முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: கண்டுபிடிப்புகள் 
வெற்றிக் கதைகள் - 2012 நன்றி பசுமை விகடன் ... vikatan
1 சிறிய யோசனை பெரிய பலன்
1 உழவு செய்யாமலே விதைக்கலாம்...புழுதியில் பொன் விளைவிக்கும் புது இயந்திரம்!
1 தேங்காய் வெட்டும் கருவி
1 ளைக் கவலை, இனி இல்லை... அரூர் விவசாயியின் அற்புதக் கருவி...

சிறிய யோசனை பெரிய பலன்

10.4.2012

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலூகா கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்த பாலசுப்ரமணியன் காலை வேளையன்றில் தேடிச்சென்று சந்தித்தபோது வரப்பில் அமர்ந்தபடியே பேச ஆரம்பித்தார். பாலசுப்ரமணியன். “2 ஏக்கர்ல கரும்பும் 6 ஏக்கர்ல நெல்லும் சாகுபடி செய்து கொண்டு இருக்கேன். இதெல்லாம் தனியா இருக்குற ஒரு ஏக்கர்ல உளுந்து சோளம் போட்டடு இருக்கேன். தோட்டத்தோட வேலி ஒரத்துல நாட்டுத்தேக்கு, வேங்கை மரங்களைக் கலந்து நட்டு வைத்து இருக்கேன். இரண்டும் சேர்த்து மொத்தம் 70 மரங்கள் இருக்கு.

தோட்டத்துக்கு நாலு பக்க ஓரமுமே மேடா இருக்கு. நடுப்பகுதி பள்ளமா இருக்கு. அதனால, வேலி ஓர மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுறது ரொம்ப சிரமமா இருந்தது. அதில்லாம இப்போ இருக்கிற கரன்ட் பிரச்சனையில் பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுறதே பெரிய விஷயமா இருக்கு. இதுல மரங்களுக்கு எப்படி பாய்ச்சுறது. ஆனா, இந்த கரன்ட் பிரச்சனையெல்லாம் வர்றதுக்கு முன்னயே தனித் தொழில்நுட்பத்தை நான் கண்டுபிடிச்சு பயன்படுத்த ஆரம்பிச்சுட்டேன். ஆரம்பத்தில், மண்பானையில சின்ன ஓட்டை போட்டு மரத்துக்குப் பக்கத்தில் வைத்து தண்ணீர் நிரப்பி இருந்தேன். அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் சொட்டிட்டே இருக்கும். அதுல என்ன பிரச்சனைன்னா, அடிக்கடி பானையில இருக்குற ஓட்டயில் மண் அடைச்சுக்கும். அதைச் சரி பண்றது பெரிய வேலையாயிடுச்சு.

இதுக்கு மாற்றா என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருந்தேன். அந்த சமயத்துல நண்பர் ஒருத்தர் உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில இருந்தார். அவரைப் பார்க்க போயிருந்தப்போ, குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டிருந்தாங்க. அதுல சொட்டு சொட்டா குளுக்கோஸ் தண்ணீர் விழுந்துக்கிட்டிருந்துச்சு, அதைப் பார்த்ததும் எனக்கு பொறி தட்டிடுச்சு. அந்த பாட்டிலையும் டியூபையும் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்ச முடியுமானு யோசிச்சு செய்து பார்த்தேன். அது சரியா அமைஞ்சுடுச்சு. அடிப்பாகம் அகற்றப்பட்ட மினரல் வாட்டர் பாட்டில்களைக் கவிழ்த்து, கட்டித் தொங்கவிட்டு, அதில் குளுக்கோஸ் ஏற்றப் பயன்படும் குழாய்களைச் செருகி வைத்திருந்தார். பாட்டிலில் நிரப்பப்பட்டிருந்த தண்ணீர், குழாய்கள் மூலமாக சொட்டிக் கொண்டிருந்தது.

