வனவியல் தொழில்நுட்பங்கள்

தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் 

சவுக்கு மரச் சாகுபடியும் நிர்வாகமும் (Casuarina equisetifolia)

தாவரவியல் பெயர் : கே.சோரினா இக்குஸ்டிஃபோலிய
குடும்பம் : கேசுவரிமனசியே
வட்டாரப் பெயர்கள் : தமிழ்-சவுக்கு, தெலுங்கு - சரக்கூடு, கன்னடம் - சர்வோ, மராத்தி -சாரு, ஒரியா - ஜபாக்கு
வணிகப்பெயர் : கரிமரம்

தோற்றம்
            சவுக்கு அயலகத்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட மரப்பயிராகும். இப்பயிர் இந்தியாவில் காலனிய ஆட்சியாளர்களால் கார்வார் மாவட்டத்தில் முதன்முதலாக 1668 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சவுக்கு மரங்கள் இயற்கையாக அந்தமான தீவுகள், பங்களாதேஷ், பர்மா ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரைப்பகுதிகளில் காணப்படுகின்றன. இயற்கை இனப்பெருக்கம் அரிதாக உள்ள சவுக்குமரம், தோட்டப் பயிராகப் பயிரிடுவதன் மூலமாக பரவுகிறது.

மரத்தின் தோற்றமும் அமைப்பும்
சவுக்கு விரைவாக வளரும் இயல்புடைய பசுமை மாறா அழகிய தோற்றத்துடன் கூடிய ஊசியிலைகளைக் கொண்ட மரமாகும். இம்மரம் நீளமாகவும், உருண்டை வடிவத்திலும் வளரும் இயல்புடையவை. அரிதாக சில வேளைகளில் கிளைவிடும் இயல்புடையது. இயல்பாக அடாந்து வளரும் இம்மரத்தின் கீழ் புல் பூண்டுகள் சிறு குத்துச்செடிகள் மட்டுமே வளரும்.
இம்மரம் அதிக அளவாக 40 மீ உயரமும், 50 மீ சுற்றளவும் (180 செ.மீ) கொண்டதாக வளரும். குறைந்த காலம் மட்டும் வாழும் இம்மரத்தின் ஆயுட்காலம் 50 ஆண்டு காலமாகும். நல்ல சூழல் இல்லாத இடங்களில் கூட 25 ஆண்டுகள் வளரும். இம்மரம் ஆண்டுக்கு இருமுறை பிப்ரவரி - ஏப்ரல், செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பூக்கும். இதன் காய்கள் ஜீன் மற்றும் டிசம்பரில் காணப்படும். இட அமைப்பைப் பொறுத்து பூக்கும் மற்றும் கனி உருவாகும் காலம் மாறுபட வாய்ப்புண்டு.

