வெற்றிக் கதைகள் ::தொழில் முனைவோர்கள் - 2013

நன்றி பசுமை விகடன் ...

 

 

 

ஒரு ஏக்கர் 100 நாள் ரூ. 2,00,000 நல்வருமானம் தரும் நன்னீர் இறால்!..!

மாதம்தோறும் ரூ.1,00,000 தெம்பான வருமானம் தரும இத்தாலியத் தேனீ...!

தேனீ வளர்ப்பு… நபார்டு வங்கியால் முன்னுக்கு வந்த முதலூர் பெண்கள்..!

[ 2012 வெற்றிக் கதைகள் காண.. ]

25.09.2013

கடற்கரையோரங்கள், கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரங்கள் ஆகிய பகுதிகளில் மட்டுமே இருந்த இறால் வளர்ப்பு, தற்போது உள்நாட்டுப் பகுதிகளிலும் பரவலாகி வருகிறது. வெளிநாட்டு விற்பனை வாய்ப்பும் அதிகம் என்பதால், நன்னீர் இறால் வளர்ப்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கவே… பலரும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில், கொஞ்சம் வித்தியாசமாக… குட்டையில் மீன்களோடு சேர்த்து இறாலை வளர்த்து, கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த சீனிவாசன்.
தாராளமாக குஞ்சுகள் கிடைக்கும்!
தஞ்சாவூர் – பூதலூர் சாலையில் பதினைந்தாவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் அமைந்திருக்கும் சீனிவாசன் இறால் பண்ணை உள்ளது. எனக்கு சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம், கடம்பங்குடி அங்கு, 30 ஏக்கரில் நெல், கரும்பு சாகுபடி செய்து கொண்டிருந்தேன். தொடர்ச்சியாக நஷ்டம். அதனால், நிலத்தை குத்தகைக்கு விட்டுவிட்டு, குடும்பத்துடன் தஞ்சாவூருக்கு வந்து, இயற்கை விளைபொருள்களை வாங்கி விற்பனை செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.
எங்கள் ஊரில் 2003ம் வருடம் வரைக்கும் நன்னீர் இறால் வளர்த்தேன். அத நல்ல லாபமான தொழிலாக இருந்தாலும் அந்த சமயத்தில், இறால் குஞ்சுகைள உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகமாக இல்லை. அதனால், குஞ்சுகளுக்குத் தட்டுப்பாடு வரவே.. இறால் வளர்ப்பைக் கைவிட்டேன். இப்போது, சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் இறால் குஞ்சு பொரிக்கும் நிறுவனங்கள் நிறைய இருக்கிறது. அதனால் குஞ்சுகள் தாராளமாக கிடைக்கிறது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே.. மீன் குட்டைகளை குத்தகைக்கு எடுத்து, கடந்த ஒரு வருடமாக இறால் வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.
இறால் விற்பனைக்காக பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. நாகப்பட்டினம், சென்னையில் இருக்கும் கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தில் சொல்லி வைத்தோம் என்றால்  ஏற்றுமதி செய்பவர்கள் தேடி வந்து வாங்கிக்கொள்வார்கள். உள்ளூர் மார்க்கெட்டிலும் நல்ல விற்பனை இருக்கிறது என்றார்.
100 நாட்களில் வருமானம்!
நெல், கரும்பு சாகுபடிக்குத் தேவையான தண்ணீரைவிட, இறால் வளர்ப்பிற்கு குறைவான தண்ணீர்தான் தேவைப்படும். இதில் நூறு நாளில் லாபம் பார்த்துவிடலாம். ஒரு ஏக்கருக்கு வருடத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் என்று குத்தகைக்கு எடுத்திருக்கிறேன். இந்தப் பண்ணை மொத்தம் 10 ஏக்கர் இதில் 7 ஏக்கர் நீர்ப்பரப்பு. அதில், 13 குட்டைகள் இருக்கிறது. இங்கே, நன்னீர், கடல்நீர் இரண்டிலும் வளரக்கூடிய ‘லீட்டேபினஸ் வெனாமி’ என்கிற ரக இறாலைத்தான் வளர்க்கிறேன் என்றார் சீனிவாசன்.
