இதர மர வகைகள் ::குமிழ் மரம்
குமிழ் மரம்

குமிழ் மரத்தின் விஞ்ஞானப் பெயர் (மெலைனா ஆர்போரியா). ஜெர்மானிய அறவியல் அறிஞர் ஜோணன் ஜார்ஜ் மேலின் என்பவரை நினைவூட்டும் வகையில் மெலினா என்ற முதற்பெயர் அமைந்துள்ளது. ஆர்போரியா என்பது மரத்தை போன்றது எனப் பொருளாகும். குமிழ்மரத்தின் தாயகம் இந்தியாவாகும். இம்மரம் பொதுவாக இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மேலும், ஸ்ரீலங்கா, பர்மா, வங்காளதேசம் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. ஈரச் செழிப்புள்ள பள்ளதாக்குகளில் வேகமாக நன்கு வளருகிறது.
குமிழ் மரப் பட்டை
குமிழ் மர இலைகள்
சாகுபடி குறிப்புகள்:
கடல்மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரம் வரை உள்ள நிலங்களிலும் 30º முதல் 40º டிகிரி தட்பவெப்ப நிலையில் உள்ள பகுதியில் இம்மரம் நன்கு வளரும். மேலும் நல்ல வளமுள்ள ஆழமான மண் பகுதி உள்ள நிலங்களிலும் நன்கு வளரும். மிகுந்த வறட்சியை தாங்காது. நீர் தேங்கும் களிமண் உள்ள இடங்களும் இம்மரம் வளர்ப்பதற்கு உகந்த தல்ல.
குமிழ் மரக் கன்று
குமிழ் மர நடவு
விதை சேகரிப்பு

ஏப்ரல் முதல் ஜீலை மாதங்களில் விதைகள் சேகரிக்கலாம். பழங்கள் முட்டை வடிவமாக இருக்கும். மரத்திலிருந்து தானாக உதிரும், பழங்களில் பழுப்பு நிற பழங்களை மட்டும் சேகரித்து நான்கு முதல் ஏழு நாட்கள் வரை குவித்து வைத்து சதைப்பகுதியை நன்கு அழுகவிட வேண்டும். அழுகிய கனிகளை பிசைந்து கொட்டைகளை கழுவி இரண்டு மூன்று நாட்கள் உலர வைக்க வேண்டும். விதையின் முளைப்புத் தன்மை துரிதமாக இழக்கும் தன்மையுடையதால் உடனே விதைப்பது நன்று. முளைப்புத் திறன் 10-90 சதவீதமாகும். விதையை 24 மணிநேரம் நீரில் ஊற வைத்து விதைப்பதே நன்று. 1 கிலோ கனியிலிருந்து 60 கிராம் விதை கிடைக்கும். 1 கிலோ எடையில் 1200-1400 விதைகள் கிடைக்கும்.

நாற்றங்கால்

10 மீட்டர் நீளம் 1 மீட்டர் அகலம் 15 செ.மீ உயரமுள்ள தாய்பாத்தியில் விதைகளை பரப்பில் முளைக்க செய்யலாம். விதைத்த பத்து முதல் 12 நாட்களில் முளைக்க துவங்கும். ஒரு மாதம் வரை முளைத்துக் கொண்டே இருக்கும். சரிவிகிதத்தில் வண்டல் மண், செம்மண், தொழு உரம் கலந்து நிரப்பப்பட்ட 16x30 செ.மீ அளவுள்ள பாலிதீன் பைகளில், தாய் பாத்தியிலிருந்து முளைத்து வரும்நாற்றக்களை 10 நாட்கள் வரை வளர விட்டு பின் நாற்றுக்களை தாய்ப்பாததியிலிருந்து பிடுங்கி நடவு செய்ய வேண்டும். நான்கு மாதம் வரை வளர்ந்த மரக்கன்றுகளை, நடவு செய்வதற்கு தேர்வு செய்யப்பட்ட பகுதியில் நடவு செய்யலாம்.

நடவு முறை

நான்கு மாதம் வரை வளர்ந்த மரக்கன்றுகளை தாய் மண் சேதமின்றி பாலிதீன் பையிலிருந்து அகற்றி நடவு செய்யலாம். இம்மரம் ஈரச் சூழ்நிலையில் நன்கு வளரும். களிமண் மற்றும் நீர் தேங்கும் நிலைகளில் இம்மரம் வளர்வதற்கு உகந்ததல்ல. நன்கு வளர்ந்த மரக்கன்றுகளை 60செ.மீ x 60 செ.மீ x60 செ.மீ அளவுள்ள குழிகளை 5மீ x 4 மீ இடைவெளியில் அமைத்து நடவு செய்ய வேண்டும். 4 மீ இடைவெளியில் வரப்போரங்களிலும் இம்மரத்தை நடவு செய்யலாம். 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் மரங்கள் குறைந்தது மூன்ற வருடங்களுக்கு நன்கு வளரும். இம்மரத்தின் கிளைகளை அவ்வப்போது கவாத்து செய்து விடுவதன் மூலம் மரம் ஒரே சீராக வளரும். அழமான மண்வளமுள்ள இடங்களில் இம்மரம் வேகமாக வளரும். முதலாண்டிலேயே சுமார் 10 அடி உயரம் வரை வளரும் தன்மையுடையது.

பயன்கள்

குமிழ் மரத்தின் இலை தழைகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும். தீப்பெட்டி மற்றும் தீக்குச்சி தயாரிக்கவும், ஒட்டுப்பலகை செய்ய ஏற்ற மரமாகும். மரத்துண்டுகள் பழுப்பு மஞ்சள் நிறமுடையதாலும் நெருங்கி ரேகை கொண்டதாலும், மிருதுவானதாலும் எளிதில் அறுக்கக்கூடிய தன்மையுடையதாலும் பலவிதமான கைவினைப் பொருட்கள் மற்றும் மரச்சாமான்கள் செய்ய உகந்த மரமாகும்

மகசூல்


நடவு செய்த 8-10 ஆண்டுகளிலிருந்து மரங்களை அறுவடை செய்யலாம். மறுதுளிர்க்கு விடலாம். இந்த மறுதுளிர் மரங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் நன்கு வளர்ந்து பலன் தரக்கூடியது.நன்கு பராமரிப்பு செய்த தோட்டத்திலிருந்து 10 ஆண்டுகள் கழித்து ஒரு மரத்திலிருந்து சுமார் 10 கன அடி மரம் கிடைக்கும். ஆகவே ஒரு ஏக்கரில் நடவு செய்யப்படும். 200 மரங்களிலிருந்து சுமார் 2000 கன அடி தடிமரம் கிடைக்கும். இவ்வாறு மகசூல் கிடைக்கும் பட்சத்தில் ஒரு கன அடி ரூ.500/- வீதம் குறைந்தது 10 இலட்சம் மதிப்புள்ள தடிமரங்கள் 10 வருடங்களில் கிடைக்க வாய்ப்புள்ளது.
Updated on : April, 2015

தொடர்புக்கு
முதல்வர்,  
வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
மேட்டுப்பாளையம்,
கோயமுத்தூர் -  641301.
தொலைபேசி: 04254 - 222398, 04254 – 220460
அலைபேசி: 9443505843, 9489056727
மின்னஞ்சல்: deanformtp@tnau.ac.in

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015.