பயிர் பாதுகாப்பு :: தென்னை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சாம்பல் நிற வண்டு: லுாக்கோஃபோலியோ கோனியோஃபோரா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் தென்னங்கன்றுகளின் வேர்களில் துளையிட்டு நடுப்பகுதி முழுவதையும் தின்றுவிடுவதால் கன்றுகள் மஞ்சள் நிறமடைந்துப் பின் காயத் தொடங்கும்.
  • வளர்ந்த மரங்களில் இவ்வண்டு தாக்குவதால் ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல், குரும்பை உதிர்தல். பூக்கும் பருவம் தள்ளிப்போதல், வளர்ச்சி மற்றும் மகசூல் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
  • பாதிக்கப்பட்ட மரத்தின் அடியில் தோண்டிப் பார்த்தால் இவ்வண்டுகளைக் காண முடியும்.
  • இந்த வண்டினால் ஊடுபயிராக இடப்பட்டுள்ள கிழங்கு வகைகளும் தாக்கப்படுகின்றது.

பூச்சியை அடையாளம் காணுதல்:

புழு வளர்ச்சியடைந்த வண்டு
  • முட்டை: நீள்வட்ட வடிவில், இடப்பட்ட உடன் நல்ல துாய நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும். பொரிக்கும் தருணத்தில் சற்று மங்கலான வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கும்.
  • இளம் புழு: பல சுருக்கங்கள் மற்றும் சதைப்பற்றுடன் வளைந்து இருக்கும். துாய வெண்மை நிறத்துடன், பழுப்பு நிறத் தலையுடன் காணப்படும்
  • வளர்ச்சியடைந்த வண்டு: பழுப்பு நிற உடலில் நேரான இறக்கைகள் இருக்கும். இறக்கைகள் சிறியதாக வயிற்றை சிறிதளவு மட்டுமே மறைத்தவாறு இருக்கும்.

மேலாண்மை:
உழவியல் முறைகள்:

  • கோடையின் முதல் மழைக்குப் பின் வாரத்திற்கொருமறை என 4-5 முறை நிலத்தினை உழுது விடவேண்டும். இதனால் வண்டு மற்றும் அதன் புழுக்கள் மேலெழுப்பப்படுவதால் பூச்சி உண்ணிகள் மற்றும் பறவைகளுக்கு உணவாகின்றன.
  • தென்னந்தோப்பில் வேப்ப மரக் கிளைகள் இலைகளுடன் கூடியவற்றை நடுவதால் வளர்ந்த வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
  • பாதிக்கப்பட்ட தென்னையைச் சுற்றியுள்ள மண்ணை தோண்டிவிடுவதாலோ (அ) உழுவதாலோ (மழைக்குப் பின் அவ்வபோது) இப்பூச்சிகளை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.

இயந்திர முறை:

  • ஹெக்டேருக்கு 1 என்ற வீதத்தில் விளக்குப் பொறி (அ) தீப்பந்தம் வைப்பதால் கவர்ந்து கொல்லலாம்.

இராசயன முறை:

  • மாலத்தியான் 5 D என்ற வீதத்தில் பொடியை கன்றுகளை நடுவதற்கு முன்பு மண்ணில் துாவ வேண்டும். போரேட் 10 G - 100 கி/ மரம் (அ) 0.04% குளோர்பைரிஃபாஸ் கரைசலில் கன்றின் வேர்ப்பகுதியை நனைத்தபின் நடவேண்டும். இப்பொடியை மழை பெய்த உடன் ஏப்ரல்-மே மாதத்தில் 1 முறையும், மீண்டும் செப்டம்பரில் ஒரு முறையும் இட வேண்டும். பரிந்துரை:- கேரள வேளாண் பல்கலைக்கழகம்.

பிறமுறைகள்:

  • வேம்பு, பெரு மரம், கருவேல், போன்ற மரக்கிளைகளை தோப்பில் நடுவதால் மழை பெய்யும் மாலை நேரங்களில் வண்டுகள் ஈர்க்கப்படும். இவற்றை சேகரித்து அழித்து விடவேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015