தொடர்ந்தவர், “குளுக்கோஸ் ஏத்தின பிறகு அந்த பாட்டில்களை சும்மாதான் போட்டு வைத்து இருப்பாங்க அதனால இந்த டியூப்கள் இலவசமாகவே கிடைக்கும், ஆனா, குளுக்கோஸ் பாட்டில்களோட கொள்ளளவு குறைந்தளவு அந்த பாட்டில் நமக்குப் பயன்படாது. அந்த டியூப் மட்டும் தான் பயன்படும் 2 லிட்டர் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் கூல்டிரிங்க்ஸ் பாட்டில், வாட்டர் பாட்டில்களைப் பயன்படுத்திக்கலாம். பாட்டில்களோட அடிப்பாகத்தை நீக்கிடணும். டியூபை நல்லா சுத்தமா கழுவி பாட்டிலோட மூடிப்பகுதிக்கு அருகில் இணைக்கணும். இந்த டியூப்ல தண்ணீர்யோட அளவைக் கட்டுப்படுத்தறதுக்கு உருளை மாதிரியான ஒரு அமைப்பு இருக்கும். அது மூலமா ஒரு நிமிஷத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் விழுகுற மாதிரி அமைச்சுக்கிட்டா போதும் சொட்டுநீர்ச் சாதனம் தயார்.

கொஞ்சம் வளர்ந்த மரம்னா, அதோட கிளையிலேயே கம்பி மூலமா இந்த பாட்டிலைக் கட்டித் தொங்க விட்டுடலாம். நாம எளிதா தண்ணீர் நிரப்புற உயரத்துல தொங்க விட்டுக்கணும். சின்னக் கன்றுகளா இருந்தா பக்கத்துல ஒரு குச்சியை நட்டு, அதுல கட்டித் தொங்க விடலாம். காத்துல ஆடாம இருக்கற மாதிரி டியூபையும் மரத்தோட அடிப்பாகத்துல கட்டிடணும். கட்டும்போது டியூப் நசுங்கிடக் கூடாது. மரங்கள் பெருசான பிறகு, பெரிய கேன்களைத் தொங்க விட்டுக்கலாம். ஒரு தடவை தண்ணீர் நிரப்பிட்டா இரண்டு நாளைக்கு சொட்டிக்கிட்டே இருக்கும். அதனால இரண்டு நாளைக்கு ஒரு தடவை பாட்டில்கள நிரப்பினா போதும். இந்த மாதிரி தண்ணீர் விடுறப்போ சீரான இடைவெளியில் தண்ணீர் கிடைச்சுக்கிட்டே இருக்கும். அதனால வேருக்குத் தேவையான ஈரம் இருந்துக்கிட்டே இருக்கும். களைகளும் மண்டாது. 70 மரத்துலயும் இப்படி பாட்டில்களைக் கட்டி வைத்து இருக்கேன். அதை நிரப்புறத்துக்கு எனக்கு ஒரு மணி நேரம் தான் ஆகுது. அதோட கரன்ட் பிரச்சனை பத்திக் கவலையில்லை. எனக்கும் உடற்பயிற்சி மாதிரி அமைஞ்சுடுது .

தொடர்புக்கு

பாலசுப்ரமணியன்
திருவிடைமருதூர் தாலூகா
கோவிந்தபுரம் கிராமம்
தஞ்சாவூர் மாவட்டம்
செல்போன் 9965674223


உழவு செய்யாமலே விதைக்கலாம்...புழுதியில் பொன் விளைவிக்கும் புது இயந்திரம்!

தேதி : 10.03.2012

''புழுதி நிலத்தில் வரிசை முறையில் நெல் விதைக்க புதிதாக ஒரு கருவி வந்திருக்கிறது. அதன் மூலமாக விதைத்ததில் குறைவானச் செலவு, உழைப்பிலேயே ஏக்கருக்கு 36 மூட்டை மகசூல் கிடைக்கிறது. இந்தக் கருவி, தனக்கு கண்கண்ட தெய்வம்'' என்று சிலாகித்துப் பாராட்டுகிறார், தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி.நெல் சாகுபடியைப் பொறுத்தவரை நாற்று நடவு முறையைவிட, நேரடி விதைப்பு முறைதான் சிறப்பானது.நாற்று நடவுக்காக சேற்று உழவு செய்ய, நிறைய தண்ணீர் தேவைப்படும். நேரடி விதைப்பு முறையில் தண்ணீரே தேவைப்படாது. புழுதி உழவு ஓட்டி அப்படியே விதைத்துவிடலாம். ஒரு மாதம் வரைக்கும் தண்ணீர் இல்லையென்றாலும்கூட தாங்கும்.

