தோட்டக்கலை :: நிழ எழிலூட்டுதல் :: தோட்டக்கலையின் வகைகள்

அழகுத் தோட்டம் அமைக்கத் திட்டமிடுதல்

பூங்காக்கள் அமைப்பது

வளர்ந்து வரும் நாகரிக சூழலில் பூங்காக்கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இந்த பூங்காக்கள் பல்வேறு வகைகளில் மக்களுக்கு உதவுகின்றது. அதாவது பகல் உழைப்பின் அசதியைப் போக்கவும், குழந்தைகளின் பொழுது போக்கிற்கும் படிப்பினையூட்டும் இடமாகவும், பூங்காக்களிலுள்ள மரங்களினால் அந்தப் பகுதி குளிர்ச்சியாகவும், தூசு மற்றும் சத்தம் போன்ற மாசு கட்டுப்படுத்தப்படுகிறது. பூங்கா அமைக்கும் பொழுது அதன் அளவு மிகவும் முக்கியமானதாகும். அப்பகுதியில் வாழும் மக்களின் எண்ணிக்கைக் கேற்ப அதன் பரப்பு அமைய வேண்டும்.

Floribunda rose

பூங்காவில் பல்வேறு தோட்ட அமைப்புகளையும் உருவாக்க வேண்டும். அதாவது முறையான தோட்டம் நான்கு பக்கங்களிலும் சமமாகப்பிரித்து அவைகள் ஒரே அளவில் இருக்க வேண்டும். இதனைப் பொதுவாக பூங்காவின் முன் பகுதியில் அமைக்க வேண்டும். சாலைகளின் இருபுறமும் நேராக வளரும் நிழல் தரும் மரங்களைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அமைப்பதினால் நிழலில் நடக்கும் போது மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். முக்கிய சாலையிலிருந்து பல்வேறு கிளைப் பாதைகள் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கும் பொழுது அதன் முகப்பில் அலங்கார வளைவுகளை அமைக்க வேண்டும். மேலும் அழகு சேர்க்க தொடர்ந்து அலங்கார வளைவுகளை அமைத்து அதன் மேல் பகுதியில் கொடி வகை பூச்செடிகளை வளர விட வேண்டும். மேலும் ஆங்காங்கே குத்துச் செடிகள், செடிகளினால் அமைக்கப்பட்ட பல்வேறு அமைப்புகள் உருவாக்க வேண்டும். பூங்காவில் மக்கள் அமர்ந்து ரசிப்பதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் உட்காரும் இருக்கைகள் அமைக்க வேண்டும். அதிகமாக வரும் மக்கள் மொத்தமாக அமர்ந்து விளையாட சில பகுதிகளில் மரங்களை கூட்டமாக நடவு செய்து நல்லதொரு நடவுப்பகுதியையும் உருவாக்க வேண்டும். தண்ணீர் தொட்டிகள், ஓடும் நீர் நிலைகள், நீரூற்று போன்றவை முக்கியமாக அமைக்க வேண்டும். அதிகமான இடங்களில் திறந்தவெளி புல்தரை அமைக்க வேண்டும். மரங்களின் அடியில் நிழலில் வளரக் கூடிய புற்களைக் கொண்டு புல்தரைஅமைக்க வேண்டும். பெரிய பூங்காக்களில் புல்தரை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

Impatiens balsamina Zinnia

பூங்காவில் மேலும் அழகு சேர்க்க நல்லதொரு வளைவுகள், பூ படுக்கைகள், மரக்கூட்டங்கள், குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு சாதனங்கள் போன்றவையும் பூங்காவின் அமைப்பில் பயன்படுத்த வேண்டும். மேலும் குடி தண்ணீர் வசதி, கழிவறை வசதி ஆகியவை செய்து கொடுக்க வேண்டும். மேலும் மக்கள் அமர்ந்து ஆசுவாசிக்க மண்டபம் போன்ற அமைப்பும் வைக்கலாம். குப்பைகளை வீசி  பூங்காவை மாசு படுத்தாமலிருக்க மூடி உள்ள குப்பைத் தொட்டிகளை அழகிய வடிவங்களில் அமைக்கலாம்.

Impatiens balsamina Zinnia

3.3 வீட்டினுள் தோட்டம் – சன்னல் தோட்டம், தட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் மற்றும் கண்ணாடித் தொட்டியில் செடி வளர்ப்பு

மேலை நாடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் அலங்காரச் செடிகளை வளர்த்து வீட்டினை அழகுபடுத்தும் பழக்கம் உள்ளது. நம் நாட்டில் செடிகளை வளர்ப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகள் இருந்தும் வீட்டினுள் செடிகளை வளர்க்கும் பழக்கம் அதிகமாக வளராமல் உள்ளது. முன்பெல்லாம் நல்ல வசதி படைத்தவர்கள் மட்டுமே அலங்காரச் செடிகளை வீடுகளில் வளர்த்து வந்தனர். ஆனால் தற்சமயம் சாதாரண மக்களிடத்திலும் செடிகளை வளர்க்கும் ஆர்வம் கணிசமாக வளர்த்துள்ளது. அவர்களுக்கு செடிகளை வளர்க்கும் ஆர்வம் இருப்பினும் வீட்டிலுள்ள சூழ்நிலை , இட வசதி போன்றவைகள் ஒத்து வருவதில்லை.

வீட்டினுள் செடிகளை வளர்க்க போதிய இடவசதி இல்லையென்றாலும் சன்னல், மாடி  போன்ற இடங்களிலும் தட்டுகளிலும் செடிகளை வளர்த்து வீட்டினை அழகு படுத்தலாம். இவ்வகையில் சன்னல், மாடித் தோட்டங்கள் அமைப்பது குறித்தும் தட்டினில் தோட்டம் அமைப்பது குறித்தும் இனி காண்போம்.

Impatiens balsamina Zinnia

சன்னல் தோட்டம்

நகர்ப்புறத்தில் வாழ்பவர்களுக்கும் அடுக்கு மாடி வீடுகளில் வாழ்பவர்களுக்கும் வீட்டைச் சுற்றி பெரிய தோட்டங்கள் அமைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் வீட்டிற்குள் அழகுச் செடிகளை வைத்துக் குட்டித் தோட்டம் அமைக்கலாம். அறைகளின் உள்ளே செடி வைப்பதற்கு இடம் இல்லையென்றாலும்  சன்னல்களில் செடி வளர்ககலாம். சன்னல்களில் செடிகளை வைத்து அழகுபடுத்தினால் வெளியிலிருந்து பார்த்தால் அழகாக இருக்கும்.

