முதல் பக்கம் தொடர்புக்கு


தீவன உற்பத்தி   

  பயறுவகை தீவனப் பயிர்கள்

  தட்டைப் பயறு / காரமணி  
 • இந்த பயிர் வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மற்றும் குளிர் பிரதேசங்களில் வளரக் கூடியது.
 • தட்டைப்பயிரை பசுந்தீவனமாகவும், மேய்ச்சல் தரையாகவும்,  உலர் தீவனமாகவும் மற்றும் ஊறுகாய் புல் தயாரிப்பில் மக்காசோளம் மற்றும் சோளப்பயிருடன் கலந்து உபயோகிக்க வளர்த்தப்படுகிறது.
 • மூன்று பருவ காலங்களில் பயிரிடலாம்.
 • வருடாந்திர பயிராக பயிரிடலாம்.
 • ரகங்கள் – CO5, ரஷ்யன் ஜெய்ண்ட், EC 4216, UPC – 287 மற்றும் உள்ளுர் வகைகள்.
 • விதையளவு – 40 கிலோ / ஹெக்டர்.
 • அறுவடை விதைத்த 50 -55 நாட்களில் (50% பூக்கும் தருணத்தில்)
 • CO5 ரகமானது  பாசன வசதியுள்ள இடங்களில் பயிரிட ஏற்றது.    (ஜூன் – ஜூலை மாதங்களில்)

CO5 ரகத்தின் குணங்கள் :

 • பசுந்தீவன உற்பத்தி டன் / ஹெக்டர் --18 to 20
 • உலர் பொருள் அளவு (%) – 14.64
 • கச்சாப் புரதம் (%) – 20.00
 • பயிரின் உயரம் ( செ.மீ.) – 93.00
 • கிளைகள் – 2-3
 • இலைகள் – 12
 • இலையின் நீளம் (செ.மீ.) – 12.1
 • இலையின் அகலம் (செ.மீ.) – 8.2
 • இலை தண்டு விகிதம் – 8.3
 • பயிரின் அமைப்பு – பாதி விரிந்த அமைப்பு.
 • பயிரின் வகை – நடுத்தர வகை


   வேலிமசால்
 • இப்பயிர் நீர்பாசன வசதியுள்ள இடங்களில் வருடம் முழுவதும், மானாவரியில் ஜீன் – அக்டோபர் மாதங்களிலும் பயிரிடலாம்.
 • விதையின் அளவு 20 கிலோ / ஹெக்டர் .பார் அமைத்து கரையின் ஒரங்களில் உரங்கள் இட்டபிறகு, 2 செ.மீ. ஆழத்தில் விதைகளை இட்டு மண்ணால் மூடிவிடவேண்டும்.
 • விதைப்பு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பிறகு 3 வது நாளும் மற்றும் வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
 • முதல் அறுவடை, விதைப்பு செய்த 90 நாட்கள் கழித்து அல்லது பயிர் 50 செ.மீ உயரம் வளர்ந்தவுடன் செய்யலாம். பிறகு 40 நாட்கள் இடைவெளியில் அதே உயரத்தில் அறுவடை செய்யலாம்.

குதிரை மசால்  
 • குதிரை மசால் தீவனப்பயிர்களின் ராணி என அழைக்கப்படுகிறது.
 • இது நன்கு ஆழமாக வேரூன்றி வருடம் முழுவதும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வளரக்கூடிய பயிராகும்.
 • நல்ல சுவையுள்ள பயிராகும். கச்சா புரதம் 15-20 சதவீதம் உள்ளது.
 • இப்பயிர்களின் வேர்முடிச்சுகளால் நுண்ணுயிரிகள் பெருகி காற்றில் உள்ள தழைச்சத்தினை கிரகித்து மண்ணில் நிலை படுத்துவதால் மண் வளம் அதிகரிக்கிறது.
 • இதை பசுந்தீவனமாகவும்,உலர்தீவனமாகவும், ஊறுகாய் புல் தயாரிப்பிலும் பயன்படுத்தலாம். ஆனால் மேய்ச்சல் தரையாக பயன்படுத்த இயலாது.
 • ரகங்கள் – ஆனந்த் 2, சிர்ஸா -9, IGFRI S – 244, and கோ -1.
 • கோ 1 ரகம் ஜூலை – டிசம்பர் காலத்திற்கு எற்றது.
 • குதிரை மசால் மிக வெப்பமான மற்றும் மிகவும் குளிர் பிரதேசங்களுக்கு ஏற்றது அல்ல.
 • விதை அளவு. – 20 கிலோ / ஹெக்டர்.
 • முதல் அறுவடை விதைப்பு செய்து 75-80 நாட்கள் கழித்தும், பிறகு 25 – 30 நாட்கள் இடைவெளியில் செய்யலாம்.

