|
பராமரிப்பு நுட்பங்கள்:
துவங்கு முன் சில யோசனைகள்:
கூட்டங்களின் எண்ணிக்கை:
- தேனீ வளர்ப்பை சிறிய அளவில் துவங்குவதே நன்மை பயக்கும். தேனீக்களை வளர்க்கத் துவங்கலாம். அதன் மூலம் போதிய பயிற்சியும் அனுபவமும் பெற்ற பின்னர் சாதகமான சூழ்நிலை இருக்கும் இடங்களில் வணிக ரீதியில் தேன் வளர்ப்பைத் துவங்கலாம்
- பொழுதுபோக்கிற்காகத் தேனீ வளர்க்க விரும்புபவர்கள் குறைந்தது இரண்டு கூட்டங்களுடன் தேனீ வளர்பபைத் தொடங்கலாம்
இனத் தேர்வு:
- அடுக்குத் தேனீ இனங்களை மட்டுமே தேனீப் பெட்டிகளில் வைத்து வளர்க்க இயலும் (படம் 2)
- தமிழ்நாட்டைப் பொறுத்த வரை குமரி மாவட்டத்தில் இந்தியத் தேனீக்கள் அதிகம் வளர்க்கப்படுகின்றன
- சமவெளி ரகத்தை சமவெளியிலும் மலை ரகத்தை மலைப்பகுதியிலும் வளர்த்தல் வேண்டும்
இடத் தேர்வு:
- தேனீப் பண்ணை அமைக்கத் தெரிவு செய்யும் இடம் தேனீக்களுக்கும் தேனீ வளர்ப்போருக்கும் ஏற்றதாக அமைத்தல் அவசியம்
- தேனீக் கூட்டங்கள் எங்கெங்கு இயற்கையில் அதிகமாகக் காணப்படுகின்றதோ அந்த இடங்கள் பொதுவாகத் தேனீக்கள் வளர்ப்பதற்கு ஏற்றவை
- தேனீ வளர்ப்பு நல்ல வெற்றி பெறவும் அதிகத் தேன் மகசூல் பெறவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தைச் சுற்றிலும் இரண்டு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் தேனீக்கு மதுரம் மற்றும் மகரந்தம் தரும் மரம், செடி, கொடிகள் இருத்தல் வேண்டும்
- தேனீக்களுக்குத் தேனை உற்பத்தி செய்ய மதுரமும், புழுக்களை வளர்க்க மகரந்தமும் அதிக அளவு தேவைப்படுகின்றன. ஒரு இடத்தில் தேனீக்கு உணவு தரும் சில மரம், செடி, கொடிகள் இருப்பதையோ, அல்லது சில ஏக்கர் இருப்பதையோ கொண்டு அந்த இடம் வணிக ரீதியாக தேனீ வளர்க்க வேண்டும் என்றால் அதன் அருகில் பல நூறு ஏக்கரில், தேனீக்களுக்கு உணவு தரும் பயிர்கள் இருத்தல் வேண்டும். அப்பயிரிகளிலிருந்து தரமான மதுரம் உற்பத்தி செய்யும் மலர்கள் மிகுந்த எண்ணிக்கைகளில் பூத்து இருக்க வேண்டும். ஓர் இடத்தில் கிடைக்கும் மதுர அளவைப் பொறுத்து அவ்விடத்தில் வைக்கப்படும் தேனீக்கூட்டங்களின் எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும்
- தேனீக்களுக்குத் தூய்மையான தண்ணீர் அவசியம் தண்ணீர் கூட்டின் வெப்ப நிலையைக் குறைக்கவும் அவசக் கூழ் உற்பத்திக்கும் தேனின் கெட்டித் தன்மையைக் குறைக்கவும் தேவைப்படுகின்றது. ஆகவே தெரிவு செய்யப்பட்ட இடத்திற்கு அருகே ஒரு கிணறோ, ஓடையோ, சுனையோ அல்லது வாய்க்காலோ இருத்தல் நலம்
- தேனீக்களின் வளர்ச்சிக்கு உகந்த பருவ நிலை நிலவும் இடங்களைத் தெரிவு செய்ய வேண்டும். அதிக வெயில் அதிவேகமான காற்று மற்றும் கன மழை ஆகியவை தேனீக்களைப் பாதிக்கும் அதிக காற்றும் மழையும் பணித் தேனீக்களின் உணவு திரட்டும் திறனையும் அவைகள் ஆயுட்காலத்தையும் பாதிக்கின்றன. அதிக சூரிய வெப்பம் காரணமாக மெழுகு அடை உருகி விடும்
- இடம் போதிய வடிகால் வசதியுடனும் இருக்க வேண்டும் வடிகால் வசதியற்ற இடங்களில் காற்றின் ஈரப்பதம் எப்பொழுதும் கூடுதலாக இருக்கும். இதனால் தேன் முதிர்வது பாதிக்கப்படும்
- பயிர் பாதுகாப்பு மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படும் இடங்களில் வெற்றிகரமாகத் தேனீ வளர்க்க இயலாது
- தேனீக்களை வளர்க்க விவசாய நிலம் தேவையில்லை
- கால்நடைகள் தேனீக்களின் கொட்டிற்கு இலக்காவதால் மேய்ச்சல் நிலங்களுக்கு அருகே தேனீப் பண்ணையைப் பள்ளி, சந்தை போன்ற பொது இடங்களிலிருந்து போக்குவரத்து சாலையை விட்டும் குறைத்து 100 மீட்டர் தள்ளியே அடைக்க வேண்டும். தேனீப் பண்ணையை வீட்டிற்கு அருகில் அமைக்க நேரிட்டால் குறைந்தது 50 மீட்டர் இடைவெளி தர வேண்டும். இதனால் தேனீக்களால் மனிதர்களுக்குக் கூடிய வரை எவ்விதத் தொந்தரவும் இருக்காது
- ஒரு தேனீப் பண்ணைக்கும் மற்றொரு தேனீப் பண்ணைக்கும் குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்
- சாலை வசதி உள்ள இடம் போக்குவரவிற்குப் பெரிதும் உதவியாக இருக்கும்
தேனீப் பெட்டிகளை வைக்கும் விதம்:
- தேனீப் பெட்டிகளை நிழலில் இயன்றால் கிழக்குப் பார்த்து வைத்தல் வேண்டும். காலை வெயில் பெட்டியின் மேல்படும் பொழுது தேனீக்கள் அதிகாலையில் தங்கள் பணியைத் துவங்கும்
- தேனீபு் பெட்டிகளை ஓர் ஓடு போட்ட தாழ்வாரம் அல்லது கீற்றுக் கொட்டகையின் கீழ் வைக்கலாம். இல்லையெனில் மரம் அல்லது புதர் நிழலில் அடிக்கும் வெய்யிலிருந்து பாதுகாக்க அவசியம் நிழல் செய்து தர வேண்டும்
- தேனீப் பெட்டிகளுக்கு இடையே ஆறு அடி இடைவெளி கொடுக்களாம். தேனீப் பெட்டிகளை அடுத்தடுத்து நெருக்கமாக வைத்தலைத் தவிர்க்க வேண்டும். இதனால் பணித் தேனீக்களை கூடுமாறிச் செல்வது தடுக்கப்படும்
- தேனீக்களை வீட்டில் வைத்து வளர்க்க விரும்புபவர்கள் தேனீபு் பெட்டிகளை கொல்லைப் புறத்திலோ அல்லது மாடியிலோ வைக்கலாம். தேனீக்கள் விளக்கு ஒளியை நாடிச் செல்வதால் தேனீப் பெட்டிகளில் மீது இரவில் வெளிச்சம் படாதவாறு வைக்க வேண்டும்
- தேனீப் பெட்டிகளை சமதளமாக உள்ள தரையில் வைக்க வேண்டும்
- எறும்புப் புற்று அல்லது எறும்புக் கூடு உள்ள இடங்களிலும் வாய்க்காலின் உள்ளும் தேனீபு் பெட்டிகளை வைக்க கூடாது
- தேனீபு் பெட்டிகளை வைக்கும் தாங்களின் கால்களை நீர் ஊற்றிய கிண்ணங்களில் வைக்க வேண்டும் அல்லது வேப்ப எண்ணெய் கலந்த ‘கிரீஸை’ தாங்கியின் கால்களில் தடவி வைக்க வேண்டும். இல்லையெனில் கிழிந்த துணியை தாங்கியின் காலைச் சுற்றிக் கட்டி அத்துணியின் கழிவு எண்ணெயைத் தடவ வேண்டும். இதனால் எறும்புத் தொல்லையைத் தவிர்க்கலாம்
- தேனீப் பெட்டியை தாங்கியுடன் சேர்த்துக் கயிறு கொண்டு கட்டி வைப்பது நல்லது இதனால் ஒரு வேளை தேனீப் பெட்டி சாய நேரிட்டாலும் பெட்டியின் பாகங்கள் தனித்தனியே பிரித்து விழாது
தேனீக் கூட்டங்களை ஆய்வு செய்தல்:
நோக்கம்:
- ராணித் தேனீயின் செயல்பாட்டை அறிய
- கூட்டம் பிரியும் காலங்களில் உருவாகி வரும் புதிய ராணித் தேனீ அறைகளை அழிக்க
- தேன் மற்றும் மகரந்த இருப்பு நிலையை அறிந்து தேவைக்கு ஏற்ப செயற்கை முறையில் உணவு கொடுக்க
- வளரும் கூட்டங்களுக்கு மெழுகு அஸ்திவார அடை பொருத்தப்பட்ட சட்டங்கள் அல்லது காலி அடைகள் தர அல்லது
- பழைய கறுத்த அடைகளை நீக்க
- வலுக்குன்றிய கூட்டங்களிலிருந்து வெற்று அடைகளை நீக்க
- பூச்சி நோய் தாக்குதலை அறிய
- தேன் போதிய அளவு சேர்த்து வைத்துள்ளதா என்று அறிய
தேனீக்கு உணவு தரும் முக்கிய பயிர்கள்:
மதுரம் தரும் பயிர்கள்:
ரப்பர், புளி, பாட்டில், புருசு, இலவம், இலுப்பை, சில்வர் ஓக், லாடப் பூ, அகத்தி, அரப்பு, கடுக்காய், புங்கம், வேம்பு, அர்ச்சுன மரம், சிசு மரம், தீக்குச்சி மரம், செம்மரம், லிட்சி இலந்தை, சோயா மொச்சை, குதிரை மசால், காப்பி, தும்பை, கள்ளிப் பூண்டு (படம்12)
மகரந்தம் தரும் பயிர்கள்:
கரு வேல், வெள் வேல், குடை வேல், ஆண் பனை, பாக்கு, தென்னை (படம் 13) நெல்லி, தக்காளி, கத்தரி, பறங்கி (படம் 14) பூசணி, வெள்ளரி, சீமை வெள்ளரி, சுரை, சவ் சவ், சோளம், கம்பு, மக்காச்சோளம்.