Impatiens balsamina

வீட்டின் எந்தப் பகுதியையும் விட சன்னல் பகுதிதான் செடிகளை வளர்ப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாகும். ஏனெனில் இப்பகுதியில் தான் அதிக ஒளியும்,  காற்றோட்டமும் கிடைக்கின்றன. சன்னலின் வெளிப்பக்கத்திலும் செடிகள் வைக்கலாம். உள்பக்கத்திலும் செடிகள் வைக்கலாம். சன்னல் மேடை எவ்வளவு அகலம் இருக்கிறது என்பதைப் பொருத்து செடிகளை வைக்கலாம். சன்னல் கதவுகள் வெளிப்பக்கமாக திறந்தால் செடிகளை உள்பக்க மேடையில் வைக்க வேண்டும். உள்பக்கமாக திறந்தால் செடிகளை வெளிப் பக்க மேடையில் வைக்க வேண்டும். சன்னல் மேடை குறுகலாக இருந்தால் அதற்கேற்ப சிறு தொட்டிகள் கையாளும் போது எளிதில் விழுந்து விடாமல் இருக்க சிறிய சட்டம் ஒன்றை சன்னல் நீளத்திற்கு மேடையிலிருந்து 10 செ.மீ உயரத்தில் பொருத்தி விட வேண்டும்.
சன்னல் நீளத்திற்கு 20 செ.மீ உயரம் மற்றும் 20 செ.மீ அகலத்திற்கு சன்னல் மேடைக்கு கீழே இரும்புக் கம்பிகளை வளைத்து சுவற்றினை கட்டும் போதே சுவற்றோடு இணைத்து கான்கிரீட் போட்டு அழகான மேல் மூடியில்லாத பெட்டி போல் செய்து விட்டால் செடிகளை வளர்ப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

சன்னல் மேடைகளில் செடிகளை வைக்காமல் சன்னல் கம்பிகளில் செடிகளைத் தொங்க விடலாம். சிறு தொட்டிகளை வைப்பதற்கேற்ற வளையத்தை மேல் பக்கத்தில் கொக்கி போல் வளைந்துள்ள இரும்புப் பட்டையில் பொருத்தி அந்த அமைப்பை சன்னலில் இருக்கும் குறுக்கு கம்பிகளில் மாட்டி விடலாம். வளையத்தில் சிறு தொட்டிகளில் உள்ள செடிகளை வைத்து அழகுபடுத்தலாம்.

சன்னலின் வெளிப்புறம் இருக்கும் வெளிச்சம் உட்புறம் இருக்காது. ஆகவே வெளிப்புறத்தில் வைக்கும் செடிகளும் வேறுபடும். சன்னலின் உட்புறத்தில் செடிகள் வைக்கும் போது செடிகளையும் தொட்டிகளையும் தேர்ந்தெடுப்பதில் சற்று அதிக கவனம் வேண்டும். தொட்டிகள் அல்லது பெட்டிகள் மிகவும் அழகானதாகவும் அறையில் உள்ள மற்ற சாதனங்களோடு பொருந்துவதாகவும் இருக்க வேண்டும். அவற்றின் வண்ணமும் அமைப்பும் அறையில் உள்ள அலமாரிகள், சோபா, மேசை, நாற்காலிகள் ஆகியவற்றோடு இணைவதாகவும் இருக்க வேண்டும்.

சன்னல் மேடைக்கு கீழே வெளிப்பக்கத்தில் பொட்டியைப் பொருத்தி அதில் செடிகள் வைக்கும் முறை
சன்னலின் உட்பக்கத்தில் பெட்டி வைத்து அதில் செடிகள் வைக்கப்பட்டிருந்தன.
இரும்பு ஸ்டாண்டுகளில் செடியை வைத்து சன்னல் கம்பிகளில் மாட்டி விடலாம்.
சன்னலின் உட்பக்கத்தில் செடிகள் வைக்கும் பெட்டுக்கு கீழே உள்ள இடத்தை அலமாரி போல் உபயோகிக்கலாம்.

சன்னல் தோட்டத்திற்கு ஏற்ற செடிகள்

தகுந்த செடிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு சன்னல் எந்தத் திசையில் இருக்கிறது என்பது முக்கியம். கிழக்குப் பக்கத்து சன்னல்களில் எல்லா வகைச் செடிகளையும் வளர்க்கலாம். மேற்கு பக்கத்து சன்னல்களில் அதிக ஒளியையும் வெப்பத்தையும் தாங்கக்கூடிய செடிகளை மட்டுமே வளர்க்க வேண்டும். தெற்குப் பக்கம் அல்லது வடக்குப் பக்கம் பார்த்த சன்னல்களில் சாதாரண குறைந்த ஒளியில் வளரக் கூடிய செடிகளை வளர்க்கலாம். பிற்பகல் வெயில் நேரடியாகப் படும் சன்னல்களில் கள்ளி, சப்பாத்தி, கற்றாழை வகைச் செடிகளை வளர்க்கலாம். இலைகளின் அழகுக்காக குரோட்டன்ஸ் செடிகளை வைக்கலாம். பூக்களின் அழகுக்காக போகன்வில்லா செடிகளை கவாத்து செய்து சிறிய செடியாக தொட்டியில் வளர்க்கலாம். சிவப்பு நிற பொன்னாங்கன்னி செடிகளை அகலமான உயரமில்லாத தொட்டிகளில் வளர்க்கலாம். நித்திய கல்யானி செடிகள் கடுமையான வெயிலைத் தாங்கி நன்கு வளர்ந்து எப்போதும் பூத்துக் கொண்டிருக்கும், நிலச்சம்பங்கி  செடியை வளர்த்தால் மாலை நேரங்களில் பூக்கள் மலரும் போது அறையில் நல்ல மணம் வீசும்.

இலை அழகுச் செடிகளான அக்ளோநீமா, அக்காலிபா, கலர் கீரை, கோலியஸ், குளோரோபைட்டம், கலாடியம், கிரர்டோபில்லம், டைபன்பேக்கியா, டிரசினா, கோச்சியா, பெப்ரோமியா, பைரியா, பெரணிகள், ரப்பர் செடி மற்றும் பூ அழகு செடிகளான காசித் தும்பை, பெட்டுனியா, குள்ள மெரிகொல்ட், பெரல் கோனியம், சாமந்தி, குள்ள சால்வியா மற்றும் போர்டுலேக்கா ஆகியவை சன்னல் தோட்டத்திற்கு ஏற்ற செடி வகைகளாகும்.

தட்டுத் தோட்டம்

பெரிய செடிகள் வைத்து தோட்டம் அமைக்க இட வசதியும் மற்ற வசதியும் இல்லாதவர்கள் கூட ஒரு குட்டித் தோட்டத்தை சிறிய தட்டினில் உருவாக்கி விடலாம். சிறிய செடிகளையும் மிகவும் மெதுவாக வளரக்கூடிய செடிகளையும் தேர்ந்தெடுத்து அவற்றைத் தட்டுகளில் நட்டு தோட்டம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி விடலாம். கண்ணாடித் தட்டுகளையும், கிண்ணங்களையும் எளிதாகப் பயன்படுத்தலாம். எந்த உருவில் இருந்தாலும் நடுவில் சற்று குழிவாக இருக்க வேண்டும். உயரம் குறைவாக இருக்க வேண்டும். தட்டுகளில் சாதாரணமாக 6 முதல் 7 செ.மீ ஆழம் மண் கலவை இருந்தால் செடிகள் நன்கு வேர் விட்டு ஆரோக்கியமாக வளரும். ஆகவே பாத்திரங்கள் சுமார் 10 செ.மீ ஆழம் கொண்டதாக இருந்தால் நல்லது. பாத்திரங்கள் ஒரு போதும் 15 சென்டி மீட்டருக்கு மேல் உயரமாக இருக்க கூடாது. தட்டுகளில் செடி வளர்க்கும் போது அவற்றைத் தரையில் வைத்தால் அழகாக இருக்காது. மேஜை மீது வைக்கலாம் அல்லது இத்தட்டுகளை வைப்பதற்காகவே சிறிய முக்காலி அல்லது ஸ்டேண்டுகளைத் தயார் செய்து அவற்றின் மேல் வைக்கலாம்.

