மீன் வளம் :: மேலாண்மை :: நீர் மாசுபடுதல்

நீர் மாசுபடுதல்

பொதுவாக அங்ககக் கழிவுகள் பாக்டீரியாக்களால் சிதைக்கப்பட்டு மட்கப்பட்டு விடுகின்றன. இவ்வாறு நகர கழிவுகள், வேளாண் கழிவுகள், உணவு பதப்படுத்துதல், செய்முறைக் கழிவுகள், காராயப் பட்டறைகள், காகிதக் கூழ் தொழிற்சாலைகள் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் எண்ணெய் ஆலைகளின் அங்ககக் கழிவுகள் போன்றவை பாக்டீரியாக்களால் சிதைக்கப்படுகின்றன. இலைகள், புற்கள், கால்நடைத் தீவனங்களும் இதில அடங்கும். பாக்டீரியாக்கள் இக்கழிவுகளைச் சிதைக்க நீரில் உள்ள ஆக்ஸிஜனை (பிராணவாயுவை) எடுத்துக் கொள்கின்றன. இவ்வாறு இம்மாசுக்கள் மீன்கள் வாழும் நீர்நிலைகளில் கலக்கும்போது, அங்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறக்க நேரிடுகிறது. இதனால் பல நீர்வாழ் உயிரினங்கள் அழிந்து உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது.

நைட்ரேட், பாஸ்பேட் போன்ற உரங்களும் இதைப் போன்ற விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. இது அதிகரிக்கும் போது அதிக ஊட்டச்சத்துக்கள் நீரில் உள்ள தாவரங்கள் ஆல்காஹால்கள் போன்றவற்றின் வளர்ச்சியை மாசுபடுத்துகின்றன. இதனால் நீர்நிலைகளில் ஒளி உட்புகுவது தடுக்கப்படுகிறது. இவ்வாறு ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் மீன்கள் மற்றும் பிற உயிரிகள் சுவாசிக்க முடியாமல் இறந்துவிடும்.

சூடான சில அமிலங்கள் மற்றும் காரங்கள் போன்ற சில இரசாயனப் பொருட்கள் நீருடன் கலந்த உடன் வினைபுரிந்து விஷப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. சீனாக் களி, சாம்பல், மணல் வாறும் இயந்திர கழிவுகள், நிலக்கரி, சுரங்கக் கழிவுகள், மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் போன்ற பொருட்களும் நீர்வாழ் உயிரிகளின் சுவாச மற்றும் உணவுக் குழலில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. அதோடு சூரிய ஒளி நீருக்குள் ஊடுருவுவதைத் தடை செய்வதால் ஒளிச்சேர்க்கையை பாதிக்கின்றன. கன உலோகங்கள், ஹேலஜனேற்றம் செய்யப்பட்ட ஹைட்ரோகார்பன்கள் மற்றும் கதிர்வீச்சுப் பொருட்கள் போன்றவை பாக்டீரியாக்களால் சிதைக்கப்பட இயலாது. எனவே இவை தாவர மற்றும் விலங்குகளுக்கு மிகுந்த ஊறு விளைவிக்கக் கூடியவை.

பாக்டீரியா, வைரஸ், புரோட்டோ சோவா போன்ற கிருமிகள் மாசுபாட்டிற்கு மற்றுமோர் காரணம் இவை வயிற்றுப்போக்கு, டைப்பாய்டு, தோல் நோய்கள் போன்ற நோய்களையும் பரப்புகின்றன. இக்கிருமிகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், சாக்கடை நீர், கெட்டுப்போன பொருட்கள் கலந்த நீர் ஆகியவற்றுடன் நீர்த்தேக்கங்களில் கலந்து விடுகிறது. இறந்த விலங்குகளின் மாமிசங்கள், இறைச்சித் துண்டுகள் போன்றவற்றிலிருந்தும் இந்தக் கிருமிகள் பரவுகின்றன. இவை அளவில் சிறியவையாக இருந்தாலும் பல்வேறு நோய்களைப் பரப்பி மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

மாசுபடுத்தும் காரணிகள்:


நீரை மாசுபடுத்தும் காரணிகள் இருவகைப்படும். அவை

  1. நேரடியாக மாசுபடுத்தும் காரணிகள்
  2. மறைமுகமாக மாசுபடுத்துபவை

நேரடி மாசுபாட்டில் இரசாயனக் கழிவுகள் பைப் வழியே வந்து நீரில் நேரடியாக கலக்கச் செய்யப்படுகின்றன. வயல் வெளிகளிலிருந்து அடித்து வரப்படும் இரசாயன உரங்கள் நீரில் கலந்து மாசுபடுத்துகின்றன. இதைப் போன்று நீரினால் அடித்து வரப்படும் பொருட்கள் மறைமுகக் காரணிகள் ஆகும்.

தொழிற்சாலை மற்றும் நகரக் கழிவுகள் முக்கியமான மாசுபடுத்தும் காரணிகள் ஆகும். நகரங்களின் தொழிற்சாலைகளிலிருந்தும் சாக்கடைகளிலிருந்தும் அடித்துவரப்படும் கழிவுகள் நீரில் கலந்து விடுகின்றன. இதோடு வேளாண் வயல் வெளிகளின் உரங்கள், களை மற்றும் பூச்சிக் கொல்லிகள் மண்ணின் வழி ஊடுருவச் சென்று நிலத்தடி நீருடன் கலந்து மாசுபடுத்துவதுடன் நீரை விஷமாக்குகின்றன.