மதுரம் மற்றும் மகரந்தம் தரும் பயிர்கள்:
தைல மரம், சீமைக் கருவேல், கரக்கொன்றை, வேங்கை, நாவல், வாகை, முந்திரி, கொடுக்காப்புளி, ஆப்பிள், பேரிக்காய், பீச், பிளம், செர்ரி, ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா, வாழை, முருங்கை, வெங்காயம் (படம் 16) காரட், முட்டைக்கோஸ், பூக்கோஸ், நில சம்பங்கி, அவரை, துவரை, உளுந்து, காராமணி, கொண்டக் டகலை, பருத்தி, ஏலக்காய், கொத்தமல்லி, சூரியகாந்தி, எள், பேய் எள், ஆன்டிகோனான், கடுகு, நெருஞ்சி, ஓணான் கொடி, துத்தி.
மதுர வரத்துக் காலப் பராமரிப்பு:
மதுர வரத்து துவுங்கிவிட்டதற்கான அறிகுறிகள்:
- தேனீக்கள் நுழைவு வாயில் சுறுசுறுப்பாக இயங்கும்
- தேனீக்களுக்கு சர்க்கரைப்பாகு கொடுத்தால் அதனை எடுக்காது
- தேனீக்கள் மதுரத்திலுள்ள நீர் அளவைக் குறைத்து தேனாகக் கெட்டிப்படுத்தும் பொழுது காற்றில் ஒருவித மலர் வாசனை வீசும்
- தேனீக்கள் சட்டங்களுக்கு இடையில் வெள்ளை அடை கட்டும்
- தேனீக்கள் அடை அறைகளில் விளிம்பில் வெள்ளை மெழுகினை வைக்கும்
- தேனீக்கள் அடைகளைப் புதிப்பிக்கும் பணியிலும் புது அடைகள் கட்டும் பணியிலும் ஆர்வத்துடன் ஈடுபடும்
- அடைகளை ஆய்வு செய்யும் பொழுது திறந்த அடை அறைகளிலிருந்து மதுரம் சொட்டும்
மதுர வரத்திற்குக் கூட்டங்களைத் தயார் செய்தல்:
- தேனீப் பெட்டிகள் வைப்பதற்கு ஏற்ற அதிக மதுரவரத்து உள்ள இடங்களை முன் கூட்டியே தெரிவு செய்ய வேண்டும்
- மதுர வரத்து துவங்குவதற்கு ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு முன்னரே கூட்டங்களை தயார் செய்ய வேண்டும்
- தேன் அறைகள், காலி அடைகள், வெற்றுச் சட்டங்கள், அடை அஸ்திவாரத்தாள், தேன் எடுக்கும் கருவி ஆகிய சாதனங்களைத் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்
- சர்க்கரைப் பாகு மற்றும் மகரந்த உணவு கொடுத்துக் கூட்டங்களை வலுப்படுத்த வேண்டும்
- ஆண்டுக்கு ஒரு முறை ராணித் தேனீயை மாற்ற வேண்டும்
- கூட்டங்களுக்கு புதிய ராணித் தேனீ தர வேண்டும்
- வலுக்குன்றிய கூட்டங்களை இணைக்க வேண்டும். வலுவான கூட்டங்களால் மட்டுமே கூடுதலாகத் தேனைத் திரட்டிச் சேமிக்க இயலும்
மதுர வரத்தின் போது பராமரிப்பு:
- ராணித் தேனீ முட்டையிடப் போதிய இட வசதி செய்து தர வேண்டும்
- உரிய நேரத்தில் தேன் அறைகள் கொடுக்க வேண்டும். காலித் தேன் அடைகள் கொடுத்தால் தேனீக்கள் விரைந்து தேனை சேமிக்கும்
- காலி அடைகள் இல்லைளென்றால் புழு அறையிலுள்ள தேன் அடையை அறுத்து தேன் அறை சட்டங்களில் கட்டிக் கொடுக்க வேண்டும்
- தேன் அறையில் ராணித் தேனீ முட்டையிடுவதைத் தடை செய்யப்புழு அறைக்கும் இடையில் ராணித் தேனீ தடைத் தகட்டை வைக்க வேண்டும் அல்லது அவ்வாறு முட்டையிடப்பட்ட தேன் அடைகளில் தண்ணீரை தெளிப்பதன் மூலம் இப்பிரச்சனையைத் தவிர்க்க இயலும்
- தேன் அறையில் ஒரு சட்டம் குறைவாகத் தர வேண்டும். இதனால் ஒவ்வொரு தேன் அடைச் சட்டத்திலும் தேன் கூடுதலாகச் சேமிக்கப்படும். மேலும் மூடப்பட்ட தேன் அறைகளின் கூடிகளை எளிதாகச் சீவலாம்
- தேன் அடைகளில் மூன்றில் இரண்டு பங்கு அறைகள் மூடப்பட்ட நிலையில் தாமதம் செய்யாமல் தேன் அறைகளைத் தேன் எடுப்பதற்கு எடுக்க வேண்டும்
- தேன் எடுத்த பின்னர் தேன் அறைகளை மீண்டும் தேனீகு் கூட்டத்திற்கு உடனடியாக கொடுத்துவிட வேண்டும்
- கூட்டம் பிரிந்து விடாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
இடப்பெயர்ச்சி முறை தேனீ வளர்ப்பு:
தேனீ வளர்ப்பை வணிக ரீதியில் வெற்றிகரமாக வளர்க்கத் தேனீக் கூட்டங்களைக் கூடுதலாக உணவு கிடைக்கும் இடங்களுக்கு எடுத்துச் சென்று வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தேனீக் கூட்டங்கள் உணவின்றி வலுக் குன்றுவதைத் தடுக்கவும். கூட்ட வளர்ச்சியைக் கூட்டிக் கூடுதல் தேன் மகசூல் பெறவும் இயலும். இத்தகைய இடப்பெயர்ச்சி முறைத் தேனீ வளர்ப்பு குமரி மாவட்டத்தில் அதிக அளவில் நடைபெறுகின்றது. இப்பகுதியில் உள்ள தேனீ வளர்ப்போர் ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலத்தில் உள்ள ரப்பர் தோட்டங்களில் புதுத் தளிர் உருவாகும் சமயத்தில் தேனீக் கூட்டங்களை எடுத்துச் சென்று வைப்பதன் மூலம் ரப்பர் தேனை வணிக ரீதியில் உற்பத்தி செய்கின்றனர்.
தளிர் இலைக் காம்பில் உள்ள மதுரச் சுரப்பிகளிலிருந்து மதுரம் மாசி மாதத்திலிருந்து பங்குனி மாதம் வரை சுரக்கின்றது. நன்கு முதிர்ச்சி அடைந்த 15 முதல் 20 ஆண்டுகள் வயதான ரப்பர் மரங்களில் மதுர சுரப்பு தருணங்களில் நிலவும் கால நிலைக்கு ஏற்பவும் மாறுபடும். புதிய தளிர் தோன்றும் காலங்களில் மழை அதிகம் பெய்ய நேரிட்டால் தளிர் இலைகள் விரைந்து முதிர்ச்சி பெற்றுவிடும். இதனால் மதுரச் சுரப்பு தடைப்பட்டு தேன் மகசூல் வெகுவாகப் பாதிக்கப்படும். மதுர வரத்து முடியும் தருணம் சில சமயங்களில் ஓரிரு மழை பொழிந்தால் மீண்டும் புதுத் தளிர்கள் தோன்றி மற்றொரு மதுர வரத்து வைகாசி - ஆனி மாதங்களிலும் நடைபெறும்.