சூரிய வெளிச்சம் அவசியம்!
களிமண் தன்மை கொண்ட நிலத்தில்தான் குட்டை அமைக்க வேண்டும். காரணம் இந்த நிலத்தில்தான் தண்ணீர் தேங்கி நிற்கும். ஒரு வேளை இந்த நிலத்தின் தன்மை பற்றி தெரியவில்லை என்றால், குட்டை அமைக்க திட்டமிட்டுள்ள நிலத்தில் ஒரு எளிய பரிசோதனையை நீங்களே செய்யலாம். அதாவது, 1 மீட்டர் நீளம், அகலம் ஆழத்தில் குழி எடுக்கவும். அதில் நீரை நிரப்பவும். உடனே நீர் வற்றிவிட்டால், அந்த நிலம், குளம் அமைக்க ஏற்றது அல்ல என்று புரிந்து கொள்ளலாம். தண்ணீர் தேங்கி நின்றால், தயங்காமல் குட்டை அமைக்கலாம். சூரிய வெளிச்சம் தாராளமாகக் கிடைக்கக் கூடிய பகுதியில் இறால் குட்டை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடைபெற்று, இறாலுக்குத் தேவையான இயற்கையான உணவு தடையின்றி உற்பத்தியாகும். நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், கார – அமிலத்தன்மையின் அலகு 7 பி.ஹெச். முதல் 8.5 பி.ஹெச். அளவுக்குள் இருக்க வேண்டும். இதை அறிந்து கொள்ள நீாப் பரிசோதனை செய்வது கட்டாயம். ஆற்று நீராக இருந்தால் கார – அமிலத்தன்மையைப் பரிசோதிக்க வேண்டியதில்லை.
நான்கு வேளைகளில் தீவனம்!குட்டையில் இரண்டு சால் உழவு ஓட்டிப் 15 நாட்கள் வெயிலில் காயவிட வேண்டும். பிறகு, ஏக்கருக்கு 100 கிலோ கல் சுண்ணாம்பு, 100 கிலோ ஜிப்சம் என்கிற அளவில் போட்டு, ஒன்றரையடி உயரத்திற்கு தண்ணீர் நிறுத்தி.. அதில், 50 கிலோ ஈரச் சாணம் 5 கிலோ தாது உப்புக் கலவை (இது கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மையங்களிலும் கால்நடை மருந்துக் கடையிலும் கிடைக்கும்). ஆகியவற்றைக் கலந்துவிட வேண்டும். அடுத்த மூன்று நாட்களில் பாசி உட்பட தாவர, விலங்கின மிதவை நுண்ணுயிரிகள் உருவாகும். பிறகு, 4 அடி உயரத்திற்கு தண்ணீரை நிறுத்தி, 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வயதுள்ள ஒரு லட்சம் இறால் குஞ்சுகளை விட்டு, கடைகளில் விற்பனை செய்யப்படும் 2 கிலோ இறால் தீவனத்தையும் போட வேண்டும். இது குஞ்சுகளுக்கு ஒரு நாளுக்கான தீவனம்.
தீவனத்தை மொத்தமாகப் போடாமல், காலை 6 மணி, 10 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி என்ற நான்கு மணி நேர இடைவெளியில், நான்கு பாகங்களாகப் பிரித்து போட வேண்டும். குஞ்சுகள் வளர்ந்தாலும், இதே முறையில்தான் தீவனம் போட வேண்டும். கரையில் இருந்து கொண்டு தீவனத்தைப் போடாமல், மிதக்கக் கூடிய பலகையில் அமர்ந்து கொண்டு குட்டைக்குள் சென்று தீவனம் போட வேண்டும். அதற்கு வசதியாக குட்டையின் நான்கு மூலைகளிலும் கயிறு கட்டி வைத்துக் கொள்ளலாம். இரவு நேரங்களில் குட்டைக்குள் தாராளமாக ஆக்ஸிஜன் கிடைக்குமாறு அதற்கான பிரத்யேக கருவிகளைப் பொருத்த வேண்டும். பாம்பு, ஆமை, நண்டு போன்றவற்றைத் தவிர்க்க, குட்டையைச் சுற்றி வலை அமைக்க வேண்டும்.
