Agriculture
வேளாண்மை :: தீவன பயிர்கள்

முயல்மசால்

 

முயல் மசால் தென்னிந்திய தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற பயறுவகை தீவனப்பயிராகும்.  வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. வருட மழை அளவான 450 – 840 மிமீ போதுமானது. அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது. புரதத்தின் அளவு 15 முதல் 18 சதவீதமாகும். மானாவாரியில் கொழுக்கட்டைப்புல்லை முயல் மசாலுடன் 3:1 என்ற விகிதத்தில் கலப்பு பயிரிடலாம்.

பருவம் மற்றும் இரகங்கள்

பருவம் :

வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவ மழை காலம் விதைப்புக்கு ஏற்றது.

இரகங்கள்

:

ஸ்டைலோசான்தாஸ் ஹெமடா (ஒரு வருடப்பயிர்)
ஸ்டைலோஸான்மஸ் ஸ்கேப்ரா (பல்லாண்டுப்பயிர்)

பயிர் மேலாண்மை
நிலம் தயாரித்தல்

உழவு

இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழ வேண்டும்.

தொழு உரம்

எக்டருக்கு 10 டன் தொழு உரம்  அல்லது கம்போஸ்டை உழவின் போது மண்ணில் கலக்க வேண்டும்.

பாத்திகள் அமைத்தல்

10 அல்லது 20 சதுர மீட்டருக்கு பாத்திகள் அமைக்கவும்.

உரமிடுதல்

மண் பரிசோதனையின் படி உரமிடவும், மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 20: 60 :15 கிலோ தழை, மணி , சாம்பல் சத்து அடியுரமாக இட வேண்டும்.

விதைப்பு

  • விதைகளை ரைசோபியக் கலவையில் எக்டருக்கு 600 கிராம் என்ற அளவில் கலக்க வேண்டும்.
  • விதை அளவு – கோடுகளில் விதைத்தல் (30 X 15 செ.மீ) எக்டருக்கு 6 கிலோ, தூவுதல் எக்டருக்கு 10 கிலோ
  • விதைகளை 1 செ.மீ ஆழத்திற்கு மேல் விதைக்க கூடாது.
  • முயல் மசால் விதைகளை கடினமான விதை உறையைக் கொண்டவை. ஆகவே விதைகளை அடர்கந்தக அமிலத்தில் மூன்று நிமிடம் ஊறவைத்து விதைகளை நன்கு கழுவிய பின் குளிர் நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அல்லது விதைகளை வெந்நீரில் நான்கு நிமிடம் ஊறவைத்து பின் குளிர் நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

நீர் மேலாண்மை

இது மானாவாரிப் பயிராகும். முன் வளர்ச்சிப் பருவத்தில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

களை நிர்வாகம்

தேவைப்படும் போது களை எடுக்க வேண்டும்.

அறுவடை

விதைத்த 75  நாட்களில், பூக்கும் தருணத்தில் முதல் அறுவடை செய்ய வேண்டும். பிறகு வளர்ச்சியைப் பொருத்து அறுவடை செய்யலாம்.

பசுந்தீவன மகசூல்

முதல் வருடத்தில் பயிரின் வளர்ச்சி குறைவாக இருப்பதால், மகசூல் குறைவாக இருக்கும். பிறகு விதை உதிர்ந்து முளைப்பதால் பயிர் நன்கு வளர்ந்தவுடன் எக்டருக்கு 30 – 35 டன்கள் தீவன மகசூலை மூன்றாவது வருடத்திலிருந்து அறுவடை செய்யலாம்.

விதை உற்பத்தி

நிலத் தேர்வு

விதை உற்பத்திக்கு தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்க கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.

பயிர் விலகு தூரம்

விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து வயலைச் சுற்றி 25 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.

விதைக்கும் பருவம் : அக்டோபர் – ஜனவரி

விதைப்புக்கு முன் விதை நேர்த்தி

அடர் கந்தக அமிலம் கொண்டு ஒரு கிலோ விதைக்கு 200 மிலி என்ற அளவில் விதைகளை 4 நிமிடங்கள் உராய்வு ஏற்படுத்தும் போது விதையின் கடினத்தன்மை (விதை உறக்கம்) நீங்கி நல்ல முளைப்புத்திறனைப் பெறலாம். விதை உறக்கம் நீக்கப்பட்ட விதைகளை 0.25 சத பொட்டாசியம் நைட்ரேடு கரைசலில் 3 மணி நேரம் ஊறவைப்பதால் விதையின் முளைப்புத்திறன் அதிகமாகும்.

விதைகளைப் பிரித்தெடுத்தல்

நெல்லின் உமி நீக்கும் இயந்திரத்தின் சுற்றும் தட்டகளின் இடைவெளியை 0.2 மிமீ என்ற அளவில் வைத்து விதைகளைப் பிரிப்பதால் நல்ல தரமான விதைகளைத் தேர்வு செய்யலாம்.

விதைச் சுத்திகரிப்பு

விதைகளை 16 X 16 சதுர கன அளவு கொண்ட பி எஸ் பி எஸ் சல்லடை கொண்டு சலித்து நல்ல தரமான விதைகளைப் பிரித்து எடுத்தல் வேண்டும்.

விதைச் சேமிப்பு

  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 10 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப்பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்துப் பின் உள்உறை கொண்ட    சாக்குப் பைகளில் மத்திய, இடைக்கால சேமிப்பிற்காக (12 – 15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 சதவீதத்திற்கும் குறைவாக உலர்த்தி  700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலிதீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமித்து வைக்கலாம்.

பிற மேலாண்மை முறைகள்

தீவனப்பயிர்களைப் போன்றே பின்பற்றலாம்.

 
 
Fodder Cholam Rice Wheat maize sorghum Ragi cumbu varagu panivaragu samai tenai blackgram cowpea cowpea redgram soybean horsegram garden lab lab groundnut sesame coconut sunflower castor niger safflower sugarcane sugarcane sugarbeet Cumbu Napier kollukattai Pul Fodder Cholam Fodder Cowpea Fodder Cumbu Fodder Maize Guinea Grass Velimasal Soundal Kudiraimasal Muyal Masal sword bean Field lab lab Sweet Sorghum Greengram