பயிர் பாதுகாப்பு :: ஒட்டுண்ணிகள் உற்பத்தி முறைகள்

டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி உற்பத்தி முறை

டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிகள் ஆய்வுக்கூடங்களில்  கோர்சைரா என்று அழைக்கப்படும் நெல் அந்துப்பூச்சியின் முட்டைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரே சீரான ஒட்டுண்ணி உற்பத்திக்கு நெல் அந்துப்பூச்சிகளின் உற்பத்திப்பெருக்கம் மிகவும் முக்கியம்.

நெல் அந்துப்பூச்சி உற்பத்தி முறை

நன்கு வெயிலில் உலர வைத்த பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நச்சுத்தன்மை இல்லாத கம்பு தானியத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை அரவை இயந்திரங்கள் மூலம் உடைத்து குறுணை செய்யப்பட வேண்டும்.
            இரண்டரை கிலோ உடைத்த கம்பு குருணையுடன் 100 கிராம் தூளாக்கப்பட்ட நிலக்கரி 5 கிராம் நனையும் கந்தகத்தூள், 5 கிராம் நொதி தூள் இவற்றை நன்கு ஒரே சீராக கலக்கவும். பின்னர் ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 0.05 சதம் கலவை மருந்தினை தெளித்து நன்கு கலக்க வேண்டும். இந்தக் கலவையை 16” விட்டம் x 16” உயரம் கொண்ட பிளாஸ்டிக் தட்டுகள் தேர்வு செய்து நிரப்ப வேண்டும். நீர் தெளித்து குருணையினை புரட்டி விட வேண்டும். உணவுக்கலவையின் மேல் பகுதியில் 0.5 மிலி நெல் அந்துப்பூச்சியின் முட்டைகளைத் தூவ வேண்டும்( 1 மிலி முட்டையில் சுமார் 16,000 முதல் 18000 வரை முட்டைகள் இருக்கும்). பிளாஸ்டிக் தட்டுகளாக இருந்தால் கெட்டி காடா துணிகளைக்கொண்டு மூடி இரப்பர் நாடாவுடன்  கயிறு இணைத்துக்கட்டி வைக்க வேண்டும்.         
         முட்டைகளிலிருந்து 3-4 நாட்களில் இளம் புழுக்கள் வெளிவந்து கம்புக்குருணைகளில் கூடு கட்டி உண்ணத் துவங்கும். இதன் புழுப்பருவம் 26-28 நாட்களும் கூட்டுப்புழுப்பருவம் 5 நாட்களாகும். கூட்டுப்புழுக்களிலிருந்து வெளிவரும் முழு வளர்ச்சியடைந்த அந்திப்பூச்சிகள் 6-7 நாட்கள் மட்டுமே உயிர் வாழும். இவ்வாறு கம்பு குறுணை நிரப்பப் பட்ட தட்டுகளிலிருந்து 35 நாட்கள் கழித்து ஒவ்வொரு நாளும் காலைப்பொழுதில் 7 மணியிலிருந்து 10 மணிக்குள் அந்திப்பூச்சிகளை கண்ணாடிச் சோதனைக்குழாய் மூலம் 6”x1” அல்லது இதற்கென அமைக்கப்பட்டுள்ள காற்று உறிஞ்சும் கருவி மூலம் பிடித்து துத்தநாகத் தகட்டினால் ஆன இனச்சேர்க்கைக் கூண்டுக்கு மாற்ற வேண்டும்.
            இனச்சேர்க்கைக் கூண்டின் அடிப்பாகத்தில் இரும்புக்கம்பி வலை அமைந்திருப்பதால் தாய் அந்திப்பூச்சிகள் இடும் முட்டைகள் அதன் வழியே கீழே வந்து சேகரிக்கும் தட்டில் விழும் அதிக அளவு முட்டைகளைப் பெறுவதற்கு 5 மில்லி தேன் கலந்து அதில் ஒரு வைட்டமின்- இ குளிகையினுள் உள்ள திரவத்தினை கலந்து பஞ்சில் நனைத்து இனச்சேர்க்கை கூண்டிற்குள் நூலில் கட்டித்தொங்க விட வேண்டும். இவ்வாறாக ஒருமுறை இனச்சேர்கைக் கூண்டுக்கு மாற்றப்படும். அந்திப்பூச்சிகள் 4 நாள் வரை தொடர்ந்து முட்டைகள் இடும். ஒவ்வொரு கூண்டிற்குள் 2500 முதல் 3000        அந்திப்பூச்சிகள் வரை விடலாம். முட்டைகளைச் சேகரிக்க இனச்சேர்க்கைப் பெட்டியின் அடிப்பாகத்தில் இனாமல் தட்டு அல்லது காகித அட்டையினை விரித்து விட்டால் சுத்தமான முட்டைகளைப் பின்னர்  சேகரிக்க உதவும்.
            முட்டைகளுடன் அந்திப்பூச்சிகளின் இறக்கை, செதில்கள், உடைந்த கால்கள், துகள்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் கலந்திருக்கும். இவற்றை பிளாஸ்டிக் வடிகட்டிகள் மூலமாகவோ அல்லது அந்திப்பூச்சிகள் முட்டை மற்றும் செதில் பிரித்தெடுக்கும் கருவியின் உதவியோடு தூசி இல்லாத தூய்மையான முட்டைகளைப் பெறலாம். உணவுக்கலவை நிரப்பப்பட்ட  ஒரு தட்டிலிருந்து மொத்தம் 2500 முதல் 2800 அந்திப்பூச்சிகள் வரை 90 நாட்களில் வெளிவரும். ஆதலின் ஒரு உணவுக்கலவை நிரப்பப் பட்ட   தட்டுகளை 90 நாட்களுக்குப்பிறகு வெளியே எடுத்து குருணைகளை அகற்றி தட்டுகளை பார்மலின் சோடியம் ஹைப்போகுளோரைட் கலவை கொண்டு சுத்தம் செய்து விட வேண்டும்.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015