக்குவதால் அவற்றின் தீவன மேலாண்மை மிகவும் எளிதாகிறது.
  • பொதுவாக கலப்பினக் கன்றுகள் பாத்திரங்களிலிருந்தோ அல்லது ரப்பர் வழியாகவோ பாலைக் குடிக்கக் கற்றுக்கொள்ளும். ஆனால் எருமைக் கன்றுகளை இதற்கு பழக்குவது கடினம்.
  • எருமைக் கன்றுகள் சோம்பேறிகளாக இருப்பதுடன் பாத்திரத்திலிருந்து பாலை அருந்த மிகவும் மெதுவாகவே பழகும்.
  • கன்றுகளின் உடல் எடைக்கேற்ப பாலை எடுத்து அதைக் காய்ச்சி, ஆற வைத்துப் பிறகு பாத்திரத்திலோ அல்லது வாளியிலோ ஊற்றி கன்றுகளுக்கு அருகில் வைக்கவேண்டும்.
  • கன்றுகளைப் பயமுறுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.
  • கன்றுகளின் தலையை வாளிக்குள் அமுத்தி பாலைக் குடிக்கவைக்கக்கூடாது.
  • பயந்த கன்றுகள் பால் இருக்கும் பாத்திரத்திற்கு அருகில் வரவே பயப்படும்.
  • பண்ணையிலுள்ள பணியாளர் முதலில் தன்னுடைய இரண்டு விரல்களை பால் இருக்கும் பாத்திரத்திற்குள் வைத்து மடிக்காம்பு போல செய்து பிறகு கன்றின் வாய்க்கு அருகில் பால் பாத்தித்தைக் கொண்டு செல்லவேண்டும்.
  • இப்போது கன்றானது பால் இருப்பதைக் கண்டுபிடிக்கும்.
  • பிறகு மெதுவாக விரல்களைக் கீழே இறக்கி பாலில் மூழ்குமாறு செய்துவிட வேண்டும்.
  • கன்று பால் குடிக்க ஆரம்பித்தவுடன் விரல்களை எடுத்துவிட வேண்டும்.
  • கன்று எப்போதெல்லாம் பாலைக் குடிக்காமல் தலையை எடுக்கிறதோ அப்போது மேற்கூறிய செயல் முறையினைத் திரும்பச் செய்யவேண்டும்.
  • எருமைக் கன்றினை இவ்வாறு பாலைக் குடிக்க பழக்குவதற்கு பொறுமையும், முயற்சியும் தேவை.