கோ 1 ரகத்தின் குணங்கள் :
 • பசுந்தீவன உற்பத்தி டன் / ஹெக்டர் / வருடம் – 70-80 ( 10 அறுவடையில் )
 • விதை உற்பத்தி கிலோ / ஹெக்டர் - 200- 250
 • புரதத்தின் அளவு (%) – 20-24
 • உலர் பொருள் அளவு (%) – 18-20
 • தாவரத்தின் உயரம் (செ.மீ) -60-80
 • ஒரு கதிரில் உள்ள கொத்துகளின் எண்ணிக்கை – 12-15


    முயல் மசால்
 • முயல் மசால் நேராக வளரக்கூடியது. இதன் தாயகம் பிரேசில் ஆகும்.
 • இது 0.6 முதல் 1.8 மீ வரை வளரக் கூடியது.
 • வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வறட்சியினைத் தாங்கி, குறைந்த அளவு வளம் கொண்ட மண், அமிலத்தன்மை கொண்ட மண் மற்றும் குறைந்த வடிகால் உள்ள பகுதியில், முயல் மசால் வளரும் தன்மை படைத்தது.
 • வறட்சியினைத் தாங்கி வளரக்கூடிய முயல் மசால், குறைந்த அளவு மழை பெறும் (450-840 மிமீ) பகுதிகளிலும் வளரும்
 • பல்வேறு விதமான மண் வகைகளிலும் முயல் மசால் வளரக்கூடியது.
 • முயல் மசாலில் உள்ள புரதத்தின் அளவு 15-18 சதவிகிதமாகும்.
 • முயல் மசால் நன்கு வளரக்கூடிய பருவம் – ஜூன், ஜூலை முதல் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் வரை.
 • 30 x 15 செ.மீ வரிசையாக விதைப்பதற்கு  ஒரு ஹெக்டேருக்கு 6 கிலோ என்ற அளவிலும், தெளித்தல் முறையின் மூலம் விதைப்பதற்கு ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ என்ற அளவிலும் விதைகள் தேவைப்படும்.
 • விதைப்பு செய்து 75 நாட்கள் கழித்து, முயல் மசால் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். அடுத்த அறுவடைகள் இத்தீவனப் பயிரின் வளர்ச்சியனைப் பொருத்தது.
 • முதல் வருடத்தில், பயிரின் வளர்ச்சி குறைவாகவும், அதன் உற்பத்தியும் குறைவாகவும் இருக்கும்.
 • முயல் மசால் விதைப்பு செய்து ஒரு வருடம் ஆன பின்பு அதன் விதைகளே கீழே விழுந்து முளைத்து விடுவதால், ஒரு வருடத்திற்கு, ஒரு ஹெக்டேரில் 35 டன்கள் வரை முயல் மசால் அறுவடை செய்யலாம்.
 

