பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் நோய்கள்

நடவு வயலில் நோய் நிர்வாகம்

1.குலை நோய்
2.இலைப் புள்ளி நோய்
3.பாக்டீரியா இலைக்கருகல் நோய்
4.இலையுறைக் கருகல் நோய்
5.இலையுறை அழுகல் நோய்
6.ஊதுபத்தி நோய்
7.தண்டழுகல் நோய்
8.தூர் அழுகல் நோய்
9.நெல்மணி நிறமாற்றம்
10.துங்ரோ நச்சுயிரி நோய்


1. குலை நோய்

அறிகுறிகள்

  • பயிரின் அனைத்து பகுதிகளும் (இலைகள், தண்டு, கணுப்பகுதி, கழுத்துப் பகுதி, கதிர்) பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும்.
  • இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும்.
  • தீவிர தாக்குதலின் போது, பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். இதையே “குலை நோய்” என்கிறோம். கதிர் வெளிவந்தவுடன் பயிர்கள் சாய்ந்துவிடும். 
  • கழுத்துப் பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர் மணிகள் சுருங்கியும்/பகுதி நிறைந்தும், கதிர்கள் உடைந்து தொங்கி கொண்டிருக்கும். இதை “கழுத்து குலை நோய்” என்கிறோம்.
  • கணுக்கள் கருப்பு நிறமாக மாறி, உடைந்துவிடும். இதை “கணு குலை நோய்” என்கிறோம்.
  • பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணுத் தாக்குதலும் ஏற்படுவதால், வெண் கதிர் அறிகுறி தோன்றும்.
  • கதிர்ப்பருவ நிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. ஆனால் கதிர்ப்பருவத்திற்கு பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானாலும், குறைந்த தரத்துடன் காணப்படும். கதிர் மற்றும் கதிர்க்கிளைகளில் உள்ள புள்ளிகள் பழுப்பு நிறமாக (அ) அடர்பழுப்பு நிறமாக இருக்கும். நெல் இரகங்களைப் பொருத்து, புள்ளிகளின் அளவும், வடிவமும் வேறுபடும்.
இலைகளில் பழுப்பு நிற விளிம்பு சாம்பல் நிற மையத்துடன் கூடிய நீள்புள்ளிகள் காணப்படும் கண் வடிவ புள்ளிகள் இலைகளில் காணப்படும்
கழுத்து குலை நோய் கணு குலை நோய்

சாதகமான சூழ்நிலை

  • வருடம் முழுவதும் குலை நோய் பூசண வித்துக்கள் காற்றில் இருக்கும்.
  • நெல் வளரும் மேட்டுப்பாங்கான இடங்களின் சுற்றுப்புற அமைப்பு மற்றும் வெட்பமண்டல பகுதிகள்.
  • மேக மூட்டமுள்ள வானம், தொடர் மழை மற்றும் துாரல்கள்.
  • அதிக அளவில் பயன்படுத்தப்படும் அம்மோனியம் சல்பேட் போன்ற தழைச்சத்து உரங்கள்.
  • காற்றின் ஈரப்பதம் (90 சதவிகிதம் மற்றும் அதற்கும் அதிகம்) மற்றும் ஈரமான இலைகள்.
  • வெப்பநிலை 25-28°C

மேலாண்மை முறைகள்

  • நோயற்ற பயிரிலிருந்து விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும்.
  • நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான ஆடுதுறை 36, ஐ.ஆர்.20 மற்றும் கோ 47 ஆகியவற்றைப் பயிர் செய்தல்.
  • கேப்டன்/கார்பன்டசிம்/திரம்/டிரைசைகலசோல் ஆகிய ஏதோ ஒன்றோடு 2.0 கிராம்/கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.
  • நாற்றங்கால் பருவம் : குறைந்த தாக்குதல் இருப்பின் கார்பன்டசீம் (அ) எடிஃபென்டாஸ் 1.0 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
  • துார் வைக்கும் முன் நிலை முதல் துார் வைத்தலின் மத்திய நிலை வரை : குறைந்த தாக்குதலாக (2-5%நோய் தீவிரம்) இருந்தால், கார்பன்டசீம் 1.0 கிராம்/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். நோய் தாக்குதல் காணப்பட்டால் தழைச்சத்து உரம் அளித்தலை தாமதமாக செய்ய வேண்டும்.
  • சூடோமோனாஸ் துகள் கலவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் 400 மி.லி. தண்ணீரில் கலந்து விதைப்பதால் குலை நோய் தாக்குதல் குறைகின்றது.
  • ஒரு கிலோ விதைக்கு திரம் அல்லது கார்பென்டாசிம் 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்தல்.
  • வயலில் நோய் தோன்றும்போது செடிகளுக்கு எக்டேருக்கு எடிபென்பாஸ் 500 மி.லி. அல்லது மேன்கோசெப் 1 கிலோ அல்லது கிட்டாசின் 250 கிராம் அல்லது டிரைசைக்ளோசோல் 400 கிராம் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • புழுதி நாற்றங்கால்களை தவிர்க்க வேண்டும்.
  • சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியுடன் உலர் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும். (10 கிராம்/கிலோ விதை)
  • 25 சதுர மீட்டர் பரப்பு உள்ள நாற்றங்காலில் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சூடோமோனஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியைத் துாவி நன்கு கலக்க வேண்டும். நாற்றுக்களின் வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
  • நடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் பொடியை 0.5% என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
புழுதி நாற்றங்காலை தவிர்க்கவும் வயல் மற்றும் வரப்புகளை சுத்தமாக வைக்கவும்
சூடோமோனாஸில் நாற்றுகளின் வேர்களை நனைக்கவும் சூடோமோனாஸ் உடன் விதை நேர்த்தி செய்யவும்

