animal husbandry
பறவை இனங்கள் :: வாத்து வளர்ப்பு :: நோய் மேலாண்மை முதல் பக்கம்

நோய் பராமரிப்பு

பிற பறவைகளைவிட வாத்துகள் பொதுவாக கடின உடலமைப்பைப் பெற்றவை. வாத்துகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானவை வாத்து பிளேக், பூசண நச்சு நோய் மற்றும் பாஸ்சுரெல்லா நுண்டி நோய் போன்றவை. இவைகளைத் தடுக்க முக்கியமான வழி பூஞ்சான் (பிடித்த) தாக்கிய தீவனங்களை வாத்துகளுக்கு அளிக்காமல் இருப்பதே வாத்து பிளேக்கிற்கு தற்போது தடுப்பூசிகள் உள்ளன. இது 8-12 வார வயதில் இத்தடுப்பூசிகள் அளிக்கப்பட வேண்டும். வாத்துக்குஞ்சுகளில் வைரஸினால் கல்லீரல் அழற்சி ஏற்பட்டால் இறப்பு வீதம் அதிகரிக்கும்.

வாத்து கொள்ளை (பிளேக்) நோய்

இவ்வைரஸ் நோய் பெரும்பாலும் முதிர்ந்த வாத்துகளையே தாக்குகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட வாத்துக்களில் இரத்த நாளங்கள் உடைந்து இரத்தம் உடலுக்குள் பரவுகிறது. குடல்பகுதியிலும் இரைப்பைக்குள்ளும் இரத்தம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட பிறகு எவ்வித சிகிச்சையும் பலன்தராது. ஆகையால் வாத்து பிளேக் தடுப்பூசிகளை 8-12 வார வயதில் கொடுத்தல் சிறந்த பயன் அளிக்கும். முடிந்தவரை நோய் பரவாமல் தடுப்பதே சிறந்தது.

வாத்து நச்சுயிரி கல்லீரல் அழற்சி

2-3 வார வயதுடைய வாத்துக்குஞ்சுகளையே இந்நோய் அதிகம் பாதிக்கிறது. இந்நோய்க்கும் பாதிக்கப்பட்ட பிறகு சிகிச்சை கிடையாது. இனச்சேர்க்கைக்கு ஈடுபடும் வாத்துகளுக்கு வீரியம் குறைக்கப்பட்ட வைரஸ் தடுப்பூசிகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுதல் நலம் பயக்கும். இதனை முட்டை உற்பத்தியைத் தொடங்கும் முன்பு செய்தல் வேண்டும். ஒரு நாள் வயதான வாத்துக்குஞ்சுகளுக்கு இந்த வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பூசிகள் அளிப்பதால் மிகுந்த பலன் பெறலாம்.

வாத்து காலரா கழிச்சல்நோய்

பாஸ்சுரெல்லா மல்டிகோடா எனும் பாக்டிரிய உயிரியால் 4 வார வயதுடைய வாத்துகளில் இந்நோய் அதிகம் பரவுகிறது. பசியின்மை, உடல் வெப்பம் கூடுதல், தாகம், வயிற்றுப்போக்கு மற்றும் திடீர் இறப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள். மூட்டு வீக்கம், தோலுக்கடியில் இரத்த ஒழுக்கு, இதய உறை அழற்சி, இரத்தப் புள்ளிகள் போன்றவை இந்நோயின் உள்நோயின் உள் அறிகுறிகள். கல்லீரல், மண்ணீரல், போன்றவை விரிவடையும். சல்பா மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். வாத்து வளர்ச்சியின் 4வது வாரத்திலும், 18 வது வாரத்திலும் காலரா (கழிச்சல்) தடுப்பூசி அளித்தல் அவசியம். என்ரோசின் சிகிச்சை அல்லது 30 மி.லி. சல்ஃபா மெஸ்த்தின் (33.1%) 5 லிட்டர் நீரில் கலந்தும் அல்லது 30-60 மி.லி.சல்ஃபா குயினாக்ஸலனைன் 5லி நீரில் கலந்தும் இம்மருந்தை குடிநீரில் கலந்து 7 நாட்களுக்கு வாத்துகளுக்கு அளிக்கலாம். எரித்ரோமைசின், ராபட்ரன் துகள்கள், நியோடாக்ஸ் - போர்ட், மார்ட்டின் வெட், வொர்க்ரின் கயஸோல் போன்ற மருந்துகளையும் கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி நீரில் கலந்து கொடுக்கலாம்.

