இதர மர வகைகள் ::வேப்பமரம்
வேப்பமரம்
வேப்பமரக் கன்றுகள்

உயிர்வகை நல்வாழ்விற்கு நீர்வளம், நிலவளம் மற்றும் காற்று ஆகிய மூன்றும் மிகவும் இன்றியமையாதவைகளாகும். வளர்ந்து வரும் மக்கள் தொகைப் பெருக்கத்தினால் இவை மூன்றும் மக்களுக்குத் தேவையான அளவு கிடைப்பது அரியதாகி வருகிறது. இம்மூன்றும் ஒருங்கே கொடுக்கக் கூடிய வல்லமை மரங்களுக்கு மட்டும் தான் உண்டு. மரம் மற்றும் காடுகள் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்குவதிலும், நிலவளத்தை மேன்மையடைச் செய்வதிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் பெரும் பங்கு வகித்து வருகின்றன.

இதுமட்டுமல்லாமல் மரங்கள் வளர்ப்பதினால் கிராமபுற மக்களிடையே வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, கிராமப்புறங்களின் பொருளாதாரமும் மேன்மையடையும். எனவே, பல பயன்களைத் தரக்கூடிய மரங்களாகி நெல்லி, வேம்பு, புளி, சவுக்கு, மூங்கில் போன்ற மரங்களை சாலை ஓரங்களிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும், விவசாயத்திற்கு பயன்படாத தரிசு நிலங்களிலும், விவசாய நிலங்களின் வேலி ஓரங்களிலும் அதிகளவு நடவு செய்து பராமரிப்பதன் மூலம் நல்ல பயன்களைப் பெறலாம். நாம் இப்போது வேப்பமரச் சாகுபடி செய்யும் முறைப் பற்றியும் மற்றும் அதன் பயன்கள் பற்றியும் இங்கு காண்போம்.

வேப்பமரப் பட்டை
வேப்பமர மலர்கள்

வேப்பமரம் இந்தியாவில் உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. தமிழகத்தில் கிடைக்கும் வேப்பமரத்தின் கொட்டையிலிருந்து பெறப்படும் ‘அஷாடிராக்டிஷன்’ என்ற விலை மதிப்புள்ள வேதியல் பொருள் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு அதிகமாக காண்பபடுவதில்லை.
எனவே வருங்காலங்களில் தமிழக வேப்பங் கொட்டைகளுக்கு சர்வதேச தேவை அதிக அளவில் வளர்ந்திடும். நமது கிராமங்களில் இம்மரத்தை தெய்வத்திற்கு இணையாக ஒப்பிட்டு வணங்கி வருவது நெடுங்காலமாக வழக்கத்திலிருந்து வருகின்றது.

ஏனென்றால் இம்மரத்தின்  அனைத்து பாகங்களும் நல்ல பயன்கள் தருவதுடன் மிகுந்த மருத்துவப் பயன்களையும் தரக்கூடியவையாகவும், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தன்மையும் உடையது. இது வருடம் முழுவதும் பசுமையாகவும் மற்றும் குளிர்ச்சி தரும் மரமாக இருப்பதாலும், காற்று மண்டலத்திலுள்ள நச்சுக் காற்றை உறிஞ்சும் தன்மையுடையதாலும் இம்மரத்தை எல்லாப் பகுதிகளிலும் நட்டு பயன்கள் பல பெறலாம். அத்தடன் சுற்றுப்புற மாசுக்களையும் அமுதசுரபி மரமாகவும் திகழ்கின்றது.

மரச்சாகுபடி குறிப்புகள்:

வேம்பு எல்லாப் பகுதிகளிலும் வளரக்கூடிய மரமாகும். இம்மரம் எல்லா வகையான மண்களிலும் வளரக்கூடிய மரமாக இருந்தாலும் கரிசல் மண்ணில் நன்றாக வளரும். ஆனால் நீர் தெங்கும் இடங்களில் நன்கு வளராது. இம்மரம் நிலத்தில் உரங்களை நிலைக்கச் செய்யும் தன்மையுடையது. ஏப்ரல், மே மாதங்களில்பூத்துக் குலுங்கும். ஆனால் பூக்கும் பருவம் இடத்திற்கு இடம் வேறுபடும். இம்மரங்களை தரிசு நிலங்களிலும் ஏரிக்கரை ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் நட்டு பயன்பெறலாம்.