top

தானிய வகை தீவனப் பயிர்கள்

 தீவன மக்காச்சோளம்
 • தீவன மக்காச்சோளம் பல்வேறு விதமான மண் ரகங்களில் வளரும் தன்மையுடையது. ஆனால் நல்ல வடிகால் கொண்ட சத்துகள் நிறைந்த வளமான மண்ணில் தீவன மக்காச்சோளம் நன்றாக வளரும்.
 • மக்காச்சோளம் கரிஃப் பருவத்தில் வளரும் பயிரமாகும். அதாவது ஜூன் மற்றும் ஜூலையில் விதைப்பு செய்யப்படும். தென்னிந்தியாவில், ராபி மற்றும் வெயில் காலங்களில் இது பயிர் செய்யப்படுகிறது.
 • தண்ணீர் பாசன வசதி கொண்ட நிலங்களில் மக்காச்சோளத்தினை வருடம் முழுவதும் சாகுபடி செய்யலாம்.
 • ஆப்ரிக்க நெட்டை, விஜய் கம்போசிட், மோட்டி கம்போசிட், கங்கா-5 மற்றும் ஜவகர் போன்றவை தீவன மக்காச்சோள ரகங்களாகும்.
 • ஒவ்வொரு விதையையும் 30 செமீ இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள பார்களில் 15 செமீ இடைவெளியில் ஊன்றுவதற்கு  ஒரு ஹெக்டேருக்கு 40 கிலோ விதை தேவைப்பபடும்.
 • ஒரு ஹெக்டேரில் விதைப்பு செய்த மக்காச்சோளத்தலிருந்து கிடைக்கும் தீவனத்தின் அளவு 40-50 டன்களாகும். ஆனால் இதன் டிரை மேட்டர் எனப்படும் தண்ணீரற்ற சத்தின் அளவு ஒரு ஹெக்டேருக்கு 10-15 டன்களாகும்.
 • நீண்ட நாட்களுக்கு பசுந்தீவனத்தினைப் பெற நேரடியாக விதைப்பு செய்யலாம்.
 • மக்காச்சோளக் கருது பால் கருதாக இருக்கும்போது அறுவடை செய்யவேண்டும்.

 


    தீவன சோளம்/சோளம்/ஜோவர்

 • சோளம் தானிய உற்பத்திக்கும், தீவன உற்பத்திக்கும் பயிரிடப்படுகிறது.
 • சோளம் வறட்சியினைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும்.
 • வெப்ப மண்டலப் பகுதிகளில் 25-35o செல்சியஸ்  வெப்பநிலையில் சோளம் நன்றாக வளரும்.
 • மலைப்பகுதிகளில் அதாவது 1200 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள இடங்கள் இப்பயிர் வளர்வதற்கு ஏற்றதல்ல.
 • வருட மழையளவு 300-350மிமீ இருக்கும் இடங்களில் சோளம் பயிரிடப்படுகிறது.
 • மணல் பாங்கான மண்ணைத் தவிர மற்ற எல்லா வித மண்ணிலும் சோளம் வளரும்.
 • நீர்ப்பாசனம் அளிக்கப்படும் இடங்களில் பயிரிட ஏற்ற சோள இரகங்கள் (ஜனவரி முதல் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் முதல் மே) கோ-11, கோ-27, கோ-எஃப் எஸ் 29.
 • மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப்படும் சோள ரகங்கள் (செப்டம்பர்-அக்டோபர்) கே 7, கோ-27, கோ எஃப் எஸ் 29, கே 10.
 • கோ எஃப் எஸ் – 29 எனும் சோள ரகத்தினை ஒரு முறை பயிரிட்ட பிறகு திரும்பத் திரும்ப அறுத்து மாடுகளுக்குப் தீவனமாக போடலாம். இந்த ரகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் 2001 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. டி என் எஃப் எஸ்  9602 மற்றும் சூடான் புல் ரகங்களின் கலப்பினம் மூலமே கோ எஃப் எஸ் 29 சோள ரகம் உருவாக்கப்பட்டது.
 • ஒரு ஹெக்டேர் நிலத்தில் சோளம் பயிரிடத் தேவையான விதையளவு 40 கிலோக்களாகும். (கோ எஃப் எஸ் 29 ரகத்திற்கு மட்டும் 12.5 கிலோ)
 • பசுந் தீவனமாக சோளத்தினை பூ விட்ட பிறகு உபயோகிக்கலாம்.
 • ஒரு முறை மற்றும் அறுவடை செய்யப்படும் சோளப் பயிரை அதன் 60-65ம் நாள் அறுவடை செய்யலாம். ஆனால் பல முறை அறுத்து உபயோகிக்கப்படும் சோளப்பயிரை விதை விதைத்து 60 நாளும், பிறகு 40 நாள் கழித்தும் அறுவடை செய்யலாம்.
 • ஆனால் கோ. எஃப். எஸ் 29 ரக சோள ரகத்திற்கு மட்டும் 65 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம் (வருடத்திற்கு 5 அறுவடைகள்).
 

