வனவியல் தொழில்நுட்பங்கள்

பீ நாரி தீக்குச்சி மரம் சாகுபடி முறை

Ailanthus excelsaAilanthus excelsa Bark

தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு நிலம், பயன்படாத தரிசு நிலப்பகுதியாக உள்ளது. அந்தத் தரிசு நிலங்கள் யாவும் பெரும்பாலும் வளமற்ற நிலங்களாக கடின சூழ்நிலையில் உள்ளன. இவ்வாறான வளம் குன்றிய நிலத்தில் பீ நாரி மரம் நன்கு வளர்கிறது தரிசு நிலங்களில் மழை குறைவாக உள்ளதாலும் தண்ணீர்ப் பற்றாக்குறையாலும் நெல். வாழை, கரும்பு ஆகிய பயிர்களை உழவர்கள் அதிகம் பயிரிடுவதில்லை. தமிழ்நாட்டில் அதிக நிலங்கள் தரிசு நிலங்களாக உள்ளன. வானம் பொய்த்ததாலும் நிலத்தடி நீர் வெகுவாக வற்றிவிட்டதாலும் வேளாண் பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேளாண் வருமானத்தை உயர்த்திக் கொள்ள இம் மரங்களை நட்டு வருமானத்தைப் பெருக்கலாம்.

தீக்குச்சி மரத்தைப் பற்றிய விளக்கம்

            காடுகளில் அதிகம் காணப்படும் மரம். இதன் தாவரவியல் பெயர் அய்லாந்தஸ் எக்செல்வா (Ailanthus excelsa) என்றும் ஹெலாகாதர் என்று பொதுப்பெயரும் தமிழில் பீ தணக்கன் என்றும் ஹிந்தியில் (Gugaldhu) என்றும் மலையாளத்தில் (Mattipal) எனறும் தெலுங்கில் (peepeddamanu) என்றும் மராத்தியில் (Gulguldhupa) என்றும் அழைக்கப்படுகிறது.முதன் முதலில் ஆஸ்திரேலியாவை தயாகமாகக் கொண்ட இம்மரம், வளர்ந்து தற்போது எல்லாப்பகுதிகளிலும் நன்கு வளர்கிறது. இது மென்மையான மர வகையைச் சார்ந்தது. மென்மை கொண்டதால் இதனை அறுப்பது, சீர் செய்வது மிகவும் எளிது. பக்கக்கிளைகள் குறைவாகவும் உயரமாகவும் வளரக்கூடியது. இதன் வயது 20 முதல் 75 ஆண்டுகள். மழை குறைவான பகுதிகளிலும் வளமற்ற மண்ணிலும் வளரக்கூடியது. இம்மரத்திற்கு அதிகமாகப் பராமரிப்பு தேவையில்லை. தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோவை வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இம்மரங்கள் அதிக அளவில் எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் இந்த மரத்தின் தேவை மற்றும் வியாபார வருவாயை பற்றிய போதிய விளக்கங்கள் உழவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களில் இம்மரத்தின் மதிப்பு பற்றிய நல்ல விழிப்புணர்வு உள்ளது.

Ailanthus excelsa seeds Ailanthus seelings

தீக்குச்சியும் தமிழ்நாடும்
            இந்திய நாட்டின் தீப்பெட்டிகளுக்கான கச்சாப் பொருள்தேவையை 95% மரக்குச்சியும், 5% மெழுகு குச்சிகளும் நிறைவு செய்கின்றன. இந்த 95% மரக்குச்சி உற்பத்தியில் சுமார் 80% தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டுத் தேவை சுமார் 15 லட்சம் தீப்பெட்டிப் பண்டல்களாகும். வெளிநாட்டு ஏற்றுமதி சுமார் 2 லட்சம் தீப்பெட்டிப் பண்டல்களாகும். ஒரு தீப்பெட்டி பண்டல் உற்பத்தி செய்ய சுமார் 2 கிலோ தீக்குச்சி தேவைப்படுகிறது. ஒரு மாதத்தில் சுமார் 25 லட்சம் கிலோ (அதாவது 2500 டன்) தேவை. 2500 டன் தீக்குச்சி உற்பத்தி செய்ய சுமார் 10 ஆயிரம் டன் மரம் தேவை. மேற்படி தீப்பெட்டி உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்ய 80% கேரளாவிலிருந்தும், 3% கர்நாடகாவிலிருந்தும், மீதமுள்ள 17% மட்டும் தமிழ்நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

மரத்தின் பயன்கள்
இம் மரத்தில் அதிகமாகத் தீக்குச்சி தயாரிக்கப்படுகிறது. இதன் பக்கக்கிளை வீட்டு அடுப்பு உபயோகத்திற்குப் பயன்படுகிறது. மரத்தின் தழைகள், இலைகள் மண்புழுவிற்கு உணவாக பயன்படுகின்றன.