அதுபோலவே, கனமழைக்கும் தாக்கு பிடிக்கும். அதேசமயம், வரிசையாக இடைவெளிவிட்டு விதைத்தால்தான் சூரிய ஒளியும், காற்றோட்டமும் பயிருக்கு நன்றாக கிடைக்கும்.களை எடுப்பதற்கும் வசதியாக இருக்கும்.கைகளால் தெளிக்கும்பொழுது இதெல்லாம் சாத்தியமில்லாத விஷயமாக இருந்ததாலேயே, புழுதி நேரடி விதைப்பை யாரும் கடைபிடிக்காமல் இருந்தார்கள். ஆனால், இப்பொழுது வந்திருக்கும் கருவி, எல்லா குறைகளையும் போக்கிவிட்டது.மானாவாரி விவசாயிகள் மட்டுமல்லாமல், இறவைப் பாசன விவசாயிகள்கூட இந்தக் கருவியைப் பயன்படுத்தி, தண்ணீரைச் சிக்கனம் செய்யலாம். அதோடு, நிறைய செலவும் மிதம். ஏறத்தாழ பாதி செலவு குறைந்துவிடும் என்ற ஆசைத்தம்பி, நெல் விதைக்கும் கருவி பற்றி விவரித்தார்.

ஒரே நேரத்தில் ஒன்பது வரிசைகள்  
கருவியின் மேல்புறம், விதைகளைப் போடுவதற்காக நீண்ட பகுதி இருக்கிறது. இதில் விதைகளை நிரப்பிக் கொள்ள வேண்டும். பிறகு, கருவியை டிராக்டரின் பின்பக்கத்துடன் இணைத்து டிராக்டரை ஓட்டிக் கொண்டே சென்றால் விதைகள் இருபத்தி ரெண்டரை சென்டி மீட்டர் இடைவெளியில் வரிசையாக விழுந்து கொண்டே வரும். ஒரே சமயத்தில் 9 வரிசைகள் விதைக்கலாம். வரிசைக்கு வரிசை உள்ள இடைவெளியை நமது தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு மணி நேரத்துக்குள் விதைத்துவிடலாம்.

உழவு செய்யாமலும் விதைக்கலாம்
இந்தக் கருவியில், தாள் நீக்கி பிளேடுகள் ஒன்பது வைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலமாக நெல் அறுவடை செய்த நிலத்தில், புழுதி உழவு ஓட்டாமலேகூட விதைக்கலாம். இந்த பிளேடுகள் நிலத்தில் உள்ள தாள்களை வரிசையாக அறுத்து இரண்டு பக்கமும் போட்டுக் கொண்டே போகும். இந்தத் தாள்கள், மூடாக்காகப் பயன்பட்டு, களைகளைக் கட்டுப்படுத்தும். தாள் நீக்கியை இயக்குவதாக இருந்தால், 50 குதிரைத்திறன் கொண்ட டிராக்டர் தேவை. உழவு ஓட்டிய நிலமாக இருந்தால், தாள் நீக்கி பிளேடை இயக்க வேண்டியதில்லை. இதற்கு 35 குதிரைத்திறன் கொண்ட டிராக்டரே போதுமானது.

பிளேடுக்கு பின்புறம், சற்றுத் தள்ளி கொலு இருக்கும். இந்த கொலு, சுமார் 2 சென்டி மீட்டர் ஆழத்துக்கு மண்ணைக் கீறிக் கொண்டு போகும். அப்படிக் கீறுவதால் ஏற்படும் குழியில் கொலுவின் பின்புறம் இணைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து விதைகள் விழும். ஒரு குழாய்க்கும், இன்னொரு குழாய்க்கும் இருபத்தி இரண்டரை சென்டி மீட்டர் இடைவெளி இருக்கும். விதையின் எண்ணிக்கையையும் நமது தேவைக்கு ஏற்ப நிர்ணயம் செய்து கொள்ளலாம்.  

