பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

ஈரீயோஃபைட் சிலந்தி: அசேரியா கெர்ரிரோனிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

இலைகளில் மஞ்சள் நிறத் திட்டுகள்
பிசின் போன்ற திரவம் வெளிப்படும் காய்களின் மிது பழுப்பு நிறத்திட்டுகள் வி வடிவ அச்சு
  • 2-3 மாதங்களான குரும்பைகளில் வெளிர் மஞ்சள் நிற முக்கோண வடிவ நிறமாற்றங்கள் பிரியாந்த் எனும் இளந்திசு வளையத்திற்குக் கீழ் தோன்றும். இது ஆரம்ப அறிகுறியாகும்.
  • பின்பு இப்பகுதிகள் பழுப்பு நிறமாக மாற்றம் அடைகிறது. இச் சிலந்தியினால் அதிகம் தாக்கப்பட்ட குரும்பைகள் கீழே விழுந்து விடுகின்றன. தாக்கப்பட்ட குரும்பைகள் வளர்ச்சி அடைந்து இளங்காயாக மாறும்போது, பழுப்பு நிறப்பகுதியின் அளவு அதிகமாவதுடன், நீளவாக்கில் பல சிறிய வெடிப்புகளும் தோன்றுகின்றன.
  • வெடிப்புகளின் வழியே பிசின் போன்ற திரவம் வெளிப்படும்.
  • இதனால் காய்கள் சிறுத்துவிடுவதுடன், அதன் உள்ளே இருக்கும் பருப்பின் கன அளவும் குறைந்து விடுகின்றது. தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் உரிமட்டையில் ஏற்படும் வெடிப்பினால் பருப்புகள் கெட்டுப்போய்விடுகின்றன.

பூச்சியை அடையாளம் காணுதல்:

தென்னங் கரையானின் கூட்டம்
நுண்ணோக்கியின் பார்வையில் எரியோபிட் கரையான்

  • இச்சிலந்திகள் பருவமடைந்த பெண் பூக்களின் புல்லிவட்டத்தின் இடைவெளியில் காணப்படுகின்றன. இவை கருவுறாத பூக்களைத் தாக்குவதில்லை.
  • இச்சிலந்திகள் மிகச்சிறிய அதாவது 200-250 மைக்ரான் நீளமும், 36-52 மைக்ரான் அகலமும் கொண்ட அளவில் மட்டுமே இருப்பதால் கண்ணிற்குத் தெரிவதில்லை. இரு ஜோடி கால்கள் கொண்டவை.
  • இளம் மற்றும் பெரிய சிலந்தி வெளிர் நிறத்தில் நீளமான உடலமைப்பையும், புழு போன்ற வடிவமும் கொண்டவை. இதன் வாழ் நாட்கள் 7-10 நாட்களே என்றாலும் முட்டை, இரு புழுப்பருவங்கள் மற்றும் முதிர்ந்த சிலந்தி எனப் பல்வேறு படிகளைக் கொண்டது.

மேலாண்மை:
உழவியல் முறைகள்:

  • தாக்கப்பட்ட மரங்களிலிருந்து விழும் குரும்பைகளைச் சேகரித்து, அழித்துவிட வேண்டும்.
  • ஊடுபயிர் (சணப்பை - ஆண்டிற்கு 4 பயிர்கள்) மற்றும் தடுப்பு வரப்புப் பயிராக சவுக்கு மரங்களை வளர்ப்பதன் மூலம் இச்சிலந்தி மேலும் பல மரங்களை தாக்காமல் தடுக்கலாம்.
  • தேவையான அளவு நீர் பாய்ச்சுதல் அவசியம்.
  • பரிந்துரைக்கப்பட்ட அளவை விட யூரியா 1.3 கி.கி, சூப்பர் பாஸ்பேட் 2.0 கி.கி மற்றும் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் 3.5 கி.கி / மரமொன்றிற்கு / ஆண்டிற்கு அதிகமாக உரமிடுவதன் மூலம் சிலந்தித் தாக்குதலின் எதிர்ப்பு சக்தியை தென்னையில் அதிகரிக்கலாம்.
  • மேலும் போராக்ஸ் 50 கி + ஜிப்சம் 1.0 கி.கி + மேங்கனீசு சல்ஃபேட் 0.5 கி.கி / மரம் ஒன்றிற்கு / ஆண்டிற்கு என்ற அளவிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நுண்ணுட்டச் சத்துக் கரைசல் 200 மி.லி / மரம் போன்ற நுண்ணுட்டச் சத்துக்களை மண் வழியே கொடுத்தல் நல்ல பலன் தரும்.

