மீன் வளம் :: கட்டுப்படுத்தப்பட்ட மீன் வளர்ப்பு

கட்டுப்படுத்தப்பட்ட மீன் வளர்ப்பு

இம்முறையில் உள்நாட்டுக் கடல் அல்லது தூரக் கடலில் வாழும் உயிரினங்களை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது மித கட்டுப்பாடு முறையில் வளர்ப்பதே கட்டுப்படுத்தப்பட்ட மீன் வளர்ப்பு ஆகும். ஏனெனில் கடல்நீரில் தான் உப்புத் தன்மை அதிகம் பெற்று இருப்பதோடு சுற்றுச் சூழல் மாற்றத்தால் எளிதில் பாதிப்படையாது. இவ்வாறு கடல் மீன்வளர்ப்பு கடலோர மக்களுக்கு உணவளிப்பதோடு, சிறந்த தரமான புரதத்தையும் அதிகளவு அளிக்கிறது. 2003 ம் ஆண்டு உலகளவில் மொத்த மீன் உற்பத்தியில் கடல்சார்ந்த உவர்நீர் மற்றும் கடல் மீன் வளர்ப்பு 91 விழுக்காடு உற்பத்தியில் பங்கு வகித்தது. கடல் சார்ந்த மீன் உற்பத்தியின் அளவு 2003 ம் ஆண்டில் 27.6 மில்லியன் டன்கள் ஆகும். இதுவே 1999 ல் 21.6 மில்லியன் டன்கள் மட்டுமே இருந்தது.

மெல்லுடலிகள் வளர்ப்பு


சிப்பி (அ) ஆளிகள், மட்டிகள், கடற்காய்கள் மற்றும் கேலப்கள் போன்றவை முக்கிய இருவோட்டுடலிகள் ஆகும். இவை தவிர கடல் முத்துச் சிப்பி வளர்ப்பும் நன்கு பயன்தரக்கூடியது. இம் முத்துச்சிப்பிக்குள் இருந்து வரும் கற்கள் விலை மதிப்பு மிக்கவை.

ஆளி வளர்ப்பு


ஆளி ஒரு முக்கியமான கடல் உணவாக இருந்தும் குறைந்தளவே இது வளர்க்கப்படுகிறது. 12 வகை சிப்பிகள் பரவலாக வளர்க்கப்பட்டாலும் கிராஸோஸ்டிரியா என்ற ஆளியே பிரபலமானதாகும். ஆசியாவில் 2003 வருடத்தில் 4.2 மில்லியன் டன்கள் ஆளி உற்பத்தி செய்யப்பட்டது. இதில் சீனாவில் இருந்து மட்டும் 3.6 மில்லியன் டன்கள் அதாவது 87 விழுக்காடு உற்பத்தி செய்யப்பட்டது.
இந்தியாவில் கிராஸோஸ்டிரியா மற்றும் சாக்கோஸ்டிரியா இனங்கள் அதிகம் வளர்க்கப்படுகின்றன. இதில் கிராஸோஸ்டிரியா மெட்ராசென்ஸிஸ் என்ற இனம் உவர்நீர் மீன் வளர்ப்பிற்கு நன்கு பிரசித்தி பெற்றது.

கடற்காய் வளர்ப்பு


வெப்பமண்டல நாடுகளில் கடற்காய் வளர்ப்பு மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இக்கடற்காய் உற்பத்தி 2003 ம் ஆண்டில் 1.58 மில்லியன் டன்களாகும். இது 1950 ஆம் ஆண்டு உற்பத்தியை விட 22.8 மடங்கு அதிகம் ஆகும். 40 நாடுகள் இக்கடற்காய் உற்பத்தியில் 9 வகை இனங்களைப் பயன்படுத்தி (பெர்னா, மிட்டிலஸ் போன்றவை) உற்பத்தி செய்யப்படுகிறது.

கடற்காய்கள் அதிகளவு புரதம், விட்டமின்கள் மட்டுமல்லாது மருத்துவ குணங்களும் பெற்றுள்ளன. பச்சை - கடற்காய்கள் 20 வருடங்களுக்கு மேலாக பல நாடுகளில் மூட்டுகளின் இயக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் இக்கடற்காய்கள் மருத்துவத் துறையில் பல நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. மேலும் எய்ட்ஸ்க்கு எதிர்ப்பு சக்தி மருந்தாக இதன் இறைச்சி பயன்படுகிறது.

 மட்டி வளர்ப்பு

ஆர்க்கிடே, வெனரிடே, கோர்பிகுளிடோ, சொலேனிடே, மீசோடெஸ்மிடே, டெல்லினிடோ பொனாசிடே போன்ற பல்வேறு குடும்பத்தைச் சார்ந்த மட்டிகள் இந்தியப் பெருங்கடல் கடலோரப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றில் வில்லோரிடா, பாப்பியா, மெரிடிரிக்ஸ், அனடாரா போன்ற இனங்கள் முக்கியமானவை. இருவகையான வளர்ப்பு முறைகள் கையாளப்படுகின்றன. எனினும் ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டிற்குள் வளர்க்க இயலாதாகையால் மித தீவிர முறையில் வளர்க்கின்றனர்.

கடல் முத்துச் (சிப்பி) வளர்ப்பு


‘முத்து’ என்பது சிப்பியினுள் உருவாகும் ஒரு வகை விலையுயர்ந்த கல். இது பழங்காலத்திலிருந்தே ஆபரணங்களில் பதிக்கப்படுகிறது. வரலாற்றுச் சான்றுகளின் படி இந்தியா 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்கம், ரோமானிய நாடுகளுக்கு இம்முத்துக்களை ஏற்றுமதி செய்து வந்துள்ளது. உலகளவில் முத்து உற்பத்தித் தொழில் 1.1 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் மொத்த விற்பனையும் 3.5 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் சில்லறை வியாபாரமும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 32 நாடுகள் இம்முத்து வியாபாரத்தில் செழிப்பாக நடத்தி வருகின்றன. அதோடு இவ் வியாபாரத்தின் மூலம் நாடுகளின் வருமானம் உயர்ந்து பொருளாதாரத்தை முன்னேற்றுவதால் இத்தொழில் உலகளவில் மிகப் பிரபலமடைந்து வருகிறது.

தகவல்


மீன்வளம் மற்றும் கடல்வள கையேடுகள் - 2006

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014