செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளுக்கான பொதுவான நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்

 

ஆடுகளுக்கான பொதுவான நல மேலாண்மை முறைகள்

  • இனப்பெருக்க காலத்திற்கு முன்பாக, இனப்பெருக்கத்திற்கு உதவாத செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் பண்ணையிலிருந்து கழித்து விட வேண்டும்.
  • பிறந்த குட்டிகள் இறப்பதைத் தடுக்க, ஆடுகளின் கடைசி 6 வார சினைப்பருவத்தில் அவற்றிற்கு தனியாக சிறப்புத் தீவனம் அளிக்கவேண்டும். மேலும் குட்டிகள் ஈனும் கொட்டகையில் சுகாதாரமான முறைகளைப் பின்பற்றுதல், ஆடுகள் படுப்பதற்கு முறையான அமைப்பு, குட்டிகள் பிறந்தவுடனே அவற்றிற்கு சீம்பால் அளித்தல் போன்ற மேலாண்மை முறைகளைப் பின்பற்றி குட்டிகளின் இறப்பினைத் தடுக்கலாம்
  • நுரையீரல் அழற்சி, மடி நோய், மூட்டு அழற்சி, நோஞ்சான உள்ள பெட்டை ஆடுகளை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்
  • குறைவாக தீவனமளித்து வளர்க்கப்பட்ட வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் சினைப்பருவ காத்தில் ஏற்படும் பிரெக்னன்சி டாக்சீமியா எனும் நோயினால் பாதிக்கப்பட்டு, குட்டிகள் ஈனும் போது, குட்டிகள் சீக்கிரம் இறந்து விடும். எனவே போதுமான அளவு தீவனத்தை தாய் ஆடுகளுக்கு அவற்றின் சினைப் பருவத்தில் அளிக்க வேண்டும்
  • வயதான ஆடுகளைத் தாக்கும் சீரண மண்டல நோய்களான இரத்தக்கழிச்சல், மைக்கோபாக்டீரியம் பாராடியூபர்குளோசிஸ் பாக்டீரியாவால் ஏற்படும் கழிச்சல், குடற்புழுக்கள்,  போன்றவை ஆடுகளின் சீரண மண்டலத்தைப் பாதித்து, வளர்ச்சியினைக் குறைப்பதால், ஆடுகள் நோஞ்சானாகக் காணப்படும். எனவே இது போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட ஆடுகளைப் பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்

கொட்டகை சுகாதாரம்

  • ஒவ்வொரு பருவ காலத்திலும், கொட்டகைகளில் கிருமி நாசினிகளைத் தெளித்து, கொட்டகையில் காணப்படும் புறஒட்டுண்ணிகளை ஆடுகள் குட்டி போடுவதற்கு முன்பு அழித்து விடலாம்
  • ஆட்டுக் கொட்டகைகளிலுள்ள மண் தரையினை கார்பாலிக் அமிலம் கொண்டு கிருமி நீக்கம் செய்யவேண்டும். இதனால் பாம்புகள் மற்றும் இதர ஊர்வன இனத்தைச் சார்ந்த விலங்குகளை அழித்து விடலாம். இருந்தபோதிலும் ஆட்டுக் கொட்டகையின் தரை மண் தரையாக இருப்பின் அதனை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்
  • வருடம் ஒரு முறை குளிர் காலத்திற்கு முன்பு கொட்டகைகளுக்கு  சுண்ணாம்பு உபயோகப்படுத்தி கொட்டகையினைக் கழுவ வேண்டும்
  • பருவ மழைக் காலத்திற்கு முன்பாகக் கொட்டகைக்கு சுண்ணாம்பு அடிக்க வேண்டும்
  • கொட்டகையினைச் சுற்றியுள்ள பகுதிகளில்  சுத்தமாகவும், உலர்வாகவும், தண்ணீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் கொட்டகையினைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதர்கள் ஏதுமின்றியும் பார்த்துக்கொள்ள வேண்டும்

பொதுவாக உபயோகிக்கப்படும் கிருமி நாசினிகள் மற்றும் அவை உபயோகிக்கப்படும் முறைகள்  
பிளீச்சிங் பவுடர் (லைம் குளோரைடு)

