மீன் வளம் :: ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு

 

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு

மீன் வளர்ப்பு பயிர் விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்புடன் சேர்த்து செய்யப்படுகிறது. இவ்வாறு ஒருங்கிணைத்துச் செய்யும்போது வளங்கள் நன்கு பயன்படுத்தப்படுவதோடு, இருக்கும் குறைந்த அளவு நிலத்தில் அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும். தற்போது அதிகரித்து வரும் மீன் பொருட்களின் விலையினாலும், பயிர்களுக்கு இடும் உரம் அதிக விலையாக இருப்பதாலும் நெல் போன்ற பயிர்களின் வயலில் மீன் வளர்ப்பது பற்றிவிழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்குக் குறைந்த செலவில் நல்ல மீன் புரதங்கள் எளிதில் கிடைக்கின்றது. அதோடு வயலிற்கு எருவாக மீன்களின் கழிவுகள் பயன்படுகின்றன.

பண்ணை (வயலின்) குளங்களில் மீன் வளர்க்கலாம். அதேபோல் கரை ஓரங்களில் வாத்துக்களை மேய விடலாம். வயல் ஓரங்களில் காய்கறி மற்றும் பழ மரங்களை விதைக்கலாம். இதனால் நமக்கு முட்டை, இறைச்சி, உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன் போன்றவை கிடைக்கும். இதனால் நல்ல சரிவிகித உணவு கிடைப்பதோடு பொருளாதார அளவிலும் அதிக இலாபம் ஈட்ட முடிகிறது.

குளங்களில் வாத்து வளர்த்தல், பயிர்கழிவுகளை கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துதல், மேலும் கால்நடை கழிவுகளை பயிர்களுக்கு உரமாக்குதல் போன்ற சுழற்சி முறைப் பயன்பாடே ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பாகும். இது சிறந்த வேலைவாய்ப்பை அளிப்பதுடன், கிராமப்புற வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பில் இரண்டு முறைகள் உள்ளன. 1) வேளாண் பயிர் செய்தல் - மீன் வளர்ப்பு, 2) மீன் வளர்ப்பும் கால்நடைப் பராமரித்தலும்.

வேளாண் பயிர் சாகுபடி  மீன் வளர்ப்பில் நெல் - மீன் வளர்ப்பு, தோட்டக்கலை - மீன் வளர்ப்பு, காளான் - மீன் வளர்ப்பு, பட்டுப்புழு - மீன் வளர்ப்பு போன்ற முறைகள் அடங்கும்.
இதேபோல் கால்நடை - மீன் வளர்ப்பில், மாடுகளுடன் - மீன் வளர்ப்பு, பன்றியுடன்  மீன் வளர்ப்பு, கோழி - மீன் வளர்ப்பு, வாத்து - மீன் வளர்ப்பு, ஆடு - மீன் வளர்ப்பு, முயல் - மீன் வளர்ப்பு.

வேளாண்மையுடன் மீன் வளர்ப்பு


நெல், வாழை, தென்னை போன்ற வேளாண்  பயிர்களுடன் சேர்த்து மீன் வளர்ப்பது இரட்டிப்பு பலன் தரும்.

நெல் வயலில் மீன் வளர்ப்பு


இந்தியாவில் 6 மில்லியன் ஹெக்டர் பரப்பளவில் நெற்பயிர் பயிர் செய்யப்பட்டாலும், 0.03% மட்டுமே நெல் - மீன் வளர்ப்பு செய்யப்படுகிறது. இம்முறையில் பல நன்மைகள் காணப்படுகின்றன. அவை

  • குறைந்தளவு நிலத்திலும் அதிக பொருளாதாரப் பயன்பாடு.
  • அதிக ஆட்கூலி தேவைப்படுவதில்லை.
  • களையெடுப்பு மற்றும் மீன்களுக்கு உணவளித்தல் போன்ற செயல்களுக்கான ஆட்கூலி தேவை மிச்சமாகும்.
  • அதிக நெல் விளைச்சல்.
  • விவசாயிக்கு வயலிலிருந்து நெல், மீன் மற்றும் வயல்வெளி ஓரங்களில் வெங்காயம், பீன்ஸ், போன்றவற்றின் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கிறது. எனவே நமது நாட்டில் நெல்வயலில் மீன் வளர்க்கும் முறையை அதிகப்படுத்துதல் வேண்டும்

நெல் வயலில் 3 - 8 மாதங்கள் வரை நீர் தேங்கி இருக்கும். நெற்பயிர் அறுவடை முடிந்தபின் மீதமிருக்கும் நீரில் உள்ள மீன்கள் பயிரில்லாத காலத்தில் விவசாயிக்குக் கூடுதல் இலாபம் அளிக்கும். இதற்கு வயலில் சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வட்டவடிவ குழிகள் தோண்டி கரைகள் கட்ட வேண்டும். குளம் போன்று உருவாக்கியபின் அதில் ஹெக்டருக்கு 10000 வரை மீன்குஞ்சுகளை விட வேண்டும். அவற்றிற்கு உணவாக அரிசி - உமி புண்ணாக்குகள் 2 - 3% உடல் எடைக்கு ஏற்றவாறு அளிக்கலாம்.

இவ்வாறு மீன் வளர்ப்பிற்கு ஏற்றவாறு பனிதன், துளசி, சி.ஆர் 260 77, ஏ.டி.ட்டி - 6,7, ராஜராஜன் மற்றும் பட்டம்பி 15,16 போன்ற நெல் இரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த இரகங்கள் நீர்த்தேக்கத்திலும் நன்கு வளரக் கூடியவை. அதோடு இதன் வாழ்நாள் 180 நாள் வரை இருப்பதால் மீன்வளர்ப்பை நாற்று நட்டபின் ஆரம்பிக்கச் சரியான தருணமாகும். மீன்கள் விற்பனைக்கு உகந்த  அளவு எடைக்கு வந்த பின்பு அறுவடை செய்து விற்றுவிடலாம்.

ricefish
நெல் வயலில் மீன் வளர்ப்பு

நெல்வயலில் மீன் வளர்ப்பு இரு முறைகளில் செய்யப்படுகிறது.