சில குறிப்புகள்:
- தேனீப் பெட்டிகளை எடுத்துச் செல்ல ஏற்ற நேரம் இரவு நேரமே
- தேனீப் பெட்டிகளின் நுழைவு வழி வண்டி செல்லும் வழிக்கு இணையாக இருக்கும்படி டெம்போ வண்டியில் தேனீபு் பெட்டிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி எடுத்துச் செல்ல வேண்டும்
- ஒரே இடத்தில் அதிகமான எண்ணிக்கையில் கூட்டங்களை வைப்பது தேன் மகசூல் குறைவிற்கு வழி வகுக்கும்
- வலுவான கூட்டங்களே கூடுதலாகத் தேன் சேகரிக்கும்
- மதுர வரத்து துவங்கும் முன்னரே தேனீக் கூட்டங்களுக்கு கூட்டத்தின் வலுவிற்கு ஏற்றவாறு வாரம் ஒரு முறை சர்க்கரைப்பாகு (படம் 12) கொடுத்துக் கூட்டத்தை வலுப்படுத்த வேண்டும்
- சர்க்கரைப் பாகு கொடுப்பதை மதுர வரத்து தொடங்கியவுடன் நிறுத்திவிட வேண்டும்
- உரிய நேரத்தில் கூட்டத்தின் வலுவிற்கு ஏற்றபடி இரண்டு முதல் மூன்று தேன் அறைகள் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒவ்வொன்றாகக் கொடுக்க வேண்டும்
- கூடுதல் வளர்ச்சியுள்ள கூட்டங்களைத் தேவைக்கு ஏற்பப் பிரித்து புதிய கூட்டங்களையும் புதிய ராணித் தேனீக்களையும் உருவாக்க வேண்டும்
- ஆண்டிற்கு ஒரு முறை ராணியை மாற்றுவதன் மூலம் மூட்டம் பிரிதலைத் தடுக்கவும் கூடுதல் தேன் மகசூல் பெறவும் இயலும்
- விரைவான வளர்ச்சி நோய் இல்லாமை மற்றும் கூடுதலாகத் தேன் மகசூல் தந்த கூட்டங்களில் உருவாகும் மூடப்பட்ட ராணி அறைகளை நீக்கி எடுத்துப் பிரித்த கூட்டத்திற்கும் ராணியை நீக்கி விட்டுக் கொடுக்க வேண்டும்
- புழு அறையில் கறுத்த ஓர அடைகளை நீளுவாக்கில் துண்டுகளாக அறுத்துத் தேன் அறைச் சட்டத்தின் அடிக் கட்டையில் ரப்பர் வளையம் கொண்டு பொறுத்தித் தேன் அறையில் அடை எடுத்த இடத்தில் காலிச் சட்டத்தைக் கொடுக்க வேண்டும்
- தேன் அறையில் ஒரு சட்டம் குறைவாக ஒவ்வொரு சட்டத்திற்கும் இடையே சிறிது கூடுதல் இடைவெளி விட்டு வைப்பதன் மூலம் பருமனான தேன் அடைகளைப் பெற இயலும். இதனால் கூடுதலாகத் தேன் மகசூல் கிடைக்கும். மேலும் தேன் எடுக்கும் பொழுது தேன் அறைகளின் மெழுகு மூடிகளை எளிதாகச் சீவி நீக்கலாம்
- தேன் அறைகள் முழுவதும் மூடப்பட்ட பின்னர் தேன் அடைகளைத் தேன் எடுப்பதற்கு எடுத்தால் நல்ல தரமான தேன் பெற இயலும்
- தேன் எடுத்த பின்னர் தேன் அறைகளை உடனே தேனீக் கூட்டத்திற்குக் கொடுத்துவிட வேண்டும்
- மதுர வரத்து முடிந்தவுடன் ஒரு தேன் அறையை மட்டும் விட்டு விட்டு மீதித் தேன் அறைகளை நீக்கிவிட வேண்டும்
- தேனீக் கூட்டங்களை மதுரவரத்து அதிகம் கிடைக்கும் பல இடங்களுக்கு அடுத்தடுத்து எடுத்துச் செல்லுவதன் மூலம் கூடுதல் தேன் மகசூல் பெற இயலும்
கூட்டம் பிரிதல்:
சாதகமான சூழ்நிலை நிலவும் காலங்களில் தேனீக்கள் பல்கிப் பெருகுகின்றன. இவ்வாறு பெருக்கம் அடைந்த கூட்டங்களில் இனவிருத்தியின் பொருட்டுக் கூட்டம் பிரிதல் அல்லது குடி பெயர்தல் நிகழ்கின்றது. கூட்டம் பிரியும் தாபம் தேனீக்களிடம் காணப்படும் ஓர் இயற்கையான உணர்வு ஆகும். இந்தியத் தேனீ இனங்களில் இவ்வுணர்வு கூடுதலாகக் காணப்படுகின்றது. மதுர வரத்து கூடும் காலங்களில் இவ்வுணர்வு கூடுகின்றது. கூட்டம் பிரியும் உணர்வு கூட்டத்திற்குக் கூட்டம் மாறுபடும். கூட்டம் பிரியும் காலம் மதுர வரத்திற்கு ஏற்ப இடத்திற்கு இடம் வேறுபடும். இந்த உணர்வு தேனீக்களுக்குப் பல வழிகளில் உதவுகின்றது. கூட்டம் பிரிதலால் தேனீக்கள் உணவு அதிகமாகக் கிடைக்கும் இடங்களை நாடிச் செல்லுகின்றன. இதனால் தேனீ இனம் உணவின்றி அழிவது தவிர்க்கப்படுகின்றது.
நடைபெறக் காரணங்கள்:
- ஒரு சில கூட்டங்களில் பாரம்பரிய ரீதியாகக் கூடுதலாகக் காணப்படும் பிரிந்து செல்லும் உணர்வு
- அதிக மதுர வரத்தால் விரைந்து நடைபெறும் கூட்ட வளர்ச்சி
- வயதான ராணித் தேனீயூல் போதிய அளவு ஈர்ப்புச் சுரப்பைச் சுரக்க இயலாத சூழ்நிலை
- வீட்டுத் தேனீக்களின் எண்ணிக்கை வயல் வெளித் தேனீக்களின் எண்ணிக்கையை விடக் கூடுதலாக இருத்தல்
- புழு வளர்ப்பு மற்றும் தேன் சேமிப்பிற்குப் போமிய இட வசதியின்மை
- கூட்டின் வெப்ப நிலை கூடுதல்
- கூட்டில் போதிய காற்றோட்ட வசதியின்மையால் ஏற்படும் புழுக்கம்
- தேனீப் பெருக்கத்தாலும் தேன் சேமிப்பாலும் தோன்றும் இட நெருக்கடி
- சேமித்து வைத்துள்ள தேனை அவ்வப்பொழுது எடுக்காது இருத்தல்
ஏன் தடுக்க வேண்டும்?
தேனீ வளர்ப்போர் தேனீக் கூட்டம் பிரித்து செல்வதை அவசியம் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் அடிக்கடி கூட்டம் பிரிய நேரிட்டால்
- கூட்டத்தின் வலு குறையும்
- தேன் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படும்
- அடைப் பரப்பில் போதிய பணித் தேனீக்கள் இல்லாத நிலையில் வளரும் புழுக்கள் போதிய கவனிப்பும் சூடும் இன்றி இறக்க நேரிடும்
- புழு வளர்ப்பு தற்காலிகமாகத் தடைப்படும்
- பணித் தேனீக்களின் உணவு திரட்டும் ஆர்வம் குறையும்
- சில நேரங்களில் ராணித் தேனீ இழப்பு நேரிட்டு, பணித் தேனீக்கள் முட்டையிடத் தொடங்கும். இதனை உரிய நேரத்தில் தடுக்காவிட்டால் கூட்டமே படிப்படியாக அழிய நேரிடும்
அறிகுறிகள்:
- பெட்டியில் தேனீக்கள் பொங்கி வழியும்
- ஆண் தேனீ அறைகள் அதிக எண்ணிக்கையில் அடையில் கட்டப்படும்
- புதிய ராணித் தேனீ வளர்ப்பு அறைகள் அடையின் கீழ்ப்புற விளிம்புகளில் அதிக எண்ணிக்கையில் கட்டப்படும்
நடைபெறும் விதம்:
- மதுர வரத்து கூடும் பொழுது கூட்டம் பிரியும் உணர்வு தூண்டப்படுகின்றது. இத்தருணத்தில் ராணித் தேனீயின் தினசரி முட்டையிடும் திறன் கூடுகின்றது. புழு வளர்ப்பும் துரிதமாக நடைபெறுகின்றது. இதனால் வீட்டுத் தேனீக்களின் எண்ணிக்கை கூடுகின்றது. மேலும் பெட்டியில் இடநெருக்கடி ஏற்படுகின்றது
- தாதித் தேனீக்களில் அரசக் கூழ் அதிக அளவு சுரக்கின்றது. இவ்வாறு சுரக்கும் அரசுக் கூழினை வெளியேற்றிப் பயன்படுத்துவதற்காகப் புதிய ராணித் தேனீ அறைகள் கட்டப்படுகின்றன (படம் 6). பணித் தேனீக்கள் இரண்டு நாள் இடைவெளியில் பல ராணித் தேனீ வளர்ப்பு அறைகளைப் புழு அடையின் கீழ்ப்புற விளிம்புகளில் கட்டுகின்றன.
- ராணித் தேனீ அறைகளைக் கட்டும் முன்னர் ஆண் தேனீ அறைகள் அடையின் பல பகுதிகளிலும் தேனீக்களால் கட்டப்படுகின்றன (படம் 10). புதிதாக வரவிருக்கும் ராணித் தேனியுடன் புணர்ந்து கருவுறச் செய்வதற்காக ஆண் தேனீக்களை இவ்வாறு திட்டமிட்டு உருவாக்குகின்றன
- ராணித் தேனீக்கு தரப்படும் உணவின் அளவு படிப்படியாகக் குறைக்கப்படுகின்றது. இதனால் ராணித் தேனீயின் வயிறு மெலிந்து பறக்கும் சக்தியைப் பெறுகின்றது
- ராணித் தேனீ அறைகள் மெழுகு மூடியினால் மூடப்பட்டவுடன் (படம் 5) பழைய ராணித் தேனீ, பாதிக்கும் மேற்பட்ட பணித் தேனீக்களுடன் கூட்டைவிட்டு ஒரு கூட்டமாகப் பறந்து செல்கின்றது
- கூட்டை விட்டு பிரிந்து செல்லும் முதல் கூட்டம் முதன்மைக் கூட்டம் எனப்படும். பொதுவாகக் காலை நேரத்தில் பிரகாசமான சூரிய ஒளி இருக்கும் பொழுது கூட்டம் பிரிதல் நடைபெறுகின்றது. கூட்டம் பிரிவதற்கு சற்று முன் சில பணித் தேனீக்கள் நுழைவு வழியின் முன் பரபரப்புடன் பறந்து கொண்டு இருக்கும். இவை ஒரு வித ரீங்கார ஒலியை ஏற்படுத்தும் நேரம் ஆக ஆக அதிக எண்ணிக்கையில் பணித் தேனீக்கள் கூட்டை விட்டு வெளியேறும். இவ்வாறு வெளியேறும் பணித் தேனீக்கள் தேனைக் குடித்து விட்டு வரும். பணித் தேனீக்களுடன் சேர்த்து ராணித் தேனீயும் கூட்டை விட்டு வெளியேறும். பின்னர் பிரிந்த கூட்டம் முதலில் அருகில் இருக்கும். ஏதாவது ஒரு மரக் கிளையில் ஓரிரு நாட்கள் புதிய கூட்டை அமைப்பதற்கான இடம் செரிவு செய்யப்படும் வரை ஒரு திரளாகத் தங்கும்.
