பயிர் பாதுகாப்பு ::சர்க்கரைக் கொல்லிபயிரைத் தாக்கும் பூச்சிகள்

சர்க்கரைக் கொல்லி

சாறு உறிஞ்சும் பூச்சிகள்
மாவுப்பூச்சி

இளம் மற்றும்  முதிர்ந்த மாவுப்பூச்சிகள் இளம் தளிர்களிலும்,  இலையின் அடிப்பகுதியிலும்  அடாத்தியாய் இருந்து கொண்டு சாற்றினை உறிஞ்சி உண்டு சேதம் பண்ணுகின்றன. இலைகள் மஞ்சள் நிறமாக மாறி சிறுத்துக் காய்ந்து, உதிர்ந்து விடுகின்றன. மாவுப்பூச்சி வெளியேற்றும் தேன் போன்ற திரவம் இலைகளின் மேல் கரும்பூசணத்தை  உருவாக்குகிறது. இப்பூச்சிகள் சிறிதாகவும் மென்மையான உடல் முழுவதும் வெள்ளை நிற மாவு போன்ற பூச்சினால் சூழப்பட்டிருக்கும்.

மாவுப்பூச்சிபாராகாக்கஸ்  மார்ஜினேட்டஸ்

அசுவினி

பெரும்பாலும் ஆண்டு முழுவதும் காணப்படும் இப்பூச்சி, அடர் மஞ்சள் நிறத்தில்  காணப்படும். இளம் தளிர்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள்  இலையின் அடிப்பாகத்திலும் குருத்துப் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். இவை இலைச் சாற்றை உறிஞ்சுவதால் தாக்கப்பட்ட இளங்குருத்து மற்றும் இலைகள்  சிறுத்தும், சுருங்கியும், தடித்தும் வளைந்தும்  காணப்படும். பயிர் வளர்ச்சி குன்றி காணப்படுவதோடு பூச்சிகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து சுரக்கும் தேன் போன்ற திரவத்தால் இலைகளின் மேல் பரப்பில் கரும்பூசண வளர்ச்சி தென்படும். இதனால் எறும்புகளின் நடமாட்டம் தாக்கப்பட்ட செடிகளில்  அதிகமாகக் காணப்படும்.

ஓலியன்டர் அசுவினி – ஏபிஸ் நீ


சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கான மேலாண்மை முறைகள்

  • கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்கள் துறையில் பயிரிடப்பட்டுள்ள சர்க்கரைக் கொல்லி தாவரங்களில் மாவுப் பூச்சியின் எதிரிகளான சிம்னஸ் மற்றும் கிரிப்டோலிமஸ் மான்ட்ரோசெரி எனப்படும் பொறி வண்டுகள்  அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது. இப் பொறி வண்டின் புழுக்கள் மற்றும் வண்டுகள் மாவுப்பூச்சிகளை அதிகளவில் அழிக்கின்றன. ஒரு தனிப்புழுவானது 250 சிறிய  மாவுப்பூச்சிகளை உண்ணக் கூடியது. இவ்வண்டானது 4 மி.மீ. நீளமுள்ள ஆரஞ்சு நிறமுடைய தலை மற்றும் பின்பகுதியைக் கொண்ட அடர் பழுப்பு நிற பொறி வண்டாகும். இதன் புழுவானது ஒரு செ.மீ. நீளம் வரை வளரக் கூடியது. மேலும் மெழுகு போன்ற நீட்சிகளால் சூழப்பட்டுள்ளதால் மாவுப்பூச்சியைப் போன்றே தோற்றமளிக்கும். மாவுப்பூச்சிகளின் எண்ணிக்கை குறைவாக  இருக்கும் பொழுது இவை அசுவினி போன்ற மற்ற  சாறு உறிஞ்சும் பூச்சிகளைத் தின்று உயிர் வாழ்கின்றன. தாய் வண்டுகள் பஞ்சு போன்ற முட்டை உறையில் 400 முதல் 500 வரையிலான மஞ்சள் நிற முட்டைகளை இடுகின்றன. இம்முட்டைகள் 20° செல்சியஸ் வெப்பநிலையில் 5 நாட்களில் பொரித்து இளம் புழுக்களாக வெளிவருகின்றன. புழுப் பருவமானது 12 முதல் 17 நாட்கள் வரையில் நீடிக்கும். இப்புழுக்கள் மாவுப்பூச்சிகளின் முட்டைகள், இளம் தாவரங்கள் மற்றும் அதன் தேன் போன்ற திரவம் ஆகியவற்றை உண்கின்றன. முதிர் பூச்சிகள் 50 முதல் 70 நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன. எனவே, இத்தகைய நன்மை செய்யும்  பொறிவண்டுகளை சர்க்கரைக் கொல்லி பயிரிடப்படும் தோட்டங்களில் பாதுகாக்க வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும்.

