animal husbandry
கால்நடை பராமரிப்பு :: கேள்வி பதில் முதல் பக்கம்
  1. பன்றி வளர்ப்பின் நன்மைகள் யாவை?
    குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் அடையலாம். சமையலறை உணவுக் கழிவுகள், திருமண மண்டபம் மற்றும் கல்லூரி விடுதிகளிலிருந்து பெறப்படும் கழிவுகளைக் கொண்டும் வளர்க்கலாம். பராமரிப்பு முறை எளிது. பன்றிகள் சிறந்த தீவன மாற்றுத்திறன் கொண்டவை. பன்றி இறைச்சி உற்பத்தியின் சதவிகிதம் 65-70 ஆகும். சினைப்பருவம் 3 மாதம் 3 வாரங்கள் மற்றும் 3 நாட்கள் மட்டுமே. வருடத்தில் இரண்டு முறை பன்றிகள் குட்டி ஈனும்.

  2. பன்றி வளர்ப்பில் முக்கிய பிரச்சினைகள் என்ன?
    மக்களிடையே உள்ள மதசம்பந்தமான கோட்பாடுகளும், பன்றியினத்தின் மீது ஏற்பட்டுள்ள அறுவெறுப்பும், பன்றிகள் வளர்க்கப்படுகின்ற சூழ்நிலையும் பன்றி இறைச்சி உற்பத்தியில் வெகுவாக முன்னேற்றமடைய தடையாக இருந்து வந்தது. ஆனால், இப்பொழுது இந்நிலை படிப்படியாக மாறிவருகிறது.

  3. முக்கியமான பன்றியினங்கள் என்ன?
    இந்தியாவில் காணப்படும் மேல்நாட்டுப் பன்றியினங்கள் நம்நாட்டுத் தட்பவெப்ப நிலைக்குத் தங்களைப் பழக்கபடுத்திக் கொண்டவையாகும். இவற்றில் மிக முக்கியமானவை. பெரிய வெள்ளை யார்ஷையர், லேண்ட்ரேஸ், ஹேம்ப்ஷையர் மற்றும் டியூராக் முதலியனவாகும்.

  4. பன்றிக் காய்ச்சலின் தாக்கம் என்ன?
    எந்த இனம் என்று முடிவு செய்த பிறகு அந்த இனத்திற்குள்ளாக சிறந்த தாய்ப் பன்றிகளைத் தேர்ந்தெடுப்பதில் அக்கறை காட்ட வேண்டியது மிகவும் அவசியம். சிறந்த தாய்ப்பன்றிகள் ஒவ்வொரு முறையும் குறைந்தது 10 முதல் 12 குட்டிகளை ஈனும் திறன் பெற்றவையாக இருத்தல் வேண்டும். பிறந்த குட்டிகளை தாய்ப்பால் கொண்டு கவனமாக வளர்க்கும் தாய்ப்பன்றி, சிறந்த தாய்மைப்பண்பு கொண்டதாகக் கருதப்படுகிறது. இனப்பெருக்க காலத்தில் ஆண் பன்றியின் எடை 120 கிலோ இருக்குமாறு பார்த்து கொள்ளவும். வளர்ச்சித் திறன் குன்றி, உடல் மெலிந்து அவை இருக்கக் கூடாது. தாய்ப்பன்றியின் முதுகுப்பகுதி பிசிறில்லாத நேர் வளைவாகவும், வயிற்றுப் பகுதி நேர்க்கோட்டிலும் அமைந்திருக்க வேண்டும். பின்புறத் தோற்றத்தில் இடுப்பு, தோள்பட்டை, முதுகுப் பகுதிகள் பரந்து உருண்டு திரண்டிருக்க வேண்டும். தோள் பட்டைக்குப் பின்புறம் நெஞ்சுப்பகுதி அகன்றிருக்க வேண்டும். வயதுக்கேற்ற எடையைவிடச் சற்றுக் கூடுதலாக இருக்க வேண்டும். தொடை, முதுகுப் பகுதிகளில் நன்கு சதை பிடித்திருக்க வேண்டும்.

