செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பிறந்த ஆட்டுக்குட்டிகளைப் பராமரிப்பது எப்படி?

பிறந்த ஆட்டுக்குட்டிகள் பராமரிப்பு

 1. ஆட்டுக்குட்டிகள் பிறந்தவுடன் அவற்றின் நாசித்துவாரத்தில் ஏதேனும் அடைப்பிருந்தால் அதனை உடனடியாக நீக்கி அவை எளிதில் மூச்சுவிட வழிவகை செய்ய வேண்டும்.

 2. தொப்புள் கொடியின் மீது டிங்சர் அயோடின் மருந்தினைத் தடவி அதனை நுண்கிருமிகள் தாக்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 3. மூன்று அல்லது நான்கு குட்டிகள் ஈன்ற ஆடுகளில் எல்லாக் குட்டிகளுக்கும் போதிய பால் அளிக்க இயலாது. அத்தகைய சூழ்நிலையில் குட்டிகளுக்கு பால் புட்டிகளைக் கொண்டோ அல்லது பாத்திரத்தில் பாலை ஊற்றியோ குடிக்கச் செய்ய வேண்டும்.

 4. வயதான பெட்டை ஆடுகள் பிறந்த தனது குட்டிகளுக்கு பால் கொடுப்பதில் ஆர்வமின்றி காணப்படும். அச்சமயங்களில் அவற்றை மடக்கிப் பிடித்து குட்டிகள் சீம்பாலூட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

 5. முதல் இரண்டு முதல் மூன்று வார வயதுடைய குட்டிகளுக்கு நாள்தோறும் 900 மில்லி முதல் 1 லிட்டர் வரை பால் கிடைக்கச் செய்ய வேண்டும். இதனை இரு வேலையாகக் கொடுக்கலாம். மூன்று முதல் நான்கு மாத வயதானக் குட்டிகளுக்கு பால் கொடுப்பதை  நிறுத்தி விட வேண்டும்.

 6. குட்டிகள் நன்கு ஓடி விளையாடும் வகையில் போதிய இடவசதி செய்து தரப்பட வேண்டும். மூன்று மாத வயதில் குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து வளர்க்கலாம். ஆல்லது தாயுடன் மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.

செம்மறி மற்றும் வெள்ளாடுகளை இனவிருத்தி செய்ய சிறந்த தருணம் எது?

ஆடுகளில் இனவிருத்தி வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யப்படுகின்றன.
இந்தியாவில் மூன்று இனச்சேர்க்கைக் காலங்கள் உள்ளன. அவை


மார்ச் முதல் ஏப்ரல் வரை

ஜீன், ஜூலை வரை
செப்டம்பர் முதல் அக்டோபர் வரைசமவெளிப் பகுதிகளில் ஜீன், ஜூலை மாதத்தில் செய்யப்படும் இனச்சேர்க்கையில் ஆடுகள் சினையாதல் அதிகரித்துக் காணப்படுகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் மார்ச், ஏப்ரல் மாத இனச்சேர்க்கையில் ஆடுகள் சினையாதல் அதிகரித்துக் காணப்படுகிறது.

 1. வயது குறைந்த (அதாவது ஒரு வருடத்திற்கும் குறைந்த வயதுடைய) ஆடுகளை இனவிருத்தி செய்தால் குட்டிகள் வளர்ச்சி குன்றி பிறப்பதுடன் அதிக குட்டிகள் இறப்பதற்கும் காரணமாகின்றது.

 2. பெட்டை ஆடுகளை போதிய உடல் எடை அடையும் காலம் வரை இனச்சேர்க்கைக்கு அனுமதிக்கக் கூடாது. அவற்றை இனச்சேர்க்கைக்கு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன்பு நன்கு தழைத்த மேய்ச்சல் நிலத்தில் மேயச் செய்தோ அல்லது அதிக தீவனம் அளித்தோ தயார் செய்ய வேண்டும்.  

