நோய் மேலாண்மை
வனப் பயிர்களில் நோய் மேலாண்மை
வேம்பு:
வேம்பில் காணப்படும் நோய்கள்: (அசாடிராக்ட்டா இண்டிக்கா) ஆல்டர்நேரியா, செர்க்கோசஸ்பாரா, கொல்லிட்டோ டிரைக்கம், புசேரியம், ஆய்டியம், கானோடெர்மா மற்றும் கார்ட்டிக்கம் ஆகிய பூஞ்சான்கள் வேப்ப மரங்களைத் தாக்குகின்றது.

அ. நாற்றழுகல் நோய்:
நாற்றாங்கால் நோய்களில் நாற்றழுகல் நோயின் தாக்கம் மிகவும் அதிகம். இந்த நோய் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. முளைக்கு முன் நாற்றழுகல், முளைக்குப் பின் நாற்றழுகல் என இந்த நோய் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. புசேரியம் மற்றும் ரைசோக்டோனியா பூஞ்சான்கள் வனப்பயிர்களில் அதிகமானத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதிகமான மண்ணின் வெப்பநிலை, அதிகப்படியான மண்ணின் ஈரப்பதம், மண்ணின் அதிகமான கார அமில நிலை, அதிக அளவிலான நைட்ரஜன், நிழல் காரணமாக குறைந்த ஒளி அடர்த்தி, மோசமான வடிகால் களிமண்ணும் மோசமான வடிகாலும், அடர்த்தியாக விதைத்தல் ஆகியவை இந்த நோய் தாக்குவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்கின்றன. வேப்ப மரங்களுக்கு நாற்றழுகல் நோயை,  புசேரியம் ஆக்சிஸ்போரம் என்ற பூஞ்சான்தான் தாக்குகிறது.

கட்டுப்பாட்டு முறைகள்:
நோய்க்காரனிகளை அழித்து தாவர வளர்ச்சியை அதிகரிப்பதற்கான நடைமுறைகளைக் கையாளுதல், பார்மலின்ப் போன்ற இரசாயனத்தைப் பயன்படுத்துதல் ஆகிய நடைமுறைகளைக் கையாண்டு நோய்களைக் கட்டுப்படுத்தலாம். பார்மலினை மண்ணில் புகையூட்டியாக பயன்படுத்தப்படுகிறது. பூஞ்சான் கொல்லிகளை, மண்ணில் கலந்து பயன்படுத்தலாம் அல்லது மண்ணில் நனைத்துப் பயன்படுத்தலாம். பூஞ்சான் கொல்லிகளை விதை நேர்த்திக்கும் பயன்படுத்தலாம். பூச்சட்டி ஊடகம், சூரிய வெப்ப மூலம் ஒழுங்காக கிருமியழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆ. இலைக் வலைக்கருகல் நோய்:
இலைக் வலைக்கருகல் நோய், ரைசோக்டோனியா சொலானி என்ற நோய்க்கிருமியால் வருகிறது. பருவ மழைக்குப் பின் இந்த நோய் நாற்றங்காலில் தோன்றுகிறது.
அறிகுறி:
சிவப்பு கலந்த பழுப்பு நிற திட்டுகள் இலை ஓரங்களில் காணப்படும். பூசன இழைகள் அருகிலிருக்கும் இலைகளிலும் இந்தத் திட்டுகளைப் பரப்பி ஒரு சிலந்தி வலையைப் போல காட்சியளிக்கும்.

கட்டுப்பாட்டு முறைகள்:

சுகாதாரம் மற்றும் கலாச்சார நடைமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். பெவிஸ்டின் 0.1 % எ.ஐ என்ற பூஞ்சான் கொல்லியைப் பயன்படுத்துவதால் சிறந்த பலன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இ. கொலீடோடிரைக்கம் இலைப் புள்ளி மற்றும் கருகல் நோய்:
இந்த நோய்கள் கொலீடோடிரைக்கம் கிலியொஸ்போராய்ட்ஸ் என்ற நோய்க்கிருமியால் வருகிறது. டேராடூன் வனக்காடுகளில் இந்த நோய்கள் அதிகமாக காணப்படுகின்றன. செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில்  அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நாற்றாங்காலில் காணப்படும்.