  • பிளீச்சிங் பவுடர் கால்நடைப் பண்ணைகளில் தொற்று நோய்களின் தாக்கம் ஏற்படும் போது கிருமி நீக்கம் செய்வதற்கும், தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது
  • தண்ணீரில் 30%க்கும் அதிகமான குளோரின் இருக்க வேண்டும்
  • தெளித்தல் மூலம் பிளீச்சிங் பவுடரை உபயோகிக்கலாம்
  • காற்றுப்புகாத டப்பாக்களில் பிளீச்சிங் பவுடரை அடைத்து வைக்க வேண்டும். ஈரமான சுற்றுப்புறம், நேரடியாக சூரிய ஒளி படுதல் போன்றவை பிளீச்சிங் பவுடரின் செயல்திறனைக் குறைத்து விடும்

போரிக் அமிலம்

  • கால்நடைகளின் மடியினைக் கழுவுவதற்கு போரிக் அமிலம் உபயோகிக்கப்படுகிறது
  • இது ஒரு செயல்திறன் குறைந்த எதிர்உயிரி செயல்பாட்டு மருந்தாகும். அதிகப்படியாக இது உயிரினங்களின் உடலில் உறிஞ்சப்படும் போது நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தும்
  • இது கண்களைக் கழுவுவதற்கும், உடலிலுள்ள மற்ற மென்மையான பாகங்களைக் கழுவுவதற்கும் பயன்படுகின்றது
  • செயல்திறன் அளவு 6%
  • தெளிப்பதால் இந்தக் கிருமி நாசினியினை உபயோகிக்கலாம்
  • போரிக் அமிலத்தை உபயோகித்து கண்களைக் கழுவுவதற்கு பதிலாக தற்போது எதிர்உயிரி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன

காஸ்டிக் சோடா

  • பண்ணைக் கட்டிடங்களிலும், கால்நடைக் கொட்டகைகளிலும், பொதுவாக சுத்தப்படுத்துவதற்கு காஸ்டிக் சோடா பயன்படுகின்றது. மேலும் இது ஒரு சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாகும். இது கிருமிகளைக் கொல்வதில் செயல்திறன் வாய்ந்தது.
  • கோமாரி நோய் மற்றும் பன்றிக் காலரா ஏற்படுத்தும் வைரஸைக் கொல்வதில் காஸ்டிக் சோடா மிகவும் சிறந்தது
  • ஆனால் காசநோய் மற்றும் ஜோனிஸ் நோயினை ஏற்படுத்தும் மைக்கோபாக்டீரியம் பாக்டீரியாக்களை காஸ்டிக் சோடா கொல்லுவதில்லை
  • பொதுவான உபயோகத்திற்கு 2%மும், அடைப்பான் நோய் மற்றும் சப்பை நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதற்கு 5% கரைசலாக காஸ்டிக் சோடாவினை உபயோகிக்கலாம்.
  • தெளித்தல் முறை மூலம் காஸ்டிக் சோடாவினைக் கால்நடைப் பண்ணைகளில் உபயோகிக்கலாம்
  • ரப்பர் கை உறைகள், மூக்கு உறைகள், மற்றும் இதர பாதுகாக்கும் உடைகளை காஸ்டிக் சோடாவினைப் பயன்படுத்தும் போது அணிந்திருக்க வேண்டும். இதனால் காஸ்டிக் சோடாவினைப் பயன்படுத்துவதால் தோலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அணிந்திருக்கும் துணிகள் சேதாரமடைவதைத் தடுக்கலாம்

கிரெசால்

  • கிரெசால்கள் தண்ணீரில் குறைந்த அளவே கரையும் தன்மை உடையவை. எனவே இவற்றை சோப்புடன் கலந்து பயன்படுத்த வேண்டும்
  • பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களான மைக்கோபாக்டீரியம் போன்றவற்றைக் கிரசால்கள் அழிக்கவல்லவை. ஆனால் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களின் ஸ்போர்களை இவை கொல்வதில்லை
  • கொட்டகைகளின் தரைகள், சுவர்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை கிருமி நீக்கம் செய்வதற்கு கிரசால்கள் உகந்தவை. ஆனால் இவற்றிலிருந்து வெளிவரும் பீனாலிக் வாசனையால் பால் கறக்கும் கொட்டகையினை சுத்தம் செய்ய கிரசால்களை உபயோகிக்கக் கூடாது
  • கிரசால்களுக்கான உபயோகிக்கும் அளவு 2-3%
  • தெளித்தல் முறை மூலம் இதனை உபயோகிக்கலாம்
  • ஆனால் கிரசால்கள் கரைசலைத் தயாரிக்க மென்மையான நீரினையே உபயோகிக்க வேண்டும். ஆனால் கடின நீரை உபயோகப்படுத்தினால் உருவாகும் சோப்பு கரைசலின் அடியில் தங்கி விடும்
  • லைசால் எனப்படுவது கிரசாலும் சோப்பும் கலந்த கலவையாகும்