                பொதுவாக வெள்ளாடுகள் ஆண்டு முழுதும் சினைக்கு வரும் பண்புடையன. இருப்பினும் பருவமழையும் அதன் காரணமாக கிடைக்கும் நன்கு தழைத்த தீவனப் புற்களும் அவை சினைக்கு வருவதில் குறிப்பிடத்தக்க காரணிகளாக விளங்குகின்றன.

ஆடுகள் அதிகமாகக் குட்டி ஈனக் கூடிய காலங்கள் பொதுவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை  ஜனவரி முதல் ஏப்ரல் வரை உள்ள காலங்களில் பிறந்த குட்டிகள் உயிரிழப்பின்றி நன்கு வளரக்கூடியதாக உள்ளன. ஆகவே ஆடுகள் இனச்சேர்க்கை செய்யும் காலத்தை அதற்கேற்ப மாற்றியமைப்பது நல்லது (அதாவது ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை) கிடா ஆடுகளை பெட்டை ஆடுகளிலிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும். இனச்சேர்க்கை சமயங்களில் மட்டும் சேர்த்து விட வேண்டும். கிடா ஆடுகளை பெட்டை ஆடுகளுடன் இரவில் சேர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நல்லது.

செம்மறி/வெள்ளாடுகளுக்கு அடர் தீவனம் கொடுப்பது அவசியமா

ஆடுகளுக்கு கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் அடர் தீவனம் அளிப்பது அவசியம்

 1. போதிய அளவிற்கு தரமான தீவனப் பயிர்கள் கிடைக்காத நிலைமை
 2.  கருவுற்றிருக்கும் காலத்தின் கடைசி பகுதி மற்றும் பால் கொடுக்கும் காலத்தின் முற்பகுதி ஆகிய சமயங்களில் அதிகமாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை அளிக்க அடர் தீவனம் அளித்தல் அவசியம்.
மேய்ச்சலுடன் எந்த வகை தீவனங்களை செம்மறி/வெள்ளாடுகளுக்கு கூடுதலாகத் தர வேண்டும்?

மேய்ச்சலுடன் ஆடுகளுக்கு கூடுதலாக அளிக்கக் கூடிய  தீவனங்கள்
i)          கடலைக்கொடி
ii)         மர இலைகள்
iii)        பயறுவகைத் தீவனப் பயிர்கள்
iv)       அடர் தீவனங்கள்

சாகுபடி செய்யக்கூடிய தீவனப் பயிர்கள் யாவை? அவற்றின் விதை/கரணைகள் எங்கு கிடைக்கும்?

a)தீவனப் பயிர்கள்:

1. தானிய வகை தீவனப் பயிர்கள் :கோ- 27  தீவனப்பயிர், கோ-10 தீவனப்பயிர், தீவன மக்காச்சோளம்,  தீவனக் கம்பு (கோ-8), நேப்பியர் &  கம்பு ஒட்டுப்புல்- கோ-1, கோ-2, கோ-3, கினிப்புல், ஹமில் புல், கொழுக்கட்டைப்புல், சுடான் புல், பாராப் புல், கர்னால் புல்.2. பயறுவகைத் தீவனப்பயிர்கள்:காராமணி (கோ-5), வேலிமசால், முயல் மசால், குதிரை மசால், சணப்பை கலப்ப கோனியம்.b) தீவன மரங்கள்:

வெல்வேலம், கருவேலம், குடைவேலம், பெருமரம், வாகை, பலா, வேம்பு, மந்தாரை, இலவம், வேடத்தான், தூங்குமூஞ்சி, முல்லு முருங்கை, ஆலமரம், அரசமரம், வேலிக்காட்டாமணக்கு, அச்சன், கொடுக்காப்புளி, ஒதியன், சவுண்டல், மா, முருங்கை, வேலிக்கருவேல், புங்கம், அகத்தி, புளி, பூவரசு, இலந்தை.


புல் கரணைகள் கிடைக்குமிடம்
விலங்கின அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம்
காட்டுப்பாக்கம்
காட்டாங்குளத்தூர் அஞ்சல்-603 203.
காஞ்சிபுரம் மாவட்டம்.