- முதன்மைக் கூட்டம் வெளியேறிய ஒரு வாரத்திற்குள் வெளிவரும் புதிய ராணித் தேனீ பிற ராணித் தேனீ அறைகளைக் கடித்து சேதப்படுத்தும் அல்லது எஞ்சியுள்ள பணித் தேனீக்களின் ஒரு பகுதியுடன் வெளியேறும். இவ்வாறு கூட்டத்தின் வலுவைப்பொறுத்து ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பின் கூட்டங்கள் வெளியேறும்
தடுக்கும் முறைகள்:
- கூட்டம் பிரிதலை முற்றிலுமாகத் தடுக்க இயலாது. ஆனால் தேனீ வளர்ப்போர் தேனீக்களின் இத்தாபத்தைத் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு கூட்டங்களைப் பிரியும் முன்னரே பிரித்துப் புதிய கூட்டங்களை உருவாக்கலாம்
- ராணித் தேனீ முட்டையிடுவதற்குத் தேவையான இட வசதி செய்து கொடுக்க வேண்டும். இருப்பு இருந்தால் புழு அறையில் காலி அடைகள் தரலாம். இல்லையென்றால் அடை அஸ்திவாரத் தாள் பொருத்தப்பட்ட காலிச் சட்டங்களைப் புழு அறையில் தரலாம். இதன் மூலம் பெட்டியினுள் இடநெருக்கடி காரணமாக ஏற்படும் புழுக்கத்தைக் குறைக்க முடியும்
- மதுர வரத்து துவங்கும் பொழுது கூட்டங்களுக்கு உரிய நேரத்தில் தேன் அறைகளைக் கொடுக்க வேண்டும். தேன் சேமிப்பிற்கான இடத் தேவை பூர்த்தி செய்யப்படும் பொழுதும் கூட்டம் பிரியும் உணர்வு குறையும். இதனால் கூட்டம் பிரிதலைத் தாமதப்படுத்தலாம்
- தேனீக் கூட்டங்கள் ராணித் தேனீ வளர்ப்பு அறைகள் கட்டுப்பட்டு இருக்கும் சமயம் கூடுதலாகக் கொட்டும். அத்தகைய தருணங்களில் அடிக்கடி புழு அடைகளைக் கவனமாகச் சோதனை செய்து, புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராணித் தேனீ வளர்ப்பு அறைகளை ஒன்று விடாது அழித்துவிட வேண்டும். அடையின் கீழ் விளிம்பில் கட்டப்பட்டு இருக்கும் ராணித் தேனீ வளர்ப்பு அறைகளைத் தொடர்ந்து அழித்தால், தேனீக்கள் ராணித் தேனீ வளர்ப்பு அறைகளை அடையின் மையப் பகுதியில் கட்டும் இத்தகைய அறைகளைக் கண்டு பிடித்து அழிப்பது சற்று கடினம். ஓரிரு அறைகள் தப்பினாலும் கூட்டம் உறுதியாகப் பிரிந்து விடும். எனவே இம்முறை ஓரளவிற்கு மட்டுமே பயன் கொடுக்கும்
- ராணித் தேனீயின் இறக்கைகளை வெட்டுவதன் மூலமும், வாயில் தகட்டை நுழைவு வழி முன் வைத்தும் ராணித் தேனீ கூட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்கலாம் (படம் 20). இதனால் ராணித் தேனீ கூட்டைவிட்டுப் பணித் தேனீக்களுடன் பறந்து செல்ல இயலாது. எனவே ஒருவேளை ராணி இல்லாது பணித் தேனீக்கள் பிரிந்து சென்றாலும் அவை அனைத்தும் மீண்டும் கூட்டிற்கே திரும்பி வந்துவிடும்
- ஒவ்வொரு ஆண்டும் ராணித் தேனீயை மாற்ற வேண்டும். இதனால் கூட்டம் பிரதலைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம்
- பிரிந்து சென்றாலும் முதன்மை கூட்டத்தைத் தனியே பிடித்து வைக்கலாம்
- பிரிந்து செல்லும் பின் கூட்டங்களைக் காலம் தாழ்த்தாது பிடித்துத் தாய்க் கூட்டங்களுடன் இணைந்து வைப்பதே நல்லது
பற்றாக்குறைக் காலப் பராமரிப்பு:
மழைக் காலங்களில் கூட்டங்களைப் பராமரித்தல்:
- கடும் மழையினால் தேனீப் பெட்டிகள் எதுவும் கீழே விழுந்துள்ளனவா எனப் பார்க்க வேண்டும்
- தேனீப் பெட்டியினுள் மழை நீர் புகாதபடி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
- மழைக்காலங்களில் தேனீக்களின் உணவு தேடும் பணி பாதிக்கப்படும்
- மழையால் மலர்களிலிருந்து சுரக்கப்படும் மதுரம் நீர்த்துவிடும்
- மகரந்தமும் மழையால் அடித்துச் செல்லப்படும்
- மழையில் சிக்கிய பணித் தேனீக்கள் கூடு திரும்பாது. இதனால் கூட்ட வலு குறையும்
- தேனீக்களுக்கு சர்க்கரைப்பாகு கொடுக்க வேண்டும்
- மழைக்கு பின் எறும்புத் தொந்தரவு கூடுதலாக வாய்ப்புள்ளது. எனவே எறும்புகள் தேனீப் பெட்டியில் ஏறியுள்ளனவா எனப் பார்த்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
- மெழுகுப் பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்க அடிக்கடி அடிப் பலகையைச் சுத்தம் செய்ய வேண்டும்
உணவு ஊட்டுதல்:
தேனீக் கூட்டத்திற்கு மதுர வரத்து இல்லாத பொழுதும் குறைவாக இருக்கும் காலங்களிலும் தேவையின் அடிப்படையில் செயற்கை உணவு கொடுத்தல் அவசியம். உணவு அடைகளில் போதிய அளவு தேன் சேமிப்பு இல்லையென்றாலும், புழு அடையில் உள்ள தேன் அறைகள் அனைத்தும் காலியாக இருந்தாலும் தேனீக் கூட்டங்களுக்குச் சர்க்கரைப் பாகு கட்டாயம் கொடுக்க வேண்டும். பொதுவாகத் தேனீ வளர்ப்பவர்கள் தேனீக்கள் சேமித்து வைத்துள்ள தேனை முழுவதும் எடுத்துவிடும் தருணத்தில் தேனீக்களின் சக்திக் தேவையை நிறைவு செய்ய சர்க்கரைப் பாகு அவசியம் கொடுக்க வேண்டும்.
ஏன் உணவு ஊட்ட வேண்டும்?
- தேனீக்களைப் பட்டினிச் சாவிலிருந்து காக்க
- உணவுத் தட்டுப்பாட்டினால் கூட்டம் ஓடாது தடுக்க
- புதிதாகப் பிடித்த இயற்கை கூட்டம் மற்றும் பிரிந்து வந்த கூட்டம் நிலைபெற
- மெழுகு சுரத்தலைத் தூண்டி, தேனீக்களை அடைகட்ட வைக்க
- ராணித் தேனீயை முட்டையிடத் தூண்ட
- மோசமான கால நிலையினால் தேனீக்கள் வெளியில் சென்று உணவு திரட்டி வர இயலாது போகும் பொழுது
- வயல்வெளித் தேனீக்களை சுறுசுறுப்புடன் பணியாற்றச் செய்ய
- பூச்சிக்கொல்லிப் பாதிப்பிற்கு இலக்கான கூட்டங்கள் பாதிப்பிலிருந்து மீண்டு விரைந்து வளர்ச்சி பெற
- நோயுற்ற கூட்டங்களுக்கு பாகுடன் மருந்து கலந்து கொடுக்க
- மதுர வரத்திற்கு முன் தேனீக் கூட்டத்தின் வலுவைக் கூட்ட
சில குறிப்புகள்:
- அஸ்கா சர்க்கரை கொண்டுதான் பாகு தயாரிக்க வேண்டும். நாட்டுச் சர்க்கரை ஏற்றது அல்ல. அஸ்கா சர்க்கரையுடன் குளுக்கோஸ் (10:1) கலந்து கொடுத்தால் தேனீக்கள் விரைந்து அடைகட்டும்
- அஸ்கா சர்க்கரையைச் சுடு நீரில் நன்கு கரைத்துப் பின்னர் ஆற வைத்துக் கொடுக்க வேண்டும். ஒரு கிலோ சர்க்கரையை ஒரு லிட்டர் சுடுநீரிலி (1:1) கரைத்துப் பாகு தயாரிக்க வேண்டும். ராணித் தேனீயை முட்டையிடத் தூண்ட நீர்த்த பாகு (1:2) கொடுக்க வேண்டும் (அரைக் கிலோ அஸ்கா விறகு ஒரு லிட்டர் நீர்)
- சர்க்கரைப் பாகைத் தொட்டியிலோ அல்லது ரப்பர் பால் சேகரிக்கப் பயன்படும் பிலாஸ்டிக் தேங்காய் தொட்டியிலோ ஊற்றி, புழு அறைச் சட்டங்களின் மேல் வைத்துப் பின்னர் ஒரு காலித் தேன் அறை கொண்டு அதனை மூடிக் கொடுக்கலாம். இவ்வாறு பாகைத் தேனீப் பெட்டியினுள் வைத்துக் கொடுப்பதால் தேன் திருட்டைத் தவிர்க்கலாம்
- ஓர் உருளை வடிவ பிளாஸ்டிக் டப்பாவில் பாகினை ஊற்றி, டப்பாவின் வாயை ஒரு கெட்டியான துணி கொண்டு ரப்பர் வளையத்தால் இறுக்க மூடி, டப்பாவைத் தலை கீழாகக் கவிழ்த்து, புழு அறைச் சட்டங்களின் மேல் வைத்தும் கொடுக்கலாம்
- ஓர் எவர்சில்வர் டப்பாவில் பாகினை ஊற்றி பல சிறு துளைகளுடன் கூடிய மூடியால் நன்கு மூடி, டப்பாவைத் தலைகீழாகத் திருப்பி புழு அறைச் சட்டங்களின் மேல் வைத்தும் கொடுக்கலாம்
- சர்க்கரைப் பாகினை காலி அடைகளில் ஊற்றியும் கொடுக்கலாம்
- சர்க்கரைப் பாகு கொடுக்கும் பொழுது, பாகு கீழே சிந்தக் கூடாது. அவ்வாறு சிந்தினால் எறும்புத் தொல்லை ஏற்படும்
- தேனீக் கூட்டங்களுக்கு மாலை நேரத்தில் மட்டுமே உணவு கொடுக்க வேண்டும்
- தேன் திருட்டைத் தவிர்க்க ஒரு தேனீப் பண்ணையில் உள்ள எல்லாத் தேனீக் கூட்டங்களுக்கும் பாகு கொடுக்க வேண்டும்
- தேனீக் கூட்டத்தின் வலுவிற்கு ஏற்றபடி தேவைக்கு மிகாமல், பாகு கொடுக்க வேண்டும். ஒரு புழு அடைக்கு 100 மில்லி என்ற அளவில் ஒரு தேனீப் பெட்டியில் உள்ள புழு அறையில் எத்தனை புழு அடைகள் இருக்கின்றதோ அதற்கும் தக்கவாறு பாகு கொடுக்கலாம்
- தேவைக்கு அதிகமாக சர்க்கரைப் பாகு கொடுக்கும் பொழுது, தேனீக்கள் புழு அடைகளின் மையப் பகுதியிலும் பாகினைச் சேமிக்கின்றன. இதனால் ராணித் தேனீக்கு முட்டையிட இட வசதி இல்லாது போய் விடும். இத்தகைய தருணத்தில் சர்க்கரைப் பாகு கொடுப்பதை உடனே நிறுத்தி விட்டு, ராணித் தேனீ முட்டையிடக் காலி அடைகள் கொடுக்க வேண்டும்
- மதுர வரத்து துவங்கு முன் கூட்டங்களுக்குச் சர்க்கரைப் பாகு கொடுத்து கூட்ட வளர்ச்சியைத் துரிதப்படுத்த வேண்டும். மதுர வரத்து துவங்கி, தேனீக் கூட்டத்திற்குத் தேன் அறை கொடுத்த பின்னர் கண்டிப்பாகப் பாகு கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுத்தால் தேனின் தரம் குறைய நேரிடும்
- நோய் இல்லாத கூட்டங்களிலிருந்து பெறப்பட்ட தேனையும் தேனீக்களுக்கு உணவாகக் கொடுக்கலாம்
- மகரந்தத் தட்டுப்பாடு தோன்றும் பொழுது தேனீக் கூட்டங்களை தென்னந்தோப்பில் வைப்பதால் மகரந்தப் பற்றாக்குறையைப் போக்கலாம்
ஓடிப் போகுதல்:
ஓடுவது ஏன்?