சுண்ணாம்பு (கால்சியம் ஆக்சைடு அல்லது குயிக் லைம்)

  • வாசனைப் பொருளாகவும், கிருமிநீக்க மருந்தாகவும் லைம் பயன்படுகின்றது
  • கால்நடைகளின் எருக்குழிகளிலும், அவற்றின் உடலிலிருந்து வெளியேற்றப்படும் திரவங்கள், கால்நடைப் பண்ணைகளின் தரையிலும், சுவர்களை வெள்ளையடிப்பதற்கும் லைம் எனப்படும் சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது
  • தெளித்தல், தூவுதல், வழிப்பது போன்ற முறைகளின் மூலம் சுண்ணாம்பினை உபயோகிக்கலாம்
  • புதிதாகத் தயாரிக்கப்பட்ட சுண்ணாம்புத் தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்

ஃபீனால் (கார்பாலிக் அமிலம்)

  • பீனால் பல்வேறு விதமான பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயலபடும். ஆனால் ஸ்போர்கள் மற்றும் வைரஸ்களை இது அழிப்பதில்லை
  • கரிமத்தன்மை வாய்ந்த பொருட்கள் இருக்கும் போது இதன் செயல்திறன் பாதிக்கப்படுவதில்லை.ஆனால் எண்ணெய் அல்லது ஆல்கஹால் இருக்கும் போது இதன் செயல் திறன் பாதிக்கப்படுகிறது
  • அரிப்புத்தன்மை வாய்ந்த ஃபீனால் ஒரு நச்சாகும்
  • ஃபீனாலின் செயல்படும் அளவு 1-2 சதவிகிதமாகும்
  • தெளிப்பதன் மூலம் ஃபீனாலை உபயோகப்படுத்தலாம்
  • ஃபீனாலை உபயோகிக்கும்போது கண்கள், தோல் பகுதி மற்றும் துணிகள் மீது படாதவாறு உபயோகிக்க வேண்டும்

குவார்ட்டனரி அமோனியம் பொருட்கள்

  • குவார்ட்டனரி அமோனியம் பொருட்கள் ஒரு கேட்டயானிக் சுத்தப்படுத்தும்  பொருளாகும்
  • ஸ்போர்கள் மற்றும் வைரஸ்களை இது அழிப்பதில்லை
  • பால் பண்ணையில் உபயோகிக்கப்படும்  பாத்திரங்கள், பால் கறப்பவரின் கைகள் மற்றும் மாடுகளின் மடியைத் துடைக்கப் பயன்படுத்தும் துண்டுகள் போன்றவற்றை கிருமி நீக்கம் செய்ய இவை பயன்படுகின்றன
  • செட்ரிமைட் குவார்ட்டனரி அமோனியம் பொருட்களுக்கான ஒரு உதாரணமாகும்
  • கிருமிநாசினியாகச் செயல்படத் தேவைப்படும் அளவு 0.1 சதவிகிதமாகும். மடிக்காம்புகளின் மீது  தடவவும் மடி நோய் வராமல் தடுக்க பால் கறப்பவரின் கைகளைக் கழுவவும் 0.5% கரைசல் பயன்படுகிறது
  • மடியை சுத்தம் செய்யும் துணியை நனைக்கவும், பால் கறப்பவரின் கைகளை சுத்தம் செய்யவும் 0.1 சதவிகித குவார்ட்டனரி அமோனியம் பொருட்கள் கரைசலைப் பயன்படுத்தலாம்
  • இந்தக் கிருமி நாசினிக் கரைசலை உபயோகப்படுத்தி பாத்திரங்களைக் கழுவுவதற்கு முன்பு கொதிக்கும் தண்ணீரில் பால் பண்ணையில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களைக் கழுவ வேண்டும்

