வனவியல் தொழில்நுட்பங்கள்

புங்கமரம் - பொங்கேமியா பின்னேட்டா

Bio Fuels

பரவியுள்ள இடங்கள்
இம்மரம் நடுத்தர உயரமும் பசுமை மாறாத விரிந்த தோயுடனும் கூடிய குட்டை அடிமரம் கொண்ட மரம். இந்தியாவின் பெரும்பகுதியில் நிழலுக்காகவும், அழகுக்காகவும் நட்டு வளர்க்கப்படுகிறது. சுந்தரவனக் கரையோரப்பகுதி, அந்தமான் மற்றும் தீபகற்ப இந்தியாவின் ஆற்றங்கரைகளிலும் பரவலாக வளர்க்கப்படுகிறது. சாலை ஓரங்கள், கால்வாய் கரைகள், திறந்த விவசாயி நிலங்களிலும் வளர்க்கப்படுகின்றன.

வெளித்தோற்றம்
பொங்கேமியா பின்னேட்டா ஒரு நடுத்தர உயர பசுமை மாறாத மரம். மரப்பட்டை மழமழ வென்று சாம்பல் நிறத்தில் பெரியதாக இருக்கும். இலைகள் ஒற்றையில் முடியும் சிறகு வடிவக் கூட்டிலை. சிற்றிலைகள் எதிரெதிராக 5-9 இலை அடிச்செதில்கள் கொண்டு, முட்டை - நீள்வட்ட வடிவத்தில், குட்டையான அகுமினேட் இலைநுனியும் பளபளப்பாக, பளிச்சென்ற பச்சை நிறத்துடன் இருக்கிறது. இலைக்காம்பு 4.5 செ.மீ. நீளம் உடையது. மஞ்சரி, ரஸீம் வடிவத்தில் கக்கத்தில் தோன்றுகிறது. இலையைவிட குட்டையாக (20செ.மீ) இருக்கிறது. பூக்கள் குறுக்காக 1 செ.மீ. அளவு இருக்கும். இருபக்க சமச்சீராக இருக்கும், புல்லிவட்டம் மணிவடிவம், அல்லிவட்டம் ஆழ்ந்த சிவப்பும்- வெண்மை நிறமும் இதழ்கள் -5 மகரந்த கேசரங்கள் 10, ஒரே கற்றையாக, மேலே கேசரங்கள் பிரிந்தும் கீழே இணைந்து ஒரு குழாய் போலிருக்கிறது. சூற்பை காம்பில்லாமல் 1-2 சூல்களுடன் சூல்தண்டு உள்வளைவுடன் உள்ளது. காய்கள் நீள்வட்டமாக கோணலாக, 4 x 3 செ.மீ மரம்போல் சப்பையாக வெடிக்காமல் உள்ளன. இந்த சிற்றினத்தின் குரோமோசோம் எண்ணிக்கை (2n) 20 - 22
புங்கை முளைத்த 4-5 ஆண்டுகளில் பூக்க ஆரம்பிக்கிறது. ஏப்ரல் -ஜீலை மாதங்களில் ஆழ்ந்த சிவப்பு பூக்கள் கக்கங்களில் ரெசீம் மஞ்சரிகளாகத் தோன்றி அடுத்த பிப்ரவரி - மே மாதங்களில் காய்கள் முற்றுகின்றன.

எண்ணெய்
இதன் விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது சமையலுக்கு உபயோகமாவதில்லை. இந்த எண்ணெயை சந்தைகளில் “கரஞ்சா ஆயில்” (புங்க எண்ணெய்) என்பார்கள், இதற்கு மருத்துவ குணமுண்டு. மரத்தின் வயதுக்கேற்ப 9 முதல் 90 கிலோ வரை காய்கள் கிடைக்கின்றன. விதைகளை முறையாகச் சேகரிக்கும் பழக்கம் இல்லை. முற்றிய விதைகளில் 95 பருப்பும் அதில் 27 சதம் எண்ணெயும் உள்ளது, எந்திர செக்குகளில் இட்டு ஆட்டினால் 24 முதல் 26.5 வரை எண்ணெய் பிரிக்க முடிகிறது. கிராம செக்குகளில் ஆட்டினால் 18 முதல் 22 வரைதான் எண்ணெய் பிரியும். ஒரு ஆண்டு விதை விளைச்சல் கிட்டத்தட்ட 1.11 இலட்சம் டன்கள். எண்ணெயின் அளவு 0.29 இலட்சம் டன்கள்தான், சுத்தப்படுத்தப்பட்ட கச்சா எண்ணெய் மஞ்சள் ஆரஞ்சு நிறம் முதல் பழுப்பு நிறம்வரை இருக்கும், கொஞ்சநாள் ஆனதும் நிறம் சற்று ஆழமாகும். இதற்கு துர்நாற்றமும், கசப்புச்சுவையும் உண்டு. எனவே சமையலுக்குப் பயன்படுவதில்லை.

