வனவியல் தொழில்நுட்பங்கள் :: சந்தன மரம்

சந்தன மரம்

Sandalwood


அறிவியல் பெயர்: சாந்தலம் ஆல்பம்

பரவல்: தென்னிந்தியாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் தமிழகம், மைசூர் மற்றும் மராட்டியப் பகுதிகளில் நிறைந்து காணப்படுகிறது. திறந்த வெளிக்காடுகள், மூங்கில்  நிறைந்த  வனங்களிலும் பரவலாக உள்ளது. தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மிகுதியாக உள்ளது.

பருவநிலை: கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டரிலிருந்து 4000 மீட்டர் வரை உள்ள நிலப்பகுதிகளில் பரவலாக உள்ளது. இம்மரத்திற்கு 190 C முதல் 28.50 C வரையுள்ள வெப்பநிலை ஏதுவானது. ஆண்டிற்கு 625 மி.லி முதல் 1625 மி.மீட்டர் மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் சந்தன மரங்கள் செழிப்பாக வளர்கின்றன.

மண்: குறிப்பாக உருமாறிய பாறைகளிலிருந்து உருவான மண் மற்றும் செம்மண் கலந்த சிறு பொறை மண்ணில் சிறப்பாக வளர்கின்றது. ஈரப்பதம் மிகுந்த ஒடைக்கரையோரங்களிலும் நதிக்கரையோரங்களிலும் மிக வேகமாக வளர்கின்றது.

மறுதாம்பு: இளம் மரங்கள் மறுதாம்பாக வளரக்கூடியவை. முதிர்ந்த மரங்கள் ஈரம் மிகுதியான பகுதிகளில் மட்டுமே மறுதாம்பாக வளரும்.

வேர்மூலங்கள்: அடி மரத்தின் வேர்கள் மண்ணிலிருந்து வெளிப்படும் பொழுது செடியாக துளிர்த்து வளருகின்றன.

முளைப்புத்திறன்: சந்தன விதைகளின் முளைப்புத்திறன் ஒராண்டு வரை 25 முதல் 40 சதவிகிதம். விதைகளின் மேல்ஒரு உடைக்கப்பட்டால் விரைவாக முளைத்துவிடும். மண்ணில் ஊன்றிய 1 முதல் 3 மாதங்களுக்குப்பின் முளைக்கும்.

செயற்கை மறுவளர்ச்சி: பெரும்பாலும் நடப்படுகிறது அல்லது விதைக்கப்படுகிறது. சில வேளைகளில் முளைக்காமல் போய்விடுகின்றன. சந்தன மரத்தின் ஒட்டுண்ணிகள் இதற்கு முக்கிய காரணமாகும். மேலும் பகுதி நிழல்படுமாறு இருந்தால் நன்றாக வளரும். மேலும் இளஞ்செடிகள் மற்றும் இளம்மரங்களின் மேம்ப்பாட்டை உரிந்து விடாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் மரத்தின் கூட்டை வெளித்தெரிந்து மரம் காய்ந்து போவது உண்டு.

செயற்கை மறுவளர்ச்சியைப் பெறும் விதங்கள்:

  1. பாத்திகளில் விதைத்து மூன்று மாதங்களுக்குப் பின் இடமாற்றம் செய்ய வேண்டும். நாற்றுகள் 10-12.5 செ.மீ உயரமும் ஆணிவேர் 15 செ.மீ. முதல் 20 செ.மீட்டர் நீளம் உள்ள நாற்றுகளை ஒராண்டிற்குப் பின் நடவுக்குப் பயன்படுத்தலாம்.
  2. பாதுகாத்து வைப்பதில் இளம் அடிப்பாக நாற்றுக்களை விட சற்று வயது முதிர்ந்த மரங்களின் அடிப்பாக நாற்றுகள் சிறப்பானவை.
  3. வேர்களைத் துண்டுகளாக்கியும் நடவிற்குப் பயன்படுத்தலாம்.
  4. வேர்மூலம் செடிகள் - நன்றாக வளரக்கூடியவை.

சந்தன வளர்ப்பில் முடிச்சு நோய்கள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவைகளை தடுப்பதில் ஒம்புயிர் மரங்களான வேம்பு, எட்டி, புங்காம் ஆகியவை அதிக எதிர்ப்புத் திறனை வழங்குகின்றன.

ஆரம்பநிலை பின்செய் நேர்த்தி:

  1. ஒம்புயிரித் தாவரங்களை பராமரிப்பதோடு அவற்றுக்கும் பின் செய் நேர்த்தி செய்ய வேண்டும்.
  2. அடிவேர் நீட்சி இயல்பாக அமையுமாறு பராமரிக்க வேண்டும்
  3. வளர்ச்சி குன்றிய செடிகளை நீக்கி விட வேண்டும்.
  4. அதிக வெயிலால் கருகிப் போகாதவாறு நல்லவெளிச்சமும் பகுதி நிழலும் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

இறுதிநிலை பாதுகாப்பு:

1. ஒம்புயிரித் தாவரங்களுக்கும் பின் செய் நேர்த்தி
2. கொடிகளை வெட்டிவிட வேண்டும்

பயிர்பாதுகாப்பு: வறட்சி - இயல்பாகவே சந்தனம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. ஆனால் மிதமிஞ்சிய வறட்சியால் காய்ந்து விடக்கூடும்.

காட்டுத் தீ: காட்டுத் தீயின் காரணமாக காய்ந்தும் வாடியும், காயப்படவும் செய்கின்றன.

மேய்ச்சல் மற்றும் உலாவுதல்: மிதமான மேய்ச்சல் எவ்வித பாதிப்பையும் நிகழ்த்தாது. ஆனால் மிதமிஞ்சிய மேய்ச்சல் குறிப்பாக வறண்ட காலங்களில் மாடுகள், மான்கள் முதலானவைகளால் கடுமையாக பாதிப்படையலாம்.

கடத்தல்காரர்கள்: மிகுந்த நறுமணம் காரணமாக இம்மரங்கள் கடத்தலுக்குள்ளாகின்றன.

பூச்சிகள்: சில வகை நோய் கடத்தும் பூச்சிகள் மிகுந்த பாதகமான முடிச்சு நோய்களை உண்டுபண்ணுகின்றன.

முடிச்சு நோய்: பைட்டோபிளாஸ்மா நுண்ணுயிர்களால் முடிச்சு நோய் ஏற்படுகிறது. இதனால் இலைகள் சுருண்டு விடுவதால் ஒளிச்சேர்க்கை பாதிப்படைகிறது. நோய்க்கடத்திப் பூச்சிகளால் ஒரு மரத்திலிருந்து மற்றொன்றிற்கு நோய் கடத்தப்படுகிறது.

மேலாண்மைத் திட்டங்கள்: மறுதாம்பிற்கு வளரவிடுவது மற்றும் நோயுற்ற கிளைகளை வெட்டிவிடுவது போன்றவை சில மேலாண்மை முறைகள் ஆகும்.

பொருளாதாரப் பயன்பாடுகள்: நறுமண எண்ணெய் நிரம்பிய வைரமேறிய கட்டைகள் அதிகமான விலை மதிப்பை பெறுகின்றன. நறுமணத் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவத் தேவைக்காகவும் மிகுந்த தேவையாகிறது.

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014