வேப்பமர பழங்கள்
வேப்பமர விதைகள்

விதை சேகரிப்பு


வேப்ப மரங்கள் ஏப்ரல், மே மாதங்களில் பூக்கும். ஜீன் முதல் ஆகஸ்ட் மாதம் முடிய பழங்கள் கிடைக்கும். சுமார் 5 வது வருடத்திலிருந்தே மரங்களிலிருந்து காய்கள் காய்த்து பலன் கொடுக்க ஆரம்பிக்கும். நன்கு வளர்ந்த மரத்தில் 5 வது வருடத்திலிருந்து சுமார் 5 கிலோ வரை விதைகள் கிடைக்கும். பிறகு ஆண்டிற்கு ஆண்டு மகசூல் சீரிய முறையில் அதிகரிக்கும். ஒரு கிலோ எடையில் சுமார் 3500-4000 வரை விதைகள் கிடைக்கும். விதைகளை பழத்திலிருந்து நீக்கி நீரில் அலசி விதைகளை உலர வைத்து பின் பயன்படுத்தலாம். விதைகளின் முளைப்புத் திறன் 2-3 மாதங்கள் வரை நன்றாக இருக்கும். குளிர் அறையில் சுமார் 6 மாதம் வரை வைத்து முளைப்புத் திறன் குறையாமல் இருக்குமாறு சேமித்து வைக்கலாம். இதன் முளைப்புத் திறன் சுமார் 50 சதவிகிதமாகும். தேவை இல்லாத சதைப்பகுதியை நீக்கி விதைகளை உபயோகித்தல் முளைப்பு சதவிகிதத்தை சிறிது அதிகரிக்கலாம்.

நாற்றங்கால்

நல்ல வேம்பு விதைகளை தேர்வு செய்து, வண்டல் மண், தொழுஉரம், செம்மண் கலந்து நிரப்பிய பாலிதீன் பைகளில் நேரிடையாக விதைக்கலாம் அல்லது தாய்பாத்திகளில் விதைகளை விதைத்து அவற்றிலிருந்து 7 நாட்கள் கழித்து முளைத்து வரும் நல்ல நாற்றுக்களை தோவு செய்து பாலித்தீன் பைகளில் நடவு செய்யலாம்.
வேப்பமர நாற்றுகள்
வேப்ப நாற்றுக்களை இணுக்கு முறை மூலமாகவும், நாற்றுக்குச்சி முறை மூலமாகவும் நடலாம். நாற்றுக்குச்சிகள் தயாரிக்க தாய்பாத்தியில் நாற்றுக்களை  6 முதல 9 மாதங்கள் வரை வளர்த்த பின்னர் தரை மட்டத்தில் நாற்றின் பருமன் 1 செ.மீ பருமன் வளர்ந்ததும் சுமார் 20 செ.மீ. வேர்ப்பகுதியும், 3.5 செ.மீ தண்டு பகுதியுள்ள நாற்றுக்குச்சிகள் தயாரித்து பாலிதீன் பைகளில் நடவு செய்யலாம். 16x30 செ.மீ அளவுள்ள பாலிதீன் பையில் நிரப்பப்பட்டுள்ள மண் கலவையுடன் 35 கிராம் மண்புழு உரம், 15 கிராம் வேர்ப்பூசணம், 6 கிராம் அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் உரங்களை கலந்தால் நாற்றுக்களின் வளர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும். பின் நாற்றுக்களக்கு தினமும் பூவாளி கொண்டு நீர் ஊற்றி வர வேண்டும். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் வளர்ந்த  நாற்றுக்களுக்கு வாரம் ஒரு முறை 20 கிராம் DAP 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிப்பான் மூலம் கன்றுகளின் இலைப்பகுதியில் தெளித்தால் நாற்றுக்கள் நன்கு வளரும்.