மேலே

2. இலைப் புள்ளி நோய்

அறிகுறிகள்

  • முதலில் இந்நோய் மிகச்சிறிய பழுப்புப் புள்ளிகளாகத் தோன்றும். பின் உருளை (அ) முட்டை வடிவமாக இருந்து வட்ட வடிவப் புள்ளிகளாக மாறிவிடும். 
  • இந்நோய் பழுப்பு நிறப் புள்ளிகளுடன் கதிர் மற்றும் கழுத்துப் பகுதியை தாக்கும். 
  • விதைகளும் தாக்கப்படுகின்றன. (விதை உறையின் மேலுள்ள புள்ளிகள் கருப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளிகளாக இருக்கும்). இவை மென்பட்டுத் துணி போன்று காணப்படும்.
  • நாற்றுக்கள் மடிந்தும் நோய் தாக்கப்பட்ட நாற்றங்கால் சற்று தொலைவிலிருந்து பார்க்கும்போது பழுப்பு நிற துரு ஏறிய பயிர்கள் போன்றும் காட்சியளிக்கும்.
  • விதை உறையில் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
  • விதை முளைப்பு திறன் பாதிக்கப்படுவதோடு நாற்றுக்கள் மடிந்துவிடும். தானியத் தரம் மற்றும் அதன் எடையும் குறைகிறது.
  • தீவிர நோய் தாக்குதலின் போது 50% மகசூல் குறைவு ஏற்படுகிறது.

    இலைகளில் வட்ட (அ) நீள்வட்ட புள்ளிகள் காணப்படும் இலைகளல் பழுப்பு நிற விளிம்புடன் கூடிய புள்ளிகள் காணப்படும் பூங்கொத்து, கதிர்களில் அடர் பழுப்பு (அ) கருப்பு புள்ளிகள் காணப்படும்

சாதகமான சூழ்நிலை

தழைச்சத்து மற்றும் சாம்பல்சத்து குறைபாடு கொண்ட நடவு வயலில் இந்நோயின் தீவிரம் சற்று அதிகமிருக்கும்.  நோய்க்கு அதிக சாதகமான காலநிலை நிலவும்போது 90 சதம் மகசூல் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

நோய் பரவும் முறைகள் மற்றும் ஏதுவான தட்பவெப்ப நிலை

  • நோயால் பாதிக்கப்பட்ட விதைகள் மூலம் பரவும் நெற்பயிர் குடும்பத்தை சார்ந்த மற்ற களை செடிகள் மீது இப் பூசணங்கள் உயிர் வாழ்கின்றன. விதைகளில் 4 வருடங்களுக்கு மேல் வாழக்கூடியவை. நோய் தாக்கப்பட்ட விதைகள், தன்னிச்சையாய் வளர்ந்த நெற்பயிர், நோய் தாக்கப்பட்ட நெற்பயிர், சில களைச் செடிகள் வயலில் நோய் பரவுவதற்கான முக்கிய மூலங்கள். காற்றுவழியாக நோயக்காரணி பரவுகிறது.
  • ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள மண்ணிலும், நீர் தேங்காத மண்ணிலும் இந்நோய் தாக்குதல் இருக்கும். ஆனால் நெற்பயிரை எளிதில் தாக்காது.
  • ஊட்டச்சத்து தனிமங்கள் பற்றாக்குறை இருக்கும் மண் அல்லது நஞ்சுப் பொருள்கள் தேக்கம் உள்ள மண்ணிலும் இந்நோய் பரவும்.
மேலாண்மை முறைகள்

  • வயல் மற்றும் வரப்புகளை களையின்றி வைத்திருப்பதால் நோயின் தாக்குதலைக் குறைக்கலாம்.
  • நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட இரகங்களான ஏடீடி 44, பீஒய் 4, கோஆர்ஹச் 1, கோ 44, காவேரி பவானி, டிபிஎஸ் 4 மற்றும் தனு ஆகியவற்றை பயிரிடுதல்.
  • நோயற்ற விதைகளைத் தேர்வு செய்து நாற்றங்கால் அமைக்க வேண்டும்.
  • பயிர் வளர்ச்சிக்கேற்ற முறையான ஊட்டச்சத்துக்களை அளித்தல் மற்றும் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கவேண்டும்.
  • கேப்டன் அல்லது திரம் @ 2.0 கிராம்/கிலோ விதையுடன் விதை நேர்த்தி செய்தல்வேண்டும்.
  • திரம் அல்லது கேப்டான் (2 கிராம், கிலோ) கொண்டு விதை நேர்த்தி செய்தல் மற்றும் எடிபென்பாஸ் (40 மி.லி.) மேங்கோசெப்-80 கிராம் அல்லது கேப்டோபால் 40 கிராம் 8 சென்ட் நாற்றங்காலுக்கும் நடவு வயலில் எக்டெருக்கு எடிபென்பாஸ்-500 மி.லி. அல்லது மேங்கோசெப் 1 கிலோ, தெளிப்பதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • பூத்தல் பருவம் மற்றும் அதற்கு பின் பருவங்களிலும், முன் வேளையில் அல்லது மதிய வேளையில் தெளித்தல் வேண்டும்.
  • கிரிசெப்ஃபுல்வின், நிஸ்டேடின், ஆரியோஃபங்கின் என்ற உயிர் எதிர்ப்புப் பொருள்கள் நாற்றுக்களில் தாக்குதலைத் தடுக்கின்றன.
  • டிரைசைக்லசோன் உடன் விதை நேர்த்தி செய்து அதனைத் தொடர்ந்து மேன்கோசெப் + ட்ரைசைக்லசோன் கலவையைத் துார் வைக்கும் பருவத்திலும் கதிர் உருவாக்கத்திற்குப் பின் நிலைகளிலும் தெளித்தல்வேண்டும்.
  • சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸை 10 கிராம்/கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து 2.5 கிலோ /எக்டர் என்ற அளவில் 100 லிட்டர் நீருடன் கலந்து 30 நிமிடங்கள் நாற்றுக்களை நனைத்து பின் நட வேண்டும்.
ஏ.டீ.டி. 44 எதிர்ப்பு திறன் இரகம் ஆரியோபஞ்சின் உயிர் கொல்லி மருந்து பயன்படுத்தவும்
ஆரியோபஞ்சின் உடன் விதை நேர்த்தி செய்யவும் சூடோமோனாஸ் உடன் விதை நேர்த்தி செய்யவும்