  • சம காலத்தில் (ஒரே காலத்தில்) இரண்டையும் வளர்த்தல்
  • சுழற்சி முறை வளர்ப்பு

சமகால வளர்ப்பு முறை

இதற்கு 0.1 ஹெக்டர் பரப்பளவு நிலமே  போதுமானது. இதை நான்கு 250மீ2 (25 x 10 மீ) உள்ள பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியும் 0.75 மீ அகலமும், 0.5 மீ ஆழமும் கொண்ட குழி (அகழி) தோண்ட வேண்டும். இந்த அகழி வைக்கோல் பதியவைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும். 0.3மீ அகலம் கொண்ட நெல் வயலைச் சூழ்ந்திருக்க வேண்டும். இந்த அகழி இருபுறமும் சிறு வாய்க்காலால் இணைக்கப்பட வேண்டும். சல்லடை அடைப்புடன் கூடிய சிறிய மூங்கில் தண்டினை (து) வாய்க்கால் அகழியுடன் சந்திக்குமிடத்தில் வைக்க வேண்டும். இதனால் மீன்கள் வெளியேறாமலும், சிறு மீன்களை விழுங்கும் பெரிய மீன்கள் உட்புகாமலும் பாதுகாக்க இயலும். இந்த அகழிகள் நெற்பயிர் இல்லாத சமயத்தில் மீன்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதோடு தண்ணீர் குறையும் சமயத்தில் சேகரித்து வைக்கவும் உதவும். வளர்க்கும் மீன் வகையின் அளவு மற்றும் பயிரிடும் நெல் இரகத்தைப் பொறுத்து   பராமரிக்கும் தண்ணீரின் அளவு மாறுபடும்.
இவ்வாறு நெல் வயலில் வளர்க்கப்படும் மீனானது குறைந்த ஆழத்தில் மேலேயே வளரக் கூடியதாகவும், 350 செல்சியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அதோடு குறைந்த ஆக்ஸிஜனும் அதிக கலங்கல் தன்மை உள்ள நீரில் வளரும் தன்மையுடையதாக இருத்தல் வேண்டும். கட்லா, ரோகி, மிர்கல், கார்ப்போ, முகில், சானோஸ், மொசாம்பிக்ஸ் போன்ற

நெல் வயலில் நன்னீர் இறால் சமகால வளர்ப்பு

நெல் வயல்களில் மேக்ரோ பிராச்சியம் ரோசன் பெர்ஜி என்ற இறால் வகைகளை மித தீவிர முறையில் வளர்க்கலாம். மீன்களைப் போலன்றி இறால் வளர்ப்பிற்கு 4 மாதத்திற்கு 12 செ.மீ ஆழத்திற்கு வெளியே செல்லும் நீருக்கு மூங்கில் தண்டில் சல்லடைத் தடுப்பு அமைத்துப் பாதுகாக்க வேண்டும். இறால் குதித்து வெளியே எங்கும் ஓடிவிடாமல் இருக்க 0.3 மீ நீருக்கு மேலே மடை போல் தடுப்பு கட்ட வேண்டும். அருகில் ஓரிரு சிறிய குழிகள் (1 x 2 x 0.5 மீ) வெட்டி வைத்தால் பழைய நீரை வடிக்கும்போதும் இறால் அறுவடை செய்யும்போதும் இறால்கள் தப்பிக்காமல் இருக்க உதவும். நாத்து நட்டு வேர்பிடித்தபின் ஒரு ஹெக்டேருக்கு 2 - 3 செ.மீ அளவுடைய 1000 குஞ்சுகள் என்ற விகிதத்தில்  வயலில் விட வேண்டும்.

பயன்கள்

  • மீன்கள் நெற்பயிரின் உற்பத்தியை 5 - 15 சதம் அதிகரிக்கச் செய்கிறது. ஏனெனில் மீன்களின் கழிவுகள் பயிருக்கு அங்கக உரமாகப் பயன்படுகிறது
  • மீன்கள் வயலில் உள்ள பச்சைப் பசும் பாசிகள் (ஆல்காக்கள்) உண்டு விடுவதால் அவை நெற்பயிருடன் ஊட்டச்சத்துக்காகப் போட்டியிடுவது தடுக்கப்படுகிறது.
  • திலேப்பிக் கெண்டை அல்லது கெண்டை  போன்ற மீன்கள் தேவையற்ற நீர்க் களைகளை உண்டு விடுகின்றன. இதனால் 80% நெல்லின் இழப்பு தவிர்க்கப்படுகிறது.
  • முரல்ஸ், கேட்ஃபிஷ் போன்ற மீன்கள் நெற்பயிரின் தண்டுத் துளைப்பான் போன்ற பூச்சிகளை உண்டு விடுகின்றன.
  • மீன்கள் மனிதர்களுக்கு மலேரியா மற்றும் பல  நோய்களை ஏற்படுத்தும் கொசு போன்ற உயிரிகளை உண்டு விடுவுதால் நோய்ப்பரவல் குறைக்கப்படுகிறது.
  • நெல் வயலில் வளர்ந்த மீன்களை விற்றுவிடலாம் அல்லது அடுத்த வயலில் விட்டு கூட்டு மீன் வளர்ப்பில் வளரச் செய்யலாம்.

குறைபாடுகள்

  • நெற்பயிருக்கு பூச்சி நோய் மற்றும் களைக் கட்டுப்பாட்டிற்கு இரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறையில் இயலாது.
  • மீனின் வளர்ச்சியை யொட்டி அதிக அளவு நீரைத் தேக்கி வைத்தல் என்பது எப்போதும் சாத்தியமாகாது.
  • புல் கெண்டை போன்ற புல்திண்ணி மீன்கள் நெற்பயிரையும் உண்ண வாய்ப்புள்ளது.
  • திலேப்பிக் கெண்டை அல்லது கெண்டை  மீன்கள் நெற்பயிரின் வேரினைப் பிடுங்கி விடக்கூடும்.