    நன்கு வளர்ச்சியடைந்த போதிய இடைவெளியுடன் அமைந்த 12 முதல் 14 பால் காம்புகள் கொண்ட பன்றிகளையோ, ஓரிரு ஈற்று முடிந்த பெண் பன்றிகளையோ தேர்வு செய்து பண்ணையத்தை துவக்கலாம். வெளித் தோற்றத்தில் ஆண்பன்றி திடமான கால்கள், வலுவான, சீரான உடலமைப்பு, பரந்த மார்பு, உருண்டு திரண்ட தொடை போன்ற அம்சங்கள் பெற்றதாக இருக்க வேண்டும். நன்கு வளர்ச்சி அடைந்த சம அளவிலான விரைகள் கீழிறங்கி இருக்க வேண்டும். ஆண் பன்றியிலும் 12 முதல் 14 மார்புக் காம்புகள் சிறியனவாகத் தென்பட வேண்டும். ஆண் பன்றிகளை முடிந்த அளவு இளம் வயதுப் (10 மாதம்) பன்றிகளாகத் தேர்வு செய்வதே மிகவும் சிறந்தது. 120 கிலோ எடைக்கு அதிகம் இல்லாத ஆண் பன்றிகளைத் தேர்வு செய்ய வேண்டும். வலுவான எலும்புகளுடன் நான்குக் கால்களையும் ஊன்றி நின்று சீராக நடக்கும் திறன் பெற்றதாக இருக்க வேண்டும்.

  5. குட்டிகள் ஈனும் போது என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்?
    குட்டி பிறந்த 10 நிமிடங்களில் பால் குடிக்க ஆரம்பிக்கும். சீம்பாலை, குட்டி பிறந்த உடனே கொடுக்க வேண்டும். சீம்பால் அளிப்பதன் மூலம், பிறந்த குட்டிகள் சிறந்த நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருக்கும். பிறந்த குட்டிகளுக்கு போதிய வெப்பம் அளிக்க வேண்டும். குளிர்காலங்களில் பிறக்கும் குட்டிகளுக்குக் குளிரிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். பிறந்த மூன்று நாட்களுக்கு அவைகளுக்குத் தனிக்கவனம் தேவை. குட்டிகள் பிறந்த 1வது நாள் இரும்புச் சத்துள்ள மருந்தினை ஊசி மூலம் ஒவ்வொரு குட்டிக்கும் கொடுக்க வேண்டும். தாயில்லாத குட்டிகளுக்கு பால் பவுடரில், சர்க்கரை, தாது உப்பு, உயிர்ச்சத்துகள் சேர்த்து உடல்வெப்ப நிலைக்கு சூடாக்கி ஒரு நாளைக்கு 5-6 முறையும், 2 வாரங்களுக்கு பிறகு ஒரு நாளுக்கு 3 முறை தர வேண்டும். மெலிந்த குட்டிகளை அமைதியான நல்ல பால் உற்பத்தி கொண்ட போதுமான பால்காம்புகள் உள்ள தாய்ப்பன்றியிடமும் மாற்றி விட வேண்டும். இத்தகைய முறை மூலம் 40 சதவிகிதம் கட்டிகளின் இறப்பை தவிர்க்கலாம். வாலை துண்டித்தல், ஊசி பற்களை நீக்குதல், அடையாளக் குறியிடுதல் மற்றும் பன்றிக் குட்டிகளுக்கு முறையாகக் குடற்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும்.

  6. பன்றியைத் தாக்கும் முக்கிய நோய்களும் அவை தடுப்பு முறைகளும் என்ன?
    நுண்மங்கள், நச்சுயிரிகளால் பன்றிகளுக்கு அதிகப் பாதிப்பு ஏற்படுகின்றது. நுண்மங்கள் மற்றும் நச்சுயிரிகளால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கக் கால்நடை மருத்துவரின் ஆலோசனை பெற்று அவ்வப்பொழுது பன்றிகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும்.