பீ தணக்கன் மரத்தின் இதர பயன்பாடுகள்
இம் மரம் பென்சில் எழுதுப் பலகை, நசடு பலகை தயாரிக்கப் பயன்படுகிறது. வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் மரப்பெட்டி, தக்காளி பெட்டி, டீ மற்றும் செஸ்ட் கேஸ்கள் ஒட்டுப்பலகை (பிளைவுட்) செய்யவும் பயன்படுகின்றது. மேலும் பழ வகைகள் அடி படாமல் எடுத்துச் செல்லும் பெட்டிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. கட்டிட வேலைகளுக்குகளான செண்டிரிங் பலகைகளாகப் பயன்படுகிறது. இதன் வேர்கள் வருடம் முழுவதும் பசுமையாக இருப்பதால் மண் அரிப்பை தடுக்கின்றன.

மரம் வளரும் சூழ்நிலை

 • வறட்சியிலும் வளரும் தன்மையுடையது
 • குறைந்தளவு 80 - 12.50 செ வரையிலும் மற்றும் அதிகளவு 450 - 47.50 செ. வரையிலும் வெப்பத்தைத் தாங்கி வளரக் கூடியது.
 • நீர் வளம் குறைந்த பகுதிகளிலும், மிகக்குறைந்த மழைபெய்யும் பகுதிகளிலும் நன்கு வளரக்கூடியது
 • வளம் அற்ற மண்ணிலும் வளரும் தன்மையுடையது

தீக்குச்சி மரத்தின் சிறப்புகள்

 • சாகுபடி செய்தபின் அதிகமாக பராமரிப்புத் தேவையில்லை
 • இதன் இலைகள ஆடு, மாடுகள் உண்ணாது
 • இலைகள் கடும் வெப்பத்திலும் பசுமையாக இருக்கும்
 • பயிர்செய்வதற்கு இயலாத நிலங்களிலும் இவை செழித்து வளரும்
 • குறைந்த அளவு நீரே போதுமானது

வேலைவாய்ப்பு
கிராமப்புற ஏழை மக்களுக்கு, குறிப்பாக மகளிர், படித்த இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அளித்து, கிராம முன்னேற்றத்திற்கு வழிவகை செய்கிறது.

நாற்றுச் செடிகளை வளர்க்கும் முறை
நன்கு தேர்வு செய்யப்பட்ட மரங்களில் இருந்து வயதுடைய மரத்தின் விதைகளை ஒரு மேடான நாற்றங்கால் அமைத்து, விதையின் பாதியளவு மண்ணின் உள்ளே பதிந்திருக்கும் படியாகவும் மீதமுள்ள பகுதி வெளியே தெரியும்படியும் ஊன்றவும் அவைகளின் மேல், அவை மறையும் அளவிற்குத் தொழு உரத்தைக்கொண்டு மணல் தூவி தண்ணீர் ஊற்றி வந்தால் விதைகள் 10-20 நாள்களில் முளைத்துவிடும். முதலில் தலைகுப்புறக் குனிந்தும் பிறகு ஆரம்ப இலைகளை நீட்டியும் நிமிர்ந்தும் வளரும். சுமார் 15 நாள்களில் இப்படி முளைக்கும் குழந்தைச் ( Infant and tender ) செடிகளைப் பக்குவமாக வேர் அறந்துவிடாமல் மிகவும் கவனமாக எடுத்து, பாலீத்தின் பைகளில் நடவு செய்து, 3 மாதங்கள் வளர்த்து, அதன் பின்பு நிலத்தில் அமைக்கப்பட்ட குழிகளில் நட்டால் மிகச்சிறப்பாக வளரும்.