உள்ளூர் மருத்துவத்தில் இந்த எண்ணெய் ஒரு தூண்டு பொருளாகவும், சரும நோய்களுக்கும் பயன்படுகிறது. இதற்கு கிருமி நீக்கும் குணமும், ஒட்டுண்ணி நீக்கும் குணமும், சுத்தப்படுத்தும் குணமும் உண்டு. வெண்குட்டம் மற்றும் படைபோன்ற வியாதிகளுக்கு இது மருந்தாகிறது. புங்க எண்ணெயில் உள்ள ஃபியூரனோஃப்ளேவோன்களுக்கு தோல்நிறத்தை அதிகரிக்கும் பண்பு உண்டு. காய்ச்சி வடிக்காத எண்ணெய் துணி துவைக்கும் சோப்பு செய்யவும். காய்ச்சி வடித்த எண்ணெய் குளியல் சோப்பு செய்யவும். கந்தகம் சேர்க்கப்பட்ட எண்ணெய் தோல்பதனிடவும் பயன்படுகிறது. பெனில்கள் கிரீஸ் உயவுப்பொருட்கள், உடல் தேய்க்கும் (மஸாஜ்) எண்ணெய்க்கும் எபாக்ஸி பொருட்களைத் தயாரிக்கவும் உதவுகிறது. கிராம மக்கள் இதனை விளக்கெரிக்கப் பயன்படுத்துகின்றனர். இதன் பிண்ணாக்கிற்கு மண்ணை ஒட்டும் குணம் உள்ளதால் நல்லஉரமாகவும் பயன்படுத்தலாம், ஒரளவிற்கு இது நிலத்தில் உள்ள புழுக்களையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தக்கூடியது.
இந்த எண்ணெயின் இராசாயன பெளதீக குணங்கள்

  1. ஒப்படர்த்தி 0.9273/30o
  2. ஒளிச்சிதறு எண்1.4736/30"
  3. சபோனிஃபிகேஷன் அளவு181.5
  4. அயோடின் அளவு 89.1
  5. அமில அளவு 6.3
  6. அசிடைல் அளவு 20.9
  7. சப்போனிஃபை ஆகாத பொருளவு4.2%.

இந்த எண்ணெயின் கொழுப்பமிலங்கள் பால்மிடிக் (3.7 – 7.9%) ஸ்டியரிக் (2.4 – 8.8%) அராகிடிக்; (2.2 – 4.7%)  பெஹினிக் (4.2 – 5.3%)/ லிக்னோசீரிக் (1.1 – 3.5%) ஒலியிக் (44.5 – 71.3%) லினோலீக் (10.8 – 18.3%) மற்றும் எய்கோஸெனிக் (9.5 – 12.4%) அமிலங்கள், வழக்கமான பிரிப்பு முறைகளின் மூலம் எண்ணெயின் நிறத்தையும் துர்நாற்றத்தையும் நீக்க முடிவதில்லை. கலப்பு கரைப்பான்களைப் பயன்படுத்தி, கடலை எண்ணெயின் கொழுப்பமிலத்துக்கு ஈபின் எண்ணெய் பெறும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாற்றங்கால் வழிமுறைகள்
விதைத் தேர்வும், சேமிப்பும்
ஏப்ரல்-முதல் ஜீன் மாதத்திற்குள் காய்கள் சேகரிக்கப்படுகின்றன. காய்கள் 4-5 செ.மீ நீளமும் 1.5-2.5 செ.மீ. அகலமும், தட்டையாக, இருமுனையும் கூர்மையாக, சாம்பல் கலந்த மஞ்சள் நிறத்தில் முற்றிலும் 1-2 விதைகள் நீள்வட்டமாக, சிறுநீரக வடிவில், தட்டையாக சிவப்பும் பழுப்புமாக கெட்டியாக 2-3 செ.மீ.நீளத்தில் இருக்கும்.

காய்களை வெயிலில் காயவைத்து உடைத்து விதைகள் சேகரிக்கப்படுகின்றன. விதைகளை சேமிக்க முடிவதில்லை. 6 மாதங்கள்தான் இவற்றின் வாழ்நாள் 5o செ.குளிரில் சேமித்தால் இவற்றின் வாழ்நாள் 1 வருடம் விதைகளை ஓட்டுடன் பாலீத்தீன் பைகளில் சேமிக்கப்படுகின்றன.

முளைத்தல்

மண் நிரப்பிய தட்டுகளில் விதைகளை வடு மண்ணில் படும்படி விதைக்கப்படுகின்றன. விதைத்த 10 ஆம் நாள் முளைக்க ஆரம்பிக்கிறது. விதைகளின் ஈரப்பதன் 6% இருக்கும், விதைப்பதற்கு முன் எந்தவித பக்குவமும் தேவைப்படுவதில்லை.

நாற்றுகள்
நாற்றுகளை பாத்திகளிலும், பாலிபைகளில் வளர்க்க வேண்டும், முன் ஏற்பாடாக தயாரிக்கப்பட்ட மண் மேடுகளில் அல்லது மேட்டு வரிசைகளில் மழை வருவதற்கு முன் விதைக்க வேண்டும். விதைகளை 7.5 செ.மீ. 1.5 செ.மீ. இடைவெளிகளில் கோடையிலேயே ஊன்றிவிட வேண்டும். பாத்திகளை மல்ச்சிங் செய்வது நல்லது . சில இடங்களில் விதைகளை பாலிபைகளில் ஜீலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடுவதுண்டு (அல்லது) நாற்றுகளை பாத்திகளிலிருந்து பிடுங்கி பாலிபைகளில் ஊன்றுவதும் உண்டு. அடுத்த 10 நாட்களில் விதை முளைக்க ஆரம்பித்து 1 மாதத்தில் முடிவடைகிறது.