இராசயன முறை:
சுற்றுச்சூழலுக்கு உகந்த மருந்தை வேருக்கு (மரத்திற்கு) அருகில் அளித்தல்:

  • சுற்று 1: அஸாடிராக்டின் 1% (5 மி.லி / 1லி நீரில் கலந்தது)
  • சுற்று 2: வேப்பஎண்ணெய் + டீப்பால் (30 மி.லி/1 லி நீரில் கலந்தது)
  • ேலும் டிரையஸோஃபாஸ் 40 EC 5 மி.லி/லி (அ) மோனோகுரோட்டோஃபாஸ் 36 WSC 2 மி.லி/லி (அ) கார்போசல்ஃபான் 25 EC. 2 மி.லி/லி ஏதேனும் ஒரு மருந்தை வேம்பு அஸல் 1% அதாவது 5 மி.லி/லி உடன் கலந்து வேருக்கு அருகே மண்ணில் இடவும்.
  • வேப்பம் புண்ணாக்கு 5 கி.கி / மரம் ஒன்றிற்கு / ஓராண்டிற்கு.

வேப்ப எண்ணெய்+ பூண்டுக் கரைசல் தயாரித்தல்:

  • 2% வேப்ப எண்ணெய் + பூண்டு கரைசல் 10 லி தயார் செய்ய, 200 மி.லி வேப்ப எண்ணெய் மற்றும் 200 கி பூண்டு, 50 கி சாதாரண சோப்பு போன்றவை தேவைப்படும். சோப்புக் கட்டியினை துண்டுகளாக்கி 50 மி.லி சற்று மிதமான சுடு நீரில் கரைக்க வேண்டும். 200 கி பூண்டினை அரைத்து, அச்சாற்றினை 300 மி.லி தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். 500 மி.லி சோப்புக் கரைசலை 200 மிலி வேப்ப எண்ணெய்யுடன் மெதுவாக சேர்த்துக் (ஊற்றிக்) கொண்டே வேகமாகக் கலக்க வேண்டும். இவ்வாறு தயாரித்த வேப்ப எண்ணெய் + சோப்புக் கரைசலுடன் பூண்டுச் சாற்றினைக் கலக்கவும். இந்த 1 லி கரைசலுடன் 9 லி நீர் சேர்த்து 10 லி 2% வேப்ப எண்ணெய் + பூண்டு கரைசலைத் தயாரிக்கவும்.

தென்னைக்கு இக்கரைசலை இடும் முறை:

  • 45 நாட்களுக்கு ஒரு முறை இக்கரைசலை (1 லி) தென்னம்பாளைகள், குரும்பை - இளங்காய்களின் மீது கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும். குறைந்த உயரமுடைய சிறிய மரங்களுக்கு ராக்கர் தெளிப்பான மூலம் தெளிக்கலாம்.
  • மழை இல்லாத காலங்கள் கொண்டைப்பகுதியில் நன்கு படுமாறு தெளிப்பது சிறந்தது.

முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நவடிக்கைகள்:

  • தொற்றுதலைத் தடுக்க காற்றுக் காலங்களில் மருந்து தெளிப்பதைத் தவிர்க்கவும்.
  • தெளிக்கும் போது கை மற்றும் மூக்கு, வாய் போன்றவற்றிற்கு முறையான பாதுகாப்பு உறை அணிவது அவசியம்.
  • தெளித்து முடித்த உடன் சோப்பு கொண்டு முகம், கை, கால் ஆகியவற்றை அலம்புவது மிக மிக அவசியம் ஆகும்.

உயிரியல் முறை:

  • சிலந்திப் பூச்சிகளைக் கொன்று அழிக்கும் எதிரிப் பூச்சிகளும் பூஞ்சாணங்களும் உள்ளன. ஹெர்சுட்டெல்லா தாம்சோனி மற்றும் வெர்டிசிலியம் லெகானி போன்ற பூஞ்சாணங்கள் சிலந்திகளைக் கட்டுப்படுத்துவதில் வல்லவை.
  • இவை தனியார் மூலம் வணிக ரீதியாக வளர்க்கப்பட்டு, சந்தைகளில் விற்கப்படுகின்றன.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015