அரசு திட்டங்கள் & சேவைகள் :: தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள் - 2007-08

த.நா.வே.ப செயல்படுத்தப்படும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டங்கள்

2007-08

துல்லிய பண்ணையத் திட்டம்துல்லிய பண்ணையத் திட்டத்தினைப் பற்றிய அறிமுகம்

தமிழ்நாடு அரசின் நிதி உதவியோடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 400 எக்டர் பரப்பளவில் செயல்படுத்திய செயலாக்கத்திட்டம் தான் துல்லிய பண்ணையத் திட்டமாகும். 

தமிழ்நாடு அரசின் நிதி உதவியோடு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2004-05 முதல் 2006-07 வரை 400 எக்டர் பரப்பளவில் 7.20 இலட்ச ரூபாய் நிதியுதவியுடன் செயல்படுத்திய செயலாக்கத்திட்டம் தான் துல்லிய பண்ணையத் திட்டமாகும். இத்திட்டம் மாநில அளவில் ஒரு மிகப் பெரிய செயல் விளக்கத் திட்டமாக அமைந்ததுடன் விவசாயிகளுக்கு உயர் தொழில்நுட்பத்தைக் கையாளும் திறன் மேம்பாடு பொருளாதார வலிமை மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றையும் அளித்துள்ளது. இது அதிநவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மூலம் தரமான விளைப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைகளுடன் இணைக்கும் ஒரு புதிய பண்ணைய முறையுடன் செயல்படுகின்றது.

இம்முறையில் நீர், உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஒவ்வொரு பயிரின் வளர்ச்சிப் பருவத்தின் தேவைக்கேற்ற வகையில் அளிக்கப்படுகின்றது. தமிழ்நாடு துல்லிய பண்ணையத் திட்டம் தனிப்பட்ட இடம், நிலம் மற்றும் பயிருக்கு ஏற்ற அணுகுமுறையைக் கையாளுகின்றது. சிறந்த மகசூலுக்கு உகந்த இடுபொருட்களை பயன்படுத்தி நீர் மற்றும் ஆற்றல் போன்ற மதிப்புமிக்க வளங்களைச் சிக்கனத்துடன் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் குறிக்கோளாகும். வால் மார்ட், கேரிஃபோர், டெஸ்கோ, உல்ஸ் ஒர்த், ரிலையன்ஸ், பார்தி-டெலிகாம், ஃபுட் பஜார், ப்ளூஃபுட்ஸ், ஃப்யூட்ச்சர் குரூப், ப்ரியா கோல்டு, சுபிக்சா, பேன்டலூம், மதர் டெய்ரி, மெட்ரோ,  ஹவுஸ் சிஎச்ஆர்டி மற்றும் அதானி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சில்லறைக் காய்கறி வியாபாரத்தைத் தொடங்கிய சமயத்தில் இத்திட்டமானது விவசாயிகளை சந்தைச் சார்ந்த உற்பத்தியை மேற்கொள்வதற்கு தயார் செய்துள்ளது.

மூன்று வருடங்களில் 23 விதமான பயிர்கள் 400 எக்டரில் பயிர் செய்யப்பட்டு 60 சதவிகித அதிக மகசூலும் 90 சதவிகித சந்தைத் தரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் ஒவ்வொரு குழுவிலும் பொருட்களை வாங்குவோர் -விற்போர் கூட்டங்கள் நடைபெறுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. மேலும் விவசாயிகள் தாங்கள் விற்கும் விளைபொருட்களுக்கும் வாங்கும் இடுபொருட்களுக்கும் பேரம் பேசும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். இம்மாவட்டங்கள் தமிழகத்திலுள்ள மற்ற மாவட்ட விவசாயிகளின் பயிற்சி களமாகவே தற்சமயம் திகழ்கின்றன.
துல்லியப் பண்ணையத் தொழில்நுட்பங்கள், வழிமுறைகள் மற்றும் விவசாயத் தேர்ந்தெடுப்பு படிவங்கள் ஆகியன கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பிடிஎஃப் வடிவத்தில் பெறுவதற்கு ஒவ்வொன்றையும் முறையே க்ளிக் செய்யவும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013