எனினும் முறையான பராமரிப்பின் மூலம் இக்குறைபாடுகளைச் சரிசெய்து விட முடியும்.

வளர்ப்பு முறை


நடவு செய்த 5 நாட்களுக்குப் பிறகு நுண் மீன்குஞ்சாக இருப்பின் ஹெக்டருக்கு 5000 எண்ணிக்கையிலும் , விரலளவு மீன் குஞ்சாக இருப்பின் ஹெக்டருக்கு 2000 எண்ணிக்கையிலும் வயலினுள் விட வேண்டும். சரியாக உணவளித்தால் குறிப்பாக போதிய அளவு மிதவைத் தாவரங்கள் இருப்பின் விரைவில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும். வழக்கமாக நெற்பயிருக்கு அளிக்கும் அளவை விட சற்று அதிகமாக உரமளித்தால் மிதவை உயிரிகள் நன்கு வளரும். பூச்சித் தொல்லையைக் கட்டுப்படுத்த ஃபுயூரான் 1 ஹெக்டருக்கு 1 கிலோ என்ற விதத்தில் அளிக்கலாம். இதை அடி உரத்துடன் கலந்து இட்டு, பின் நிலத்தைச் சமப்படுத்தி விட வேண்டும்.
நுண் மீன் குஞ்சுகளை வயலில் விட்ட பின் 10 வாரங்களுக்குப் பின்பும் விரலளவு மீன் குஞ்சுகளாக இருப்பின் 6 வாரங்களுக்குப் பிறகும் நீரை வடித்து விட்டுப் பின் அறுவடை செய்யலாம். நெற்பயிரை அறுவடை செய்வதற்கு 1 வாரத்திற்கு முன்பு மீன்களை சேகரித்துவிட வேண்டும். மிதவை உயிரிகளை உண்டு வாழ்வதால் மீன் உற்பத்தியும் அதிகளவில் இருக்கும். இம்முறை வளர்ப்பில் ஒவ்வொரு மீனும் 60 கிராம் எடையுடன் ஹெக்டருக்கு 500 கிலோ வரை கிடைக்கும்.

சுழற்சிமுறை வளர்ப்பு


இம்முறையில் மீன் மற்றும் நெல் அடுத்தடுத்து பயிர் செய்யப்படுகிறது. நெற்பயிரை அறுவடை செய்தபின் அவ்வயல் மீன் வளர்க்கும் குளமாக மாற்றப்படுகிறது. இம்முறையில் முக்கிய பயன் களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல் இயலும். அதோடு மீன்களுக்கு தேவையான அளவு 60 செ.மீ வரை நீரின் ஆழத்தைப் பராமரிக்க இயலும்.
நெற்பயிர் அறுவடை முடிந்த ஓரிரு வாரங்களில் வயலை மீன் வளர்ப்புக்குத் தயார் செய்ய வேண்டும். கெண்டை  இன மீன் வகைகள் இம்முறைக்கு மிகவும் ஏற்றவை. 2 -3 செ.மீ அளவுள்ள நுன்குஞ்சுகளாக இருப்பின்  ஹெக்டருக்கு 20000 குஞ்சுகளும், விரலளவு குஞ்சுகளாக இருப்பின் ஹெக்டருக்கு 6000 குஞ்சுகளும் குளத்தில் விட வேண்டும். 10 வாரங்களுக்குப் பிறகு நுண்மீன் குஞ்சுகளையும், விரலளவு குஞ்சுகளை 6 வாரங்களுக்குப் பிறகும் அறுவடை செய்யலாம். ஒரு மீனின் வளர்ச்சி சுழற்சி முறையில் 100 கிராம் வரையிலும் உற்பத்தி அளவு ஹெக்டருக்கு 2000 கி.கிமும் கிடைக்கும். நல்ல விலை கிடைத்தால் மீன் வளர்ப்பில் நெற்பயிரில் கிடைக்கும் இலாபத்தை விட அதிக லாபம் கிடைக்கும்.

நெல் - மீன் வளர்ப்பு முறை


கடற்கரை ஒட்டிய டெல்டாப் பகுதிகளில் மழைக் காலங்களில் மட்டுமே வருடத்திற்கு ஒரு முறை நெல் பயிர் செய்வர். ஏனெனில் மழைக்காலங்களில் மட்டுமே இப்பகுதியில் உப்பின் அளவு சற்று குறைவாக இருக்கும். மற்ற காலங்களில் அதிக உப்புத்தன்மையினால் பயிரேதும் பயிரிட முடியாமல் வயல்கள் வெற்று நிலமாக விடப்படும்.

அது போன்ற பகுதிகளில் காரிஃப் பருவத்தில் மரூரி, சடமோட்டா, கலோமோட்டா, தால்முகர், தாமோதர், தசல், கேட், ஜெயா, சத்னா, பன்கஜ், பட்னை - 23, லுனி, பொக்காளி, கட்டக்தன்டி, வைட்டிலா, பிலிகாகா, சி.எஸ்.ஆர் - 4, சி.எஸ்.ஆர் - 6, மட்லா, ஹேமில்ட்டன், பால்மன் 579, பி.கே.என், ஆர். பி - 6, எஃப். ஆர் 461, ஆர்யா போன்ற நெல் இரகங்களைப் பயன்படுத்துகின்றனர். நெல்லுடன் உவர்நீர் இறால் வளர்ப்பை மேற்கொள்வதன் மூலம் கடலோரப் பகுதிகளில் கோடை காலங்களில் தரிசாகக் கிடக்கும் நிலங்களிலிருந்து வருவாய் பெற இயலும்.
மேற்கு வங்கத்தில் நெல்வயலில் மீன் வளர்க்கும் இடங்களில் உப்புத்தன்மை குறைவதாகக் கூறுகின்றனர். கேரளாவின் போக்களிப் பகுதிகளில் கோடைகாலங்களில் உவர் நீர் மீன் வளர்ப்பை மேற்கொள்கின்றனர். இப்பகுதிகளில் கிடைக்கும்

மீன் உற்பத்தி அளவு 300 - 1000 கி.கி வரை வேறுபடுகிறது. இந்த உவர்நீர் மீன் வளர்ப்பு சிறந்த முறையில் பயன்தருவதோடு கூடுதல் வருமானத்தையும் விவசாயிகளுக்கு அளிக்கிறது. இம்முறையில் பெரிய வரி இறால், இந்திய வெள்ளை இறால், கடல் இறால், மெட்டாபீனஸ் மோனோசர்ஸ் போன்ற இனங்கள் வளர்க்கப் படுகின்றன.