தட்டினில் கள்ளி, கற்றாழை வைத்து தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

கிண்ணத்தில் வைத்து தோட்டம் அமைத்தல்.

மண் கலவை
இயற்கை உரம் இரண்டு பங்கும் பொலபொலப்பான மணல் பாங்கான மண் ஒரு பங்கும் சேர்த்துக் கலந்த கலவையாக இருத்தல் வேண்டும்.
தட்டுகளில் வளர்ப்பதற்கு மெதுவாக வளரக்கூடிய சிறிய செடி வகைகள், தடிமனான சதைப்பற்றுள்ள இலைகளையும் நீர் நிறைந்த தண்டுகளையும் கொண்ட செடிகள் மற்றும் சப்பாத்தி வகைகள் மிகவும் ஏற்றவையாக இருக்கும். அதிக ஈரமுள்ள மண்ணலி வளரக் கூடிய பெரணி போன்ற செடிகளை வறட்சியில் வளரக் கூடிய சப்பாத்தி வகைகளோடு நடக் கூடாது. ஒத்த இயல்புடைய செடிகளை சேர்த்து வைத்தால் அவைகள் ஒன்றாக நீண்ட காலத்திற்கு வாழும். கட்டுகளின் நடுவில் ஒரு உயரமான செடியை நட்டு நடுநாயகமாக வைத்து சுற்றிலும் சிறிய செடிகளை நடவேண்டும். உயரமான செடிகளுக்கு நாகதாளி என்று அழைக்கப்படும் சான்சிவேரியா என்ற கத்தாழை வகையை உபயோகப்படுத்தலாம்.

தட்டுகளில் வைக்கின்ற கற்கள் நல்ல உருவ அமைப்போடு இருத்தல் நல்லது. உருண்டையான கற்களுக்கு பல அளவில் உள்ள கூழாங்கற்களைப் பயன்படுத்தலாம். தட்டையான செதில் போன்ற கற்களைப் பாதியளவிற்கு மண்ணில் சாய்வாக புதைத்து மேல் பாதி வெளியில் தெரியுமாறு வைத்தால் இயற்கையாக இருக்கும். இரண்டு மூன்று தட்டையான கற்களை வரிசையாக மண்ணில் புதைத்து அவற்றிற்கிடையில் சிறு செடிகளை வெளியில் தெரியுமாறு நட்டால் பாறைக்கிடையில் செடிகள் வளர்வது போல் இயற்கையாக இருக்கும்.

மாடியில் பந்தல் அமைக்கும் முறை

  1. இரும்பு வளையம்
  2. சிமெண்ட் குழாய்

கண்ணாடி தொட்டிகள் மற்றும் கண்ணாடி பாட்டிலில் தோட்டம் அமைத்தல்

மீன் தொட்டிகள் போல் நான்கு பக்கத்திலும் சுவர்கள் கொண்டு மேல் பாகத்திலும் கண்ணாடி மூடி கொண்ட தொட்டி, அதனுள் அழகுச் செடிகள் வளர்க்கும் முறையே ஆங்கிலத்தில் டேர்ரேரியம் என்று அழைக்கப்படுகிறது. இம்மாதிரியான தொட்டியின் அடிப்பாகம் இரும்பு அல்லது துத்தநாகத் தகட்டினால் செய்து கொள்ளலாம். இந்த தகட்டின் மேல் தார் பூசி விட்டால் துரு பிடிக்காது. பெரும்பாலும் இம்மாதிரித் தொட்டிகள் நீண்ட செவ்வக வடிவத்திலோ அல்லது சதுர வடிவத்திலோ அமைத்துக் கொள்ளலாம். இந்த வகையான கண்ணாடி அமைப்பு நாம் இதை வைக்கும் அறை அல்லது அரங்கு போன்றவற்றிற்கு தக்க வண்ணம் பெரியதாகவோ சிறியதாகவோ அமைத்திடலாம். பக்கமுள்ள கண்ணாடிச் சுவர்கள் வழியான செடிகளையும் மண் கலவையையும் பார்க்கலாம். இங்கு செடிகள் கண்ணாடித் தொட்டிக்குள் இருப்பதால் இது அறையின் சூழ்நிலையைவிட வேறுபட்டதாக இருக்கும். இங்கு வறட்சியான காற்று இருக்காது. காற்றில் ஈரப்பதம் இருக்கும். காற்றோட்டம் இருக்காது. அதனால் மண் கலவையிலிருந்தும் இலையிலிருந்தும் தண்ணீர் ஆவியாவது குறைவாகத் தான் இருக்கும். உள்ளே கண்ணாடித் தொட்டிகளில் சப்பாத்திக் கள்ளி போன்ற தாவரங்களை வளர்க்கும் போது தொட்டியின் மேல் பாகம் கண்ணாடிப் பலகை கொண்டு மூட வேண்டியதில்லை.

இவ்வாறு செடி வளர்ப்பதில் என்ன நன்மை என்றால் இதனுள் வளர்க்கப்படும் செடிகள் தொட்டிக்குள் இருப்பதால் மற்றவர்கள் மேல் படக்கூடிய வாய்ப்பு இல்லை மற்றும் முட்டைகளுடன் கூடிய சப்பாத்திக் கள்ளி வகைகள் வளர்க்கும் போது அவை தவறுதலாக குழந்தைகள் தொட்டுவிடும் அபாயமும் இல்லை. தொட்டியிலிருந்து நீர் கசிந்து அறையைக் கறைப்படுத்தாது. தொட்டியை நாம் நல்ல பார்வை படும் பட்சத்தில் மேசை மற்றும் உயர்ந்த தாங்கு சட்டங்கள் (ஸ்டேண்டின்) மேல் வைத்து அவை நல்ல ஒளிபடும்படி மின் விளக்குகளுடன் அமைத்தும் அழகுறச் செய்யலாம்.

நம்நாட்டில் இம்மாதிரியான கண்ணாடித் தோட்டம் அமைக்க தனித் தொட்டிகள் இல்லை. அதனால் மீன் வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் தொட்டிகளையே இதற்கும் பயன்படுத்தலாம்.

