Agriculture
வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையம்்

Software: Microsoft Officeவேளாண் பயிர்களின் உற்பத்தி, பருவ நிலை மாற்றங்களுக்கேற்ப மாறுபடுகிறது. வேளாண் பயிர்களின் நிலையான வருமானம் என்பது சமீப காலமாக நிலையற்றதாக அமைந்து வருகின்றது. இவற்றை நிவர்த்தி செய்து நிலையான வருமானம் கிடைத்திட பயிர் மட்டுமில்லாமல் அதனோடு வேளாண் சார்ந்த ஏனைய தொழில்களான கால்நடை வளர்ப்பையும் இணைத்து ஒருங்கிணைத்து பண்ணையம் அமைப்பது இன்றியமையாத ஒன்றாகும். இன்றைய சூழ்நிலையில் கிராமம் மற்றும் நகர்புறங்களில் ஆட்டு இறைச்சி தேவை அதிகரித்து வருவதால் சிறிய மற்றும் பகுதி நேர விவசாயிகளின் ஆடுவளர்ப்பு மேற்கொள்வதன் மூலம் வியாபார ரீதியாக நல்ல லாபம் ஈட்ட முடியும். மேலும் கொட்டகைகளுக்கான முதலீடும் பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் விவசாயத்துடன் ஒருங்கிணைந்து ஆடு வளர்ப்பை மேற்கொள்ளலாம்.

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் நன்மைகள்

  • உற்பத்தித் திறன் மேம்பாடு
  • நிகர லாபம் அதிகரிப்பு மற்றும் நிலைத்த வருமானம்
  • வேளாண்மையில் நீடித்த வளர்ச்சி
  • சரிவிகித உணவு
  • மாசற்ற சுற்றுப்புற சூழல்
  • பண்ணைக்கழிவுகளின் மறுசுழற்சி
  • வேலை வாய்ப்பு அதிகரிப்பு
  • உயர்ந்த வாழ்க்கைத்தரம்

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் உறுப்புகள்

வ.எண்.

நன்செய் நிலம்

புன்செய் நிலம்

மானாவாரி

1.

பயிர்

பயிர்

பயிர்

2.

கால்நடை வளர்ப்பு

கால்நடை வளர்ப்பு

எருமை வளர்ப்பு

3.

மீன் வளர்ப்பு

ஆடு வளர்ப்பு

ஆடு வளர்ப்பு

4.

ஆடு வளர்ப்பு

கோழி வளர்ப்பு

வேளாண் காடுகள்

5.

கோழி வளர்ப்பு

காளான் விதை உற்பத்தி

 

6.

புறா வளர்ப்பு

பட்டு வளர்ப்பு

 

7.

காளான் வளர்ப்பு

சாண எரிவாயு

 

