||| | | | |
தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: செலரி
இயற்கை வேளாண்மையில் செலரி சாகுபடி

விதை உற்பத்தி :

செலரி ஒரு குளிர்பிரதேசப் பயிர். இதன் விதைகள் கொத்தமல்லி, வெந்தயத்தைப் போன்று மணமூட்டும் பொருளாகப் பயன்படுகிறது.

மண் மற்றும் காலநிலை:

இப்பயிருக்கு நல்ல வளமான வடிகால் வசதியுள்ள மண் மிகவும் ஏற்றது. அதிக அளவில் கரிமப்பொருள் கொண்ட கார அமில நிலை 6 முதல் 6.5 வரை உள்ள வளமான செம்பொறை மண் இப்பயிரின் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமில நிலை 4க்கு குறைவாக இருப்பின் டாலமைட் 2.5 டன், எக்டர் சாகுபடி செய்வதற்கு 2 மாதத்திற்கு முன் மண்ணில் இட வேண்டும்.

பருவம் :

விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம் கார்போகம் (ஏப்ரல் - ஜ%ன்). ஏப்ரல் மாதத்தில் விதைத்து, மார்ச் மாதத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

இனவிருத்தி:

செலரி விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. விதைகள் மிகவும் சிறியதானதால் பத்து மடங்கு மணலுடன் கலந்து உயர்ந்த நாற்றங்கால் படுக்கையில் விதைக்க வேண்டும்.
நாற்றங்கால்:

நிலத்தை நன்றாகப் பண்படுத்த வேண்டும்

விதையளவு:

ஒரு எக்டருக்கு 1.25 கி.கி. விதை தேவை. ஒரு எக்டருக்கு தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய 100 சதுர அடி நாற்றங்கால் அவசியமானது. 1 மீ. அகலம், 15 செ.மீ உயரம் தேவைக்கேற்ற நீளம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். விதைகளை 3 சத பஞ்சகாவ்யா கரைசலில் ஊற வைத்த பின் நிழலில் உலர்த்தி வரிசையில் விதைக்க வேண்டும். நாற்றங்கால் நிலம் தயாரிக்கும் போது, ஒரு சதுர மீட்டருக்கு 20 கி.கி தொழு உரம், அதனுடன்  கி.கி. மண்புழு மட்கு உரம், 10 கி.கி இயற்கை உயிராற்றல் மட்கு உரம், 200 கி. மைக்கோரைசா வேர் உட் பூசணம், 200 கி. அசோஸ்பைரில்லம் மற்றும் 200 கி. பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். நாற்றங்காலில் களைகளை எடுத்து சுத்தமாக வைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீாப்பாய்ச்சுதல் வேண்டும். விதைக்கப்பட்ட 3 வாரங்களில் விதை முளைத்து விடும். 7 நாட்களில் நல்ல தரமான நாற்றுகளை பெறலாம்.

நிலம் தயார் செய்தல்:

செலரி பயிரிடுவதற்கு 60 நாட்களுக்கு முன்பு பக்வீட், லூப்பின் போன்ற பயிர்களை வளர்த்து, மடக்கி உழுது நிலத்திற்கு வளம் சேர்க்க வேண்டும்.
ஒரு எக்டருக்கு 30 டன் நன்கு மக்கிய தொழுவுரம் இட வேண்டும். தொழு உரத்துடன் 5 டன் இயற்கை உயிராற்றல் மட்கு, 5 டன் மண்புழு மட்கு உரம், 10 கி.கி மெட்டாரைசியம், 10 கி.கி. அசோஸ்பைரில்லம், 10 கி.கி. பாஸ்போபாக்டீரியா, 10 கி.கி.மைக்கோரைசா வேர் உட்பூசணம், 1.25 டன் வேப்பம் புண்ணாக்கு, 2.5 கி.கி. சூடோமோனாஸ் புளூரசன்ஸ் மற்றும் 2.5 கி.கி. டிரைக்கோடர்மா விரிடி ஆகியவற்றையும் கலந்து இட வேண்டும். நிலத்தை நன்கு உழுத பின்பு 75 கி.கி. கொம்பு சாண உரத்தையும், 1.5 கி.கி. சாண மூலிகை உரத்தினையும் 40 லிட்டர் தண்ணீரில் கரைத்து பெரிய துளிகளாக விழுமாறு ஒரு எக்டர் நிலத்தில் தெளிக்க வேண்டும்.