சோப்பு

  • சோப்பு ஒரு ஆனயானிக் சுத்தப்படுத்தும் பொருளாகும்
  • சோப்பு கிருமிகளைக் கொல்வதில் செயல்திறன் குறைந்தது
  • பல்வேறு இடங்களை சுத்தம் செய்வதில் குறிப்பாக கால்நடைகளின் தோல் பகுதியைச் சுத்தம் செய்வதற்கு சோப்பு பயன்படுகிறது
  • கிருமிநாசினிகளை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக சோப்பைப் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளலாம்
  • சோப்பை அது பயன்படுத்தும் இடத்தில் நன்றாகத் தேய்த்துப் பயன்படுத்தலாம்
  • பல்வேறு விதமான பகுதிகளின் மேற்பரப்பைச் சுத்தம் செய்ய சோப்பைப் பயன்படுத்தலாம்

சோடியம் ஹைப்போகுளோரைட்

  • இது குளோரின் உள்ள ஒரு கிருமி நாசினியாகும்
  • இது  ஒரு சிறந்த கிருமிநாசினியாகும். டியூபர்குளோசிஸ் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக இது செயல்படுவதில்லை.மேலும் கரிமப்பொருட்கள் இருக்கும்போதும் இந்த கிருமி நாசினி நன்றாக செயல்படாது
  • கிருமி நாசினியாகச் செயல்பட தேவைப்படும் குளோரின் அளவு ஒரு மில்லியனில் 200 பகுதிகளாகும்.மேலும் பாத்திரங்களை சுத்தப்படுத்துவதற்கு 330 மிலி சோடியம் ஹைப்போ குளோரைட்டையும், 200 கிராம் துணி சோடாவையும் 100 லிட்டர் சூடான தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.மாடுகளின் மடியைச் சுத்தப்படுத்த 60 மிலி சோடியம் ஹைப்போ குளோரைட்டுடன் 10 லிட்டர் சுத்தமான தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்

வாஷிங் சோடா (சோடா மண் அல்லது சோடியம் கார்போனேட்)

  • கோமாரி நோய் போன்ற வைரஸ் நோய்களின் கிளர்ச்சி ஏற்படும் போது கால்நடைகளின் கொட்டகையினைச் சுத்தம் செய்ய இந்த கிருமிநாசினி பயன்படுகிறது
  • இது ஒரு நல்ல சுத்தப்படுத்தும் பொருளாகும்
  • கிருமி நீக்கம் செய்ய வாஷிங் சோடாவைப் பயன்படுத்த வேண்டிய அளவு 4% ஆகும்
  • வாஷிங் சோடாக் கரைசலைக் கொண்டு பொருட்களையும், கொட்டகைகளையும் கழுவி கிருமி நீக்கம் செய்யலாம்
  • லை சோடா மண்ணை விட அதிகத்திறனுடைய கிருமிநாசினியாக கோமாரி நோய் ஏற்படுத்தும் வைரஸைக் கொல்வதற்குப் பயன்படுகிறது
  • ஆனால் இதை சூடான கரைசலாக உபயோகப்படுத்தவேண்டும்