இப்பொருட்கள் ஏரி, குளம், ஓடை, ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் கலக்கும்போது சிறிதளவு மட்டுமே மட்கச் செய்யப்படுகின்றன. பெரும்பாலும் இவை மட்காமல் நீரின் அடியில் மண்ணினுள் புதைந்து கிடக்கின்றன. இது நீரின் தரத்தைப் பாதிக்கின்றது. நீரின் தன்மை கெட்டு நீர் வாழ் உயிரினங்கள் வாழ இயலாததாகின்றது. தற்போதைய கணக்கெடுப்பின் படி 10 சதவீத வீணானநீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. மீதமுள்ள 90 சதவீதக் கழிவுகள் நீர் மற்றும் மண்ணை மாசுபடுத்துகின்றன.

கட்டுப்படுத்துதல்:


கழிவுநீர் சுத்திகரிப்பிற்கு அதிக அளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. தொழிற்சாலைகளின் கழிவு வெளியேற்றத்தில் சில குறிப்பிட்ட விதிகளுடன் கூடிய உடன்படிக்கை அவசியமாகிறது. மட்கச் செய்யும் கழிவுகளை வெளியேற்றவும் மட்க இயலாத கழிவுகளை முறையாக சுற்றுச் சூழலை பாதிக்காத வண்ணம் அப்புறப்படுத்தவும் தொழிற்சாலைகளை இசையச் செய்ய இவ் வொப்பந்தம் உதவுகிறது. உதாரணமாக சாக்கடைக் கழிவுகளை மட்க வைத்து உரமாகவும், பிளாஸ்டிக், பாலிதீன் போன்ற பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலமாகவும் மேலும் மட்க இயலாத கேடு விளைவிக்கும் பொருட்களை சரியான முறையில் அப்புறப்படுத்துவதன் மூலமாகவும் சுற்றுச் சூழலுக்குப் பாதிக்காமல் பாதுகாக்க முடியும்.

சரிசெய்யும் நடவடிக்கைகள்:


நகராட்சிக் கழிவுகளை அப்புறப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும் ஒவ்வொரு நகராட்சியும், நகரம் தத்தம் நகரங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். ஏனெனில் நகர மக்களின் உடல் நலத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. அதோடு நகரங்களில் கழிவுகளை அப்புறப் படுத்துவது கடினம். கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு இக்கழிவுகளை மறுசுழற்சிக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க வேண்டும். அதற்கேற்ற முறைகளைக் கண்டுணர தொழிற்சாலைகளை நிர்ப்பந்திக்க வேண்டும். வெளியேற்றும் கழிவுகள் சுற்றுப்புறத்தைப் பாதிக்கா வண்ணம் காப்பது அதன் கடமையாகும்.

உயிர் நுட்ப முறை நிவாரணம்:


மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு வேதி முறைகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், சரியான நிவர்த்தி ஏதும் கிட்டவில்லை. ஏனெனில் இந்த இரசாயன முறைகள் சுற்றுச் சூழலை மேலும் மாசுபடுத்துவதாக அதிகச் செலவு கொண்டதாக இருந்ததோடு இரண்டாம் நிலைக் கழிவுகள் அதிகம் வெளிப்படுத்தி வந்தன. எனவே இக்குறைகளை சரிசெய்ய உயிர் நுட்ப முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் செயல்பாடு மெதுவாக இருந்தாலும் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதில்லை. மேலும் முதலீடும் குறைவு பாதுகாப்பான முறை. உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய இக்கழிவுகளை அழிப்பதில் உயிர்த் தொழில்நுட்ப முறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் செயல்வேகம் குறைவாக இருப்பதால் அதிகமாக பின்பற்றப்படுவதில்லை. எனினும் தற்போது சுற்றுச்சூழல் மாறுபாடு பற்றிய விழிப்புணர்வு காரணமாக இதன் முக்கியத்துவம் வரைப்பட்டு வருகிறது.

உயிர்த் தொழில் நுட்ப முறையில் மாசுக்கட்டுப்பாட்டை நீக்க பாக்டீரியாக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது தாவரங்களைப் பயன்படுத்தி நீர்மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலவகை கழிவுகளைக் கட்டுப்படுத்த தாவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்தளவு மாசடைந்துள்ள பகுதிகளையும், அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் உலோகங்கள் மிகுந்துள்ள பகுதிகளிலும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. தாவரங்களினால் மண்ணில் உள்ள (நுண் உலோகங்கள்) உலோகத்துகள்கள் நீக்கப்படுகின்றன. நுண் உலோகத்துகள்களைத் தாவரங்கள் கீழ்க்கண்ட 5 முறைகளில் மண்ணிலிருந்து பிரிக்கின்றன.

  1. உறிஞ்சுதல் (மண்ணிலிருந்து விவிப் பொருட்களை உறிஞ்சுதல்)
  2. வடிகட்டுதல் (மாசடைந்த நீரிலிருந்து தாவர வேரின் மூலம் விஷப்பொருட்களை உறிஞ்சுதல்
  3. நிலைநிறுத்துதல் தாவரங்கள் மண்ணில் உள்ள கன உலோகத்துகள்களையும்
  4. கடத்துதல்
  5. ஊக்குவித்தல்

இவ்வாறு தாவரத்தால் உறிஞ்சப்பட்ட மாசுப் பொருட்கள் அதன் வேர் தண்டு அல்லது இலைகளில் சேமிக்கப்பட்டு பின்பு பாதிப்பற்ற, குறைந்த விஷத்தன்மையுடைய பொருளாக மாற்றப்படுகிறது. அல்லது சுவாசித்தலின் போது வளிமண்டலத்தில் வெளியேற்றப்படுகிறது.

aquaticpollute

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014