நன்செய் நிலத்திற்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வௌளாடு வளர்ப்பு: ஒரு ஏக்கர் நிலதில்30 மதல் 35 ஆடுகள் வரை வளர்க்க முடியும். அதற்கான தீவனப் பயிர்களான கம்பு நேப்பியர் கோ-4(40 சென்ட்), வேலி மசால் –(30 சென்ட்), தீவனச்சோளம் கோ.எப்.எஸ். 29 –(30 சென்ட்) ஆகியவற்றால்  உற்பத்தி செய்தால் வருடம் முழுவதும் தீவனமாக அளிக்க முடியும்.இவற்றில் ஊடு கோ-4 ரகமானது அதிக விளைச்சல் தரக்கூடியது. இதில் தூர்கள் அதிகமாகவும் தண்டுப்பகுதி சிறுத்தும் இலைகள் அதிகமாகவும், மென்று தின்ன மென்மையாகவும் ஆடுகளின் வாயை உறுத்தக்கூடிய சுரசுரப்பான சுனைகள் இல்லாமல் இருப்பதாலும் ஆடுகள் இவற்றை விரும்பி உண்ணுகின்றன.மேலும் இத்தீவனப்பயிரானது எளிதில் செரிக்கும் தன்மை கொண்டதாகும். இந்த ஊடு கோ-4 இரகத்தை சிறு துண்டுகளாக நறுக்கி ஆடுகளுக்கு பசுந்தீவனமாக அளிப்பதன் மூலம் ஆடுகளில் உடல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யலாம். கொளுக்கட்டைப்புல் ரகமான வௌளை, நீலம் மற்றம் கருப்பு வகைகள் நன்கு வறட்சி மற்றும் களைகளைத் தாங்கக் கூடியது. இவ்வகைப்புற்கள் மேய்ச்சல் நிலங்களுக்கு ஏற்றது. இவ்வைகைப் புற்களுடன் பயறு வகைத் தீவனமான முயல் மசாலை முன்று பங்குக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் கலந்து மானாவாரியாகப் பயிரிட்டு மேய்ச்சல் நிலத்தைப் பராமரிப்பதன் மூலம் ஆடுகளில் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த தீவனங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஆடுகளுக்குக் கொடுக்க வேண்டும். பொதுவாக வௌளாடுகள் இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை குட்டிகளை ஈனும் தன்மை கொண்டது. இதனால் மற்ற கால்நடைகளை விட அதிக லாபம் கொடுக்கும் தொழிலாகும். மேலும் வெள்ளாடுகளுக்குப் பசுந்தீவனம் நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 கிலோ கொடுத்தால் போதுமானது.

புன்செய் நிலத்திற்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஆடு வளர்ப்பு: புன்செய் நிலத்திற்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையத்தில் 1 எக்டர் நிலப்பரப்பில் பயிர் சாகுபடியுடன் ஆடு வளர்ப்பு (20 பெட்டை : 1 கிடா) மேற்கொள்வதின் மூலம் 3 மடங்கு உற்பத்தி திறன் நிகர லாபம் மற்றும் வேலை வாய்ப்பினை அதிகரித்துக் கொள்ளலாம். 20 ஆடுகளிலிருந்து ஒரு வருடத்திற்கு சுமார் 45 குட்டிகள் கிடைக்கும், மேலும் ஆட்டு எருவிலிருந்து 200 கிலோ தழைச்சத்து, 106 கிலோ மணிச்சத்து மற்றும் 91 கிலோ சாம்பல் சத்து கிடைக்கும்.கூடுதலாக 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை லாபமாகக் கிடைக்கும். நம் நாட்டில் ஆடுகள் பெரும்பாலும் மேய்ச்சல் நிலத்தை நம்பித்தான் வாழ்கின்றன. இதனால் ஆடுகளின உற்பத்தித் திறன்  குறைவாகவே காணப்படுகின்றன. இக்குறையைத் தீர்க்க தீவன மர இலைகளையும், விவசாயத்துணைப் பொருட்களையும் அன்றாடம் தீவனமாகக் கொடுத்து  உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம். இவ்வகையில் கடலைக்கொடி, துவரம் பொட்டு, உளுத்தம் பொட்டு போன்றவற்றையும் தீவன மர இலைகளான அகத்தி, ஆல், அரசு, இச்சி, வேம்பு, புளி, சூபாபுல், வேலி மசால், பூவரசு, வாகை போன்ற மர இலைகளையும் கருவேலன், குடைவேலன், வேலிகாத்தான், மழை மரம் ஆகிய மரங்களின் காய்களைக் கொடுப்பதன் மூலம் ஆடுகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த தீவனம் கிடைக்கும். இதனால் தீவனப்பற்றாக்குறை நீங்குவதோடு, இறைச்சி உற்பத்தி அதிகரிக்கவும், கூடுதல் வருவாய் கிடைக்கவும் வழிவகை ஏற்படுகிறது.