 

விதைகள் கிடைக்குமிடம்
1.         மாநில விதைப்பண்ணை, படப்பை, காஞ்சிபுரம் மாவட்டம்.
2.         மண்டல தீவனப்பயிர் ஆராய்ச்சி மற்றும் செயல் விளக்க மையம்
அலமாதி, திருவள்ளுர் மாவட்டம்-600 052.
3.         தாவர மரபியல் மற்றும் இனவிருத்தித் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-641 003.
4.         வேளாண் தொழில் நுட்பத் தகவல் மையம்,
காட்டுப்பாக்கம்
காட்டாங்குளத்தூர் (அஞ்சல்)-603 203.
காஞ்சிபுரம் மாவட்டம்.

வெள்ளாடுகளுக்கு மேய்ச்சல் அவசியமா?

மேய்ச்சல் முறை வளர்ப்பில் ஆடுகள் மேய்ச்சலை மட்டுமே நம்பியுள்ளன. மித தீவர முறை வளர்ப்பில்  போதிய அளவு தீவனப்புற்கள் கிடைக்கச் செய்தல்  அவற்றின் வளர்ச்சிக்கு அவசியம்.

செம்மறி/வெள்ளாடுகளுக்கு அளிக்க வேண்டிய தீவன விகிதங்ககளக் கூறு?

a. 12 வார வயது வரை உள்ள குட்டிகளுக்கான தீவனம்


இரண்டு வார வயதிற்குப் பின் 100கி -200கி  இளம் குட்டித் தீவனம் உடல் எடைக்கு ஏற்றவாறு அளிக்க வேண்டும்.
இளம் குட்டித் தீவன மாதிரி
            உடைத்த மக்காச்சோளம்    :           67%
            கடலை பிண்ணாக்கு            :           20%
            கோதுமைத் தவிடு                :           10%
            தாது உப்பு                             :           2%
            சாதாரண உப்பு                     :           1%


வளரும் மற்றும் விற்பனை நிலை அடையும் குட்டிகளுக்கானத் தீவனம் தரமான தீவனப் பயிர்கள்அளிப்பதுடன் கீழ்க்காணும் அளவில் அடர் தீவனக் கலவையும் அளித்தல் வேண்டும்.

உடல் எடை (கிலோ)

அடர் தீவனம் கி/நாள்

தரமான தீவனப் பயிர்கள்
அளிக்கும் நிலையில்

மேய்ச்சல் மட்டும்

10-15

50

300

16-25

100

400

26-35

150

600

மாதிரி அடர் தீவனக் கலவை (15-35 கிலோ உடல் எடை உள்ள ஆடுகளுக்கு)
மக்காச்சோளம்                     -           25%
சோளம்                                  -           22%
கடலைப்பிண்ணாக்கு          -           25%
அரிசித் தவிடு                        -           25%
தாது உப்பு                             -           2%
சாதாரண உப்பு                     -           1%

ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப உகந்த நேரம் எது?

வெயில் அதிகம் இல்லாத நேரங்களான காலை 6.30 முதல் 9.30 வரையிலும், மாலை 3.00 முதல் 7.00 வரையிலும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப உகந்த நேரங்கள்.

தீவிர மற்றும் மிதத் தீவிர முறையில் செம்மறி/வெள்ளாடுகளுக்கு அளிக்க வேண்டிய தீவன விகிதங்கள் யாவை?

i) தீவிர முறை
வெள்ளாடு அதன் உடல் எடையில் நான்கு சதவீதம் உலர் தீவனம் எடுத்துக் கொள்ளும். அதனடிப்படையில் ஒரு வளர்ந்த ஆட்டிற்கு 1.20-1.30 கிலோ உலர் தீவனம் அளிக்க வேண்டும். வேண்டிய அளவு பசுந்தீவனம் அளிப்பதுடன் ஒரு நாளைக்கு 250 கி-300கி வரை அடர் தீவனம் அளிக்க வேண்டும். பசுந்தீவனத்தை 60 பங்கு தானிய வகைத் தீவனப் பயிராகவும், 30 பங்கு பயறு வகைத் தீவனப் பயிராகவும், 10 பங்கு மரவகைத் தீவனமாகவும் அளிக்கலாம்.

