முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

சின்ன சின்ன நுட்பங்கள். பெரிய அளவில் பலன்கள்
என்னதான் நவீன தொழில் நட்பங்கள், பாரம்பரிய முறைகள் என்று இருந்தாலும், அவற்றோடு சில தனித்துவமான செய்முறைகளைச் சேர்த்து கூடுதலான பலன்களை எடுத்து வருகிறார்கள், விவசாய விஞ்ஞானிகள் பலரும். இந்த வரிசையில் இணைகிறார் திருச்சி மாவட்டம், திருவானைக்காவல், கீழ்க்கொண்டையம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்.

இந்த ஆண்டு தனக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டு என்கிறார் அவர். இவருடைய நெற்பயிர்களில் மஞ்சள்நோய், குலை நோய் கொஞ்சம் கூட எட்டிப் பார்க்கவில்லை. எலிகள் தொல்லையும் இல்லை. கதிர்நாவாய்ப்பூச்சி, சிவப்பு வண்டு, அசுவிணி, குருத்துப் பூச்சித் தாக்குதல்களும் கூட ஏற்படவில்லை. இதைவிட, இரட்டிப்பு மகிழ்ச்சியாக அதிக எண்ணிக்கையில் தூர்கள் வெடித்து, எல்லா தூர்களிலும் வழக்கத்திற்கு மாறாக, நெல்மணிகள் அதிகமாக நிறைந்திருக்கிறது என மகிழ்ச்சி பொங்க செல்கிறார் ஹரிகிருஷ்ணன். கண்முன் சாட்சியாக அவருடைய வயலில் செழிப்பாக வளர்ந்து நிற்கின்றன, நெற்பயிர்கள். இவர், திருச்சியில் உள்ள பி.ஹெச்.இ.எல் நிறுவனத்தில் துணைப் பொறியாளர் பணியையும் செய்து கொண்டே விவசாயத்தையும் செய்து வருகிறார்.

விவசாயத்தை இவர் எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதை, இவருடைய நிலம் அமைந்துள்ள பகுதி பளிச்சென படம் பிடித்துக் காட்டுகிறது. திருச்சி – சென்னை நான்கு வழிச்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது, அவரது வயல். சுற்றிலும் பிரம்மாண்ட வீடுகள்தான் காட்சியளிக்கின்றன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, வேறு எங்குமே விவசாயம் இல்லை.

இவர் தாத்தா விவசாயம் செய்து வந்திருக்கிறார். அவருக்கு பிறகு இவர் அப்பா அதில் ஆர்வம் இல்லாததால், நிலத்தை குத்தகைக்கு விட்டிருக்கிறார். இவர் மறுபடியும் விவசாயத்தை கையிலெடுத்து, பத்து வருடமாக நெல் சாகுபடி செய்து வருகிறார். 3 வருடமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். படிப்படியாக ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் குறைத்து, இப்போது நூறு சதவிகிதம் இயற்கை முறையில் நெற்பயிர்களை வளர்த்தெடுத்திருக்கிறார். இயற்கை இடுபொருட்களுக்காக பத்து மாடுகளை வளர்க்கிறார். ஒரு ஏக்கரில் நெல்லும், இரண்டு ஏக்கரில் கரும்பும் இருக்கிறது. கரும்பை இன்னும் முழுவதுமாக இயற்கைக்கு மாற்றவில்லை என்கிறார். இது மணலும், களியும் கலந்த இருமண் பாடு. வழக்கமாக, குறுவையில் ஆடுதுறை – 36 ரகத்தைதான் சாகுபடி செய்வார்கள்.

