முதல் பக்கம் தொடர்புக்கு


கோமாரி நோய்

   இந்நோயினைப் பற்றி

  நோயின் தன்மை  
  • இந்நோய் மாடுகளைத் தாக்கும் கொடிய நச்சுயிரி நோயாகும்.
  • இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் வாய், கால் மற்றும் மடியில் கொப்புளங்கள் தோன்றும்.
  • பால் கறக்கும் கறவை மாடுகளில் திடீரென பால் உற்பத்தி குறைவு, தாயிடம் பால் குடிக்கும் கன்றுகள் இறந்து விடுதல், சினை மாடுகளில் கன்று வீசுதல், மற்றும் சினைப் பிடிக்காதிருத்தல் போன்றவையும் இந்நோயின் அறிகுறிகளாகும்.

நோய்க்கான காரணங்கள்
  • இந்நோய் பிக்கோர்னா விரிடே எனும் குடும்பத்தைச் சார்ந்த ஆப்தோ வைரஸ் எனும் நச்சுயிரியால் எற்படுகிறது.
  • இந்நோய்க் கிருமியில் ஏழு சீரோ வகைகள் உள்ளன. அவை, ஓ, ஏ, சி, ஏசியா 1, சேட் 1, சேட் 2 மற்றும் சேட் 3 ஆகும்.
  • இந்த வைரஸ் அமில காரத்தன்மை 6-9 ஆக இருக்கும்போதும், வெப்பநிலை 56 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக இருக்கும்போதும், அழிக்கப்பட்டு விடும். ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால் அல்லது உமிழ் நீர் போன்றவற்றில் நீண்ட நேரம் இந்த நச்சுயிரி உயிரோடு இருக்கும். பாலை 72 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 15 நொடிகள்  பாஸ்சுரைசேசன் செய்யும்போது இந்த வைரஸ் அழிந்து விடுகிறது.
  • இந்த வைரஸ் ஆல்கஹால், குளோரோபார்ம், ஈதர் போன்ற வேதிப்பொருட்களால் பாதிக்கப்படுவதில்லை.


   அறிகுறிகள்

  மருத்துவ அறிகுறிகள்
  • அதிக காய்ச்சல் (104-106 டிகிரி பாரன்ஹீட்) மற்றும் பசியின்மை
  • நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் வாயிலிருந்து உமிழ் நீர் நூல் போல தொங்கிக்கொண்டு இருத்தல்
  • வலியின் காரணமாக, பாதிக்கப்பட்ட மாடுகள் காலை உதறிக் கொண்டு இருத்தல், பிறகு நொண்டி நடத்தல்
  • பாதிக்கப்பட்ட மாடுகளின் வாயில் கொப்புளங்கள், புண்கள் காணப்படுதல்
  • வலியின் காரணமாக மாடுகள் சப்புக் கொட்டிக்கொண்டு இருத்தல்
  • பாதிக்கப்பட்ட மாடுகளின் மடியில் கொப்புளங்கள் தோன்றுதல்

top

   மேலாண்மை முறைகள்

    நோய் தடுப்பு முறைகள்  
  • பண்ணையிலிருக்கும் மாடுகளுக்கு கோமாரி நோய்க்கான முதல் தடுப்பூசியினை மூன்றாம் மாத வயதிலும், இரண்டாம் தடுப்பூசியினை முதல் தடுப்பூசி கொடுத்து 30 நாள் கழித்தும் கொடுக்கவேண்டும். பிறகு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதாவது ஏப்ரல்- மே மாதம் தடுப்பூசியினை தொடர்ந்து அளிக்கவேண்டும்.
  • ஒரு பகுதியிலிருக்கும்  அல்லது ஒரு கிராமத்திலிருக்கும் அனைத்து மாடுகளுக்கும் ஒரே சமயத்தில் தடுப்பூசி கொடுக்கவேண்டும்.
  • நோய் கிளர்ச்சி ஏற்பட்ட பகுதியினைச் சுற்றி ஒரு வட்டம் போல் அமைத்து அந்த வட்டத்திற்குள் இருக்கும் மாடுகளுக்கு தடுப்பூசி அளிக்கவேண்டும். இது தவிர நோய் கிளர்ச்சி காணப்படும் பகுதிகளை ஒட்டியிருக்கும் நோய் தாக்குதல் இல்லாத பகுதியில் இருக்கும் மாடுகளுக்கும் தடுப்பூசியினை கொடுக்கவேண்டும்.
  • கோமாரி நோய்க்காக தடுப்பூசி கொடுக்கப்ட்ட மாடுகளை மட்டுமே புதிதாக வாங்கவேண்டும். அதுவும் தடுப்பசி அளித்து 15-21 நாட்களுக்குப் பிறகே தடுப்பூசி அளித்த மாடுகளை புதிதாக வாங்கலாம்.
  • கோமாரி நோய் தாக்குதலுக்குள்ளான பகுதியிலிருந்து மாடுகளை வாங்கக்கூடாது.
  • நோய் தாக்குதல் அல்லது கிளர்ச்சி ஏற்பட்டு 6 மாதங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதியிலிருந்து மாடுகளை வாங்கக்கூடாது.
  • புதிதாக வாங்கி வந்த மாடுகளை மற்ற மாடுகளிலிருந்து சிறிது காலத்திற்கு தனியே கட்டி பராமரிக்கவேண்டும்.
  • கிராமத்தின் நுழைவாயில் அல்லது பண்ணை நுழைவாயிலில், பண்ணைக்குள் நுழைபவர்களின் கால்கள், மற்றும் பண்ணைக்குள் நுழையும் வாகனங்களின் சக்கரங்கள்  கிருமி நாசினியில் நனைத்து உள்ளே வருமாறு கிருமி நாசினிக் கரைசல் நிரம்பிய ஒரு பள்ளம் போன்ற பகுதியினை அமைக்கவேண்டும்.
  • கோமாரி நோய் தாக்குதல் இல்லாத இடங்களிலிருந்து அல்லது 6 மாதம் முன்பு நோய் தாக்கிய பகுதிகளிலிருந்து மட்டுமே தீவனங்களை வாங்கவேண்டும்.