தொழில்நுட்ப அளவைகள்


கடல் சார்ந்த பகுதிகள் மிகவும் தாழ்மட்டமாக கடல் மட்டத்திலிருந்து 8 மீ உயரம் வரை மட்டுமே இருக்கும். உப்பு நீருடன் கலப்பதால் மழைநீரும் அதிக நாள் நன்னீராக இருப்பதில்லை. இவ்விறால் வளர்ப்பிற்கு 1 மீ அலை வீச்சு இருக்கும் இடங்கள் இறால் வளர்ப்பிற்கு ஏற்றவை.

மண்ணின் தரம்


வண்டல் களிமண், அல்லது வண்டல் களிமண்பொறை போன்ற மண் வகைகள் மீன் மற்றும் இறால் வளர்ச்சிக்கு ஏற்றது.

நீர்


உவர் நீர் மீன் வளர்ப்பிற்குப் பின் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். ஏனெனில் நீரின் உப்புத் தன்மையைக் குறைக்க இம்மழைநீர் உதவும்.

குளத்தின் அமைப்பு


நெல் வயல்கள் உவர் நீர் மீன் வளர்ப்புக்கு ஏற்றவாறு கரைகள் மண் பூச்சு கொண்டு சற்று உயரமாக அமைக்கப்பட வேண்டும். கரையின் உயரம் அலைகள் எழும் உயரத்தையும், நில அமைப்பையும் பொறுத்து 50 - 100 செ.மீ வரை இருக்கலாம். ஒரு ஹெக்டர் நிலத்தில் இடையில் உள்ள கால்வாயின் அளவு 2 மீ அல்லது 1 மீ இருக்க வேண்டும். கால்வாயில் தோண்டப்படும் மண்ணை கரையை வலுப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீர் பாய்ச்சுதல் மற்றும் வடிகால் வசதி


வயலின் ஒரு புறத்தில் அலை வழியே நீர் புக ஏதுவாக மரத்தாலான உட்செலுத்தி அமைக்க வேண்டும். அலைகள் சற்று பெரிதாக வீசும் போது அதிக நீர் உட்புகும். இந்த உட்செலுத்தியின் வழியே பிற மீன்களோ, ஊனுண்ணிகளோ உள்ளே நுழையாதிருக்க வழிகாட்டியைப் பொறுத்த வேண்டும். இதே போல் வயலின் மறுபுறம் ஒரு வெளியேற்று குழாய் (வடிகால் வசதிக்காக) இருக்க வேண்டும். அதில் தேவையானபோது திறந்து மூடிக்கொள்ளுமாறு ஓர் அடைப்பு இருக்க வேண்டும்.

குளத்தின் பராமரிப்பு


வயலை ஒரு பருவத்திற்கு மட்டுமே குளமாகப் பயன்படுத்துகிறோம். நெல் அறுவடை முடிந்த உடன் நீரை வடித்துவிட்டு வயலை வெளியில் காய விட வேண்டும். அமிலத் தன்மையுடைய மண்ணாக இருப்பின் சுண்ணாம்பு இட வேண்டும். வயல் ஓரங்களில் பனை மரம், வைக்கோல் மரத்தின் கிளைகளை ஒடித்து நட்டு நிழற் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

எண்ணிக்கை


நெல் வயலைத் தயார் செய்த பின் பெரிய வரி இறால் அல்லது இந்திய வெள்ளை இறால் போன்ற மீன்களை ஒரு சதுர அடிக்கு 3 மீன்கள் என்ற எண்ணிக்கையில் விட வேண்டும்.

உணவளித்தல்


இயற்கை உணவுகளை அளிப்பது சிறந்ததே என்றாலும் அது அதிக அளவில் கிடைக்க வாய்ப்பில்லாததாதும், தொடர்ந்து வைத்துப் பாதுகாக்க இயலாததாலும் மேலுணவு மட்டும் அளிக்கப் படுகிறது.

அறுவடைசெய்தல்


கைகளால் பிடித்தோ அல்லது குளத்து நீரை வடித்து விட்டோ மீன்கள் அனைத்தையும் அறுவடை செய்யலாம். சராசரி வளர்ப்பு நாட்கள் 100 - 120 நாட்கள். இதற்குள் இறால்கள் 35 கி எடை வரை வளர்ந்து இருக்கும். பிடிக்கப்பட்ட இறால்களை உடைக்கப்பட்ட ஐஸ் துண்டுகளடங்கிய பெட்டிக்குள் வைத்து சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

போக்களி நிலங்களில் மீன் வளர்ப்பு


கேரள மாநிலத்தில் போக்களி நெல் (நிலங்களில்) வயல்களில் மீன் மற்றும் இறால் வளர்ப்பு சுழற்சி முறையில் செய்யப்படுகிறது. இவ்வயல்கள் வெம்பன் நீரால் பாசனம் பெறுகிறது. நீர்ப்பாசனம் அலைகள் மூலம் செயல்படுகிறது. பயிரற்ற காலங்களில் மீன் மற்றும் இறால் வளர்க்கப்படுகின்றன. தென்மேற்குப் பருவ மழையால் பயன்பெறும் காலங்களில் பயிர் விளைவிக்கப்படுகிறது. அறுவடைக்குப் பின் நிலமானது மீன் வளர்ப்புக்காக விடப்படுகிறது. அலைகளின் மூலம் மீன் / இறால்கள் வயல்களில் சேகரிக்கப்படுகிறது. மீன்கள் வளர்ந்து, அறுவடை செய்யும் வரை முறையாகப் பராமரிக்க வேண்டும். நெற்பயிரின் மீதக் கழிவுகள் அழுகி நீரில் இருப்பதால் மீன்களுக்குத் தேவையான அளவு மிதவை உயிரிகள் மற்றும் உணவுத் தாவரங்கள் கிடைக்கின்றன. நீரை வடித்து மீன்களை அறுவடை செய்தபின் மீண்டும் நாற்று நட்டு விடுவர். நல்ல மழை பெய்தால் நீரின் உப்புத் தன்மை குறைந்து விடும்.

