animal husbandry
கால்நடை பராமரிப்பு :: கேள்வி பதில் முதல் பக்கம்
  1. கோழிப்பண்ணை மற்ற பண்ணைகளை விட எவ்வகையில் சிறந்தது?
    மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் வளா்க்கலாம். குறைந்த வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகிவிடுவதால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே வருமானத்தைப் பெற முடிகிறது.

  2. கோழிப்பண்ணையிடத்தை தேர்வு செய்வது எப்படி?
    மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே பண்ணை அமைத்தால் கோழிகளுக்கு அடிக்கடி தொந்தரவு ஏற்பட்டு உற்பத்தி குறைந்து விடும். அடிக்கடி ஆட்கள் நடமாட்டமிருந்தால் பிற பகுதிகளிலிருந்து பண்ணைக்குள் நோய்கள் பரவ ஏதுவாகவிடும். பண்ணைக்கு அருகில் வசிக்கும் மக்கள் சுகாதார அதிகாரிக்கு தெரிவித்தால் பண்ணையை மூட வேண்டி வரலாம். ஆகவே பண்ணை அமையவிருக்கும் இடம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சற்று தள்ளி இருத்தல் நல்லது. பண்ணை அமையவிருக்கும் இடம் களிமண் நிலமாக இருந்தால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கிப் பலவித நோய்க் கிருமிகள் வளர வாய்ப்புள்ளது. மிகவும் மணற்பாங்கான இடமாக இருந்தால், மிக வறண்டு இருக்கும். காற்று வேகமாக வீசும் காலத்தில் புழுதி கிளம்பிக் கோழிகளின் கண்களையும், சுவாசத்தையும் பாதிக்கக்கூடும். எனவே இருவகை மண்ணும் சரிவரக் கலந்த நிலமே கோழி வளர்ப்பிற்கு ஏற்றதாகும். களிமண்ணாக இருந்தால் நீர் வடிவதற்கு வேண்டிய அமைப்புகளை ஏற்படுத்துவதோடு வீடுகளின் தரைமட்டத்தையும் உயர்த்தி அமைக்க வேண்டும். மிகவும் மணற்பாங்கான பகுதியாக இருந்தால், வீடுகளைச் சுற்றி செடிகள் வளர்ப்பது பயன்தரும். கோழிப்பண்ணை அமையவிருக்கும் இடத்தில் கோழிக்குஞ்சுகளுக்கு தேவையான வெப்பமும், வெளிச்சமும் தடையின்றி கிடைக்கும் வண்ணம் மும்முனை மின்சார வசதி அவசியம் இருக்க வேண்டும். பண்ணை அமைக்கும் இடத்தில் நல்ல தூய்மையான குடிநீர் வசதி வருடம் முழுவதும் இருக்குமாறு தேர்ந்தெடுக்க வேண்டும். 250 கோழிகளுக்கு பண்ணை வைக்க குறைந்தது நாளொன்றுக்கு 60-75 லிட்டர் குடிநீர் கோழிகளுக்கு மாத்திரம் தேவைப்படும். இதைத்தவிர தண்ணீர் தட்டு கழுவி, சுத்தம் செய்ய என ஒரு கோழிக்கு 1 லிட்டர் தண்ணீர் நாளொன்றுக்கு தேவைப்படும்.

