தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: செலரி
  செலரி த.வே.ப.க உதகை – 1 இயற்கை வேளாண்மையில் செலரி சாகுபடி

செலரியின் சிறப்பியல்புகள் :

  • உதகை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் பராமரிக்கப்பட்ட 6 வகை செலரி வகைகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டது
  • இந்த செலரி வகையானது சராசரியாக 72.3 செ.மீ உயரம் வளரக்கூடியது. இது குறுகிய கால பயிர். இதன் வயது 115 நாட்கள். இது ஒரு உயர் விளைச்சல் இரகம். சராசரி மகசூலாக 30.5 டன், ஹெக்டர் கொடுக்கக்கூடியது. நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்படும் உள்ளூர் வகையைக் காட்டிலும் 30.3 சதம் கூடுதல் மகசூல் தரவல்லது. இதன் விதை மகசூல் 1.40 டன், ஹெக்டர். விதைகள் சிறியது. பழுப்பு நிறம் கொண்டது.
  • விதைகளில் 1.71 சதவீதம் எண்ணெய் கொண்டது. ஆனால் உள்ளூர் வகை விதையில் எண்ணெய் 0.56 சதவீதம் மட்டும் உள்ளது. மேலும் நல்ல நறுமணம் கொண்டதால் மணமூட்டும் பொருளாக பயன்படுகிறது. இலைகள் அதிக வைப்புத்திறன் கொண்டது.
  • மலைப் பகுதிகளில் 8 நாட்கள் வைப்புத்திறன் கொண்டிருப்பதால் தொலைதூர சந்தைகளுக்கு எடுத்துச்செல்ல உகந்ததாக உள்ளது.
  • 100 கி. இலைகளில் அதிக அளவு புரத சத்து (1 கி), மாவுச்சத்து (3கி), சோடியம்  (88 மி.கி), கால்சியம் (4 சதம்) மற்றும் இரும்புச்சத்து (1 சதம்) உள்ளது. இலைகள் அடர் பச்சை நிறமுடன், சிறந்த சமையல் தரம் வாய்ந்தது.
  • இதிலிருந்து உடனடி சூப் மற்றும் உடனடி மசாலா பொடி, குழம்பு, சென்னா மசாலா மற்றும் வெஜிடபிள் குருமா தயார் செய்யலாம். இலைப்புள்ளி நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.
  • வேர் நூற்புழு, வெள்ளை ஈ மற்றும் அசுவிணி பூச்சிகளுக்கும் எதிர்ப்புத்திறன் கொண்டது. வருடம் முழுவதும் நீர்போகம் (பிப்ரவரி – ஏப்ரல்), கார்போகம் (ஏப்ரல் - ஜ%ன்) மற்றும் கடை போகம் (ஆகஸ்ட் – அக்டோபர்) ஆகிய பருவங்களில் சாகுபடி செய்யலாம். கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரம் கொண்ட எல்லா மலைப்பிரதேசங்களிலும் பயிர் செய்யலாம்.

மருத்துவ குணங்கள்:

  • செலரியின் இளந்தளிரிலும் தண்டிலும் உள்ள தாது வைட்டமின் சத்து மற்றும் புரதச் சத்து ஆகியவைகளினால் இது ஒரு முக்கியமான மூலிகை செடிகளில் ஒன்றாக அறியப்படுகிறது.
  • இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஒரு சிறந்த நறுமண சக்தியை கொண்டுள்ளது. மனிதனின் மூளைப் பகுதியை திறம்பட செயல்படுத்தும் தன்மை இந்த நறுமண எண்ணெய்க்கு உண்டு.
  • இது முடக்கு வாதம் கீழ் முடக்கு வாதம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் இது மலமிளக்கியமாக பயன்படுகிறது.

செலரி த.வே.ப.க உதகை – 1 ல் உள்ள ஊட்டச்சத்துக்கள்:


வ.எண் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் செலரி த.வே.ப.க உதகை – 1 உள்ளூர் இரகம்
1 புரதம் மி.கி / 100 கி 1.0 0.8
2 கார்போஹைட்ரேட் மி.கி / 100 கி 3.0 2.0
3 கொழுப்பு மி.கி / 100 கி 0.2 0.1
4 நார்சத்து மி.கி / 100 கி 2.0 1.0
5 சர்க்கரை மி.கி / 100 கி 2.0 1.0
6 சோடியம் மி.கி / 100 கி 88.0 65.0
7 வைட்டமின் A (%) 10.0 7.0
8 வைட்டமின் C மி.கி / 100 கி 6.0 4.0
9 கால்சியம் (%) 4.0 3.0
10 இரும்பு (%) 1.0 1.0