top

  புல் வகை தீவனப் பயிர்கள்

  கலப்பின நேப்பியர் – கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் அல்லது பாஜ்ரா நேப்பியர் கலப்பினம்  
 • கம்பு நேப்பியர் ஒட்டுப் புல் பசும் தீவனத்தில், நேப்பியர் புல்லை விட அதிக கிளைகளும்,இலைகளும் இருப்பதுடன், வேகமாக வளரும் திறன் படைத்தது. இதனால் தரமான மற்றும் அதிக அளவிலான தீவனத்தினைப் பெற முடியும்.
 • இந்த பசும் தீவனத்திலுள்ள புரத அளவு 8-11%.
 • கோ சி என் 4 எனப்படுவது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட  கலப்பின நேப்பயர் புல் ரகமாகும். இப் புல்வகைத் தீவனம் கோ 8 கம்பு  ரகத்தையும் நேப்பியர் எஃப் டி 461 ரகத்தையும் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு கலப்பின புல்வகைத் தீவனமாகும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 380-400 டன்கள் கலப்பின நேப்பியர் பசும் தீவனத்தை உற்பத்தி செய்யலாம். இத்தீவனப் பயிரில் அதிகப்படியான மென்மையான, ஈரப்பதம் அதிகம் கொண்ட கிளைகள் இருப்பதுடன், பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலின்றி இருக்கும். வருடம் முழுவதும் இப்பசுந்தீவனத்தை நீர்ப்பாசன வசதி இருக்கும் இடங்களில் அறுவடை செய்யலாம்.
 • கேகேஎம்- 1 கம்பு நேப்பியர்- வருடத்திற்கு 288 டன்கள் வரை அறுவடை செய்யப்படும் ஒரு கலப்பின புல் வகை பசுந்தீவனமாகும். இத்தீவன ரகம் தரம் உயர்ந்ததாகவும், அதிக கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து மிகுந்ததாகவும், குறைவான ஆக்சலேட் சத்து உள்ளதாகவும் இருக்கும்.
 • பூசா ஜெயண்ட், என்பி 21, என்பி 37, ஐ ஜி எஃப் ஆர் ஐ 5, ஐ ஜி எஃப் ஆர் ஐ 7 மற்றும் ஐ ஜி எஃப் ஆர் ஐ 10 ரகங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்ட உயர் ரக கலப்பின நேப்பியர் ரகங்களாகும்.
 • Co1, Co2, Co3, Co4 & KKM1  போன்றவையும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட கலப்பின நேப்பியர் ரகங்களாகும். இந்த ரகங்கள் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும், வருடம் முழுவதற்கும் வளர்வதற்கு ஏற்றவை.
 • ஒரு ஹெக்டேர் நிலத்தில் பயிரிட 40000 கரணைகள் தேவைப்படும்.
 • முதல் அறுவடை நடவு செய்து 75 – 80 நாட்கள் கழித்தும், பிறகு அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியிலும் செய்யலாம்.

 

   கினியா புல்

 • இந்த புல் வகைத் தீவனம் உயரமான, முழங்குகள் அதிகமுள்ள வேகமாக வளரும், கால்நடைகளால் விரும்பி உண்ணக்கூடிய பல வருட பசுந்தீவனப் பயிராகும்.
 • இதன் ரைசோம் சிறியதாக இருக்கும்.
 • விதைப்பு செய்தோ அல்லது வேர் விட்ட கரணைகள் ஊன்றியோ கினியா புல் பயிரிடப்படுகிறது.
 • இதிலுள்ள புரதத்தின் அளவு 4-14%.
 • ஹேமில், பிபிஜி 14, மாகுனி, ரிவர்ஸ் டேல் போன்றவை கினியா புல்லின் சில ரகங்களாகும்.
 • Co1 மற்றும் Co2  ரகங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கினியாப்புல் ரகங்களாகும்.
 • களிமண் பாங்கான நிலங்களிலும், தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களிலும் கினியா புல் நன்றாக வளராது.
 • வடிகால் வசதியுள்ள அனைத்து நிலங்களிலும் கினியாப்புல் வளரும்.
 • விதையளவு – ஒரு ஹெக்டேர் நிலத்தில் 2.5 கிலோ, அல்லது ஒரு ஹெக்டேர் நிலத்தில் நட 66000 கரணைகள்.
 • இடைவெளி – 50 X 30 செமீ
 • முதல் அறுவடை விதை முளைத்து 75-80 நாட்கள் கழித்தோ அல்லது கரணைகள் நட்டு 45 நாட்கள் கழித்தும் செய்யவேண்டும். அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியில் செய்யலாம்.
 • ஒரு ஹெக்டேர் நிலத்தில் 175 டன்கள் கினியா புல் பசுந்தீவனத்தை 5 அறுவடைகளில் பெறலாம்.
 • ஹெட்ஜ் லூசர்ன் எனப்படும் வேலி மசாலுடன் கினியா புல்லை 3;1 என்ற விகிதத்தில் பயிர் செய்து வேலி மசாலுடன் சேர்த்து தீவனமாக கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
 