  3. கோழிப்பண்ணை எவ்விதம் அமைக்கப்பட வேண்டும்?
    பண்ணை அமையக்கூடிய இடம், தண்ணீர் தேங்கி நிற்காமல் வழிந்தோடி விடக்கூடிய நல்ல மேடான பகுதியாக இருத்தல் வேண்டும். பண்ணையை அமைக்கும் போது நீளவாட்டம் கிழக்குமேற்காக அமைக்க வேண்டும். பண்ணையின் அகலம் 20 அடிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பண்ணையின் உயரம் 12-15 அடி இருத்தல் வேண்டும். பக்கவாட்டில் கம்பி வலைகளை அமைத்து நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தரை சிமெண்ட் தளமாக இருத்தல் நலம். ஆழ்குள முறையில் ஒரு முட்டைக் கோழிக்கு 2 சதுர அடி இடவசதி தேவை. இக்கொட்டகைகளை மூன்று பருவங்களாக அதாவது இளங்குஞ்சு வளர்ப்புக கொட்டகைகள் (1 முதல் 8 வாரம் வரை), வளர்கோழி வளர்ப்புக்கொட்டகைகள் (9 முதல் 16 வாரம் வரை), முட்டையிடும் கோழிக்கொட்டகைகள் என அமைக்கலாம். அல்லது 1 முதல் 16 வாரம் வயது வரை வளர்பருவக் கொட்டகை ஒன்றாகவும், முட்டையிடும் பருவக் கொட்டகை தனியாகவும் அமைக்கலாம். அல்லது ஒரே பண்ணை ஒரே வயது முறையைப் பின்பற்றுபவர்கள், ஒரே கோழிக்கொட்டகையை மூன்று பருவங்களுக்கும் பயன்படுத்தலாம். முட்டைக் கோழி வளர்ப்பில் புதிய உத்திகள் புகுத்தப்பட்டு உயர் மட்டக் கூண்டு முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இரண்டு அல்லது மூன்று அடுக்குக் கூண்டுகள் அமைத்துக் கொள்ளலாம். இக்கூண்டுகள் தரை மட்டத்திலிருந்து 6 அடி உயரத்தில் 7 அடி உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். எனவே, தரைமட்டத்தில் அமைக்கப்படும் கூண்டுக் கொட்டகையின் அளவில் தூண்களின் உயரத்தில் ஆறு அல்லது ஏழு அடி உயரத்தைக் கூட்டி கூண்டுக் கொட்டகைகளை அமைக்க வேண்டும். கீழ்மட்டக் கூண்டு உள்ள இடம் முழுவதுமாக நடைபாதைத்தளம் அமைக்கப்பட வேண்டும். இம்முறையில் நல்ல காற்று மற்றும் குளத்திலிருந்து வரும் அம்மோனியா பாதிப்பு இல்லாத தன்மை இவற்றால் நோய்ப் பாதிப்பு குறைந்து கோழிகளின் முட்டையிடும் திறன் அதிகமாகிறது.

  4. கோழிப்பண்ணையில் தண்ணீரின் அத்தியாவசியம் என்ன? நீரினை எவ்விதம் சோதிக்கவேண்டும்?
    குடிநீரின் தன்மையை தெரிந்து கொள்ள, பண்ணை அமைக்கும்முன் அதன் தரத்தை ஆய்வு செய்வது மிக முக்கியமாகும். ஏனெனில் தண்ணீரில் உள்ள உப்புகளும், கிருமிகளும் கோழிகளின் வளர்ச்சியை பாதிப்பதோடு பல்வேறு நோய்களையும் கோழிகளுக்கு உண்டாக்க வாய்ப்புள்ளது. குடிநீரை அவ்வப்போது ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவையனா அளவு தண்ணீர் எப்போதும் அளிப்பது அவசியம். அனைத்து சத்துக்கள் அளித்தும், தண்ணீர் தேவையான அளவு கிடைக்காத பட்சத்தில் செரிமானம் ஆவதும், சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதும் பாதிப்படையும். உடல் வற்றி பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். இந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த குடிநீரை நாம் மிகவும் கவனத்துடன் கோழிகளுக்கு தரமான சுத்தமான குடிநீரை தேவையான அளவு அளிப்பது அவசியம். சுருக்கமாக நாம் அருந்தும் நீரை கோழிகளுக்கு குடிக்கலாம்.

