வெற்றிக் கதைகள் :: கண்டுபிடிப்புகள் - 2014 நன்றி பசுமை விகடன் ...
[ 2012 வெற்றிக் கதைகள் காண.. ] [ 2013வெற்றிக் கதைகoள் காண.. ]    
வானம் பார்த்த பூமி… வளமாக்கிய சூரியசக்தி…

இன்று கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு, வசதி வாய்ப்புகளுடன் நகர்ப்புறங்களில் வசித்து வரும் அனேகரின் மனங்களிலும்… ‘ஏதாவது ஒரு கிராமத்தில் கொஞ்சமேனும் நிலம் வாங்கி விவசாயம் செய்து ஓய்வு நாளைக் கழிக்க வேண்டும். என்கிற ஆசைக்கனவு இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதிலும், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிறந்து வளர்ந்து பணி நிமித்தமாக பெரு நகரங்களில் நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆசை சற்று கூடுதலாகவே இருக்கும்.
அந்த வகையில், குவைத் நாட்டில் பொறியாளராக வேலை செய்துவரும், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டாக்டர்.எஸ்.கே.இளங்கோவன்… வறட்சி தாண்டவமாடும் வானம் பார்த்த பூமியை வளமான பூமியாக மாற்றி, தனது விவசாயக் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். சோலார், சொட்டுநீர் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார் இளங்கோவன்.
எங்களது பரம்பரை விவசாயக் குடும்பம். மானாவாரி நிலங்கள்தான் இங்கு அதிகம். ஆடு, மாடுகளை நம்பித்தான் பிழைப்பு. இளசுகள் விசைத்தறி, வட்டிக்கடை என்று வேறு தொழில் பார்க்கக் கிளம்பிட்டாங்க. என்னைப் போல் சிலர், படித்து வெளியூர், வெளிநாடு என்று செட்டிலாகிவிட்டோம். நான் கோயம்பத்தூரில் எம்.இ.படித்துவிட்டு, சில வருடம் லெக்சரராக வேலை பார்த்தேன். இப்போது, 19 வருடமாக, குவைத் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆராய்ச்சிப் பொறியாளராக வேலை பார்த்திட்டிருக்கிறேன். என்னதான் காரு, பங்களா என்று வசதி வாய்ப்போடு வாழ்ந்தாலும்.. மனதில் விவசாயம் செய்ய வேண்டும் என்கிற ஆசை மட்டும் போகவேயில்லை. விடுமுறையில் ஊருக்கு வரும்போதெல்லாம் காரை எடுத்துட்டு நிலம் தேடுவேன். ஒரு வழியாக எங்க ஊரில் ஐந்து ஏக்கர் மானாவாரி நிலம் கிடைத்தது.
கொடீசியா கொடுத்த கொடை !
நிலத்தை வாங்கி, போர்வெல் போட்டப்போது, 630 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது. வேலி போட்டு மரப்பயிர்களை சாகுபடி செய்யத்தான் திட்டம் போட்டேன். ஆனால், கரன்ட் கனெக்ஷன் கிடைக்க தாமதமானதால், டீசல் மோட்டார் அமைக்க, ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன். ‘அது கட்டுபடியாகாது என்று நிறைய பேர் சொன்னாங்க. அதில் குழம்பிப் போய் இருந்த சமயத்தில்தான், 2012ம் வருடம், ரொம்ப வருடமாக சந்திக்க முடியாமல் இருந்த பழைய நண்பர் ஒருவருடன் போனில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. பேச்சுக்கு இடையில் நிலம் வாங்கின விஷயம் எல்லாவற்றையும் சொன்னேன். அவர்தான் ‘கவலையேயில்லை. அதற்கு ஒரு அருமையான தீர்வு இருக்கு. உடனே புறப்பட்டு, கொடீசியாவில் நடக்கும் விவசாயக் கண்காட்சிக்கு வாங்க என்று கூப்பிட்டார். உடனே கிளம்பி வந்துட்டேன்.