  • இப்பொறிவண்டினைத் தவிர, அசிரோபேகஸ் பப்பாயே   எனப்படும் ஒரு வகை ஒட்டுண்ணியை ஒரு சிறிய கிராமத்திற்கு 100 ஒட்டுண்ணிகள் என்ற அளவில் விட்டும் சர்க்கரைக் கொல்லியைத் தாக்கும் மாவுப் பூச்சியினை எளிதில் கட்டுப்படுத்தலாம். இந்த ஒட்டுண்ணிகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் அனைத்துக் கல்லூரிகள் ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையங்களிலும் உற்பத்தி செய்யப்பட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே  சர்க்கரைக் கொல்லியைத் தாக்கும் பப்பாளி மாவுப் பூச்சியின் தாக்குதல் தங்களின் வயலில் தென்படும் விவசாயிகள், அருகிலுள்ள வேளாண்மைக் கல்லூரியிலோ, ஆராய்ச்சி நிலையங்களிலோ தெரிவித்து, இந்த ஒட்டுண்ணியைப் பெற்றுப் பயன்படுத்தி தங்களின் பயிரைப் பாதுகாக்கலாம்.

  • எறும்புகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இப்பூச்சிகள் பரவுவதைக் குறைக்கலாம்.

  • இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு 5 சதம் ஏக்கருக்கு  என்ற அளவில் கலந்து  தெளிக்க  வேண்டும்.

  • பூச்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் பொழுது ஏக்கருக்கு 400 மி.லி. மீத்தைல் டெமட்டான் அல்லது டைமெத்தோயேட் மருந்தைத் தெளிக்க வேண்டும்.

  • மாவுப்பூச்சியினைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ மீன் எண்ணெய் சோப்பை 40 லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்க வேண்டும்.

இலை உண்ணும் புழுக்கள்
இலைப் புழுக்கள்

இதன் புழுக்கள் இலைகளை உண்டு சேதம் விளைவிக்கின்றன. தாய் வண்ணத்தப் பூச்சி  இளம் இலைகளின்  அடிப்பகுதியில் நீளமான வெள்ளை நிற முட்டைகளை இடுகின்றன. புழுக்கள் வெண்மையாகவும்  வண்ணமாகவும் காணப்படும். கூட்டுப்புழு பொன் நிறத்தில் காணப்படும். வண்ணத்துப் பூச்சி மினுமினுப்பான கருமை நிறத்தில் இருக்கும்.

முட்டை புழு கூட்டுப்புழு அந்துப்பூச்சி

காவடிப்புழு

       இதன் புழுக்கள் இலைகளை அதிக அளவில் உண்டு சேதம் விளைவிக்கின்றன. அந்துப் பூச்சிகள் வெளிறிய நீலநிற இறக்கைகளோடு காணப்படும்.

புழு புழு க்களால் சேதப்படுத்தப்பட்ட இலைகள் அந்துப்பூச்சி

கம்பளிப் புழு

புழுக்கள் இலைகளின்  அடிப்பகுதியில் கூட்டமாகக் காணப்படும். இலைகளை அதிக அளவில் உண்பதால் சேதம் மிகுதியாகக் காணப்படும். அந்துப் பூச்சியின் முன் இறக்கைகள் பழுப்பு நிறத்திலும்,  பின் இறக்கைகள் மஞ்சள்  நிறத்திலும் காணப்படும். புழுக்கள் ரோமங்களுடன் அடர்பழுப்பு நிறத்தில், மேல்புறத்தில் மஞ்சள் நிறக் கோடுகளுடன் காணப்படும்.
இலை உண்ணும் புழுக்கள் மேலாண்மை

  • முட்டைகள், புழுக்கள் மற்றும்  கூட்டுப்புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
  •  பூச்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போதே வேப்பெண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டைப் பருப்பு சாறு தெளித்துக் கட்டுப்படுத்தலாம். பூச்சி தாக்குதல் அதிகமாகக் காணப்படும்பொழுது குளோர்பைரிபாஸ் 20 EC ஏக்கருக்கு 400 மி.லி. என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
  • மூலிகைப் பயிராக இருப்பதால் சர்க்கரைக் கொல்லி மருந்துப் பயிரை இயற்கை முறையில் பயிர் செய்வது ஏற்றுமதியை அதிகரிக்க உகந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் உலக சந்தையில் சர்க்கரைக் கொல்லி இலைக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இப்பொறிவண்டுகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் மற்றம் தாவரப் பூச்சிக் கொல்லிகளைப்  பயன்படுத்தி சர்க்கரைக் கொல்லியைத் தாக்கும் பூச்சிகளை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
Updated on March, 2014


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014