சாகுபடி தொழில்நுட்பங்கள் :

மண் மற்றும் காலநிலை :

இப்பயிருக்கு நல்ல வளமான வடிகால் வசதியுள்ள மண் மிகவும் ஏற்றது. அதிக அளவில் கரிமப் பொருள் கொண்ட கார அமில நிலை 6 முதல் 6.5 வரை உள்ள வளமான செம்பொறை மண் இப்பயிரின் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமில நிலை 4க்கு குறைவாக இருப்பின் டாலமைட் 2.5 டன், எக்டர் சாகுபடி செய்வதற்கு 5 மாதத்திற்கு முன் மண்ணில் இட வேண்டும்.

பருவம் :

நீர் போகம் (பிப்ரவரி – ஏப்ரல்), கார் போகம் (ஏப்ரல் - ஜ%ன்) மற்றும் கடைபோகம் (ஆகஸ்ட் – அக்டோபர்) ஆகிய மூன்று பருவங்களிலும் சாகுபடி செய்யலாம்.

இனவிருத்தி :

செலரி விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. விதைகள் மிகவும் சிறியதானதால் பத்து மடங்கு மணலுடன் கலந்து உயா்ந்த நாற்றங்கால் படுக்கையில் விதைக்க வேண்டும்.

நாற்றங்கால் :

நிலத்தை நன்றாகப் பண்படுத்த வேண்டும்.

விதையளவு :

ஒரு எக்டருக்கு 1.25 கி.கி விதை தேவை. ஒரு எக்டருக்கு தேவையான நாற்றுக்களை உற்பத்தி செய்ய 100 சதுர அடி நாற்றங்கால் அவசியமானது. 1 மீ. அகலம், 15 செ.மீ உயரம் தேவைக்கேற்ற நீளம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும். விதைகளை 3 சத பஞ்சகாவ்யா கரைசலில் ஊற வைத்த பின் நிழலில் உலர்த்தி வரிசையில் விதைக்க வேண்டும். நாற்றங்கால் நிலம் தயாரிக்கும் போது, ஒரு சதுரமீட்டருக்கு 20 கி.கி தொழு உரம், அதனுடன் 5 கி.கி மண்புழு மட்கு உரம், 10 கி.கி இயற்கை உயிராற்றல் மட்கு உரம், 200 கி. மைக்கோரைசா வேர் உட் பூசணம், 200 கி. அசோஸ்பைரில்லம் மற்றும் 200 கி. பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். நாற்றங்காலில் களைகளை எடுத்து சுத்தமாக வைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். விதைக்கப்பட்ட 3 வாரங்களில் விதை முளைத்து விடும். 75 நாட்களில் நல்ல தரமான நாற்றுகளை பெறலாம்.

நிலம் தயார் செய்தல் :

ஒரு எக்டருக்கு 30 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட வேண்டும். தொழு உரத்துடன் 5 டன் இயற்கை உயிராற்றல் மட்கு, 5 டன் மண்புழு மட்கு உரம், 10 கி.கி. மெட்டாரைசியம், 10 கி.கி. அசோஸ்பைரில்லம், 10 கி.கி. பாஸ்போபாக்டீரியா, 10 கி.கி. மைக்கோரைசா வேர் உட்பூசணம், 1.25 டன் வேப்பம் புண்ணாக்கு, 2.5 கி.கி. சூடோமோனாஸ் புளூரசன்ஸ் மற்றும் 2.5 கி.கி டிரைகோடெர்மா விரிடி ஆகியவற்றையும் கலந்து இட வேண்டும். நிலத்தை நன்கு உழுத பின்பு 75 கி. கொம்பு சாண உரத்தையும், 1.5 கி.கி சாண மூலிகை உரத்தினையும் 40 லிட்டர் தண்ணீரில் கரைத்து பெரிய துளிகளாக விழுமாறு ஒரு எக்டர் நிலத்தில் தெளிக்க வேண்டும்.

நடவு செய்தல் :

மழைக்காலங்களில் நடவு மேற்கொள்ள வேண்டும். நல்ல தரமான நாற்றுகளை வரிசைக்கு வரிசை 45 செ.மீ மற்றும் செடிக்குச் செடி 15 செ.மீ இடைவெளியில் நடவு செய்தல் வேண்டும்.

நீர் பாய்ச்சுதல் :

பயிரின் நல்ல வளர்ச்சிக்கு முறையான மற்றும் துரிதமான நீர்பாசனம் தேவை. வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சுதல் அவசியம்.