மண் கலவை

பொதுவாக தொட்டியின் அடிப்பாகத்தில் குறைந்தது 5 செ.மீ உயரத்திற்கு மண் கலவை இருக்க வேண்டும். அதிக வேர்விட்டு உயரமாக வளரக் கூடிய செடிகளுக்கு 8-12 செ.மீ மண் தேவைப்படும். அந்த வகைச் செடிகளுக்கு மட்டும் அதிக மண் கலவையைக் கொடுக்கலாம். தொட்டியில் எல்லா பாகத்திலும் மண் கலவை ஒரே சமமாக இருக்கத் தேவையில்லை. இவ்வாறு செடிகளுக்கு ஏற்றவாறு மண்ணணைக் குவித்து மேடு பள்ளங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். இது மிகவும் இயற்கையாக நம் நிலப்பரப்பில் தென்படும் மேடுபள்ளம் இருப்பதைப் போல் இருக்கும். நான்கு புறமும் கண்ணாடிச் சுவர் இருப்பதால் மண் சரிந்து விழும் வாய்ப்பும் இல்லை. தட்டுகளில் அமைக்கும் முறையின் போது கையாண்ட நுணுக்கங்களை தொட்டியில் தோட்டம் அமைக்கும் போதும் கையாளலாம். தொட்டியின் நடுவே தண்ணீர் தொட்டி அமைத்திடலாம். சிறு பொம்மைகள், பாலங்கள், கோபுரங்கள் போன்ற அமைப்புகளையும் பொருத்தமான இடத்தில் அமைத்திடலாம்.

மண் கலவையானது நல்ல வடிகாலும் ஊட்டச் சத்து கொண்டதாகவும் இருக்க வேண்டும். இதற்கு மண், மணல், செம்மண் முறையே ஒவ்வொரு பங்கும் சேர்த்துக் கலந்து மண் கலவை தயார் செய்திடலாம். மண் கலவையும் கண்ணாடி வழியாக பார்ப்பதற்கு வெளியே தெரிவதால் அதுவும் ஒரு அழகாக இருக்கும். கலவையை சலித்து கட்டிகள், சிறுகற்கள் முதலியவற்றை எடுத்துவிட்டு ஒரே மாதிரியான மண் கலவையை உபயோகப்படுத்தவேண்டும். மண் கலவையை தொட்டியில் போடுவதற்கு முன் ஒரு வரிசை சிறிய கூலாங்கற்களைப் போட்டு அதன் மேல் மண் கலவையை போட்டால் வடிகால் நன்றாக இருக்கும். கூழாங்கற்களுக்கு பதில் மொசைக் சிப்ஸ்களையும் போடலாம். பின்னர் மண் கலவையை 5-10 செ.மீ உயரத்திற்கு நாம் அதில் வளர்க்கப் போகும் செடியின் அளவுக்கு தக்க வண்ணம் மண் கலவையைப் போட்டு அதில் நாம் தேர்ந்தெடுத்த செடிகளை பொருத்தமான இடத்தில் வைத்து மண் அணைக்க வேண்டும். உயரமான செடிகளைப் பின்னும் குட்டையான செடிகளை முன்பக்கத்திலும் நட வேண்டும். இடையே புல் தரையையும் அமைக்கலாம்.

கண்ணாடித் தொட்டிக்குள் செடி வளர தண்ணீரை செடிகளுக்குத் துல்லியமாக ஊற்ற வேண்டும். சாதாரண மண் தொட்டியில் இருக்கும் செடியின் அளவுக்குக் கூட கண்ணாடித் தொட்டியில் வளர்க்கும் செடிகளுக்கு தண்ணீர்  தேவைப்படாது. மூடியில்லாத தொட்டிகளுக்கு 10 நாளுக்கு ஒரு முறையும். மூடியுள்ள தொட்டிகளுக்கு 20 நாளுக்கு ஒரு முறையும் தண்ணீர் ஊற்றினால் போதும். இம்மாதிரி செடிகளை மூடி வைக்கவும் கூடாது.

கண்ணாடித் தொட்டியில் தோட்டம்
கண்ணாடிக் குடுவையில் தோட்டம்

இவ்வாறுள்ள கண்ணாடித் தொட்டிகளில் சிறு சிறு நீர் நிலைகள் கண்ணாடியின் மேல் படிந்தால் மண்ணில் போதிய நீர் உள்ளது எனவும் இவ்வாறு ஏற்படாமலிருந்தால் தண்ணீர் விட வேண்டிய தருணம் என்றும் தெரிந்து கொள்ளலாம். தண்ணீர் திவலைகள் அளவுக்கு மேல் தோன்றி கண்ணாடியிலிருந்து மண் கலவையை நோக்கி வழிந்தால் தேவைக்கு மேல் ஈரம் இருக்கிறது என்று பொருள். அது போன்ற சமயங்களில் தொட்டியின் மூடியை எடுத்து விடுவதன் மூலம் தண்ணீர் ஆவியாகிப்போவதை அனுமதிக்க வேண்டும். நீர் உபரியாக ஊற்றிவிட்டால் தொட்டியின் ஒரு பக்கத்தை உயர்த்தி வைப்பதன் மூலம் தண்ணீர் தாழ்வான பகுதியில் வந்து தேங்கும். அதனை வடித்து விடலாம்.

கண்ணாடித் தொட்டிகளில் நீர் வாழ் தாவரங்கள்

மண் கலவையைப் போட்டு செடிகள் வளர்ப்பதற்கு பதிலாக மீன் வளர்ப்பது போன்றே தண்ணீர் ஊற்றி நிரப்பிவிட்டு பலவிதமான நீர் வாழ் தாவரங்கள் வளர்க்கலாம். அழகான இலைகளைக் கொண்ட நீர் வாழ் தாவரங்கள் உள்ளன. ஒரு சில செடிகள் முழுவதுமாக நீரில் அமிழ்ந்திருக்கும்,  ஒரு சில நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கும். சுத்தமான மணலையும் சிறுசிறு கற்களையும் பயன்படுத்தி மேடு பள்ளங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். நீர் வாழ் செடிகளை சிறிய சிறிய அழகிய பிளாஸ்டிக் அல்லது பீங்கான் பாத்திரங்களில் நட்டு தண்ணீருக்குள் வைத்துவிடலாம். தொட்டியில் உள்ள மண்ணில் செடியை நடாமல் இதுபோல் சிறிய பாத்திரங்களில் நட்டு தொட்டிக்குள் வைப்பதால் நாம் வேண்டும் போது செடிகளை இடம் மாற்றி புதுப்புது அமைப்பை ஏற்படுத்தலாம்.

வாலிஸ்நேரியா, பூம்பா ஹைடிரில்லா, அமேசான் ஸ்வார்டு, நீருக்குள் அமிழ்ந்திருக்கும் அல்லி, சால் வீரியா, அகாயத் தாமரை, அரைக் கீரை முதலிய செடிகள் நீரில் மிதந்து கொண்டிருக்கும். அல்லியும் , ஆரையும் நீரில் மிதந்து கொண்டிருந்தாலும் அதன் வேர்கள் தொட்டியின் அடியில் உள்ள மண்ணில் தான் இருக்கும். ஆனால் மண்ணில் இறங்காமல் தண்ணீரின் மேல்பாகத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கும். தண்ணீர் அசைவினால் இச்செடிகள் அங்கும் இங்கும் நகர்ந்து இடம்மாறி கொண்டிருப்பதே ஒரு தனி அழகுதான்.