தீவனம்… கவனம்!
குஞ்சுகள் விட்ட 2-ம் நாள் 2.2 கிலோ , 3ம் நாள் 2.4 கிலோ என தினமும் 200 கிராம் தீவனத்தை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும். 8-ம் நாளிலிருந்து 15-ம் நாள் வரை தினமும் 300 கிராம் தீவனத்தை அதிகரிக்க வேண்டும் 16ம் நாளிலிருந்து 22-ம் நாள் வரை தினமும் 400 கிராம் தீவனத்தையும் 23-ம் நாளிலிருந்து 30-ம் நாள் வரை தினமும் 500 கிராம் தீவனத்தையும் அதிகரிக்க வேண்டும். இறால் வளர்ச்சியை வைத்தே தீவனம் கொடுக்க வேண்டும்.
31-ம் நாள், குளத்தில் உள்ள இறாலைப் பிடித்து எடைபோட வேண்டும். பொதுவாக, அந்த வயதில் ஒரு இறால் குஞ்சு சராசரியாக 3 கிராம் எடையில் இருக்கும். ஒரு லட்சம் குஞ்சுகளில் 80- ஆயிரம் குஞ்சுகள் அளவிற்கு உயிரோடு இருக்கும். இவற்றின் மொத்த எடை 240 கிலோ இருக்கும். இதில் 7 சதவிகித அளவுக்குத் தீவனம் போட வேண்டும். இந்த வகையில், தினமும் 16.8 கிலோ தீவனம் போட வேண்டும்.
38-ம் நாள் ஒரு இறாலின் சராசரி எடை 4 கிராம் இருக்கும். மொத்த இறாலின் எடை 320 கிலோ. தினமும் இதில் 6 சதவிகிதம் அளவுக்கு தீவனம் போட வேண்டும். அடுத்தடுத்த வாரங்களில்.. 5%, 4%, 3%,2% என தீவனத்தைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும். எடையில் 2 சதவிகிதம் தீவனத்தை கடைசி வரை கடைபிடிக்க வேண்டும். எடை பார்க்க அனைத்து இறால்களையும் பிடிக்க வேண்டியதில்லை. குட்டையில் நான்கு பக்கமும் தலா ஒரு முறை வலையை வீசி, அதில் கிடைக்கும் இறால்களின் எடையைக் கொண்டு, ஒட்டுமொத்த இறால்களின் சராசரி எடையை எளிதாகக் கணித்துவிடலாம். ஒரு கிலோ இறால் உற்பத்தி செய்ய சுமார் ஒன்றே கால் கிலோ தீவனம் தேவைப்படும்.
ஒரு ஏக்கரில் 1,650 கிலோ இறால்!
60-ம் நாளிலிருந்து 80-ம் நாளுக்குள் 400 கிலோ அளவுக்கு இறாலைப் பிடித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 10 கிராம் முதல் 20 கிராம் வரை எடை இருக்கும். 90-ம் நாளிலிருந்து 100 நாட்களுக்குள் 1,250 கிலோ அளவுக்கு இறால் படித்து விற்பனை செய்யலாம். இந்த சமயத்தில் ஒரு இறால், 25 கிராம் அளவில் இருக்கும். ஒரு ஏக்கர் குளத்தில் சராசரியாக 1,650 கிலோ அளவுக்கு இறால் கிடைக்கும்.
அறுவடை முடிந்த பிறகு, குட்டையை காயவிட்டு மீண்டும் நீர் நிரப்பி இறால் வளர்க்கலாம். முதல் தவணையில் பிடிக்கும் இறால், கிலோ சராசரியாக 250 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும்.
தஞ்சாவூரில் நாங்களே, நேரடியாக விற்பனை செய்திடுவோம். உயிரோடு இறால் கிடைப்பதால் உடனடியாக விற்றுவிடுகிறது. இரண்டாம் தவணை பிடிக்கும் இறாலை கிலோ 300 ரூபாய் என்று வியாபாரிகளுக்கு விற்றுவிடுவோம். இது மூலமாக, மொத்தம் ஏக்கருக்கு நாலே முக்கால் லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில், எல்லா செலவும் போக, 2 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். இதுபோல், ஒரு ஏக்கர் குட்டையில் , வருடத்திற்கு இருண்டு முறை இறால் வளர்த்து, 4 லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் பார்க்கலாம் என்றார்.