அங்கு போனதும் ‘பசுமை விகடன்’ புத்தகத்தை வாங்கி, அதில் வெளியாகியிருந்த சோலார் பவர் சம்பந்தமான கட்டுரையைப் படிக்கச் சொன்னார். கரன்ட் கிடைக்காத ஒரு விவசாயி சோலார் பவரை பயன்படுத்தி பம்ப்செட்டை இயக்கி, தோட்டப் பயிர்களுக்கு பாசனம் செய்து வருவதைப் பற்றி அதில் எழுதியிருந்தாங்க. சோலார்தான் என் பிரச்னைக்கான தீர்வு என்று மனதிற்கு பட்டது. அடுத்த நாளே சம்பந்தப்பட்ட விவசாயி தோட்டத்திற்குப் போய் சந்தேகங்களைக் கேட்டு தெளிவாகிட்டு உடனடியாக என் தோட்டத்திலும் சோலார் பேனல்களை அமைத்து, 5 ஹெச்.பி. மோட்டாரை போட்டு, பாசனத்தை ஆரம்பித்துவிட்டேன் என்றார்.
ஆரம்பத்தில் மட்டும் செலவு.. ஆயுளுக்கும் உண்டு வரவு!
நான், 10 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல்களை அமைத்திருக்கிறேன். இதன் மூலமாக 10 ஹெச்.பி. மோட்டார் வரை இயக்கலாம். போர்வெல் ஆழம், 630 அடி, இதிலிருந்து தண்ணீரை எடுத்து பாய்ச்சினால், சொட்டு நீர்க் குழாய்களுக்கு அழுத்தம் பத்ததாது. அதனால், போர்வெல்லுக்குப் பக்கத்தில் 20 அடி விட்டம், 5 அடி ஆழத்திற்கு ஒரு கிணறு மாதிரி தோண்டி சிமெண்ட் பூசி வைத்திருக்கிறேன். இதில், 55 ஆயிரம் லிட்டர் தண்ணீரை நிரப்பலாம். 5 ஹெச்.பி. மோனோபிளாக் பம்ப்செட் மூலமாக சொட்டு நீர்க் கருவிகளுக்கு இணைப்பு கொடுத்து பாசனம் செய்கிறேன். ஏக்கருக்கு 110 மரங்கள் என்ற கணக்கில் மலைவேம்பு கன்றுகளை நட்டிருக்கிறேன். முறையாக பராமரித்தால், ஏழு வருடத்தில், ஒரு மரம் 7 ஆயிரம் ரூபாய்க்கு போகும் என்று சொல்றாங்க என்றார்.
ஒரு கிலோ வாட் சோலார் பேனலுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும். 10 கிலோ வாட்டுக்கு 12 லட்சம் ரூபாய் செலவானது. அரசு மானியம் வேற இதற்கு இருக்கு. ஆனால், அதற்காக அலைய நேரமில்லாததால், சொந்தச் செலவிலேயே அமைத்திட்டேன். இதை பகலில் மட்டும்தான் இயக்க முடியும். காலையில் எட்டரை மணியிலிருந்து சாயங்காலம் நான்கரை மணி வரை தொடர்ந்து இயக்குவதால், தடையில்லாமல் பாசனம் செய்ய முடிகிறது. மிதமான வெப்பம் உள்ள காலங்களில் செயல்பாடு குறையும்.
கரன்ட் பிரச்னைக்கு சூரிய ஒளி மின்சாரம் ஒரு நல்ல தீர்வு. ஆனால், அதோட விலை, சாதாரண விவசாயிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருக்கு. வங்கிக்கடன், மானியம் எல்லாம் சரிவர கொடுத்து விவசாயிகளை ஊக்குவித்தால், ரொம்ப உதவியாக இருக்கும் என்றார்.
குறிப்பு : இது அயல்நாட்டு எண் என்பதால், இவருடைய எண்ணிற்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்தால் நேரம் கிடைக்கும் போது, அவரே திரும்பத் தொடர்பு கொள்வார்.
தொடர்புக்கு,
எஸ்.கே.இளங்கோவன்,
செல்போன் : 00965992 39369
மின்னஞ்சல் : skilangovan01@gmail.com
ஆதாரம் : பசுமை விகடன் வெளியீடு 25.04.2014 www.vikatan.com

தண்ணீர் கிடைக்காத போர்வெல்லிலும் தண்ணீர் எடுக்கலாம்!