இது போன்ற நீர் வாழ்த் தாவரங்களுடன் மீன் வளர்ப்பதானாலும் வளர்க்கலாம். இத்தாவரங்களினிடையே மீன் இருந்தால் அசைவுகள் இருக்கும். காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கும். பார்ப்பதற்கு சலிப்பே இருக்காது. தொட்டியில் மீன் வளர்த்தால் அதற்குத் தேவையான அளவு பிராண வாயு கிடைக்கிறதாஎன்பதை கவனிக்க வேண்டும்.

செடிகளின் வளர்ச்சிக்கு தண்ணீருக்கு வெளியே வராமல் அடிக்கடி செடிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் கண்ணாடித் தோட்டங்களில் செடிகளுக்கு அவற்றின் அழகை கூட்டுவதற்காக தான் மற்றபொருட்களை சேர்க்க வேண்டுமே தவிர மற்ற பொருட்கள் தொட்டியின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்க கூடாது.

கண்ணாடித் தொட்டிகளில் வளர்ப்பதற்கான செடிகள்
உயரமான செடிகள்
டிராகிவா வகை, போடோ கார்பஸ், போலிசியா வகை, டைபன் பேக்கியா வகை, நெப்ரோவிப்பிவஸ் வகைகள் , அஸ்பராகஸ் மற்றும் கண்ணபடிக் கள்ளி.

நடுத்தர உயரம் கொண்டவை
அடியாண்டம், பொண்ணாங்கன்னி வகை, ஐரிசின், ஒபியோ, போன்புல், குளோரோ, சாபசோனியா, சாபலிய, பெப்ரோமியா வகைகள், ஆப்ரிகன் வைலட், சப்பாத்திக் கள்ளி வகை மற்றும் கற்றாழை வகைகள்.

குட்டையான செடிகள்
செலாஜி நெல்லா, ஹெல்க்கின், பிட்டோனியா, சாக்கிபிராகா, டெரிஸ், கவரோட்பி, வல்லாரை, டைக்கொண்டிரியா மற்றும் சடம் வகைகள்.

கண்ணாடித் தொட்டிகள் போல் கண்ணாடி பாட்டில்களிலும் தோட்டம் அமைக்கலாம். ஆனால் பாட்டில்களில் தோட்டம் அமைப்பது என்பது கடினமான வேலையாகும். பாட்டிலின் வாய் குறுகலாகவும், அடிப்பாகம் பெரியதாகவும் இருப்பதினால் செடிகளை உள்ளே வைப்பதும் எடுப்பதும் சிரமமாக இருக்கும். ஆனால் அந்த சிறிய வாய் வழியே செடிகளை உள்ளே தள்ளி அவை பாட்டிலை முழுவதுமாக அடைக்கிற அளவுக்கு வளர்ந்திருப்பதை பார்த்தால் எல்லோரும் ஆச்சரியப் படுவார்கள். பாட்டிலில் வடிகால் துளை இல்லாததால் தண்ணீரை மிகவும் கவனமாகவும் திட்டமாகவும் ஊற்ற வேண்டும். தண்ணீர் அதிகமாக ஊற்றிய பின் அதை வெளியேற்ற முடியாமல் ஏதாவது நோய் வந்துவிட்டால் அதைக் கட்டுப்படுத்துவதென்பது முடியாத காரியம்.

முதலாவது பொருத்தமான பாட்டிலை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். வெள்ளை நிற அல்லது லேசான நீல நிறச் சாயம் படிந்த பாட்டில் செடி வளர்ப்பதற்கு ஏற்றதாகும். தற்போது கண்ணாடி பாட்டில் அளவிற்கு நல்ல தரமான பிளாஸ்டிக் பாட்டில்களும் கிடைக்கின்றன. கலர் பாட்டில்கள் செடி வளர்ப்பதற்கு ஏற்றவை அல்ல காரணம் ஒளி உட்செல்லாது. தேர்ந்தெடுத்த பாட்டில்களை சோப்பு போகும் வண்ணம் நன்கு கழுவ வேண்டும். பொதுவாக தார்ப்பாய் என்னும் பெரிய பாட்டில்கள் செடி வளர்ப்பதற்கு மிகவும் ஏற்றவை. இந்த பாட்டிலின் வாய் 3-4 செ.மீ அளவுக்கு இருக்கும். கிட்டத்தட்ட பல்பு போன்ற உருவத்தில் இருக்கும்.
இம்மாதிரி பாட்டில்களில் செடி வளர்ப்பதற்கு பிரத்யேக உபகரணங்கள் தேவைப்படும். காகிதப் புணல், நீண்ட குச்சியுடன் கட்டப்பட்டு முட்கரண்டி, அதேபோல நீண்ட குச்சி கட்டப்பட்ட ஸ்பூன், பிணைக்கப்பட்ட மூங்கில் தப்பை, நீண்ட குச்சி கட்டப்பட்ட ரீல் கட்டை, நுனியில் பஞ்சு சுற்றிய கம்பி மற்றும் பிளாஸ்டிக் வாஷ் பாட்டில்.
இங்கு குறிப்பிட்டுள்ள உபகரணங்கள் பாட்டிலினுள் மண் கலவை, கூழாங்கற்கள், பாசி முதலியவற்றை பாட்டிலின் எல்லாப் பகுதியிலும் போடுவதற்கு இந்தப் புணலை அசைத்து வெவ்வேறு திசைகளில் திருப்பி போடலாம். இந்தப் புணல் இல்லாமல் கூழாங்கற்களை போட்டால் பாட்டில் உடைய ஏதுவாகும். முதலில் இவ்வாறு கூழாங்கற்களை போட்டு அடிப்பாகத்தில் பரவலாகப் பரப்பிக் கொள்ள வேண்டும். மண் கலவை, பாசி மற்றும் தென்னை நார் கழிவு ஆகியவற்றை புணல் இல்லாமல் பாட்டிலுக்குள் நேரடியாகப் போட்டால் தூசுகள் படிந்து பாட்டிலின் உட்சுவற்றில் படிந்துவிடும் மற்றும் அவற்றை அகற்றுவது கடினமாகும். முட்கரண்டி மற்றும் ஸ்பூன் பாட்டிலுக்குள் செடிகள் நடுதல், குழி தோண்டுதல் மண் கலவையை ஒரு பகுதியிலிருந்து மாற்றி இட ஏதுவாக இருக்கும். நுனி பிளக்கப்பட்ட மூங்கில் குச்சி, நீண்ட குச்சியில் சொருகப்பட்ட aல் ரீல் கட்டை முதலியவை முதலியவை செடிகள் நடுதல் மற்றும் அதனைச் சுற்றி மண் அணைக்கவும் ஏதுவாக இருக்கும்.
பிளாஸ்டிக் வாஷ் பாட்டில் கடையில் கிடைப்பதை வாங்கி அதைக் கொண்டு பாட்டிலில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம். நுனியில் பஞ்சு சுற்றிய கம்பியில் பாட்டிலின் உட்புறத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதிகப்படியான நீர்த் திவலைகள், தூசுகள் முதலியவற்றை துடைத்து விடலாம்.