 பாராபுல் – நீர்ப்புல் / தண்ணீர்ப் புல் / எருமைப்புல்  
 • ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களில் இந்த புல்வகைத் தீவனத்தினைப் பயிரிடலாம்.
 • பருவ காலங்களின்போது தண்ணீர் தேங்கும் சமவெளிகளிலும், பள்ளமான இடங்களிலும் இப்புல் ரகத்தினை வளர்க்கலாம். அதாவது நிலத்தில் தண்ணீர் தேங்குவதையும், நீண்ட நாள் வெள்ளப்பெருக்கையும் இப்புல் ரகம் தாங்கி வளரும் தன்மையுடையது.
 • வறண்ட அல்லது மிதமான வறண்ட நிலங்களில் இந்த புல் ரகம் வளராது.
 • இப்பயிர் குளிரினால் அதிகம் பாதிக்கக்கூடியது. எனவே இந்தியாவில் குளிர் அதிகமிருக்கும் பகுதிகளில் குளிர் காலத்தில்  இப்பயிரில் வளர்ச்சி எதுவும் இருக்காது.
 • தண்ணீர் தேங்கும் மண் வகைகள் இப்பயிர் வளர்வதற்கு ஏற்றவை.
 • மணல் பாங்கான மண்ணிலும், நீர்ப்பாசனம் போதுமானதாக இருந்தால் இந்த தீவனப்புல் ரகம் நன்கு வளரும்.
 • விதைப்பு செய்வதன் மூலம் இந்த தீவனப்பயிரைப் பயிரிடுவது கடினம். எனவே தண்டுகளை வெட்டி ஊன்றுவதன் மூலம் இந்த தீவனப்புல்லை பயிரிடலாம்.
 • தென்னிந்தியாவின் எந்த பருவ நிலையிலும் இந்த தீவனப்புல்லைப் பயிரிடலாம். ஆனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழைப் பொழிவு இருப்பதால் இதனை பயிர் செய்வதற்கு இந்த மாதங்கள் ஏற்றவையாகும்.
 • உள்நாட்டு பாரா புல் ரகம் மட்டுமே பயிரிடப்படுகிறது. இந்த தீவனப்புல்லில் கலப்பின ரகங்கள் இல்லை.
 • மெல்லிய தண்டுகள் விதைக் கரணைகளாகப் பயன்படுகின்றன. 2-3 கணுக்கள் கொண்ட தண்டுகளை 45-60 செமீ அகலமுள்ள பார்களாக 20 செமீ இடைவெளியில் அமைத்து இக்கரணைகளை ஊன்றலாம். ஈர மண்ணில் கரணையின் இரண்டு முனைகளும் ஒட்டிக்கொண்டிருக்குமாறு வைத்து மண்ணில் ஊன்றவேண்டும்.
 • ஒரு ஹெக்டேர் நிலத்தில் நடுவதற்கு 800-1000 கிலோ கரணைகள் தேவைப்படும்.
 • இக்கரணைகளை ஊன்றி 75-80 நாட்கள் கழித்து அறுவடை செய்யலாம். பின்பு 40-45 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஒரு வருடத்தில் 6-9 முறை இப்புல்லை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேரில் ஒரு வருடத்திற்கு 80-100 டன்கள் தீவனப்புல் கிடைக்கும்.
 • இந்த தீவனப்புல்லை பசுந்தீவனமாக மாடுகளுக்கு அளிக்கலாம்
 • இந்த தீவனப்புல்லை பதப்படுத்தி வைக்கோலாகவோ அல்லது சைலேஜ் எனப்படும் ஊறுகாய் புல்லாகவோ தயாரிக்க முடியாது.