சாகுபடி முறை

 1. நிலத்தை நன்கு உழுது களைகளை நீக்கி விட வேண்டும்
 2. ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் 12 அடி இடைவெளிவிட்டு 1½ x  1½  x 1½   குழிகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு வரிசைக்கும் மற்றொரு வரிசைக்கும் இடைவெளி அவரவர் வசதிப்படி 12 அடிக்குமேல் செய்து கொள்ளலாம்
 3. தோண்டிய குழியில் செம்மண், மக்கிய தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு ஆகியவை கொண்ட கலவையால் நிரப்பவேண்டும் - மேலும் விவசாய உரங்களைச் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்
 4. மண் தோண்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தி 1 x 1 x 1 மீட்டர் ஆழத்திற்கு குழிதோண்டி நட்டால் நன்றாக வளரும். மேலும் தோண்டிய குழியில் பண்ணை தொழு எரு 10 கிலோ, மண்புழு உரம் 2.5 கிலோ, 10 கிலோ வெர்மி கம்போஸ்ட் 2.5 கிலோ டி.எ.பி-50 கிராம் மியூரேட் பொட்டாஷ் 25 கிராம் பாஸ்போபேக்டீரியா, 50 கிராம் மற்றும் வேர் உட்பூசணம் வாம் போன்றவற்றை குழியில் இட்டு வளர்த்தால் செடி நன்றாக வளரும்.
 5. பாலீத்தீன் பைகளிலிருந்து கன்றுகளை நிலத்திற்கு மாற்றும் முறை

            பாலித்தின் பைகளில் குறைந்தது 3 மாதங்கள் வளர்ந்த செடிகளை நிலத்தில் அமைக்கப்பட்ட கழிவுகளில் நடவு செய்து உயிர் வாழும் படியாகத் தண்ணீர் ஊற்ற வேண்டும். பாலிதீன் பைகளில் இருந்து கன்றுகளைப் பிரித்து எடுத்து நடும்பொழுது மிகவும் கவனம் தேவை. அதாவது கன்றின் வேரும், பாலிதீன் உறையைச் சுற்றியுள்ள மண்கட்டியிலும் முறையே சுழன்றும் (பிரித்தும்) உடைந்தும் விடாமல் பிளாஸ்டிக் உறையை கவனமாக  அகற்றித் தூர எறிந்து விடவேண்டும். உடையாத கட்டியுடன் கூடிய செடியைக் குழியின் நடுவில் நேராக நட்டு செடியைச் சுற்றிலும் கைகளிலோ, கால்களிலோ காற்றுக்குமிழ் உள்ளே செல்லாதவாறு அமுக்கிவிடவேண்டும். ஒரு குடம் அளவிற்குத் தண்ணீரைக் கன்றுகள் சாய்ந்துவிடாதபடி குழியின் ஓரத்தில் ஊற்றவேண்டும். செடி நன்றாக வேர்ப்பிடிக்கும் வரை அல்லது ஒரு மாத காலத்திற்கு நமது தனிக் கவனத்தில் இருக்க வேண்டும். தொடர் மழைக்காலம் அல்லது மழை இல்லாத நேரம் இவைகளை அனுசரித்துத் தொடர் நீர் மேலாண்மை செய்து வரவேண்டும். அதன் பின்பு மாதத்திற்கு ஓரிரு முறை நீர் வசதி செய்துவிட்டால் போதுமானது தொடர்ந்து 6 மாதம் தனிக்கவனம் செலுத்தவேண்டும்.

ஏற்ற நிலம்
பீ தணக்கண் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பயிரிடலாம். குறிப்பாக வறண்ட பகுதிகளில் பயிரிட இம்மரம் மிகவும் எற்றது. உவர் நிலப்பகுதியிலும் கூட பயிரிட ஏற்றது. கரிசல் மண் சரளை மண்ணிலும் வளமற்ற மண்ணிலும் வளரும் வரப்பிரசாதம் பெற்றது பீ தணக்கன் மரம்.

மரம் வளர்ப்பு முறை

 • ஒரு ஏக்கரில் அதிக அளவாக 360 மரங்களை நடவுசெய்யலாம்
 • 12 அடிக்கு 12 அடி இடைவெளி விட்டு நடவு செய்யலாம்
 • தரிசு நிலத்தில் ஏக்கருக்கு மரம் ஒன்றுக்கு 250 - 350 கிலோ எடையுள்ள மரம் கிடைக்கும்
 • நல்ல நிலமாக இருப்பின் சுமார் 550 - 650 கிலோ எடையுள்ள மரம் கிடைக்கும் தோட்டத்தைச் சுற்றி வேலிப் பயிராகப் பயிரிடும் போது சுமார் 90 மரம் 10 அடி இடைவெளிக்கு நடவு செய்யலாம்
 • முதலில் வளரும் செடியின் கிளைகளை அகற்றி மரம் நேராக வளரவிடவேண்டும்