கடுமையான வறட்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் மட்டம்  வெகுவாகக் குறைந்து விட்டது. பல தோட்டங்களில், அரை மணி நேரம்  அல்லது ஒரு மணி நேர பாசனத்திலேயே கிணறு வற்றி விடுகிறது. அதனால், புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கலாமா?, கிணற்றைத்தூர் வாரலாமா? என்று குழம்பித் தவிக்கும் விவசாயிகளுக்காக… கோடை காலத்தில் கிணறுகளைப் பராமரிக்கும் முறைகள் பற்றி ஆலோசனை சொல்கிறார், திண்டுக்கல் நீர்வடிப்பகுதி முகமையின் விரிவாக்க அலுவலரும், வேளாண் பொறியாளருமான பிரிட்டோ ராஜ் கோடை காலங்களில் கிணறுகள், போர் வெல்களில் தண்ணீர் மட்டம் குறைந்துதான் காணப்படும். நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் நிலத்தடி ஓடைகள் வறண்டு போயிருப்பதுதான் தண்ணீர் குறைவுக்குக் காரணம். கோடையில் உங்கள் கிணறுகளில் அரைமணி நேரம் மட்டுமே தண்ணீர் கிடைத்தாலும்… இன்னும் உங்கள் நிலத்தடி நீர்வளம் நன்றாக இருக்கிறது’ என்றுதான் அர்த்தம். அதனால், கவலைகொள்ளத் தேவையில்லை. கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு எவ்வளவு பரப்பில் பாசனம் செய்ய முடியுமோ… அந்த அளவுக்கு மட்டும் பாசனம் செய்ய வேண்டும். குறிப்பாக, வாய்க்கால் பாசனத்தைத் தவிர்க்க வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் மூலமாக, குறைந்த தண்ணீரில் அதிக பரப்பில் பாசனம் செய்யலாம். அதனால், புது போர்வெல் பற்றி யோசிக்கத் தேவையில்லை என்றார் பிரிட்டோராஜ்.
போர்வெல் போடாதீர்கள்!
பொதுவாக, கோடை காலத்தில் போர்வெல் அமைக்கக் கூடாது. நிலத்தடியில் உள்ள பாறை இடுக்குகளுக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு இருப்பதால், பாறை இடுக்குகளில் கோடை காலங்களில் தண்ணீர் இருக்காது. 80 அடி, 150 அடி, 320 அடி, 500 அடி என ஆங்காங்கே கிடைக்கும் ஊற்றுக் கண்களில் ஈரம் இருக்காது என்பதால் தண்ணீரைத் தேடி அதிக ஆழத்திற்கு போர்வெல் அமைக்க வேண்டி வரும். அதிக ஆழத்திற்கு ஊடுருவி. 700, 800 அடி ஆழத்தில் தண்ணீர் வந்தாலும்.. போர்வெல் டிரில்லர் சுழலும்போது, கீழே கிடைக்கும் தண்ணீருடன், மேல்பகுதியில் உள்ள மண் கலந்து, சிமெண்ட் போல் மாறி, மேலே சில நூறு அடிகள் ஆழத்திலேயே உள்ள வறண்ட ஊற்றுக்கண்களின் வாய்ப்பகுதியை அடைத்துவிடும். அதனால், கோடையில் அதிக ஆழத்திற்கு போர்வெல் அமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
இதையும் தாண்டி போர்வெல் அமைப்பவர்கள். ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, பணம் செலவாகும் என நினைத்து, கேசிங் பைப்பை அதிக ஆழத்திற்கு இறக்க மாட்டார்கள். ஆனால், பாறை மட்டம் வரை கேசிங் பைப் இறக்க வேண்டும். அப்போதுதான் போர்வெல்லுக்குள் மண் சரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இல்லாவிடில், மண் சரிந்து ‘நீர் மூழ்கி மோட்டார்களை குறிப்பிட்ட ஆழத்திற்கு கீழ் இறக்க முடியாமலோ … அல்லது எடுக்க முடியாமலோ போய் விடும்.
இறந்து போன போர்வெல்லிலும் தண்ணீர்!
