நூற்புழுக்கள் :: பழப்பயிர்கள் :: வாழை
வாழையில் நூற்புழுக்களின் தாக்கம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்

நூற்புழு தாக்குதலின் அறிகுறிகள்:

வேர் குடையும் மற்றும் வேர் அழுகல் நூற்புழுக்கள் தாக்கிய வாழைப்பயிர்கள் பொதுவாக வளர்ச்சி குன்றி காணப்படும். வேர் மற்றும் கிழங்குகளின் மேல்தோல் பகுதியை துளைத்து கொண்டு உள்ளே சென்று, பின்பு அங்கேயே இனப்பெருக்கம் செய்வதால், கருஞ்சிவப்பு நிறத்தில் திட்டுக்கள் உண்டாகின்றன. அதுமட்டுமில்லாமல், வாழையின் வேரில் காணப்படுகின்ற கருஞ்சிவப்பு கோடுகள் ஒன்றோடொன்று இணைந்து, வேர் முழுக்க அழுகி காணப்படும்(படம்-1). பாதிக்கப்பட்ட  வேரை இரண்டாகப் பிளந்தால் நூற்புழுக்களின் தாக்கத்தால் வேரில் உட்பகுதி வரை வேர் அழுகல் இருப்பதைத் தெளிவாக காணலாம். (படம்-2). ஆகவே தான், இவற்றை “வேர் அழுகல் நோய்” என்றும், இந்நோய் உண்டாக காரணமாக உள்ள நூற்புழுக்களுக்கு வேர் தாக்கும், வேர் குடையும் மற்றும் வேர் அழுகல் நூற்புழுக்கள் எனவும் கூறப்படுகின்றன. இதனால் நூற்புழுக்கள் தாக்கப்பட்ட வாழை மரத்திற்கு மண்ணில் பிடிப்புத்தன்மை இல்லாமல் போவதால் லேசான காற்றுக்கும் மரம் எளிதாக சாய்ந்து விடுகிறது (படம்-3). காயம் பட்ட வேர் மற்றும் கிழங்கில் பூஞ்சாணங்கள் நுழைந்து வாடல் நோய் உண்டாக இந்நூற்புழுக்களும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

வேர் அழுகல் கருஞ்சிவப்பு நிற திட்டுக்கள் சாய்ந்த மரம்

நூற்புழுவினால் ஏற்படும் மகசூல் இழப்பு:

நூற்புழுக்களின் தாக்கத்தால் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது. நேந்திரன், ரொபஸ்டா, பூவன், நெய்பூவன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி போன்ற ரகங்களில், இவை அதிக அளவில் தாக்கி, சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

நூற்புழு பரவும் முறை:

வேர் குடையும் மற்றும் வேர் அழுகல் நூற்புழுக்களின் வாழ்க்கை மூன்று அல்லது நான்கு வாரங்களாகும், வேர் குடையும் நூற்புழுக்களில் ஆண் நூற்புழுக்கள் எவ்வித வேர் பாதிப்பையும் ஏற்படுத்தாது. வேர் குடையும் மற்றும் வேர் அழுகல் நூற்புழுக்கள் 13 மற்றும் 8 மாதங்கள் வரை மண்ணில் தங்கி வாழும் தன்மையுடையவையாகும். இவை விதை கிழங்குகள் மூலம் பரவுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வரும் வடிநீர் மூலமும் புதிய இடங்களுக்கு பரவுகிறது. வேர் முடிச்சு நூற்புழுக்களின் வாழ்க்கை சுழற்சி 25 முதல் 30 நாட்களாகும். ஒரு பெண் புழு சுமார் 300-400 முட்டைகளை முட்டைகூடு பையும், வேரின் உட்பகுதியில் ஒட்டிக்கொண்டு உயிர் வாழ்கின்றன. இரண்டாம் இளநிலை பருவ புழுக்கள் வேரினைத்தாக்கி அங்கேயே மீண்டும் இனப்பெருக்கம் செய்கின்றன. இப்படி தொடர்ந்து வேர் முடிச்சு நூற்புழுக்கள் வேரைச்சார்ந்து இனப்பெருக்கம் செய்வதால், உள்பகுதியில் அடைப்பு ஏற்பட்டு மண்ணிலிருந்து மரத்திற்கு செல்லவேண்டிய சத்துக்கள் மற்றும் நீர் சரியாகப்போய் சேர்வதில்லை.
            திசு வளர்ப்பு வாழை கன்றுகளையும் வேர் முடிச்சு நூற்புழுக்கள் மிக அதிகமாகத் தாக்குகின்றன. இவை இளம் வேர்களைத்தாக்கி வேர்முடிச்சு போன்ற அறிகுறிகளை திசு வளர்ப்பு வாழைக்கன்றுகளை பாலிதீன் பைகளில் வைத்திருக்கும் பொழுதே காணப்படுகிறது.(படம்-4). இவற்றை கவனிக்காமல் நிலத்தில் நடவு செய்தால், வாழை வளர்வதற்கு அதிக நாள் எடுத்துக்கொள்ளும். ஒரு சில வாழைகள் வளரவே வளராது. அப்படி வளர்ந்தாலும், பூ விடுவது தாமதமாகும். அதன் மூலம் வருகின்ற வாழைத்தார்களின் காய்களும் மிகச்சிறியதாகக் காணப்படும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015