வருமானம்
தரிசு நிலத்தில்

 • 399 மரங்கள் x 120 டன் x சுமார் ரூ.1500 = ரூ.1,80,000

நல்ல நிலத்தில்

 • 422 மரங்கள் x 220 டன் x சுமார் ரூ.1500 = ரூ.3, 30,000

வேலிப்பயிராகப் பயிர் செய்தல்
90 மரங்கள் x 0.5 டன் x சுமார் ரூ.1500 = ரூ.67,500 செடிகளை நட்டு வளர்த்து அதன் மூலம் கிடைக்கக் கூடிய அறுவடை அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மரம், வெட்டி எடுக்கப்பட்ட 6-10 ஆண்டிற்குள் மீண்டும் இதே அளவிற்கு வளரக்கூடியது. ஆகையால் ஒரு முறை இம்மரத்தை நிலத்தில் பயிரிட்டால் பின்வரும் காலத்திற்குக் கவலை இல்லை.
குச்சி மரம் பயிரிடும்போது செய்யவேண்டிய நிர்வாக முறைகள்
பயிரிடும் முறை

 • அதாவது வளரும் செடி மூன்று அடி உயரம் வளர்ந்தவுடன் செடியை சுற்றி லேசாக கொத்தி மண் அணைக்க வேண்டும்
 • மழை பெய்யும் காலத்திற்கு முன்னால் சிறு டிராக்டர் கொண்டு புழுதி ஓட்டினால் மழை பெய்யும் போது கிடைக்கும் தண்ணீரானது செடி வளர்வதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்
 • செடியைச் சற்றி வளர்ந்துள்ள புற்களை மாதத்திற்கு ஒரு முறை கொத்தி எடுத்தால் செடிக்கு ஈரப்பதம் நன்றாக கிடைக்கும்
 • தண்ணீர் கிடைக்காத குறைவாக கிடைக்கும் இடங்களில் கோடைக்காலங்களில் பத்து நாட்களுக்கு ஒரு முறை பாணையில் தண்ணீர் ஊற்றி சொட்டு நீர்பாசன முறைப்படி தண்ணீர் விட்டால் செடிகள் நன்றாக வளரும்.
 • தண்ணீர் கட்டி பயிரிடும் வசதி உள்ளவர்கள் முதல் இரண்டு வருடங்களுக்கு ஏழு நாட்களுக்கு ஒரு முறையும், பின்வரும் 3, 4 ஆம் வருடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் தண்ணீர் கட்டினால் மரம் நன்றாக வளரும்.

மரத்தின் பக்கக் கிளைகளை அகற்றுதல் ; (PPruning)
செடி வளரும் போதிலிருந்தே சிறு சிறு பக்கக்கிளைகளை கழித்துக் கொண்டே வரவேண்டும். சுமார் 10 அடி உயரம் வளர்ந்தவுடன் தொட்டி கொண்டு பக்க கிளைகளை கழிக்க வேண்டும். பக்க கிளைகள் வளர்ந்தால் மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

மரம் வளர்ப்புச் செலவு
இம்மரத்தைப் பயிரிடுவதற்கு சாதாரண விவசாய முறைப்படி நடவு செய்யும் போது விளைச்சலில் ரூ.10000 பின்வரும் 5 வருடங்களுக்கு ரூ.6000 முதல் 7000 வரை செலவாகும்.

மரம் அறுவடை செய்யும் விவரம்

 • வளர்ந்த மரத்தின் 15 செ.மீ. சுற்றளவுக்கு மேலே உள்ள அனைத்துக் கிளைகளும் மரமும் தீக்குச்சி தயாரிக்க உதவும்
 • முதலில் 12 அடிவிட்டு கொண்டு வாள் மரத்தை அறுக்க வேண்டும்
 • வாள் கொண்டு அறுக்கும் மரங்கள் மீண்டும் துளிர்விட்டு இரண்டாவது சாகுபடிக்குத் தயாராகும்
 • வெட்டுக் க்திக் கொண்டு மரத்தை வெட்டக்கூடாது
 • மரம் வெட்டிய மூன்று நாட்களுக்குள் தொழிற்சாலைக்கு எடுத்துச் சென்றால் எடைக் குறைவு ஏற்படாது
 • ஒரு வாரம் கழித்து எடுத்து சென்றால் எடை கணிசமாகக் குறையும் தாமதம் ஆனால் மரத்தின் நிறம் மாறிவிடும். இதனால் பயனற்ற நிலைக்குத் தள்ளப்படும
 • வெட்டிய மரத்தை 15 நாள்களுக்குள் தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் காலதாமதம் இழப்பை ஏற்படுத்தும்
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014