இப்போது, நெல் நடவு செய்து 65 நாள் ஆகிறது. வழக்கமாக இந்த நேரத்தில் இரண்டு அடி உயரம்தான் இருக்கும். ஆனால், இயற்கையில் இரண்டரையடி உயரத்திற்கு மேல் செழிப்பாக வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு குத்திலும் நாற்பதுக்கும் மேற்பட்ட தூர்கள் வெடித்து, எல்லா தூர்களிலும் நல்ல வாழிப்பாக கதிர்கள் வந்திருக்கிறது. ஒரு கதிரில் வழக்கமாக 100 முதல் 110 நெல்மணிகள்தான் வரும். ஏக்கருக்கு 30 முதல் 33 மூட்டைதான் மகசூல் கிடைக்கும். ஆனால், இந்த வருடம் ஒவ்வொரு கதிருக்கும் சுமார் 160 நெல்மணிகள் வந்திருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது, 40 மூட்டைக்கு மேல் மகசூல் கிடைக்கும் என்று உறுதியாக நம்புவதாக கூறுகிறார் ஹரி கிருஷ்ணன்.

சாகுபடி முறை
ஒரு ஏக்கர் நெல் சாகுடிக்கு 8 சென்ட் அளவு நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 2 சால் உழவு ஓட்டி, 15 கிலோ எருக்கன் தழைகளைப் போட்டு, நன்கு மிதிக்க வேண்டும். இதில் நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகமிருப்பதால், மண் வளமாகி, நாற்றுகளுக்கு ஊட்டம் கிடைக்கும். தவிர, இதில் கசப்புத் தன்மை இருப்பதால், வேரைத் தாக்கும் பூச்சிகளும் தடுக்கப்படும். 250 கிலோ மாட்டு எரு போட்டு, ஒரு வாரம் கழித்து, இரண்டு சால் உழவு ஓட்டி, நன்கு சமபடுத்திக் கொள்ள வேண்டும்.

20 கிலோ விதையை மாட்டுச் சிறுநீரில் அரைமணிநேரம் ஊறவைத்து, சணல் சாக்கில் மூட்டை கட்டி, மூன்று நாட்கள் தண்ணீர் தெளித்து வர வேண்டும். நான்காம் நாள் விதைகளை பரவலாக  நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். அதன் பிறகு காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர் விட வேண்டும். 8-ம் நாள் நாற்றங்காலை நன்கு காயவிட வேண்டும். 10-ம் நாள் 5 லிட்டர் ஜீவாமிர்தத்தை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15-ம் நாள் அரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியோடு தலா 25 மில்லி தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து நாற்றின் மீது தெளிக்க வேண்டும். 22-ம் நாள் சுமார் 3 அங்குல உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்து, நடவுக்குத் தயாராக இருக்கும்.

நடவு வயலில் 2 சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு 2 டன் இலைதழைகள், 500 கிலோ கனஜீவாமிர்தம் போட்டு, மீண்டும் இரண்டு சால் உழவு ஓட்டி, நிலத்தைச் சமப்படுத்தி, தலா முக்கால் அடி இடைவெளியில் குத்துக்கு 2 அல்லது 3 நாற்றுகளாக நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 8-ம் நாள் 20 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 2 கிலோ சாணத்தை ஊற வைத்து, மறுநாள் 100 லிட்டர் தண்ணீர் கலந்து பாசன நீரோடு விட வேண்டும். இதுபோல், ஒரு நாள் விட்டு ஒருநாள் எண்ணெய் கலந்த மூலிகைப் பூச்சி விரட்டி தெளிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் தெளிக்க வேண்டும். கதிர் முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும்.

எண்ணெய் – மூலிகைப் பூச்சிவிரட்டி
தலா 2 கிலோ ஊமத்தன் இலை, எருக்கன் இலை, வேப்பந்தழை, பப்பாளி இலைகளை எடுத்து, 20 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் ஊற வைத்து, மூங்கில் தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும். காற்றோட்டம் இருந்தால் இலைதழைகள் சீக்கிரம் அழுகும். தேவையற்ற வாயுக்கள் வெளியேறுவதால், துர்நாற்றம் குறையும். 15-ம் நாள், இக்கரைசலை வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இக்கரைசலில் இருந்து 4 லிட்டர் எடுத்து, தலா 200 மில்லி தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வேப்பெண்ணெய் கலந்து, 8 லிட்டர் மாட்டுச் சிறுநீர் மற்றும் 120 லிட்டர் தண்ணீரையும் கலந்து தெளிக்க வேண்டும்.