பூத்தலும் மற்றும் காய் உருவாக்கமும்
இம்மரப்பயிர் இரு பூக்கும் பருவங்களைக் கொண்டது. ஆண்மலர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், பெண்மலர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு சிறிது காலம் கடந்தும் பூக்கும். காற்றின் மூலம் மகரந்த சேர்க்கை நிகழும், பழங்கள் உருண்டை வடிவத்திலும் மரக்கூம்பு வடிவத்திலும் பழுத்த சாம்பல்அல்லது மர வண்ண சிவப்பு நிறத்திலும் இருக்கும். மேல்தோல் வெடியாகனி வடிவ அமைப்பில் இருக்கும். ஒவ்வொரு கனியிலும் ஒரு விதை இருக்கும். விதைகள் நுண்ணியதாக இருக்கும். ஜீன், டிசம்பர் மாதங்களில் காய்கள் பழமாகும். பழுப்பு நிற காய்களில் பறக்கும் தன்மையுள்ள விதைகள் 70 முதல் 90 வரை இருக்கும்.
விதை அமைப்பும் சேகரிப்பும்
ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் நன்கு வளர்ந்த சவுக்கு மரங்களிலிருந்து விதைகளை ஜீன் - டிசம்பர் மாதங்களில் கிளைகளை ஆட்டியோ, குச்சிகள் வைத்து தட்டியோ கீழே விழும் விதைகளைச் சேகரிக்கலாம். சேகரிக்கப்பட்ட விதைகளை கைகளால் சுத்தம் செய்ய வேண்டும். சேகரிக்கப்பட்ட விதைகள் சுத்தமான தரையில் நன்கு சூரிய ஒளி படும் வகையில் 3 முதல் 4 நாட்கள் வரை காயவைக்க வேண்டும். சவுக்கின் விதைகள் காற்றினால் எடுத்துச் செல்லப்படும் என்பதால் சூரிய ஒளியில் காயவைத்த பின், விதைகளை நிழலான பகுதியில் மூடப்பட்ட அறைகளில் காய வைக்க வேண்டும். இவ்வாறு விதைகளை 2 முதல் 3 நாட்கள் காய வைக்க வேண்டும்.
இம்மரத்தின் விதைகளை எறும்பு, பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற சாம்பலுடன் கலந்து மண் சட்டிகளில் இட்டு அதன் வாய்ப்பகுதியை துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். இவ்விதைகளை சில மாதங்கட்குப் பாதுகாக்கலாம். இவ்வாறு பாதுகாக்கப்பட்ட விதைகளை உடனடியாக விதைக்க வேண்டும். பதினைந்து கிலோ எடையுள்ள சவுக்கு காய்களிலிருந்து 12 கிலோ தூய்மையான விதைகளைப் பெறலாம். ஒரு கிலோகிராம் விதையில் 75 லிருந்து 10 இலட்சம் வரை விதைகள் இருக்கும். இதன் தூய்மைத் தன்மை 80 முதல் 90 சதவிகிதமாகும். ஈரப்பதம் 7.3 சதவிகிதமாகும். விதை முளைப்பு 7 முதல் 10 நாட்களுக்குள் 50 முதல் 60 சதவிகிதமாகும்.

செயற்கை முறையிலான இனப்பெருக்கம்
அ) விதை மூலம் இனப்பெருக்கம்
சவுக்கின் விதைகள் மிகச்சிறிய அளவில் உள்ளதாலும், மழை, வறட்சி, பூச்சிகள் தாக்குதலினால் அதிகம் பாதிக்கப்படுவதால், நேரடி விதைப்பு முறை சவுக்கு விதைப்புக்கு ஏற்றதல்ல. சவுக்கு இனப்பெருக்கத்துக்கான ஒரே நம்பகமான முறை சவுக்கை ஒன்று முதல் நான்கு மாதம் நாற்றங்காலில் வளர்த்து, வளர்ந்த நாற்றுக்களை இனப்பெருக்கம் செய்வதேயாகும்.

ஆ) கன்றகப் பெருக்கம்(Clonal propagation)
சவுக்கை இணையாக வளரும் தண்டுகள் மூலமாகவும், தாவர இனப்பெருக்கம் மேற்கொள்ளலாம். இத்தண்டுகள் அல்லது குச்சிகளை வளர்ச்சி ஊக்கியான இண்டோல் ப்யூட்ரிக் அமிலத்தை (IBA)அடிப்படையாகக் கொண்ட வேர் வளர்க்கும் ஹார்மோன்களில் (3000-6000 ) நனைத்தெடுத்து கன்றுகளை நேர்த்தி செய்யலாம். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட கன்றங்களை 70 முதல் 80 சதவிகிதம் ஈரப்பதம் உள்ள பசுமைக்குடிலில்(green house)  வைக்க வேண்டும். 20-25 நாட்களில் புதிய வேர் உற்பத்தி செய்யப்பட்டு தரமான நாற்றுகள் பெறப்படுகின்றன. நல்ல வளமான தன்மையுடைய மரங்கள் இவ்வாறு இனப்பெருக்கம் செய்யப்படுவதை கன்றுகள் எனலாம்.