பின்செய்நேர்த்தி :

நிலத்தை களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். பயிரின் நல்ல வளர்ச்சிக்கு 4-5 முறை களைகள் அகற்ற வேண்டும்.

பயிர் வளர்ச்சி ஊக்கிகள் :

  • பஞ்சகாவ்யா 3 சத கரைசலை இலைவழித் தெளிப்பாக 15 நாட்கள் இடைவெளியில் 4 முறை தெளிக்க வேண்டும்.
  • அறுவடைக்கு முன் 10 சத மண்புழு வடிநீரை 4 முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  • கொம்பு சிலிக்கா உரம் 2.5 கிராமை 50 லிட்டர் தண்ணீரில் கரைத்து அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
  • சாண மூலிகை உரம் எக்டருக்கு 5 கிலோவை 200 லிட்டர் தண்ணீரை கலந்து 3 முறை (45, 60 மற்றும் 75வது நாட்கள்) தெளிக்க வேண்டும்.
  • அறுவடைக்கு முன் 3 சத தசகாவ்யா கரைசலை இலைவழித் தெளிப்பாக 15 நாட்கள் இடைவெளியில் 4 முறை தெளிக்க வேண்டும்.
  • 200 கிராம் அக்னிஹோத்ரா சாம்பலை 1 லிட்டர் கோமியத்தில் 15 நாட்களுக்கு வைத்த பின்னர் அக்கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து 3 முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  • 5 சத மஞ்சூரியன் தேநீர் கரைசலை 3 முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு :

இந்த இரகம் பூச்சி மற்றும் பூசண நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.

அறுவடை:

115வது நாளில் செலரி அறுவடைக்கு தயாராகிறது. வெளிப்புற தடிமனான தண்டுகள் சூப் செய்யவும், உள்புற தண்டுகள் மிகவும் இளையதாக இருப்பதால் சாலாடாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மகசூல்:

ஒரு எக்டருக்கு 30.5 டன் செலரி மகசூல் கிடைக்கிறது.

செலரி த.வே.ப.க உதகை – 1 சார் உணவுப் பொருட்கள் தயாரிப்பு

உடனடி தயார்நிலை உணவுப் பொருட்கள்:

வளர்ந்து வரும் நாகரீக மற்றும் இயந்திரமான வாழ்க்கை முறைக்கு உடனடி தயார்நிலை உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வகை உணவுப் பொருட்களுக்கு தற்பொழுது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. சத்துக்கள் மிகுந்த செலரியை இவ்வகை உணவுப் பொருட்களின் மூலம் அறிமுகப்படுத்துவதனால் மக்களை எளிதிலும் விரைவிலும் சத்துக்கள் சென்றடைய வழிகோலும். ஆகவே உலர வைத்தல் தொழில்நுட்ப முறை மூலம் செலரி மற்றும் விதைகளை பயன்படுத்தி உடனடி தயார்நிலை உணவுப் பொருட்கள் தயாரிக்கலாம்.

செலரியை பயன்படுத்தி கீழ்கண்ட வகைகளை தயாரிக்கலாம் :

உடனடி தயார்நிலை உணவுப் பொருட்கள் :
  • சாம்பார் மிக்ஸ்
  • சூப் மிக்ஸ்

பதப்படுத்திய உணவுப் பொருட்கள்:

  • கார சட்னி
  • தொக்கு

வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள்:

  • சூப்
  • கூட்டு

செலரி சாம்பார் பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்:

செலரி விதை  : 50 கிராம்
மிளகாய் வற்றல்   : 50 கிராம்
கொத்தமல்லி விதை : 100 கிராம்
துவரம் பருப்பு : 50 கிராம்
கடலை பருப்பு  : 10 கிராம்
பட்டை     : 10 கிராம்
மிளகு   : 10 கிராம்
ஏலக்காய்  : 10 கிராம்
கிராம்பு    : 10 கிராம்
உப்பு   : தேவையான அளவு

செலரி சூப் மிக்ஸ் தயாரிக்க தேவையான பொருட்கள் :

செலரி : 50 கிராம்
காரட்   : 25 கிராம்
தக்காளி   : 25 கிராம்
வெங்காயம் : 25 கிராம்
சீரகம்  : 10 கிராம்
மிளகு       : 10 கிராம்
காண்பிளேவர் : 25கிராம்
உப்பு   : தேவையான அளவு

மேலும் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்
விஜயநகரம், உதகை – 643 001.
தொலைபேசி – 0423-2442170
மின்னஞ்சல் – hrsooty@tnau.ac.in
Last Update :October 2014