தோட்டக்கலை :: பழப்பயிர்கள் :: எலுமிச்சை

இரகங்கள்: பிகேஎம் 1, ராஸ்ராஜ்

பிகேஎம் 1
உள்ளூர் வகை
வி ஆர் எம் 1

மண் மற்றும் தட்பவெப்ப நிலை: நல்ல வடிகால் வசதியுள்ள இரு மண் பாங்கான குறுமண் நிலம் ஏற்றது. வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டல பயிர் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் வரை நன்கு வளரும்.

பருவம்: டிசம்பர் - பிப்ரவரி  ஜீன் - செப்டம்பர்

விதையும் விதைப்பும்

இடைவெளி: 5லிருந்து 6 மீட்டர்
நடவு : ஜீன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவு செய்யலாம். 7.5 செ.மீ நீள, அகல, ஆழமுள்ள குழிகளில் நல்ல வளர்ச்சியுடன் கூடிய நாற்றுகளைக் குழிகளில் நடுவில் நட்டு நீர்ப்பாய்ச்சவேண்டும். தண்ணீர் தேங்கக்கூடாது.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
தழைச்சத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் இடவேண்டும். தொழு உரம் மற்றும் மணி, சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அக்டோபர் மாதங்களில் இடவேண்டும். 0.5 சதம் ( 500 கிராம் / 100 லிட்டர் தண்ணீர்) துத்தநாக சல்பேட்டை புதிய இலைகள் தோன்றியவுடன் ஆண்டிற்று மூன்று முறை மார்ச், ஜீலை மற்றும் அக்டோபர் மாதங்களில் இடவேண்டும்.

வருடா வருடம் இடப்படவேண்டிய உரத்தின் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செடி ஒன்றுக்கு (கிலோவில்)

வ.எண் உத்தின் பெயர் முதல் வருடம் வருடா வருடம் அதிகரிப்பு 6 வருடங்களுக்குப் பிறகு
1. தொழு உரம் 10.000 5.000 30.000
2. நைட்ரஜன் 0.200 0.100 0.600
3. பாஸ்பேட் உரம் 0.100 0.025 0.200
4. பொட்டாஷ் 0.100 0.040 0.300

 

பயிர்   இப்கோ காம்ப்ளக்ஸ்  10:26:26 யூரியா இடவேண்டிய அளவு (கிலோ செடி ஒன்றுக்கு)
    10:26:26 யூரியா
எலுமிச்சை முதல் வருடம் 0.40 0.40
  வருடா வருடம் அதிகரிப்பு 0.15 0.20
  6 வருடங்களுக்குப் பிறகு 1.20 1.00

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

பின்செய் நேர்த்தி: தரையிலிருந்து 45 செ.மீ உயரம் வரையுள்ள பக்க இலைகளை முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் நீக்கவேண்டும். பிறகு ஒரு மரத்திற்கு 30 கிலோ பசுந்தாள் உரங்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை இடவேண்டும்.

வளர்ச்சி ஊக்கி: எலுமிச்சையில் காய்ப்பிடிப்பு அதிகமாவதற்கு 2-4டி மருந்தினை 20 பி.பி.எம் அடர்த்தியில் பூக்கும் தருணத்திலும் காய்கள் உதிராமல் அஇருக்க என்.ஏ.ஏ என்ற மருந்தை 30 பி.பி.எம் ள என்ற விகிதத்திலும் கலந்து காய்கள் கோலிக்குண்டு அளவு இருக்கும்போது தெளிக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

இலைத்துளைப்பான் : ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கை 20 லிட்டர் தண்ணீரில் ஒரு இரவு ஊறவைத்து வடிகட்டித் தெளித்தால் இலைத்துளைப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். ஒரு மி.லி டைகுளார்வாஸ் அல்லது பென்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்கவேண்டும். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 1.5 மி.லி மோனோகுரோட்டாபாஸ் மருந்து கலந்து தெளிக்கவேண்டும்.

சாறு உறிஞ்சும் பூச்சிகள்

வெள்ளை ஈ: 2 மி.லி குயினால்பாஸ் மருந்தை  ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

அசுவினி: ஒரு மி.லி மீத்தைல் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் மருந்தை  ஒரு லிட்டர்  தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

துரு சிலந்தி: ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மி.லி டைக்கோபால் அல்லது நனையும் கந்தம் 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும்.

பழத்தை உறிஞ்சும் பூச்சி

இதனைக் கட்டுப்படுத்த களைச்செடிகளை அப்புறப்படுத்தி சுத்தாமாக வைத்திருக்கவேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி மாலத்தியான் என்ற விகிதத்தில் கலந்து அதனுடன் கரும்பு ஆலைக்கழிவையும் கலந்து தோட்டத்தில் பல இடங்களில்  வைத்து அந்திப் பூச்சிகளைக் கவர்ந்து விரட்டலாம். விளக்குப் பொறிகளை வைத்து அந்திப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

தண்டுத் துளைப்பான்: புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்கள் உள்ள கிளைகளை அகற்றிவிடவேண்டும். பத்து மி.லி மோனோகுரோட்டோபாஸ் மருந்தைத் தாக்கப்பட்ட தண்டுப் பகுதியில் ஊற்றி களிமண்ணால் மூடிவிடவேண்டும்.

பழ ஈ: ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி மாலத்தியான் அல்லது பென்தியான் மருந்து என்ற அளவில் கலந்து அதனுடன் 10 கிராம் வெல்லம் கலந்து தெளிக்கவேண்டும். மீதைல்யூஜினால் 0.1 சதம் மற்றும் மாலத்தியான் 0.005 சதம் கலந்து கலவையைக் கொண்டு பழ ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
நூற்புழுக்கள்: ஒரு மரத்திற்கு 250 கிராம் கார்போபியூரான் 3 ஜி   குருணை மருந்தை நிலத்தில் இட்டு கொத்தி கிளறிவிடவேண்டும்.

நோய்கள்

நுனி கருகல்: காய்ந்த இலைகளை அப்புறப்படுத்தவேண்டும். 0.3 சதம் காப்பர் ஆக்ஸ்குளோரைடு (அல்லது) கார்பன்டசிம் 0.1 சதம் மருந்தை ஒரு மாத இடைவெளியில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

சொறி நோய் :

ஸ்டெரப்டோமைசின் மருந்தை 100 பி.பி.எம் அடர்த்தியில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.3 சதக்கரைசலுடன் கலந்து தெளிக்கவும்.

ட்ரிஸ்ட்சாநச்சுயிர் (வைரஸ்) நோய்: நோய்த் தடுப்பு செய்யப்பட்ட நல்ல வளர்ச்சியுடன் கூடிய நாற்றுக்களை உபயோகப்படுத்த வேண்டும்.

அறுவடை

நட்ட 3வது ஆண்டிலிருந்து காய்ப்பிற்கு வரும்.
மகசூல் : 25 டன் / எக்டர் / ஆண்டு

அறுவடைக்குப் பின் நேர்த்தி

அறுவடை செய்த பழங்களை 4 சதவிகிதம் மெழுகில் நனைத்து எடுக்கவேண்டும். மேலும்  1 சதவிகதம் காற்றோட்ட வசதி கொண்ட 200 காஜ் அடர்த்தியான பாலித்தீன் கொண்டு 10 நாட்கள் வரை பாதுகாக்கலாம்.

 

 

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021