top

   கன்றுகளுக்கான தீவன மேலாண்மை
  • கன்றுகளின் அசையூண் வயிறு செயல்படாமல் இருக்கும் என்பதால் கன்றுகளுக்கு தீவனமளிக்கும் போது அவைகளை அசை போடாத பிராணிகளாக கருதவேண்டும். அசையூண் வயிறு செயல்படாததால் செல்லுலோஸை அவை செரிக்கமுடியாது.
  • அதிகப்படியான செல்லுலோஸ் இருக்கும் பசுந்தீவனம் மற்றும் வரத் தீவனங்களை கன்றுகள் செரிக்க இயலாது.
  • தரமான பயறு வகைத் தீவனங்களின் வைக்கோலை கன்றுகளுக்கு அளிக்கும்போது அவற்றின் அசையூண் வயிறுகளின் செயல்பாடு தூண்டப்படும்.
  • கன்றுகளின் அசையூண் வயிறு செயல்படாமல் இருப்பதால் அவற்றிற்கு நல்ல தரமான புரதம் கிடைப்பதில்லை. எனவே கன்றுகளால் புரதம் அல்லாத நைட்ரஜன் சத்துகளை உபயோகிக்க முடியாது. எனவே யூரியாவை கன்றுகளின் தீவனத்தில் சேர்க்கக்கூடாது.
  • அசையூண் வயிறு செயல்படாத காரணத்தால் கன்றுகளுக்கு பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களையும் தீவனத்தில் வைட்டமின் ஏ மற்றும் டி யுடன் சேர்க்கவேண்டும்.
  • கன்றுகளில் இயற்கையாகவே இருக்கும் உணவுக்குழாயுடன் இணைக்கப்பட்ட ஒரு குழாய் போன்ற அமைப்பின் காரணமாக கன்றுகளின் இளம் வயதில் அவை குடிக்கும் பால் அது செரிக்கும் அபொமேசம் எனும் மூன்றாம் வயதை நேரடியாக அடையும்.
  • இந்தக் குழாய் கன்றுகளுக்கு பசுந்தீவனங்கள் அளித்தாலும் பால் அளிக்கும் வரை வேலை செய்யும்.
செவிலித் தாய் மாட்டின் மூலம் கன்றுகளை வளர்த்தல்
  • வண்டி இழுக்கும் மற்றும் உழவுக்குப் பயன்படுத்தப்படும் மாட்டினங்களில் அவைகளில் உற்பத்தியாகும் பால் அவற்றின் கன்றுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். எனவே அவற்றின் கன்றுகளை தாய் மாடுகளிடமே பாலூட்ட அனுமதிக்கவேண்டும்.
  • கலப்பின மாடுகளில் அவற்றின் கன்றுகளுக்கு தேவைப்படும் அளவினை விட பால் உற்பத்தி அதிகமாக இருப்பதால், அவற்றின் பால் உற்பத்தியினை நெறிப்படுத்தவும், அவற்றுக்கு அதிகமாகத் தீவனமளிப்பதைத் தடுக்கவும், கன்றுகளுக்கு ஒன்று அல்லது இரண்டு காம்புகளை மட்டும் விட்டு விட்டு இதர காம்புகளில் பாலைக் கறந்துவிட வேண்டும்.
  • இம்முறையில் ஒரு மாட்டில் 3 அல்லது நான்கு கன்றுகளை பாலூட்ட அனுமதிக்கலாம்.
  • எல்லாக் கன்றுகளையும் மாடுகள் பாலூட்டுவதை ஊக்குவிக்க, கன்று ஈனும் போது புதிதாக ஈன்ற கன்றின் மேலிருக்கும் கோழையினை இதர கன்றுகளின் மீதும் தடவி விட வேண்டும்.
  • இதனால் மாடுகள் கன்றுகளை பாலூட்டுவதற்கு அனுமதிக்காமல் இருப்பது தடுக்கப்படும். செவிலித் தாய் மாட்டின் பால் உற்பத்திக்கேற்ப அதன் மூலம் எத்தனை கன்றுகளை வளர்க்கலாம் என்பது முடிவு செய்யப்படும்.
  • செவிலித் தாய் மூலம் கன்றுகளை வளர்ப்பது ஒரு எளிதான, குறைவான மேலாண்மை செயல்பாடுகள் தேவைப்படும் முறையாகும்.

  கன்றுகளைத் தாய் மாட்டிடமிருந்து சீக்கிரமே பிரித்து முழுப்பாலையும் அளித்தல்
  • இம்முறையில் கன்றுகளை அவை பிறந்தவுடனேயே தாய் மாட்டிடமிருந்து பிரித்து, பாலூட்டும் ரப்பர் அல்லது வாளிகளிலிருந்து கன்றுகளை பால் குடிக்க பழக்கப்படுத்துவதாகும்.
  • ஒவ்வொரு வாரமும் கன்றுகளின் உடல் எடையினைப் பார்த்து அதற்கேற்றவாறு அவைகளுக்கு பால் எவ்வளவு அளிக்கவேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும். கன்றுகளுக்கு பரிந்துரைக்கப்படும் தீவன அட்டவணை – I ஐப் பின்பற்றலாம். (கன்றுகளின் வயதுக்கேற்றவாறு)
  • கால அட்டவணைப்படி கன்றுகளை விவசாயிகள் எடை போட முடியாமல் போனால், கன்றுகள் பிறந்த போது உள்ள உடல் எடைக்கேற்றவாறு அவைகளுக்கு உணவினை அளிக்கலாம். கன்றுகளுக்குப் பரிந்துரைக்கப்படும் தீவன அட்டவணை- II ஐப் பின்பற்ற வேண்டும். (உடல் எடைக்கேற்றவாறு)
  • கன்றுகளின் 1, 2, 3, 4, 5 ஆம் வார வயதுகளில் அவற்றின் பிறந்த போது உள்ள உடல் எடையில் 8,9, 10, 8 மற்றும் 5 சதவிகிதம் என்ற அளவில் தீவனத்தை அளிக்க வேண்டும்.
  • கன்று பிறக்கும் போது உள்ள உடல் எடையினை பார்க்க முடியாத விவசாயிகள் தோராயமாக கன்றுகளின் உடல் அளவினைப் பொருத்து சிறிய, பெரிய  மற்றும் நடுத்தர உடல் அளவுடைய கன்றுகள் எனப்பிரித்து பிரிவு 2, 4, 6 தீவன அட்டவணையினைப் பின்பற்றி தீவனமளிக்க வேண்டும்.