மாறாக முழுமையான தீவனம் அளிக்கும் முறையில் 40 பங்கு அடர் தீவனத்தையும் 60 பங்கு நார்த் தீவனத்தையும் குச்சித் தீவனம் அல்லது மாவுத் தீவனமாக அளிக்கலாம். வெள்ளாடுகள் மேலோட்டமாக மேய்வதை விரும்புவதால் 1:1விகிதத்தில் நறுக்கப்பட்ட தீவனப்புற்களையும் மர இலைகளையும் அளிக்கலாம். இம்முறையில் தீவன மாற்றுத் திறன் அடர் தீவனம், பசும்புல் அளிப்பதைக் காட்டிலும் குறைவாக இருந்தாலும் இது சிக்கனமானது.

ii) மிதத் தீவிர முறை
மேய்ச்சலுக்குப் பின்ஆடுகளைக் கூடுதலாக பயறுவகைத் தீவனப்பயிர்கள் உள்ள மேய்ச்சல் நிலங்களில் மேய விடலாம். (அல்லது) தானிய கலவை, பயறுவகை மற்றும் மர இலைகள் அடங்கிய பசுந்தீவனத்தை 1 முதல் 1.5 கிலோ வரை ஒரு ஆட்டிற்கு கூடுதலாக அளிக்கலாம். (அல்லது) 100கி முதல் 200கி வரை அடர் தீவத்தை ஒரு ஆட்டிற்கு கூடுதலாக அளிக்கலாம்.   

தீவனம் மற்றும் பசுந்தீவனங்கள் விரயமாவதை எவ்வாறு தடுக்கலாம்?

அடர் தீவனத்தை குச்சித் தீவனமாகவோ, குருணையாகவோ அளிப்பது தீவன விரயத்தைக் குறைக்கும். மாவாக அளிக்கும்போது சிறிதளவு தண்ணீரைத் தெளித்தபின் அளித்தால் தீவனம் விரயமாவது தடுக்கலாம். பசுந்தீவனத்தை உயரத்தில் கட்டித் தொங்கவிடுவதன் மூலமும், சிறு துண்டாக நறுக்கி அளிப்பதன் மூலமும் தீவன விரயத்தை தடுக்கலாம்.

மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் இறைச்சி விற்பனைக்கு முன் பரிசோதிப்பதற்கான நடைமுறை உள்ளது போல் பஞ்சாயத்து மற்றும் நகரப் பஞ்சாயத்துகளில் உள்ளனவா?

ஆம். அப்பகுதியிலுள்ள கால்நடை மருத்துவமனையில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்களால் இறைச்சிகள் சாப்பிட உகந்ததா என பரிசோதிக்கப்பட வேண்டும்.

வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை வாய்ப்புகள் உள்ளது போல் இறைச்சி விற்பனைக்கு இல்லாததன் காரணம் என்ன?

தற்போதைய சூழலில் இறைச்சி உற்பத்தி அன்றாடத் தேவையின் அடிப்டையிலேயே நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் மிகக் குறைந்த அளவிலான வியாபாரிகளே இத்தொழிலில் உள்ளனர்.

அன்றாடத் தேவைக்கு மேல் ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதில்லை. இக்காரணங்களினால் உற்பத்தியாளர்கள் ஒழுங்குமுறை விற்பனை வாய்ப்புகள் குறித்து பெரிதும் ஆர்வமின்றி உள்ளனர். இறைச்சி எளிதில் கெட்டுவிடக் கூடிய உணவுப் பொருளாதலால் இதற்கு குளீருட்டல் மற்றும் உறைபதனம் செய்யும் வசதிகள் தேவைப்படுகின்றன. உறைபதனம் செய்யப்பட்ட இறைச்சிகளை நுகர்வோரும் அதிகம் விரும்புவதில்லை.

சுகாதாரமான இறைச்சி உற்பத்தி என்றால் என்ன?