அறிகுறி:
இந்த பூஞ்சான் இலைப் புள்ளிகளை உண்டாக்கி, நாளடைவில் இலை முழுவதும் பரப்பி விடும். இலைகள் கருகியவாறு தோற்றம் அளித்து உதிர்ந்து விடும்.
கட்டுப்பாட்டு முறைகள்:
பிளிட்டாக்ஸ் என்ற பூஞ்சான் கொல்லியை (0.2% எ.ஐ) வாரத்திற்கு இருமுறை இடைவெளியில் இடுவதால் இந்த பூஞ்சானைக் கட்டுப்படுத்த முடியும்.
ஈ. ஆல்டர்னேரியா இலைப் புள்ளி மற்றும் கருகல் நோய்:
இந்த நோய்கள் ஆல்டர்னேரியா ஆல்டர்னேட்டா என்ற என்ற நோய்க்கிருமியால் வருகிறது. டேராடூன் வனக்காடுகளில் இந்த நோய்கள் அதிகமாக காணப்படுகின்றன. செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில்  அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் காணப்படும்.
அறிகுறி:
இலைகள் முதிர்ந்த நிலைக்கு மாறும் பொழுது இந்த நோய்கள் இலைகளைத் தாக்குகின்றன.
கட்டுப்பாட்டு முறைகள்:
பிளிட்டாக்ஸ் என்ற பூஞ்சான் கொல்லியை (0.2% எ.ஐ) இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இடைவெளியில் இடுவதால் இந்த பூஞ்சானைக் கட்டுப்படுத்த முடியும். உ. சியூடோசெர்க்கோஸ்போரா இலைப் புள்ளி நோய்:
இந்த நோய் சியூடோசெர்க்கோஸ்போரா சப்செசிலிஸ் என்ற பூஞ்சானால் வருகிறது. இந்த நோய் வெப்ப மரங்களில் அதிகமாக காணப்படுகிறது.
அறிகுறி:
தொற்று புள்ளிகள் ப்ரவுன் நிறமும் வெள்ளை நிறமும் கலந்த திட்டுகளாகக் காணப்படும். இந்த பூஞ்சான்  இலையின் புறப்பரப்பிற்குள் ஊடுருவி கொனிடியாக்களை உற்பத்தி செய்யும். அது சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கும். மிகவும் பாதிக்கப்பட்ட இலைகள் வேகமாகக் கருகி, முன்பே உதிர்ந்து விடும்.
கட்டுப்பாட்டு முறைகள்:
மேன்கோசெப் மற்றும் பிரஸ்டன் ஆகிய பூஞ்சான் கொல்லியை  கலந்து இடுவதன் மூலம் இந்த பூஞ்சானைக் கட்டுப்படுத்த முடியும்.
ஊ. சாம்பல் நோய்:
இந்த நோய் ஆய்டியம் அசாடிராக்ட்டே என்ற பூஞ்சானால் ஏற்படுகிறது .

அறிகுறி:
இலைகளின் மேற்பரப்பில் வெள்ளைத் திட்டுகள் தென்படும். நாளடைவில் இலைகளின் முழு பகுதியிலும் வெள்ளைத் திட்டுகள் பரவி சாம்பல் நிறத்தில் இலைகள் தோன்றும். அதிகமாகப் பாதிக்கப்பட்ட இலைகள் முன்பே உதிர்ந்து விடும்.   
கட்டுப்பாட்டு முறைகள்:
பெவிஸ்டின் என்ற பூசண கரைசலை (0.1%) இலை வழி தெளிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்.
எ. வேறு இலைத் தொகுதி நோய்கள்:
பாக்டீரியா இலைப் புள்ளி நோய்:
சேந்தோமொனாஸ் ஆசாடிராக்டி மற்றும் சியூடோமோனாஸ் விட்டிக்கோலா ஆகிய பூஞ்சான்கள் இந்த நோயை ஏற்படுத்துகின்றன.

இலைப் புள்ளி மற்றும் கருகல் நோய்:
இலைப் புள்ளி நோய் கொல்லீட்டோடிரைக்கம் கேப்சிசி என்ற பூஞ்சானால் ஏற்படுகிறது. இலைக் கருகல் நோய் மற்றும் தண்டழுகல் நோய் ஸ்க்லீரோடியம் ரால்ப்சிசி என்ற பூஞ்சானால் ஏற்படுகிறது.

நாற்றுவாடல் நோய்:
புசேரியம் சொலானி என்ற பூஞ்சானால் இந்த நோய் ஏற்படுகிறது.  கிளை பிளவை நோய் மற்றும் இலைகளில் துப்பாக்கி துளைகள் ஃபோமா  என்ற பூஞ்சானால் ஏற்படுகிறது.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016