organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக ஆவணங்கள்

பங்கேற்பு உத்தரவாத அமைப்பின், அங்கக உற்பத்திக்கான தேசிய தரநிலைகள்

பொதுவான தேவைகள்:
வாழ்விடம் மேலாண்மை:            

அங்கக மேலாண்மைத் திட்டத்தில் வாழ்விட மேலாண்மை ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. அங்கக மாற்றத்தில் முதல் அடி எடுத்து வைக்க இது உதவுகிறது. அனைத்து உயரினங்களும் வாழ்வதற்கேற்ற தகுந்த வாழ்க்கை நிலைமைகள், நிலையான பசுந்தாள் உரங்கள் வழங்குதல் மற்றும் பல்வேறு தொன்மை வாய்ந்த தாவரங்கள் / மரங்களை வரப்புகள் மற்றும் விவசாய சாகுபடி செய்யாத வெற்றிடங்களில் நடவு செய்தல் போன்ற செயல்முறைகளை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்கிறது. தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தும் மரங்களுக்கு போதிய இடவசதி செய்ய வேண்டும். தழைச்சத்தை நிலைநிறுத்தும் மரங்கள், உயிர் வேலியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல், உயிரியல் ரீதியான தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது. மேலும், மண்ணின் ஆழமான அடுக்குகளில் இருந்து ஊட்டச்சத்துகளை எடுத்து பயிர்களுக்கு அளிக்கிறது. இந்த மரங்கள் நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் பறவைகளுக்கு சரணாலயமாகவும் விளங்குகிறது. தேவையெனில் மழைநீர் சேகரிப்பு குழிகள் மற்றும் பண்ணைக்குட்டைகள் அமைத்துக்கொள்ளலாம்.

பன்முகத்தன்மை:

அங்கக மேலாண்மையில், பயிர் உற்பத்தி பன்முகத்தன்மை இரண்டாவது முக்கியமான பகுதி. இது, பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவதோடு சமநிலை ஊட்டச்சத்தை மண்ணில் நிலைப்படுத்துகிறது. கலப்புப்பயிர்கள், ஊடுபயிர்கள், தொடர் பயிர்கள் மற்றும் பயறு வகைப்பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்வதன் மூலம் பன்முகத்தன்மையை அடைய முடியும். பொறிப்பயிர்கள் மற்றும் தடுப்புப்பயிர்களைக் கொண்டும் பல்லுயிர்ப்பெருக்கம் அமைக்கலாம்.

அங்கக முறையாக மாற்றுவதற்கான காலம் :            

பங்கேற்பு உத்தரவாத அமைப்பில், அங்கக தரநிலைகளை வைத்து ஒரு பண்ணை அங்கக பண்ணையாக மாற்றப்படுவதற்கு எடுத்துக்கொள்ளும் காலமே “மாற்றுக்காலம்” என வரையறுக்கப்படுகிறது.

பண்ணையில் உள்ள பயிர் உற்பத்தி மற்றும் கால்நடைகள் முழுவதுமாக அங்கக மேலாண்மை முறைக்கு மாற்றப்பட வேண்டும். இணையான அல்லது பகுதி மாற்றங்கள், அங்கக பங்கேற்பு உத்தரவாத அமைப்பில் அனுமதிக்கப்படுவது இல்லை. புதிதாக பெறப்பட்ட வயல்கள் அல்லது வழக்கமான மேலாண்மையின் கீழ் செயல்பட்டு வரும் வயல்களில் உள்ள பயிர்கள், வருடாந்திர பயிர்கள் அல்லது பருவப்பயிர்களாக இருந்தால் மாற்றுக்காலம் 24 மாதங்களுக்குக் குறைவாக இருக்கக்கூடாது. அதுவே, பல்லாண்டுப்பயிர்கள் அல்லது நிரந்தரப்பயிர்களாக இருந்தால், இரசாயன இடுபொருட்கள் தடை செய்யப்பட்ட கடைசி தேதியிலிருந்து 36 மாதங்களுக்குக் குறைவாக இருக்கக் கூடாது. மூன்று ஆண்டுகளாக, வயலில் எந்தத் தடைசெய்யப்பட்ட பொருட்களும் பயன்படுத்தப்படாமல் இருந்தால், மாற்றுக்காலம் 12 மாதங்களாகக் குறைக்கப் படலாம். மேலும் அந்தக் குழுக்களில் உள்ள மொத்த உறுப்பினர்களின் கடந்த கால வரலாற்றை முழுமையாக ஆராய்ந்து எந்த வித இரசாயன பொருட்களையும் பயன்படுத்தாமல் இருந்தால், மொத்தமாக அந்தக்குழுவிற்கும் மாற்றுக்காலம் 12 மாதங்களாகக் குறைக்கப்படும்.

குழுக்களில் உள்ள எல்லா உறுப்பினர்களின் நிரந்தர தேவைகள்பூர்த்தி செய்யப்பட்டு, விலங்குகளுக்கு அங்கக தீவனம் மற்றும் அடர்தீவனம் 12 மாதங்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்தால், விலங்கு பொருட்களின் மாற்றுக்காலம் 12 மாதங்களுக்குக் குறைவாக வழங்கப்பட மாட்டாது.

ஐ.சி.எஸ். குழுக்களில் உள்ள உறுப்பினர்கள், பங்கேற்பு உத்தரவாத அமைப்புகளில் சேரும் பொழுது, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அந்தக்குழுக்களில் மேலும் தொடரத்தேவையான ஆவணங்களை அளித்து அவர்களின் திருப்தியை நிரூபிக்க வேண்டும்.

தூய்மைக்கேடு கட்டுப்பாடு
:

தடை செய்யப்பட்ட பொருட்கள், நீர் மட்டம் அல்லது தெளிக்கும் நீரின் மூலம் அங்கக உற்பத்தி கிளைகள் மாசு அடைவது தடை செய்யப்பட்டு உள்ளது. எல்லா அங்கக விவசாயிகளும் உயிர் வேலி அல்லது திறந்த இடைவெளி பயிர்களுக்கு இடையில் அமைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அருகில் உள்ள இரசாயனம் உபயோகிக்கும் நிலங்களில் இருந்து அசுத்தமான நீர் அங்கக வயல்களை சென்றடைந்து மாசடையாதவாறு பாதுகாக்க வேண்டும். இதைத்தகுந்த வரப்புகள் மற்றும் வாய்க்கால் அமைத்து சரி செய்யலாம்.

மண் மற்றும் நீர்ப்பாதுகாப்பு :

மண் அரிப்பு, மண் உப்பாதல், அதிகப்படியான மற்றும் முறையற்ற நீரின் பயன்பாடு, மண் மேற்பரப்பு மற்றும் நீரின் மேற்பரப்பு மாசுபாட்டைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அங்கக கழிவுப்பொருட்களை எரித்து நிலத்தை சுத்தப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எ.கா. மரங்களை வெட்டி எரித்தல், வைக்கோல் எரிப்பு, முதன்மைக்காடுகளை அளித்தல் தடை செய்யப்பட வேண்டும்.

 

முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16