சுகாதாரமான இறைச்சி உற்பத்தி பண்ணையில் தொடங்கி நுகர்வோரைச் சென்றடையும் வரை பின்பற்றப்படுகிறது.  ஆரோக்கியமான விலங்குகள் சுகாதாரமான சூழ்நிலையில் வளர்க்கப்பட்டு இறைச்சிக் கூடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். இறைச்சி அறுவைக் கூடத்தில் ஆடுகளை அறுப்பதற்கு முன்பும், இறந்ததற்கு பிறகும் சுகாதாரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உண்பதற்கு ஏற்கப்படாத இறைச்சிகளையும், இறைச்சிக் கழிவுகளையும் முறைப்படி இறைச்சிக் கூடத்திலிருந்து நீக்க வேண்டும். இறைச்சிக் கூடத்திலிருந்து இறைச்சி விற்பனை செய்யும் இடங்களுக்கு இறைச்சியை தூய்மையான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும். இறைச்சி விற்பனை செய்யப்படும் இடங்களில் முழு சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். நுகர்வோருக்கு அளிக்கும் போது இறைச்சி முறைப்படி உறையிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.

செம்மறி/வெள்ளாடுகளை இறைச்சிக்காக அறுக்கும்போது இரத்தத்தை முழுமையாக வடியச் செய்வது எவ்வாறு?

இறைச்சிக்காக வெட்டப்படும் அனைத்து விலங்குகளும் அவற்றிற்கு வலி தெரியாதவாறு மயக்கமுறச் செய்து பின் வெட்டப்பட வேண்டும். ஆடுகள் மயக்கமடையச் செய்யப்பட்டவுடன் அவற்றின் கழுத்துப் பகுதியில் உள்ள இரத்த நாளங்கள் அறுக்கப்பட வேண்டும், ஜீரம் உள்ள ஆடுகள், வளர்ச்சிக் குன்றிய ஆடுகளில் சரிவர இரத்தம் நீக்கப்படுவதில்லை.

இறைச்சி அறுவைக் கூடம் மற்றும் இறைச்சி விற்பனைக் கூடங்களை தூய்மையாக பராமரிப்பது எப்படி?

இறைச்சி அறுவைக் கூடத்தின் அனைத்து செயல்பாடுகளும் ஆடுகளின் உடல் தொங்கவிடப் பட்ட நிலையிலேயே செய்யப்பட வேண்டும். எந்த ஒரு நிலையிலும் ஆடுகளின் உடல் தரையில் படக் கூடாது. சுத்தமான தண்ணீர் போதிய அளவு இருத்தல் அவசியம். ஆடு வெட்டுபவர்கள் உறுப்புகளை ஆட்டின் உடலிலிருந்து நீக்கும்போது அவை அறுபடாவண்ணம் கவனத்துடன் வெட்டி எடுக்க வேண்டும். இறைச்சி வெட்டப்பட்ட பின் இறைச்சி அறுவைக் கூடம் மற்றும் அதில் உள்ள உபகரணங்களை, நன்கு சுரண்டி பரிந்துரைக்கப்பட்ட கிருமிநாசினிகள் மூலம் வெந்நீர் கொண்டு கழுவ வேண்டும்.

இறைச்சி விற்பனைக் கூடம் ஈக்கள் மற்றும் எலிகள் தொல்லை இல்லாதவாறு இருத்தல் வேண்டும்.
ஓவ்வொரு நாளும் செயல்பாடுகள் முடிந்த பின் பரிந்துரைக்கப்பட்ட கிருமிநாசினி கொண்டு கூடத்தின் அனைத்தப் பகுதிகள் மற்றும் உபகரணங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

அதிக உயரமுள்ள மலைப்பகுதிகளில் ஆடுகளை வளர்க்க இயலுமா? அத்தகைய பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?

வளர்க்கலாம். உயரமானப் பகுதிகளின் முக்கியப் பிரச்சினை குடற்புழு மற்றும் உண்ணி, பேன் தாக்கங்களே, ஆடுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் குடற்புழு நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆட்டுக் குட்டிகள் பிறந்து முதல் மாதம் வரை அதிகக் குளிரினால் பாதிக்கப்படாத வகையில் அளிக்கப்பட வேண்டும்.

கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பு கிராமப்புற விவசாயிகளிடையே பிரசித்தி பெறாததன் காரணம் என்ன?

கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பில் தரமான மற்றும் விதவிதமான பசுந்தீவனங்கள் அளிக்கப்பட வேண்டும். இது விவசாயிகளுக்கு கடினமானது ஆகையால் கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பு அவ்வளவாக பிரசித்தி பெறவில்லை.

மிதத் தீவிர முறையில் வெள்ளாடு வளர்ப்பது பற்றியத் தகவலை தெரிவிக்கவும்?

மிதத் தீவிர முறை வெள்ளாடு வளர்ப்பு இலாபகரமானது. இம்முறையில் ஆடுகளுக்கு இரவு மட்டும் அடைப்பதற்கு ஒரு பட்டியோ கொட்டகையோ போதுமானது. இதற்கு ஒரு ஆட்டிற்கு 10 சதுர அட இடம் தேவை. தரைப்பகுதி பக்கவாட்டைக் காட்டிலும் ஒரு அடி உயரத்தில் இருத்தல் வேண்டும். மண்தரையே போதுமானது. கொட்டகையின் உயரம்  பக்கவாட்டில் 7 முதல் 8 அடி உயரத்துடனும் நடுவில் 10-11 அடி உயரத்திலும் அமைக்கலாம். கொட்டகைக்கு பக்க வாட்டுச் சுவர் தேவையில்லை. நான்கு அடி உயரம் வரை கம்பி வலை அமைத்தால் போதும். மேய்ச்சலுக்குப்பின் ஆடுகளுக்கு கூடுதலாக பசுந்தீவனங்களும், குறைந்த விலையுள்ள  வேளாண் உப பொருட்களும் அளிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஆடுகளை 8 மணி நேரம் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். ஆடுகளுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்தும் ஆறு மாதத்திள்கு ஒரு முறை உண்ணி பேன் நீக்க மருந்துக் குளியலும் அளிக்க வேண்டும்.

செம்மறி/வெள்ளாடுகளை கொட்டில் முறையில் வளர்க்க இயலுமா?

வளர்க்க இயலும். ஆனால் அதற்கு பசுந்தீவன சாகுபடிக்கு போதிய அளவு இட வசதியும், குறைந்த விலை வேளாண் உப பொருட்களும் நல்ல விற்பனை வாய்ப்பும் இருத்தல் அவசியம்.

தாயில்லாத அல்லது தாயினால் ஒதுக்கப்பட்ட செம்மறியாட்டுக் குட்டிகளை வளர்ப்பது எப்படி?

இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈன்ற செம்மறியாடுகள் போதுமான பால் அளிக்க இயலாததால் குட்டிகளை புறக்கணிக்கக் கூடும். அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட அல்லது நோயுற்ற குட்டிகளை கண்டறிந்து பராமரிப்பது மிகவும் அவசியம். ஓரே நேரத்தில் நிறைய குட்டிகள் பிறந்திருக்கும் நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட குட்டிகளை கண்டறிவது மிகவும் கடினம். இத்தகைய குட்டிகள் மந்தையிலிருந்து விலகிக் காணப்படும், வளர்ச்சிகுன்றி சோர்வுடன் இருக்கும். இத்தகைய குட்டிகளை வெள்ளாட்டுப்பால் அல்லது பசும்பாலை கையினால் ஊட்டி பராமரிக்கலாம்.

                        பிறந்தவுடன் குட்டிகளுக்கு சீம்பால் அளிக்க இயலாவிட்டால் சுடவைத்த பாலில் விளக்கெண்ணை அல்லது பாராஃபின் கலந்து கொடுக்கலாம். குறைந்த பால் உற்பத்தி அல்லது தாயினால் சரிவர கவனிக்கப்படாத குட்டிகளுக்கு கீழ்கண்டபடி கூடுதல் பாலினை அளிக்கலாம்.