  5. கோடைக்காலத்தில் கோழிப்பண்ணை எவ்விதம் பராமரிக்கப்பட வேண்டும்? கோழிப்பண்ணைப் பராமரிப்பு
    கோழிகளுக்கான கொட்டகைகளை அமைக்கும்போது, கொட்டகையை நல்ல மேடான பகுதியிலும், அதிக காற்றோட்டமான இடத்திலும், நல்ல நிழல் தரும் மரங்கள் அடங்கியுள்ள இடத்திலும் அமைத்தல் நல்லது. கொட்டகையின் நீளம் கிழக்கு மேற்காக அமைவதால், காலை மற்றும் குறிப்பாக மாலை வேளையில் சூரிய வெப்பம் நேரடியாகக் கொட்டகைக்கு வராது. 2.

    கொட்டகையின் பக்கச்சுவர் 1 முதல் 1.5 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. கம்பி வலையானது, சுவருக்கு மேல் 6 முதல் 7 அடி உயரம் இருக்குமாறு அமைப்பதன் மூலம் பக்கவாட்டிலிருந்து காற்றோட்டம் தங்கு தடையின்றி ஏற்பட்டு, வெப்பத்தின் கொடுமையயைக் கணிசமாகக் குறைக்க முடியும். கம்பி வலைகளில் தூசுபடியாதவாறு, ஒட்டடை மற்றும் தூசுகளை அடிக்கடி களைந்து துப்புரவாக வைத்துக் கொள்வதால் காற்றோட்டத்தை 50 சதவிகிதம் அதிகரிக்க முடியும்.

    கொட்டகையின் கூரை மிகவும் முக்கியமானது. ஆஸ்பெஸ்டாஸ் கூரையினால் கோடை வெப்பத்தைத் தடுக்க முடியாது. எனவே, கோடைக்க காலம் ஆரம்பிக்கும் முன்பே அவற்றின் வெளிப்பகுதியில், வெள்ளைச் சுண்ணாம்புப் பூச்சுக் கொடுப்பதால், வெப்பம் வெளியே நேரடியாக பிரதிபலிக்கப்பட வழி ஏற்படுகிறது. மேலும், அந்தக் கூரையின் மேல் வைக்கோல், தென்னை ஓலை அல்லது பனை ஓலையைப் பரப்புவதுடன், சுழலும் தெளிப்பான் மூலமாகவோ அல்லது குழாய் மூலமாகவோ தண்ணீரை அடிக்கடி தெளிப்பதால் சுற்றுப்புறச் சூழ்நிலையிலுள்ள வெப்பத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.

    பண்ணையின் பக்கவாட்டில் உபயோகமற்ற கிழந்த கோணிப் பைகளைத் தொங்கவிட்டு, அவற்றின் மேல் குளிர்ந்த நீரை அடிக்கடி தெளிப்பதன் மூலம், குளிர்ந்த காற்றானது கொட்டகைக்குள் செல்ல வழிவகுக்கலாம். மேலும், கொட்டகையைச் சுற்றி சுமார் 5 அடி பரப்பிற்கு தண்ணீர் தெளிப்பதன் மூலம் வெப்பம், கொட்டகையைச் சுற்றிலும் இருந்து உள்ளே செல்வதைத் தடுக்கலாம்.

    கொட்டகையின் வெப்பநிலை மகிவும் அதிகமாக இருக்கும் பொழுது, பனித் துவாலைத் தெளிப்பான் மூலமாக நீரை, பன்னீர் தெளிப்பது போல் மிக சிறிய துளிகளாகத் தெளித்து வெப்பத்தைக் குறைக்கலாம். இல்லையெனில் மின் விசிறிகளைக் கொட்டகைக்குள் காற்று வீசும் திசையில் வைத்து, ஓடவிட்டு கைத்தெளிப்பான் மூலம் தண்ணீரைப் பீச்சியடிக்கச் செய்வதால் பனிக்காற்று கோழி மீது பரவும். இவ்வாறு ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை பிற்பகல் நேரங்களில் சுமார் 2-3 நிமிடங்களுசக்கு வீசச் செய்வதால் கொட்டகை மற்றும் கோழிகளின் உடல் வெப்பத்தை வெகுவாகக் குறைக்கலாம். ஆனால், இவ்வாறு செய்யும் போது ஆழ்குளம் ஈரமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.