  • தோட்டக்கலை - மீன் வளர்ப்பு முறை

குளத்தைச் சுற்றியுள்ள கரைகளில் தோட்டப் பயிர்களை வளர்க்கலாம். குளத்து நீரை மீன் வளர்ப்பிற்கு மட்டுமின்றி பயிர்களின் நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் குளத்தினடியில் தேங்கும் வண்டல் மண் பயிர்களுக்கு சிறந்த உரமாகப்பயன்படுகிறது. காய்கறி மற்றும் பழவகைப் பயிர்களுக்கு இது மிகவும் ஏற்றது. இம்முறைக்கு ஏற்றவாறு, குட்டையான, அதிக நிழல் தராத, எப்போதும் பசுமையான, பருவநிலை சார்ந்த, வருமானம் தரக்கூடிய பயிர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். குட்டை பழவகை மரங்களான மா, வாழை, பப்பாளி, தென்னை, எலுமிச்சை போன்றவற்றை வளர்க்கலாம். அதோடு ஊடு பயிர்களாக இஞ்சி, மஞ்சள், மிளகாய், அன்னாசி போன்ற பயிர்களை வளர்க்கலாம். மேலும் பூப்பயிர்களான ரோஜா, மல்லிகை, சம்பங்கி, செண்டு மல்லி, கிலாடியோலஸ் மற்றும் சாமந்தி போன்றவையும் அதிக வருவாயை ஈட்டித்தரும்.

காய்கறிக் கழிவுகளை குளத்தினுள் போட்டுவிடலாம். புல்கெண்டை போன்ற வகை மீன்கள் காய்கறிகளை நன்கு உண்ணும் இவற்றை ஹெக்டருக்கு 1000 மீன்கள் என்ற அளவில் வளர்க்கலாம். சாதாரண கெண்டை இன மீன்கள் குளத்தின் அழுகிய கழிவுகளை உண்ணும். கலப்பின மீன்களில் ரோகு, கட்லா, மிர்கல், புல்கெண்டை வகை மீன்களை முறையே 50:15:20:15 என்ற விகிதத்தில் வளர்க்க வேண்டும். 5000 மீன்கள் வரை ஒரு ஹெக்டரில் வளர்க்கலாம்.

hortfish
தோட்டக்கலை - மீன் வளர்ப்பு முறை
  • காளான் - மீன் வளர்ப்பு முறை

இந்தியாவில் காளான்வளர்ப்பு பிரபலமடைந்து வருகிறது. 3 வகைக் காளான்கள் விற்பனைக்காக வளர்க்கப்படுகின்றன. அவை மொட்டுக்காளான், பால் காளான்,  வோலோரியல்லா, மற்றும் சிப்பிக்காளான் பிளிரோட்டஸ் ஆகும். இவை முறையே யூரோப்பியன் மொட்டுக்காளான் (பால்) வைக்கோல் மற்றும் சிப்பிக்(சிர்லக்) காளான் என அழைக்கப்படுகிறது. காளான் வளர்ப்புக்கு அதிக ஈரப்பதமான தட்பவெப்பம் தேவைப்படுகிறது. எனவே மீன் வளர்ப்புடன் சேர்த்துக் காளான் வளர்ப்பு செய்வது பொருத்தமானதாக இருக்கும்.
காளான் வளர்ப்பிற்கு வைக்கோலை 1 - 2 செ.மீ அளவிற்கு சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மீதமுள்ள நீரை அடுத்த நாள் காலையில் வடித்துவிட வேண்டும். கொள்ளுப்பொடி சிறிதளவு (8கி / கி.கி வைக்கோல்) மற்றும் காளான் விதை 30 கி / கி.கி வைக்கோல் என்ற அளவில் கலந்து அதை நீரில் நனைத்த வைக்கோலுடன் அடுக்கடுக்காக அமைக்க வேண்டும். இதை ஒரு பாலிதீன் கவரில் வைத்து 21 - 350 செல்சியஸ் வெப்ப நிலை கொண்ட இருட்டறைக்குள் சிறிது வெளிச்சமும் நல்ல காற்றும் நிலவுமாறு வைத்துவிட வேண்டும். 11 - 14 நாட்களில் சிறு சிறு காளான்கள் முளைத்திருக்கும். இந்நிலையில் பாலிதீன் பைகளை வெட்டி விடுதல் வேண்டும். ஆங்காங்கு ஓட்டை விழுமாறு செய்வதால் காளான்கள் பெரிதாக வளர ஏதுவாகும். பின்பு வளர்ச்சியடைந்த காளான்களை அறுவடை செய்து கொண்டு வைக்கோல் கழிவுகளை கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுத்து விடலாம்.

  • பட்டுப்புழு - மீன் வளர்ப்பு

மொசுக்கொட்டைச் செடியின் இலைகள் பட்டுப் புழுக்களின் உணவாகும். வீணான இறந்த பட்டுப்புழுக்கள் இம்முறையில் மீன்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. பட்டுப்புழுக் கழிவில் உள்ள அங்கக ஊட்டச்சத்துக்களை குளத்தில் வாழும் மிதவைத் தாவரங்கள் எடுத்துக் கொள்கின்றன. சராசரி வெப்பநிலை 15 - 320 செல்சியஸ், ஈரப்பதம் 50 - 90% பட்டுப்புழுவிற்கு மொசுக்கட்டை இலைகளை அளித்தபின் அவை உண்ட மீதத்தைக் கழிவுகளுடன் சேர்த்துக் குளத்தில் கொட்டிவிடலாம். இவ்வாறு செய்வதால் அவை வீணாகாமல் தடுக்கப்படுகிறது. ஒரு ஹெக்டரில் ஆண்டுக்கு 30 டன்கள் மொசுக்கொட்டை இலைகள் உற்பத்தி செய்யலாம். இதில் 16 - 20 டன்கள் கழிவுகளாக வெளித்தள்ளப்படுகின்றது. 1 ஹெக்டர் பரப்பளவில் பாதி நிலம் மொசுக்கொட்டை சாகுபடிக்கும், மீதப் பகுதியில் குளம் அமைக்கவும் வேண்டும். குளத்தைச் சுற்றி கரையிலும் மேலும் மொசுக்கொட்டையுடன் ஊடுபயிராகவும் காய்கறிகளைப் பயிர் செய்யலாம். இதனால் 3.75 டன்கள் வரை காய்கறிகளைக் கூடுதலாகப் பெறலாம்.