இந்தியத் தேனீ இனத்தில் ஓடிப் போகும் தன்மை கூடுதலாகக் காணப்படுகின்றது. தேனீக் கூட்டங்கள் கூட்டை விட்டு ஓடுவதற்கு முக்கிய காரணம் உணவுத் தட்டுப்பாடு தோன்றுவதே ஆகும். இந்த சுபாவம் பாதகமான சூழ்நிலையிலிருந்து விடுபடவும் தேனீ இனம் அழிவு படாமல் நிலை பெற்று வாழவும் வழி வகை செய்கின்றது.
ஓடுவதற்கான அறிகுறிகள்:
- கூட்டிற்குள்ள உணவு கொண்டு வரும் தேனீக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையும்
- ஓடும் நாளன்று ஒரு தேனீகூடக் கூட்டிற்குள் மகரந்தம் கொண்டு வராது
- தேனீக்கள் புழு வளர்க்கும் பணியில் ஆர்வத்தோடு ஈடுபடுவதில்லை
- புழு வளர்ப்பு வேகம் குறைவுபட்டு புழு வளர்ப்பு ஒரு நிலையில் முற்றிலுமாக நின்று விடும்
- கடுமையான புரதப் பற்றாக்குறை தோன்றும் பொழுது பணித் தேனீக்கள் முட்டை, புழு மற்றும் கூட்டுப் புழுக்களை உண்டு விடும்
- தேனீக்களின் உற்பத்தி வெகுவாகக் குறைவதால் கூட்டத்தின் வலு கணிசமாகக் குறைந்து விடும்
- தேனீக்களின் சூழப்படாத அடைகளை மெழுகு அந்திப் பூச்சி தாக்கி நாசப்படுத்தும்
- தற்காப்புத் திறன் குறைவதால் தேனீக் கூட்டங்கள் எறும்புகள், குளவிகள் போன்ற எதிரிகளின் தாக்குதலுக்கு இலக்காகும்
- ராணித் தேனீ பறப்பதற்கு ஏற்றவாறு தன் உடல் எடையைக் குறைக்கும் பொருட்டு முட்டைகளை புழு வளர்ப்பு அறைகளில் இட்டு விடும்
- ஓடர் தருணம் இதுவே என்பதை உணர்த்துவதற்காக ஒரு சில தேனீக்கள் அடையில் ஒரு வித நடனமாடிப் பிற தேனீக்களுக்கு அறிவுறுத்தும். இத்தகவல் பரிமாற்ற நடனத்தின் முடிவில் கூட்டைவிட்டு அனைத்துத் தேனீக்களும் ஓடி விடுகின்றன
கண்டறியும் வழிமுறை:
தேனீக் கூட்டம் ஓடுமோ அல்லது இருக்குமோ என்பதைக் கண்டறிய ஓர் எளிய வழி உள்ளது. இதற்காகத் தேனீப் பெட்டியைத் திறந்து எவ்வித ஆய்வும் செய்ய வேண்டியது இல்லை. தேனீப் பெட்டிக்குள் வந்து செல்லும் தேனீக்களைக் கணக்கெடுப்பதன் மூலம் இதனை அறிய இயலும். தேனீப் பெட்டிக்குள் ஒரு நிமிட நேரத்தில் எத்தனை தேனீக்கள் நுழைகின்றன என்பதையும், அவற்றுள் எத்தனை தங்களின் பின்னங்கால்களில் மகரந்தச் சுமையுடன் வருகின்றன என்பதையும் தனித்தனியே கணக்கிட வேண்டும். இக்கணக்கெடுப்பைப் பகல் நேரத்தில் தேனீக்கள் சுறுசுறுப்பாக இயங்கும் பொழுது செய்ய வேண்டும். இந்த இரு எண்ணிக்கைகளையும் கொண்டு கூட்டத்தின் செயல் திறன் குறியீட்டைக் கீழ்கண்ட சூத்திரம் கொண்டு கணிக்க வேண்டும்
{மகரந்தம் எடுத்து வரும்}
கூட்டத்தின்
செயல் திறன் குறியீடு = தேனீக்களின் எண்ணிக்கைகள் x 100
----------------------------------------------------------
தேனீப் பெட்டியினுள் நுழையும்
தேனீக்களின் எண்ணிக்கை x 60
கூட்டத்தின் செயல்திறன் குறியீட்டைப் பொறுத்து கூட்டம் ஓடாது தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் மாறுபடும். இக்குறியீடானது எப்பொழுதும் இரண்டுக்குக் குறையாமல் இருத்தல் தேனீக்கள் கூட்டைவிட்டு ஓடாது.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- கூட்டத்தின் செயல் திறன் குறியீடு பூஜ்யமாகும் பொழுது கூட்டம் ஓடியே தீரும். எனவே இத்தகைய தருணத்தில் ஓடும். தாபத்தைத் தடுக்க ராணித் தேனீயை மட்டும் ஓட விடாது தடுத்து பிற தேனீக்களை ஓட விட்டுப் பின்னர் மீண்டும் கூட்டிற்குள் வரச் செய்ய வேண்டும். வாயில் தகடு கொண்டோ அல்லது நுழைவு வழியைச் சிறிது படுத்தியோ அல்லது ராணித் தேனீயை ஓட விடாது தடுக்கலாம். ஓடித் திரும்பிய தேனீக்களுக்கு சர்க்கரைப்பாகு கொடுத்தால் கூடுதல் தூரம் பறந்து சென்று உணவு திரட்டும் பணியை மேற்கொள்ளும். பட்டினியிலிருந்து மீண்ட தேனீக்களின் தற்காத்துக் கொள்ளும் ஆற்றல் படிப்படியாக மேம்ப்டும். இதனால் எதிரிகளை எதிர்க்கும் வல்லமை கூடும். கூட்டம் வலுப்பெறும் பொழுது குளவி, எறும்பு, அந்திப் பூச்சி ஆகியவற்றின் தாக்குதலை முறியடித்து சமாளிக்கும் சக்தியைத் தேனீக் கூட்டம் பெறும்
- புதிதாகப் பிடித்த இயற்கை தேனீக் கூட்டங்களை துர் வாசனை எதுவும் இல்லாத பெட்டிகளில் பிடிக்க வேண்டும். இத்தகைய கூட்டங்கள் நிலைபெறும் வரை அடிக்கடி பார்த்தல் கூடாது
- தேனீக் கூட்டங்களைத் தேவையின் அடிப்படையில் குறுகிய காலத்திற்குள் விரைவாக ஆய்வு செய்ய வேண்டும்
- தேனீக்களை சந்தப்படுத்த குறைவான அளவு மட்டுமே புகையைப் பயன்படுத்த வேண்டும். அதிகம் புகை கொடுத்தால் தேனீக் கூட்டம் ஓடிவிடும்.
