Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை
மானாவரிய பயிர்களுக்கான உயரிய சாகுபடி தொழில்நுட்பங்கள் :: சிறுதானியம்

சமீப காலங்களில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களை நம்மால் அதிக அளவில் உணர முடிகின்றது. வெப்பநிலை உயர்வு, பருவநிலை பொய்த்தல் மற்றும் நீர்த்தட்டுப்பாடு போன்ற காரணிகள் விவசாயத்தை பெரிதளவில் பாதித்து வருகின்றன. மாறிவரும் பருவ நிலை மாற்றங்களை எதிர்கொள்ள நமது மனதளவில் முதலில் மாற்றம் தேவை. அதாவது நாம் வழக்கமாக பயிரிட்டு வரும் தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களைத் தவிர்த்து, வறட்சியைத் தாங்கி, குறைந்த அளவு தண்ணீரில், குறுகிய காலத்தில் மகசூல் தரும், சத்தான தானியங்களைத் தரக்கூடிய பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். சிறுதானியப் பயிர்களான குதிரைவாலி, வரகு, பனிவரகு, தினை, சாமை போன்ற பயிர்கள் நமது முன்னோர்களால் பாரம்பரியமாக பயிரிடப்பட்டு வந்தன. இப்பயிர்கள் தற்போதுள்ள மாறிவரும் பருவ நிலைக்கு மிகவும் ஏற்றவை. மேலும், இத்தானியங்களில் ஆரோக்கிய உணவுக்கான தாதுப்பொருட்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன.

மானாவாரிக்கேற்ற சிறு தானியங்கள் :

சிறுதானியம் இரகம் வயது(நாட்கள்) விதையளவு கிலோ: ஏக்கர் இடைவெளி(செ.மீ.) தானிய மகசூல் கிலோ: ஏக்கர்
குதிரை வாலி கோ(கேவி)2 95 4 22.5x10 800
வரகு எ.பி.கே.1 100 5 45x10 1000
பனிவரகு கோ(பிவி)5 70 4 22.5x7 700
தினை கோ(தி) 90 5 22x10 700
சாமை கோ 4 80 5 22x10 1100

பயிர் மேலாண்மை :

அடியுரமிடுதல்:
தமிழகத்தில் அனைத்து மண் வகைகளிலும் கரிமச்சத்து மிகக்குறைவாகவும், மணிச்சத்து குறைவு மத்திமமாகவும், துத்தநாகம் மற்றும் போரான் சத்துகள் குறைவாகவும் காணப்படுகிறது. ஆகவே விதைப்பதற்கு ஏற்ப நிலத்தைத் தயார் செய்து ஏக்கருக்கு 2000 கிலோ மக்கிய தொழுவுரம் (அ) மக்கிய தென்னை நார்க்கழிவு இடுவது அவசியமாகும். இதைத்தவிர அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஏக்கருக்கு 4 பொட்டலம் வீதம் 20 கிலோ தொழுவுரம் (அ) மணலுடனும் கலந்து அடியுரமாக இட வேண்டும்.

விதைப்பு:
விதை விதைப்பதற்கு முன் 3 பொட்டலம் (200 கிராம்) அஸோபாஸை ஒரு ஏக்கருக்குத் தேவையான சிறுதானிய விதை மற்றும் அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு விதையை வரிசையில் தகுந்த இடைவெளிவிட்டு விதைக்க வேண்டும். முளைத்த இரண்டு வாரத்தில் பயிர்களைக்களைத்து தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

களை நிர்வாகம்:
விதைத்த 20 நாள் மற்றும் 40 நாட்களில் களை எடுக்க வேண்டும்.

நோய் மேலாண்மை:
சிறுதானியப்பயிர்களில் குறைந்த நாள்களுக்குள் விதை முளைத்து கதிர் அறுக்கப்படுகிறது. இதனால் நோயின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறது. ஆனாலும் குறைந்த அளவு மகசூல் இழப்பு தரும் நோய்களும் அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

தினை :
குலைநோய்: தினையைப் பொறுத்தவரையில் குலைநோய் இலைகளில் கண்வடிவ புள்ளிகளாக சாம்பல் நிறத்தில் தென்படும். கதிர் மணிகளில் அவ்வளவாக நோய் தாக்கம் குறைவு. இது விதை மூலம் பரவுகிறது. மேலும் அருகில் கேழ்வரகு, நெல் போன்ற பயிர்கள் இருந்தால் இரண்டாம் நிலை பூஞ்சாணங்களாகக் காற்றின் மூலம் பரவி தினையைத்தாக்குகிறது.
தடுக்கும் முறை: ஏக்கருக்கு 120 கிராம் டிரைசைக்ளோசோன் 200 மி.லி. 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

குதிரைவாலி: நோய்கள் அதிகம் வருவதில்லை.

இலைக்கருகல் நோய்: சிறு இளஞ்சிகப்பு புள்ளிகள் இலையில் தோன்றும். பின்பு இலையின் அனைத்துப்பகுதியும் கருகி விடும். நுனியில் கருகி கீழ்நோக்கி தாக்கம் அதிகரிப்பதால் இலையின் நுனிப்பரப்பு கருகி மடிந்து விடுகிறது.

வரகு கதிர்மணி கரிப்பூட்டை நோய்
பனி வரகு துரு நோய் மற்றும் இலைப்புள்ளி நோய்
சாமை குலைநோய் மற்றும் கரிப்பூட்டை நோய்

தடுக்கும் முறைகள்: சிறு தானியப்பயிர்களில் பெரும்பாலும் விதை மூலம் மற்றும் சிறிய அளவில் மண் மூலம் தாக்கும் நோய்களே தாக்குகிறது. இதனால் கீழ்க்கண்ட முறைகளைக் கையாள வேண்டும்.

  • சிறு தானிய விதைகளை டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஏக்கருக்கு 1 கிலோவை 15 கிலோ சாண உரம் அல்லது 10 கிலோ மணலில் கலந்து கடைசி உழவின் போது இட வேண்டும்.
  • பூஞ்சாணக்கொல்லிகள்- 2 கிராம் கார்பென்டாசிமை 1 கிலோ விதையில் கலந்து விதைக்கவும்.
  • நோய்கள் பெரிய அளவில் மகசூல் இழப்பைத் தருவதில்லை. அதனால் மானாவாரியில் சிறுதானியப் பயிர்களைப் பயிரிட்டு குறைந்த நாளில் அதிக மகசூலைப் பெறலாம்.

அறுவடை:
முற்றிய கதிர்களை அறுவடை செய்து, களத்தில் காய வைத்து அடித்து தானியங்களைப் பிரித்தெடுக்கவும். சிறு தானிய அரிசியிலிருந்து நம் பாரம்பரிய உணவுகள் செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இவற்றிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களும் செய்யலாம். சிறு தானியத்திலிருந்து ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் தயாரிப்பதால் சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.


மேலும் தொடர்புக்கு:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,
செட்டிநாடு – 630 102 தொலைபேசி எண்: 04565 – 283080

 
Fodder Cholam