பாட்டிலில் வளர்க்கும் செடிகளுக்கு மண் கலவை ஈரத்தைக் காப்பதாகவும் அதிக ஈரத்தை வடிப்பதாகவும், ஊட்டச் சத்துகள் மிதமான அளவில் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.  இதற்கு மணல் தொழு உரம் அல்லது கம்போஸ்டு, பிண்ணாக்கு மற்றும் இயற்கை உரமும் சம அளவில் கலந்ததாக இரக்க வேண்டும். இந்தக் கலவையை முதலில் சலித்து சிறு துகள்கள் மட்டும் பூஞ்சாள நோய்கிருமிகள் இருக்குமாதலால் முதலில் அவற்றை அழிப்பதற்காக மண் கலவையை நல்ல அழுத்தத்தில் வைக்க வேண்டும். பின்பு அதில் ஒரு கிலோ மண்ணுக்கு 10 கிராம் சூப்பர் பாஸ்பேட், 5 கிராம் அம்மோனியம் சல்பேட், 3 கிராம் பொட்டாஷ், உரத்தை சேர்த்து நன்றாக கலந்திட வேண்டும். பாட்டிலில் இந்தக் கலவையைப் போடும் முன்பு ஒரு வரிசை கூழாங்கற்களைப் பரப்பி  மண் கலவையைப் போட வேண்டும் அல்லது தேங்காய் நார்க் கழிவுகளைப் போட வேண்டும். இவை போடுவதற்கு முன்பாக நன்கு தண்ணீரில் ஊற வைத்து அதிலுள்ள அழுக்குப் பொருள்களை நீக்கி உபயோகிக்க வேண்டும். மணலையும் கற்களையும் காகிதக் குழாய் வழியாக பாட்டிலுக்குள் போட்டது போலவே நார்க் கழிவு அல்லது பாசியை உள்ளே போட்டு நீண்ட குச்சியின் உதவியால் சமப்படுத்த வேண்டும்.

பாட்டிலுக்குள் செடி நடுவது என்பதும் சற்று சிரமமான காரியந்தான் முதலில் ஒரு காகிதத்தில் என்னென்ன செடிகள் எங்கெங்கு நடவேண்டும் என்பதைக் குறித்துக் கொண்டு அதைப் பார்த்து நடுவது நல்லது. முதலில் ஓரங்களில் நட வேண்டிய செடிகளை நட வேண்டும். செடிகளின் இலைகளை சேதப்படுத்தாமல் பாங்காக தண்டோடு சேர்த்து சுருட்டி பாட்டிலின் வாய் வழியே உள்ளே தள்ளிவிட வேண்டும். நுனி பிளந்த மூங்கில் குச்சியினால் குழியில் இதற்குப் பக்கத்திலிருக்கும் மண் கலவையினால் குழியை மூடி மேல் மண்ணை கெட்டிப்படுத்த வேண்டும். செடியின் வேர்கள் வெளியே தெரியா வண்ணம் நேராக நட வேண்டும்.

நட்ட செடியின் தண்டுப் பகுதிக்கு மண் சேர்த்து அணைக்க வேண்டும். முதலில் ஓரங்களில் செடி நட்ட பின் நடுப்பகுதியில் செடிகளை நடலாம். செடிகள் உயிர் பிடித்த பின் தண்டுப் பகுதியில் சேர்த்து கலந்துள்ள மண்ணை சமப்படுத்தி விடலாம். நீர் மாற்றுவதற்கு வாஷ் பாட்டில்களை உபயோகிக்கும் போது அவற்றிலிருந்து தண்ணீர் ஊற்றும் குழாயை கண்ணாடி பாட்டிலின் சுவர் ஓரத்தில் இணைத்து தண்ணீர் மண்ணில் சேர்த்திட செய்ய வேண்டும். நேரடியாக செடியின் மேல் மற்றும் மண்ணின் மேல் நீர் ஊற்றக் கூடாது. நாம் வாஷ் பாட்டிலின் குழாய் நீளமாக இல்லாவிட்டால் நீளமான குழாயைப் பொருத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு நாம் பாட்டிலில் நட்டுள்ள செடிகள் 10 நாட்கள் உயிர் பிடித்து விடும். அதற்குப்  பின் ஏதாவது செடிகள் வாடியிருந்தால் அவற்றை வெளியில் எடுத்து மாற்றுச் செடிகள் நட வேண்டும்.

பாட்டிலில் வளர செடிகளைத் தேர்ந்தெடுத்தல்

பாட்டிலினுள் காற்று ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதிகக் காற்றோட்டம் இருக்காது. கரியமில வாயுவும் பிராணவாயுவும் அதிகமாக இருக்கும். ஒரு விகிதமாக இருக்கும். மண்ணில் எப்போதும் ஈரம் இருந்து கொண்டிருக்கும். மண்ணில் ஊட்டச்சத்துகள் தேவையான அளவு இருந்து கொண்டிருக்கும். இந்தச் சூழ்நிலையில் வளரக் கூடிய செடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். செடிகள் விரைவாக வளர்ந்தால் எளிதில் பாட்டிலினுள் இருக்கும் குறைந்த இடத்தை அடைத்து விடும். செடிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு அதிலுள்ள செடிகளின் அழகைக் குறைத்து விடும். அதனால் பொதுவாக மெதுவாக வளரக் கூடிய செடிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். சிறிய செடிகளைத் தேர்ந்தெடுத்து நட வேண்டும்.

பாட்டில்களில் செடிகள் நடுவதற்கு தேவைப்படும் உபகரணங்கள்

  1. காகிதப் புனல்
  2. நீண்ட குச்சியில் நுனியில் கட்டப்பட்ட முள் கரண்டி
  3. நீண்ட குச்சியில் நுனியில் கட்டப்பட்ட எவர்சில்வர் தேக்கரண்டி
  4. நுனியில் பிளக்கப்பட்ட மூங்கில் குச்சி
  5. நீண்ட குச்சியில் சொருகப்பட்ட ரீல் கட்டை
  6. நுனியில் பஞ்சு சுற்றிய கம்பி
  7. பிளாஸ்டிக் வாஷ்பாட்டில்

பாசி சுற்றிய குச்சியில் படர்ந்து வளரும் செடி
பாட்டிலினுள் நடுவதற்கு தகுந்த செடிகள்
அடியாண்டம், பிட்டோனியா, செலாஜிநெல்லா, பெரிஸ், மராண்டா, அக்ஸோ நீமா, டைபன்பேக்கியா, கண்ணாடிக் கள்ளி, டிராசில், நெப்ரோலிப்ரிஸ், கலாடியம், சிப்கோமியம், போத்தான், ஹேடிராஹெவிக்ஸ், டிரான்ட்கான்ஷியா, குளோரோபிட்டம், பில்லோடென்ட்ரான், தாழை, போலிசியா மற்றும் நாகதாளி.

