செம்மறியாட்டு  இனங்கள் 
          செம்மறியாடுகளை முக்கியமாக அவை  தரும் பயன்களின் அடிப்படையில் ‘இறைச்சியின ஆடுகள்’ எனவும், ‘கம்பளியிழையின ஆடுகள்’  எனவும் இருவகையாகப் பிரிக்கலாம். 
          தமிழ்நாட்டில் இறைச்சியின செம்மறியாடுகளே  அதிகமாக உள்ளன. அவை மேச்சேரி, சென்னை சிவப்பு, கீழக்கரிசல் இராநாதபுரம் வெள்ளை மற்றும்  வேம்பூர் போன்றவையாகும். 
          கம்பளியிழை தரும் செம்மறியாடுகள்,  முக்கியமாக கம்பளியிழைக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும் இறைச்சியும் தருகின்றன. கோயமுத்தூர்,  குரும்பை, திருச்சிக் கருப்பு மற்றும் நீலகிரி ஆகியன கம்பளியிழையினச் செம்மறியாடுகளாகும். 
          ஒவ்வொரு இனத்தின் இருப்பிடம்  மற்றும் குணநலன்களாவன., 
          இறைச்சியின்  ஆடுகள் 
             
            மேச்சேரி 
             
            இந்த இன ஆடுகள் சேலம் மாவட்டத்தில்  குறிப்பாக மேச்சேரி, கொளத்தூர், நங்கவள்ளி, ஓமலூர் பகுதிகளிலும், ஈரோடு மற்றும் தர்மபுரி  மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. மேச்சேரி இனச் செம்மறியாடுகள் இளம்பழுப்பு  நிறம் கொண்டவை. 
          இந்த இன ஆடுகளுக்கு கொம்புகள்  கிடையாது. இதன் தோல், தரத்தில் மிக உயர்ந்தது. மேலும் மொத்த உடல் எடையில் இறைச்சி  கொடுக்கும் விழுக்காடு மற்ற இனங்களைவிட அதிகம். 
            
            மேச்சேரி 
          சென்னை  சிவப்பு 
             
            இந்த இனம், காஞ்சிபுரம், வேலூர்  மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காணப்படுகிறது. இதன் நிறத்தைக் கொண்டே சென்னை  சிவப்பு எனக் கூறுகிறோம். இந்த இன கிடா ஆடுகளுக்கு நல்ல சுருட்டையான கொம்புகள் இருக்கும்,  பெட்டை ஆடுகளுக்கு கொம்பு கிடையாது. 
          கீழக்கரிசல் 
             
            இவை இராநாதபுரம் மற்றும் மதுரை  மாவட்டங்களில் காணப்படுகின்றன. கோடைக்காலங்களில் மேய்ச்சலுக்காக நீண்ட தூரம் செல்வதால்  இந்த ஆடுகள் தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் காணப்படும்.  இந்த இன ஆடுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கீழ்த்தாடை, மார்பு மற்றும் அடிவயிற்றுப்  பகுதிகளில் கருப்பு நிறம் காணப்படும். கிடா ஆடுகளுக்கு நீண்ட,  திருகிய கொம்பு இருக்கும்.  பெட்டை ஆடுகளுக்கு கொம்பு கிடையாது. 
          இராமநாதபுரம்  வெள்ளை 
             
            இந்த வகையான ஆடுகள், இராமநாதபுரம்  மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றன. வெள்ளை நிறத்தில் இருக்கும் இவ்வின  ஆடுகளில் தலை மற்றும் கால் பகுதிகளில் கரும்புள்ளிகள் காணப்படும். கிடா ஆடுகளின் கொம்புகள்  தடித்து திருகி இருக்கும். பெட்டை ஆடுகளுக்கு கொம்பு இருக்காது. 
          வேம்பூர் 
             
            இந்த இனம் தூத்துக்குடி மாவட்டத்தில்  வேம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை மற்றும் நாகலாபுரம் ஊர்களிலும், புதூர் மற்றும்  விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்தச் செம்மறியாடுகள்,  வெள்ளை நிறத்துடன் பழுப்பு அல்லது சிவப்பு நிறத் திட்டுகள் கொண்டிருக்கும். இவற்றின்  உயரம், மற்ற தமிழ்நாட்டு இனங்களை விட அதிகம். கிடாக்கள் திருகிய கொம்புடனும், பெட்டையாடுகள்  கொம்பு இல்லாமலும் காணப்படும். 
          கம்பளியிழையின  ஆடுகள் 
             
            இதனை ‘குரும்பை ஆடு’ எனக் கூறுவர்.  இந்த இனம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சூலூர் வட்டத்தில் வசிக்கும் குரும்பர் இனத்தவர்களால்  முதலில் வளர்க்கப்பட்டது. இது வெள்ளை நிறத்துடனும், முகம், காது மற்றும் கழுத்துப்  பகுதிகளில் கருப்பு அல்லது செம்பழுப்பு நிறம் கலந்தும் காணப்படும். இதன் உரோமம் விரிப்புக்  கம்பள உரோம வகையைச் சார்ந்தது. இது கம்பளிகள் நெய்யப் பயன்படுகிறது. 
          திருச்சிக்  கருப்பு 
             
            இந்த இன ஆடுகள் பெரம்பலூர், திருவண்ணாமலை,  சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இவை பெயருக்கேற்ப  கருப்பாக இருக்கும்.  இதன் உரோம விரிப்புக்  கம்பளி ரோம வகையைச் சார்ந்தது. 
          நீலகிரி 
             
            இந்த இன ஆடுகள் நீலகிரி மாவட்டத்தில்  மட்டும் காணப்படும். இவை வெள்ளை நிறமாக இருக்கும். பழுப்பு நிறத்தில் வட்டங்கள் முகத்திலோ,  உடலிலோ சில ஆடுகளில் இருக்கும். இந்த இன ஆடுகளில் கொம்புகள் கிடையாது. வால் நீளமாக  இருக்கும். 20 விழுக்காடு ஆடுகள், ஈற்றிற்கு இரண்டு குட்டிகள் போடக்கூடியவை. தமிழ்நாட்டில்  உள்ள இனங்களில் மென்மையான கம்பளி உரோமம் தரும் ஒரே இனம் இது மட்டுமேயாகும்.  |