மேலே

3. பாக்டீரியா இலைக்கருகல் நோய்

அறிகுறிகள்

  • நோய்க்காரணியான பாக்டீரியா நெற்பயிரில் வாடல் அல்லது இலைக் கருகலை ஏற்படுத்தும்.  இது பெரும்பாலும் நட்ட 3-4வது வாரங்களில் தோன்றுகிறது.  சிரசக் வாடல் முழுச் செடியையோ அல்லது ஒரு சில இலைகளையோ வாடச் செய்யும்.
  • இலைக்கருகல், இந்நோயின் மற்றொரு முக்கியமான அறிகுறியாகும்.  இவ்வறிகுறி தூர்கட்டும் மற்றும் கதிர் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் காணப்படும்.  அவ்வளவாக புலப்படாத மற்றொரு அறிகுறி இலைகள் மஞ்சள் நிறமான மாறவது ஆகும்.  இந்த இலைகள் பின்னர் கருகியது போன்று தோன்றும்.
  • இலைக்கருகல் அறிகுறியின் ஆரம்ப நிலையில் இலேசான பச்சை நிறத்தில் நீர்க்கசிவுள்ள அல்லது மஞ்சள் நிறப்புள்ளிகள் இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் தோன்றுகிறது.  இதனால் இலை நுனி மற்றும் விளிம்புகள் காய்ந்து விடுகின்றது.
  • இத்தகைய தாக்கதல் விளிம்பகளின் வழியே பரவி இலையுறைக்கும் பரவுகின்றது.  நோய் தீவிரமாகும் போது இப்புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய வடுக்கள் அல்லது கருகிய திட்டுக்களை இலைப்பரப்பில் உண்டாக்குகிறது.  இவற்றிற்கு அருகில் உள்ள இலையின் பச்சை நிறப்பகுதி கிழிந்து காண்ப்படும். 
  • இவ்வாறு பாதிக்கப்பட்ட இலைகளில் வெண்மையான கூழ் போன்ற திவலைகள் இலையின்  ஓரங்களில் காணப்படும்.  காய்ந்த பின்னர் விரல்களால் தடவிப் பார்க்கும்போது இவை கரடுமுடரான பகுதிகளாகப் புலப்படும்.  நோய் முற்றிய நிலையில் அனைத்து இலைகளும் தாக்கப்பட்டு பயிர் முதிர்வதற்கு முன்பே காய்ந்துவிடும்.
  • பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி, சோதனைக் குழாயிலுள்ள தெளிவான நீரில் போட்டு பார்க்கும்போது இலையின் சாற்றுக் குழாயிலிருந்து வெண்மை நிறத் திரமாக பாக்டீரியா வெளிவருவதைக் காணலாம்.

    நாற்று வாடல் - கிரிசெக் இலைகள் நெளிந்து, விளிம்புகளில் மஞ்சள் நிறத்தில் காய்ந்து காணப்படும் இலை நரம்புகளை தவிர இலைகள் சுருண்டு, காய்ந்து காணப்படும்

நோய் பரவும் முறைகள்

முந்தைய எஞ்சிய பகுதிகளில் வித்துக்கள் தங்கியிருக்கும்.  பாசன நீர், மழை மற்றும்
காற்று மூலம் பரவுகிறது.  பறித்த நாற்றின் சேதமடைந்த வேரின் மூலமாக பாக்டீரியாக்கள் நெற்பயிரின் உட்புகுந்து பயிரைத் தாக்குகின்றன.

மேலாண்மை முறைகள்

  • நோய் எதிர்ப்பு திறனுடைய இரகங்களான ஐ.ஆர்.36,54,56, பொன்மணி மற்றும் பையூர் 1 ஆகியவற்றைப் பயிரிடலாம்.
  • சூடோமோனாஸ் கொண்டு ஈரவிதை நேர்த்தி செய்யலாம்.  60 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் சூடோமோனாஸ் தூளை நன்கு கலக்கி 60 கிலோ விதையை இக்கலவையில் 24 மணி நேரம் ஊறவைத்த பின் முளைகட்டி நாற்றங்காலில் விதைக்கலாம்.ள
  • சூடோமோனாஸ் துகள் தயாரிப்பு கொண்டு விதைநேர்த்தி செய்தல்.  நாற்றுக்களின் வேர் நனைத்தல் மற்றும் நட்ட 40 மற்றும் 50-ம் நாளில் இலை வழியாகத் தெளித்தல் (2 கிராம் துகள் தயாரிப்பு ஒரு லிட்டர் தண்ணீரில்) ஆகிய மூன்று முறைகளையும் பின்பற்றுவதால் பாக்டீரியா நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தை யூரிய மூலம் மூன்று, நான்கு முறையாகப் பிரித்து மேலுரமாக இடலாம்.  யூரியாவை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 5 : 4 : 1 என்ற விகிதத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்து மறுநாள் மேலுரமாக இடவேண்டும்.
  • ஐந்து சத வேப்பங்கொட்டைச் சாறு அல்லது 3 சத வேப்பெண்ணெய் கரைசல் அல்லது 10 சத வேப்பம் பிண்ணாக்குச் சாறு அல்லது 10 சத வேலி கருவேல் இலைப்பொழ சாறு அல்லது 20 சத சாணக்கரைசல், இவைகளில் ஏதேனும் ஒன்றை நோய் தோன்றும் தருணத்திலும் மீண்டும் 10 நாட்கள் இடைவெளியிலும் மறுமுறையும் தெளிக்கலாம்.
  • நோயின் தாக்குதல் தரம் 3 என்ற அளவில் இருக்கும்போது எக்டேருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1250 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