அடியுரமும் இடலாம்
விதைக் குழாயின் பக்கவாட்டில் 2 சென்டி மீட்டர் இடைவெளியில் உரம் விழுவதற்கான குழாய் அமைக்கப்பட்டிருக்கிறது. கருவியின் மேல்புறம், உரம் போடுவதற்கென்றே அமைக்கப்பட்டிருக்கும் பாகத்தில் உரத்தைக் கொட்டினால், இந்தக் குழாயின் வழியாக சீராக உரம் விழுந்து விடும். அதனால், விதைக்கும் போதே, அடியுரத்தையும் கொடுத்துவிட முடியும் (இக்கருவி மூலமாக ரசாயன உரத்தைத்தான் தர முடியும். தொழுவுரம் இட விரும்புபவர்கள், விதைப்புக்கு முன்பாக புழுதி உழவு ஓட்டும்போதே கொடுத்துவிட வேண்டும்). கருவியின் செயல்பாடுகள் பற்றி, செய்முறை விளக்கம் சொன்ன ஆசைத்தம்பி, அடுத்து இக்கருவியைப் பயன்படுத்தி, தான் சாகுபடி செய்த அனுபவத்தை விவரித்தார்.

உரச்செலவு மூன்று மடங்கு குறைகிறது
ஏக்கருக்கு 500 கிலோ என்கிற கணக்கில் தொழுவுரத்தைப் போட்டு, ரோட்டோவேட்டரில் ஒரு சால் புழுதி உழவு ஓட்டியுள்ளார். அதன்பிறகு இந்தக் கருவியில் 12 கிலோ ஏ.டி.டீ-36 ரக விதைநெல்லையும், 16 கிலோ டி.ஏ.பி. உரத்தையும் நிரப்பி, டிராக்டர் மூலமாக இயக்கி, இருபத்தி இரண்டரை சென்டி மீட்டர் இடைவெளியில்தான் விதைத்ததாக கூறுகிறார். விதைத்த 10-ம் நாள் லேசாக மழை பெய்துள்ளது. அதுக்குப் பிறகு 15 நாளுக்கு ஒரு தடவைதான் தண்ணி பாய்ச்சினார். பயிர் நன்றாக வளர்ந்ததால், குறைவாகதான் மேலுரம் தேவைப்பட்டுள்ளது. நடவு முறையாக இருந்தாலும், தான் பயன்படுத்தியது போல மூன்று மடங்கு அளவுக்கு உரம் தேவைப்பட்டிருக்கும்.

சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் சீரா கிடைத்ததால், பூச்சி, நோய்த் தாக்குதலும் இல்லை. வழக்கமான நடவுமுறையில் நெல் சாகுபடி செய்தால் 120-ம் நாட்கள்தான் அறுவடைக்கு வரும். ஆனாலும், நேரடி விதைப்பு முறையில் 110-ம் நாட்களிலேயே அறுவடைக்கு வந்துவிட்டது என்றார், மகிழ்ச்சியாக.
தஞ்சாவூர் மாவட்டம், காட்டுத்தோட்டத்தில் உள்ள மண், நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவருமான சந்திரசேகர் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான தானிய உற்பத்திப் பெருக்கத் திட்டத்தின் உழவியல் விஞ்ஞானி குமரன் ஆகியோர்தான் இந்த நடவு இயந்திரத்தை ஆசைத்தம்பிக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

உளுந்தும் விதைக்கலாம்
அதைப் பற்றிப் பேசிய குமரன், சேற்று உழவு செய்தால், மண்ணின் இயல்பானத் தன்மை மாறிவிடும். மண் இறுகிவிடுவதால், அதன் கீழ் தொடர்ச்சி இல்லாமல் போய் விடும். அதனால் மண் வளம் குன்றுவதோடு, மழைநீர் ஊடுருவ முடியாத சூழ்நிலை உருவாகும். புழுதி உழவு ஓட்டும்போது இதுபோன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும். புழுதி நிலத்தில் இயந்திரத்தின் மூலம் வரிசை முறையில் நேரடி நெல் விதைப்பு செய்வது மிகவும் சிறப்பானது. இந்த இயந்திரத்தின் மூலம் புழுதி நிலத்தில் வரிசை முறையில் உளுந்தும் விதைக்கலாம் என்றவர், தஞ்சாவூர் மாவட்டம் மாத்தூர் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பெருமாள் என்பவர், தன்னுடைய நிலத்தில் நெல் அறுவடையை முடித்துவிட்டு, உழவு ஓட்டாமலே, இந்த இயந்திரத்தின் மூலம் உளுந்து விதைத்துக் கொண்டிருந்ததை செயல்விளக்கமாகவே காண்பித்தார்.

ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்
தொடர்ந்து பேசிய குமரன் இங்கு முக்கால் அடி இடைவெளியில், வரிசையாக நெல் தாள்களை நீக்கி, உளுந்து விதைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை உளுந்து போதுமானது. வரிசைக்கான இடைவெளியை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இயந்திரத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்.
தஞ்சாவூர் பகுதி விவசாயிகள், விதைப்புக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே எங்களிடம் பதிவு செய்து கொண்டால், வாடகை இல்லாமலே இயந்திரத்தை அனுப்பி வைப்போம். போக்குவரத்துச் செலவை விவசாயிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தொடர்புக்கு, 
ஆசைத்தம்பி, செல்போன்: 96983-69927
குமரன், செல்போன்: 99650-97161
மண், நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம்,
தஞ்சாவூர். தொலைபேசி: 04362-268200


தேங்காய் வெட்டும் கருவி

தேதி : 10.03.2012

'தேவைகள்தான் கண்டுபிடிப்புகளின் தாய்’ என்பார்கள். பெரிய பெரிய நிறுவனங்களால் எவ்வளவுதான் நவீனமாக வடிவமைக்கப்பட்ட கருவிகளாக இருந்தாலும், அதில் பல விவசாயிகள் திருப்தி அடைவதில்லை என்பதே உண்மை. அத்தகையோர், தாங்களே விஞ்ஞானியாக உருவெடுத்து, தங்களின் தேவைக்கு ஏற்றக் கருவிகளை வடிவமைத்துவிடுவார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், ஒண்டிப்புதூர் அருகேயுள்ள அத்தப்பகவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த  முன்னோடி இயற்கை விவசாயி சுப்பையன், அப்படி ஒரு விவசாய விஞ்ஞானிதான். இவர் வடிவமைத்திருப்பது, சிறிய அளவிலான தேங்காய் வெட்டும் கருவி. இவர், 25.09.07 தேதியிட்ட இதழில் வெளிவந்த 'பல பயிர் சாகுபடி, பறக்குது வெற்றிக்கொடி’ என்கிற கட்டுரை மூலம், பசுமை விகடன் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான்.

தோட்டம் தேடிச் சென்று சுப்பையனைச் சந்தித்தோம். சந்தோஷம் பொங்கப் பேசியவர், 'விவசாயமே செய்ய முடியாத அளவுக்கு ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது. அதனால் வந்த விலைக்கு தேங்காயை விற்பனை செய்யும் நிலைமைக்கு விவசாயிகள் வந்துவிட்டார்கள். 'கொஞ்சம் ரிஸ்க்... நிறைய லாபம்’கிறதுதான் தன்னுடைய கொள்கை. அதனால், உரித்த தேங்காயை தானே டவுனுக்குக் கொண்டு சென்று நேரடியாக விற்பனை செய்வதாக கூறுகிறார். கொப்பரையாகவும் மாற்ற , நல்ல விலை கிடைக்கும்போது விறபதாக கூறுகிளார். சிலசமயம், கொப்பரையை ஆட்டி, எண்ணெயாகவும் விற்கிறார். இந்த முயற்சி காரணமாக, வழக்கத்தைவிட, முப்பது சதவிகிதத்துக்கும் மேல் கூடுதல் லாபம் கிடைக்கின்றது என்கிறார் சுப்பையன்.