புது போர்வெல் அமைத்து, தண்ணீருக்குப் பதிலாக வெறும் புகைதான் வந்தது என வேதனைப்படும் விவசாயிகள் அனேகம் பேர். ஆனால், எவ்வளவு வறண்ட பகுதியானாலும் அப்படி புகை வந்த போர்வெல்களிலும், தண்ணீரைக் கொண்டு வந்துவிட முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை உருவாக்குவதுதான். அதற்கு, இந்தக் கோடைதான் சரியான நேரம். கோடையில் நிச்சயம் ஒரு மழை கிடைக்கும். அந்த மழை நீரை முழுமையாக அறுவடை செய்து, போர்வெல் குழாயில் செலுத்தி, நீர்ச் செறிவூட்டல் செய்தால், தண்ணீர் ஊறி விடும்.
கிணறு அல்லது போர்வெல்லில் இருந்து மூன்றடி தூரத்தில் … 6 அடி நீளம், 6 அகலம், 4 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குழியின் அடிப்பாகத்தில் இருந்து அரையடி உயரத்தில் 2 அங்குல பைப் ஒன்றைப் பொருத்தி, அதன் இன்னொரு முனையை கிணறு அல்லது போர்வெல்லுக்குள் இருக்குமாறு செய்ய வேண்டும். பிறகு, குழியில் 3 அடி உயரத்திற்கு கூழாங்கற்கள் அல்லது அருகில் கிடைக்கும் சிறிய கற்களை நிரப்பி வைத்தால்… மழைநீர், கற்களில் வடிகட்டப்பட்டு கிணறுகளில் சேகரமாகும். இப்படி தண்ணீர் போர்வெல்லுக்குள் செல்லும் போது, ஏற்கனவே ஊற்றுக்கண்களை அடைத்திருக்கும் சிமெண்ட் போன்ற பூச்சுகள் கரைந்து, புது ஊற்றுகள் திறந்து… இனி தண்ணீரே கிடைக்காது, என நீங்கள் நினைத்த… இறந்துபோன போர்வெல்லிலும் தண்ணீர் கிடைக்கும். மழை கிடைத்த நான்காவது நாளே, உங்கள் போர்வெல் குழாயில் சிறிய கல்லை கயிற்றில் கட்டி இறக்கி… தண்ணீர் ஊறி இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.
மானாவாரி விவசாயம் செய்பவர்கள், தங்கள் நிலங்களில் தாழ்வான பகுதிகளில், வரப்பு ஓரங்களில் ஆங்காங்கே 20 அடி நீளம், ஒரு அடி ஆழம் உள்ள வாய்க்கால்களை எடுக்க வேண்டும். குழியில் எடுக்கும் மண்ணை குழியின் மேல் பகுதியில் அணை போட வேண்டும். இப்படிச் செய்தால், மழைக் காலத்தில் கிடைக்கும் தண்ணீர், குழிகளில் சேகரமாகி, நிலங்களில் படுக்கை வசத்தில் நீர் பரவி, மண்ணின் ஈரப்பதம்  குறையாமல் இருக்கும் என்றார் பிரிட்டோராஜ்.
உயிர் உரங்களை உடனே போடுங்க!
கோடை காலங்களில் முக்கியமாக செய்ய வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. செடிகளின் வேர்களிலிருந்து அரையடி தூரத்தில் மண் வெட்டியால் மண்ணைக் கிளறி, அசோஸ்பைரில்லம், அசோட்டோ ஃபேக்டர், சூடோமோனஸ் போன்ற உயிர் உரங்களை மண்ணுடன் கலந்து மூட வேண்டும். பெரிய மரப்பயிர்களுக்கு 3 கிலோ வரையும், சிறிய பயிர்களுக்கு அரை கிலோ வரையும் கொடுக்கலாம். வேளாண்மைத்துறை கிடங்குகளில் மானிய  விலையில் இவை கிடைக்கின்றன. இந்த உயிர்உரங்கள், மண்ணைப் பொலபொலப்பாக்கி, வேர்களுக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்கின்றன. அத்துடன் நீரையும், மண்ணையும் பிணைக்கும் வேலையைச் செய்கின்றன. மண்துகள்கள், சல்லிவேர்களுக்கிடையே ஒரு இணைப்பு உண்டாவதால், சல்லிவேர்கள் சத்துக்களை எளிதில் எடுத்துக் கொள்ள ஏதுவாகும்.
தொடர்புக்கு
பிரிட்டோராஜ், செல்போன் : 99444 50552

ஆதாரம் : பசுமைவிகடன் வெளியீடு 25.04.2014 www.viktan.com
“இனி விற்பனைக்குக் கவலையில்லை!” விவசாயிகளே உருவாக்கிய வியாபார நிறுவனம்!