முழுப்பால் மற்றும் கன்றுத் தீவனம் அளித்து கன்றுகளுக்கு குறைந்த செலவில் தீவனமளித்து வளர்த்தல்  
  • குறைந்த செலவில் கன்றுகளை வளர்க்க முழுப்பாலுடன் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர், மற்றும் கன்றுகளின் ஆரம்ப காலத் தீவனத்தைச் சேர்த்து அளிக்க வேண்டும்.
  • கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் சக்தி குறைவாக இருக்கும்.
  • பாலுடன் கன்றுகளுக்கு தானியக் கலவை, சுக்ரோஸ், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரின், வெல்லம், எண்ணெய் மற்றும் கொழுப்பு போன்றவற்றையும் சேர்த்து அளிக்கலாம்.
  • கன்றுகளின் 4-6 வார வயதிற்கு முன்னால் அவற்றின் உடலால் சுக்ரோஸ் சர்க்கரையினை உபயோகிக்க முடியாமல் போகலாம். இதனால் கன்றுகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்.
  • வெல்லம் விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு உணவுப்பொருளாகும். கொழுப்பு நீக்கப்பட்ட பாலை, கொழுப்பு நீக்கப்படாத பாலுக்கு பதிலாக கன்றுகளின் 5ம் நாள் வயதிலிருந்து கொடுக்கலாம். வெல்லத்தை கன்றுகளின் இரண்டாம் வார வயதில் கொடுப்பதால் கொழுப்பு நீக்கப்படாத பாலை கொடுக்கும் போது கிடைக்கும் உடல் வளர்ச்சி இருக்கும்.

கன்றுகளுக்கான தீவனமளிக்கும் அட்டவணை – I

 கன்றுகளின் வயது வாரங்களில்

முழுப்பால்

பயறு வகை வைக்கோல்

கன்றுகளுக்கான ஆரம்ப கால தீவனம்

4  முதல்  7

உடல் எடையில் 10%

தேவைக்கேற்ப

தேவைக்கேற்ப

2-8வது வாரம்

உடல் எடையில் 10%

தேவைக்கேற்ப

தேவைக்கேற்ப

9 வது வாரம்

உடல் எடையில் 10%  – 2 கிலோ

தேவைக்கேற்ப

தேவைக்கேற்ப

10ம் வாரம்

10% உடல் எடையில் 10% – 4 கிலோ

தேவைக்கேற்ப

தேவைக்கேற்ப

 

கன்றுகளுக்கான தீவன அட்டவணை - II

தீவனமளிக்கும் வகை

பிறக்கும்போது உடல் எடை

வாரங்களில் (அளிக்கப்படும் கொழுப்பு நீக்கப்படாத பாலின் அளவு கிலோக்களில் / ஒரு நாளைக்கு)