 

  நீல பஃபல் புல் / நீலக்கொழுக்கட்டைப்புல் / கோ 1
 • வறண்ட நிலங்களில் நீர்ப்பாசனம் அளிக்கப்படும்போது சென்க்ரஸ் எனும்  இந்தப்புல் ரகம் நன்றாக வளரக்கூடிய ஒரு பசுந்தீவனப் பயிராகும்.
 • சென்க்ரஸ் சீலியாரிஸ் அல்லது அன்ஜன் புல் மற்றும் சென்க்ரஸ் செடிகெரஸ் அல்லது கருப்பு அன்ஜன் புல் போன்றவை பொதுவாக வளர்க்கப்படும் இந்த புல் ரகங்களாகும். ஆனால் இவை குறைந்த மகசூலை மட்டுமே கொடுக்கக்கூடியவை.
 • சென்க்ரஸ் கிளாகஸ் எனப்படும் மற்றொரு ரகம் வறண்ட நிலங்களில் மற்ற புல் இனங்களை விட நன்றாக வளரும்.
 • தண்ணீர் நன்றாக வடியும், அதிக கால்சிய சத்து கொண்ட மண் ரகங்கள் இத்தீவனப்புல் வளர ஏற்றதாகும்.
 • ஒரு ஹெக்டேர் நிலத்தல் பயிரிடத் தேவைப்படும் விதையளவு 6-8 கிலோக்களாகும்.
 • விதைப்பு செய்து 70-75 நாட்கள் கழித்து முதல் அறுவடையும் பிறகு 4-6 முறையும் இப்பயிரை அறுவடை செய்யலாம்.
 • ஒரு வருடத்திற்கு, ஒரு ஹெக்டேரில் இப்புல்லை பயிரிடுவதால் வருடத்திற்கு 40 டன்கள் வரை 4-6 அறுவடைகளில் பசுந்தீவனம் பெறலாம்.

top

  மரவகை தீவனப் பயிர்கள்

  சூபா புல் அல்லது சவுண்டல் அல்லது கூபாபுல்  
 • பருவ நிலைக்கேற்ற பயிர் செய்யப்படும் சூபா புல் ரகங்கள் உள்ளன
 • ஜூன்- ஜூலை மாதம் – ஹவாயன் ஜெயண்ட்-  (ஐவரி கோஸ்ட்), கோ 1
 • மானவாரி ரகம் (செப்டம்பர்- அக்டோபர்), கே 8, ஜெயண்ட் இல்பில்-இல்பில், கோ 1
 • சூபா புல்லை நட்டு 6 மாதம் கழித்து அறுவடை செய்யலாம். எனினும் முதல் அறுவடை மரத்தின் அடிப்பகுதி 3 செமீ அளவிற்கு தடிமனாகிய பின்பு அல்லது மரம் ஒரு முறை காய் வைத்து விதைகளை உற்பத்தி செய்த பின்னரே முதல் அறுவடை செய்யவேண்டும்.
 • முதல் அறுவடைக்குப் பின்பு 40-80 நாட்களுக்கு ஒரு முறை மரத்தின் வளர்ச்சி மற்றும் பருவ நிலையினைப் பொருத்து அறுவடை செய்யலாம்.
 • வறட்சியான பகுதிகளில், மரத்தினை இரண்டு வருடம் வரை வளர விட்டு, அதன் வேர்ப்பகுதி நன்றாக ஆழமாக ஊன்றிய பின்னரே அறுவடை செய்யவேண்டும்.
 • மண்ணிலிருந்து 90-100 செமீ உயரம் விட்டு மரத்தை வெட்டவேண்டும்.
 • நீர்ப்பாசனம் இருக்கும் இடங்களில், தூய சூபாபுல் ரகம் ஒரு ஹெக்டேரில் 80-100 டன் அளவிற்கு பசுந்தீவனத்தினை உற்பத்தி செய்யும்.
 • மழை பெய்யும் நேரங்களில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 40 டன்கள் வரை பசுந்தீவன உற்பத்தியினை மரத்தின் 2ம் வருட வயதிலிருந்து பெறலாம். மேலும் சூபா புல் மரத்தினை 100 செமீ உயரம் வரை விட்டு கவாத்து செய்யலாம்.

