|| | | ||||
 

முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்

Tamil English
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

பிடிக்கும் நுட்பங்கள்

இயற்கை தேனீக் கூட்டங்களைப் பிடித்தல்
சாதனங்கள்
வெற்றுத் தேனீப்பெட்டிகள், புகைக் குழல், ரப்பர் குழாய், வாழை நார், தேங்காய் நார், காலித் தீப்பெட்டி, அல்லது ராணித் தேனீக் கூண்டு, தண்ணீர், அரிவாள், உளி, சுத்தியல், கத்தி மற்றும் கயிறு.
தேனீக் கூட்டத்தைப் பிடிக்க குறைந்தது இருவராவது வேண்டும்.

கூடு கட்டும் இடங்கள்
இந்தியத் தேனீக்கள் பல இடங்களில் கூடு கட்டுகின்றன. குறிப்பாக இவை மரப் பொந்துகள், கிணறு மற்றும் பாழடைந்த கட்டிடச் சுவர்களில் உள்ள பொந்துகள், கல் கட்டுச் சுவர்கள், கற்குவியல்கள், பாறை இடுக்குகள், கற்றாழைப் புதர்கள், காலி மரப்பெட்டிகள், காலித் தெளிவுப் பானைகள், எலி வங்குகள், சிமெண்ட் குழாய்கள் மற்றும் கரையான் புற்றுகளில் அடுக்கடுக்காக அடைகள் கட்டுகின்றன.

பிடிக்க ஏற்ற கூட்டம்
வலுவான கூட்டங்களை மட்டுமே பிடிக்க வேண்டும். இத்தகைய கூட்டங்களில் தேனீக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து போய்க் கொண்டு இருக்கும். கூட்டிற்குள் நுழையும் தேனீக்களில் பாதிக்கு மேல் மகரந்தச் சுமையுடன் வரும் கூட்டங்களே பிடிக்க ஏற்ற கூட்டங்களாகும்.

பிடிக்க ஏற்ற காலம்
மதுர வரத்து காலங்களே கூட்டங்களைப் பிடிக்க ஏற்ற காலம் ஆகும். கூட்டிற்கு உணவு வரத்து கூடுதலாக இருப்பதால் இத்தருணத்தில் அடை கட்டுதல் மற்றும் புழு வளர்ச்சி துரிதமாக நடைபெறுகின்றது. எனவே, தேனீக்கள் இத்தகைய தருணத்தில் அவைகளுக்கு ஏற்படும் தொந்தரவையும், இடமாறுதல்களையும் பொறுத்துக் கொள்கின்றன.

அடைகளை நீக்குதல்

  • மரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட துவாரங்கள் இருந்தால் தேனீக்கள் வந்து செல்லும் ஒரு வழி நீங்கலாக, மற்ற துவாரங்களை அடைத்து விட வேண்டும்

ராணித் தேனீயைத் தேடுதல்

  • பொதுவாகப் பொந்தினுள் இருக்கும் ஓர அடைகளில் தேனும் மகரந்தமும் சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும். நடு அடைகளில் புழு வளர்ப்பு நடைபெறும் பெரும் பொழுது ராணி இந்தப் புழு அடைகளில் தான் இருக்கும்.
  • பொந்தினுள் கையை விட்டு அடைகளை ஒவ்வொன்றாகத் தேனீக்களுடன் பக்கவாட்டில் அசைத்துப் பெயர்த்து எடுக்க வேண்டும். இவ்வாறு முழுமையாக எடுக்கப்பட்ட ஒவ்வொரு அடையிலும் ராணித் தேனீ உள்ளதா எனக் கவனமாக அடையின் இருபுறமும் பார்க்க வேண்டும்
  • ஒரு வேளை ராணித் தேனீ தென்பட்டால் உடனே ராணித் தேனீயை ஒரு ராணித் தேனீ கூண்டிற்குள் அடைக்கலாம். இல்லையெனில் ஒரு காலி நெருப்புப் பெட்டியில் இட்டுத் தப்பிச் செல்ல இயலாத அளவு சிறு இடைவெளி விட்டு அடைக்க வேண்டும்