ஆட்கள் அதிகம் தேவையில்லை 
வழக்கமான முறையில் கொப்பரை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூர்மையான கடப்பாரையை தரையில் பதித்து, அதில் மட்டையை உரித்து, தேங்காயை சரிபாதியாக உடைத்து, நான்கு நாள் காய வைக்க வேண்டும். அதற்குப்பிறகு கத்தியை வைத்து பருப்பைத் தோண்டி எடுக்க வேண்டும். அனுபவம் உள்ள ஆட்கள் கிடைத்தால்தான், இதில் சுலபமாக தேங்காயை உரிக்க முடியும். கத்துக்குட்டியாக இருந்தால், வினையாகிப் போய்விடும். வயிற்றில், நெஞ்சில் கடப்பாரை பாய்ந்துவிடும்.

ஆள் பற்றாக்குறை இருபபதால், யோசித்த போது உதிர்த்தது தான் 'தேங்காய் வெட்டும் கருவி'. கொஞ்சம் கொஞ்சமாக மெருகேத்தி, சுலபமாக இயக்குகின்ற மாதிரியான கருவியாக அதை வடிவமைத்ததாக கூறுகிறார். பறித்த முழுதேங்காயை, இந்தக் கருவியில் வைத்து அழுத்தினால் தேங்காய் இரண்டாக பிளந்துவிடும். மட்டையை உரிக்காமலே பருப்பை எடுத்துவிடலாம்'' என்ற சுப்பையன், அக்கருவியை வடிவமைக்கும் முறையையும் தெளிவாகச் சொன்னார். தொடர்ந்தவர், ''மட்டை மற்றும் சிரட்டை இரண்டும் பிரிக்காமல் இருப்பதால், இந்த மட்டையிலிருந்து நார் எடுக்க முடியாது. எரிபொருளுக்குத்தான் விற்பனை செய்ய முடியும். செங்கல் சூளை மாதிரியான விறகு தேவையுள்ளவர்கள், ஒரு மட்டை 1 ரூபாய் 55 பைசா விலையில் வாங்கிக் கொள்வார்கள். வழக்கமான முறையில் உரித்து விற்கும்போது மட்டைக்கு 70 பைசா, சிரட்டைக்கு 1 ரூபாய் 20 பைசா என்று மொத்தம் 1 ரூபாய் 90 பைசா கிடைக்கும். உரிப்பதற்கு கூலி 35 பைசா போக, ஒரு மட்டையில் இருந்து 1 ரூபாய் 55 பைசா கிடைக்கும்.

கருவி மூலமாக வெட்டும் பொழுது, கூலி கூடுதல் செலவுதான். ஆனாலும், வழக்கமான முறையைவிட ஒரு நாளைக்கு மூன்று மடங்கு தேங்காயை அதிகமாக வெட்ட முடியும். இது லாபமான விஷயம்தானே. இதுமட்டுமில்லாமல், கடப்பாரையில் உரிக்க முடியாத காய்களையும் எளிதாக இக்கருவி மூலம் உடைத்துவிடலாம். ஆகக்கூடி, இந்தக் கருவியைப் பயன்படுத்தும் பொழுது பத்து ஏக்கரில் இருந்து, வருஷத்துக்கு 70 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது'' என்ற சுப்பையன்,
''இதுவரைக்கும் 30 கருவிகளை இவரே தயாரித்து விவசாயிகளுக்குக் கொடுத்திருப்பதாக கூறுகிறார். சூழ்நிலை காரணமாக இவரால் தொடர்ந்து தயாரிக்க முடியவில்லை. அதனால்தான் வடிவமைக்கிற தொழில்நுட்பத்தையே இவர் கற்றுக் கொடுக்கிறார். எல்லா விவசாயிகளும் இதைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பது இவருடைய  ஆசை'' என்று பெருமையோடு விடைகொடுத்தார்.

பல்கலைக்கழகமே தயாரிக்கும்
சுப்பையனின் தோட்டத்திலிருந்தே, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர். முருகேசபூபதியை அலைபேசியில் தொடர்பு கொண்டு இக்கருவி பற்றி சொன்னோம். ஆச்சரியப்பட்டவர், ''நான் டெல்லியில் இருக்கேன். ஊர் திரும்பினதும், பொறியியல்துறை விஞ்ஞானிகளோடு நேரில் போய் அந்தக் கருவியைப் பார்க்கிறேன். எங்களுக்கு திருப்தியாக இருந்தால். சுப்பையன்கிட்ட இருந்து காப்புரிமை வாங்கி, பல்கலைக்கழகம் மூலமாவே அதைத் தயாரிக்க ஏற்பாடு செய்கிறோம். அந்தக் கருவிக்கு சுப்பையன் பெயரையேகூட வைக்கலாம். இதுமாதிரியான கிராமத்து விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்த பல்கலைக்கழகம் எப்பவுமே தயார்'' என்று சொன்னார். சீக்கிரமே களத்துக்கு வரட்டும் தேங்காய் வெட்டும் இயந்திரம்.