விதை மூலம் உயர்தர நாற்றுகள் உற்பத்தி

Industrial Pulpwood Pulpwood
Pulpwood Pulpwood
Pulpwood Pulpwood
   

நாற்றங்கால் நுட்பங்கள்
இடம் நாற்றங்கால் நடவு செய்யப்படும் நிலத்திற்கு அண்மையில் அமைய வேண்டும். தேர்வு செய்யப்படும் இடம் சமவெளியாகவும், மணற்பாங்கானதாகவும், போதுமான நீர்வளம் மிக்க பகுதியாகவும் அமைய வேண்டும்.

நிலத்தேர்வு
பயிரிடப்படும் நிலத்திலுள்ள எல்லா வகையான செடி, கொடிகளையும் அகற்றிவிட வேண்டும். நிலத்தை ஓரளவுக்கு உழவு செய்ய வேண்டும்.

நிலத்தேர்வு

பயிரிடப்படும் நிலத்திலுள்ள எல்லா வகையான செடி, கொடிகளையும் அகற்றிவிட வேண்டும். நிலத்தை ஒரளவுக்கு உழவு செய்ய வேண்டும்.

பாத்திகளின் அமைப்பு
பாத்திகள் வடக்கு தெற்காக அமைய வேண்டும். பாத்திகளின் அளவு 10 மீ X1 மீ /50 செ.மீ. ஒவ்வொரு பாத்திக்கும் இடைவெளிவிடுவது அவசியம், ஒவ்வொரு 50 பாத்திகளுக்கு இடையே 2 மீ இடைவெளிவிட வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் பாத்திகள் அமைக்க இம்முறையையே பயன்படுத்த வேண்டும்.

மண்ணைத் தயார் படுத்துதல்
பாத்திகள் அமைக்கப்பட்ட பிறகு அப்பாத்திகளில் 30 செ.மீ அளவுக்கு குழிவாக மண் எடுக்கப்பட வேண்டும். அக்குழியில் மணல், செம்மண், பசுந்தாள் உரம் ஆகியவற்றை இட்டு மண்ணை வளமாக்க வேண்டும்.

பாத்திகள் உருவாக்கம்
மணற்பாங்கான மண்வகை உள்ள பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை பண்ணை தொழு உரத்துடன் 11 அளவில் கலந்து குழிகளில் இட வேண்டும். நாற்றங்கால் நில மட்டத்திற்குச் சமமாகவோ அல்லது 5 செ.மீ. குழிவாகவோ அமைய வேண்டும். மணற்பாங்கான மண்வகைகளில் நாற்றங்கால் உருவாக்கும்போது, மணல், பண்ணை உரம் ஆகியவை சரிவிகிதத்தில் கலக்கப்பெற்று குழிகளில் இடப்பட வேண்டும். நாற்றங்கால்களை உருவாக்கும் போது பாரத்தியான் தூள் 14 கிலோ, பூச்சிவிரட்டி, மண்ணுடன் கலந்து தயார் செய்து ஒவ்வொரு பாத்திக்கும் இடவேண்டும். இதன்மூலம் எறும்புகள் விதைகளை எடுத்துச் செல்வதைத்தடுக்கலாம்.

விதைப்பு செய்தல்
ஒவ்வொரு பாத்தியிலும் 400 முதல் 500 கிராம் வரை சுத்தமான விதையை விதைக்க வேண்டும். விதைகளை நல்ல மண்ணில் கலந்து பாத்திகளின் மேல் தூவ வேண்டும். அப்பாத்திகளின் மீது வைக்கோல் வைத்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். தண்ணீர் தேங்கினால் கன்றுகள் அழுகுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அழுகல் தென்பட்டால் காப்பர் ஆக்சிகுளோரைடு 0.25% பூசணக்கொல்லி கரைசலை நீரில் கலந்து பரவலாக ஊற்ற வேண்டும். பத்து நாட்களில் விதைகள் முளைக்க ஆரம்பித்துவிடும். நாளொன்றுக்கு இருமுறை ஒரு மாத கால அளவில் 10 செ.மீ அளவுக்கு நாற்று வளரும் வரை நீர் தெளிக்க வேண்டும். அவைகளை பாலீத்தீன்பைகளிலோ, இரண்டாம் நிலைப்பாத்திகளுக்கோ இரண்டாம் பாத்திகளுக்குக் கொண்டு செல்லும் வரை ஒரு நாள் ஒன்றுக்கு இருமுறை நீர் தெளிக்க வேண்டும். விதைகளுக்கு கரையான் தாக்குதல் இருந்தால் பாரத்தியான தூள் பயன்படுத்தப்படவேண்டும்.