    வயலுக்கு வயல் பாசனம் செய்வதை தவிர்க்கவும் பயிர்களுக்கிடையில் சரியான இடைவெளி விடவும்
    அக்ரிமைசின் கரைசலில் 8 மணி நேரத்திற்கு விதைகளை ஊற வைக்கவும் வேப்பெண்ணெய் தெளிக்கவும்

மேலே

4. இலையுறைக் கருகல் நோய்

அறிகுறிகள்

  • இப்பூஞசாணம் பயிரைத் தூர்விடும் சமயத்திலிருந்து கதிர்விடும் சமயம் வரை தாக்குகிறது.  முதலில் இந்நோயின் அறிகுறிகள் தண்ணீருக்கு அருகில் உள்ள இலையுறைகளில் காணப்படும். 
  • முதலில் நீள வட்ட வடிவ பச்சை கலந்த பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றிப் பிறகு இப்புள்ளிகள் பெரிதாக சாம்பல் நிற மையப்பகுதியையும் ஒழுங்கற்ற பழுப்பு நிற ஓரப்பகுதியையும் கொண்ட புள்ளிகளாக மாறும், பிறகு இந்தப் புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மேல் நோக்கிப் பரவி இலை உறைக் கருகல் நோயை ஏற்படுத்துகிறது.
  • தொடாந்து, முழு இலையறையும் அழுகி பாதிக்கப்பட்ட இலையை இலேசாக இழுத்தாலும் கையோடு வந்துவிடும்.  மிக அதிகமாகத் தாக்கப்பட்ட நிலையில் செடியின் அனைத்து இலைகளும் கருகி செடியும் கருகிவிடுகிறது.
இலையுறையின் மீது நீள்வட்ட (அ) ஒழுங்கற்ற பச்சை கலந்த சாம்பல் நிற புள்ளிகள் காணப்படும் நீர் மட்டத்திற்கு அருகில் இலையுறை கருகி காணப்படும் கருகிய இலையுறை நிறமாற்றமாகிய இலையுறை

நோய் பரவும் முறைகள்

இந்த பூஞ்சாணம், ஸ்கிளிரோசியா (பூஞசாணவித்து) அல்லது பூஞ்சாண இலைகள் மூலம் பல மாதங்கள் மண்ணில் இருந்து நோயை உண்டுபண்ணுகிறது.  ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு தண்ணீர் மூலம் பரவுகிறது.

மேலாண்மை முறைகள்

  • சூடோமோனாஸ் துகள் தயாரிப்பு கொண்டு விதைநேர்த்தி செய்தல்.  நாற்றுக்களின் வேர் நனைத்தல் மற்றும் நட்ட 40 மற்றும் 50-ம் நாளில் இலை வழியாகத் தெளித்தல் (2 கிராம் துகள் தயாரிப்பு ஒரு லிட்டர் தண்ணீரில்) ஆகிய மூன்று முறைகளையும் பின்பற்றுவதால் பாக்டீரியா நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • எக்டேருக்கு கார்பென்டாசிம் 250 கிராம் அல்லது குளோரோதலானின் 1 கிலோ மருந்தை தண்டுப்பகுதி நன்கு நனையும்படி தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

    சூடோமோனாஸ் உடன் தொழு உரம் கலந்து இடவும்

மேலே

5. இலையுறை அழுகல் நோய்

அறிகுறிகள்

இந்நோய்த் தாக்குதலால் கதிர் வெளிவரும் தருணத்தில் கதிரைச் சுற்றி இருக்கும் கண்ணாடி இலையின் இலையுறையின் மேல் கருஞ்சிவப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்.  இதனால் இலையுறையை விட்டு கதிர்கள் வெளிவராது.  மேலும் வெளிவந்த கதிர்களில் மணிகள் நிறம் மாறி மணிகள் பதராகிவிடும்.

இலையுறைகளின் மீது ஒழுங்கற்ற புள்ளிகள் காணப்படும் இலையுறை நிறமாற்றத்துடன் காணப்படும் இலையுறை
உள்ளேயே கதிர்கள் இருக்கும்
கண்ணாடி இலையுறை அழுகி காணப்படும்

 நோய் பரவும் முறைகள்

இந்நோய் தாக்கப்பட்ட விதை மற்றும் காற்று மூலம் பரவும்.  பூஞ்சாண வித்துக்கள் மூலமும் பரவுகிறது.