இதே போல் கால்நடையுடன் மீன் வளர்ப்பு, பன்றி மற்றும் மீன் வளர்ப்பு, கோழியுடன் மீன் வளர்ப்பு, வாத்து மீன் வளர்ப்பு, ஆடு மீன் வளர்ப்பு, முயல் மீன் வளர்ப்பு போன்ற பல முறைகளைப் பின்பற்றலாம். இம்முறையில் வாத்து, கோழி, பன்றி மற்றும் கால்நடையின் கழிவுகள் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவாக அளிக்கப்படுகின்றன. இதன் மூலம் மீன்களுக்கான உணவு உரமிடுதலின் செலவு குறைவதோடு பயன்படுத்தும் இடத்தின் அளவும் குறைவாகவே இருக்கும். இவ்வாறு கால்நடைகளுடன் மீன் வளர்ப்பு பல நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முக்கியமாக கால்நடை - மீன் வளர்ப்பில் கருதப்படுவது ஊட்டச்சத்துக்கள். குறிப்பாக நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற மீன் உணவில் முக்கியத்துவம் வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் கால்நடை கழிவுகளின் மூலம் கிடைத்துவிடுவதால் செயற்கை உரத்திற்கான தேவை மிகக் குறைவு. அதோடு விலங்கு / கால்நடை ஆய்வுக்கூடத்தின் கழிவுகள் அசைவ மீன்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. இவ்வாறு கால்நடை வளர்ப்பு மட்டுமல்லாது அதன் பிற (பதப்படுத்தல்) முறைகளின் கழிவுகளும் மீன்களுக்கு உணவாகின்றன.
குளம் போன்ற (நீர்த்தேக்க) மீன் வளர்ப்பில் குறிப்பிட்ட அளவே கழிவுகளைப் பயன்படுத்த இயலும். ஆதலால் மீன்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர வாய்ப்பில்லை. இவ்வாறு மீன்கள் கழிவுகளை உண்ணும் உயிரியல் முறை வெப்ப நிலையைச் சார்ந்தது. இதற்கான சராசரி வெப்ப நிலை 25 - லிருந்து 320 செல்சியஸிற்குள் இருக்க வேண்டும். பருவநிலையைப் பொறுத்து இது மாறுபடலாம். இந்தக் கழிவுகளை நேரடியாக மீன்களுக்கு அளிப்பதைவிட மண்புழு போன்ற உயிரிகளுக்கு உணவாகக் கொடுத்து அப்புழுக்களை மீன்களுக்கு அளித்தால் சிறந்த விலங்குப் புரதம் கிடைக்க ஏதுவாகும். மாமிசக் கழிவுகள், இரத்தம், எலும்புத் துகள்கள் போன்றவையும் சிறந்த உணவுகள். இவற்றை அளிப்பதால் ஊனுண்ணி மீன்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம். இதேபோல் தாவர உண்ணிகளுக்கும், வாத்து களைகள், அசோலா போன்றவை சிறந்ததீனியாகும்.

serfish
பட்டுப்புழு - மீன் வளர்ப்பு

கால்நடை - மீன் வளர்ப்பு

கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு பல நாடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. மாட்டின் சானத்தை பயன்படுத்தி மீன் வளர்ப்பது ஹாங்காங், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. மீன் குளத்திற்கு அருகிலேயே கால்நடைத் தொழுவமும், சாண எரிவாயுக் கலமும் அமைக்கப்படுகிறது. மாட்டுத் தொழுவத்திலிருந்து ஒரு நல்ல பசுமாடு வருடம் ஒன்றுக்கு 4000 - 5000 கிகி சாணமும், 3500 - 4000 லிட்டர் சிறுநீரும் வெளியேற்றுகிறது. மாட்டுச் சானம் மெதுவாகவே மட்குவதால் (6 செ.மீ / நிமிடம்) மீன்கள் அதை உண்டு செரிக்க ஏதுவாக இருக்கும். மேலும் இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் குளத்தில் உள்ள பிற மிதவை உயிரிகளுக்கும் உணவாகிறது. சாண எரிவாயுக் கலத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குளத்தினுள் விடப்படுகிறது. 1 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட குளத்திற்கு 5 - 6 பசுக்கள் போதுமான உணவை வழங்கிவிடும்.

மாடுகளுக்கு 7000 - 8000 கி.கி பசுந்தீவனம் ஆண்டொன்றிற்கு தேவைப்படும். தீவனக் கழிவுகளையும் ‘புல்கெண்டை’ இன மீன்கள் உண்பதால் 2,500 கி.கி வரை வீணாகாமல் தடுக்கப்படுகிறது. வருடத்திற்கு 20000 - 30000 கி.கி சாண எரிவாயுக் கழிவு கிடைக்கும். இதன் மூலம் 4000 கி.கி மீன்களை உற்பத்தி செய்ய முடியும்.