குச்சிநடுவு[ (Stock)
மூன்றிலிருந்து நான்குமாத வயதுடைய நாற்றுகளை நாற்றங்காலிலிருந்து இரண்டு முறைகளில் நடலாம்.

நடவுமுறை
தாய் நாற்றங்கால்களிலிருந்து பெறப்பட்ட நாற்றுகளை நாற்றங்கால்களிலிருந்து அகற்றி 10 x 20 செ.மீ. அளவுள்ள மண்கலவை உள்ள பாலீத்தீன் பைகளில் நடவு செய்ய வேண்டும். இப்பைகளுக்குத் தொடர்ச்சியாக நீர் விட வேண்டும். இவ்வாறு வளர்க்கப்படும் நாற்றுக்கள் நல்லமுறையில் வளர்ந்து விரைவாக வேர்பிடிக்கும். நாற்றுக்கள் எந்தவித பாதிப்புக்கும் ஆளாகாத வகையில் ஒருவாரம் முதல் பத்து நாட்கள் வரை நிழல் அவசியம். நன்கு வேர்விட்ட பிறகு நிழல் தேவையில்லை. 45 முதல் 50 செ.மீ வரை உயரம் உள்ள நாற்றுகள் பயிரிட ஏற்றவை. வேர்கள் வெளிவர தொடங்கிய பிறகு பாலித்தீன் பைகளை மாற்ற வேண்டும்.

நேர்த்தி செய்யப்பட்ட கன்றுகள்
இரண்டாம்தர பாத்திகளில் வளர்க்கப்பட்ட இளம் நாற்றுக்களின் வேர் பகுதிகளை நன்றாக வெட்டிவிட வேண்டும். அவ்வேர்களை மண்குழம்பில் நனைத்து எடுக்க வேண்டும். இது மிகவும் குறைந்த செலவில் நேர்த்தி செய்யப்படும் முறையாகும். இந்த ஆறையானது மணற்பாங்கான இடங்களில் அதிக அளவில் கடைப்பிடிக்கப்படுவதோடு மேலும் மழைக்காலங்களில் இம்முறை நல்ல வளர்ச்சியைக் கொடுக்கிறது.

நடவுமுறை
பொதுவாக உழவர்கள் 0.8 மீ.லிருந்து 1 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யும்போது மெல்லிய தண்டுப்பகுதி கிடைக்கும். எனவே இடைவெளியை 4X 4 லிருந்து 6X 6 அடி அளவு நடுவது நல்லது. இம்முறை மூலம் முதலாண்டில் ஊடுபயிர் செய்வதற்கு ஏற்றது. மேலும் மரங்கள் நன்கு வளர்வதற்கு இந்த இடைவெளி பயன்படும். தொடக்க நிலையில் மரத்தின் சுற்றளவு அதிகரிக்க வாய்ப்புண்டு. பாலித்தீன் பைகளில் உள்ள நாற்றுக்களை மணற்பாங்கான மண்ணில் பாலித்தீன் பையின் அளவு ஆழத்திலும் அகலத்திலும் நல்ல மழைக்காலத்தில் நடவு செய்யலாம்.
நடவு செய்யப்பட்ட மரங்களுக்கு நீர்ப்பாய்ச்சுதல் தொடர்ந்தால் மரங்கள் நல்ல முறையில் வேகமாக வளரும் கடினமான களிமண்ணில் 30 செ.மீ. அளவுக்கு ஒரு சிறு குழி தோண்டப்பட்டு நாற்றங்கால் பையின் பாலித்தீன் பைகள் அகற்றப்பட்டு, பையில் உள்ள மண் பாதிக்கப்படாத வகையில் நடவேண்டும். நாற்றங்காலிலிருந்து பிடுங்கப்பட்டு நடப்படும் கன்றுகளை நடவு செய்ய வேர் ஆழத்தின் அளவுக்கு கடப்பாரையால் துளையிடப்பட்டு நடவு செய்யப்பட வேண்டும். நாற்றுகளின் மெலிதான வேர்ப்பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டு நடவு செய்யப்பட வேண்டும்.