10.04.2014 [மேலும் தகவலுக்கு...

‘நல்லவாயன் சம்பாதிச்சத நாறவாயன் திங்குறான்’ என்று கிராமங்களில் சொல்வார்கள். அது விவசாயிகளுக்குத் தான் சரியாகப் பொருந்தும். கடன்பட்டு, கஷ்டப்பட்டு, வியர்வை சிந்தி விளைவித்தாலும், விவசாயிகளுக்குப் பெரிய லாபம் கிடைத்து விடுவதில்லை. அதே சமயம் அந்த விளைபொருட்களை வாங்கி விற்கும் இடைத்தரகர்களோ… பெரியளவில் லாபம் சம்பாதித்து வருகிறார்கள்.
            இது காலகாலமாக நீடிக்கும் முரண்பாடு. அடி மட்டம் முதல் நுனி மட்டம் வரை அரசாங்கத்தில் அத்தனை பேருக்கும் இது தெரிந்தாலும், அணுவளவும் மாற்றம் என்பதே இல்லை. இதனால், நம்மால் என்ன செய்ய முடியும்?’ என்ற விரக்தியில் வீழ்ந்து கிடக்கிறது… விவசாய வர்க்கம்!
            இதற்கு நடுவே, ‘புலம்பிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை’ எனப் புரிந்து கொண்ட  தர்மபுரி மாவட்ட விவசாயிகள் , விற்பனையையும் கையில் எடுத்து விட்டார்கள். 10.02.12-ம் தேதியிட்ட இதழில், ‘ஆத்மா விவசாயிகள் சங்கத்தின் அசத்தல் சாகுபடி’ என்ற தலைப்பில் பென்னாகரம் பகுதி விவசாயிகளைப் பற்றி எழுதியிருந்தோம். அவர்கள்தான், தற்போது இந்தியாவிலேயே முதன்முறையாக, சிறுதானிய விற்பனைக்கென்றும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
இது பற்றிப் பேசினார், தர்மபுரி மாவட்டத்துல விளையற சிறுதானியங்கள் வறட்சியைத் தாங்கி விளையறதால நல்ல ருசியா இருக்கும். ஒரு காலத்துல மாவட்டம் முழுசும் சிறு தானியங்கள் விளைஞ்சது. இப்போ பென்னாகரம் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள்லயும் மலைப்பகுதிகள்லயும் மட்டும் தான்… சாமை, தினை, வரகு, பனிவரகு, சோளம், கேழ்வரகு, அவரை, துவரைனு சாகுபடி செய்றாங்க. மானாவாரி நிலம்கிறதால… ரசாயனமே பயன்படுத்துறது கிடையாது. ஏற்கெனவே காய்கறிகள சந்தைப்படுத்துன அனுபவத்த வெச்சுதான்  இந்த உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கோம்” என்ற சிவலிங்கம், தொடர்ந்தார்.
            “50 கிராமங்களைச் சேர்ந்த, 1,000 விவசாயிகளை ஒருங்கிணைச்சு, 50 உழவர் குழுக்கள் அமைச்சிருக்கோம். ஒரு விவசாயிக்கு 1,000 ரூபாய் உறுப்பினர் கட்டணம் இதை டெபாசிட் தொகையா வரவு வெச்சுடுவோம். இதன் மூலமா 10 லட்ச ரூபாய் ஊக்கத் தொகையாகக் கிடைக்குது. மொத்தம் இருக்கற இந்த 20 லட்ச ரூபாய் மூலமாத்தான் கம்பெனியை நடத்தப் போறோம். விவசாயிகள் கொண்டு வர்ற தானியங்களுக்கு ரசீது போட்டு அப்பவே பணத்தைக் கொடுத்துட்டு, விற்பனைக்குப் பிறகு கிடைக்கிற லாபத்தை கம்பெனி பேர்ல வரவு வெச்சுடுவோம். 5 வருஷத்துக்கு ஒரு தடவை, லாபத்தைப் பிரிச்சுக்கலாம்னு இருக்கோம்.
