பயிர் பாதுகாப்பு :: ஒட்டுண்ணிகள் உற்பத்தி முறைகள்

டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி உற்பத்தி முறை

சுத்தம் செய்யப்பட்ட அந்திப்பூச்சியின் முட்டைகளை கண்ணாடித் தட்டில் சீராகப்பரப்பி 45 செ.மீ. நீளம் கொண்ட 40 வாட் புற ஊதா நிறக்குழல் விளக்கின் கீழ் 20 செ.மீ. இடைவெளியில் 30 நிமிடம் கதிர் வீச்சு படும்படி வைத்தால் முட்டையின் கரு அழிந்து பூச்சியின் புழு பருவம் வெளிவருவது தடைப்படுகிறது.
இவ்வாறு கரு அழிக்கப்பட்ட முட்டைகளை பசை தடவப்பட்ட காகித அட்டையின் (30X 15 செ.மீ.) மேல் வடிகட்டிக்கொண்டு ஒரே சீராகத்தூவ வேண்டும். பசையின் மீது விழும் முட்டைகள் மட்டும் ஒட்டிக்கொள்கின்றன. பின்னர்  அட்டையினைத் திருப்பி வைத்து மெதுவாகத் தட்டினால் அட்டையில் ஒட்டாத முட்டைகள் கீழே விழுந்து விடும். அட்டைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் கோடுகள் போட்டு வைத்தால் முட்டைகளின் அளவினைத் தெரிந்து கொள்ள வாய்ப்பாகும். ஒரு 30 X 15 செ.மீ. அட்டையில் 6 மி.லி. முட்டைகளை ஒட்டலாம். இதனை 30 சிறுகட்டங்களாகப் பிரித்தால் 5 சிறு கட்டங்கள் கொண்ட பகுதி 1 மிலி என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். இவ்வாறு முட்டை ஒட்டப்பட்ட அட்டைகளை சுமார் 20 நிமிடங்கள் மின் விசிறியின் கீழ் உலர வைக்க வேண்டும். இவ்வட்டைகளை ஒட்டுண்ணிகள் தாக்குவதற்கு ஏதுவாக முட்டை ஒட்டுண்ணி வெளிவந்து தயாராக இருக்கும் பாலித்தீன் பைகளுக்குள் வைக்க வேண்டும்.
            6 மி.லி. அந்திப்பூச்சி முட்டைகள் 1 மிலி ஒட்டுண்ணி அதாவது 6:1 என்ற விகிதத்தில் பாலித்தீன் உறைகளின் உள்ளே வைத்து மூடி விட வேண்டும். டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளின் முட்டை பருவம் 1 நாள், புழுப்பருவம் 3 நாள், கூட்டுப்புழுப்பருவம் 2 நாள் ஆகும். இவை அனைத்தும் முட்டைக்குள் இருந்து 6 நாட்களில் முழு வளர்ச்சியடைந்து ஒட்டுண்ணியாக வெளிவந்து 5-8 நாட்கள் வரை உயிர் வாழும்.
            அந்திப்பூச்சியின் முட்டைகளுக்கு உள்ளேயே ஒட்டுண்ணி வளர்ச்சியடையும். மூன்று நாட்கள் கழித்து முட்டைகள் கருமை நிறமாக மாறும். இந்த நிறமாற்றம் ஒட்டுண்ணுதலை உறுதி செய்ய உதவும். ஒட்டுண்ணிகளின் மொத்த வாழ்க்கைப்பருவம் 7 நாட்கள் தான். எனவே ஒட்டுண்ணி அட்டைகளை விரைவாக வயல்களுக்கு 7 நாட்களுக்குள் கொண்டு செல்லுதல் முக்கியம். தேவை ஏற்படாத சூழ்நிலையில் முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை விரைவாக வயல்களுக்கு 7 நாட்களுக்குள் கொண்டு செல்லுதல் முக்கியம். தேவை ஏற்படாத சூழ்நிலையில் முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை 10 சென்டிகிரேடு வெப்பநிலையில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து 20 நாட்கள் வரை சேமிக்கலாம்.
            வெவ்வேறு ஆய்வுக்கூடங்களிலிருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளையும் கோர்சைரா அந்திப்பூச்சி முட்டைகளையும் வரவழைத்து ஒட்டுண்ணிகள் உற்பத்தி செய்து ஆய்வுக்கூட ஒட்டுண்ணிகளுடன் கலப்பதால் அதன் தரம் உயர்கிறது.
டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளைத் தோட்டங்களில் விடும் முறை

  1. ஒட்டுண்ணி அட்டைகளை மாலை வேளையில் வயலில் கட்ட வேண்டும்.
  2. ஒட்டுண்ணி அட்டைகளை சிறு துண்டுகளாக வெட்டி இலைகளின் கீழ்பகுதியில் காற்றில் அசையாமல் நன்கு கட்ட வேண்டும். அழுந்தி ஊக்கி கருவி கொண்டு குத்தி வைக்க வேண்டும்.
  3. வயல்களில் ஓரங்களில் ஒட்டுண்ணி அட்டைகளைக் கட்டுவதைத் தவிர்த்து உள்பகுதியில் பல இடங்களில் கட்டுவதால் ஒட்டுண்ணிகள் சீராகப் பரவுவதற்கு வழிவகுக்கும்.
  4. ஒட்டுண்ணி அட்டைகள் கட்டிய பின் 7-10 நாட்களுக்குப் பயிரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏதும் பயன்படுத்தக்கூடாது.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015