வீரிய சவுக்கு மரத்தோப்பு -ஒரு வருடம்

Pulpwood Pulpwood
ஜீங்குனியானா சவுக்கு தோப்பு
மூன்று வருடம் ஒரு வருடம்
Pulpwood Pulpwood

 உர நிர்வாகம்
            சவுக்கு மரத்தின் வேர் முடிச்சுக்கள் நைட்ரஜனை தக்க வைக்கும் திறன் உடையவை. எனவே 40-50 கிலோ யூரியா ஒரு ஹெக்டேருக்கு சமகால இடைவெளியில் இடவேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 150 கிலோ சூப்பர்பாஸ்பேட், முயூரியேட் பொட்டாஸ் 100 கிலோ 4 முதல் 5 கால இடைவெளியில் சமப்பகுதியாக பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும்.

கவாத்து செய்தல்
மரத்தின் முக்கால் பகுதிக்கு கீழ் உள்ள பக்கக்கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதன் மூலம் 6-12 மாதங்களில் நல்ல கழிகள் கிடைக்க வழிவகை செய்யலாம்.

பூச்சிகள்

தண்டுகளைத் துளைக்கும் புழு சவுக்கு மரத்தின் கழிகளில் துவாரங்களை ஏற்படுத்தும் இதனைக்கட்டுப்படுத்த இப்புழு ஏற்படுத்திய துவாரங்களில் மரம் ஒன்றுக்கு 1 முதல் 2 மி.லி. மண்ணெண்ணை அல்லது மோனோகுரோட்டோபாஸ் (ஒரு லிட்டர் நீருக்கு 5 மி.லி.) பூச்சிக்கொல்லி கலவை 10 மி.லி. ஊற்றுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மேலும் மோனோகுரோட்டோபாஸ் தண்டு ஒத்தடம் () 5 மி.லி. என்ற அளவில் பஞ்சின் மூலம் கட்டிவிடுவது சிறந்த முறையாகும். இளம் நாற்றங்கால்களில் உள்ள சிறிய வயது நாற்றுக்களின் வேர்களை கரையான்கள் தாக்குவது பெரும் இழப்பை ஏற்படுத்தும். இதனைக் கட்டுப்படுத்த குளோரோபைரிபாஸ் 0.2 சதவிகிதம் மண்ணில் ஊற்றி நாற்றுக்களைப் பாதுகாக்கலாம்.
பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்

வ.எண். பொதுவான பூச்சி வகைகள் கட்டுப்படுத்தும் முறைகள்
1.

பட்டைப்புழு

பாதிக்கப்பட்ட புழு சேத பகுதிகளை நீக்கிவிட்டு அப்பகுதியில் மோனோகுரோட்டோபாஸ் என்ற பூச்சிக்கொல்லியை பஞ்சில் நனைத்துப் பூச்சி துளையிட்ட பகுதியில் வைக்க வேண்டும்

2.

தண்டு துளைப்பான்

கம்பியின் மூலம் தண்டு துளைப்பான் புழுவை வெளியே எடுத்து அப்பகுதியில் மோனோரோட்டோபாஸ் லிட்டருக்கு 5 மி.லி. கலந்த கலவையை துளைகளில் ஊற்ற வேண்டும்

3.

மாவுப்பூச்சி

மீதைல் டெமாட்டான் அல்லது டைமெத்தியேட் ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. என்ற அளவில் தெளிக்க வேண்டும்

4.

