பாரம்பரிய கொண்டவை குட்டை ரக கால்நடைகள்
பாரம்பரிய மண் மணம் கொண்ட கால்நடைகள் அழிந்து, கலப்பினங்களின் காலமாக இன்று மாறியுள்ளது. உருவம், உழைப்புத்திறன், உற்பத்தித் திறன் அனைத்திலுமே கலப்பினங்களுக்கும், பாரம்பரிய கால்நடைகளுக்கும் வித்தியாசம் உண்டு. உருவங்களை வைத்தே கலப்பினங்களை கணித்துக் கூறும் அளவுக்கு, நம்மிடையே கலப்பினங்களின் பயன்பாடும், பாரம்பரியத்தை தொலைத்த ஏமாற்றமும் இருக்கிறது.
பார்ப்பதற்கு கலப்பினத்தை போலவும், உற்பத்தி, உழைப்பில் பாரம்பரிய ரகங்களுக்கு இணையாகவும் உள்ளவை குட்டை ரக கால்நடைகள். இவை மண் சார்ந்த நீண்ட பாரம்பரியம் கொண்டவை என்கிறார் பொள்ளாச்சியைச் சேர்ந்த வி.எஸ்.ரவி. இவர் கடந்த 12 வருடங்களாக குட்டை ரக கால்நடைகளை தேடிப்பிடித்து வளர்ந்து வருகிறார்.
பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையில் குட்டை ரக கால்நடைகளுக்காகவே தனி பண்ணை வைத்து அவற்றை வளர்த்து வருகிறார். பொள்ளாச்சியில் நடைபெற்ற கால்நடைத் திருவிழாவில் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தவை இந்த குட்டை ரக கால்நடைகளே.
குட்டை ரக கால்நடைகள் வளர்ப்பு குறித்து ரவியிடம் கேட்டபோது, குட்டை ரகத்தை கலப்பினம் என்றோ, வெளிநாட்டு வகைகள் என்றோ கூறிவிட முடியாது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும், மண்வாசம் கொண்ட பாரம்பரியாக குட்டைரக கால்நடை உள்ளது.
அதில் ஒன்றுதான் தமிழ்நாட்டுக்கு தஞ்சாவூர் குட்டை ரக மாடுகள்.காங்கேயம் மாடுகளைப் போல் திமில், உடல்வாகு, சீற்றத்துடனும், ஆனால் அளவில் சிறியதாக இருக்கும். பால் உற்பத்தியிலும், வாழ்நாள் அளவிலும் இவை சாதாரண மாடுகளை விட எந்த வகையிலும் சளைத்ததல்ல. அதிகபட்சமாக 27-ல் இருந்து 30 இன்ச் வரை வளரும். ஆனால் ஒரு வேளைக்கு 1.15 லிட்டர் அளவுக்கு பால் தரக்கூடியது.
இதுபோலவே கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட 32 இன்ச் வளரும் வேச்சூர் குட்டைரக மாடும் உள்ளது. இவை மிக அதிகமாக 2.5 லிட்டர் வரை பால் தரக்கூடியது. அதிக கெட்டித்தன்மையும், குறைந்த கொழுப்புத் தன்மையும் கொண்டிருப்பதால் இந்த பால், மருத்துவ குணம் கொண்டது.
கேரளத்தில் தற்போது குட்டை ரக மாடுகள் மீது அரசும், தனியார் நிறுவனங்களும் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இதனால் குட்டை ரக மாடுகளின் எண்ணிக்கை கேரளத்தில் அதிகரித்து வருகிறது.
ஆந்திர மாநிலத்திற்கு பூர்வீகமாக புங்கனூர் குட்டை ரக மாடு உள்ளது. கர்நாடகத்திற்கு ஊசி கொம்பு கொண்ட ஹாலிகார் எனப்படும் லம்பாடி மாடுகள் உள்ளன. இப்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் பூர்வீக வரலாறு கொண்ட குட்டை ரக கால்நடைகள் ஏராளமாக உள்ளன.
தஞ்சாவூர் ரகத்தில் 5, கேரள ரகத்தில் 6, புங்கனூர் குட்டை ரகம் 2, கர்நாடக குட்டை ரகத்தில் 2 என மாடுகள் உள்ளன. அதேபோல், குஜராத் குட்டை எருமைகள் 2, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வகையைச் சேர்ந்த ஆட 5 வகை, 30 இன்ச் உயரமுள்ள 6 குதிரைகள் எங்கள் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன.
கலப்பினங்களின் வரவு அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய இனங்களை நாம் மறந்து வருகிறோம். அதன் வெளிப்பாடுதான், குட்டை ரகத்தை கண்காட்சிப் பொருளாக ஆச்சரியப்பட்டு பார்க்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். குட்டை மாடுகள் அடிமாடுகளாக கொண்டு செல்லப்பட்டு, அந்த இனம் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.
குட்டை ரக கால்நடைகளும் நமது பாரம்பரிய அடையாளம் என்பதால் அவற்றை நிச்சயம் நாம் பாதுகாக்க வேண்டும். குட்டை மாடுகளிடம் நல்ல பால் உற்பத்தி இருக்குமே தவிர, அவற்றை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த முடியாது. அதனாலேயே நாளடைவில் அதன் பயன்பாடு குறைந்து விட்டது.
அனைவரும் வளர்க்கலாம்
தற்போதுள்ள நகரச் சூழலில், வீடுகளில் வளாக்கப்படும் செல்லப் பிராணிகளைப் போல இவற்றையும் வளர்க்க முடியும். கூடவே நல்ல தீவனம் கொடுக்கும் போது நமக்கு அதிக சத்துள்ள பாலும் கிடைக்கிறது. இந்த வகை கால்நடைகளில் அழகு, சிறிய உருவம், சத்துள்ள பால் என்ற சாதக சூழல்கள் உள்ளன. சாதாரண கால்நடைகளைவிட மிகக் குறைந்த செலவே இவற்றிற்கு உள்ளதால், அனைவரும் வளர்க்க முடியும்.
தற்போதுள்ள நிலவரப்படி கேரளத்தில், குட்டை ரக மாடுகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. திருச்சூரில் உள்ள கேரள கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-ம் ஆண்டு வரை குட்டை ரக மாடுகளுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்குள்ள அரசு இதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதே இதற்கு காரணம்.
அதேபோல் தமிழக அரசும், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நமது பாரம்பரிய குட்டை ரக கால்நடைகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில், அனைத்து வீடுகளிலும் கால்நடை வளர்ப்பு சாத்தியப்படும் என்றார்.
|
ஆதாரம்:
கிருபாகரன்.ஆர்
தி இந்து, 09.02.2015
|