தேன் பெறக் காரணம்:
- பெட்டியிலிருக்கும் சந்துகள் மற்றும் இடுக்குகள் வழியே திருட்டுத் தேனீக்கள் எளிதில் நுழைந்து விடுகின்றன
- மதுர வரத்து குறைவான காலங்களில் நீண்ட நேரம் பெட்டியைத் திறந்து ஆய்வு செய்யும் பொழுது தேன் வாசனையால் ஈர்க்கப்பட்டு ஒரு பெட்டியில் இருக்கும் தேனீக்கள் பிற பெட்டிக்குச் சென்று தேனைத் திருடி வருகின்றன
- மதுர வரத்து முடியும் பொழுது தேனீக்கள் தேனைத் திருடுகின்றன
- வலுவான கூட்டத்தில் இருக்கும் தேனீக்கள் வலுக்குன்றிய கூட்டங்களில் இருந்து தேனைத் திருடுகின்றன. வலுக்குன்றிய கூட்டங்களில் போதிய அளவு காவல் தேனீககள் இருப்பதில்லை. எனவே திருட்டுத் தேனீக்கள் எளிதில் கூட்டினுள் நுழைந்து விடுகின்றன
- திருட்டுத் தேனீக்கள் சிரமம் இல்லாது தேனைக் குடித்துத் தங்கள் வயிறை நிறைத்துக் கொண்டு வந்து விடுகின்றன
அறிகுறிகள்:
- திருட்டுத் தேனீக்கள் நேரடியாக நுழைவு வழியினுள் நுழையாமல் நுழைவு வழியைச் சுற்றி வட்டமிட்டு விட்டுப் பின்னர் நுழையும்
- அனுபவம் மிக்க வயதான வயல் வெளித் தேனீக்களே திருடும். அவை தங்கள் கூட்டினுள் நுழையும் பொழுது பின்னங்கால்கள் இரண்டையும் வயிற்றை ஒட்டி முன்னோக்கி விரித்த நிலையில் பறந்து வரும்
- தேன் திருட்டு நடைபெறும் பொழுது தேனீக்களிடையே பலத்த மோதல் ஏற்பட்டு பல தேனீக்கள் இறக்க நேரிடும். இதனால் கூட்டங்களின் வலு குறைந்து விடும்
- திருட்டுத் தேனீக்களும் காவல் தேனீக்களும் நுழைவு வாயில் அருகே சண்டையிட்டுக் கொள்ளும். இதனால் திருட்டுத் தேனீக்களின் ரோமங்கள் உதிர்ந்து உடல் பளபளப்பாக இருக்கும்
- சில நேரங்களில் திருட்டுக்கு இலக்கான கூட்டத்தின் ராணித் தேனீ கொல்லப்படும்
- தேன் திருட்டு புழு நோய்கள் பரவவும் வழி வகுக்கும்
தடுப்பு முறைகள்:
- தேனீப் பெட்டிகளில் உள்ள சந்துகள் மற்றும் இடுக்குகளை மக்கு கொண்டு அடைத்து விட வேண்டும்
- ஒரு தேனீ மட்டுமே சென்று வரும் அளவிற்கு நுழைவு வழியைச் சிறிதாக்க வேண்டும்
- எல்லாக் கூட்டங்களையும் சம வலுவுடையதாகப் பராமரிக்க வேண்டும்
- வலுவான மற்றும் வலுக்குன்றிய கூட்டங்களை இடம் மாற்றி வைக்கலாம்
- வலுக்குன்றிய கூட்டங்களை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லலாம்
- மதுர வரத்து குறையும் பொழுது தேன் அறைகளை அதிக நேரம் வெளியில் வைத்தல் கூடாது
- தேனீக்கள் புக இயலாத அறைகளில் வைத்து மட்டுமே தேனைப் பிரித்து எடுக்க வேண்டும்
ராணித் தேனீ இழப்பு:
தேனீக் கூட்டத்தின் முறையான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்குள் ராணித் தேனீ மிகவும் அவசியம். ராணித் தேனீ இழப்பு தேனீக் கூட்டத்தைப் பல வழிகளில் பாதிக்கும். ராணித் தேனீ இழப்பு தேனீக் கூட்டத்திற்கு ஈடு செய்யக் கூடிய இழப்பா அல்லது ஈடு செய்ய முடியாத இழப்பா என்பது இழப்பு ஏற்படும் பொழுது இருக்கும் கூட்டின் நிலையைப் பொறுத்து அமையும். இழப்பு நேரிடும் பொழுது புழு அடைகளில் முட்டை மற்றும் இளம் புழுக்கள் இருந்தால் தேனீக் கூட்டம் ஒரு புதிய ராணித் தேனீயை உருவாக்கி இழப்பை ஓரளவிற்கு ஈடு கட்டி விடும். ஆனால் இழப்பு ஏற்படும் பொழுது முட்டைகளோ, புழுக்களோ இல்லையெனில் தேனீக்களில் புதிய ராணித் தேனீயை உருவாக்க இயலாது. இத்தகைய தருணத்தில் ராணித் தேனீ இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகி விடும் இழப்பு ஏற்படக் காரணங்கள்:
- தேனீப் பெட்டிகளை முறைப்படியும் கவனத்துடனும் ஆய்வு செய்யத் தவறும் பொழுது ராணித் தேனீ இழப்பு ஏற்படலாம்
- கூட்டம் பிடிக்கும் பொழுது ராணித் தேனீ இழப்பு ஏற்படலாம்
- தேனீப் பெட்டி ஆய்வின் பொழுது அடைச் சட்டங்களை எடுக்கும் பொழுதோ அல்லது திருப்பி வைக்கும் பொழுதோ இரு அடைகளுக்கு நடுவே சிக்கி உருள நேரிட்டு ராணித் தேனீ நசுங்கி இறக்கலாம்
- புணர்ச்சிப் பறப்பிற்குச் சென்ற ராணித் தேனீ கூட்டிற்குத் திரும்பாமல் பறவைக்கு இரையாகலாம்
- ராணித் தேனீ புணர்ச்சிக்குப் பின் கூடு மாறித் தவறான கூட்டிற்குள் நுழைய நேரிட்டால் நுழைந்த கூட்டிலுள்ள பணித் தேனீக்கள் புதிதாக வந்த ராணியைச் சூழ்ந்து கொன்றுவிடும்
- பூச்சிக் கொல்லி மருந்தின் தாக்குதலுக்கு இலக்கான கூட்டங்களில் சில சமயம் ராணி இழப்பு ஏற்படும்
கூட்டினுள் காணப்படும் அறிகுறிகள்:
- பெட்டியைத் திறந்து பார்க்கும் பொழுது ராணியில்லாக் கூட்டத்திலிருந்து ஒரு வித சோக இரைச்சல் எழும்
- தேனீக்கள் அடையில் இருந்து தங்கள் பணிகளைச் சரிவரக் கவனிக்காமல் அங்கும் இங்கும் அலையும்
- புழு அடைகளில் முட்டைகள் இளம் புழுக்கள் இருக்காது
- பணித் தேனீக்கள் சிறுத்து வயிற்று நுனி சற்று கருத்து விடும்
சோதனை:
- ராணித் தேனீயில்லாக் கூட்டத்திற்கு வேறு ஒரு தேனீக் கூட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட முட்டைகள் மற்றும் இளம் புழுக்கள் உள்ள ஒரு புழு அடையைக் கொடுக்க வேண்டும். ராணியற்ற கூட்டம் கொடுக்கப்பட்ட அடையில் மூன்று நாட்களுக்குள் புதிய ராணி அறைகளைக் கட்டும். சில நேரங்களில் ஒரு கூட்டில் புதிதாக வெளி வந்த ராணித் தேனீ புணராமல் இருக்கலாம். இத்தகைய தருணத்தில் இக்கூட்டில் ராணித் தேனீ ஏற்கனவே இருப்பதால் சோதனைக்காக் கொடுக்கப்பட்ட புழு அடையில் பணித் தேனீக்கள் ராணி அறைகள் கட்டாது. அடைகளில் முட்டைகள் மற்றும் புழுக்கள் ராணித் தேனீ இழப்பால் இல்லையா அல்லது புதிதாக வந்த ராணித் தேனீ இன்னும் புணரவில்லை என்பதால் இல்லையா எனத் தேனீ வளர்ப்பாளர்கள் இச்சோதனை மூலம் பகுத்து அறிந்து கொள்ளலாம்
இழப்பால் ஏற்படும் விளைவுகள்:
- புழு வளர்ப்பு மூன்று முதல் நான்கு வாரங்களுக்குத் தடைப்படும்
- கூட்டத்தின் வலு படிப்படியாகக் குறையும்
- பணித் தேனீக்களின் செயல்பாட்டு பாதிக்கப்பட்டு சுபாவத்திலும் பல மாற்றங்கள் தோன்றும்
- இழப்பு நேரிடும் பொழுது புழு அடைகளில் முட்டைகள் மற்றும் இளம் புழுக்கள் இருந்தால் அவசரகால ராணி அறைகள் கட்டிப் புது ராணியை உருவாக்கத் தேனீக்கள் முயற்சி மேற்கொள்ளும்
- சில பணித் தேனீக்களில் சினைப்பைகள் வளர்ச்சி பெற்று பணித் தேனீக்கள் முட்டையிடத் துவங்கும்
- பணித் தேனீ இடும் முட்டைகளிலிருந்து ஆண் தேனீக்கள் மட்டுமே தோன்றும் என்பதால் கூட்டமே நாளடைவில் அழிந்து விடும்
- அவசரகதியில் புதிய ராணியை உருவாக்கும் பொழுது வயதான ராணியாக வளர்க்க நேரிடும். இதனால் செயல்திறன் குறைவான ராணித் தேனீ உருவாகும் வாய்ப்பும் உள்ளது
சரி செய்வது எப்படி?
- ராணியில்லாக் கூட்டத்திற்கு மூடப்பட்ட ராணித் தேனீ வளர்ப்பு அறையோ அல்லது புதியதொரு ராணித் தேனீயோ கொடுக்கலாம்
- புதிய ராணித் தேனீயைக் கூட்டம் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் பிறிதொரு ராணியுள்ள கூட்டத்துடன் ராணியற்ற கூட்டத்தை இணைத்து விட வேண்டும்
முட்டையிடும் பணித் தேனீக்கள்:
பொதுவாக ராணித் தேனீ நன்கு செயலாற்றும் ஒரு தேனீக் கூட்டத்தில் முட்டையிடும் பணியை ராணித் தேனீ மட்டுமே மேற்கொள்ளும். ஏனெனில் ராணித் தேனீயின் தாடைச் சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும் ஒரு வித வசியப் பொருள் பணித் தேனீக்களின் சினைப் பைகளின் வளர்ச்சியைப் பெரிதும் மட்டுப்படுத்துகின்றது. இதே போன்று ஒரு கூட்டத்தில் புழு வளர்ப்பு சீராக நடைபெறும் பொழுது புழுக்கள் வெளிப்படுத்தும் ஒரு வகைப் பொருளும் விடுகின்றது. ஒரு தேனீக் கூட்டத்தில் ராணித் தேனீ இழப்பும் ஏற்படும். தேனீக்களால் புதிய ராணித் தேனீயை உருவாக்க வாய்ப்பே இல்லாது போய்விடும். இத்தகைய கூட்டங்களில் பணித் தேனீயின் சினைப் பைகளின் வளர்ச்சியைத் தடை செய்யும் காரணிகள் நீக்கப்படுவதால் சில பணித் தேனீக்கள் சினைப்பைகள் வளர்ச்சி பெற்று முட்டையிடத் துவங்குகின்றன. பணித் தேனீக்கள் ஆண் தேனீக்களுடன் புணர இயலாது. இதனால் முட்டையிடும் பணித் தேனீக்களால் கருவுறாத ஆண் தேனீக்கள் மட்டுமே உற்பத்தியாகும். இதனால் நாளடைவில் கூட்டில் பணி முடக்கம் ஏற்பட்டு இறுதியில் தேனீக் கூட்டமே வலுக்குன்றி அழிவுறும் நிலை உருவாகும். ராணி இழப்பு ஏற்பட்ட ஒன்று முதல் இரண்டு வாரத்திற்குள் பணித் தேனீக்கள் முட்டையிட துவங்கும்.