கரையான்

குளோரிபைரிபாஸ் ஒரு லிட்டர் நீரில் 2 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்

நோய்கள்
சவுக்கு மரங்களைத் தாக்கும் முக்கிய நோய்களில் நாற்றழுகல் (damping off), பின்கருகல்(dieback) வேர்அழுகல் (root rot disease)தண்டு வாடல் (stem wilt)  ஆகியன முக்கியமானவையாகும்.

வ.எண். நோய்கள் கட்டுப்படுத்தும் முறைகள்

1.

நாற்று அழுகல்நோய் நல்ல வடிகால் அமைத்தல், விதைகளை கேப்டான் (Captan) /திரம்(Thiram)  ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவு கலந்து விதை நேர்த்தி செய்யப்பட வேண்டும். கார்பன்டிசம் மருந்தினை நாற்றின் வேர்ப்பாகம் நனையும் படி மண்ணில் ஊற்ற வேண்டும். நாற்றங்கால் தயாரிப்பதற்கு முன் முக்கிய குப்பை உரம் 25 கிலோவுடன் 1 கிலோ டிரைக்கோடெர்மா (அல்லது சூடோமோனாஸ் கலந்து நாற்றங்கால் முழுவதும் பரவலாக இடலாம்

2.

பின் கருகல்   பாதிக்கப்பட்ட பகுதி நீக்கப்பட்டு மாங்கோசீப் 0.2%   அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு 0.25% தெளிக்க வேண்டும்

3.

தண்டு வாடல் நோய் பாதிக்கப்பட்ட மரத்தைச் சுற்றி அகழி வெட்டப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தை எடுத்துவிட்டு 0.25% காப்பர் ஆக்சைடு ஊற்றப்பட வேண்டும்

4.

வேர் அழுகல் நோய் வேர்கள் நனையும் படி காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.25% ஊற்ற வேண்டும். நாற்று நடுமுன் குழிகளில் 25 கிலோ மக்கிய குப்பையுடன் 25கிராம் டிரைக்கோடெர்மா (அல்லது) சூடோமோனாஸ் கலந்து இடவேண்டும்

மகசூல்
சவுக்கின் அனைத்துப்பகுதிகளும் பயன்படுபவை. ஒரு எக்டேருக்கு 125 முதல் 150 டன் வளர மூன்று ஆண்டுகளுக்கு 4 4 அடி இடைவெளியிலோ 5 5 இடைவெளியிலோ நடுவதன் மூலம் பெறலாம். இந்த விளைச்சலை சிறந்த நீர் நிர்வாகம், உர நிர்வாகம் மூலம் மேம்படுத்தலாம்.

ஊடுபயிர்

சவுக்கின் ஓராண்டு பயிராக இருக்கும்போது வேளாண்மைப் பயிர்களில் குறிப்பாக நிலக்கடலை, ஊடுபயிராக வளர்க்கலாம். மணற்பாங்கான நிலங்களில் தர்ப்பூசணியும், செம்மண்ணில் எண்ணெய் வித்து பயிரான எள்ளையும் கடின மண்ணில் பயறு வகைகளையும் ஊடுபயிராகப்பயிரிடலாம்.

காகிதக்கூழ் மரம் பயன்கள்:
சவுக்கு மரம் காகிதக்கூழ் செய்ய ஏற்றது. உழவர்கள் காகிதக்கூழுக்காகவே இம்மரத்தை பயிரிட்டு வருகின்றனர். சவுக்கு மரம் காகிதக்கூழ் அட்டைகள் தயாரிக்கவும், ஆர்ட் காகிதங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

விறகு மரங்கள்
உலகம் முழுவதும் சவுக்கு மிகச்சிறந்த விறகு மரமாகக் கருதப்படுகிறது. பச்சை மரமாக இருக்கும்போதும் கூட இது எரியும் இயல்புடையது. இதனை எரிக்கும்போது கலோரி மதிப்பு 4950/ கலோரி /கிலோ என்பதால் உயிரி எரிபொருளாகவும் பயன்படக்கூடியதாகும்.

