organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக முறையில் பூச்சி மேலாண்மை

தாவர பூச்சிக்கொல்லிகள்

தாவர பூச்சிக்கொல்லிகள் - புகைப்படத் தொகுப்பு

தாவர பூச்சிக்கொல்லிகள்

பூச்சிகளின் எண்ணிக்கை அபரிதமாகப் பெருகிடும் போதும், அருகாமையிலுள்ள வயல்களிலிருந்து பரவிடும்போதும் பூச்சிகளின் தன்மை மற்றும் அளவினைப் பொருத்து இரசாயனப்பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக தாவரப்பூச்சிக் கொல்லிகளை அங்ககப் பூச்சி மேலாண்மையில் பயன்படுத்திடலாம். இவற்றை நம் முன்னோர்கள் தொன்று தொட்டு பயன்படுத்தி வந்துள்ளனர். வேம்பு, நொச்சி, எருக்கு, ஆடாதோடா, அரளி, தும்பை, சோற்றுக் கற்றாழை, புங்கம், இலுப்பை, சீத்தாப்பழம் போன்ற தாவரங்கள் சிறந்த பூச்சிக்கொல்லி தன்மையினைப் பெற்றுள்ளன. இவை எளிதில் கிடைப்பதாலும், விவசாயிகளால் எளிதில் பயன்படுத்த முடிவதாலும் அங்ககப் பூச்சிக் கட்டுப்பாட்டில் பெரும்பங்கு வகிக்கின்றன.

வேப்பங்கொட்டைச்சாறு

5 கி.கி.வேப்பங்கொட்டையை நன்றாக இடித்து 100 லிட்டர் தண்ணீரில் 3 முதல் 4 நாட்கள் ஊறவைத்து வடிகட்டி தெளிக்கலாம். இவற்றை இலைப்பேன், அசுவினி போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் இலையை உண்ணும் புழுக்களையும் கட்டுப்படுத்தப்பயன்படுத்தலாம். இவை நன்மை செய்யும் சிலந்தி இனங்கள், தேனீக்கள், ஊண்உண்ணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

தாவர எண்ணெய்கள்

வேம்பு, புங்கம், இலுப்பை போன்ற தாவர எண்ணெய்கள் பூச்சிகளை விரட்டவும், கொல்லவும் அங்கக வேளாண்மையில் பயன்படுத்தப்படுகின்றன. 1 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து பயிர்களில் நன்கு படும்படி தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பொதுவாக எண்ணெயைத் தண்ணீரில் ஊற்றும் போது அவை தண்ணீரில் கலக்காமல் அவற்றின் மேலும் மிதக்கும். அவை தண்ணீரில் நன்கு கலக்க சோப்பு திரவம் அல்லது காதி சோப்பு பயன்படுத்தப்படுகின்றது. எண்ணெய் தண்ணீர் கலவையில் சோப்பு திரவத்தினை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அப்போது பால் போன்ற திரவம் தோன்றும். பால் போன்ற தன்மை மாறும் வரை சோப்பு திரவத்தினை சேர்த்து நன்கு கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். எண்ணெய் தண்ணீர் சோப்பு கலவை தெளிவான தன்மையை அடைந்தவுடன் பயிர்களின் மேல் தெளித்து பூச்சிக் கட்டுப்பாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும்.

 
முதல் பக்கம் | திட்டங்கள் | பயிர்ச்சிகள் | மற்றவை | புகைப்படங்கள் | தொடர்புக்கு| பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016