குடற்புழுக்களைக் கட்டுப்படுத்துதல்

  • ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் வருடம் நான்கு முறை அதாவது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். நாடாப்புழுக்களின் தாக்குதலைத் தடுக்க எல்லா செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டுக் குட்டிகளுக்கு அவற்றின் மூன்று மாத வயதில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்
  • ஒவ்வொரு வருடமும் பருவ மழைக் காலத்திற்குப் பின்பு  தட்டைப் புழுக்களின் தாக்குதலுக்கு எதிராக மருந்துகளை அளிக்க வேண்டும்
  • குடற்புழுக்களின் தாக்குதல் குறைவாக இருக்கும் போதே ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வது சிறந்த முறையாகும்
  • இளங்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை தகுந்த குடற்புழு நீக்க மருந்தினை உபயோகித்துக் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்
  • வயது முதிர்ந்த ஆடுகளுக்கு 4-6 மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்
  • வயது வந்த பெட்டை ஆடுகளுக்கு கன்று ஈன்ற பிறகு குடற்புழுநீக்கம் செய்யவேண்டும்
  • வயது முதிர்ந்த ஆடுகளுக்கு அவற்றின் சாணத்தைப் பரிசோதித்த பிறகு குடற்புழு நீக்க மருந்துகளை அளிக்கவேண்டும்
  • குடற்புழுநீக்க மருந்துகளைக் கொடுப்பதற்கு முன் 24 மணி நேரம் ஆடுகளுக்கு தீவனம் எதுவும் அளிக்காமல் இருப்பது நல்லது
  • ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளை வருடம் முழுவதும் சுழற்சி முறையில் உபயோகிக்க வேண்டும். இதனால் ஆடுகளின் உடலிலுள்ள குடற்புழுக்களில், குடற்புழு நீக்க மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி உருவாவது தடுக்கப்படும்
  • ஆடுகளின் புழுக்கைகளைத் தனித்தனியாகவோ அல்லது கலந்தோ பரிசோதித்து குடற்புழுக்களின் தாக்குதலைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்கலாம்
  • அந்தந்தப் பகுதிகளிலுள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் அளிக்கவேண்டும்

புற ஒட்டுண்ணிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்துதல்

  • பூச்சிக்கொல்லி மருந்துகளின் கரைசலைத் தயாரித்து அதில் செம்மறி மற்றும் வெள்ளாடுகளை மருந்துக் குளியல் செய்து அவற்றின் உடல் மீது இருக்கும் அக ஒட்டுண்ணிகளான உண்ணிகள் மற்றும் இதர பூச்சிகள் போன்றவை அழிக்கப்பட்டு விடும்
  • நோய்த் தாக்குதலுக்கேற்றவாறு ஆடுகளுக்கு மருந்துக்குளியல் செய்ய வேண்டும்
  • ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆடுகளுக்கு மருந்துக் குளியல் செய்ய வேண்டும்
  • வெயில் உள்ள நாட்களில் மட்டுமே மருந்துக்குளியல் செய்ய வேண்டும்
  • மருந்துக் குளியல் செய்வதற்கு முன்னால் ஆடுகளுக்கு தண்ணீரை அளிக்க வேண்டும்
  • ஆடுகளுக்கு மருந்துக் குளியல் செய்யும் போது, பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆடுகளின் கண்கள், வாய்க்குள் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
  • மருந்துக் குளியல் செய்தவுடன் ஆடுகளை திறந்த வெளியில் விட வேண்டும். இதனால் ஆடுகளின் உடல் நன்றாக காய்ந்து விடும்

இடைநிலை நோய் தாங்கிகளாகச் செயல்படும் பூச்சியினங்களைக் கட்டுப்படுத்துதல்

  • கால்நடைகளின் சாணம்,  கால்நடைக் கொட்டகைகளிலுள்ள இருண்ட ஈரமான மூலைகள் ,தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவை பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடங்களாகும். எனவே மேற்கூறிய பொருட்கள் மற்றும் இடங்களை முறையாக அப்புறப்படுத்தவோ அல்லது சுத்தம் செய்யவோ வேண்டும்
  • உண்ணிகள் மற்றும் இதர இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளின் முட்டைகள் பொதுவாக கால்நடைக் கொட்டகைகளின் மூலை முடுக்குகள், சுவர் இடுக்குகள்,மற்றும் மரப்பொருட்களின் இடுக்குகளில் அப்பூச்சிகளால் இடப்படும். எனவே மேற்கூறிய இடங்களை முறையாக சுத்தம் செய்து உண்ணிகள் மற்றும் இதர ரத்தம் உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்
  • கால்நடைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பொதுவாக ஏப்ரல்-ஜூன் மற்றும் ஜூலை-செப்டம்பர் மாதங்களில் மருந்து பூச்சிக்கொல்லி மருந்து குளியலுக்கு உட்படுத்தவேண்டும்
  • ஆர்கனோபாஸ்பேட் வகையைச் சார்ந்த மேலத்தியான், பாரத்தியான் மற்றும் நெகுவான்  போன்ற பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை எளிதில் அளிக்கக்கூடியவை  என்றாலும், விஷத்தன்மை அதிகம் வாய்ந்தவை
  •  புதியதாக  வெளிவந்துள்ள செயற்கையாகத் தயாரிக்கப்படும் டெல்டாமெத்திரின்,சைபர்மெத்திரின் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளும் சந்தையில் கிடைக்கின்றன
  • பூச்சிக்கொல்லி ரசாயனங்களை உபயோகிக்கும்போது தயாரிப்பாளர்கள் கூறும் அறிவரைகளைக் கட்டாயமாகக் கடைபிடிக்கவேண்டும்