மீன்  எண்ணெய் கலக்கப்பட்ட சுடவைத்த பாலை உடல் எடையில் பத்தில் ஒரு பங்கை அளிக்கலாம்.
முதல் 15 நாட்கள்                              :           ஒரு நாளைக்கு 6 முறை
15 முதல் 30 நாட்கள்                        :           ஒரு நாளைக்கு 4 முறை
1 முதல் 3 மாதம் வரை                :           ஒரு நாளைக்கு 2 முறை

செம்மறி/வெள்ளாடுகளின் வயதைக் கண்டறிவது எப்படி?

ஆடுகளின் பற்கள் அமைப்பு
வெட்டுப் பல் கோரைப் பல் முன் கடவாய் பல்  கடவாய்ப் பல்
பால் பற்கள்         0/4                         0/0                         3/3                         0/0
நிரந்தர பற்கள்    0/4                         0/0                         3/3                         3/3

 

14-18 மாதம் (இரண்டு பற்கள்)      முதல் ஜோடி நிரந்தர வெட்டுப் பற்கள்
20-24 மாதம்  (நான்கு பற்கள்)        இரண்டாவது ஜோடி நிரந்தர வெட்டுப்பற்கள்
26-30 மாதம்  (ஆறு பற்கள்)                        மூன்றாவது ஜோடி நிரந்தர வெட்டுப்பற்கள்
32-36 மாதம்  (கடை சேர்தல்)         நான்காவது ஜோடி நிரந்தர வெட்டுப்பற்கள்

தீவிர முறை (கொட்டில் முறை) வெள்ளாடு வளர்ப்பிற்கு ஏற்ற வெள்ளாட்டினங்கள் யாவை?

தலைச்சேரி, ஜமுனாபாரி, கன்னி ஆடு, கொடி ஆடு, போயர் கலப்பினம்.

செம்மறி/வெள்ளாடுகளில் உடல் வளர்ச்சி குறைந்து காணப்படுவதற்கு என்ன காரணம்?

1. கருவுற்ற நிலையில் தாயின் தீவனத் தேவை குறைபாடு
2. அதிகக் கூட்டமாக உள்ள இடத்தில் வளர்தல்.
3. தாயின் போதிய கவனிப்பின்மை
4. குடற்புழு தாக்கம்
5. நிமோனியா, கழிச்சல் போன்ற நோய்கள்
6. சரிவர மேய்ச்சல் இல்லாமை.

கம்பள இன செம்மறியாடுகளில் கம்பள மயிர்களின் இழப்பு ஏற்படுவது ஏன்?

கம்பள மயிரிழப்பிற்கான காரணங்கள் பின்வருமாறு

 1. படர்தாமரை, பிற தோல் வியாதிகள்

 2. சவுண்டல் மர இலையை அதிக அளவில் நீண்ட நாட்களுக்கு அளித்தல்

 3. தாதுக் குறைபாடு குறிப்பாக (துத்தநாகம்)

 4. தவறுதலான நடைமுறைகளால் ஏற்படும் காயங்கள்

        கம்பள மயிரிழப்பு என்பது உரிய காலத்திற்கு முன்னரே ஆட்டின் முடி உதிர்வதால் ஏற்படுகின்றது. இரத்தத்தில் துத்தநாகக் குறைபாடு உள்ளமைiயாலும் முடி உதிர்வது ஏற்படுவதால் தீவனத்தில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் “நு” சேர்த்து அளித்தல் வேண்டும்.

ஆடுகளில் தாடை வீக்க நோய் ஏற்பட்டால் என்ன செய்வது?

            ஆடுகளில் இந்நோயின் தாக்கம் குறைவாகவே காணப்படுகிறது. கல்லீரல் புலுவின் தாக்கத்தில் தாடை வீக்கம் ஏற்படக் கூடும். அத்தகைய நேரத்தில் கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி மருந்து அளிக்க வேண்டும். ஆடுகளுக்கு எல்லா சத்துக்களும் கிடைக்கக் கூடிய வகையில் சரிவிகித தீவனம் அளிப்பதும் அவசியம்.

ஆடுகளில் குடல் அழற்சியைக் கட்டுப்படுத்துவது எப்படி?