மழைக்காலங்களில் ஆடுகளுக்குப்போதிய அளவு பச்சைப்புல் மேய்ச்சலின் மூலம் கிடைக்கும். அதனால் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை ஆடுகளை மேய்ச்சலில் விட்டால் போதுமானது. கோடைக்காலங்களில் (மார்ச் முதல் ஆகஸ்ட் வரை) பச்சைப்புல் கிடைப்பதில்லை. எனவே இச்சமயங்களில் கலப்புத் தீவனத்தை(அடர் தீவனம்) ஆடுகளுக்குக் கொடுப்பது அவசியமாகின்றது. இக்கலப்புத் தீவனத்தில் தானிய வகைகள், பிண்ணாக்கு, அரிசி அல்லது கோதுமைத்தவிடு, தாது உப்புக்கலவை மற்றும் சாதாரண உப்பு ஆகியவை அடங்கும். பொதுவாக ஆடுகளுக்குக் கடலைப் புண்ணாக்கு, எள் அல்லது சோயாப்புண்ணாக்கைக் கலப்புத் தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். கலப்புத் தீவனம் கிடைக்காத சமயங்களில் துவரம்பொட்டு, உளுத்தம் பொட்டு, கடலைப் பொட்டு ஆகியவற்றை ஆடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்க வேண்டும்.

வேளாண் காடுகளும், வெள்ளாடு வளர்ப்பும்: விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் இணைத்து கடைபிடிப்போரின் வருமானம் விவசாயத்தை மட்டும் செய்பவரை விட கூடுதலாக இருக்கும். அதிலும் விவசாயத்துடன் கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்ப்பையும் இணைத்து செயல்படும்போது பல நன்மைகள் விவசாயிகளுக்குக் கிடைக்கும்.
Jamnapari flock 2

  • தரிசு நிலங்களையும், மானாவாரி நிலங்களையும் முழுக்க  முழுக்க இத்திட்டத்திற்கு உபயோகப்படுத்தலாம்.
  • இம்முறையில் தேவைப்படும் தண்ணீரின் அளவு மிகவும் குறைவு
  • இம்முறையின் கீழ் வெள்ளாடுகளில் இருந்து கிடைக்கும் சாணம் மற்றும் இலைகளை மட்க வைத்து விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுத்தும் போது மண்வளம் பெருக வாய்ப்பு அதிகரிக்கின்றது.
  • ஐந்தாவது ஆண்டு முதல் நன்கு பெருகிய மரம் மூலம் லாபம் கிட்டும்.
  • எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விவசாயிக்கு வருடம் முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

வேளாண்காடுகளும் கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்ப்பும்

  • புதிய இரக தீவனப்பயிர், 25 சென்ட் வேலிமசால், 25 சென்ட் கொழுக்கட்டைப்புல் பயிரிட வேண்டும்.
  • ஒரு ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் வசதிக்கு ஏற்றாற்போல் குறைந்த்து 25 சென்ட் தீவனச் சோளம் கோ.எப்.எஸ்.29, 5 சென்ட் நிலப்பரப்பில் வேலிகள் அமைத்து மத்தியில் ஆடுகள் வளர்க்கும் கொட்டில் முறை கொட்டகையை அமைக்க வேண்டும்.
  • மீதம் உள்ள நிலத்தில் வரப்பு ஓரங்களில், அகத்தி , சவுண்டல் , கிளைரிசிடியா போன்ற தீவனத்திற்கேற்ற மரங்களை நடவு செய்ய வேண்டும்.
  • ஆடுகள் வாங்குவதற்கு 3 முதல் 4 மாதங்களுக்கு முன்னதாக தீவனப்பயிர்களை சாகுபடி செய்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்ப்பு