தொடர்புக்கு,
சுப்பையன்,  
செல்போன்: 93632-28039.


களைக் கவலை, இனி இல்லை... அரூர் விவசாயியின் அற்புதக் கருவி...

தேதி : 10.03.2012

பண்ணைக் கருவிகள் சிறப்பிதழ் 
களைகளை அழிக்க சிரமப்படும் விவசாயிகளுக்காகவே நவீன கருவிகள் பலவும் சந்தையில் கிடைக்கின்றன. என்றாலும், 'இன்னும் எளிமையான களைக் கருவி இருந்தால் நன்றாக இருக்குமே...’ என்கிற எண்ணமே விவசாயிகளிடம் பரவலாக இருக்கிறது. இப்படி கவலைப்பட்ட தர்மபுரி மாவட்டம், அரூர், முத்துக்கவுண்டன் நகர் விவசாயி குமார், தானே களத்தில் இறங்க இப்போது விவசாயிகளின் மொத்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்விதத்தில் களையெடுக்கும் கருவியை வடிவமைத்து பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்.

கலாம் பாராட்டிய கருவி
களைக் கருவிகள் பலவற்றிலும் நடைமுறைச் சிக்கல்கள் நிறையவே இருக்கிறது. அதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று யோசித்து செயல்படுத்தியதில் உருவானதுதான் இந்தக் கருவி. ஐந்து வருடமாக நிறைய மாற்றங்கள், மேம்பாடுகளை செய்து, இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார். 2008-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் காப்புரிமையையும் வாங்கியிருக்கிறார். அந்த வருடம் சென்னையில் நடந்த கண்காட்சியில் இதைப் பார்வையிட்ட அப்துல் கலாம், நிறையவே பாராட்டினார் என்று சொன்ன குமார், மஞ்சள் தோட்டத்தில் அந்தக் கருவியை இயக்கியும் காட்டினார். களத்தில் இறக்கப்பட்ட நொடிகளிலேயே களைகள் தூள் தூளாகி மண்ணோடு கலந்து விட்டன.

ஒரு மணி நேரத்தில் 30 சென்ட்
தொடர்ந்து பேசிய குமார், கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, மக்காச்சோளம், சூரியகாந்தி, பாக்கு, தென்னை, பருத்தி, மிளகாய், பூந்தோட்டம், பழத்தோட்டம் என்று அனைத்துக்கும் இந்தக் கருவி மூலம் களை எடுக்கலாம். கருவியை இயக்குவதற்கு வசதியாக ஒவ்வொரு வரிசைக்கும் இடையில் 25 அங்குல இடைவெளி இருக்க வேண்டும். தேவைப்பட்டால் இந்த இடைவெளியைக் கூட்டியும் குறைத்தும் கருவியைத் தயாரித்து கொடுக்க முடியும். 3 குதிரைத் திறன் இன்ஜின் இருப்பதால், ஒரு மணி நேரத்தில் சராசரியாக 30 சென்ட் பரப்பளவில் களை எடுக்கலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போதுமானது. 30 ஏக்கருக்கு ஒரு முறை களை பறிக்கும் பிளேடுகளை மாற்ற வேண்டும். இதுக்கு 350 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை செலவாகும்.