ஒரு ஏக்கர் குட்டையில், ஒரு பருவத்தில் இறால் வளர்க்க, சீனிவாசன் சொல்லும் செலவு – வரவுக் கணக்கு (ரூபாய் மதிப்பில்)

விவரம்

செலவு

வரவு

நிரந்தரச் செலவுகள் :

 

 

குட்டை

50,000

 

காற்றுக் கருவிகள்

42,000

 

வலை

4,000

 

மொத்தம்

96,000

 

நடைமுறைச் செவுகள்

 

 

சாணம், நுண்ணூட்டச் சத்து

2,500

 

டீசல் மோட்டார் நீர் ஏற்ற

8,000

 

இறால் குஞ்சுகள்

35,000

 

போக்குவரத்து

10,000

 

காற்றுக் கருவி இயக்க டீசல்

24,000

 

தீவனம்

1,27,687

 

பராமரிப்பு

21,000

 

அறுவடை

9,000

 

விற்பனை மூலம் வரவு

 

4,75,000

மொத்தம்

2,31,187

4,75,000

நிகர லாபம்

 

2,43,813

தொடர்புக்கு
கடல் பொருள் ஏற்றுமதி வாரியம்
சென்னை. தொலைபேசி : 044-26269192
சீனிவாசன், தொலைபேசி : 9043411312
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.09.13 www.vikatan.com