மேலாண்மை முறைகள்

  • சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் நுண்ணுயிரிடுதல் மூலம் கதிரழுகல் தீவிரத்தை 20-42 சதவிகிதம் வரை குறைக்கிறது. பயிர் வளர்ச்சியைத் துாண்டி தானிய மகசூலை அதிகரிக்கிறது.
  • சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ் @ 10 கிராம்/கிலோ விதையுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து 2.5 கிலோ/பொருள்கள்/எக்டர் 100 லிட்டர் நீருடன் கலந்து அந்த கலவையில் நாற்றுக்களை 30 நிமிடங்கள் நன்கு நனையவிட வேண்டும்.
  • நடவு செய்து 30 நாட்களுக்குப்பிறகு “சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ்” @ 2.5 கிலோ/எக்டர் மண்வழி மூலம் 50 கிலோ தொழு உரம்/ மணலுடன் கலந்து அளிக்க வேண்டும்.
  • சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ்” 0.2% செறிவுடன் நடவு செய்து 45 நாட்களிலிருந்து 10 நாட்கள் இடைவெளியில் அளித்தல் வேண்டும்.
  • ட்ரைடென்மார்ஃப் மற்றும் பாஸ்பமிடான் இரண்டையும் கலந்து அளிக்கவேண்டும்.
  • மேன்கோசெப் மற்றும் பெனோமைல் போன்ற பூசணக் கொல்லிகளுடன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
  • கதிர் இலைப்பருவத்தில் கார்பன்டசீம், எடிபென்ஃபாஸ் அல்லது மேன்கோசெப் தெளிக்கவேண்டும்.
  • கார்பன்டசீம் 250 கிராம் (அல்லது) குளோரோதலோனில் 1 கிலோ (அல்லது) எடிபென்பாஸ் 1 லிட்டர்/எக்டர் ஆகிய ஏதோ ஒன்றை தெளிக்கவேண்டும்.
  • பெனோமைல் மற்றும் காப்பர் ஆக்ஸிக்லோரைடேன் இலைவழித் தெளிப்பு மேற்கொள்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

    சூடோமோனாஸை இலை வழியாக தெளிக்கவும் சூடோமோனாஸ் உடன் நாற்றுகளின் வேர்களை நனைக்கவும்
    பெனோமில் தெளிக்கவும் குளோரோதேலோனில் தெளிக்கவும்

மேலே

6. ஊதுபத்தி நோய்

அறிகுறிகள்

  • இலையுறையிலிருந்து வெளிவரும் கதிரானது நேரான, அழுக்கு நிறமுடைய, கடினமான, உருளை போன்ற அளவில் சிறியதாக, ஏறத்தாழ ஊதுபத்தி அல்லது அகர்பத்தி போன்று காணப்படும்.  சிறு நாற்றுகளின் இலைகள் ஒளிரும் சாம்பல் கலந்த வெண்மை நிறத்தில் காணப்படும். 
  • கதிர் வெளிவருவதற்கு முன்னர் நோய்காரணி பூஞ்சாணத்தின் இழைகளும், வித்துக்களும் இலை நரம்பிற்கு இணையாகக் கண்ணாடி இலையில் காணப்படும்.  நோய்த் தாக்கப்பட்ட கதிரில் நெல்மணிகள் தோன்றுவதில்லை.

    வெள்ளைப் பூசண இழை மற்றும் பூசண இழை சிதில்கள் கொண்டகதிர் அழுக்கு நிறத்துடனும், நீள் உருளை வடிவ ஊதுபத்தி போன்ற குச்சிகளாககதிர் வெளி வரும்

நோய் பரவும் முறைகள்

விதையின் வெளிப்புறம் ஒட்டியிருக்கும் நோய்க்காரணி பூஞ்சாணம் மூலம் இந்நோய் பரவுகிறது.

  • விதைகளை விதைப்பதற்கு முன் 50-540செ. வெப்பநிலையில் 10 நிமிடங்கள் வெந்நீரில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • சூரிய வெப்பத்தில் காயவைப்பதும் நோய்க்காரணி பரவவதைத் தடுக்கிறது.
  • நோயற்ற வயலிலிருந்து விதைகளைத் தேர்வு செய்யவேண்டும்.

மேலாண்மை முறைகள்:

  • விதைப்பதற்கு நோயற்ற நல்ல விதைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • கேப்டன் அல்லது தீரம் உடன் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும்.
  • விதைகளை விதைப்பதற்கு முன், 50-54செ வெப்ப அளவு கொண்ட வெந்நீரில் விதைகளை 10 நிமிடங்கள் நன்கு ஊற வைக்க வேண்டும்.
  • விதைகளில் ஏதேனும் நோய்க் காரணிப் பொருள்கள் காணப்பட்டால் அவற்றை வெப்பலுாட்டம் முறை (சூரிய ஒளி நேர்த்தி) மூலம் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடிகிறது.
  • வயலிலிருக்கும் நோயுற்ற பூங்கொத்துக்களை அகற்றி அழித்துவிட வேண்டும்.

    கேப்டான் மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்க விதைக்கும் முன் விதைகளை சூரிய வெப்பத்தில் உலர்த்தவும்

மேலே

7. தண்டழுகல் நோய்

அறிகுறிகள்

  • நெற்பயிரின் பின் வளாச்சிப் பருவங்களில் இந்நோய் ஏற்படுகிறது.  அதிகப்பழயான தூர்கள் தண்டுக்பகுதியைச் சுற்றி தோன்றுவது இதன் முதன்மை அறிகுறியாகும்.  நோய் முற்றும்போது இத்தூர்கள் நிறம் மாறி அழுகி விடுகின்றன. 
  • தண்ணீர் மட்டத்திற்கு அருகில் உள்ள இலையுறையில் சிறு, கருப்பு நிற ஒழுங்கற்ற வழவுடைய வடுக்கள் தோன்றுவது முதல் அறிகுறியாகும்.  நோய் தீவிரமடையும்போது நிறமாற்றம் நீர் ட்டத்திற்கு கீழேயும் மேலேயும் பரவும். 
  • பாதிக்கப்பட்ட செடியை வெட்டிபார்க்கும்போது தண்டுப்பகுதியில் சாம்பல் நிறப் பூஞ்சாண் வளர்ச்சி இருப்பதைக் காணலாம்.  இந்நோயால் பாதிக்கப்பட்ட செடிகள் எடை குறைந்த மணிகளைக் கொண்டிருக்கும்.  நாற்றுகள் இந்நோயால் பாதிக்கப்பட்டால் இலைகள் காய்ந்து விடுகின்றன. 
  • நடவு வயலில் பாதிக்கபட்ட செடிகள் தண்டின் அடிப்பகுதி நலிவடைந்து இருப்பதால் உடைந்து சாய்ந்து விடுகின்றன.  நோய் முற்றிய நிலையில் தண்டின் அடிப்பகுதியில் சுமார் 2-3 அங்குலம் வரை அடர் பச்சை நிறமடைந்து திசுக்கள் அழுகி விடுகின்றன.