அறிகுறிகள்:
- முட்டையிடும் பணித் தேனீக்கள் தங்களின் குட்டையான வயிற்றை அடை அறையினுள் நுழைத்து முட்டையிடுவதைச் சில நேரங்களில் பார்க்கலாம் (படம் 32)
- ஓர் அடை அறையில் பல முட்டைகள் தாறுமாறாக இடப்பட்டு இருக்கும் (படம் 33)
- முட்டைகள் அறையின் உட்புறச் சுவரிலும் இடப்பட்டு இருக்கும்
- சில அடை அறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட புழுக்கள் இருக்கும்
- உருவில் சற்று சிறிய பணித் தேனீ வளர்ப்பு அறைகளில் ஆண் தேனீக்கள் உருவாகும். புழு வளர்ச்சி அடைந்த பின்னர் இத்தகைய அறைகள் குவிந்த மெழுகு வளர்ச்சி அடைந்த பின்னர் இத்தகைய அறைகள் குவிந்த மெழுகு மூடிகளால் மூடப்பட்டு இருக்கும்
- இதனால் சிறிய உருவமுடைய பணித் தேனீ போன்று அளவுடைய ஆண் தேனீக்கள் உருவாகும்
- தேனீக்கள் சுறுசுறுப்பாகப் பணி ஆற்றாது
தீர்வு முறைகள்:
- தேனீ வளர்ப்போர் ராணி இழப்பு நேரிட ஒரு தேனீக் கூட்டத்திற்கு உரிய நேரத்தில் புது ராணித் தேனீயோ அல்லது மூடப்பட்ட ராணித் தேனீ வளர்ப்பு அறையோ அல்லது தேவையின் அடிப்படையில் மற்றொரு தேனீக் கூட்டத்திலிருந்து புழு அடையோ உரிய நேரத்தில் எடுத்துத் தர வேண்டும்
- தேனீக் கூட்டங்களை அவ்வப் பொழுது ஆய்வு செய்து ராணித் தேனீ கூட்டில் உள்ளதா? அதன் செயல்பாடு சரிவர உள்ளதா? எனக் கவனித்து வந்தால் முற்றிய பின்னர் புதிய ராணித் தேனீ கொடுத்தால் இக்கூட்டங்கள் ஏற்றுக் கொள்ளாது. மேலும் கொடுக்கப்பட்ட ராணித் தேனீயைக் கொன்றுவிடும். எனவே இத்தகைய கூட்டங்களை ஒரு வலுவான ராணியுள்ள கூட்டத்துடன் இணைத்து விடுவதே இப்பிரச்சனைக்கு உரிய தீர்வாகும்
தேனீக் கூட்டங்களை இணைத்தல்:
ஒவ்வொரு தேனீக் கூட்டத்திற்கும் தேனீப் பெட்டிக்கும் ஒரு தரப்பட்ட வாசனை இருக்கும். எனவே தேனீக் கூட்டங்களை நேரடியாக இணைத்தல் கூடாது. அவ்வாறு இணைத்தால் இரு தேனீக் கூட்டங்களைச் சேர்ந்த தேனீக்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இறக்க நேரிடும். எனவே தேனீக் கூட்டங்களை எடுத்தல் அவசியம். பொதுவாகத் தேனீக் கூட்டங்களை மதுர வரத்துக் காலங்களில் எளிதாக இணைக்கலாம்.
- ஒரு ராணியில்லாத கூட்டத்தை மற்றொரு ராணியுள்ள கூட்டத்துடன் சேர்க்க
- பணித் தேனீக்கள் முட்டையிடத் தொடங்கிய கூட்டத்தை ராணித் தேனீ நன்கு செயலாற்றும் மற்றொரு கூட்டத்துடன் சேர்க்க
- பிரிந்து வந்த கூட்டங்களைத் தாய்க் கூட்டத்துடன் இணைக்க
- வலுக் குறைந்த தேனீக் கூட்டங்களை இணைத்து ஒரு வலுவான தேனீக் கூட்டத்தை உருவாக்க
- பிரித்து வைத்த கூட்டத்தைத் தாய் கூட்டத்துடன் இணைக்க
- செயல் திறன் குறைவான கூட்டத்தை நன்கு செயலாற்றும் கூட்டத்துடன் இணைக்க
இணைக்கும் முறைகள்:
காகித முறை:
காகித முறை கொண்டு தேனீக் கூட்டங்களை எந்தக் காலக் கட்டத்திலும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இணைக்கலாம்
- முதலில் இணைக்கப்பட வேண்டிய கூட்டங்கள் மெழுகு அந்திப் பூச்சி, உண்ணி, நோய் ஆகியவற்றின் தாக்குதல் இல்லாமல் இருக்கின்றனவோ என ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ராணித் தேனீக்களின் செயல்பாட்டினையும் கண்டறிந்து செயல் திறன் குறைவான ராணியை நீக்க வேண்டும். ஆரோக்கியமான கூட்டங்களை மட்டுமே இணைக்க வேண்டும்
- இணைக்கப்பட வேண்டிய கூட்டங்களை நாளொன்றுக்கு ஒரு மீட்டருக்கு மிகாமல் படிப்படியாக நகர்த்தி தேனீப் பெட்டிகளை அருகாமையில் கொண்டு வரவும்
- தேனீப் பெட்டிகளின் நுழைவு வாயில்கள் ஒரே திசைப் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்
- ராணியுள்ள பெட்டியின் மூடியை நீக்கி விட்டு அதன் புழு அறையை ஒரு செய்தித்தாள் கொண்டு மூடவும்
- தாளின் மேல் ஆங்காங்கே ஒரு சிறு ஆணி அல்லது சிறு கத்தி கொண்டு சிறுசிறு துளைகள் போடவும்
- தாளின் மீது தேன் கரைசல் அல்லது சர்க்கரைப் பாகை இருபுறமும் சிறிது தடவினால் கூட்டங்களின் இணைப்பு விரைவாக நடைபெறும்
- விரித்து வைக்கப்பட்ட காகிதத்தின் மேல் ராணியற்ற இல்லது ராணி நீக்கப்பட்ட பெட்டியின் அடிப்பலகையை நீக்கிவிட்டு வைக்கவும்
- மேல் பெட்டியின் நுழைவு வழியை மூடி விடவும். அப்பொழுது தான் இணைப்பு முயற்சி முழு வெற்றி பெறும்
- தேனீக்கள் காகிதத்தில் இடப்பட்ட சிறு துளைகளைக் கடித்துப் பெரிதாக்கும். இத்தருணத்தில் இரு கூட்டங்களின் பெட்டியின் வாசனையும் ஒன்றாகிவிடும். இதனால் தேனீக்கள் தங்களுக்குள் சண்டை போடாமல் ஒன்று சேர்ந்து விடுகின்றன
- கடித்துக் குதறப்பட்ட காகிதத் தூள்கள் நுழைவு வழிக்கு விடும்
- இரு கூட்டங்களும் முற்றிலுமாக ஓரிரு நாட்களில் இணைந்து விடும்
- பின்னர் மேல் பெட்டியில் நல்ல நிலையில் உள்ள புழு அடைகளையும் தேன் அடைகளையும் எடுத்துக் கீழ்ப் பெட்டியில் வைத்து விட்டு மேல் பெட்டியை நீக்கி விடவும். அதன் பின்னர் அடிப்பலகையைச் சுத்தம் செய்யவும்
பிற முறைகள்:
- மதுர வரத்து காலங்களில் இணைக்கப்பட வேண்டிய கூட்டங்களுக்குப் புகை கொடுத்து தேனீக்களைச் சாந்தப் படுத்திய பின்னர் தேனீக்களைச் சட்டங்களிலிருந்து ஒரே பெட்டியில் உதறி ஒன்று சேர்க்கலாம்
- கூட்ட வாசனையை மறைக்கத் தேனீக்களின் மீது அத்தர் தெளித்தும், இரு வேறு கூட்டங்களை உடனடியாக ஒன்று சேர்க்கலாம்
தேனீக் கூட்டங்களைப் பிரித்தல்:
வலுவான தேனீக் கூட்டங்களை வளர்ச்சி பெறும் காலங்களில் பிரித்து வைத்துப் புதிய கூட்டங்களை உருவாக்கலாம். ஆனால் பொதுவாகத் தேனீக் கூட்டங்களைப் பிரித்து வைத்தால் தேன் மகசூல் குறையும். மதுர வரத்து துவங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே கூட்டங்களைப் பிரித்து வைத்தால் பிரித்த கூட்டங்களும் விரைந்து வளர்ந்து தேன் சேமிக்கும்
பிரிவினை ஏன்?
- கூட்டங்களின் எண்ணிக்கையைக் கூட்ட
- உபரியாக உருவாக்கப்பட்ட கூட்டங்களை விற்றுக் கூடுதல் வருமானம் ஈட்ட
- பிரியத் தயார் நிலையில் உள்ள கூட்டங்கள் பிரிந்து செல்லாது தடுக்க
- பிரித்து வைத்த கூட்டத்தை மீண்டும் தாய்க் கூட்டத்துடன் இணைத்துக் கூடுதல் தேன் மகசூல் பெற
பிரிவினை எப்பொழுது?