25.09.2013

தேன்.. இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் எத்தனையோ அருட் கொடைகளில் ஒன்று. மருந்தாக, உணவாக, பூஜைக்காக, பிரசாதமாக, அழகுப் பொருளாக.. என இதன் பயன்பாடுகளை, சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இன்றைக்கு சுத்தமான தேன் கிடைப்பதுதான், கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.
யாருக்கு தேன் தேவைப்பட்டாலும்.. “சுத்தமான (கலப்பிடமில்லாத) தேன் எங்கு கிடைக்கும்? என்பதாகத்தான் அவர்களுடைய கேள்வி இரு்ககிறது. ஆம். அந்தளவுக்கு இதில் கலப்படம் நிறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே.. தட்டுப்பாடுதான்!
தேவை இருக்கும் பொருளுக்குத்தானே மரியாதையும் அதிகம். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும், சுத்தமான தேனை உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரி மலையை அடுத்துள்ள மந்திரிப்பாளையம் கிராமத்தைச் சோந்த திருஞானசம்பந்தம். இவருடைய குடும்பம், கடந்த மூன்று தலைமுறையாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறது!
பருத்தி விவசாயியின் வெகுமதி!
எங்க அப்பாவோட தாத்தா பேரு கந்தசாமி. வெள்ளைக்காரன் காலத்தில் இவர், பருத்தி வியாபாரி. ஊர் ஊராக சென்று, விவசாயிகளிடம் பருத்தியை கொள்முதல் செய்யும் போது பல்லடம் பக்கத்தில் ஒரு விவசாயி, பருத்திக் காட்டில் பெட்டிகளை வைத்து, தேன் சேகரித்து கொண்டிருந்ததைப்  பார்த்திருக்கார். அதில் ஆர்வமாகி, அவரிடமிருந்து ஒரு பெட்டியை வாங்கி கொண்டு வந்து, எங்கள் தோட்டத்தில் வைத்திருக்கார். அதில் நன்றாக தேன் கிடைக்கவும், நிறைய பெட்டிகளை வைத்து, தேனை சேகரித்து விற்க ஆரம்பித்திருக்கார். ஒரு கட்டத்தில் நல்ல வருமானம் கிடைத்ததால், பருத்தி வியாபாரத்தை கைகழுவிவிட்டு, முழுநேரமாக தேனீ வளர்ப்பில் இறங்கிவிட்டார்.
‘நல்ல வருமானம் கிடைக்கும் தேனீ வளர்ப்புத் தொழில் தன்னுடையே போய்விடக் கூடாது என்று மகள் வழி பேரனான என் அப்பா வேலுச்சாமியையும் பழக்கப்படுத்திட்டார். எங்க அப்பா, இன்றைக்கு வரைக்கும் தேனீ வளர்த்து, வருமானம் பார்த்திட்டிருக்கார். இப்போ நானும், இதில் இறங்கிவிட்டேன்.
வழிகாட்டிய வானொலி!
ஆரம்பத்தில் அப்பாவும், நானும் எங்களுக்குத் தெரிந்த அளவுக்கு தேனீ வளர்த்து கொண்டிருந்தோம். 95-ம் வருடம் ‘ஆல் இன்டியா ரேடியோவில்” தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பற்றி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பூச்சியியல் துறை பேராசிரியர், முத்துராமன் பேசினார். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டதும், எனக்கு ஆர்வம் அதிகமாகி… அடுத்த நாளே அவரை சென்று பார்த்தேன். நிறைய சந்தேகங்களைத் தீர்த்து வைத்து… அடுக்குத் தேனீ வளர்ப்பில் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்து முறையும் சொல்லிக் கொடுத்தார். அதன்பிறகு, பல்கலைக் கழகத்தில் தேனீ வளர்ப்புப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து… செயற்கை முறையில் ராணித் தேனீயை உருவாக்கும் சூட்சமத்தைக் கற்று கொண்டேன். எட்டாம் வகுப்புகூட தாண்டாதவன் நான். இப்போது, என் தோட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் வந்து, தேனீ வளாப்புப் பயிற்சியை எடுத்துச் செல்கிறார்கள்.
தேனீ வளர்ப்பில் பல நுட்பங்களைத் தெரிந்து கொண்ட பிறகு, வழக்கமாக செய்து கொண்டிருந்த அடுக்குத் தேனீ வளர்ப்பை  விட்டுவிட்டு.. அதிக மகசூல் கொடுக்கும் இத்தாலியத் தேனீக்களை வளர்க்க ஆரம்பித்தேன். இப்போது, நானே, ராணித் தேனீக்களை உருவாக்கி, புது காலனிகளை ஏராளமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அதே மாதிரி, வழக்கமாக புகை போட்டுத்தான் தேன் எடுப்பாங்க. நான் புகை இல்லாமல் தேன் எடுக்கும் மாதிரி, சின்னதாக ஒரு கருவியை உருவாக்கியிருக்கிறேன். அதன் மூலமாக, ஈக்களுக்கு பாதிப்பில்லாமல், தேனை எடுக்க முடிகிறது.
பத்தடி இடைவெளி