நடவு முறை


நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை வளர்ந்த மரக்கன்றுகளை நிலங்களில் நடவு செய்யலாம் தண்ணீர் வசதி உள்ள பகுதிகளில் வருடத்தின் எந்த காலத்திலும் இம்மரக்கன்றுகளை நடவு செய்யலாம். தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் பருவ மழை காலங்களின் ஆரம்பத்தில் நடவு செய்வது நன்று. ஒவ்வொரு மரக்கன்றும்  1x1x1 மீட்டர் அளவுள்ள குழியில் நடவு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒன்று அல்லது இரண்ட கிலோ மண்புழு உரம், 50 கிராம் வேர் வளர்ச்சி பூசணம் (VAM), 20 கிராம் அஸோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் உரங்களை முக்கால் அளவு நல்ல மண் மற்றும் தொழு உரங்களால் நிரப்பிய குழிகளில் இட்டு மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு மழைநீர் முழுமையான அளவு கிடைக்கும் வண்ணம் மரக்கன்றுகளை சுற்றி 3 மீட்டர் விட்டம் மற்றும் மத்தியில் 30 செ.மீ ஆழம் அளவுள்ள சாசர் வடிவு குழிகள் அமைக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் சாசர் குழிகளின் மூலம் சுமார் 1400 லிட்டர் கொள்ளளவு மழை நீரை ஒவ்வொரு மழையின் போதும் சேகரித்தால் மரங்கள் வளர்வதற்கு பயன்படுத்தலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.மரக்கன்றுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க டிசம்பர், ஜனவரி மாதங்களில் செடிகளைச் சுற்றியுள்ள களைகளை நீக்கி மண்ணை கொத்தி விட வேண்டும். உவர்பொங்கி மேலாக உவர் உப்பு படிந்திருக்கும் இடங்களில் ஆழமான சதுரகுழிகள் தோண்டி தொழு உரம் மற்றும் வண்டல் மண் கலந்து வேப்பங்கன்றுகளை நட்டால் கன்றுகள் நன்கு வளரும். களர் நிலத்தில் பந்தல்கால் நடுவதற்குக் குழி எடுப்பது போன்று ஆழமாகக் குறுகலான குழியெடுத்து (20x30 செ.மீ விட்டம் x 100 -120 செ.மீ ஆழம்) ஜிப்சம், மண்புழு உரம் மற்றும் தொழுஉரம் ஆகியவற்றை குழி மண்ணுடன் நிரப்பி வேப்பங்கன்றுகளை வளர்க்கலாம். இத்தகைய களர் மண்ணில் வளரும் மரக்கன்றுகளின் இலைகள் கோடையில் மஞ்சள் நிறமாக மாறி தோற்றமளித்தாலும் பின் மழைக்காலங்களில் பச்சை நிறமாக மாறிவிடும்.

காய்க்கும் பருவம்

மார்ச், ஏப்ரல் மாதங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும். ஆனால் பூக்கும் பருவம் இடத்திற்கு இடம் வேறுபடும். தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் ஜனவரி, பிப்ரவரி மாதத்திலும் (திருநெல்வேலி மாவட்டம்). மற்றப்பகுதிகளில் மே, ஜீலை மாதங்களிலும் காய்கள் காய்த்து கனிய ஆரம்பிக்கும். வேப்பங்கனிகள் ஆகஸ்ட் மாதம் வரை கிடைக்கும்.