 

   கிளைரிசிடியா

 • கிளைரிசிடியா வெளிறிய உட்பகுதியுடன் கூடிய சிறிய, இலை உதிரக்கூடிய மர ரகமாகும்.
 • கிளைரிசிடியா செப்பியம் பல்வேறு பருவ நிலைகளைத் தாங்கி வளரக்கூடியது. வருட மழை அளவு 900 மிமீக்கு அதிகமாக பெய்யும் இடங்களில் இத் தீவன மரம் நன்றாக வளரும். ஆனால் வருட மழையளவு 400 மிமீக்கு குறைவாக உள்ள பகுதிகளிலும் கிளைரிசிடியா வளரும் தன்மை உடையது.
 • கரிசல் மண் முதல், பாறைகள் அதிகம் கொண்ட மண்ணிலும் இந்த தீவன மரம் வளரும். மேலும் தண்ணீர் தேங்கிய பகுதிகளிலும், மண்ணின் அதிகப்படியான ஈரப்பதத்தைத் தாங்கி கிளைரிசிடியா வளரும்.
 • இந்த மரம் விறகுக்கும், கால்நடைத் தீவனமாகவும், பசுந்தாள் உரமாகவும், நிழலுக்கும், நீண்ட தடிகளை உற்பத்தி செய்யவும், உயிர் வேலி அமைக்கவும், மற்ற செடிகள் தாங்கி வளர்வதற்கு பந்தல் அமைக்கவும் பயன்படுகிறது.
 • கிளைரிசிடியா அழகுக்காகவும், காஃபி பயிருக்கு நிழல் தரும் மரமாகவும் வளர்க்கப்படுகிறது.
 • விதைகள் மூலமாகவும், கரணைகள் மூலமாகவும் இம்மரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
 • கிளைரிசிடியா செப்பியம் மற்றும் கிளைரிசிடியா மேக்குலேட்டா போன்ற இரண்டு கிளைரிசிடியா ரகங்கள் கிடைக்கின்றன.
 • கிளைரிசிடியா மேக்குலேட்டா பசுந்தாள் உரமாகப் மிகவும் பயன்படுகிறது. மண்ணில் நைட்ரஜனை நிலைப்படுத்தி மண்ணின் வளத்தினை கிளைரிசிடியா அதிகரிக்கிறது.
 • ஒவ்வொரு முறை வெட்டிய பின்பும் கிளைரிசிடியா அதிகப்படியான கிளைகளை உருவாக்கி சீக்கிரம் வளரும்.
 • ஒரு ஹெக்டேர் நிலத்தினை சுற்றி இம்மரத்தினை நடுவதன் மூலம் 2-2.5 ஹெக்டேர் நிலத்திற்கு தேவைப்படும் பசுந்தாள் உரத்தினைப் பெறலாம்.
 

   அகத்தி  
 • அகத்தி மரத்தின் இலைகள் கால்நடைகளால் குறிப்பாக வெள்ளாடுகளால் விரும்பி உண்ணக்கூடியவையாகும்.
 • இம்மரத்தின் இலைகளில் 25% புரதம் உள்ளது.
 • நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் அகத்தி வருடம் முழுவதும் வளரும்.
 • தண்ணீர் வடிகால் உள்ள பகுதிகளில் அகத்தி நன்கு வளரும்.
 • ஒரு ஹெக்டேர் நிலத்தில் 7.5 கிலோ விதை விதைக்கத் தேவைப்படும். விதைகளை விதைப்பதற்கான இடைவெளி 100 செமீ x 100 செமீ (அதாவது பார்களுக்கு இடையில் 100 செமீ , மரங்களுக்கு இடையில் 100 செமீ இடைவெளி இருக்கவேண்டும்).
 • விதைப்பு செய்து 8 மாதங்களுக்குப் பிறகு முதல் அறுவடையும் பிறகு ஒவ்வொரு 60-80 நாட்களுக்கு இடைவெளியில் அறுவடை செய்யலாம்.
 • ஒரு ஹெக்டேர் நிலத்தில் ஒரு வருடத்தில் 100 டன்கள் வரை பசுந்தீவனம் கிடைக்கும்.
top