நோய்க்கிருமிகளின் தொற்றினைத் தடுத்தல

  • தீவனத்தை தீவனத்தட்டுகளில் வைப்பதால், தீவனம் புழுக்கைகளால் அசுத்தமடைவதைத் தடுக்கலாம்
  • தீவனத்தட்டுகளும், தண்ணீர்த் தட்டுகளும் சுத்தமாக, அசுத்தமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
  • முறையான மேய்ச்சல் நில மேலாண்மை மூலமாக, குடற்புழுக்களால் மேய்ச்சல் நிலங்கள் மாசடையாமல் பார்த்துக்கொள்ளலாம்
  • 6-12 மாதம் கால்நடைகளின் மேய்ச்சல் இல்லாத மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்துவதால் ஆடுகளுக்கு குடற்புழுக்களின் தாக்கம் ஏற்படுவதைத் தடுக்கலாம்
  • சுழற்சி முறையில் பல்வேறு வகையான கால்நடைகளை மேய்ச்சல் நிலங்களில் மேய அனுமதிப்பதாலும், மேய்ச்சல் நிலங்கள் மூலம் குடற்புழுக்கள் கால்நடைகளுக்குப் பரவுவதைத் தடுக்கலாம்
  • புதிதாக பண்ணைக்கு வாங்கப்பட்ட கால்நடைகளை முதல் 30 நாட்களுக்குத் பண்ணையிலுள்ள மற்ற கால்நடைகளுடன் சேர்க்காமல் தனியாகப் பிரித்து வைத்து, குடற்புழு நீக்கம் செய்த பிறகு பண்ணையிலுள்ள இதர கால்நடைகளுடன் சேர்க்கலாம்
  • இளங்கால்நடைகளை பண்ணையிலிருக்கும் வயதான கால்நடைகளிலிருந்து தனியாகப் பிரித்துப் பராமரிப்பதால் நோய்த்தொற்று கால்நடைகளுக்கிடையே பரவுவதைத் தடுக்கலாம்
  • நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பண்ணையிலுள்ள இதர கால்நடைகளிலிடமிருந்து தனியாகப் பிரித்து வைத்து பராமரிக்க வேண்டும்
  • நோய்க்கான சிகிச்சை அளித்த பிறகு, நோய்த்தடுப்புக்கான செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும்
  • தகுந்த தடுப்பூசிகள் கிடைக்கும்பட்சத்தில், தடுப்பூசிகளைப் பயன்படுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கலாம்

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கான தடுப்பூசி அட்டவணை

நோய் தடுப்பூசி

டெட்டனஸ் எனும் வாய்ப்பூட்டு நோய்

பிறந்த 48 மணி நேரத்திற்குள்

கோமாரி நோய்

2ம் மாத வயதில் பிறகு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை

வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டு அம்மை

ஆறு மாத வயதில், பிறகு வருடம் ஒரு முறை, நோய்க்கிளர்ச்சியுற்ற பகுதிகளில் தடுப்பூசி அளித்தல்

அடைப்பான்

ஆறு மாத வயதில், பிறகு வருடம் ஒரு முறை, நோய்க்கிளர்ச்சியுற்ற பகுதிகளில் தடுப்பூசி அளித்தல்

துள்ளுமாரி நோய்

ஆறு மாத வயதில், பிறகு வருடம் ஒரு முறை, பருவ மழைக் காலத்திற்கு முன்பாகவே தடுப்பூசியினை அளித்து விட வேண்டும்

ஆட்டுக்கொள்ளை நோய்

ஆறு மாத வயதில், பிறகு வருடம் ஒரு முறை, நோய்க்கிளர்ச்சியுற்ற பகுதிகளில் தடுப்பூசி அளித்தல்

நீல நாக்கு நோய்

ஆறு மாத வயதில், பிறகு வருடம் ஒரு முறை

மேலே செல்க