மகசூல்

வேப்பமரம் நட்ட 5 அல்லத 6 வருடத்திலிருந்து பூக்கள் பூத்து காய்கள் காய்க்க ஆரம்பிக்கும். இருந்த போதிலும் கணிசமான அளவு காய்கள் 8வது வருடத்திலிருந்து கிடைக்க ஆரம்பிக்கும். நிலத்தின் தன்மைக்கேற்ப 8 வயதுள்ள மரத்திலிருந்து சுமார் 5-10 கிலோ விதையும், 10 வயதுள்ள மரத்திலிருந்து சுமார் 10-15 கிலோ விதையும் கிடைக்கும். வேப்பங்கனிகளை பழுத்த நிலையில் மரங்களின் கிளைகளிலிருந்து (crown collection) சேகரித்தால் அதிக அளவு மகசூல் கிடைக்கும். மரத்தின் அடியில் விழும் பழங்களைப் பொருக்கினால் மகசூலின் பாதி அளவுதான் கிடைக்கும். ஏனெனில் பறவைகள் பாதி அளவு  பழங்களை விழுங்கிவிட்டு எச்சத்துடன் பல்வேறு பகுதிகளில்  சிதறவிடும். இவ்வாறு சேகரிக்கப்பட்டு சதைகளை நீக்கிய விதைகளுக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புண்டு. காய்கள் நன்கு கனித்து தரையில் விழுந்து பின் சேகரிக்கப்படும் விதைகள் பூசணங்கள் படியும் நிலை காண்பபடுவதால் விதைகள் குறைவான விலைக்கே வாங்கப்படுகின்றன. எனவே ஒட்டு அல்லது இணுக்கு முறைகளின் மூலம் அதிக காய்ப்பும். சிறந்த் குணங்களும் கொண்ட உயரம் குறைவாக உள்ள மரங்களை  உற்பத்தி செய்து, கனிகளை மரத்திலேயே பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.ஒரு கிலோ பழத்தைப் பிசைந்து எடுத்தால் சுமார் 300 வேப்பங்கொட்டைகள் கிடைக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் வேப்பமரச் சாகுபடி செய்வதன் மூலம் கிடைக்கும் குறைந்தளவு வருமானம் கணக்கிடப்பட்டுகீழேகொடுக்கப்பட்டுள்ளது.வேப்பமரமகசூல்(10மீx10மீ–1ஏக்கருக்கு40மரங்கள்)

மரத்தின் வயது

மகசூல் மரம் ஒன்றிற்கு கிலோ

மகசூல் ஏக்கருக்கு கிலோ

வருமானம் ஏக்கருக்கு (ரூபாயில்)

6 வது வருடம்

5

200

1000

8 வது வருடம் >

10

400

2000

10வது வருடம்

15

600

3000


குறிப்பு

மேலே குறிப்பிட்டுள்ள வருமானம் ஒரு கிலோ நன்றாக சுத்தம் செய்த வேப்பங்கொட்டையின் சராசரி விலை ரூபாய் 5- என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் விவசாய ஊடு பயிர் கள் செய்வதின் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.2000/- வரை உபரி வருமானம் கிடைக்கும்.ஏக்கருக்கு 40 மரங்களை வரிசைக்கு வரிசை 10 மீட்டர் (30 அடி), மரத்திற்கு மரம் இடைவெளி 10 மீட்டர் (30 அடி) இடைவெளியில் நடலாம் அல்லது கிழக்கு மேற்கு திசையில், வரிசையாக 5 மீட்டர் (15 அடி) மரத்திற்கு மரம் இடைவெளியில் வரிசைக்கு வரிசை 20 மீட்டர் (60 அடி) இடைவெளி விட்டும் நடலாம். இதனால் மகசூல் குறையாது. மேலும் மற்ற விவசாயப் பயிர்கள், தீவனத் தாவரங்கள் மூலிசைக் செடிகள் போன்ற பயிர்களை இடைப்பட்ட பகுதிகளில் பயிர் செய்து நல்ல பயன் பெறலாம்.

தொடர்புக்கு
முதல்வர்,  
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்,
கோயமுத்தூர் -  641301.
தொலைபேசி: 04254 - 222398, 04254 – 220460
அலைபேசி: 9443505843, 9489056727
மின்னஞ்சல்: deanformtp@tnau.ac.in


Updated on :April, 2015
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015