 

    பரிந்துரைக்கப்படும் முதலுதவி
  • நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளை இதர மாடுகளிடமிருந்து தனியே கட்டி பராமரித்தல்
  • பாதிக்கப்பட்ட மாடுகளின் கால் மற்றும் வாய்ப்பகுதியை 1% பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலைக் கொண்டு ஒரு நாளைக்கு 3-4 முறை கழுவ வேண்டும்.
  • புண்களின் மீது கிளிசரின் தடவுதல்
  • தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரின் ஆலோசனையினைப் பெற்று பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு எதிர் உயிரி மருந்துகளை அளித்தல்

   நோய் கட்டுப்படுத்துதல்  
  • நோய் தாக்குதலை கண்டறிந்த பின்பு நோய் பாதிக்கப்பட்ட மாடுகளை மற்ற மாடுகளிலிருந்து தனியாக பிரித்து பராமரிக்கவேண்டும். மேலும் மாடுகளின் நடமாட்டத்தையும் குறைத்துவிட வேண்டும்.
  • பொதுவான மேய்ச்சல் நிலங்களில் நோய் பாதிக்கப்பட்ட மாடுகளை மேய அனுமதிக்கக்கூடாது.
  • பாதிக்கப்பட்ட மாடுகள், குளங்கள், ஓடைகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் அருந்த அனுமதிக்கக்கூடாது.
  • நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகள் மற்ற மாடுகளுடன் மேயவோ அல்லது அலையவோ அனுமதிக்கக்கூடாது.
  • நோய் பாதிக்கப்பட்ட மாடுகளை பராமரிக்கும் பணியாளர்கள், நோயற்ற மாடுகளை பராமரிக்கவோ, அல்லது நோயற்ற மாடுகள் பராமரிக்கப்படும் பண்ணைக்குள் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு செய்யமுடியவில்லை எனில் இப்பணியாளர்கள் நோயற்ற பண்ணைகளுக்குள் நுழையும் போது குளித்துவிட்டு (சோப்பைப் பயன்படுத்தி) செல்லவேண்டும்.
  • நோய் தாக்குதலின் போது முதலில் நோயற்ற மாடுகளை பராமரித்துவிட்டு பிறகு, நோய் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கான பராமரிப்பு பணிகளை செய்யவேண்டும்.
  • நோயுற்ற மாடுகளைப் பராமரித்த பிறகு பணியாட்கள் தங்களை நன்றாக சுத்தம் செய்து கொண்டு, அவர்கள் அணிந்திருந்த துணிகளை 4% சோடியம் கார்போனேட் கரைசலில் முக்கி வைத்து பிறகு காய வைக்கவேண்டும். பால் கறக்கப் பயன்படும் பாத்திரங்களை, 4% சோடியம் கார்போனேட் கரைசல் மூலம் சுத்தம் செய்யவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட மாடுகளில் கன்றுகள் பாலூட்ட அனுமதிக்கக்கூடாது. மேலும் பாதிக்கப்பட்ட மாடுகளின் பாலை கன்றுகளுக்கு கொடுக்கக்கூடாது.
  • பாதிக்கப்பட்ட மாடுகளின் வாயை 1 % பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசல் கொண்டு ஒரு நாளைக்கு 3-4 முறை கழுவ வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட மாடுகளின் காலை 2% காப்பர் சல்பேட் (தாமிர சல்பேட்) கரைசலைக் கொண்டு கழுவ வேண்டும். ஆண்டி செப்டிக் மருந்துகள் மற்றும் பூச்சிகளை விரட்டும் மருந்துகளைக் உபயோகப்படுத்தி புண்களில் புழு உண்டாவதைத் தடுக்கலாம்.
  • பண்ணையின் தரை, பண்ணை முழுதும், மற்றும் இதர நோய்க்கிருமியால் அசுத்தமடைந்த உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களை 2% சோடியம் ஹைட்ராக்சைடு, 4% சோடியம் கார்போனேட்,  0.2% சிட்ரிக் அமிலம் கொண்டு கிருமி நீக்கம் செய்யவேண்டும்.
  • சுண்ணாம்புத்தூளை பண்ணையில் தெளிக்கவேண்டும்
  • பண்ணையின் நுழை வாயிலில், பண்ணைக்குள் நுழைபவர்களின் கால்கள், மற்றும் பண்ணைக்குள் நுழையும் வாகனங்களின் சக்கரங்கள்  கிருமி நாசினியில் நனைத்து உள்ளே வருமாறு கிருமி நாசினிக் கரைசல் நிரம்பிய ஒரு பள்ளம் போன்ற பகுதியினை அமைக்கவேண்டும்.

 

 

top