செலவு குறைக்கும் இயற்கை நுட்பங்கள்
அங்கம்பக்கம் வேறு எங்கும் வயல்கள் இல்லாததால், இவரது வயலில் எலித் தொல்லை ரொம்பவே அதிகமாக இருக்கும். பூச்சிகளும் அதிகமாக வரும். அதனால் முன்பு நிறைய இழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முறை அதுமாதிரியான பிரச்சனைகள் எதுவுமே இல்லை. மூலிகைப் பூச்சி விரட்டியோடு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய் கலந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பயிர்களுக்குத் தெளிக்கிறேன். நல்லெண்ணெய் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிது. பயிர்களோட வேர்ப்பகுதி மற்றும் தண்டுப் பகுதியில் உள்ள பூச்சிகள் எல்லாமே தேங்காய் எண்ணெயின் வாடையால் ஈர்க்கப்பட்டு, பயிர்களோட மேற்பரப்பிற்கு வந்துவிடுகிறது. மூலிகைப் பூச்சி விரட்டியில் வேப்பெண்ணையோடு தேங்காய் எண்ணெயும் இருப்பதால் பிசுபிசுப்புத் தன்மை அதிகமாக இருக்கிறது. அதில் மாட்டி தீமை செய்யும் பூச்சிகள் மட்டும் சிக்கி, இறந்து விடுகிறது. தட்டான், வெட்டுக்கிளி போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் எல்லாம், பயிரின் மேற்பரப்பில் உட்கார்ந்து, தீமை செய்யும் பூச்சிகளை உண்டு, லாவகமாக பறந்துவிடும்.

மூன்று விதமான எண்ணெய் கலந்த இந்த மூலிகை விரட்டி, பயிர் ஊக்கியாகவும் செயல்படுகிறது. பயிரில் பசுமைத் தன்மை எப்போதுமே நிரந்தரமாக இருக்கிறது. கதிர் வரும் வரைக்கும்தான் இந்த மூலிகை பூச்சி விரட்டியை அடித்துள்ளார். அதற்குப் பிறகும் அடித்தால், நெல்மணிகளில் கசப்புத் தன்மை வந்துவிடும். வயலைச் சுற்றிலும் எருக்கன், பூவரசு, வேம்பு, வாதமடக்கி, தூங்குமூஞ்சி, பப்பாளி என்று 80 மரங்கள் இருக்கிறது. இதனால் இலை தழைகள் தாராளமாக கிடைக்கிறது. பம்பு செட்டில் தண்ணீர் கொட்டக்கூடிய இடத்தில், இந்த இலைதழைகளைப் போட்டு, அதற்கு மேல் கனமான கற்களை வைக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் அது நன்றாக அழுகிவிடும். வாரம் ஒரு முறை கற்களை எடுத்துவிடுகிறார்கள். அழுகிய இலைதழைகள், பாசன நீரோடு பயிர்களுக்குப் போகும். இந்த இலைதழைக் கசாயத்தை தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். அதோடு சாணத்தை, மாட்டு சிறுநீரில் ஊற வைத்தும் பாசன நீரோடு ஒரு நாள் விட்டு ஒருநாள் கலந்து விடுவதாக சொல்கிறார் ஹரிகிருஷ்ணன்.

இவர் சொந்த திறமையாளும் உழைப்பாலும் பயிர்களை வளர்த்தெடுத்து, அதில் கிடைக்கின்ற லாபத்தை பார்க்கையில்தான் உன்மையான மனதிருப்தி இருக்கிறது. இவர் மனைவியும் இவரைப்போல் அத்மார்த்தமாக விவசாயத்தை நேசிக்கிறார்கள். அவரின் உழைப்பும் இதில் அதிகம் என்கிறார் ஹரி கிருஷ்ணன்.
தொடர்புக்கு
ஹரி கிருஷ்ணன்
செல்பொன் – 96003 - 30440
ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு 25.11.14 www.vikatan.com

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015