பயிர் பாதுகாப்பு :: வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

மஞ்சள் இலைப்புள்ளி நோய்: மைக்கோஸ்போரெல்லா மியூசிகோலா

தாக்குதலின் அறிகுறிகள்:
  • ஆரம்பத்தில் இலையின் மேற்புறத்தில் சிறு சிறு வெளிர் மஞ்சள் நிற அல்லது பச்சை நிற புள்ளிகள் தோன்றும்.
  • இப்புள்ளிகள் பின்‌‌‌‌‌பு விரைந்து நீள் வடிவத்தில் பழுப்‌‌பு நிறப் பெரும் புள்ளிகளாக மாறுகின்றன.
  • பின்பு இப்புள்ளிகளின் மையப்பகுதி வெளிர் சாம்பல் நிறமும் அதைச் சுற்றிலும் மஞ்சள் நிற குழி‌ப்பகுதி‌யும் தோன்றும்.
  • இச்‌ சிறு சிறு புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பரவுகிறது. பின் இவை காய்ந்து இலை முழுவதும் வாடிவிடும். இதனால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு வளர்ச்சி பெரிதும் தடைபடுகிறது.
  • நெருக்கமான நடவு, மண்ணில் அதிகக் களைகள் மற்றும் வடிகால் வசதியில்லாத மண் ஆகியவை இந்நோய்த் தாக்குதலைத் தீவிரப்படுத்தும். நோய்க்காரணிப் பூஞ்சாணம் இலையின் அடிப்பாகத்திலுள்ள நுண்ணிய துளைகளின் மூலம் பரவுகிறது.
           
  வெளிர் மஞ்சள் அல்லது பச்சை நிற புள்ளிகள்   நீள் வடிவத்தில் பழுப்‌‌பு நிறப் பெரும் புள்ளிகள்        
கட்டுப்படுத்தும் முறை:
  • நோய்த் தாக்கப்பட்ட இலைக‌ளை அகற்றி அழிக்கவும்.
  • இடைக்கன்றுகள், களைகளை அவ்வப்போது நீக்கி சுத்தமாக வைக்கவும்.
  • நெருங்கிய இடைவெளி, குறைந்த நடவு முறையைத் தவிர்க்கவும்.
  • சரியான வடிகால் வசதி அமைப்பதால் வயலில் நீர்தேங்காமல் தடுக்கலாம்.
  • கார்பென்டஸிம் 0.1% அல்லது புரப்பிகோனஸோல் 0.1% அல்லது மேன்கோ‌‌‌‌ஷெப் 0.25% ஏதேனும் ஒரு மருந்துடன் ஒட்டுந் திரவமான டிப்பால் சேர்த்து 10-15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் ஆரம்பித்ததிலிருந்து இலையின் அடிப்பகுதி‌யில் கரும்புள்ளிகள் தெரிந்த நாளிலிருந்து 3 முறை தெளித்து வரவேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015