3  ஆயிரம் தேனீக்களை உள்ளடக்கிய இத்தாலியத் தேனீப் பெட்டி ஒன்றின் விலை 6 ஆயிரத்து 500 ரூபாய். இதை பூக்கள் அதிகம் உள்ள தோட்டங்களில், நிழலன இடங்களில் ஒன்றரை அடி உயரத்தில் வைக்க வேண்டும். இதற்காக பிரத்யேக ‘ஸ்டாண்டுகள் உண்டு. ஒரு பெட்டிக்கும் அடுத்தப் பெட்டிக்கும் 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். பெட்டியில், எறும்பு பல்லி போன்றவை ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெட்டியை வைத்ததிலிருந்து 130 நாட்களில் 3 ஆயிரம் தேனீக்கள்  12 ஆயிரம் தேனீக்களாகப் பெருகிவிடும். இந்தக் காலகட்டத்திற்கு பிறகு தேனை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையிலிருந்து, 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
ஒவ்வொரு முறை சேகரிக்கும் போதும், 2 கிலோ அளவிற்க்குக் குறையாமல் தேன் கிடைக்கும். பெட்டியில் தேனீக்கள் பெருகிய பிறகு, அதிலிருந்து நாமே அடுத்த பெட்டியை உருவாக்கிக் கொள்ளலாம். தேனீக்கள் இல்லாத காலி பெட்டி 2 ஆயிரத்து 500 ரூபாய் விலையில் கிடைக்கிறது. ஒரு பெட்டியிலிருந்து மாதம் சராசரியாக 4 கிலோ அளவிற்கு தேன் கிடைக்கும். பெட்டியை ஒரே இடத்தில் வைத்திருந்தால், பெரியளவில் லாபம் பார்க்க முடியாது.
பொதுவாக தேனீ வளர்த்தால், ஆண்டு முழுவதும் தேன் கிடைக்காது என்று சொல்வார்கள். காரணம், தேனீக்களுக்கு வேண்டிய பூக்கள் அங்கு தொடர்ந்து இருக்காது. அதனால்தான் தொடர்ந்து தேன் எடுக்க முடியாமல் போகிறது.
ஒவ்வொரு பருவத்திலும் எந்தெந்தப் பகுதியில் பூக்கள் அதிகமாகப் பூக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த இடங்களில்  பெட்டிகளைக் கொண்டு போய் வைக்க வேண்டும். அப்போதுதான் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கும்.
முருங்கை தேனுக்கு கூடுதல் விலை!
நான் எங்கள் ஊரிலிருந்து 150 கிலோ மீட்டர் தூரம் வரை பெட்டிகளைக் கொண்டு போய் வைக்கிறேன். முருங்கை, கொத்தமல்லி, கடுகு, சூரியகாந்தி, பந்தல் பயிர்கள், தென்னை மாதிரியான பயிர்களில் அதிக தேன் கிடைக்கும். அந்த தோட்டங்களில் அதிக தேன் கிடைக்கும். அந்த தோட்டங்களில் பெட்டிகளை வைக்கும் போது, அந்தப் பயிர்களுடைய மகசூலும் கூடுகிறது. அதனால், விவசாயிகள் அவங்க தோட்டத்தில் பெட்டி வைப்பதற்கு ஒத்துழைக்கிறார்கள்.
அரவக்குறிச்சி, மூலனூர் பகுதிகளில் நூற்றுகணக்கான ஏக்கரில் செடிமுருங்கை விவசாயம் நடக்கிறது. அந்த பகுதிகளில் எப்பவுமே அதிக அளவில் தேன் கிடைக்கும். அதனால் அந்தப் பகுதிகளில் பெட்டிகளை வைத்திருக்கிறேன். முருங்கைத் தேன் கெட்டியாகவும் சுவையாகவும் இருப்பதால், அதற்கு கிராக்கியும் அதிகம். உடுமலைப் பேட்டை, பல்லடம் பகுதிளில், வருடம் ஒரு போகம் மானாவாரியாக நாட்டுக் கொத்தமல்லி விதைப்பாங்க. அது பூவெடுக்கும் போது இந்தப் பகுதிகளில் பெட்டிகளை வைத்திடுவேன். பொங்கலூர், சுல்தான் பேட்டை பகுதிளில் வெங்காய சாகுபடி அதிகம். இந்த பகுதிகளிலும் பூவெடுக்கும் பருவத்தில் பெட்டிகளை வைத்திடுவேன்.
மாத வருமானம் 1 லட்சம்
ஒரு பெட்டியிலிருந்து மாதம் சராசரியாக 5 கிலோ தேன் கிடைக்கும். 130 பெட்டிகள் மூலமாக, மாதத்திற்கு சராசரியாக 5 ஆயிரம் கிலோ அளவிற்கு தேன் உற்பத்தி செய்கிறேன். முருங்கைத் தேன் கிலோ 500 ரூபாய்க்கும், மற்ற தேன் கிலோ 250 ரூபாய்க்கும் விலை போகிறது. 6,500 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த இத்தாலியத் தேனீ வளர்ப்பு மூலமாக இப்போது மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கிறேன் என்றார்.
தேனீக்களை போல் நாமும் சுறுசுறுப்பாக இருந்தால்தான் இந்த தொழிலில் லாபம் பார்க்க முடியும். பெட்டியை வைத்துவிட்டு சும்மா உட்கார்ந்திருந்தால் பல நேரங்களில் முதலுக்கே மோசம் வந்துவிடும் என்றார்.
தொடர்புக்கு
ம.வே.திருஞானசம்பந்தம், செல்போன் : 99762 63519
இரா.பிலிப்஼தர், செல்போன் :94429 18685
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.09.13 www.vikatan.com