  • பன்றி - மீன் வளர்ப்பு

சீனா, தைவான், வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, ஹங்கேரி போன்ற நாடுகளில் இம்முறை பரவலாக பின்பற்றப்படுகிறது. பன்றிகளுக்கு உணவாக சமையல் கழிவுகள் நீர்த்தாவரங்கள், பயிர்க்கழிவுகள் போன்றவற்றை கொடுக்கலாம். 30 -35 பன்றிகளின் கழிவு 1 டன் அம்மோனியம் சல்பேட்டிற்குச் சமம். அயல்நாட்டு இனங்களான வெள்ளை யார்க்ஷயர், மேன்டிரேஸ், ஹேம்ப்ஸயர் போன்றவற்றிற்கு 3 - 4மீ2 அளவு இடம் தேவைப்படும். சோளம், நிலக்கடலை, கோதுமை - 2 மி, மீன்துகள், தாதுக்கலவை போன்றவை அடர்தீவனமாகக் கொடுக்கப்படுகின்றன.

இட வசதிக்கேற்ப ஒரே குளமாகவோ அல்லது இரண்டு குளங்களாகவோ அமைக்கலாம். பன்றிக்கழிவிலிருந்து வீட்டுத் தேவைக்குத் தேவையான சான எரிவாயுவைத் தயாரித்துக் கொள்ள முடியும். சிறுநீரைக் குளத்திற்கு எடுத்துச்செல்ல ஒரு சிறிய கால்வாய் போன்று அமைக்க வேண்டும். சானத்தை ஆக்ஸிஜனேற்ற தொட்டிக்குள் செலுத்தி சிறிது மட்க வைத்த பின்பே குளத்தில் போட வேண்டும். அதன் சூடு தனிந்து மட்கும் வரை சில நாட்கள் குவித்து வைத்துப் பின்பு நீரில் கரைத்து குளத்தினுள் கலக்கச் செய்யலாம்.

பன்றிச் சானத்தில் 70 சதம் மீன்களால் எளிதில் எடுத்துக் கொள்ள இயலும். மீதமுள்ள 30 சதமும் சாதாரண கெண்டை, திலேப்பிக் கெண்டைபோன்ற மீன்கள் உண்டுவிடும். ஒரு ஹெக்டர் பரப்பளவு கொண்ட மீன் குளத்திற்கு 60 -100 பன்றிகள் உணவளிக்க போதுமானது. மீன் வளர்ப்பிற்கு ஒரு வருடத்திற்கு சராசரியாக 1 டன் உரம் தேவைப்படுகிறது.

புல் கெண்டை, சாதாரண கெண்டை, வெள்ளி கெண்டை (1:1:2) போன்ற மீன் இனங்கள் பன்றி - மீன் ஒருங்கிணைந்த வளர்ப்புக்கு ஏற்றவை.

பன்றிகள் 6 மாதத்தில் 60 -70 கிலோ எடையுடன் முதிர்ச்சி பெற்றுவிடும். ஒவ்வொரு ஈற்றிலும் 6 - 12 குட்டிகளை ஈனும். 6-8 மாதங்களில் பருவ வயதை அடைந்துவிடும். மீன்கள் 1 வருடத்தில் வளர்ந்து விற்பனைக்குத் தயாராகி விடும். நன்கு வளர்ந்துள்ள பெரிய அளவு மீன்களைப் பிடித்து விற்பனை செய்ய வேண்டும். 12 மாதங்களுக்குப் பின் அனைத்து மீன்களையும் அறுவடை செய்து விற்றுவிடலாம்.

pigfish
பன்றி - மீன் வளர்ப்பு

கோழி - மீன் வளர்ப்பு

கோழியின் கழிவில் மிகுந்துள்ள நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் மீன்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்கள். கோழிக் கொட்டகையை குளத்தின் மீது மூங்கில் கம்பங்களைக் கொண்டு அமைத்தால், கோழிகளின் கழிவுகள் நேரே குளத்தினுள் விழுந்து மட்கி மீன்களுக்கு இரையாகும். இம்முறையில் 4500 - 5000 கி.கி மீன்கள் கிடைக்கும்.

தரமான கோழி இனங்களைத் தேர்ந்தெடுத்து சரியான முறையில் கோழிப்பண்ணை அமைத்து தீவனமளித்துப் பராமரித்தால் இம்முறை மிகவும் இலாபகரமானதாக அமையும். தீவிர வளர்ப்பு முறையில் கோழிகளை வளர்த்தல் வேண்டும். இதற்கு ஆழ்கூள முறை சிறந்தது. உலர்ந்த இலைகள் மரத்துகள்கள், நிலக்கடலையின் தொழிகள் சிறுசிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட வைக்கோல் போன்றவற்றை அடர்த்தியாகப் போட்டு ஆழ்கூளம் தயார் செய்யப்படுகிறது.

இம்முறை வளர்ப்பிற்கு லெக்ஹார்ன் (அ) ரோட் ஐலேண்ட் போன்ற இனங்கள் ஏற்றவை. ஒரு ஹெக்டர் பரப்பளவில் 2500 கோழிக் குஞ்சுகளை வளர்க்கலாம். மீன் குஞ்சுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதற்கேற்றவாறு கோழிக் குஞ்சுகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்திக் கொள்ளலாம். முட்டையிடும் கோழிகளாக இருப்பின் 0 - 8 வாரங்கள் வரை குஞ்சுத்தீனி அளிக்க வேண்டும். பின்பு 8 - 20 வாரங்கள் வரை வளரும் கோழிகளுக்கேற்ற தீனியும் 20 வாரங்களுக்கு மேல் முழுமையான தீவனமும் அளிக்க வேண்டும்.