    தீவனப் பராமரிப்பு
    கோடைக் காலத்தில் கோழிகள் தீவனம் எடுப்பது குறைவாக இருப்பதால் அத்தியாவசிய அமினோ அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் மற்றும் தாது உப்புகள் போன்ற நுண்ணூட்டச்சத்துக்களின் அளவை அதிகரித்துக் கொடுக்க வேண்டும்.

    அதிகாலையிலும், இரவிலும் மின் விளக்குகளைப் போட்டு கோழிகள், தீவனம் உண்ணும்படி செய்யலாம். கோழித் தீவனத்தை உணவுக் குச்சிகளாக அளித்தால் உணவு வீணாகாமலும், அதிக அளவு உட்கொள்ளும்படியும் செய்யலாம். மேலும், கோடையில் முட்டை ஓடுகள் மிகவும் மெலிந்து இருக்கும். இதைத் தவிர்க்க அதிக அளவு கிளிஞ்சலைத் தட்டுகளில் வைத்து முட்டைக் கோழிகளுக்கு எப்போதும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். தண்ணீர்ப் பராமரிப்பு வழக்கத்தை விட கோடையில் தண்ணீர்த் தொட்டிகளின் எண்ணிக்கையை 20 முதல் 30 சதவிகிதம் வரை அதிகரிப்பது நல்லது. அதனால் எல்லாக் கோழிகளும் தேவையான பொழுது ஒரே சமயத்தில் நீரைப் பருக வாய்ப்பு ஏற்படுகின்றது. தண்ணீர் விரைவில் சூடாவதால் அதைத் தடுக்கப் பனிக்கட்டிகளைப் போட்டு நீரை, குளிமைப்படுத்தலாம். கோடையில் கோழிகளுக்கு ஏற்படும் அயர்ச்சியைத் தடுக்க தண்ணீரில் உயிர்ச்சத்துக்கள் மற்றும் மின் அயனிகள் சிறிது கூடுதலான அளவில் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

    மழை மற்றும் பனிக்காலம் தொடங்கும் முன் கூரையிலுள்ள ஒட்டடைகள் மற்றும் ஒழுகும் இடங்களை சரி செய்ய வேண்டும்.

    கூரையின் வழியாக வெப்பம் வெளியேறுவதைத் தவிர்ப்பதற்காக அதன் மேற்புறத்தில் கருப்பு வர்ணமும், கீழ்ப்புறத்தில் வெள்ளை வர்ணமும் பூசச் செய்யலாம்.

    மழைக் காலங்களில் சாரல் உள்ளே வராமல் தடுப்பதற்காக பண்ணையின் பக்கவாட்டுக் கூரையின் நீளம் 3 அடி இருக்குமாறு அமைப்பது நல்லது. மேலும், இக்காலங்களில் பண்ணையைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    குளிர்காலங்களில் கொட்டகையானது நல்ல காற்றோட்டமாகவும், அதே சமயத்தில் அதன் உட்புற வெப்பம் வெளியேறாமல் வெதுவெதுப்பாகவும் இருப்பதற்கு பக்கத்திரைகள் (கோணிப்பை படுதாக்கள்) தொங்க விடுவது மிகவும் அவசியம். 24 மணி நேரமும் பக்கத்திரைகளை தொங்கவிடக்கூடாது. ஏனெனில், அசுத்தக் காற்று கொட்டகையினுள் தேங்கி நோய்கள் ஏற்பட காரணமாகிவிடும்.

    தீவனப் பராமரிப்பு

    குளிர்காலத்தில் கோழிகளுக்கு அதிக வெப்பம் தேவைப்படுவதால் தீவனத்தில் எரிசக்தி அளவை வழக்கத்திற்கு மேல் சற்று அதிகமாகச் சேர்த்து அளிப்பது சிறந்தது. மேலும், குளிர்காலங்களில் கிருமிகளின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் உயிர்க் கொல்லி மருந்துகளையும் நச்சுத் திறனைக் குறைக்கும் மருந்துகளையும் தீவனத்தில் சேர்த்துக் கோழிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

    ஈரமான தீவனத்தைக் குளிர்காலத்தில் கோழிகளுக்கு அளித்தால் பூஞ்சைக் காளான் வளர்ந்து நச்சுப் பொருளை உண்டுபண்ணும். ஆதலால் இதைத் தவிர்ப்பதற்காக உலர் தீவனம் கொடுப்பது நல்லது.