தானியங்கள பென்னாகரத்தில் இருக்குற  ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துல இருப்பு வைக்கறதுக்கும் ஏற்பாடு செஞ்சுட்டிருக்கோம். உறுப்பினர்கள் இல்லாம, மத்த விவசாயிகள் கிட்ட இருந்தும் கொள்முதல் செய்யப்போறோம். தானியங்களுக்குக் கூடுதல் விலை கிடைக்கிறதுக்காக மதிப்புக் கூட்டி விற்பனை செய்றதுக்கான கருவிகளையும், அதுக்கான இடத்தை சொந்தமா வாங்கற திட்டமும் இருக்கு. மாவட்ட வேளாண்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் எல்லா வகையிலயும் இதுக்கு உதவி செய்றாங்க” என்று நன்றி சொன்னார் சிவலிங்கம்.
            தொடர்ந்தவர், “சிறு தானியங்கள் பத்தி மக்கள்ட்ட  விழிப்புணர்வு இருக்கறதால, வியாபாரிகள் சிறு தானியங்கள தேடி வந்து மொத்தமா வாங்கறதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால, விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கவும்  வாய்ப்பிருக்கு. அதனால விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கு. விக்கிறதுக்கு சந்தையைத் தேட வேண்டிய அவசியம் இல்ல. நம்ம இடத்திலே இருந்தே வித்து சம்பாதிக்க முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு. எப்பவும் பசுமை விகடன் எங்களோட முயற்சிகளுக்கு உறுதுணையா இருந்துட்டு இருக்கு. 2011-ம் வருஷத்துல ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர் நலக் குழுவைத் தொடங்கி, பாகல், புடலை, சுரைக்காய்னு வெளைஞ்சு விற்பனை செஞ்சோம். அந்த முயற்சியைப் பசுமை விகடன் வெளியிட்டு  கௌரவப்படுத்திச்சு. அந்த உற்சாகம் தான் இப்போ சிறுதானியம் உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்க வெச்சுருக்கு” என்றார் தெம்பாக.
உற்பத்தியாளர் நிறுவனத்தின் குழுவில் இருக்கும் பனைகுளம் ஊராட்சியைச் சேர்ந்த  முருகன், “மலை கிராமங்களான எங்க பகுதியில மழைக்காலத்துல மானாவாரியா சிறுதானியங்கள விதைப்போம். அறுவடை செய்யறதை சந்தையில வந்த விலைக்குத்தான் வித்துட்டிருந்தோம். இப்போ கம்பெனியில, உறுப்பினரா இருக்கறதால விலைக்கு ஒரு உத்தரவாதம் கிடைச்சுருக்கு. இனி, நம்பிக்கையோடு விதைப்போம்” என்றார் மகிழ்ச்சியுடன்.
தர்மபுரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையினரிடம் பேசியபோது, “ மத்திய அரசால், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது, இத்திட்டம். குறைந்தபட்சம் இதில் 1,000 விவசாயிகள் குழுவாகச் சேர்ந்து  கம்பெனிப் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்து தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்கலாம். இந்நிறுவனத்தின் மூலம் ஒரே இடத்தில் மொத்தமாக வியாபாரிகளிடம் விற்க முடியும். விவசாயிகளே குழுவாக இருப்பதால், அவர்களுக்குள்ளே இயக்குநர், நிர்வாக இயக்குநரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குழுவாக இணைந்து அவர்களே முடிவுகள் எடுப்பதால் யாரையும் ஏமாற்ற வாய்ப்பு இல்லை.
            நெல், காய்கறிகள், சிறு தானியங்கள் என அந்தந்தப் பகுதியில் எந்தப்பயிர் அதிகமாக விளைவிக்கப்படுகிறதோ… அதற்கென உற்பத்தியாளர் கம்பெனியைத் தொடங்கலாம். எஸ்.எப்.ஏ.சி. மூலமாக ஊக்கத்தொகையும் கிடைக்கிறது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்களை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். உற்பத்தியாளர் கம்பெனியைத் தொடங்க விரும்புவோர், அந்தந்த மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையிடம் அணுகலாம்.” என்று சொன்னார்கள்.
தொடர்புக்கு, சிவலிங்கம், செல்போன் : 97875-45231
ஆதாரம் : பசுமை விகடன்
வெளியீடு : 10.04.14
www.vikatan.com

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013