இதுவே இறைச்சிக் கோழியாக இருப்பின் 4 வாரங்கள் வரை குஞ்சுத்தீவனமும் பின்பு 6 வது வாரம் வரை முழுத்தீவனமும் கொடுத்தால் போதுமானது. கோழிக் கொட்டகையின் ஆழ்கூளத்தை நாளொன்றுக்கு 30 - 35 கி.கி என்ற வீதம் குளத்தில் விழச் செய்யப்படுகிறது. ஒரு வளர்ச்சியடைந்த கோழியானது ஓராண்டிற்கு 25 கி.கி வரை மட்கிய கழிவை வெளியேற்றுகிறது. ஒரு ஹெக்டர் குளத்திற்கு 1000 பறவைகளின் கழிவு போதுமானது.
இம்முறையின் மூலம் ஆண்டிற்கு 3000 - 4000 கி.கி மீன்களைப் பெறலாம். 9000 -10000 கோழி முட்டைகளையும் 2500 கி.கி இறைச்சியையும் பெற முடியும்.திலேப்பிக்கெண்டை, சாதாரண கெண்டை, விரால் போன்ற மீன் குஞ்சுகளை 20000 / ஹெக்டர் என்ற எண்ணிக்கையில் வளர்க்கலாம். அதனுடன் 4000 கோழிக்குஞ்சுகள் / ஹெக்டர் என்ற அளவில் வளர்க்க முடியும். எந்த ஒரு செயற்கை உரமும் இடத் தேவையில்லை அல்லது 5000 பெரிய நன்னீர் இறால் குஞ்சுகளையும் (மேக்ரோபியம் ரோசன்பெர்ஜி) மற்றும் 1500 வெள்ளி கெண்டை மீன்களை சேர்த்து 1 ஹெக்டர் குளத்தில் வளர்த்தால் 4 மாதங்களில் 600 கி.கி இறால் மீன்களை அறுவடை செய்யலாம்.

chickfish
கோழி - மீன் வளர்ப்பு

வாத்து - மீன் வளர்ப்பு

சீனா, ஹாங்கேரி, ஜெர்மனி, போலந்து, ரஷ்யா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் வாத்துடன் மீன் வளர்க்கும் முறை முக்கியமான ஒன்றாகும். மீன் வளர்க்கும் குளமானது குறிப்பிட்ட நீர்த் தாவரங்கள் மற்றும் விலங்குகள் கொண்ட பாதுகாப்பான இடம். ஆதலால் வாத்துகளுக்கு எந்த வித நோயத்தொற்று பயமும் இருப்பதில்லை. அதற்குக் கைமாறாக வாத்துகள் மீன்களுக்கு ஊடுவிளைவிக்கும் தவளையின் குஞ்சுகள், தலைப்பிரட்டை, தட்டான் போன்றவற்றை உண்டுவிடுகிறது. மேலும் வாத்து கழிவுகள் நேராக குளத்தினுள் விழச்செய்யப்படுகின்றன. இது மீன்களுக்கு உணவாகிறது. மேலும் இதில் இரு நன்மைகள் அடங்கி உள்ளன.

ducfish
வாத்து - மீன் வளர்ப்பு
  • உரமளிக்கும் செலவு குறைவு
  • ஆட்கூலி மிச்சப்படுத்தப்படுகிறது

இம்முறை இந்தியாவின் மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், பீஹார், ஒரிசா, திரிபுரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. இதற்கென ‘இந்திய ஓடும் வாத்து’ இனங்கள் வளர்க்கப்படுகிறது. வாத்துகளின் கழிவில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ளதால் வாத்துகள் ‘நடமாடும் உர இயந்திரங்கள்’ எனப்படுகிறது.

இம்முறையில் மீன் மற்றும் வாத்துகளுக்குத் தேவையான விலங்குப் புரதம் தேவையான அளவு கிடைக்கிறது. வாத்துகளின் கழிவில் 25 விழுக்காடு அங்ககப்பொருட்களும் 20 விழுக்காடு அனங்ககப் பொருட்களும் கார்பன், பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரஜன், கால்சியம் போன்ற சத்துக்களும் மிகுந்துள்ளன.

வாத்துக்களுக்கு நீரின் மேலே கொட்டகை அமைத்தோ அல்லது அவற்றை நீரிலேயே சுதந்திரமாக திரிய விட்டோ வளர்க்கலாம். மிதக்கும் கொட்டில் மூங்கில் ஆல் ஆனதாகவோ சிறு இடைவெளியுடன் வாத்து கழிவுகள் நீரினுள் விழுமாறு அமைக்கப்பட வேண்டும். 1 மீ2 இடத்தினுள் 15 - 20 வாத்துகள் இருக்குமாறு செய்யலாம். கொட்டிலில் அடைப்பதை விட திறந்த வெளி முறையே சிறந்தது. வாத்துக்களின் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்து 2 மாதங்களுக்கு ஒரு முறை வளர்ந்த வாத்துகளை விற்றுவிட்டுப் புதிய குஞ்சுகளை குளத்தில் விட வேண்டும். 100 - 3000 / ஹெக்டர் என்ற எண்ணிக்கையில் வாத்துக்களைப் பராமரிக்கலாம்.

  • வாத்துகளுடன் வளர்ப்பதற்கு 10 செ.மீ அளவிற்கு மேற்பட்ட மீன் குஞ்சுகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் வாத்துகள் மீன் குஞ்சுகளை விழுங்கிவிடக்கூடும் மீன் குஞ்சுகளின் எண்ணிக்கையும் வாத்து எண்ணிக்கைக்கும் குளத்தின் அளவிற்கும் ஏற்றவாறு அமையும். நைட்ரஜன் மிகுந்துள்ள வாத்துக் கழிவுகள் நீர் வாழ் தாவர மற்றும் விலங்கு வளர்ச்சியை அதிகரிக்கும். இவற்றை விரும்பி உண்ணும். வெள்ளி கெண்டை, கட்லா, சாதாரண கெண்டை போன்ற மீன் வகைகள் இம்முறைக்கு ஏற்றவை. ஒரு ஹெக்டரில் 20000 விரலளவு மீன் குஞ்சுகளை விட்டால் ஓராண்டு இறுதியில் 3000 - 4000 கி.கி மீன்களை அறுவடை செய்யலாம். இது தவிர வாத்து முட்டைகள் மற்றும் இறைச்சியும் ஒரு கணிசமான இலாபத்தைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.

தகவல்:
http://www.vuatkerala.ofile:///E:/Animal%20Husbandry/TNAU-Agri%20Tech%20Portal/ani_chik_grower&layer%20mgt.html
http://www.vuatkerala.org/static/eng/advisory/fisheries/culture_fisheries/integrated_farming/introduction.htm.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024