    தீவனத் தட்டுகளிலுள்ள தீவனம் கட்டியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் ஒட்டியிருக்கும் தீவனத்தை அவ்வப்பொழுது சுரண்டி சுத்தம் செய்வது நல்லது.

    குளிர்காலத்தில் தீவனப் பொருட்களைச் சரியாக உலர வைக்க முடியாத காரணத்தினால் அவற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கலாம். பொதுவாகத் தீவனத்தில் 11 சதவிகிதத்திற்கு மேல் ஈரப்பதம் இருக்கக் கூடாது.

    தீவனம் வைக்கப்பட்டுள்ள அறையானது நல்ல காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் ஈரக்கசிவு இல்லாமல் இருக்க வேண்டும். தீவன மூட்டைகளைத் தரை மற்றும் பக்கச்சுவரில் படாமல் கட்டைகள் மீது அடுக்கி வைப்பது நல்லது. தீவனம் கட்டிபிடித்திருந்தால் அதை கோழிகளுக்கு உணவாக அளிக்கக்கூடாது.


  6. குளிர்காலத்தில் கோழிப்பண்ணை எவ்விதம் பராமரிக்கப்பட வேண்டும்?
    பொதுவாக அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் போன்ற மாதங்களில் (அதாவது புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி) கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் தனிப்பட்ட கவனம் தேவை. கோழிப் பண்ணைப் பராமரிப்பு

  7. ஆழ்கூளத்தினை தேர்வு செய்வது எப்படி?
    ஆழ்கூளம் என்பது கோழிகளுக்கான படுக்கையாகும். பொதுவாக சிமெண்ட் தரை கொண்ட கொட்டகையில் நெல் உமி, மரத்தூள், தேங்காய் நார் கழிவு, கடலைத் தோல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை ஆழ்கூளமாக பயன்படுத்தலாம். ஆழ்கூளப் பொருட்கள் விரைவில் நன்றாக ஈரத்தை உறிஞ்சக் கூடியதாகவும், விரைவில் நன்றாக உலரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மேலும் இப்பொருட்களை உரமாகவும் பயன்படுத்தக் கூடியவையாக இருக்க வேண்டும். உள்ளூரிலே கிடைப்பதாகவும், விலை குறைவாகவும் இருந்தால் நன்று. பொதுவாக ஆழ்கூளத்தின் ஈரப்பதம் 20-25 விழுக்காட்டிற்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கையளவு கூளத்தை எடுத்து பிசைந்தால் கூளம் உதிர்ந்து போனால் ஈரம் மிகக் குறைவு எனத் தெரிந்து கொள்ளலாம்.

  8. குஞ்சுக் கோழிகள் பராமரிக்குமிடம் எவ்விதம் அமைக்கப்பட வேண்டும்?
    குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்த பிறகு அவற்றினுடைய உடம்பிலுள்ள இறகுகள் முழுவளர்ச்சி அடையும்வரை உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்து கொள்ள முடியாத காரணத்தால் செயற்கை வெப்பம் அளிப்பது முக்கியமானதாகும். குஞ்சுகளை அடைகாப்பானில் விடுவதற்குமுன் கொட்டகை மற்றும் தேவையான உபகரணங்களை சுத்தம் செய்து வைக்க வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் அடைகாப்பானை அமைக்க வேண்டும். குஞ்சுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடைகாப்பானை அமைக்கலாம். பொதுவாக 5-6 அடி விட்டமுடைய ஒரு அடைகாப்பானில் 250-300 குஞ்சுகளை விடலாம். ஒரு குஞ்சுக்கு 1 வாட் மின்சாரம் என்ற அளவில் தேவையான மின்சார பல்புகளையோ, ஒரு கரிப்பானையையோ வைத்து தேவையான வெப்பத்தை கொடுக்கலாம். குஞ்சுகளை வளர்க்கப் புரூடர் தகடுகள் அல்லது அட்டைகளை ஒன்றோடு ஒன்று இணைத்து வட்ட வடிவில் அமைப்பது நல்லது.