அடைகளைக் கட்டுதல்

  • பெயர்த்து எடுக்கப்பட்ட அடைகளைச் சட்டத்தில் பொருந்துவதற்கு ஏற்றபடி ஒரு கத்தி கொண்டு முதலில் தேன் பகுதியை நீக்கி விட்டுப் பின்னர் ஓரங்களை அளவாக அறுத்துச் சீர்படுத்த வேண்டும்
  • அறுக்கப்பட்ட பகுதியில் இருக்கும் புழுக்களை நீக்கி விட வேண்டும்
  • அறுத்துச் சீர் செய்யப்பட்ட அடைகளை எடுத்தவாறே சட்டத்தில் சரியாகப் பதப்படுத்தப்பட்ட போதுமான அளவு நீளமுள்ள வலுவான வாழை நார்களைக் கட்டபட பயன்படுத்த வேண்டும். இதற்கு முதலில் சட்டத்தின் மேல் கட்டை அடியில் வரும்படி, சட்டத்தைத் தலை கீழாகத் திருப்பி வைத்துக் கொள்ள வேண்டும். வெட்டிச் சீராக்கப்பட்ட அடைப்பகுதியை மேல் கட்டையின் உட்புறத்தில் பொருந்தும்படி வைத்து ஒருவர் சட்டத்தை அடையுடன் சேர்த்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். மற்றொருவர் வாழை நார் கொண்டு அடையை மேல் கட்டையுடன் இணைத்துக் கட்டி அடைவிளிம்பில் முதல் முடிச்சு போட வேண்டும். கட்ட பயன்படுத்தியது போக மிஞ்சியுள்ள நாரைக் கத்தரித்து விட வேண்டும். இவ்வாறு எட்டு வடிவில் முடிச்சு போடுவதால் அடை வலுவாகச் சட்டத்துடன் இணைக்கப்படுகின்றது
  • அடையின் மேல் விளிம்பிற்குச் சற்று கீழ் இரு துளையிட்டு அடைகளைச் சட்டத்தின் மேல் கட்டையுடன் இணைத்தும் கட்டலாம். மேலும், தேனீக்கள் அடையை மெழுகு கொண்டு சட்டத்துடன் இணைத்த பின்னர் அவை வாழை நாரைக் கடித்து எடுத்து நீக்கிவிடுகின்றன
  • அடைகள் கட்டப்பட்ட சட்டங்களைத் தேனீப் பெட்டியின் புழு அறையில் வரிசையாகத் தொங்க விட வேண்டும்