10.08.2013

வேளாண் பெருமக்களை ஏற்றம் பெற வைக்க ஆயிரமாயிரம் திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளிடம் இருக்கின்றன. பெரும்பாலும் மூடி வைத்த புத்தகங்களாகவே இருக்கும் அவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு, முறையாக முயற்சிகளை முன்னெடுத்தால்.. நிச்சயம் பலன் பெற முடியும். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், முதலூர் கிராம மக்கள் நபார்டு வங்கியின் திட்டத்தை முறையாகப் பயன்படுத்தி, தற்போது வெற்றிக் கொடி  பறக்கவிட்டுக் கொண்டுள்ளனர்.
சாத்தான்குளத்திலிருந்து  பெரியதாழை செல்லும் வழியில், ஆறாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, முதலூர். வீட்ஸ் தொண்டு நிறுவனத்தில் தேனீ வளா்ப்பிற்கான பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள்… அதை பாட்டிலில்  நிரப்புவதில்  மும்முரமாக இருப்பவர்கள் என்று எங்கு திரும்பினாலும் கூட்டம் கூட்டமாக  பெண்கள்தான். பாட்டிலில்  தேன் நிரப்பிக் கொண்டிருந்த பெண்களிடம் பேச்சுக் கொடுத்த போது, ‘விடியல் மகளிர் தேன் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு’ செயலாளர், வேதா நம்மிடம் பேசினார்.
எங்கள் கிராமம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமம். வீட்ஸ் நிறுவனத்திடம் எங்கள் நிலைமையைச் சொன்னதும், நபார்டு வங்கிக்கு கூட்டி சென்றார்கள். வங்கியுடைய தூத்துக்குடி மாவட்ட மேலாளர் நடராஜன், எங்கள் பகுதிகளைப் பார்வையிட்டு, நீர்வடிப் பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்தில் பண்ணைக் குட்டைகள் அமைக்க நிதி கொடுத்தார். இதை நாங்கள் நல்லபடியாக செய்து நிறைய மரங்கள் நட்டு வளர்க்க ஆரம்பித்தோம். அதனால் நபார்டு வங்கிக்கு எங்கள் மேல் நம்பிக்கை வந்தது.
சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதியில் முருங்கை, பனை மரங்கள் அதிகமாக நிற்கும். முழுக்க காடு மாதிரி இருப்பதால், கருவேல மரங்களும் அதில் பூவும் நிற்கும். இது, தேன் சாகுபடிக்கு ஏற்றதாக இருப்பதால்.. நபார்டு வங்கி அதிகாரிகள் எங்கள் பகுதியை ஆய்வு செய்து, ‘தேனீ வளர்ப்புப் பயிற்சி’க்கு என்று நிதி ஒதுக்கினார்கள். தொடர்ந்து பத்து நாள் பயிற்சி கொடுத்தார்கள். பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு தினப்படி கூலியும் கொடுத்ததால் நிறைய பெண்கள் ஆர்வமாக வந்து கலந்து கொண்டார்கள். இப்போது எங்கள் பகுதியில் நிறைய பேர் பயிற்சி எடுத்து கொண்டு, தேன் உற்பத்தி செய்கிறார்கள். அதை விற்பனை செய்வதற்காகவே, ‘விடியல் மகளிர் தேன் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்’ என்று ஆரம்பித்திருக்கிறோம் என்றார்.
தொடர்ந்தவர், எங்கள் சங்கத்தில் 170 உறுப்பினர்கள் இருக்கிறோம். இதில் சேர்வதற்கு இரண்டாயிரம் ரூபாய் கட்டணம். அதை வங்கி கணக்கில் போட்டுவிடுவோம். உறுப்பினராகும் பெண்களுக்கு, பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள தேனீ வளர்ப்புப் பெட்டிகளை கடனாக கொடுப்போம். இதற்கான தவணையை பணமாக வாங்காமல், தேனாக வாங்கிக்கொள்வோம். குழு சார்பிலேயே தேன் எடுக்கும் இயந்திரம், தேன் வளர்ப்புக்குத் தேவையான கருவி எல்லாம் வைத்திருக்கிறோம். எங்க குழு தயாரிக்கும் தேனுக்கு ‘சாரல் தேன்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஸ் குமார்தான் இதை அறிமுகப்படுத்தி வைத்தார். 2011-ம் வருடம் ஆரம்பித்த பயிற்சி, இப்போது வரைக்கும் சென்று கொண்டியிருக்கிறது. நிறைய பெண்கள் ஆர்வமாக வந்து கலந்து கொள்கிறார்கள் என்றார் வேதா.