    இந்த அடைகாப்பானுக்குள் 2 அங்குல உயரத்திற்கு நெல் உமி, மர இறைப்புச் சுருள், கடலைத் தோல், தேங்காய் நார் கழிவு போன்ற ஏதேனும் ஒன்றை 2 அங்குல உயரத்திற்கு பரப்ப வேண்டும். கூளத்தின் மீது சுத்தமான பழைய செய்தி தாள்கனை பரப்பி விட வேண்டும். அதன்மேல் 50 குஞ்சிற்கு ஒரு தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டியை வைக்க வேண்டும். தீவனத் தொட்டியில் தேவையான அளவு குஞ்சுத்தீவனத்தை முக்கால் கொள்ளளவு நிரப்பி வைக்க வேண்டும். குஞ்சுகளுக்கு முதல் 5 நாட்களுக்கு தண்ணீருடன் எதிருயிரி மருந்து, பி காம்பளக்ஸ் வைட்டமீன், குளுக்கோஸ் போன்றவற்றை கலந்து வைக்க வேண்டும். தினந்தோறும் செய்தித்தாள்களை மாற்றி புதிய செய்தித்தாள் போட வேண்டும். பொதுவாக குளிர்காலத்தில் 10 நாட்களுக்கும், கோடைக்காலத்தில் 7 நாட்களுக்கும் செயற்கை வெப்பம் கொடுத்தால் போதுமானது.

    பொதுவாக அடைகாப்பானில் குஞ்சுகளின் தேவைக்கேற்ப செயற்கை வெப்பத்தை அதிகரித்தோ, குறைத்தோ அளித்தல் வேண்டும். அடைகாப்பானுக்குள் எந்த நேரத்திலும் 50 சதவீத குஞ்சுகள் தண்ணீர், தீவனம் சாப்பிட்டுக் கொண்டும். சுறுசுறுப்பாக இருந்து கொண்டும். இருக்க வேண்டும்.

  9. கோழிகளில் குடற்புழு நீக்கம் எவ்வாறு செய்யவேண்டும்?
    ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு முதலில் 30-35 வது நாள் வயதிலும், பிறகு ஒவ்வொரு 60 நாட்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்தினை கொடுத்திட வேண்டும். குடற்புழு நீக்க மருந்தினை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாற்றி மாற்றி குறிப்பிட்ட அளவில் கொடுக்க வேண்டும்.

  10. சரியாக பராமரிக்கப்படாத ஆழ்கூளத்தினால் கோழிகளுக்கு வரும் நோய்கள் என்ன?
    இரத்தக்கழிச்சல் நோய் பெரும்பாலும் ஆழ்கூள பராமரிப்பில் ஏற்படும் குறைபாட்டினாலேயே உண்டாகிறது. நோய் பாதித்த பண்ணைகளில் தேவையான அளவு சுண்ணாம்பு தூளை ஆழ்கூளத்தின் மேல் தெளித்து கிளறிவிடவேண்டும். தடுப்பு மருந்துகளை தண்ணீரில் 5 நாட்களுக்கு கொடுத்திட வேண்டும். பி.காம்பளக்ஸ் வைட்டமின் மருந்தினை எக்காரணத்தை கொண்டும் கொடுக்கக்கூடாது.

  11. 100 இறைச்சிக் கோழிகளுக்கு எத்தனை தண்ணீர் தொட்டிகள் மற்றும் தீவனத்தொட்டிகள் தேவை?
    50 குஞ்சிற்கு ஒரு தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டியை வைக்க வேண்டும்.