பாசி சுற்றிய குச்சிகளில் செடி வளர்த்தல்

வரவேற்பறைகளில் வைப்பதற்கு சற்று உயரமான செடிகள் நன்றாக இருக்கும். படர்ந்து வளரக்கூடிய செடிகளை ஒரு நேரான குச்சியில் படரவிட்டால் இவை உயரமாக வளரும். ஆனால் குச்சியில் செடிகள் எளிதில் பின்னிக் கொண்டு வளர குச்சியை சுற்றி பாசிரய மெத்தை போல் மொத்த குச்சியின் உயரத்திற்கு வைத்து கட்ட வேண்டும். அல்லது தென்னை நார் கழிவினையும் குச்சியை சுற்றி மெத்தை போல வைத்து சுற்றிக் கட்ட வேண்டும். இம்மாதிரி குச்சியை தொட்டியின் மையப்பகுதியில் நட்டுவிட்டால் செடிகளில் தோன்றும் கணு வேர்கள் இதில் பிடித்து வளரும் இந்தப் பகுதியை நீர் அவ்வப்போது ஊற்றி பராமரித்து வந்தால் செடிகள் இதில் நன்கு வேர் ஊன்றி வெகு சீக்கிரம் நல்ல உயரத்திற்கும் அகலப் பரப்பிலும் வளர்ந்திடும். இது போல் வளரும் செடிகள் பல்லோட்டெஸ்ட்ரான் சிந்சோனியம் போன்றவையும் வளரும். இங்கு நட்ட குச்சிகளுக்கு பதில் பிளாஸ்டிக் பைப் மற்றும் தீய்ந்த டூபு லைட்டு பல்புகளை உபயோகிக்கலாம். அவற்றில் மேல் பாசி, தென்னை நார்க் கழிவைச் சுற்றி மெத்தை போல் அமைத்து கொடி படர விடலாம். இரண்டு மூன்று மாதங்களில் கொடிகள் குச்சியை சுற்றி வளர்ந்து அழகும் மிளிரும்.

இவ்வாறு பல வகைகளிலும் வீட்டினுள் தோட்டம் அமைத்து இயற்கையோடு மன நிறைவைப் பெற்று வாழ்வோமாக.

தொட்டிகளில் அலங்காரச் செடிகள்

தோட்ட வளர்ப்பில் செடிகளை அவ்வப்போது இடம் மாற்றி வைத்து அழகுபடுத்தவும், செடிகளின் வளர்ச்சிக்கு  ஏற்ப பயன்படுத்தவும் அவைகளை ஏற்ற தொட்டிகளில் வளர்ப்பது ஓர் தனிக் கலவையாகும். அழகுச் செடிகளை வீட்டில் வளர்க்கும் போது அவைகளை வைத்திருக்கும் தொட்டிகளும் அழகாக இருக்க வேண்டும். தொட்டிகள் அழகாக இருந்தால் மட்டும் போதாது செடிகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். செடிகளின் அழகை எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும்.  செடிகளைத் தாங்க கூடியதாக இருக்க வேண்டும். எளிதில் சாய்ந்து விடாமல் நிலையாக நிற்க கூடியதாக இருக்க வேண்டும்.  அதிகப்படியான தண்ணீர் வடிவதற்கு தொட்டியின் அடிப்பகுதியில் துவாரங்கள் இருக்க வேண்டும். எளிதில் உடைந்து விடக் கூடியதாக இருக்க கூடாது. மிகவும் கனமாகவும் இருக்க கூடாது. எல்லாவற்றையும் விட விலை மலிவாகவும் இருக்க வேண்டும்.

பல்வகைத் தொட்டிகளும், பயனும்

தொட்டிகளைச் செடி, கொடிகளின் வளர்ச்சி , வயது, வைக்க வேண்டிய இடம் ஆகியவைகளின் தன்மைக்கேற்ப கையாள்வது அவசியமாகும். தொட்டிகள் கனமின்றி லேசாக இருப்பது நலம். சிமெண்ட் தொட்டிகளைவிட மண் தொட்டிகளே தோட்டங்களில் கையாளச் சிறந்தவை. தொட்டிகளை தரைத் தோட்டம்,  மாடித் தோட்டம், தாழ்வாரத் தோட்டம் ஆகிய எல்லாப் பகுதிகளிலும் பயன்படுத்தலாம். செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப பயன்படும் பல்வேறு தொட்டிகளைப் பற்றியும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் இனி கான்போம்.

விதைப்புத் தொட்டிகள்

இத்தொட்டிகள் அகன்ற வாயுடன் சுமார் 15 முதல் 18 செ.மீ உயரமிருக்கும். இவைகளில் மணல் நிரப்பி, விதைகளை ஊன்றி முளைக்க விடலாம். முளை வந்த பின் சுமார் 2 வாரம் நாற்றை வளர்க்கலாம். இத்தொட்டிகளில் பதியன்களையும் வைத்து மர நிழலில் வைக்கலாம்.

நாற்றுத் தொட்டிகள்

இத்தொட்டிகள் சுமார் 12 செ.மீ நீளமும் 18. செ.மீ அகலமும் 24 செ.மீ உயரமும் கொண்டவை. விதைப்புத் தொட்டிகளில் வளரும் நாற்றுகளை எடுத்து இத்தொட்டிகளில் நட்டு சுமார் 2 மாதம் வரை வளர்க்கலாம். தொட்டி ஒன்றுக்கு 1 அல்லது 2 நாற்றுகளை நடுவதே சிறந்தது. அதே வயதுள்ள பதியன்களையும் இத்தொட்டிகளிலேயே வளர்க்கலாம்.

வருடச்செடி தொட்டிகள்

இத்தொட்டிகள் சுமார் 30 செ.மீ அகலமும் 45  செ.மீ உயரமும் கொண்டவை. இவைகளில் செடிகள் ஒரு முறை பூக்கும் காலம் வரை பயன்படுத்தலாம். இவையே தோட்டத்திற்கு அழகு சேர்ப்பனவாகும். இவ்வகையில் டேலியா, கல்வாழை, அழகு சேம்பு போன்ற கிழங்கு வகை தாவரங்களையும், நீண்ட கால வயதுள்ள குரோட்டன், பெரணிச் செடி வளர்த்து விருத்தி செய்யலாம்.

பல் வருடச் செடித் தொட்டிகள்

இத்தொட்டிகள் பனைத்தொட்டிகள் என்று அழைக்கப்படும். இவைகளின் அகலம் சுமார் 35 செ.மீட்டரும் உயரம் 50 செ.மீ ஆகும். இவைகளை அடிக்கடி இடம் மாற்ற இயலாது. இவைகளில் நீண்ட காலம் வாழும் போன்வில்லா, அழகுப்பனை போன்ற செடிகளையும்,  கொடிகளையும் வளர்க்கலாம்.

அழகுத் தொட்டிகள்

சிமெண்ட்டால் செய்யப்பட்ட சிற்ப வேலைப்பாடமைந்த வேறுசில அழகிய தொட்டிகளையும் பயன்படுத்திச் சில செடிகொடிகளை வளர்க்கலாம். சிமெண்ட் தொட்டிகள் சிறியதாக கிடைப்பது இல்லை. இருப்பினும் இத்தொட்டிகள் நீண்ட காலத்திற்கு உழைக்கும். ஆனால் மரத்தொட்டிகளில் செடிகள் வளர்த்தால் பலவகைகள் விரைவில் மக்கிவிடும். எனவே மரத்தொட்டிகளில் நேரடியாக மண் போட்டு செடியை வைத்து வளர்ப்பதற்கு பொருத்தமாக இருக்கும். செடிகளை வளர்ப்பதற்கென்றே நல்ல வேலைப்பாடுகள் கொண்ட அழகிய பித்தளைத் தொட்டிகள் இருக்கின்றன. இவற்றின் விலை அதிகமாக இருக்கும்.