அளிக்கப்படும் மொத்த பாலின் அளவு

1

2

3

4

5

1

23-29.5

2.25

2.5

2.7

2.25

1.8

80.0

2

30-33

2.5

2.7

3.0

2.7

1.8

90.0

3

33.5-37.5

2.7

3.0

3.5

3.0

1.8

100.0

4

38-42

3.0

3.5

4.0

3.5

2.25

115.0

5

42.5-46.5

3.5

4.0

4.5

3.5

2.25

125.0

6

47-51

4.0

4.5

5.0

4.0

2.25

140.0

7

Above 51.5

4.5

5.0

5.5

4.5

2.25

150.0

top



கன்றுகளுக்கு பாலுக்கு பதிலாக அளிக்கப்படும் உணவுப் பொருட்கள்
  • பாலுக்கு பதிலாக கன்றுகளுக்கு அளிக்கப்படும் உணவுப் பொருட்களில் கொழுப்பு நீக்கிய பால் பவுடர், கொழுப்பு அல்லது தாவரக்கொழுப்பு போன்றவற்றுடன் மோர் பவுடர், வே பவுடர் போன்றவையும் சேர்க்கப்படுகின்றன.
  • சிறிதளவு குளுக்கோஸ், சோயாபீன் மாவு, தானிய மாவு, வைட்டமின்கள், தாது உப்புக் கலவை போன்றவையும் சேர்க்கப்பட வேண்டும்.
  • நல்ல தரமான உணவுப்பொருட்களை பாலுக்கு பதிலாக உபயோகித்தால் கன்றுகளுக்கு சீம்பாலை அளித்தபிறகு கொழுப்பு நீக்கப்படாத பாலை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
  நல்ல, தரமான பாலுக்கு மாற்றாக உபயோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் குணநலன்கள்
  • இதில் குறைந்தது 50% தெளிப்பான் மூலம் உலர்த்தப்பட்ட கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் இருக்கும்.
  • நிலைப்படுத்தப்பட்ட உயர்தர கொழுப்பு 10-15%, முக்கியமாக லார்ட் எனப்படும் விலங்கு கொழுப்பை நன்றாக அரைத்து, கொழுப்பு நீக்கப்பட்ட பாலுடன் அல்லது மோருடன் கலந்து பிறகு தெளிப்பான் மூலம் உலர வைக்கப்பட்ட பால் பவுடருடன் சேர்ந்து கன்றுகளுக்கு கொடுக்கலாம்.
  • பால் மாற்றுப் பொருளுடன் வைட்டமின் ஏ, ஈ மற்றும் பி 12 கலந்து கொடுக்கலாம்.
  • பால் மாற்றுப் பொருளுடன் எதிர் உயிரி மருந்துகளை வளர்ச்சி ஊக்கிகளாகக் கொடுக்கலாம்.
  • இதில் 22-25% தரமான புரதம் இருக்கவேண்டும்.
  • பால் மாற்றுப் பொருளில் ஸ்டார்ச் அல்லது நார்ச்சத்து இருக்கக்கூடாது.
  • தானியங்கி தீவன இயந்திரம் மூலம் அளிக்கும்போது சீராக விழ வேண்டும்.
  • தண்ணீரில் உடனே கரையக்கூடியதாக இருக்க வேண்டும்.
  • பால் மாற்றுப் பொருளுடன் சரியான அளவு வெதுவெதுப்பான தண்ணீரைச் சேர்த்து கன்றுகளுக்கு கொடுக்க வேண்டும். இதனுடன் அதிகப்படியான தண்ணீரையோ அல்லது குறைவான அளவு தண்ணீரையோ கலந்தால் கன்றுகளுக்கு சீரணக்கோளாறுகள் ஏற்படும்.
  • பால் மாற்றுப் பொருள் ஒரு பங்கும் (ஒரு கிலோ) தண்ணீர் (லிட்டர்) எட்டு லிட்டரும் கலந்தது சரியான கலவையாகும்.
  • தரமான பால் மாற்றுப் பொருளில் தெளிப்பது மூலம் உலர வைக்கப்பட்ட கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் 50 பங்கும், உலர வைக்கப்பட்ட வே பவுடர் 10 பங்கும், பால் அற்ற இதர உணவுப் பொருட்கள் 40 பங்கும் இருக்கவேண்டும்.
  • ஓஹியோ பணியாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட பால் மாற்றுப்பொருளின் உள்ளடக்கம் பின்வருமாறு.

பொருள்

அளவு (கிலோக்களில்)

கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர்

70

உலர்ந்த வே பவுடர்

18

லெசித்தின்

2

விலங்கு கொழுப்பு

10

டை கால்சியம் பாஸ்பேட்

1.7

தாமிர சல்ஃபேட், இரும்பு சல்பேட், மாங்கனீஸ் சல்பேட், எதிர் உயிரி மருந்துகள்

Traces


பகுதியளவு பால் மாற்றுப் பொருட்கள்
  • முழுப்பால் மாற்றுப் பொருளுக்கும், பகுதியளவு பால் மாற்றுப் பொருளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், பகுதியளவு பால் மாற்றுப்பொருளில் அதிக அளவு பாலோ அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடரோ இருக்காது
  • பகுதியளவு பால் மாற்றுப் பொருளுக்கான ஒரு உதாரணம் பின்வருமாறு,