கொட்டகை அமைத்தல்

  • ஒரு ஆட்டிற்குத் தேவையான இடவசதி 10 முதல் 15 சதுர அடி
  • கொட்டகை கீத்து அல்லது ஓடுகள் வைத்து அமைக்கலாம்
  • தீவனம் வைப்பதற்கு தேவையான அலுமினியத்திலான தட்டுகளை கொட்டகையின் ஒரு பக்கத்தில் அமைக்கவும்
  • தண்ணீரை தானியங்கி கருவி மூலம் கொடுக்கலாம்
  • கொட்டகையைத் தரை மட்டத்திலிருந்து சுமார் 3 அடி உயரத்தில் அமைக்க வேண்டும்.
  • கலப்பு தீவனத்தை குட்டிகளுக்கு 50 கிராமும், வளரும் ஆடுகளுக்கு 100 கிராமும், சினை ஆடுகளுக்கு 200 கிராமும், நாளொன்றிற்கு கொடுக்க வேண்டும். வெள்ளாடுகளுக்கு சராசரியாக நாளொன்றுக்கு 1 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். தீவன சோளப்பயிர் 1 முதல் 2 கிலோ நாளொன்றிற்கு, மரத்தழைகள் 250 முதல் 500 கிராம் நாளொன்றிற்குக் கொடுக்கலாம்.

ஒருங்கிணைந்த முறையில் செம்மறி ஆடு வளர்ப்பு: மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் செம்மறி ஆடு வளர்ப்பு லாபம் தரும் தொழில் ஆகும். இத்தகைய நிலங்களில் பயிர் வளர்ப்புடன் மரவகை தீவனப்பயிர்கள் வளர்ப்பதன் மூலம் செம்மறியாடுகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். இவ்வகைத் தீவனப்பயிர்களில் அதிகப் புரதச்சத்தும், தாது உப்புகளும் உள்ளது. இவற்றில் அகத்தி,  சூபாபுல், கிளைரிசிடியா, கருவேல், வெள்வேல், வாகை, ஆச்சா, வேம்பு, கல்யாண முருங்கை கடிய முக்கியமானது ஆகும். மர இலைகளில் மற்ற தீவனங்களைக் காட்டிலும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது மட்டுமன்றி மரவகைத் தீவனங்களைத் தனியாகக் கொடுக்காமல் தானியவகை அல்லது புல்வகைத் தீவனப்பயிர்களுடன் கலந்து, ஆடுகளுக்கு பசுந்தீவனமாக அளிப்பதன் மூலம் அடர் தீவனச் சோளம் செலவைக் குறைத்து, உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்யலாம். ஆட்டுப்பண்ணையின் வருமானம் பெட்டை ஆடுகளின் குட்டி ஈனும் திறனைப் பொறுத்து அமைகிறது. ஆட்டுப்பண்ணை லாபகரமாக அமைய காலத்தே சரியான இனப்பெருக்க மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும். பொதுவாக வெள்ளாடுகள் ஆண்டு முழுவதும் மற்றும் குட்டி ஈன்ற 60 முதல் 90 நாட்களுக்குள் சினைப்பருவத்தை அடையும் தன்மையுடையவை. செம்மறி ஆடுகள் ஆண்டு முழுவதும் பருவம் அடைந்து குட்டி ஈன்ற போதிலும், குறிப்பிட்ட காலங்களில் தான் அதிக ஆடுகள் சினைப்பருவத்தை வெளிப்படுத்தும்  தன்மையுடையவை. தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் சினைப்பருவ காலங்களை மூன்று வகைப்படுத்தலாம்.