மீன் தொட்டிகள் போன்று சிறு கண்ணாடித் தொட்டிகளிலும் செடிகளை வளர்க்கலாம். அல்லது சிறுசிறு கண்ணாடி ஜாடிகள், பாத்திரங்கள், தட்டுகள் போன்றவற்றிலும் செடிகளை வளர்க்கலாம். தற்சமயம் பல அழகிய வண்ணங்களிலும், உருவ அமைப்புகளிலும் பிளாஸ்டிக் தொட்டிகள் வந்துள்ளன. இவை மிகவும் லேசாக இருப்பதோடன்றி எல்லோரும் வாங்கக்கூடிய மலிவு விலையிலும் கிடைக்கின்றன.

அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தொங்கும் தொட்டிகளிலும் சில குறிப்பிட்ட செடிகளை வைத்து வளர்க்கலாம். இத்தொட்டிகளை வீட்டின் முற்றங்களிலும், தாழ்வாரங்களிலும், போரிடிகோவிலும் தொங்க விட்டு செடிகளை வளர்ப்பதால் அழகாக இருப்பதோடன்றி நம் உபயோகத்திற்கும் அதிக இடம் கிடைக்கும். சீடம், செப்ரினா, வெர்பினா, அஸ்பராகஸ் போன்ற செடிகளை தொங்கும் தொட்டிகளில் வளர்க்கலாம்.

செடிகளுக்கேற்ற தொட்டிகள்

எந்த வகைத் தொட்டியை உபயோகித்தாலும் முதலில் செடிக்கும் தொட்டிக்கும் பொருத்தம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பெரிய தொட்டிகளில் சிறிய செடிகளை வைக்க கூடாது. அதுபோலவே சிறிய தொட்டிகளில் பெரிய செடிகளையும் வைக்க கூடாது. உயரமான செடிகளை உயரமான தொட்டிகளில் வைத்தால் தான் அழகாக இருக்கும். தொட்டிகள் எப்போதும் செடிகளைவிட பெரியதாக இருக்கக் கூடாது. செடிகள் தான் தொட்டியைவிட பெரியதாக இருக்க வேண்டும். தொட்டியின் வண்ணம் செடிகளோடு ஒத்துப்போக வேண்டும். தொட்டியின் நிறம் மிகவும் பளபளப்பாகவும் செடியின் அழகைக் குறைப்பதாகவும் இருக்ககூடாது.

நிழலில் வளரும் தாவரங்கட்கு மரக்குடுவைத் தொட்டிகளையும் அகன்ற பரவி வளரும் செடிகளான பொன்னாங்கண்ணி, கோலியஸ், பட்டு ரோசா, வர்பினா, பெரணி ஆகியவைகட்கு அகன்ற வாயுடன், உயரம் குறைந்த கிண்ணத் தொட்டிகளையும் பயன்படுத்தலாம். மாடி மற்றும் தாழ்வாரங்களில் பயன்படுத்தும் தொட்டிகளில் அடிக்கடி வண்ணம் தீட்டியும், துடைத்துச் சுத்தம் செய்வது மிகவும் அவசியமாகும். தொட்டிகள் மட்டுமின்றி இரும்புக் கம்பிகள், வேலிகள், பந்தல் ஆகியவைகட்கு வண்ணம் தீட்டி அழகுபடுத்துவது அவசியம். பச்சை செடிகொடிகள் படரும் இடங்கட்கு சிவப்பு வர்ணமும், சிவந்த குரோட்டன் வகைச் செடிகட்கு பச்சை வெண்நிறமும் தீட்டி அழகு செய்யலாம். இவ்வாறு வர்ணம் தீட்டுவதால் அழகாக இருப்பதோடன்றி தொட்டிகளும் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

தொட்டிகளில் எரு தயாரித்து நிரப்புதல்

மாடித் தோட்டம் வளர்ப்பவர்கள் தம் வீடுகளில் கிடைக்கும் இலை, தழைகளையும், குப்பைக் கூழங்களையும் உணவுக் கழிவுகளையும் தொட்டிகளிலேயே போட்ட நிரப்பி மண் மூடி , எருவாக மக்கச் செய்து பயன்படுத்தலாம். விரைவில் அவை மக்க ஏதுவாக சிறிது நீர் தெளித்து ஈரமாக்கி வரலாம்.

தொட்டிகளில் மண்ணும் எருவும் நிரப்புதல்

செடிகள் நன்றாக வளர நல்ல காற்றோட்டமுள்ள கீழ் மண் அமைப்பும், ஈரமுள்ள மேல் மண் அமைப்பும் தேவை. தொட்டிகளின் மேல் மண்ணின் இலை மக்கு மண்ணும் , கீழ் மண்ணில் மணலும் சரளையும் இருக்குமாறு கலந்து இட வேண்டும். இதனால் நாம் ஊற்றும் நீர் இலை மக்கிலுள்ள சத்தைக் கரைத்து அடி மண்ணிலுள்ள வேருக்கு கொடுத்து விட்டுச் சரளை வழியாக வெளியேறிவிடுகிறது. இதனால் தான் தொட்டிகளில் செடிகள் நன்றாக வளர முடிகின்றது.

தொட்டிகளில் 5 முதல் 10 சதம் சரளையும், 30 சதம் மணலும், 30 சதம் மண்ணும், 10 முதல் 15 சதம் இலை மக்கும் இருக்குமாறு இட்டு செடிகளின் சிறந்த வளர்ச்சிக்கு வித்திடலாம்.

தொட்டிகளில் அடிப்புறமுள்ள துவாரங்களை சரளையால் மூடி தண்ணீர் முழுவதுமாக வெளியேறும்படி கவனிப்பது அவசியம். தொட்டிகளில் இவ்வாறு மண்ணும், எருவும் நிரப்பும் வேலையை சரியானபடி கவனிக்காவிட்டால் தொட்டிகளில் ஈரம் இல்லாமல் செடிகள் வாடி வதங்கும் அல்லது அதிக நீர் தேங்கி வேர் அழுகும்.

வளரும் செடிகளுள்ள தொட்டிகளில் மண் வளம் குறைவாகவும், செடிகளின் வளர்ச்சி அதிகமாகவும் இருப்பதால் தொட்டிகளில் உள்ள மண்ணின் வளம் போதுமானதில்லை. இதை ஈடு செய்ய தொட்டிகளில் பிண்ணாக்கு, செயற்கை உரங்கள் மற்றும் எலும்புத் தூளை வருடம் இருமுறை பயன்படுத்தலாம். இவைகளை நேரிடையாக உபயோகிப்பதைவிட நீரில் கரைத்து பயன்படுத்துவது சிறந்தது. பிண்ணாக்கு வகைகளை நேரிடையாக பயன்படுத்தினால் எறும்புகள் தோன்றி பிண்ணாக்குடன் செடி வேர்களையும் தின்று சேதம் விளைவிக்கும். ஆகவே திரவ உரங்களைப் பயன்படுத்தி செடிகளை நல்ல முறையில் வளர்க்கலாம்.