    தண்டு அழுகல் தண்டு அழுகல்

நோய் பரவும் முறைகள்

முந்தைய பயிரின் எஞ்சிய கழிவுகள் மற்றும் பாசன நீர், பூஞ்சாண வித்துக்கள் பல மாதங்கள் வரை தங்கியிருந்து அடுத்த பயிர்ப்பருவம் வரை மண்ணில் இருக்கக்கூடியவை.

மேலாண்மை முறைகள்

  • பூஞ்சாண வித்துக்கள் நிலத்தில் அதிக நாட்கள் தங்கி உயிர் வாழக்கூடியது என்பதால் இதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.  நெற்பயிர் இறவைப்பயிராக சாகுபடி செய்யப்படுவதால் பயிரின் எஞ்சிய கழிவுகளைத் தீயிட்டு எரிப்பதும் கழனமான ஒன்றாகும்.  எனவே, வயலில் இருந்து தண்ணீரை முழுமையாக வடித்துவிட்டு நிலத்தை நன்கு வறண்டுவிடும்படிச் செய்தல் இந்நோயைப் பெருமளவில் கட்டுப்படுத்தும்.
  • சமச்சீரான அளவில் உரமிடுவது அவசியமான ஒன்றாகும்.
  • பாசன நீரை நோயுற்ற ஒரு வயலிலிருந்து நோயற்ற மற்றொரு வயலுக்கு பாய்ச்சக்கூடாது.
  • மேலும் பயிரின் வளர்ச்சிப்பருவத்தில் நீரை வெளியேற்றிவிட்டு செரசான் 0.1 சதக் கரைசல் கொண்டு நிலத்தை நனைப்பதும் இந்நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

    தண்டு அழுகல் தண்டு அழுகல்

மேலே

8. தூர் அழுகல் நோய்

அறிகுறிகள்

  • இந்நோய் நாற்றங்கால் மற்றும் நடவு வயலில் தாக்ககி சேதத்தை விளைவிக்கக் கூடியது. நாற்றங்காலில் தாக்குண்ட நாற்றுக்கள் பச்சையமிழந்து வெளிறி ஒல்லியாகவும் வழக்குத்துக்கு மாறான அல்லது அசாதாரண உயரத்துடனும் காணப்படும். 
  • இத்தகைய நாற்றுக்கள் நனியிலிருந்து கீழ்நோக்கி வாடத்தொட ங்கி இறுதியில் காய்ந்துவிடக்கூடும். நோய்த் தாக்குதலைத் தாக்குப்பிடித்து நாற்றங்காலில் இருக்கும் நாற்றுகள் நடவு வயலில் நட்டவுடன் காய்ந்து (இறந்து) விடுகின்றன.
  • நடவு வயலில் நோய்த்தாக்கப்பட்ட செடிகள் வேறுபட்ட, நீண்டு மெலிந்த தூர்களைக் கொண்டிருக்கும். இத்தகைய அராதாரண நீண்ட வளர்ச்சி கொண்ட தூர்கள் மற்ற ஆரோக்கியமான நிலையிலுள்ள செடிகளை விட சீக்கிரமாக பூக்கத் தொடங்கிவிடும். 
  • இவ்வாறு நோய்த் தாக்குதலுக்கு உட்பட்ட செடிகளின் கழுத்துப் பகுதியில் பூஞ்சாணத் தாக்குதல் காணப்படும்.  மேலும் அவை 2-6 வாரங்களில் இறந்துவிடும்.  தாக்கப்பட்ட செடியின் இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி காய ஆரம்பிக்கம்.  சில நேரங்களில் தரைமட்டத்திலிருந்து பயிரின 2-3 வது கணுவில் சல்லி வேர்கள் காணப்படும். 
  • நோய்த்தாக்கப்பட்ட தண்டுப் பகுதியைப்பிளந்து பாாக்கும்போது கணுப்பகுதியில் வெண்மை நிற பஞ்சு போன்ற பூஞ்சாண வளர்ச்சி தென்படும்.  பொதுவாக இந்நோய்த் தாக்கப்பட்ட செடிகள் பூப்பதற்கு முன்பாகவே இறந்துவிடும்.  சில நேரங்களில் கதிர் வெளிவந்தாலும் பூக்கள் மலட்டுத்தன்மை கொண்டவையாக இருக்கும்.

நோய் பரவும் முறைகள்

பொதுவாக விதையின் வெளிப்புறம் நோய்காரணி பூஞ்சாணம் ஒட்டிக்கொண்டிருந்தாலும் நிலத்திலிருக்கும் பூஞ்சாண வித்துக்கள் மூலமே இந்நோய் பரவுகிறது.

மேலாண்மை முறைகள்

  • நோய்த் தாக்கப்பட்ட விதைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • விதைகளை அக்ரசான் அல்லது செரசான் கொண்டு 1 கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
  • உப்பு நீரைப் பயன்படுத்தி எடைகுறைவான நோய் தாக்கப்பட்ட விதைகளை விதைக்குவியலிருந்து பிரித்தெடுக்க வேண்டும்.
  • விதைகளை விதைக்கும்முன் திரம், தியோபனேட்மிதைல், அல்லது பெனோமைல் போன்ற பூச்சிக்கொல்லிகளுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • விதை எடையில் 1-2% பெனோமைல் (அ) பெனோமைல் - டி பயன்படுத்தி விதை பூச்சு செய்ய வேண்டும்.