சுலபமாக இயக்கலாம்
பெரும்பாலான களை மெஷின்களை இயக்குவது, கடினமாக இருக்கும். ஒரு வயலில் இருந்து இன்னொரு வயலுக்கு மாறும்போது அடுத்தவர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். ஓரப்பகுதிகளில் மெஷினை திருப்பி அடுத்த வரிசைக்குப் போகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இந்த எல்லா பிரச்னைகளுக்குமே இவரின் கருவியில் தீர்வு இருக்கிறது. சக்கரங்கள் எல்லாம் இரும்பு பிளேட்டால் செய்திருப்பதால் முன்னேறிச் செல்வது சுலபம். வரப்புகளையும் சுலபமாக கடக்கலாம். பெண்களும் சுலபமாக இதை இயக்கலாம். ஒரே கையாலயும் இயக்க முடியும்.
வண்டியின் வேகத்தைத் தேவைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ள முடியும். இதில் ‘ஆட்டோ கிளட்ச்’ தொழில்நுட்பம் இருப்பதால் வேகத்துக்கேற்ற மாதிரி மாறிக்கொள்ளும். ஒரே லீவர் மூலமாகவே கியரை மாற்றாமலே முன்பும் பின்பும் இயக்க முடியும் (இன்சிடென்ட் ரிவர்ஸ் அண்டு ஃபார்வர்டு சிஸ்டம்). பிளேடில் சிக்காமல் தப்பும் ஒரு சில களைச் செடிகளை இந்த வசதியின் மூலம் முன்னும் பின்னும் நகர்த்தி தூளாக்கிவிடலாம்.

பரிந்துரை செய்யும் பல்கலைக்கழகம்
செடிகளின் வரிசையை ஒட்டி மிக நெருக்கமாக களை எடுத்தாலும், செடிகளுக்குப் பெரும்பாலும் பாதிப்பு வராது. வாய்க்கால் கரைகளைக் கடக்கும்போது மட்டும் செயல்படுகிற மாதிரி, பிளேடு பகுதியில் 'ஃப்ளோட்டிங் மெக்கானிசம்’ அமைக்கப்பட்டிருக்கும். அதனால் கரைகள் சேதமாகாது. அதனால் களை பறிப்புக்குப் பிறகு பாசனம் செய்வதற்கும் சிரமம் இருக்காது. நிலத்தின் தன்மைக்கு ஏற்ற மாதிரி வெட்டும் ஆழத்தைத் தானாகவே மாற்றி அமைத்துக்கொள்ளும் 'ஆட்டோ டெப்த் கன்ட்ரோல்’ நுட்பமும் இருக்கிறது. இதை நாமே மாற்றிக் கொள்வதற்கான (மேனுவல்) வசதியும் இருக்கிறது என்ற குமார், நடைமுறையில் இருக்கும் கருவிகளில் இவரின் கருவிதான் சிறப்பானது என்று கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் சான்றிதழ் கொடுத்திருக்கிறது. அதோடு, 'குறைந்த அதிர்வு கொண்ட கருவி, திருப்புவது மிக எளிது, கரைகள் மற்றும் ஓரப்பகுதிகளிலும் எளிமையாக இயக்க முடியும், நெருக்கமாகக் கரைகளைச் சேதப்படுத்தாமல் களை பறிக்கும்’ என்ற பரிந்துரையையும் பல்கலைக்கழகம் வழங்கியிருக்கிறது என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

நிறைவாகப் பேசிய குமார், ''இதன் விலை 63 ஆயிரம் ரூபாய். ஐம்பது சதவிகிதம் அரசு மானியம் கிடைக்கிறது. கிராமப்புறத்தில் மகளிர் குழுவெல்லாம் இதை வாங்கி வாடகைக்கு விட்டோ களைகளை எடுத்துக் கொடுத்தோ வருமானம் பார்க்க முடியும். மூன்று பெண்கள் மட்டும் இருந்தாலே சுழற்சி முறையில் நாள் முழுவதும் தொடர்ந்து ஓட்ட முடியும் என்கிற யோசனைகளையும் சொன்னவர், ''அடுத்த கட்டமாக, எளிமையாக நிலக்கடலை பறிக்க, பருத்திச் செடிகளில் இருந்து பஞ்சுகளை மட்டும் சேகரிப்பதற்கான கருவிகளை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக கூறுகிறார். அரசாங்கம் உதவி செய்து ஊக்கம் கொடுத்தால் சீக்கிரம் அதையெல்லாம் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துவிடுவதாக கூறுகிறார் எதிர்பார்ப்புகளோடு.

தொடர்புக்கு, 
குமார், 
செல்போன்: 97869-73339


 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014