மரத்தின் அமைப்பு

          இம்மரத்தின் மேற்பகுதி வெளிறிய மர வண்ணத்திலும் உள்புறம் அடர்ந்த சிவந்த மர வண்ணத்திலும் இருக்கும். இதன் மரம் வலிமையாகவும் அதிகக் கனமுள்ளதாகவும் (சராசரி 850 கிலோ மீ3) இம்மரம் இரண்டாகப் பிளக்கும்/ உடையும் தன்மையுடையது. இதனை அறுக்கவும், பலகை தயாரிக்கவம் எளிதாகப் பயன்படுத்த இயலாது. இதன் கழிகள் மின்சாரக் கம்பங்கள், பந்தல் போடுவதற்கு நடப்படும் கம்பங்களாகப்  பயன்படுகிறது.

மருத்துவப் பயன்பாடு

சவுக்கு மரத்தின் இலைகள் திரவ மருந்தாக வயிற்றுப்போக்கு, வயிற்றாலையை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. இளம் இலைகளையும் கொதிக்க வைத்து குளிர்வூட்டும் தேறல் வயிற்றுவலியைப் போக்கவும், தூளாக்கப்பட்ட விதையிலிருந்து தயாரிக்கும் களிம்பும் தலைவலியைப் போக்கும் மருந்தாகவும் தயாரிக்கப்படுகிறது. இதன் கிளைகளில் உள்ள 6-18 டேனின் கம்பளிகள், பட்டுத்துணிகள் தயாரிக்கவும், மீனவர் வலைகளை உறுதிப்படுத்தவும் பயன்படுகிறது. இம்மரம் ரெசின் தரக்கூடியது.   

நிழல்பணிகளில்
சவுக்கு மரங்கள் நல்ல நிழல் தரக்கூடிய நில எழில் ஊட்டும் பணிகளுக்கும், கடற்கரைப்பகுதிகளை எழிலூட்டும் பணிகளுக்கும் பயன்படக்கூடியது. இம்மரத்தை நாம் விரும்பும் வகையில் வளைத்து உருவங்களை உருவாக்கலாம்.

காற்றுத்தடுப்பான்
சவுக்கு மரத்தின் ஆழமான வேர்கள் புயல் காற்றுக்களை எதிர்கொள்ளும் தன்மையுடையவை. வேறு எந்த ஒரு மர வகைக்கும் இல்லாத காற்றுத்தடுப்பான திறன் சவுக்கு மரத்திற்கு உண்டு. எனவே இம்மரம் முழுமையாக மண் அரிப்பைத் தடுக்கும்.

மண் வள மேம்பாடு

சவுக்கு மரங்கள் நைட்ரஜனை தக்கவைக்கும் பிராங்கியா வகை(Frankia species)  வேர்முண்டுகளைக் கொண்டுள்ளதால் அவை நைட்ரஜனைத் தக்கவைத்து மண்ணின் வளத்தின் அளவை உயர்த்துகிறது.

சவுக்கு பயிரிட உகந்த சூழ்நிலை - வெப்பநிலை

கடற்கரைப் பகுதிகளில் சவுக்கு பயிரிட்டு நல்ல வளமாக உள்ள பகுதிகளில் வெப்பநிலை அதிக அளவாக 47oC உள்ளது. கடற்பகுதி அல்லாத உள்நாட்டுப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையைத் தாங்கி வளரும். ஆனால் அதன் வளர்ச்சி அதிகமாக இருக்காது.

மழையளவு

சவுக்கு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைக்காலங்களில் நன்கு வளரும். தீபகற்ப இந்தியாவின் மழையளவு 900 முதல் 3800 மி.மீ. இம்மரத்தின் வளர்ச்சி மழை குறைந்த பகுதிகளில் குறைவாகக் காணப்படும்.