    பெனோமில் - விதை பூச்சு மருந்து உப்பு நீர் மூலம் சப்பைவிதைகளை நீக்கவும்

மேலே

9. நெல்மணி நிறமாற்றம்


அறிகுறிகள்

  • இந்நோய் பல்வேறு பூஞ்சாணங்களின் கூட்டுத் தாக்குதலினால் உண்டாகிறது. 
  • நோயினால் பாதிக்கப்பட்ட நெல்மணிகளின் மேல் கரும்பழுப்பு அல்லது சாம்பல் நிறத் திட்டுகள் காணப்படும். 
  • நெல் மணிகளின் வளர்ச்சி தடைபடுவதால் மணிகள் சிறுத்து சுருங்கிவிடும் அல்லது பதராக மாறிவிடும்.  இதனால் மககசூல் இழப்பு ஏற்படும். 
  • அரிசியிலும் அதன் வெளித்தோற்றம் பாதிக்கப்பட்டு சுவை கசப்பாக மாறிவிடும். 
  • இந்நோய் தாக்கிய விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கப்படுவதோடு நாற்றுகளும் வீரியமிழந்து காணப்படும்.

PaddyPaddy


நோய் பரவும் முறை

விதை மற்றும் காற்று மூலம் இந்நோய் பரவுகிறது.

மேலாண்மை முறைகள்

  • நோய் தாக்காத வயலிலிருந்து விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • சூடோமோனாஸ் கொண்டு ஈரவிதை நேர்த்தி செய்யலதம்.  60 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் சூடோமோனாஸ் தூளை நன்கு கலக்கி 60 கிலோ விதையை இக்கலவையில் 24 மணிநேரம்  ஊறவைத்த பின் முளைகட்டி நாற்றங்காலில் விதைக்கலாம்.
  • சூடோமோனாஸ் துகள் தயாரிப்பு கொண்டு விதைநேர்த்தி செய்தல்.  நாற்றுக்களின் வேர் நனைத்தல் மற்றும் நட்ட 40 மற்றும் 50-ம் நாளில் இலை வழியாகத் தெளித்தல் (2 கிராம் துகள் தயாரிப்பு ஒரு லிட்டர் தண்ணீரில்) ஆகிய மூன்று முறைகளையும் பின்பற்றுவதால் பாக்டீரியா நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • பூக்கும்தருணம் மற்றும் அதற்குப் பின் 15 நாட்கள் கழித்தும் மேன்கோசெப் மருந்தை 0.2 சதம் தெளிக்க வேண்டும்.

    நோயற்ற விதைகளை பயன்படுத்தவும் மேங்கோசெப் தெளிக்கவும்

மேலே

10. துங்ரோ நச்சுயிரி நோய்

அறிகுறிகள்

  • துங்ரோ நோய் உருண்டை வடிவ நச்சுயிரி மற்றும் நீண்ட சதுர நச்சுயிரி ஆகிய இருவித நச்சுயிரிகளால் உண்டாகிறது.  இவ்விரு நச்சுயிரிகளம் சேர்ந்து நோய் உண்டாக்கினால் நோயின்  தீவிரம் அதிகமாகும்.
    இந்நோய் நெற்பயிரின் எல்லா பருவத்திலும் தாக்கினாலும் இளம் பயிரை அதிகம் தாக்கும்.
  • இந்நோய் தாக்கப்பட்ட செடிகள் அளவில் சிறுத்து வளர்ச்சி குன்றி காணப்படும்.  இலைகள் மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறம் வரையிலான பல்வேறு நிறங்களில் காணப்படும்.  இலைகள் நிற மாறுதலும் இலையில் துரு பிடித்தது போன்ற கொப்புளங்களும் இலை நுனியிலிருந்து கீழ் நோக்கி பரவும். 
  • நுனி இலைகள் வெளிப்பக்கமாக சிறிது சுருண்டு காணப்படும்.  இளம் இலைகள் உருமாறி திருகிக் கொண்டு இருக்கும்.  குருத்து இலைக்கு அடுத்துள்ள இளம் இலைகளில் தேமல் போன்ற வெளிறிய திட்டுக்கள் தென்படும்.  புதிய இலைகளில் மஞசள் புள்ளிகள் அல்லது வெளிறிய நிறக் கோடுகள் காணப்படும். 
  • முதிர்ந்த இலைகள் துரு பிடித்தது போன்ற நிறத்தை அடைகின்றன.  ஓரளவு நோய் சகிப்புத்தன்மை கொண்ட இரகங்களில் நச்சுயிரின் தாக்குதல் பூப்பதை தாமதப்படுத்துகிறது.  நெற்பயிரின் இளம் பருவத்தில் இந்நோய் தாக்கினால் கதிர்கள் வராது அல்லது வெளிவரத் தாமதமாகும். 
  • கதிர்களில் மணிப்பிடிப்பு இல்லாமலோ அல்லது மிகக்குறைந்த மணிகளுடனோ காணப்படும்.  மணிகளின் எடை மிகவும் குறைவாக இருக்கம்.  நோய் சகிப்புத்தன்மை அறவே அற்ற இரகங்களின் ஆரம்ப காலத்தில் ஏற்படும் தாக்கதல் பயிரின் பூக்கும் பருவத்திற்கு முன்பே அவற்றை இறக்கச் செய்கிறது.

         
    நோயற்ற விதைகளை பயன்படுத்தவும்   மேங்கோசெப் தெளிக்கவும்

நோய் பரவும் முறைகள்

துங்ரோ நச்சுயிரி நோய் நெஃபோடெட்டிக்ஸ் வைரசென்ஸ் என்ற பச்சைத்தத்துப்பூச்சி மூலம் பரவுகிறது.  இதைத்தவிர நெ.நைக்ரோ பிக்டஸ், நெ.மலேயான்ஸ், ரெசீலியா டார்சாலிஸ் போன்ற தத்துப்பூச்சிகளும் இந்நோயினைப் பரப்பக்கூடியன.  இந்நோயை பச்சைத் தத்துப்பூச்சிகள் மட்டுமே பரப்ப முடியும்.  ஒரு பச்சை தத்துப்பூச்சி ஒரு நாளில் 40 செழகளுக்கு நோயினை பரப்ப வல்லது.