    பன்றி எரிசிபெலஸ்: கோடைக் காலம் முடிந்து தென்மேற்குப் பருவ மழை துவங்கும் காலத்தில் இந்நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் இன்றி பன்றிகள் திடீரென இறந்து விடக்கூடும். பாதிக்கப்பட்ட பன்றிகளில் மூட்டுப் பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டு கால்களை மடக்க இயலாமல் போகும்.
    பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பன்றிகளில் காய்ச்சல், பசியின்மை, கண்ணில் இருந்து நீர்வடிதல், பன்றிகள் இருட்டுப் பகுதியில் அடைத்து நிற்க முயற்சிப்பது போன்ற அறிகுறிகள் காணப்படும். மூச்சுத் திணறல் காணப்படும். நீண்ட காலப் பாதிப்பில் எடை மட்டும் குறையும், இறப்பு அதிகம் இருக்காது. பாதிக்கப்பட்ட பன்றிகளைத் தனியே பிரித்து தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும். முதல் தடுப்பூசியை 6-8 மாத வயதிலும், பின்பு வருடம் ஒரு முறை தவறாது போட வேண்டும்.

    பன்றிக் கோமாரி : பன்றிகளில் வாய் மற்றும் குளம்புப் பகுதிகளில் கொப்புளங்கள் தோன்றி தோல் பிளந்து புண் ஏற்படும். அவை நடக்கவே சிரமப்பட்டு படுத்துக் கொண்டு காணப்படும். சரிவர தீவனம் எடுக்காமலும் இருக்கும். இளம் பன்றிகளில் 50 சதவிகிதம் இறப்பு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட பன்றிகளைப் பிரித்துகொட்டகையை, சரிவர கிருமி நீக்கம் செய்ய வேண்டும். வாய் மற்றும் களும்புப் புண்கள் மருந்துக் கரைசலில் கழுவி விட்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

    பன்றியினங்களுக்கான தடுப்பூசி அட்டவணை

    வ.எண்.

    தடுப்பூசியின் பெயர்

    அளிக்கப்பட வேண்டிய வயது

    1.

    பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி

    முதலில் 6 முதல் 8 மாதத்திலும், பின்பு வருடத்திற்கொரு முறை

    2.

    கோமாரி நோய்த் தடுப்பூசி

    முதலில் 6வது மாதம் பின்பு 6 மாதத்திற்கொரு முறை


  7. ஆண் பன்றிக்கு காயடிப்பதன் அவசியம் என்ன? எப்போது செய்ய வேண்டும்?
    இறைச்சிக்காக வளர்க்கப்படும் குட்டிகளை 3-4 வாரத்தில் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும். ஆண்மை நீக்கம், அறுவைச் சிகிச்சை மூலம் செய்யலாம்.

  8. விடுதி மற்றும் உணவகங்களில் உள்ள கழிவுகளை தீவனமாக பயன்படுத்தும் போது செய்ய வேண்டிய முன்நடவடிக்கைகள் என்ன?
    பன்றி உற்பத்தியில் செலவைக் குறைக்க, பயனற்றவை என எடுத்தெறியப்படும் சமையலறைக் காய்கறிக் கழிவுகள், உணவுக் கூடக் கழிவுகள், காய்கறி அங்காடிக் கழிவுகள், ரொட்டி தயாரிப்பில் கிடைக்கும் கழிவுகள் மற்றும் மரவள்ளிக் கிழங்குத் தூள் கழிவு, பீர் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் பழங்கழிவுகள் ஆகியவற்றையும் உபயோகிக்கலாம். கழிவுகள் அழுகியவையாக இருக்கக்கூடாது. பொதுவாகக் கழிவுப் பொருட்கள் நன்கு கொதிக்க வைத்தபின், ஆற வைத்து உபயோகிப்பதே சிறந்த முறை, கழிவுப் பொருட்களை மட்டுமே தீவனமாக அளிக்காமல் உடன் புரதச் சத்து அதிகம் உள்ள அடர் தீவனம் 0.5 கிலோ முதல் 1.0 கிலோ வரை பன்றிகளின் வயது மற்றும் எடையைப் பொறுத்து அளிக்க வேண்டும்.

