தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்

முன்னுரை

காளான்
காளான் என்பது பூசண வகையைச் சேர்ந்த பச்சையில்லாத் தாவரமாகும். காளான்கள் பல்வேறு வடிவங்களிலும் மற்றும் நிறங்களிலும் தோன்றுகின்றன. காளானில் ஒரு தண்டுப்பகுதியும் அதன் மேல் ஒரு தலைப்பகுதியும் காணப்படும். பொதுவாக தலைப்பகுதி குடை மற்றும் சிப்பி போன்ற வடிவங்களில் காணப்படும். தலைப்பகுதியின் அடியில் வரிவரியான செதில் போன்ற அமைப்புகள் இருக்கும். இவற்றுக்கிடையில் லட்சக்கணக்கான காளான் பூசண நுண் வித்துக்கள் நிறைந்திருக்கும். இயற்கையில் இவ்வித்துக்கள் மக்கிய பண்ணைக் கழிவுகள் மற்றும் அங்ககப் பொருட்களில் வளர்ந்து பூசண இழைகளாய் படர்ந்திருக்கும். சாதகமான சூழல் நிலவும் போது, அதாவது மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்குப்பின்,’ பூசண இழைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து காளானாக வளரும்.
உணவுக்காளான்
இயற்கையில் காணப்படும் அனைத்து காளான்களையும் உணவுக்காக பயன்படுத்த இயலாது. ஏனெனில் சிலவகை காளான்கள் நச்சுத்தன்மை உடையது. வெண்மை நிறக் காளான்கள் அனைத்தும் உணவுக்கு பயன்படுத்தலாமென்றும் வேற்று நிறமுடைய காளான்கள் அனைத்துமே நச்சுத்தன்மை கொண்டவைகள் என்றும் கூறிவிடயியலாது. உதாரணத்திற்கு பொலிடாஸ், மேர்செல்லா, சிடேக், வால்வெரியல்லா போன்ற சுவை மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த காளான்கள் நிறம் உடையவை. அதே சமயம் அமோனியா பாலாய்டஸ், அமானிடா வெர்ணா, பிளிரோட்டஸ் ஒலியேரியஸ் போன்ற வெண்மை நிறக்காளான்கள் நச்சுத்தன்மை மிக்கவை.
உணவுக் காளான்களையும் நச்சுக் காளான்களையும் வேறுபடுத்த சரியான முறைகள் இதுவரை கண்டறியப்படவில்லை, சாதாரணமாக உணவுக் காளான்கள் தொடும் பொழுது அல்லது வெட்டும் பொழுது நிறம் மாறாமல் இருத்தல் வேண்டும் மற்றும் காளான் மணம் வீசப்பட வேண்டும். நச்சுத்தன்மையற்ற காளான் இரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை தேர்வு செய்து வளர்த்து பயன் பெறலாம்.
காளான் வளர்ப்பின் முக்கியத்துவம்
நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 3000 மில்லியன் டன் பண்ணைக் கழிவுகள் கிடைக்கின்றது. இதில் ஒரளவு மட்டுமே கால் நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பண்ணைக்கழிவுகள் எரிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 25 விழுக்காடு பண்ணைக் கழிவுகளை காளான் சாகுபடிக்கு உபயோகப்படுத்தினால் 400 மில்லியன் டன் காளான் உற்பத்தி செய்ய இயலும். தற்போது 13,000 மெட்ரிக் டன் காளான்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நமது தமிழ்நாட்டில் கிடைக்கும் 30 கோடி டன் பண்ணைக் கழிவுகளில் சுமார் 10 விழுக்காடு கழிவுகளை காளான் உற்பத்திக்கு பயன்படுத்தினால் 3.4 லட்சம் டன் காளான் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்ய முடியும்.
காளான் சாகுபடியில் உள்ள நன்மைகள் காளான் வளர்ப்பிற்கு சிறிய இடம் போதுமானது.

பண்ணையில் கிடைக்கும் சோளம் மற்றும் வைக்கோல் ஆகியவைகளை முறையே காளான் விதை மற்றும் காளான் உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.

காளான் எடுத்த பின்பு உள்ள எஞ்சிய பொருட்களை இயற்கை உரமாக மாற்றி உபயோகிக்கலாம்.

கிராம மகளிர் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் காளான் வளர்ப்பை சுய தொழிலாக தொடங்கலாம்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு காளான் வளர்ப்பு உறுதுணையாக இருக்கும்.

புரதம் மற்றும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட காளான்களை உட்கொள்ளுவதால் ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கலாம்.

Updated on Nov 2013

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014