தேனீக்களை வெளியேற்றல்

  • அடைகளைப் பெயர்த்து ஒவ்வொன்றாக எடுக்கும் பொழுதே அதிர்ஷ்டவசமாக ராணித் தேனீ கிடைத்துவிட்டால் அதனைத் தேடும் சிரமமான வேலை முடிவு பெறுகின்றது
  • பிடித்து அடைக்கப்பட்ட ராணித் தேனீயைத் தேனீப் பெட்டியினுள் அடை கட்டித் தொங்க விடப்பட்டுள்ள சட்டங்களின் மீது வைத்துப் பெட்டியைப் பொந்தின் அருகே வைக்க வேண்டும். இதனால் பொந்திலிருக்கும் பெரும்பாலான தேனீக்கள், புழு அடைகளும் ராணித் தேனீயும் இருக்கும் இடத்தை நாடித் தாமகவே பெட்டிக்குள் வந்து புகுந்து கொள்கின்றன
  • தேனீப் பெட்டியை ஒரு சிறிய இடைவெளி விட்டு மூடி கொண்டு மூட வேண்டும். இந்த இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று அடைத் துண்டுகளை வைத்தும் தேனீக்கள் பெட்டியை நாடி வரும்படி செய்யலாம்
  • பொந்தும் பெரியதாக இருந்தால் புழு அடைக்கப்பட்ட சட்டத்தை பொந்தினுள் வைத்தும் தேனீக்கள் ஈர்க்கலாம்
  • ராணித் தேனீயை முதலில் கண்டு பிடிக்கும் பணித் தேணீக்கள் தங்கள் அடி வயிற்றிலிருக்கும் வாசனைச் சுரப்பியிலிருந்து ஒருவித வாசனையை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய வழிகாட்டம் தேனீக்கள் தங்களின் வயிற்றை உயர்த்திய நிலையில் வைத்துக் கொண்டு, இறக்கைகளை விசிறுவதன் மூலம் இந்த வாசனையை விரைவாகப் பரப்புகின்றன. இந்த வாசனையினால் ஈர்க்கப்பட்ட பிற தேனீக்கள், ராணித் தேனீ இருக்கும் இடத்தை நாடி வருகின்றன
  • பொந்தில் எஞ்சியிருக்கும் தேனீக்களைத் துணிவுடன் கையினால் சில முறை வழித்துப் பெட்டியினுள் விட்டு விடலாம். இவ்வாறு தேனீக்களைக் கையினால் அள்ளும் பொழுது சில சமயம் கொட்டும். அச்சமயங்களில் புகையைப் பயன்படுத்தித் தேனீக்களை வெளியேற்ற வேண்டும்
  • வராது தங்கியுள்ள சில தேனீக்களை வரவழைக்க சிறிது புகையைப் பொந்தினுள் செலுத்தலாம். இதனால் மீதமுள்ள அனைத்துத் தேனீக்களும் பெட்டிக்குள் வந்து விடும்
  • ஆடைகளை இவ்வாறு எடுக்கும் பொழுது ராணித் தேனீ கிடைக்காவிட்டால் அது பொந்தினுள் பிற தேனீக்களுடன் ஓரிடத்தில் கூடி இருக்கும். ஆகவே பொந்தினுள் கையை விட்டு திரளாகத் தொங்கும். தேனீக்களை கையால் தடவிக் கண்டு பிடித்துப் பல முறை பொறுமையாகவும் நிதானமாகவும் கையால் வழித்துத் தேனீப் பெட்டிக்குள் விட வேண்டும்
  • ஒவ்வொரு முறையும் வழித்துத் தேனீக்களை விடும் பொழுது ராணித் தேனீ உள்ளதா எனக் கவனமாகப் பார்க்க வேண்டும்
  • ராணித் தேனீ தென்பட்டால் சிறிது காலம் தாழ்த்தாது உடனே பிடித்து விட வேண்டும்
  • ஒரு சில நேரங்களில் ராணித் தேனீ சில பணித் தேனீக்களுடன் பொந்தின் உட்புறம் தங்கி விடும். அத்தகைய தருணத்தில் போதிய அளவு புகையைப் பொந்தினுள் செலுத்தி ராணித் தேனீயை வெளியேற்ற வேண்டும்
  • பொந்து ஆழமாக இருந்தால் புகைக் குழலுடன் ஒரு நீளமான ரப்பர் குழாயை இணைத்துப் புகையைப் பொந்தினுள் செலுத்தித் தேனீக்களை வெளியேற்ற வேண்டும்
  • எல்லாத் தேனீக்களும் பெட்டிக்குள் வந்தவுடன் தீப்பெட்டி அல்லது கூண்டிற்குள் அடைத்து வைத்துள்ள ராணித் தேனீயை விடுவித்து விட வேண்டும். அவ்வாறு விடுவிக்கும் பொழுது ராணித் தேனீயின் ஒரு சொட்டுத் தேனை விடுவதால் ராணித் தேனீ பறந்து தப்பிக்காது தடுக்கலாம்
  • இயற்கைக் கூட்டங்களைப் பிடிக்கும் பொழுது எல்லாக் கூட்டங்களிலும் ராணித் தேனீ அடையின் மீது கிடைக்காது. தேனீக்களைப் பொந்திலிருந்து வெளியேற்றுவதற்காகப் புகை கொடுக்கும் பொழுது ராணித் தேனியும் பிற தேனீக்களுடன் பெட்டியினுள் வந்து புகுந்துவிடும். சில சமயம் ராணித் தேனீ புகையால் சற்று மயங்கி பொந்தின் வெளிப்புறம் வந்து நிற்கும்
  • அப்பொழுது ராணித் தேனீயினை லாவகமாகப் பிடித்து விட வேண்டும். ஒரு சில சமயம் ராணித் தேனீ, பணித் தேனீக்களுடன் தப்பிப் பறந்து மரக் கிளைகளில் தங்கும். இத்தகைய கூட்டங்களைப் பிடிக்கும் முறையைப் பின்பற்றியே பிடித்துவிடலாம்
  • கூட்டம் பிடித்த இடத்திலேயே பிடித்த கூட்டம் நிலைபெறும் வரை பெட்டியை வைத்திருக்கலாம். ஒரு வேளை அந்த இடத்தில் போதிய பாதுகாப்பு இல்லையெனில் பெட்டியை விரும்பும் இடத்திற்கு எடுத்துச் செல்லாம்
  • கூட்டமாக பிடிக்கும் பொழுது ராணித் தேனீ சில சமயம் நசுங்கி இறக்க நேரிடலாம். இத்தகைய சமயங்களில் தேனீக்கள் தேனீப் பெட்டியினுள் வந்து சேருவது சிரமம். எனவே இத்தகைய கூட்டங்களை வெற்றிகரமாகப் பிடிக்க இயலாது