  12. கோழிப்பண்ணையின் தண்ணீர் குழாய்களை எவ்விதம் சுத்தம் செய்யலாம்?
    தண்ணீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொடுக்கும் பைப்புகள் மற்றும் தொட்டிகளை மாதம் ஒரு முறை மருந்து போட்டு சுத்தம் செய்வது தண்ணீர் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

  13. தண்ணீர் மூலம் மற்றும் மருந்துகள் தடுப்பூசிகள் செய்வது எப்படி?
    கோழிகளுக்கு தண்ணீர் மூலம் தடுப்பூசியை கொடுத்தால் அயற்சியின்றி குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் கொடுக்க முடியும். ஆனால் தடுப்பூசி மருந்தினை கலக்கும் தண்ணீரில் கிருமிநாசினி மருந்து கலந்து இருக்கக்கூடாது தண்ணீர் குளிரூட்டப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்காக ஐஸ் கட்டிகளை உபயோகப்படுத்தலாம். ஆனால் ஐஸ் கட்டி தயாரிக்கப் பயன்படும் தண்ணீர்கூட கிருமிநாசினி கலந்து இருக்கக்கூடாது. தடுப்பூசி கலக்கப்படும் தண்ணீரில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் 100 கோழிகளுக்கு 50கிராம் என்ற விகிதத்தில் கலந்து இருக்க வேண்டும். தண்ணீரில் தடுப்பூசி கொடுக்கும் நேரத்திற்கு முன் குறைந்த 2-3 மணி நேரம் கோழிகளுக்கு தண்ணீர் இருக்கக்கூடாது. தடுப்பூசி மருந்து கலந்த தண்ணீரை முழுவதுமாக குடித்தபின் வழக்கமாக கொடுக்கப்படும் தண்ணீரை கொடுக்கலாம்.

  14. கோழித் தீவனத்திற்கான மூலப்பொருட்கள் யாவை?
    கோழிகளின் அடர்தீவனத்தில் சேர்க்கப்படும் தீவன மூலப் பொருட்களை எரி சக்தி அளிக்கும் பொருட்கள் என்றும், புரதச் சத்து கொடுக்கும் பொருட்கள் என்றும், நார்ச்சத்து கொடுக்கும் பொருட்கள் என்றும், தாது சத்து கொடுக்கும் பொருட்கள் என்றும், உயிர்சத்து கொடுக்கும் பொருட்கள் என்றும் பிரிக்கலாம். எடுத்துக்காட்டாக மக்காச்சோளம், கோதுமை, தானியங்கள் போன்றவைகள் எரிசத்து கொடுக்கிறது. புண்ணாக்குகள், பயறுவகைகள், மீன் கருவாடு போன்றவைகள் புரதச்சத்து கொடுக்கிறது. அரிசி தவிடு, கோதுமை தவிடு போன்றவைகள் நார்சத்தை கொடுக்கிறது. தாது உப்பும், உயிர்சத்தும் சந்தைகளில் கிடைக்கிறது. மேற்கண்ட பொருட்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கலப்பு தீவனத்தை தயார் செய்யலாம். பொதுவாக இவ்வாறு செய்யப்படும் கலப்பு தீவனத்தில் 50-60 விழுக்காடு எரிசத்து பொருட்களும், 25-30 விழுக்காடு புரதச்சத்து பொருட்களும், 20-25 விழுக்காடு நார்ச்சத்து பொருட்களும் இருக்கும்.