நடவு செய்தல்:

மழைக்காலங்களில் நடவு மேற்கொள்ள வேண்டும். நல்ல தரமான நாற்றுகளை வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்குச் செடி 60 செ.மீ இடைவெளி கொடுத்து நடவு செய்தல் வேண்டும்.

நீர் பாய்ச்சுதல்:

பயிரின் நல்ல வளர்ச்சிக்கு முறையான மற்றும் துரிதமான நீர்ப்பாசனம் தேவை. வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.

பின்செய் நேர்த்தி:

நிலத்தை களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். பயிரின் நல்ல வளர்ச்சிக்கு 4-5 முறை களைகள் அகற்ற வேண்டும்.

பயிர் வளர்ச்சி ஊக்கிகள்:
    • பஞ்சகாவ்யா 3 சத கரைசலை இலைவழித் தெளிப்பாக 15 நாட்கள் இடைவெளியில் 4 முறை தெளிக்க வேண்டும்.
    • அறுவடைக்கு முன் 10 சத மண்புழு வடிநீரை 4 முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
    • கொம்பு சிலிக்கா உரம் 2.5 கிராமை 50 லிட்டர் தண்ணீரில் கரைத்து அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
    • சாண மூலிகை உரம் எக்டருக்கு 5 கிலோவை 200 லிட்டர் தண்ணீரை கலந்து 3 முறை (45, 60 மற்றும் 75வது நாட்கள் தெளிக்க வேண்டும்)
    • அறுவடைக்கு முன் 3 சத தசகாவ்யா கரைசலை இலைவழித் தெளிப்பாக 15 நாட்கள் இடைவெளியில் 4 முறை தெளிக்க வேண்டும்.
    • 200 கிராம் அக்னிஹோத்ரா சாம்பலை 1 லிட்டர் கோமியத்தில் 15 நாட்களுக்கு வைத்த பின்னர் அக்கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 3 முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
    • 5 சத மஞ்சூரியன் தேநீர் கரைசலை 3 முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு :

இந்த இரகம் பூச்சி மற்றும் பூசண நோய்களுக்கு ஏதிர்ப்புத் திறன் கொண்டது.

அறுவடை:

செலரி விதை உற்பத்திக்கு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் விதைகளை விதைக்க வேண்டும். நாற்றுகள் ஜ%ன் இரண்டாம் வாரத்தில் நடுவதற்கு தயாராகிறது. இப்பயிர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் பூக்கத் தொடங்கி ஜனவரி இரண்டாவது வாரத்திற்குள் பூத்துவிடும். செடிகள் நிலத்தில் சாய்வதை தடுக்க நான்கு பக்கமும் தா   ங்கு குச்சிகளை நட வேண்டும். பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் விதை உற்பத்தி தொடங்கிவிடும். விதை உற்பத்தி செய்யும்பொழுது மற்ற செடிகளின் மகரந்தம் கலக்காமல் இருக்க சுமார்1000 மீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். செடியில் உள்ள பூக்கள் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். விதைகள் நன்கு முற்றி அறுவடைக்கு தயாராகும் போது அவை பழுப்பு நிறமாக இருக்கும். பிறகு அவற்றைப் பூங்கொத்திலிருந்து கையாலோ அல்லது சிறு குச்சி கொண்டோ தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும். அறுவடை தாமதமானால் விதைகள் மண்ணில் உதிர்ந்துவிடும். ஆதலால், சரியான தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும். விதைகளை பூங்கொத்தோடு அறுவடை செய்த பிறகு அவற்றை சீதோஷ்ண நிலையைப் பொறுத்து 5 முதல் 10 நாட்கள் வரை வெயிலில் உலர்த்தி 700 தடிமனுள்ள பாலித்தின் பையில் சேமிக்க வேண்டும். 1000 விதைகளின் எடை 0.43 கி ஆகும். ஒரு செடியில் அனைத்து அறுவடைகளிலும் சேர்த்து 85 கி விதை கிடைக்கிறது. உலர்ந்த இடத்தில் சேமித்தால் விதை முளைப்பில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் 3 வருடம் வரை பாதுகாக்கலாம்.

மகசூல்:

ஒரு எக்டருக்கு 1400 கி.கி மகசூல் கிடைக்கிறது.
செலரி த.வே.ப.க உதகை – 1 சார் உணவுப் பொருட்கள் தயாரிப்பு

மேலும் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்
விஜயநகரம், உதகை – 643 001.
தொலைபேசி – 0423-2442170
மின்னஞ்சல் – hrsooty@tnau.ac.in
Last Update :October 2014
 

||| | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014