வனவியல் தொழில்நுட்பங்கள்
வனப் பயிர்களில் நோய் மேலாண்மை
தேக்கு (டெக்டோனா கிரான்டிஸ்)

தேக்கில் பல்வேறு வகையான நாற்றங்கால் நோய்ப் பிரச்சினைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அறிகுறிகள், காரண உயிரினங்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை பின்வருமாறு உள்ளன:
அ) இலை கருகல்:
இந்நோய் ரைசக்டோனியா சோலனி என்னும் நோய்க்காரணியால் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
பாதிக்கப்பட்ட செடிகள் பழுப்பு நிற பகுதிகளை தோற்றுவிக்கிறது.  இவை வேகமாக பரவி இலையின் முழு பகுதியையும் சாம்பல் நிறமாக மாற்றுகிறது. பாதிக்கப்பட்ட இலைகளின் பகுதியில் ஓட்டைகள் காணப்படுகின்றன. இவை கடுமையான மழை பெய்யும் காலங்களில் உதிர்ந்து விடுகின்றன. இந்நோய் பெரும்பாலும், நாற்றுகள் ஒன்றுடன் ஒன்று உரசுவதன் விளைவாக இலை கருகல் ஏற்பட்டு நாற்றங்காலில் பக்கவாட்டாக பரவுகிறது. நோய் பாதிப்பு அதிகமாக காணப்பட்டால் இலை உதிர்வு அதிகமாக காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
          பாதிக்கப்பட்ட செடிகளை உடனடியாக அகற்றப்படுவதன் மூலம் நோய் பரவலை தடுக்கலாம். நோயை கட்டுப்படுத்த டைதென் எம்-45 (0.1%) தெளிக்கலாம்.
(ஆ) இலை துரு நோய்:
          இந்நோய் ஒலிவியா டேக்டோனே என்னும் நோய்க்காரணியால் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
          பாதிக்கப்பட்ட இலைகளில் மஞ்சள் கலந்த பழுப்பு நிற பூஞ்சை படலம் காணப்படுகின்றன. இலை மேற்பரப்பில் சாம்பல் நிற தோற்றமும், கீழ் பகுதியில் சோறை என்னும் நோய்க்காரணி காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் முழுமுதிர்ச்சி அடையும் முன்னரே உதிர்ந்துவிடும். நோய் நாற்றங்காலில் மற்றும் இளம் தோட்டங்களில் இந்நோய்பொதுவானது.
கட்டுப்படுத்தும் முறைகள்:
நோய் தொற்று உள்ள நாற்றுகள் தனிமை படுத்தபட வேண்டும்.  கடுமையான நோய் தொற்று மற்றும் இறந்த நாற்றுகளில் இருந்து நோய் பரவுவதை தடுக்க அவற்றை எறித்துவிட வேண்டும். நோயை கட்டுப்படுத்த சல்பர் (சல்பெக்ஸ்) சார்ந்த பூசண கொல்லியை பயன்பாடுத்தலாம்.
(இ) இலை புள்ளிகள்:
தேக்கில் இலைப்புள்ளி நோய்கள் பல்வேறு பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்க்கிருமிகளால் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
இலைகளின் விளிம்புகளில் பழுப்பு, மற்றும் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தினை உருவாக்குகின்றன. இந்நோய் பெரும்பாலும், நாற்றுகள் ஒன்றுடன் ஒன்று உரசுவதன் விளைவாக நோய் பரவல் ஏற்பட்டு நாற்றங்காலில் பக்கவாட்டாக பரவுகிறது. நோய் பாதிப்பு அதிகமாக காணப்பட்டால் இலை உதிர்வு அதிகமாக காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
பாதிக்கப்பட்ட செடிகளை உடனடியாக அகற்றப்படுவதன் மூலம் நோய் பரவலை  தடுக்க உதவுகிறது.
(ஈ) சாம்பல் நோய்:
எரிசிபேசியே குடும்பத்தினை சார்ந்த பூஞ்சைகள் தேக்கில் சாம்பல் நோயை  ஏற்படுத்துவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அறிகுறிகள்:
சாம்பல் நோய் வளர்ச்சி அதிகமாக இலையின் மேற்புறத்தில் தோன்றும். பாதிக்கப்பட்ட இலைகள் உருவமாற்றமும், நிறம்மாறியும் காணப்படும். தண்டின் நிறம் மாறி ஆழ்ந்த பழுப்பு நிறத்தில்  மாறிவிடும். புழுக்கமான சூடான நிலையுடன் மந்தமான மேகமூட்டத்துடன் இருக்கும் வெப்பநிலை நோய் பரவலுக்கு உகந்தது.
கட்டுப்படுத்தும் முறைகள்:
சல்பர் பூசண கொல்லிகள் இரண்டு வயதான நாற்றுகளில் சாம்பல் நோயை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016