  9. பன்றி கொட்டகை அமைப்பது எப்படி?
    தீவிரப் பராமரிப்பு முறையில் அதிக அளவிலான பன்றிகளை வளர்க்கலாம். இம்முறையில் பன்றிகளுக்குத் தங்கும் அறைகள் இரண்டு வரிசையாக அமைக்கப்பட்டு, நடுவில் நடைபாதையும், அறைகளுக்கு பின்புறமாக சாணம் கழிக்கும் இடமும் அமைக்கப்படுகின்றன. கொட்டகை அமைக்கும் முன் குட்டியுடன் கூடிய தாய் பன்றிகள், வளரும் பன்றிகள், ஆண் பன்றிகள், சினைப் பன்றிகள், நோய்வாய்ப்பட்ட பன்றிகள் முதலியவற்றிற்காக தனித்தனியாக அறைகள் கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டும். தரைப்பகுதி எளிதில் கழுவக் கூடியதாகவும், பன்றிகள் நடக்கும் போது வழுக்கி விழாமலும் இருக்க சிமெண்டிலான சொரசொரப்பு மிக்க பகுதியாக இருக்க வேண்டும். தென்னங்கீற்று, ஓலை, ஆஸ்பெஸ்டாஸ், இரும்புத் தகடு ஆகிய கூரைப் பொருட்களைக் கொண்டு கூரை அமைக்கலாம். கூரையைக் கொண்டு கொட்டகை அமைக்கும் போது கொட்டகையின் உயரம் 6-8 அடி இருக்க வேண்டும். அஸ்பெஸ்டாஸ் கொண்டு அமைக்கும் போது கொட்டகையின் உயரம் 12 அடியாக இருக்க வேண்டும். குட்டிகளுடனான சினைப் பன்றிகளுக்கு தனி அறை அமைக்கும் போது மற்ற அறைகளிலிருந்த சற்று மாறுப்பட்ட அமைப்புக் கொண்டு உருவாக்க வேண்டும். இரும்பு குழாய்களை 25 செ.மீ.

    உயரத்தில் தரையில் இருக்கும் பக்கச் சுவரில் இருந்து 25 செ.மீ. தள்ளி பதிக்க வேண்டும். தாய்பன்றி புரளும்போது குட்டிகள் நசுங்கி விடாமல் தடுக்கும் ஓர் தற்காப்பு அமைப்பாகும். மேலும், கொட்கையினுள் குளிர்க்காலங்களில், குளிரிலிருந்து குட்டிகளை பாதுகாக்க செயற்கை வெப்பம் அளிக்க வேண்டும். பக்கவாட்டிலிருந்து வரும் குளிர்காற்று கொட்கையினுள் செல்லா வண்ணம் கோணிகள் கொண்டு திரைகளை தொங்கவிடலாம். இரண்டு வாரம் கழித்து குட்டிகளுக்காக தனியாக தீவனம் அளிக்க வேண்டும். தாய்ப்பன்றி இத்தீவனத்தை உட்கொள்ளாத அளவுக்கு தடுப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். கொட்டகையினுள் பன்றிகளுக்கு தேவையான இடவசதி அளிக்க வேண்டும். வளரும் பன்றிக்கு 10-20 ச.அடி கொட்டகையிலுள்ளும், 10-15 ச.அடி திறந்த வெளியிலும், சிறந்த வெளியிலும், கிடாபன்றிக்கு 65-85 அடி கொட்டகையிலும் 100-130 ச.அடி திறந்த வெளியிலும், குட்டி ஈனும் பன்றிக்கு 85-100 ச.அடி கொட்டகையிலும், 100-130 ச.அடி திறந்த வெளியிலும் இடவசதி அளிக்க வேண்டும்.

  10. பன்றியின் சினைப்பருவகால அறிகுறி என்ன?
    பெண் பன்றிகள் ஒரு வித உறுமல் சத்தத்துடன், தீவனம் உண்ணாமல் இருக்கும். இனப்பெருக்க உறுப்பு தடித்தும். விரிந்தும் காணப்படும். சினைப்பருவத்திலுள்ள பன்றியின் முதுகில் கை வைத்து அழுத்தினால், அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு அசையாமல் இருக்கும்.

Updated on : Sep 2015

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-15