எடுத்துச் செல்லும் முறை:

  • அடை கட்டப்பட்ட சட்டங்களுடன் மீதமுள்ள காலிச் சட்டங்களை புழு வளர்ப்பு அறையில் தொங்க விட வேண்டும்
  • பெட்டியினை எடுத்துச் செல்லும் பொழுது சட்டங்கள் அசைவதை் தடுக்கக் கடைசி சட்டத்திற்கும் பெட்டிச் சுவருக்கும் இடையே ஒரு சிறு மரத்துண்டு அல்லது குச்சியைச் செருகி வைக்க வேண்டும்
  • பெட்டியை மூடிய பின்னர் ஒரு கயிறு கொண்டு பெட்டியின் பாகங்கள் அசையாதபடி இறுக்கமாகக் கட்ட வேண்டும். இறுதியாக நுழைவு வழியைத் துணி கொண்டு அடைக்க வேண்டும்
  • தேனீப் பெட்டியை இரவு நேரத்தில் வைக்கப்பட வேண்டிய இடத்திற்கு எடுத்துச் செல்லலாம்
  • பெட்டியை அவ்வாறு எடுத்துச் செல்லும் பொழுது அதிக அதிர்வுகளுக்கு உள்ளாகாமல் எடுத்துச் செல்ல வேண்டும்

பராமரிப்பு யுக்திகள்:

  • கடைசி அடைச் சட்டத்தை ஒட்டித் தடுப்புப் பலகையைத் தொங்க விட வேண்டும். ராணித் தேனீ தப்பிச் செல்வதைத் தடுக்க வாயில் தகட்டை நுழைவு வழி முன் பொருத்த வேண்டும். இதனால் பிடித்து அடைக்கப்பட்ட கூட்டங்கள் பெட்டியை விட்டு ஓடுவதைப் பெருமளவு தடுக்கலாம்
  • பிடித்த கூட்டத்தை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லும் பொழுது அவசியம் சர்க்கரைப் பாகு கொடுக்க வேண்டும்
  • அடிப்பலகையை மட்டும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டும்
  • கூட்டங்களுக்கு வேறு எவ்விதத் தொந்தரவும் தரக்கூடாது
  • எறும்புகளுக்கு பெட்டிக்குள் ஏறாதவாறு அவசியம் தடுக்க வேண்டும்
  • சில இடங்களில் சில கூட்டங்களைப் பிடிக்கும் பொழுது ஒரு நல்ல புழு அடை கூடக் கிடைக்காது. இத்தருணத்தில் வேறு ஒரு தேனீப் பெட்டியிலிருக்கும் ஒரு நல்ல புழு அடை எடுத்துக் கொடுத்து சர்க்கரைப் பாகு கொடுத்தால் கூட்டம் நிலைபெற்று விடும்

கூட்டம் நிலைபெற்றதற்கான அறிகுறிகள்:

  • பணித் தேனீக்கள் அடைகள் கட்டப் பயன்படுத்திய வாழை நாரைக் கடித்துத் துண்டுகளாக்கி வெளியே கொண்டு வந்து போடும்
  • ஓரிரு நாட்களில் பணித் தேனீக்கள் இறந்த புழுக்களை எடுத்து வந்து வெளியில் போடும்
  • வயல்வெளித் தேனீக்கள் கூட்டிற்குள் மகரந்தம் கொண்டு வரும் இவையனைத்தும் தேனீக் கூட்டம் புதிய இடத்தில் நிலை பெற்று விட்டதற்கான அறிகுறிகள் ஆகும். தேனீப் பெட்டிக்குள் நுழையும் வயல் வெளித் தேனீக்களில் பாதியாவது மகரந்தம் கொண்டு வருமேயானால் அத்தகைய கூட்டங்கள் நிச்சியமாக ஓடாத கூட்டம் நிலை பெற்ற பின்னரே தேனீபு் பெட்டியை மாலை நேரங்களில் ஆய்வு செய்வதற்குத் திறந்து பார்க்க வேண்டும்