  15. கோழித் தீவனம் எவ்வாறு தயாரிக்கலாம்?
    கோழிகளின் அடர்தீவனத்தில் சேர்க்கப்படும் தீவன மூலப்பொருட்கள் எரி சக்தி அளிக்கும் பொருட்கள் என்றும், புரதச் சத்து கொடுக்கும் பொருட்கள் என்றும், நார்ச்சத்து கொடுக்கும் பொருட்கள் என்றும், தாது சத்து கொடுக்கும் பொருட்கள் என்றும், உயிர்சத்து கொடுக்கும் பொருட்கள் என்றும் பிரிக்கலாம். எடுத்துக்காட்டாக மக்காச்சோளம், கோதுமை, தானியங்கள் போன்றவைகள் எரிசத்து கொடுக்கிறது. புண்ணாக்குள், பயறுவகைகள், மீன் கருவாடு போன்றவைகள் புரதச்சத்து கொடுக்கிறது. அரிசி தவிடு, கோதுமை தவிடு போன்றவைகள் நார்சத்தை கொடுக்கிறது. தாது உப்பும், உயிர்சத்தும் சந்தைகளில் கிடைக்கிறது. மேற்கண்ட பொருட்களை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கலப்பு தீவனத்தை தயார் செய்யலாம். பொதுவாக இவ்வாறு செய்யப்படும் கலப்பு தீவனத்தில் 50-60 விழுக்காடு எரிசத்து பொருட்களும், 25-30 விழுக்காடு புரதச்சத்து பொருட்களும், 20-25 விழுக்காடு நார்ச்சத்து பொருட்களும் இருக்கும்.

  16. கோழியைத் தாக்கும் நோய்களும் அவற்றை தடுக்கும் முறைகளும் என்ன?
    நோய்களில் வெள்ளைக்கழிச்சல், கோழி அம்மை, இரத்தக்கழிச்சல், சளி போன்றவற்றுடன் அக ஒட்டுண்ணிகள் மற்றும் புற ஒட்டுண்ணிகளும் தாக்க வாய்ப்புள்ளது. கோழிகளை பராமரிக்கும் முறையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலோ நோய் பாதிப்பு ஏற்பட்டு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. நோய் அறிகுறிகளை கண்டறிந்து தக்க மருந்துவம் செய்ய வேண்டும். முறையாக தடுப்பூசிகள், குடற்புழு மருந்துகள் கொடுக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து இருக்க வேண்டும்.

  17. இறந்த கோழிகளை எவ்வாறு நீக்க வேண்டும்?
    இறந்த கோழிகள்தான் நோய் பரப்புவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆகையால் இறந்த கோழிகளை உடனுக்குடன் தகுந்த முறையில் அப்புறப்படுத்த வேண்டும். இதற்காக கோழிகளை எரித்தோ அல்லது ஆழமான குழி தோண்டியோ அப்புறப்படுத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் சுற்றுப்புறங்களில் வீசி எறியக்கூடாது.

  18. ஒருங்கிணைந்த கோழி சந்தை என்றால் என்ன?
    ஒருங்கிணைந்த முறையில் கோழிகளை வளர்க்கப் பண்ணையாளர்களுக்கு கோழிக்குஞ்சுகள், தீவனம், மருந்து மற்றும் தொழில்நுட்ப உதவிகளை தமிழகத்தில் உள்ள சில தனியார் கோழிப்பண்ணை நிறுவனங்கள் அளிக்கின்றன. பண்ணையாளர்கள் கொட்டகை, ஆழ்கூளப் பொருட்கள், மின்சாரம் மற்றும் வேலையாட்களை கொண்டு சிறந்த தீவன மாற்றுத் திறன் மற்றும் குறைந்த இறப்பு சதவிகிதத்துடன் வளர்க்க வேண்டும். வளர்ந்த கோழிகளை கோழிப்பண்ணை நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும். வளர்ப்புக்கூலியாக ஒரு கிலோ உயிர் எடைக்கு கொடுக்கப்படும்.

  19. கோழிப்பண்ணை விவரங்களை பதிவு செய்வது என்றால் என்ன?
    தீவனத்தொட்டி முழுவதும் நிரப்பாமல் முக்கால் அளவு மட்டும் போட வேண்டும். அவ்வப்போது தீவனத்தை கிளறி விட வேண்டும். அலகு வெட்ட வேண்டும்.

  20. அலகு வெட்டுதலின் முக்கியத்துவம் என்ன?
    கோழிகள் ஒன்றையொன்று கொத்திக்கொள்ளாமல் இருக்கவும். தீவன விரையமாவதை தடுக்கவும் அலகு வெட்ட வேண்டும்.


Updated on : Sep 2015

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2009-15