மண்ணின் தன்மை
சவுக்கு மணற்சாரி பகுதிகளிலும் கடற்கரை மண் உள்ள பகுதிகளில் நன்கு வளரும்.கடற்கரை அல்லாத உள்நாட்டுப் பகுதிகளில் நல்ல வடிகால் அமைப்புள்ள மண் வகைகளில் நன்கு வளரும். மணல் கலந்த செம்மண், உப்பு, மண், சுண்ணாம்பு மற்றும் அமில மண் பகுதிகளில் வளரும். இம்மரத்தின் வேர் முடிச்சுகளில் நைட்ரஜனைத் தக்கவைக்கும் திறன்  உள்ளதால் நைட்ரஜன் அதிகம் அளிக்கும் தேவை இராது.

மரவளர்ப்புக்கான சூழல்
சவுக்கு வேகமாக வளரும் இயல்புடைய, சூரிய ஒளி தேவைப்படும் மரமாகும். இம்மரம் மண்ணின் ஈரப்பதம், தீ, பனி இவற்றால் பாதிக்கும் இயல்புடையது. இம்மரத்தின் வளர்ச்சிக்கு, அதிக நீர்ப்பிடிப்பு, அவசியமற்றது. நாற்றங்கால் நிலையில் வறட்சி தாங்கும். சவுக்கு குறைந்த வெப்பநிலை, நிழல்தாங்கும், இயற்கை இனப்பெருக்கம் அரிதாகவே நடைபெறும். மண்ணின் வளம் ஆழமாகப் பரவும் வேர்மூலமாகவும், நைட்ரஜன், பாக்டீரியா மூலமாகவும் அதிகரிக்கும். இதனால் மண்ணின் வளம் அதிகரிக்கும்.

ஒப்பந்த சாகுபடி முறை
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொழிற்சார்ந்த நிறுவனங்களுடன் குறிப்பாக காகிதம், தீக்குச்சி தொழிற்சாலைகளுடன் இணைந்து ஒப்பந்த மரச் சாகுபடி முறையை அறிமுகப்படுத்தி விவசாயிகளின் நலனுக்காக பிரபலப்படுத்தி வருகிறது. இவ்வாறு மரப்பயிர்களில் ஒப்பந்த முறை சாகுபடிக்கு கீழ்க்கண்ட நிறுவனங்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாகவே தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

  1. மேலாளர் (தோட்டங்கள்)
    தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்
    காகிதபுரம், கரூர்மாவட்டம் - 639 136
    அலைபேசி - 94425 - 91411
  1. தலைவர் (சுற்றுச்சூழல் பிரிவு)
    சேஷசாயி காகித ஆலை அட்டை நிறுவனம்
    ஈரோடு மாவட்டம் - 638 007
    அலைபேசி - 94433-40236
  1. இயக்குநர்,
    வாசன் தீக்குச்சி தொழிற்சாலை
    வாசன் தீக்குச்சி தொழிற்சாலை
    குடியாத்தம் மாவட்டம் - 632 602
    அலைபேசி - 9345520803

            இந்த மூன்று நிறுவனத்தினரும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து தேசிய வேளாண்மை புதுமைத்திட்டத்தின் கீழ் ஒரு கூட்டுமுயற்சியாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
மரம் சார்ந்த வேளாண்மை செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான குளோனிங் மற்றும் உயர்தர நாற்றுகள் பெற கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொண்டு நாற்றுகளையும் தொழில்நுட்பங்களையும் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ளலாம்.

முகவரி
முதன்மையர்
வனக்கல்லூரி  மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
மேட்டுப்பாளையம்  641 301
தொலைபேசி எண் : 04254-222010, 04254-222398, 04254-227418
தொலை நகலி : 04254-225064
மின்அஞ்சல் : deanformtp@tnau.ac.in
இணையதளம் : www.fcrinaip.org

வெளியீடு
வனக்கல்லூரி  மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
மேட்டுப்பாளையம்  641 301, தமிழ்நாடு
திட்ட செயலாக்க குழு அறிவியலாளர்களின் தொடர்புக்கு அலைபேசி எண்கள் :

சவுக்கு கன்றகத் தோட்டம் மூன்று ஆண்டு வளர்ந்த நிலை

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016