பிடித்து வைத்த கூட்டம் ஓடுவது ஏன்?
பிடித்த கூட்டம் ஓடுவதற்கான முக்கியகாரணிகள்
பிடிக்கும் போது நடக்கும் நிகழ்வுகள்:

  • வைரஸ் நோயுற்ற இயற்கைக் கூட்டங்களையும் மெழுகுப் பூச்சி தாக்கிய கூட்டங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிக்கப்பட்ட கூட்டங்களையும் பிடித்து வைத்தல் பெட்டியில் தங்காது ஓடி விடும்
  • புழு அடைகளினுள் அதிக அளவு தூசி மண் விழுந்து விடுதல்
  • கூடுதலாக புகை கொடுத்தல்
  • அறுத்த அடைகளைச் சட்டத்தில் அதிக அளவு வாழை நார்
  • கூட்டம் பெட்டியினுள் வந்து சேரக் காலதாமதம் ஆகுதல்
  • அடைகளைப் பெயர்த்து எடுக்கும்பொழுது ராணித் தேனீ நசுங்கி இறத்தல்
  • பெட்டிகள் எடுத்து வரும் பொழுது அதிக அதிர்ச்சிக்கு ஆளாகுதல்

பிடித்த பின்னர் நடக்கும் நிகழ்வுகள்:

  • உணவு வரத்து குறைவான காலங்களில் கூட்டங்களைப் பிடித்தல்
  • வெயில் கீழே விழுதல்
  • அடிக்கடி பெட்டியைத் திறந்து பார்த்தல்
  • போதிய அளவு தேன் இல்லாத பொழுது சர்க்கரைப் பாகு கொடுக்காது இறத்தல்
  • அடிப்பலகையை அடிக்கடி சுத்தம் செய்யாது இருத்தல்
  • எறும்பு தாக்குதலுக்கு இலக்காகுதல்

பிரிந்து செல்லும் கூட்டங்களைப் பிடித்தல்:
கூட்டம் பிரியும் காலங்களில் பிரிந்து வரும் கூட்டங்கள் குறிப்பாக உயரம் குறைவான மரக் கிளைகளிலிருந்து வேலியிலும் காலி மண் பானை, பழைய பெட்டி, கல் இடுக்கு, மரப்பொந்து, மற்றும் கரையான் புற்றினுள்ளும் தங்கும். இத்தகைய கூட்டங்களை எளிதாகப் பிடிக்கலாம். பறந்து செல்லும் பிரிந்த தேனீக் கூட்டத்தின் மீது மணலை வீசுவதாலோ அல்லது நீர் தெளிப்பதாலோ பறப்பதை நிறுத்தி அருகிலுள்ள ஏதாவது ஒரு இடத்தில் தங்கவைக்க இயலும். முதன்மைக் கூட்டங்களே பிடித்த அடைக்க ஏற்றவை. இத்தகைய கூட்டங்களைப் பிடித்து வைக்கும் பொழுது அவை ஓடாது ஓரிடத்தில் தங்கி விரைந்து பெருகித் தேன் கொடுக்கின்றன.

  • கூட்டத்திற்கு சற்று மேலாக ஒரு தேனீப் பெட்டியின் புழு அறையில் வேறு ஒரு தேனீப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட ஓரிரு புழு அடைகளை வைத்துக் கூட்டங்களை ஈர்த்துப் பிடிக்கலாம்
  • புழு அடை இல்லாத பொழுது சர்க்கரைக் கரைவலைப் பெட்டியின் உட்புறமும் தேனீக் கூட்டத்தின் மீதும் தெளிப்பதால் கூட்டங்களை எளிதாக ஈர்த்துப் பிடிக்கலாம்
  • கூட்டத்தில் இருக்கும் தேனீக்கள் அனைத்தும் பெட்டியில் நுழைந்த பின்னர் புழு அறையை மூடி விட்டுப் பின்னர் நுழைவு வழியை அடைத்து விட்டு உடனே எடுத்துச் செல்லலாம்
  • பெட்டியினுள் அடை அஸ்திவாரத் தாள் ஒட்டப்பட்ட காலிச் சட்டங்களை வைக்க வேண்டும்
  • சர்க்கரைப்பாகு கொடுத்துத் தேனீக்களை அடைகள் கட்டச் செய்ய வேண்டும்
  • கூட்டம் நிலை பெற்ற பின்னர் ராணியை மாற்றி விட வேண்டும்