- வலுவான கூட்டங்களே பிரிக்க ஏற்ற கூட்டங்களாகும். இத்தகைய கூட்டங்களில் தேனீக்கள் அதிக எண்ணிக்கையில் மூடியின் உட்புறத்தில் பரவித் திரளாக இருக்கும் (படம் 34). மேலும் அடையின் மேல் தேனீக்கள் நெருக்கமாகவும் ஒன்றின் மேல் ஒன்று அமர்ந்து கொண்டும் இருக்கும். இத்தகைய தருணத்தில் கூட்டத்தைப் பிரிக்கலாம்
- போதிய மதுர வரத்தும் மகரந்த வரத்தும் இருக்கும் காலங்களில் மட்டுமே கூட்டங்களைப் பிரிக்க வேண்டும். மதுர வரத்து குறைவாக இருக்கும் காலங்களில் கூட்டங்களுக்கு அடிக்கடி சர்க்கரைப் பாகு கொடுப்பதன் மூலம் கூட்ட வளர்ச்சியைத் தூண்டி, ராணி அறைகளைக் கட்டச் செய்தும் கூட்டங்களைப் பராமரிக்கலாம்
- தேனீக் கூட்டத்தில் ஆண் தேனீக்கள் போதுமான எண்ணிக்கையில் இருக்கும் பொழுது மட்டுமே கூட்டங்களைப் பிரிக்க வேண்டும். அப்பொழுதுதான் புதிதாக உருவாகி வரும் ராணித் தேனீயின் புணர்ச்சி முயற்சிகள் வெற்றி பெறும்
- ராணித் தேனீயின் புணர்ச்சிப் பறப்பிற்கு சாதகமாக வானிலை இருத்தல் அவசியம். கூடுதலான மழை மற்றும் காற்று புணர்ச்சிப் பறப்பை தாமதப்படுத்தும். எனவே அத்தகைய தருணங்களில் கூட்டங்களைப் பிரிக்கக் கூடாது
- ராணி வளர்ப்பு அறைகள் கட்டும் காலமே கூட்டங்களைப் பிரிக்க ஏற்ற காலமாகும். கூடுதலாகத் தேன் சேகரிக்கும் ஆற்றல் குறைவான கொட்டும் தன்மை, குறைவான கூட்டம் பிரியும் சுபாவம் மற்றும் நோயற்ற தன்மை உடைய கூட்டங்களில் இயற்கையாக உருவாகும் ராணி வளர்ப்பு அறைகளைப் பயன்படுத்திப் புதிய தரமான தேனீக் கூட்டங்களை உருவாக்கலாம் அல்லது செயற்கை முறையில் நல்ல ராணித் தேனீக்கள் உருவாக்கியும் கூட்டங்களைப் பெருக்கலாம்
கலவைப் பிரிவு:
எந்த ஒரு தேனீக் கூட்டமும் பிரிப்பதற்கு தக்க வலு இல்லாது இருந்தால் ஒவ்வொரு தேனீக் கூட்டத்திலிருக்கும் ஒரு புழு அடையைத் தேனீக்களுடன் எடுத்து அவற்றை ஒரு பெட்டியில் வைத்து அதற்கு ஒரு மூடப்பட்ட ராணி வளர்ப்பு அறை கொடுத்தும் ஒரு புதுத் தேனீக் கூட்டத்தை உருவாக்கலாம்
ஏழ்மைப் பிரிவு:
பிரித்து வைத்த கூட்டங்களை தங்களுக்கென ஒரு ராணியை உற்பத்தி செய்து கொள்ள விடுதல் தவறு. அவ்வாறு விடுவதால் தோன்றும் ராணித் தேனீக்கள் சரிவரப் பேணி வளர்க்கப்படாததால் பொதுவாகச் செயல்திறன் குறைந்தவையாக இருக்கும். மேலும் அத்தகைய கூட்டங்கள் துரிதமாக வளர்ச்சி பெறுவதும் இல்லை
பிரிக்கும் நுட்பங்கள்:
- முதலில் பிரிக்கப்பட வேண்டிய கூட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்
- ஒரு தேனீக் கூட்டத்தைப் பிரிக்கும் பொழுது ராணித் தேனீயை அவசியம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்
- ராணித் தேனீ உள்ள அடையை வேறொரு தூய்மையான பெட்டியில் வைக்க வேண்டும். அத்துடன் ஒன்று அல்லது இரண்டு புழு அடைகளையும் ஒரு உணவு அடைகளையும் வைக்க வேண்டும். புழு அடைகளில் ராணி வளர்ப்பு அறைகள் இருந்தால் அவை அனைத்தையும் ஒன்று விடாது கிள்ளி எடுத்துவிட வேண்டும். புழு அடைகளுக்கு இடையில் காலிச் சட்டங்களையோ அல்லது மெழுகுத் தாள் பொருத்தப்பட்ட சட்டங்களையோ புதிய அடைகள் கட்டுவதற்காகக் கொடுக்க வேண்டும். பிரிக்கப்பட்ட கூட்டத்தில் தேன் அறை இருந்தால் அதனை ராணியுள்ள பிரிவுக் கூட்டத்திற்கே கொடுக்க வேண்டும்
- பின்னர் ராணித் தேனீ இருந்த பெட்டியில் மீதம் உள்ள புழு அடைகளில் நல்ல நிலையில் உள்ள மூடியிடப்பட்ட ராணி வளர்ப்பு அறை ஏதேனும் ஒன்றை மட்டும் விட்டு விட்டு பிற ராணி வளர்ப்பு அறைகளைக் கிள்ளி எடுத்துவிட வேண்டும்
- கூட்டத்தின் வலு மற்றும் ராணித் தேனீயைப் பிரித்த பின்னர் புழு அறையில் மீதமுள்ள புழு அடைகளின் எண்ணிக்கை ஆனியவற்றைப் பொறுத்து மேலும் ஒரு பிரிவு கூட எடுக்கலாம். ஆனால் அவ்வாறு பிரிக்கும் பொழுது ராணியின்றிப் பிரித்து வைக்கப்பட்ட ஒவ்வொரு கூட்டத்திற்கும் குறைந்தது இரண்டு புழு அடைகளாவது இருக்குமாறு பிரிக்க வேண்டும் (படம் 35)
- பிரித்து வைக்கப்பட்ட ராணி இல்லாத ஒவ்வொரு பிரிவிற்கும் மறுநாள் வேறு ஒரு நல்ல கூட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட மூடப்பட்ட ராணி வளர்ப்பு அறையை இரு புழு அறைச் சட்டங்களுக்கும் நடுவில் கொடுக்க வேண்டும். இவ்வாறு பிரித்த அன்றே ராணி வளர்ப்பு அறை கொடுக்காமல் மறுநாள் கொடுக்கும் பொழுது ராணி அறைகள் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன
- ராணியுள்ள பிரிவுக் கூட்டத்தைப் பிரித்த பின்னர் பிரிக்கும் முன் பெட்டி இருந்த இடத்தை விட்டு ஒரு அடி தள்ளியும் ராணியில்லாத கூட்டத்தை அறை அடி தள்ளியும் வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் பொழுது வயல் வெளித் தேனீக்கள் சற்று தட்டுத் தடுமாறி எல்லாக் கூட்டங்களுக்கும் சமமாகச் செல்லும் சில நேரங்களில் எல்லா வயல் வெளித் தேனீக்களும் ராணியுள்ள பெட்டியை நாடிச் சென்று விடும். இதனால் பிரித்து வைத்த கூட்டங்கள் நலிவுற்று அழிய நேரும். இதனைத் தவிர்க்கப் பிரித்து வைத்த மறுநாள் உணவு கொண்டு வரும் தேனீக்கள் பெட்டிகளுக்குள் எவ்வாறு செல்கின்றன எனக் கண்காணிக்க வேண்டும். தேனீக்கள் சமமாகச் செல்லவில்லையெனில் ராணியுள்ள கூட்டத்தை முன்பு பெட்டி இருந்த இடத்தைவிட்டு சற்று தள்ளியும், ராணி இல்லாத பிரிவுக் கூட்டங்களைச் சற்று அருகேயும் நகர்த்தி வைக்க வேண்டும்
- ராணியுள்ள பிரிவுப் பெட்டியை பெட்டி முன்பு இருந்த அதே இடத்திலும் ராணி இல்லாத பெட்டியை புதிய இடத்தில் வைப்பதால் வயல் வெளித் தேனீக்கள் அனைத்தும் ராணியுள்ள பிரிவிலும் தாதித் தேனீக்கள் அனைத்தும் ராணியில்லாத பிரிவிலும் தாதித் தேனீக்கள் அனைத்தும் ராணியில்லாத பிரிவிலும் தங்கி விடும்
- பிரித்து வைக்கப்பட்ட கூட்டங்களுக்கு தடுப்புப் பலகை ஒன்றினை புழு அடைகளுக்கு எடுத்துத் தருவது. கூட்டின் வெப்பநிலையைப் பராமரிக்கவும் எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் உதவும். மதுர வரத்து குறைவாக இருந்தால் சர்க்கரைப் பாகு அவசியம் தருதல் வேண்டும். ராணியில்லாத பிரிவுக் கூட்டங்களுக்குக் கூடுதலாகத் தாதித் தேனீக்களைத் தருவது புதிதாகப் பிறந்து வளரும் ராணிகளுக்குப் போதிய உணவு கிடைக்க வழி வகுக்கும்
- தேனீக்கள் சூழ்ந்துள்ள புழு அடையின் மீது சிறிது புகையை செலுத்துவதால் வயல் வெளித் தேனீக்கள் அடையை விட்டுப் பறந்து விடும். பறக்காமல் அடையில் தங்கும் தேனீக்களில் பெரும்பாலானவை தாதித் தேனீக்களே இத்தாதித் தேனீக்களை ஒரு தேனீ புருசு கொண்டு நீக்கி ராணியற்ற பிரிவிற்குக் கொடுத்து விடலாம்
பிரித்து வைத்த பெட்டிகளில் புதிய ராணி வந்துவிட்டதா என்பதை அறிய ஒரு வாரம் கழித்தும் பார்க்க வேண்டும். அத்தருணத்தில் அத்தகைய கூட்டங்கள் நிலை பெற்றுத் தனிக் கூட்டங்களாக உருவாக ஒரு புழு அடை ஒன்று கொடுக்க வேண்டும். புதிதாக வந்த ராணி புணர்ச்சி முடிந்து முட்டையிடத் தொடங்கியதை அறிய மீண்டும் ஒரு வாரம் கழித்துப் பார்க்க வேண்டும். |
|