பொட்டுலிசம் நச்சுத்தன்மை

வாத்துகளில் உணவு நச்சு ஒரு முக்கிய பிரச்சனை ஆகும். கெட்டுப்போன உணவுகள் (பயிர்களில்) வளர்ந்துள்ள பாக்டீரியாக்கள் உயிர்க்கொல்லும் நோயைத் தோற்றுவிக்கும். முடிந்தவரை அழுகிய, கெட்டுப்போன உணவுகளை வாத்துகள் உட்கொள்ளா வண்ணம் பாதுகாத்தல் வேண்டும். எப்சோம் உப்பை குடிநீரில் கலந்தும் கொடுக்கலாம்.

ஒட்டுண்ணிகள்

பொதுவாக வாத்துகள் உட்புற ஒட்டுண்ணிகளுக்கு எதிர்ப்புச் சக்தி பெற்றவை. தேங்கி நிற்கும் குட்டைகள், சிறு கலங்கிய ஓடைகளில் அதிகமாக உலவும் வாத்துகளுக்கு இவ்வகை உட்புற ஒட்டுண்ணித் தாக்குதல் இருக்கலாம். தட்டைப்புழு, உருளைப்புழு, நாடாப்புழு, போன்ற புழுக்கள் இதில் அடங்கும். இப்புழுக்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்கள் சிவப்பு இரத்தச் செல்களை அழித்துவிடுவதால் இரத்த சோகை நோய் ஏற்படுகிறது.
வாத்துகளில் புற ஒட்டுண்ணிகள் நோய் உண்டாக்கவில்லை எனினும் வளர்ச்சியைத் தடைப்படுத்தும் முக்கியக் காரணிகள் தெள்ளுப்பூச்சி, உண்ணி, சிற்றுண்ணிகள் போன்றவை முக்கிய புற ஒட்டுண்ணிகள் ஆகும். இவை ஏற்படுத்தும் தொந்தரவு மற்றும் எரிச்சலால் முட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் இவை சில நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளையும் பரப்புகின்றன. எனினும் கோழிகள் அளவிற்கு வாத்துகளில் பாதிப்பு அதிகம் இருக்காது.

பூசண நச்சு நோய்

வேர்கடலை, மக்காச்சோளம், பாலிஸ் செய்யப்பட்ட அரிசி போன்ற உணவுகளில் பூஞ்சானம் வளர்ந்துவிடும். இவ்வாறு பூஞ்சான் தாக்கிய உணவுப்பொருட்களை வாத்துகளுக்கு அளிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. அதிக ஈரப்பதம் மிக்க சூழ்நிலையிலும், சரியாக பயிறுகளை உலர்த்தாமல் விடுவதாலும் இந்நோய் எளிதில் வாத்துகளை பாதிக்கக் கூடியது. பி, பி 2, ஜி, ஜி 2 எனும் நான்கு வகை நச்சுகளில் பி, வகை அதிக நச்சுத் தன்மை வாய்ந்தது. ஒரு கிலோ தீவனத்தில் 0.03 பிபிஎம் அல்லது 0.03 பி.கி அளவு மட்டுமே நச்சுத்தன்மை இருக்கலாம்.

இப்பூசன நச்சுக்கள் கல்லீரலில் புண்களை ஏற்படுத்துவதால் நச்சுத்தன்மை அதிகமாகும்போது வாத்துகளில் இறப்பு ஏற்படும். குறைந்த நச்சுத்தன்மையின் போது வாத்துகள் சுறுசுறுப்பின்மை, கல்லீரல் அழற்சி போன்ற பாதிப்புகளுடன் உயிரிழப்பும் ஏற்படுவதுண்டு. பூசன நச்சு நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் ஏதும் இல்லை. தீவனங்களின் பூசனத்தை நீக்கி நன்கு உலர்த்திக் கொடுப்பதே இந்நோயிலிருந்து காக்க சிறந்த வழி ஆகும்.

வாத்துகளுக்கான தடுப்பு மருந்து அட்டவணை

வ.எண் தடுப்பு மருந்தின் பெயர் கொடுக்கும் வழி அளவு வயது
1. வாத்து காலரா கழிச்சல் நோய் (பாஸ்சுரெல்லா நுண்ம நோய்) தோலின் (அடிப்) கீழ்ப்பகுதியில் 1 மி.லி 3-4 வாரங்கள்
2. வாத்து கொள்ளை நோய் தோலின் அடிப்பகுதியில் 1 மி.லி 8-12 வாரங்கள்

 
(ஆதாரம்: www.vuatkerala.org)

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15