அயோடின் பரிசோதனை முறை

காலை வேளையில் சூரியன் உதயமாகும் முன்பு (சுமார் 6.00 மணி) நோய் தாக்கப்பட்ட செடியின் நுனியிலிருந்து இரண்டாவது அல்லது மூன்றாவது இலையை சுமார் 10 செ.மீ. நீளத்திற்கு எடுத்து அயோடின் கரைசலில் இலையின் அடிப்பாகம் சிறிது மூழ்கியிருக்குமாறு வைக்கவும்.
அயோடின் கரைசலில் வைத்த பின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து இலையின் கீழிருந்து மேலாக நரம்புகளில் நீல நிறமாக மாறி இருப்பதைக் காணலாம்.  இவ்வாறு இருப்பின் துங்ரோ நோய் தாக்கி உள்ளது என அறியலாம்.
அயோடின் கரைசல் தயாரிக்கும் முறை
அயோடின் - 2 கிராம்
பொட்டாசியம் அயோடைடு -  6 கிராம்
நீர் - 100 மிலி
டிஞ்சர் அயோழனை 10 மி.லி.இ 140 மி.லி. நீர் சேர்த்து கரைத்துக் கொள்ளலாம்.

மேலாண்மை முறைகள்

  • பச்சைத்தத்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 8 சென்ட் நாற்றங்காலுக்கு கார்போபியூரான் குருணை மருந்தினை 1.4 கிலோ வீதம் இட வேண்டும்.
  • நடவு வயலில் குருத்துக்கு 2 பச்சைத் தத்துப்பூச்சிகள் தென்பட்டால் எக்டேருக்கு மோனோகுரோட்டோபாஸ் 1000 மி.லி. அல்லது பென்தியான் 500 மி.லி. மருந்தினை தெளிக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகள்

  • நோய் எதிர்ப்பு திறன் கொண்ட இரகங்களைப்பயிர் செய்ய வேண்டும்.
  • நோய் எதிர்க்கு / தாக்கும் இரகங்கள்
    • குலைநோய்  - ஆடுதுறை 36,37,கோ 47, பொன்மணி, ஐ.ஆர்.64
    • துங்ரோ  - ஐ.ஆர்.36, ஆடுதுறை 37, ஐ.ஆர்.50, பொன்மணி மற்றும் வெள்ளைப்பொன்னி
    • பாக்டீரியா கருகல் - பொன்மணி, ஐ.ஆர்.72
  • நாற்றாங்காலை விளக்குக் கம்பம் அருகில் அமைக்கக்கூடாது.
  • நோய் தாக்கப்பட்ட பயிருக்கு அருகில் நாற்றங்கால் அமைக்கக் கூடாது.
  • வயல், வரப்புகளில் களைகள் இல்லாதவாறு சுத்தமாக வைத்திருக்கவும்.
  • அறுவடை செய்தவுடன், உழுது, அடிக்கட்டைகளை எடுத்து எரித்து விடவேண்டும்.
  • விளக்குப்பொறிகளை வயலில் வைக்கவேண்டும்.
  • சூடோமோனாஸ் கொண்டு ஈரவிதை நேர்த்தி செய்யலதம். 60 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் சூடோமோனாஸ் தூளை நன்கு கலக்கி 60 கிலோ விதையை இக்கலவையில் 24 மணி நேரம்  ஊறவைத்த பின் முளைகட்டி நாற்றங்காலில் விதைக்கலாம்.
  • சூடோமோனாஸ் துகள் தயாரிப்பு கொண்டு விதைநேர்த்தி செய்தல். நாற்றுக்களின் வேர் நனைத்தல் மற்றும் நட்ட 40 மற்றும் 50-ம் நாளில் இலை வழியாகத் தெளித்தல் (2 கிராம் துகள் தயாரிப்பு ஒரு லிட்டர் தண்ணீரில்) ஆகிய மூன்று முறைகளையும் பின்பற்றுவதால் பாக்டீரியா நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
  • பச்சைத்தத்துப் பூச்சி மற்றும் துங்ரோ நச்சுயிரிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட நெல் இரகங்களை (ஏடிடி 37, ஐ.ஆர்.72) பயிர் செய்யலாம்.
  • ஆரம்ப நிலையில் நோய் தாக்கிய பயிர்களை வேருடன் எடுத்து அழிக்க வேண்டும்.
  • நாற்றங்காலில் நோயை பரப்பும் பச்சைத் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் குருணையை 8 சென்ட் நாற்றங்காலுக்கு 1400 கிராம் என்ற அளவில் விதைத்த 10ம் நாள் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 22 மி.லி.மருந்தை 16 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 10, 20ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.
  • நடவு வயலில் ஒரு குத்துக்கு ஒரு பச்சை தத்துப்பூச்சி என்ற அளவில் காணப்பட்டால், மோனோகுரோட்டோபாஸ் மருந்துகளில் எதேனும் ஒன்றை நட்ட 15 மற்றும் 30வது நாளில் தெளிக்கவும்.
    • மோனோகுரோட்டோபாஸ் (86 டபிள்யூ எஸ் சி) - 400 மி.லி.
    • பென்தியான் (100 இசி) - 200 மி.லி.

      த.வே.ப.க. - விளக்குப்பொறி ஏடீடி 37- எதிர்ப்புத்திறன் கொண்ட ரகம் கார்போபியூரான் இடவும்

மேலே

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014