வீட்டிற்கு பின் ஒரு ஏக்கர் நிலமிருக்கு. அதில் செடிமுருங்கை மரங்கள் நிற்கிறது. பயிற்சி எடுத்த கையோடு பத்து தேனீப் பெட்டிகளை அங்கே வைத்துவிட்டேன். இப்போது மாதம் 15 லிட்டருக்குக் குறையாமல் தேன் கிடைக்கிறது. முருங்கையிலும் மகசூல் கூடியது. பயிர்களில் பூ பூக்கும் காலத்தில்தான் தேன் மகசூல் நிறைய கிடைக்கும். பூ பூக்காத காலங்களில் தேனீப் பெட்டிக்குள்  சீனியைக் கரைத்து வைப்பார்கள். இந்த சீனிதான், தேனீக்களுக்கு தற்காலிக உணவு. இது மூலமாகவும் தேன் கிடைக்கும். ஆனால், இது ஒரு வகையில் கலப்படம்தான். செயற்கை தேன் என்று கூட சொல்லலாம். இது சில பகுதிகளில் நடக்கிறது. அந்த மாதிரியெல்லாம் நாங்கள் செய்வதில்லை.
சாத்தான்குளம், தேனீப் பெட்டியைக் கழட்டிட்டு போய், கேரள மாநிலம் நெலம்பூர் பகுதியில் இருக்கும்  தோட்டங்களில் வைத்திடுவோம். அதற்கு, வீட்ஸ் நிறுவனத்துக்காரர்களே உதவி செய்கிறார்கள். அந்தப் பகுதிகளிலும் எங்களுக்கு தேன் உற்பத்தி நடப்பதால்.. வருடம் முழுக்க  வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. கடந்த வருடம் சென்னையில் நபார்டு வங்கி நடத்திய கண்காட்சியில் ஆயிரம் லிட்டர் தேன் விற்பனை செய்திருக்கிறோம் என்று பூரிப்போடு சொல்கிறார், தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வரும் அடையல் கிராமத்தை சேர்ந்த சாந்தி.
வீட்ஸ் நிறுவன இயக்குநர் சார்லஸ், எங்களது நிறுவனம் பெண்களின் வளர்ச்சியில் தனிகவனம் செலுத்தி வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீட்ஸ் நிறவனமும், நபார்டு வங்கியும் சேர்ந்து உடன்குடி, சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதியின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கத்தில் ஆய்வு செய்தோம். அப்போதுதான் இந்தப் பகுதியில் முருங்கை, பனை, வேம்பு என்று நிறைய பயிர்களில் பூ பூத்து தேன் உற்பத்திக்கு சாதகமான சூழல் நிலவுவதைப் பார்த்தோம். உடனே நபார்டு வங்கியும் தேன் வளர்ப்பு பயிற்சிக்கான நிதியை ஒதுக்கியது. இன்றைக்கு இந்தப்பகுதி பெண்கள் பொருளாதார தன்னிறைவு அடைந்து வருவதற்கு நபார்டு வங்கிதான் காரணம் என்றார்.
குட்டி மார்த்தாண்டம்.. இதுதான் லட்சியம்..!
மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் மெலட்டூர், இரா.நடராஜனிடம் பேசிய போது, “நபார்டு வங்கியின் குறுந்தொழில்கள் முன்னேற்றறத்திற்கான பயிற்சித் திட்டத்தின் (எம்.இ.டி.பி)கீழ், கிராம மக்களுக்கு  உதவ எண்ணியிருந்தோம். அப்போதுதான் உடன்குடி, சாத்தான்குளம் சுற்றுவட்டாரப்பகுதியில்  தேனீ வளர்ப்புக்குச் சாதகமான சூழல் இருப்பதுதெரிந்தது. அதனால், தேனீ வளர்ப்புக்கு முதலூரைத் தோந்தெடுத்தோம். இந்தப் பயிற்சியை, பெயருக்காக நடத்தாமல், உண்மையான பலன் அளிக்கும் பயிற்சியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து… மார்த்தாண்டத்திலிருந்து ஒரு பயிற்றுநரையும் வரவழைத்து, சம்பளம் கொடுத்து, இப்பகுதி மக்களுக்கு தேனீ வளர்ப்புப் பயிற்சியைக் கொடுத்தோம்.
அடுத்தபடியாக, வங்கிக் கடனுக்கு வழி வகை செய்து, மார்த்தாண்டம் பகுதியிலிருந்து தேனீப் பெட்டிகள் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்தோம். சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தோம். இத்தகைய உதவிகளின் மூலமாக நாங்கள் வெறும் கோடுகள்தான் போட்டோம். முதலூர் மக்களின் விடாமுயற்சிதான் அவர்களை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது என்றார்.
தொடர்புக்கு
சார்லஸ், செல்போன் : 94435 83458
வேதா, செல்போன் : 98421 84881
மெலட்டூர். இரா.நடராஜன், செல்போன் : 94433 – 80627
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.08.13 www.vikatan.com

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013