  • மார்ச் முதல் ஏப்ரல்
  • ஜூலை முதல் ஆகஸ்ட்
  • செப்டம்பர் முதல் அக்டோபர்

மார்ச் முதல் ஏப்ரல் காலங்களில் சினைப்பருவத்திற்கு வரும் ஆடுகள் ஜூலை முதல் ஆகஸ்ட் காலங்களில் குட்டி ஈனும். பொதுவாக ஜூன் மாதத்தில் இருந்தே தென்மேற்குப்பருவ மழை தொடங்கி விடுவதால் இக்காலத்தில் ஆடுகள் மற்றும் பிறக்கும் குட்டிகளுக்கு நல்ல பசுந்தீவனம் கிடைக்கும். ஆடுகளில் பால் உற்பத்தியும் நன்கு இருப்பதால் குட்டிகளின் வளர்ச்சியும் நன்கு இருக்கும்.ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களில் இனவிருத்தி செய்யக்கூடிய ஆடுகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில்  குட்டிகளை ஈனும். இக்காலங்களில் சில பகுதிகளில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு நிலவுவதால் குட்டிகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்குச் சற்றுத் தடையாக இருக்கும். இது போலவே, மழையை நம்பி இருக்கக்கூடிய இடங்களில் பசுந்தீவன தட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்துடன் தாயிடம் இருந்து பிரிக்கப்படும் காலங்களில் குட்டிகளின் பசுந்தீவன தேவையைப்பூர்த்தி செய்யாமல் போகக்கூடிய சூழலில் குட்டிகளின் வளர்ச்சி பாதிப்படையலாம். இத்துடன் குட்டிகளின் இறப்பு விகிதமும் அதிகரிக்கும். மார்கழி மற்றும் தை மாதங்களில் மானாவாரி பயிர்களை அறுவடை செய்யும்போது கிடைக்கும் வேளாண் பொருட்களை உப பொருட்களை வைத்து தாய் ஆடுகளைப் பராமரிப்பதன் மூலம் பால் உற்பத்தியை சரி செய்யலாம்.

பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க வழி முறைகள்

  • உயர் விளைச்சல் ரகங்களை சரிய தொழில்நுட்ப நுணுக்கங்கள் மூலம் சாகுபடி செய்து தீவன உற்பத்தியை அதிகரிக்கலாம்.
  • தீவனப்பயிர் உற்பத்திக்காக ஒதுக்கப்படும் பரப்பளவு மிகவும் குறைவு. எனவே முடிந்த அளவு தீவனப்பயிர்கள் பயிரிடப்படும் பரப்பின் அளவை அதிகரிக்கலாம்.
  • பயறுவகைத் தீவனப்பயிர்களை மற்ற பயிர்களுடன் ஊடுபயிராகப் பயிர் செய்வதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
  • சமூக நலக்காடுகள், வேளாண்காடுகள் திட்டத்தின் மூலம் தீவன மரம் மற்றும் தீவனப் பயிர்களைப் பயிர் செய்யலாம். உதாரணத்திற்கு சூபாபுல் மரங்களுக்கு இடையில் கொழுக்கட்டைப்புல் மற்றும் முயல் மசாலை 3:1 என்ற வரிசையில் பயிரிடலாம்.
  • தரிசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், ஏரிக்கரை, சாலையோர நிலங்கள் போன்ற இடங்களில் தீவனப்பயிர் அல்லது தீவன மரங்களை வளர்க்கலாம்.
  • விவசாய நிலங்களில் பழ மரங்களான மா, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, தென்னை மற்றும் புளி போன்ற மரங்களுக்கு இடையில் தீவனப்பயிரை ஊடுபயிராகப் பயிரிடலாம்.
  • மோசமான நிலையில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் நல்ல புல் ரகங்களான கொழுக்கட்டைப்புல், மார்வல் புல் மற்றும் பயறு வகைத் தீவனங்களான முயல் மசால், சிராட்ரோ போன்றவைகளை விதைத்து, களையெடுத்து உரமிட்டுச் சிறந்த முறையில் பராமரிப்பதன் மூலம் தீவன உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

ஆகவே, வருங்கால வேளாண்மை குறு மற்றும் சிறு விவசாயிகளின் திட்டமிட்ட பண்ணையத்தை சார்ந்தே அமையும். ஆகவே, பண்ணையாளர்கள் தங்கள் நிலைக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையத்தை மேற்கொண்டால் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் தரத்தினை உயர்த்திக்கொள்ள முடியும்.

 


 
Fodder Cholam