ஆடுகளில் இரத்தக் கழிச்சல் நோயே குடல் அழற்சிக்குப் பிரதானக் காரணமாகும். கழிச்சலுக்கான            பொதுவான மருந்துகளுடன் இரத்தக் கழிச்சல் ஒட்டுயிரிக்கான எதிர்ப்பு மருந்தையும் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி  3-5 நாட்கள் அளிக்க வேண்டும்.

வெள்ளாடுகள் இருமும்பொழுது நாசித்துவாரம் வழியாக புழுக்கள் வருகின்றன. இதற்கு என்ன காரணம்?

ஈஸ்ட்ரஸ் ஓவிஸ் என்கின்ற பூச்சியின் இளம் புழுக்களின் தாக்கமே இதற்குக் காரணம்.

வெள்ளாடுகளில் நுரையீரல் அழற்சி (நிமோனியா) அதிகம் காணப்படுவதற்கு காரணம் என்ன?

பாதுகாப்பற்ற கொட்டகை, குளிரான சீதோஷ்ண நிலை.

கிராமங்களில் ஆடுகளில் கழிச்சலைப் போக்க சுண்ணாம்புத் தண்ணீரையும்., ஓமத் தண்ணீரையும் அளிக்கின்றனரே இது சரியா?

தவறு. இதற்கு மாற்றாக வாய்வழியே கொடுக்கக்கூடிய  நீர்ச்சத்து மருந்துகளை  அளிக்கலாம்.

ஆடுகளில் மடிவீக்க நோயைத் தடுப்பது எப்படி?

பால் கறவைக்குப் பிறகு ஆட்டின் பால் காம்பு  30 நிமிடங்கள் திறந்த நிலையில் இருப்பதால் அந்நேரத்தில் அவை தரையில் படுக்க நேரிட்டால் பால் காம்பில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளத. ஆதலால் பால் கறந்த பின் அவற்றிற்குத் தீவனம் அளிப்பதன் மூலம் அவை தரையில் படுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தாடை வீக்கம், கழிச்சல், தலை வீக்கம் மற்றும் கடைசியாக இறப்பும் எங்களது ஆட்டு மந்தையில் அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கானத் தீர்வு என்ன?

இது குடற்புழு தாக்கத்தினால் ஏற்படுகிறது. முறையான குடற்புழு நீக்க சிசிச்சை அளிப்பதன் மூலம் இதனைத் தடுக்கலாம்.

நீல நாக்கு நோயின் தாக்கத்தை கண்டறிவது எப்படி? நோயின் தாக்கம் ஏற்படும் என்று முன் கூட்டியே அறிய முடியுமா? இந்நோயைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

நீலநாக்கு நோயின் தாக்கத்தை அதன் அறிகுறிகளை வைத்து எளிதில் கண்டறியலாம். கூலிகாய்டு எனப்படும், ஒரு வகைப் பூச்சி மூலம் இந்நோய் பரவுகின்றது.  கூலிகாய்டு பூச்சிகளை ஒழிப்பதன் மூலம் இந்நோயைக் குணப்படுத்தலாம்.

இறைச்சி விற்பனைக்கடை சிறிய அளவில் தொடங்க கடன் பெறுவது எப்படி?

சரியான தீட்ட வரைவினை தயார் செய்து ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை அணுகி கடன் பெறலாம்.

ஆடுகள் விற்பனையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் யாவை?

எந்த ஒரு பொருள் விற்பனையிலும் அப்பொருளின் உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் இடையில் சம்மந்தப்படும் இடைத்தரகர்கள், வியாபாரிகள் இவர்களின் எண்ணிக்கை குறைய  குறைய லாபம் அதிகரிக்கும், இது ஆடு விற்பனைக்கும் பொருந்தும். மேலும் ஆட்டினை இறைச்சி அல்லது இறைச்சிப் பொருளாக மாற்றி விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம். ஆட்டுப் பண்ணையாளர்கள் ஒருக் குழுவாகச் செயல்படுவதன் மூலமும் ஆட்டு விற்பனை மற்றும் பண்ணைக் கொள் முதல் இரண்டிலும் பேரத்தில் ஈடுபடவும் நல்ல இலாபம் பெறவும் வாய்ப்புண்டு.