பிரிந்த கூட்டத்தைப் பிடிக்கும் முறைகள்:
எட்டும் இடம்:

  • மரத்தின் மீது ஏறிக் கிளையோடு அறுத்து எடுத்துப் பெட்டியில் வைத்தல்
  • கை கொண்டு பெட்டியினுள் தேனீக்களை வழித்துப் போடுதல்
  • ஓரிரு புழு அடைகள் கொண்டு ஈர்த்துப் பிடித்தல்

எட்டாத இடம்:

  • கூடுதல் விசையுடன் மரத் தெளிப்பான் கொண்டு நீர் தெளித்தால் தேனீக்களின் இறக்கைகள் நனைத்து தரையில் விழும், இவற்றை வலை கொண்டு பிடித்து விடலாம்
  • ஒரு நீளமான குச்சியின் நுனியில் ஒரு புழு அடையைக் கட்டி தேனீத் திரளிற்கு அருகே சென்றால் தேனீக் கூட்டம் புழு அடையில் ஏறிவிடும்
  • புகை கொண்டு தேனீக் கூட்டத்தை எட்டும் இடத்திற்கு விரட்டிப் பின்னர் பிடிக்கலாம்

பிடித்த கூட்டம் தங்கச் சில யுக்திகள்:

  • முதன்மை கூட்டத்தை மட்டுமே பிடிக்க வேண்டும்
  • தேனீ இருந்த பெட்டியில் கூட்டம் பிடிக்க வேண்டும்
  • ராணித் தேனீயைக் கை கொண்டு பிடிக்கக் கூடாது
  • கூட்டம் நிலை பெற வேறு ஒரு தேனீபு் பெட்டியிலிருந்து திறந்த நிலையில் உள்ள புழு அடை எடுத்துக் கொடுத்தல் வேண்டும்
  • பிடித்த கூட்டம் முனைப்புடன் பணியாற்றச் சர்க்கரைப் பாகு கொடுக்க வேண்டும்
  • ராணியின் ஒரு பக்க இறக்கைகளைப் பாதியளவிற்கு வெட்டுவதால் பிடித்த கூட்டம் ஓடாது
  • ராணி தப்பித்து ஓடாது தடுக்க நுழைவு வழியைச் சிறிதாக்க வேண்டும்
  • நுழைவு வழியின் முன் வாயில் தகட்டைப் பொருத்துவதால் ராணித் தேனீ வெளி வர இயலாது
  • புணராத ராணியெனில் நுழைவு வழியைச் சிறிதாக்கக் கூடாது

சில குறிப்புகள்:

  • சிறு சிறு பிரிவாய் கலைந்து ஒட்டும் கூட்டத்தைப் பிடிக்கக் கூடாது
  • ராணி இல்லாத கூட்டத்தைப் பிடித்தால் கூட்டம் தங்காது
  • நோயுற்றதால் ஓடிய கூட்டத்தை அடை கொடுத்து ஈர்த்தும் பிடித்தல் இயலாது. அவ்வாறு பிடித்தாலும் அத்தகைய கூட்டத்திலிருந்து பிற கூட்டங்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது
  • பொதுவாகப் பிரிந்து வந்த கூட்டத்தில் உள்ள தேனீக்கள் அதிகம் கொட்டாது
  • ஓடி வந்த கூட்டத்தில் உள்ள தேனீக்கள் கூடுதலாகக் கொட்டும்

பிரிந்து வரும் கூட்டங்களை ஈர்த்துப் பிடித்தல்:

  • கூட்டம் பிரிந்து செல்லும் காலங்களில் காலித் தேனீப் பெட்டிகளின் உட்புறம் தேன் மெழுகை உருக்கித் தடவி வைத்தால் பிரிந்து வரும் கூட்டங்களும் சில நேரங்களில் கூட்டை விட்டு வேறு இடம் தேடி ஓடிச் செல்லும் கூட்டங்களும் நாடி வந்து தானே பெட்டிகளில் புகுந்து கொள்ளும்
 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008