உள்ளடக்கம்

அளவு

கோதுமை

10

லின் சீட் தூள்

40

பால்

23

தேங்காய் எண்ணெய்

10

பியூட்டிரிக் அமிலம்

0.3

சிட்ரிக் அமிலம்

1.5

தாது உப்புக் கலவை

3.0

எதிர் உயிரி மருந்துகள்

0.2

மொத்தம்

100


top

கன்றுகளுக்கான ஆரம்ப காலத் தீவனம்
  • இது கன்றுகளுக்கு அவற்றின் முதல் நாள் அளிக்கப்படும் அடர்தீவனமாகும்.
  • கன்றுகள் அவற்றின் இரண்டாம் வார வயதிலிருந்து சிறிதளவு அடர் தீவனத்தை உண்ண ஆரம்பிக்கும்.
  • அடர் தீவனத்தை கன்றுகள் உண்ணப் பழக்க கீழ்க்காணும் முறையினைப் பின்பற்ற வேண்டும்.
  • அடர்தீவனத்தை முதலில் கன்றுகளுக்குப் பால் வைக்கும் வாளியிலேயே வைக்கவேண்டும். பால் குடித்தவுடன் அந்த வாளியிலேயே சிறிதளவு தீவனத்தை வைக்கவேண்டும். இவ்வாறு வைப்பதால் கன்றுகள் அடர் தீவனத்தை முகர்ந்து நக்க ஆரம்பிக்கும். பிறகு அடர் தீவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவேண்டும்.
  • சிறிதளவு அடர் தீவனத்தை கன்றுகளின் நாக்கிலும், உதடுகளிலும் தேய்த்து விடுவதாலும் கன்றுகள் அடர் தீவனத்தை உண்ணத் தூண்டப்படும்.
  • கன்றுகளுக்கு அளிக்கப்படும் அடர் தீவனம் ருசி மிகுந்ததாக இருக்க வேண்டும்.
  • அடர் தீவனத்தில் அதிக அளவு எரிசக்தியும் (75% மொத்த சீரணிக்கும் சத்துகள்), 14-16% சீரணமாகக் கூடிய புரதமும் இருக்கவேண்டும்.
  • கன்றுகளுக்குத் தேவையான அளவு அடர் தீவனத்தை அவை ஒரு நாளைக்கு 1-1.5 கிலோ உண்ணும் வரை கொடுக்கவேண்டும். கன்றுகள் 1-1.5 கிலோ தீவனத்தை உண்ண ஆரம்பித்த பிறகு, அவைகளுக்கு அளிக்கப்படும் அடர்தீவனத்தின் அளவை கட்டுப்படுத்தலாம்.
  • கன்றுகள் ஒரு நாளைக்கு 1-1.5 கிலோ தீவனத்தை அவற்றின் 2.5 முதல் மூன்று மாத வயதில் எடுக்க ஆரம்பிக்கும்.
  • கன்றுகள் ஒரு நாளைக்கு 0.4 முதல் 0.5 கிலோ அடர் தீவனத்தை எடுக்க ஆரம்பிக்கும்போது அவற்றுக்கு பால் அளிப்பதை அவற்றின் இனத்திற்கேற்றவாறு நிறுத்திவிட வேண்டும்.
  • பல்வேறு விதமான ஆரம்ப கால கன்றுத் தீவனங்கள் சந்தையில் கிடைக்கின்றன.
  • அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் தீவன மூலப்பொருட்கள், மற்றும் அவற்றின் விலையினைப் பொருத்து ஆரம்ப காலக் கன்று தீவனத்தின் மூலப்பொருட்களை மாற்றிக்கொள்ளலாம்.

ஆரம்ப காலக் கன்று தீவனத்தின் உள்ளடக்கம்

உட்பொருட்கள் அளவு

மக்காச்சோளம்

42

கடலைப் பிண்ணாக்கு

35

கோதுமைத் தவிடு அல்லது அரிசித் தவிடு

10

மீன் தூள்

10

தாது உப்புக் கலவை

2

உப்பு

1
top